முன்னோக்கு

வூஹான் ஆய்வகப் பொய்யை ஊடகங்கள் ஊக்குவித்ததை உளவுத்துறை அறிக்கை அம்பலப்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2019 இன் இறுதியில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டதாகக் கூறும் தலைப்புச் செய்திகளின் ஒரு பகுதி.

பைடென் நிர்வாகம், முன்னர் இரகசிய உளவுத்துறை அறிக்கையாக வகைப்படுத்தப்பட்டிருந்த ஓர் அறிக்கையை வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டது. கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் SARS-CoV-2 ஐ சீனாவில் உள்ள வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள் என்பதற்கு அமெரிக்காவிடம் ஆதாரம் இருப்பதாக, பல ஆண்டுகளாக அமெரிக்க ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒட்டுமொத்த வட்டாரமும் விமர்சனமின்றி பரப்பி வந்த பொய் வாதங்களை அந்த அறிக்கையின் விபரங்கள் தகர்க்கின்றன.

இந்தப் பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்னர் கோவிட்-19 அறிகுறிகளோடு அந்த ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், அவ்விதத்தில் முதல் நோயாளிகள் என்ற அர்த்தத்தில் அவர்கள் “patient zero” ஆக இருந்தார்கள் என்பதற்கும் அமெரிக்காவிடம் ஆதாரம் இருப்பதாக நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என மூன்று முன்னணி அமெரிக்க பத்திரிகைகள் சமீபத்தில் கூறிய கூற்றுக்களை இந்த அறிக்கை மறுக்கிறது.

அந்த ஆராய்ச்சியாளர்களின் அறிகுறிகள் 'கோவிட்-19 நோய் உடையது இல்லை' என்றும், 'வேறு பல நோய்களால் ஏற்பட்டிருக்கலாம் என்பதோடு, சில அறிகுறிகள் கோவிட்-19 உடன் ஒத்துப் போகவில்லை' என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டது. முக்கியமாக, 'இந்த ஆராய்ச்சியாளர்களில் யாரும், கோவிட்-19 உடன் ஒத்து போகும் அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான எந்தக் குறிப்பும் நம்மிடம் இல்லை,” என்று இந்த ஆவணம் அறிவித்தது.

2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் மக்களிடையே அது பரவத் தொடங்கிய பின்னரே வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகம் SARS-CoV-2 ஐ பெற்றது என்று இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. “ஏதோ காரணங்களால் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து வூஹான் ஆய்வக (WIV) ஆராய்ச்சியாளர்கள் அந்த வைரஸைப் பிரித்தெடுத்து அடையாளம் கண்ட போது, டிசம்பர் 2019 இறுதியில் தான் வூஹான் ஆய்வகம் SARS-CoV-2 ஐ முதன்முதலில் ஆய்வுக்குட்படுத்தியது என்று உளவுத்துறை முகமைகளுக்கு கிடைத்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.”

“ஓர் உயிரி ஆயுதமாக SARS-CoV-2 உருவாக்கப்படவில்லை” என்று இந்த அறிக்கை நிறைவு செய்கிறது. 

மற்ற தகவல்களுடன் சேர்ந்து, “2019 இலையுதிர் காலத்தில் நோய்வாய்ப்பட்ட வூஹான் நுண்கிருமியியல் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் … சம்பந்தமான எந்தவொரு மற்றும் அனைத்து விபரங்களையும் [அரசு] வெளியிட வேண்டுமென 2023 கோவிட்-19 தோற்றுவாய் சட்டம் ஆணை (COVID-19 Origin Act of 2023) பிறப்பித்ததால், இதற்கு விடையிறுப்பாக தேசிய உளவுத்துறை இயக்குனர் அலுவலகம் இந்த ஆவணத்தை வெளியிட்டது. 

கோவிட்-19 பெருந்தொற்றின் தோற்றுவாய்களைக் கண்டறிய, கடந்த மூன்றாண்டுகளின் போக்கில், விஞ்ஞானிகள் முறையாக செயல்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் ஏற்பட்ட மற்ற ஒவ்வொரு பெருந்தொற்றைப் போலவே அதே விதத்தில், SARS-CoV-2 உம் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தீர்மானிக்க அவர்கள் பெருவாரியான ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர்.

