பிரெஞ்சு நவ-பாசிசவாதிகளுடனான மக்ரோனின் இரகசிய பேச்சுவார்த்தைகள் குறித்து மெலோன்சோன் ஏன் மௌனமாக இருக்கிறார்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தல்களில், பிரான்சில் மில்லியன் கணக்கானவர்கள் ஒரு நவ-பாசிசவாத தேர்தல் வெற்றியைத் தடுப்பதற்காக, ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NFP) கூட்டணியின் வேட்பாளர்களுக்கு அல்லது NFP ஆல் ஆதரிக்கப்படும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். இந்தத் தேர்தல்கள் ஒரு தொங்கு நாடாளுமன்றத்திற்கு இட்டுச் சென்றதற்குப் பின்னர், மக்ரோன் உடனான புதிய மக்கள் முன்னணி (NFP) கூட்டணியானது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அபிலாஷைகளைக் காட்டிக்கொடுத்தது என்பது தெளிவாகி உள்ளது.

ஜோன் லூக் மெலோன்சோன், ஜனவரி 19, 2022 அன்று Palais de la Musique et des Congres de Strasbourg இல். [Photo by Thomas Bresson / CC BY 4.0]

தேர்தல்களில் NFP கூட்டணியானது முதலாவது இடத்திற்கு வந்தது, ஆனால் மெலோன்சோனை பிரதம மந்திரியாக நியமிக்க மக்ரோன் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, லிபரேஷன் நாளிதழ் குறிப்பிட்டதைப் போல, மக்ரோனின் அரசாங்க உயர்மட்டத் தலைவர்கள் அரசாங்க நெருக்கடி குறித்து நவ-பாசிசவாத தேசிய பேரணி (RN) கட்சியுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். சென்ற ஆண்டின் ஓய்வூதிய வெட்டுக்கள் போன்ற தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளால் நிதியாதாரம் பெறுவதுடன், இராணுவ விரிவாக்கத் தீவிரப்பாடு மற்றும் ரஷ்ய நகரங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க மக்ரோனே வாஷிங்டனில் நேட்டோ உச்சிமாநாட்டிற்குச் சென்றிருந்தார்.

RN உடனான மக்ரோனின் இரகசிய பேச்சுவார்த்தைகள் குறித்து மெலோன்சோன் செவிடன் காதில் ஊதிய சங்காக மௌனம் காத்து வருகிறார். பிரெஞ்சு மக்களால் பெருவாரியாக நிராகரிக்கப்பட்ட போர் மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள் மீது RN உடனான மக்ரோனின் ஒத்துழைப்பைத் தாக்குவதற்குப் பதிலாக, அவர் மக்ரோனுடனான தனது கூட்டணியை இரட்டிப்பாக்கி வருகிறார். போர் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக மக்ரோன் மற்றும் RN இரண்டிற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தைத் தடுக்கிறார்.

“அரசியல் தருணம்” என்று தலைப்பிட்டு வெள்ளிக்கிழமை இரவு மெலோன்சோன் வழங்கிய உரையை ஆராய்ந்தால், RN உடனான மக்ரோனின் உறவுகள் குறித்து அவர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. ரஷ்யாவுடனான போருக்காக உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்பவும் உள்நாட்டில் ஒரு போலிஸ்-அரசு ஆட்சியைத் திணிக்கவும் மக்ரோன் அழைப்பு விடுக்கின்ற அதேவேளையில், அதிவலதைத் தடுப்பதற்காக என்று கூறி, RN உடனான மக்ரோனின் உறவுகளைத் தாக்குவது, மக்ரோனுடன் கூட்டணி வைக்கும் மெலோன்சோனின் மூலோபாயத்தை வெடிக்கச் செய்யும்.

பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) உடனான அவரது நடுத்தர வர்க்க ஜனரஞ்சகவாத அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் புதிய மக்கள் ஒன்றயக் (New Popular Union) கூட்டணி என்று சமீபத்தில் மறுமுத்திரை குத்தி வெள்ளிக்கிழமை இரவு, மெலோன்சோன் பாதுகாத்துப் பேசினார். அதிவலது அபாயத்திற்கு எதிராக NFP க்கான தனது முன்மொழிவை திடீரென நடவடிக்கை எடுக்க கோரியதானது சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை (PCF) அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அவர் இவ்வாறு கூறினார்:

புதிய மக்கள் ஒன்றியம் (New Popular Union) இறந்தவுடன், புதிய மக்கள் முன்னணி (New Popular Front) திடீரென தோன்றியதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். நான் விவரங்களுக்குள் செல்ல மாட்டேன், அவைகள் அனைத்தும் உங்கள் மனதில் புதியவை. … எதுவுமே எங்களுக்கு மிகவும் பிரியமானதாக இருக்காது என்று நாங்கள் கூறினோம், ஏனென்றால் என்ன விலை கொடுத்தாவது ஒன்றியத்தை நாம் மறுசீரமைத்தால், மக்ரோன் என்ன செய்து கொண்டிருந்தாரோ அது ஒரு அதிவலது வெற்றியில் முடிவடையும் மிகப் பெரும் அபாயத்தை முன்னிறுத்துகிறது என்று எங்களுக்கு நாமே கூறிக் கொண்டு, அவர் என்ன செய்ய முயன்று கொண்டிருந்தாரோ அதைச் செயலிழக்கச் செய்வதற்கான விரைவான பாதையாக அது இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.

புதிய மக்கள் முன்னணி (NPF) கூட்டணியானது அதிவலதின் ஒரு தீர்மானகரமான எதிர்ப்பாளராக மெலோன்சோன் சித்தரிப்பது ஒரு அரசியல் பொய்யாகும். அவர் அதிவலதுக்கு எதிராக போராட நினைத்திருந்தால், RN உடனான மக்ரோனின் இரகசிய பேச்சுவார்த்தைகளைக் கண்டனம் செய்து, மக்ரோனுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை அணித்திரட்டுவதற்கு அவற்றைப் பயன்படுத்துவார். ஆனால் அவர் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறார். உடந்தையாக மௌனம் காத்து, அவர் மக்ரோனின் குழும கூட்டணி (Ensemble coalition) உடனான தனது கூட்டணியை ஆழப்படுத்தி வருகிறார்—இந்த மூலோபாயம் மக்ரோனின் ஒரே எதிர்ப்பாளராக RN ஐ காட்டிக் கொள்ள அனுமதிப்பதன் மூலமாக அதற்கு ஊக்கமளிக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு உரையில், தேர்தல்களில் RN க்கு எதிராக குழும கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக NFP வேட்பாளர்களை திரும்பப் பெறும் அவரது மூலோபாயத்தை மெலோன்சோன் பாராட்டினார். மக்ரோனின் தொழிலாளர்-விரோத பாத்திரம் குறித்து எந்த “பிரமைகளும்” இல்லாமல் NFP மக்ரோனுடன் இந்த கூட்டணிக்குள் நுழைந்தது, ஆனால் அதன் வேட்பாளர்களை மகிழ்ச்சியுடன் திரும்பப் பெற்றுக் கொண்டு, எப்படியாயினும் மக்ரோனின் வேட்பாளர்களை ஆதரித்தது என்று அவர் பெருமைபீற்றினார். மெலோன்சோன் இவ்வாறு கூறினார்:

எங்களுக்கு மாயைகள் இல்லாததால், அவற்றை எங்களால் இழக்க முடியவில்லை. அதனால்தான், வெறும் 3 சதவீதம் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில், 100 தொகுதிகளை மீதமுள்ள இடத்தில் வைத்துள்ளோம். இந்தக் கதை பிடிக்காத தோழர்களும் உண்டு. சென்ற முறை ஒரு முடிமயிர் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட தொகுதி, அடுத்த முறை தாங்கள் அல்ல, ஏதோ ஒரு வகையில் வேறு யாரோ ஒருவர் வந்து செய்த வேலையின் இலாபத்தை எடுத்துக்கொள்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள தோழர்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். ஆனால் அதுதான் வாழ்க்கை, அதுதான் போராட்ட விதி.

இதைத்தான் மெலோன்சோன், மக்ரோன் மற்றும் RN க்கு எதிரான “போர்” என்று அழைக்கிறார் என்றால், ஒருவர் கட்டாயம் கேட்க வேண்டியது: சரணடைவு எப்படி இருக்கும்? மக்ரோனுடனான கூட்டணிகள் மட்டுமே LFI மற்றும் NFP க்கு ஒரே சாத்தியமான தேர்வாக இருந்ததாக கூறப்படுவது ஏன் என்று வாதிடுவதற்கு மெலோன்சோன் திரும்பிய போது, அரசியல் திவால்நிலை குறித்த ஒரு குறிப்பிடத்தக்க ஒப்புதலை வழங்குமளவுக்கு அவர் சென்றார். தேர்தல் தொடங்கியபோது, புதிய மக்கள் முன்னணி (NFP) “அந்த தருணத்தில் தேசிய பேரணிக்கு (RN) இருந்த அதே தகைமைகளைக் கொண்டிருக்கவில்லை” என்று அவர் வலியுறுத்தினார்.