ஜூலை 2022 இல், விஞ்ஞானிகள் மைக்கெல் வொரொபெ (Michael Worobey), கிறிஸ்டைன் ஆண்டர்சன் (Kristian Andersen) மற்றும் பலரும், வூஹானில் உள்ள ஹூனன் (Huanan) சந்தையின் கடைகளில் கோவிட்-19 வெடிப்புக்கான மூலக் காரணங்களைக் கண்டறிந்தனர். “2019 இறுதியில் அந்த சந்தையில் SARS-CoV-2 ஆல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய பாலூட்டிகளை உயிருடன் விற்றிருந்தார்கள், மேலும் அந்தச் சந்தையின் சுற்றுசூழலில் SARS-CoV-2 இருக்கும் மாதிரிகள், உயிருடன் பாலூட்டிகளை விற்று வந்த கடைக்காரர்களுடன் சூழ்நிலைக்கேற்ப தொடர்புபட்டிருந்ததை” அவர்கள் எடுத்துக்காட்டினர்.

இதற்கு நேர்மாறாகவும், இதை விட இன்னும் உறுதியாக, உண்மையாக, விஞ்ஞானப்பூர்வ அடித்தளத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டதற்கு நேர்மாறாகவும், ஒவ்வொரு தேசிய அமெரிக்க பத்திரிகையிலும் சூழ்நிலையையும் சுட்டிக்காட்டாமல் விமர்சனப்பூர்வமின்றி வெளியிடப்பட்ட, வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டை அறிவுறுத்துபவர்களின் கூற்றுக்கள், கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்கு ஆதரவாக அமெரிக்க அரசிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டதன் அடிப்படையில், “கசிவுகள்” மீது அவர்களின் வலியுறுத்தலை அமைத்திருந்தார்கள்.

குறிப்பாக, நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை, ஆதாரமற்ற “கசிவுகளின்” அடிப்படையில், கோவிட்-19 இக்கு ஒத்த அறிகுறிகளோடு வூஹான் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு அமெரிக்க அரசிடம் ஆதாரம் இருப்பதாக கூறிய வாதங்களை பிரசுரித்தன.

'வூஹான் ஆய்வகத்தில் நோய்வாய்ப்பட்ட பணியாளர்கள் பற்றிய உளவுத் தகவல், கோவிட்-19 தோற்றுவாய் மீது விவாதத்தைத் தூண்டுகிறது' என்று தலைப்பிட்டு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் மே 23, 2021 இல் வெளியான கட்டுரையே இந்த கூற்றுகளுக்கு ஆதாரமாக இருந்தது. 

'சீனாவின் வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தின் மூன்று ஆராய்ச்சியாளர்கள், 2019 நவம்பரில் மருத்துவமனையில் அனுமதிக்கும் அளவுக்கு நோய்வாய்ப்பட்டதாக, முன்னர் வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது,” என்று அந்தக் கட்டுரை அறிவித்தது.

அந்தக் கட்டுரையை எழுதிய மைக்கேல் ஆர். கோர்டன், ஜூடித் மில்லருடன் இணைந்து தாக்கல் செய்த 2003 அறிக்கை, பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களை ஈராக் வைத்திருந்தது என்று புஷ் நிர்வாகத்தின் பொய்களைப் பரப்ப உதவியதுடன், அவ்விதத்தில் ஈராக் மீது போர் தொடங்குவதை நியாயப்படுத்துவதற்கான முக்கிய பிரச்சாரத்தை வழங்கியது.

அமெரிக்காவின் முக்கிய அச்சு ஊடகங்களும் ஒளிபரப்பு ஊடகங்களும், வூஹான் ஆய்வகத்தின் சதிக் கோட்பாட்டுக்கு தங்கள் ஒப்புதலை வழங்க, கோர்டனின் மே 2021 கட்டுரையைப் பயன்படுத்திக் கொண்டன. நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள், வாஷிங்டன் போஸ்டின் உண்மை சரிபார்ப்பு கட்டுரை அந்த 'ஆய்வகக் கசிவு' கோட்பாட்டை நம்பகமானதாக அறிவித்தது.

அதிலிருந்து ஒரு வாரத்திற்குள், “கொரோனோ வைரஸ் தோற்றுவாய்கள் குறித்த ஃபிரின்ஜ் தத்துவத்தை (Fringe Theory) செனட்டர் டோம் காட்டனும் வலியுறுத்துகிறார்” என்ற தலைப்பில், வாஷிங்டன் போஸ்ட் அதன் பிப்ரவரி 17, 2020 கட்டுரையின் ஒரு திருத்திய வடிவத்தைப் பிரசுரித்தது. இது, அந்த ஆய்வகக் கசிவு தத்துவத்தைத் “தவறானது” மற்றும் “சதிக் கோட்பாடு” என்று குறிப்பிடும் எந்த குறிப்பையும் நீக்கி இருந்தது.

வேறு வார்த்தைகளில் கூறினால், 2019 இன் இறுதியில் கோவிட்-19 அறிகுறிகளோடு மூன்று விஞ்ஞானிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் என்ற கூற்று, அச்சாணியாக ஆகி இருந்தது. இதன் அடிப்படையில், அமெரிக்க ஊடகங்களின் அந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும், முற்றிலும் பொய்யான ஒரு சொல்லாடலை “நம்பகமானது” என்று அறிவிக்க நகர்ந்தது.

இந்தக் கூற்று இப்போது தகர்க்கப்பட்டுள்ளது. சதிக் கோட்பாட்டை ஊடகங்கள் தழுவியமை, ஒட்டுமொத்தமாக முற்றிலும் ஒரு பொய்யால் கட்டமைக்கப்பட்ட ஒரு சீட்டுக்கட்டு மாளிகையாக இருந்தது.

முக்கியமாக, “2023 கோவிட்-19 தோற்றுவாய் சட்டம்” (COVID-19 Origin Act of 2023) ஜனவரி 6 கிளர்ச்சியாளர் ஜோஷ் ஹாவ்லியால் முன்வைக்கப்பட்டு, காங்கிரஸின் ஒவ்வொரு உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அதைப் புகழ்ந்து பாராட்டிய பைடென் நிர்வாகம், “கோவிட்-19 பெருந்தொற்று வூஹான் நுண்கிருமியியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு காரணம் இருப்பதாக” பொய்யாக அறிவித்தது. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த வலதுசாரி சதிக் கோட்பாடு முக்கியமாக அமெரிக்க அரசு கோட்பாடாக ஆக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தாலும் ஊடகங்களாலும் பரப்பப்பட்ட இந்தப் பொய் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை என்ன விளக்குகிறது?

வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டை, பாசிச சித்தாந்தவாதி ஸ்டீபன் கே. பானனும் மற்றும் அவரது வலதுசாரி சீன வெளிநாட்டவர் அமைப்புகளும் ஜனவரி 2020 இல் உருவாக்கினர். அதே நேரத்தில், பெருந்திரளான மக்களுக்கு இந்த நோய்தொற்று ஏற்படுவதையும் மற்றும் பொது சுகாதாரத்தை முழுமையாக கைவிடுவதையும் ஊக்குவித்து, இந்தப் பாசிச வலது, “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” விடையிறுப்பை ஊக்குவித்தது.

நவம்பர் 2021 இல் அதிகளவில் பரவக்கூடிய மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மீறக் கூடிய ஓமிக்ரோன் வகை உருவானதில் இருந்து, பைடென் நிர்வாகம், ஒட்டுமொத்த அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் உதவியோடு, முழுமையாக “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” மூலோபாயத்தைத் தழுவியது. இது இறுதியில் கடந்த மாதம் கோவிட்-19 பொது சுகாதார அவசரநிலை பிரகடனத்தை விஞ்ஞானப்பூர்வமற்ற முறையில் முடிவுக்குக் கொண்டு வந்ததில் உச்சத்தை எட்டியது.

2020 மற்றும் 2021 இல் இருந்தவற்றுடன் ஒப்பிடக்கூடிய அளவு கோவிட்-19 பரவல் மட்டங்கள் இருப்பதை வேஸ்ட்பேப்பர் சாம்பிளிங் ஆய்வுமுறை எடுத்துக்காட்டுகின்ற போதும், கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை குறித்து அறிவிப்பதை அமெரிக்கா மொத்தமாக நிறுத்தி விட்டது, அதேவேளையில் அரசாங்கங்களும் ஊடகங்களும் கோவிட்-19 பரவலையும் மற்றும் பிற சுவாச நோய் பரவலையும் குறைக்க ஓர் அத்தியாவசியமான மற்றும் செலவற்ற நடவடிக்கையான முகக்கவசம் அணிவது மீதிருக்கும் ஆர்வத்தைக் கூட மும்முரமாக ஊக்கமிழக்கச் செய்கின்றன.