காஸா இனப்படுகொலையை சோசலிஸ்ட் கட்சி (PS) பாதுகாத்ததாலும் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த பாரிய வேலைநிறுத்தங்களை தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் காட்டிக்கொடுத்ததையும் பாதுகாத்து பேசியதாலும், மக்ரோனுடன் கூட்டணி சேர்வதைத் தவிர வேறெதுவும் அவரால் செய்ய முடியாது, NFP மிகவும் பலவீனமடைந்திருப்பதாக மெலோன்சோன் வாதிட்டார். காஸா உடனான அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் ஒற்றுமை அறிக்கைகள் மீதான பிற்போக்குத்தனமான சோசலிஸ்ட் கட்சியின் (PS) தாக்குதல்களை “ஐக்கியமின்மை” என்று இடக்கரடக்கலாக குறிப்பிட்டு மெலோன்சோன் பின்வருமாறு கூறினார்:

எங்களுக்குள் முதலில் ஒற்றுமையின்மை, இரண்டாவதாக சமர்களில் தோற்ற பிரச்சினைகள் இருந்தன. … மக்களில் 91 சதவிகிதத்தினர் ஓய்வூதிய வயதை 64 ஆக உயர்த்துவதற்கு எதிராக உள்ளனர், இறுதியில் என்ன நடந்தது? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதுவும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல, [நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் வெட்டுக்களைத் திணிக்க மக்ரோனால்] ஷரத்து 49-3 கையிலெடுக்கப்பட்டது என்பதால் தேசிய நாடாளுமன்றத்திற்கு வாக்களிக்க நேரமில்லை, அது நிறைவேற்றப்பட்டது. உண்மையில், உலகில் உள்ள ஒவ்வொரு மொழியிலும், அது ஒரு தோல்வி என்று அழைக்கப்படுகிறது. தொழிற்சங்க அமைப்புக்களில் இருந்து எந்த விளக்கமும் இல்லை, எப்படி அல்லது ஏன் தோற்றோம் என்று எவரும் கூறவில்லை. … இந்த விவகாரத்தில், மக்கள் ஏற்றுக்கொள்ளல் என்று உணர்ந்தனர், அவர்கள் சொன்னார்கள்: “கேளுங்கள், சரி, நாங்கள் எல்லா நேரத்தையும் இழக்கிறோம், ஆனால் எப்படியாயினும் எல்லா நேரத்தையும் தொடங்க வேண்டும்.” அது ரொம்பக் கடினம்.

இதுபோன்றவொரு ஒப்புதல் வாக்குமூலம், சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT) அதிகாரத்துவத்துடனான மெலோன்சோனின் சந்தர்ப்பவாத NFP கூட்டணி குறித்து சோசலிச சமத்துவக் கட்சி (PES) விடுத்துள்ள எச்சரிக்கைகளை ஊர்ஜிதம் செய்கிறது. இது தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாக இருக்கிறது. மெலோன்சோனின் கருத்துக்கள் பின்வரும் கேள்வியை எழுப்புகின்றன: சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் ஸ்ராலினிச PCF மற்றும் CGT அதிகாரத்துவங்களுடனான கூட்டணிகள் மக்ரோன் மற்றும் RN க்கு எதிரான இடதுசாரி, தொழிலாள வர்க்க எதிர்ப்பைப் பலவீனப்படுத்துகின்றன என்றால், மெலோன்சோன் ஏன் அதுபோன்ற கூட்டணிகளை ஆதரிக்கிறார்?

முதலாவதாக, மக்ரோன் உடனான அவரது கூட்டணிக்கான மெலோன்சோனின் வாதம் —அவரது NFP வேறெதையும் செய்ய முடியாத அளவுக்கு மதிப்பிழந்துவிட்டது— ஒரு மோசடி என்பதை கூறியாக வேண்டும். யதார்த்தத்தில், மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்கும் எதிரான எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கு வேறு வழியைக் காணாத மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை NFP பெற்றது. சோசலிஸ்ட் கட்சி (PS), PCF மற்றும் இப்போது மக்ரோனுடனான கூட்டணிகளுக்கு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அடிபணியச் செய்வதற்கு அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சி பல ஆண்டுகளாக வேலை செய்யாமல் இருந்திருந்தால், இடதுசாரி மனோநிலையின் இந்த எழுச்சி இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

ஆனால், ஐயத்திற்கு இடமின்றி, ஓய்வூதியப் போராட்டம் அதிகாரத்துவங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது கசப்புணர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் இது மெலோன்சோனே வகித்த பிற்போக்குத்தனமான பாத்திரத்தையும் அம்பலப்படுத்துகிறது. அடிபணியாத பிரான்ஸ் (LFI) அதன் மில்லியன் கணக்கான வாக்காளர்களை ஒரு வேலைநிறுத்த இயக்கத்தில் அணிதிரட்டுவதற்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை, மாறாக எதிர்ப்பானது நாடாளுமன்றத்தின் மூலமாக பாய்ச்சப்பட வேண்டுமென கோரியது. மக்ரோனின் வெட்டுக்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அங்கே எந்த நம்பகமான நாடாளுமன்ற தந்திரோபாயமும் இருக்கவில்லை என்பதுதான் —அதாவது இந்த மூலோபாயம் திவாலானது என்பதை மெலோன்சோன் இப்போது நடைமுறையளவில் ஒப்புக் கொள்கிறார். மெலோன்சோன் இப்போதும் அதைப் பின்தொடர்வதற்கான காரணத்தை NFP இன் வர்க்க அடித்தளத்திலும் அரசியல் வேலைத்திட்டத்திலும் காண வேண்டும்.

சோசலிஸ்ட் கட்சிக்குப் (PS) பின்னால் ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியில் உள்ள வசதியான நடுத்தர வர்க்க கல்வியாளர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளுக்கும் இடையிலான ஒரு கூட்டணியே NFP ஆகும். NFP இன் சொந்த தேர்தல் வேலைத்திட்டம், உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புகளை அனுப்பவும், பிரெஞ்சு இராணுவ, பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளைப் பலப்படுத்தவும் அழைப்பு விடுத்தது. மக்ரோன், ஏகாதிபத்திய போர், போலிஸ்-அரசு ஆட்சி மற்றும் RN க்கு எதிரான பாரிய தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை தடுப்பதற்கே அது செயல்படுகிறது ஏனென்றால் அது மக்ரோனுடன் மட்டுப்படுத்தப்பட்ட, தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து OCI முறித்துக் கொண்ட சிறிது காலத்திற்குப் பின்னர், மெலோன்சோன் அவரது அரசியல் வாழ்வை பியர் லம்பேர்ட்டின் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (Organisation communiste internationaliste - OCI) இல் தொடங்கினார் என்பது பகிரங்கமான விடயமாகும். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (PCF) சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட, முன்னாள் நாஜி-ஒத்துழைப்பாளரான பிரான்சுவா மித்திரோனின் பெருவணிக சோசலிஸ்ட் கட்சிக்கும் (PS) இடையிலான இடது ஐக்கிய ஒன்றியத்தை (Union of the Left) OCI ஆதரித்தது. லியோனல் ஜோஸ்பன் மற்றும் மெலோன்சோன் போன்ற OCI அங்கத்தவர்கள் சோசலிஸ்ட் கட்சியில் (PS) இணைந்து சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கங்களில் அமைச்சர்களானார்கள்.

ஒரு “ஜனரஞ்சக” இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான மெலோன்சோனின் அழைப்புகள், 1972 இல் பொது வேலைத்திட்டத்திற்கு உடன்பட்ட பின்னர் ஒரு “மக்கள்” அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான சோசலிஸ்ட் கட்சி (PS)- பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சிக் (PCF) கூட்டணியின் வாக்குறுதிகளை எதிரொலிக்கின்றன. ஆயினும், 1982-83 “சிக்கன நடவடிக்கை திருப்பத்தில்” சீர்திருத்தங்கள் குறித்த பொது வேலைத்திட்டத்தின் வாக்குறுதிகளைக் கைவிட்டு, பிரான்சில் 1981 இல் இந்தக் கூட்டணி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, குறிப்பாக 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பின்னர், தொழிலாள வர்க்கத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) அடித்தளம் பொறிந்து போயுள்ளது. NFP யில் இன்று எஞ்சியிருக்கும் சக்திகள் மார்க்சிசத்திற்கு நனவுபூர்வமாக விரோதப் போக்கு காட்டும் மத்தியதர வர்க்க இயக்கங்களாகும்.