'வடிவியல் கோட்பாடுகளை (geometrical axioms) ஆர்வமான மனித முயற்சிகள் மீது வைத்துப் பார்த்தால், அவை அவற்றுக்குப் பொருந்தாது,” என்றொரு பிரபல பழமொழி உண்டு. இந்தப் பெருந்தொற்றைப் பொறுத்த வரையில், SARS-CoV-2 ஒரு சீன ஆய்வகத்தில் வடிவமைக்கப்படவில்லை என்பதையும், ஒரு விரிவான திட்டத்தால் இந்த அபாயகரமான வைரஸ் பரவலைத் தடுக்கலாம், தடுக்க முடியும் என்பதையும் விஞ்ஞானம் உறுதியாக நிரூபித்துள்ளது. ஆனால், சீனாவுடன் போருக்கான பாதையில் இறங்கி, இலாபங்களைக் குவிப்பதற்கான அவர்களின் ஆற்றலுக்கு குறுக்கே வரும் எந்த தடையையும் சகிக்கவியலாது உள்ள அமெரிக்க ஆளும் வர்க்கமும் ஊடகங்களில் உள்ள அதன் பிரதிநிதிகளும், இந்த விஞ்ஞானத்தைப் பொய்மைப்படுத்தி திரித்து விட அனைத்து முயற்சியும் செய்கின்றனர்.

விஞ்ஞானிகளைப் பலிக்கடா ஆக்கும் முயற்சியில், அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும், விஞ்ஞானிகள் முன்கூட்டியே எடுத்துரைத்து அதைத் தடுக்க முயன்ற இந்த பெருந்தொற்றுக்கு விஞ்ஞானிகள் மீதே பழி சுமத்தி, மூடநம்பிக்கை மற்றும் சூனிய நடவடிக்கைகளின் அடி ஆழத்திற்குச் சென்றுள்ளன.

இன்று புபோனிக் பிளேக் (bubonic plague) நோய் ஏற்பட்டிருந்தால், அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் அது எலிகளால் பரவுகிறது என்பதை மறுத்து, சுகாதார நடவடிக்கைகள் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அதன் எதிர்ப்பை அறிவித்திருக்கும்.

வூஹான் ஆய்வக சதி கோட்பாடு ஆரம்பம் முதல் இறுதி வரை பொய் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அதை உற்சாகமாக ஆதரித்து வரும் பாசிச சக்திகள், விஞ்ஞானிகளை அச்சுறுத்தி கொடூரமாக காட்டும் அவர்களின் பிரச்சாரத்திற்கு அழுத்தமளித்து வருகின்றன. இது, வூஹான் ஆய்வக பொய்யை கடுமையான விமர்சித்த கொள்கைபிடிப்பான தடுப்பூசித்துறை நிபுணர் பீட்டர் ஹோடெஸிற்கு எதிரான மூர்க்கமான நடவடிக்கைகளில் மிகவும் கூர்மையாக வெளிப்படுகிறது.

இந்த வலதுசாரி வேட்டையாடல் தடுக்கப்பட வேண்டும்! விஞ்ஞான கோட்பாடுகளின் பாதுகாப்பை, ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்கள் நிராகரித்துள்ள நிலையில், அது தொழிலாள வர்க்கத்தின் மீது விழுகிறது. இந்தப் பெருந்தொற்றுக்கு விஞ்ஞானிகளைப் பலிக்கடா ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.

1.1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களும் மற்றும் உலகளவில் 20 மில்லியனுக்கு அதிகமானவர்களும் இறப்பதற்கு, தொற்றுநோய்களைத் தடுக்க போராடி வரும் விஞ்ஞானிகள் பொறுப்பாக மாட்டார்கள், மாறாக கோவிட்-19 மக்களிடையே பரவிய போது எதுவும் செய்யாமல் இருந்த அரசாங்கங்களும், அவை யாருக்காக பேசுகின்றனவோ அந்த நிதியியல் தன்னலக் குழுக்களுமே இதற்குப் பொறுப்பாகிறார்கள்.