இது வெள்ளிக்கிழமை இரவு மெலோன்சோனின் கருத்துக்களில் வெளிப்படையாக இருந்தது. “கார்ல் மார்க்ஸ் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படைப்புகளை ஒப்பிட்டு” நேரத்தை செலவிடுபவர்களை ஏளனம் செய்த மெலோன்சோன், தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச முன்னணிப் படையைக் கட்டியெழுப்புவதை அவர் நிராகரிப்பதாக வலியுறுத்தினார்:

வரலாற்றின் நடிகர்கள் மக்களே என்று நாங்கள் நம்புகிறோம், ஒரு புரட்சிகர முன்னணிப்படை செய்வதைப் போல நனவுடன் உட்செலுத்தப்பட வேண்டிய அவசியமில்லை, அதற்கு தலைமை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதை தெளிவுபடுத்த வேண்டும். சில நேரங்களில் எதையாவது தொடங்குவதற்கு யாராவது தேவைப்படுகிறார்கள், பின்னர் அது செயல்படுகிறது.

மித்திரோன் மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) 1972 பொது வேலைத்திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக NFP இன் போலிஸ்-ஆதரவு வேலைத்திட்டத்தை ஊக்குவித்து அவர் இவ்வாறு தொடர்ந்தார்:

இடதுசாரிகளை வெற்றிக்கு இட்டுச் சென்ற அத்தனை மகத்தான நடவடிக்கைகளும் எப்போதும் ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான நடவடிக்கைகளே. என்னைப் போலவே வயதானவன், பொது வேலைத்திட்டமானது 1981 இன் வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை நான் உங்களுக்கு சொல்ல முடியும்... என்ன செய்வது என்பதில் நாம் ஒன்றுகூடுவோம், அந்த வழியில் நாம் ஒரு பொதுவான வேலைத்திட்டத்திற்கு வருவோம், அதனால் யூகோஸ்லாவியா அல்லது சீன சோசலிசம் அல்லது சோசலிசமே இல்லை என்பது குறித்து முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள ஏராளமான மக்கள் இறுதியில் ஒன்றுகூடுவார்கள், ஏனென்றால் அவர்கள் ‘ஆமாம், சரி, அது நன்றாக இருக்கிறது’ என்று கூறுவார்கள்.

பிரான்சின் நெருக்கடி மெலோன்சோனின் திவாலான வாதங்களை அம்பலப்படுத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த ஓய்வூதியப் போராட்டம் கற்றுக்கொள்ள வேண்டிய கூர்மையான படிப்பினைகளை வழங்குகிறது. தொழிலாள வர்க்கம் “அறிவொளி பெறுவதற்கு” NFP போன்ற எதிர்ப்புரட்சிகர அமைப்புக்கள், போராட்டங்களுக்கு குழிபறிக்கும் முயற்சிகளை அரசியல்ரீதியாக நசுக்குவதற்கு அதன் சொந்த புரட்சிகர முன்னணிப் படையைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். மக்ரோன் ரஷ்யாவுடன் போருக்குத் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், RN உடனான அவரது மோசமான சூழ்ச்சிகளுக்கான எதிர்ப்பை, NFP ஆனது தடுத்து வருகின்ற நிலையில், இது இப்போது மிக அவசரமானதாக உள்ளது.

திடீர் தேர்தல்களில் இடதை நோக்கிய திருப்பத்திற்கு மத்தியில், போர், காஸாவில் இனப்படுகொலை, மற்றும் உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாசிசவாத பொலிஸ்-அரசு ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தை தயாரிப்பு செய்து அணிதிரட்டுவதே தீர்மானகரமான பிரச்சினையாகும். அத்தகைய இயக்கத்திற்கான அத்தியாவசியமான முன்நிபந்தனையானது NFP இன் சோசலிசத்திற்கு எதிரான கசப்பான எதிர்ப்பை நிராகரிப்பதாகும். தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அத்தியாவசிய பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் தீர்க்க முடியாது, மாறாக வர்க்கப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட முடியும். தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச, சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே நவ-பாசிசம் மற்றும் போரின் எழுச்சியைத் தோற்கடிப்பதற்கான ஒரே வழியாகும்.

Loading