இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதற்காக தனக்கு 11 வயது இருக்கும் போது குடும்பத்துடன் வந்த 23 வயதான மனோ யோகலிங்கம் என்ற இலங்கையர் கடந்த புதன்கிழமை தீக்குளித்து உயிரிழந்தார்.
இந்த கொடூரமான சம்பவம், பிரதமர் அந்தோனி அல்பனீஸின் கூட்டாட்சி தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொடூரமான மற்றும் சட்டவிரோத கொள்கைகளின் விளைவாகும். யோகலிங்கத்தின் தீக்குளிப்பு, தெற்கு மெல்போர்ன் தொழிலாள வர்க்க புறநகர் பகுதியான நோபல் பார்க்கில் நடந்தது. மத்திய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொடூரமான அகதிகள் எதிர்ப்பு ஆட்சிக்கு எதிராக வாரக்கணக்காக நடந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தே யோகலிங்கம் தீக்குளித்ததோடு அந்த ஆர்ப்பாட்டங்களில் அவரும் பங்குபற்றியிருந்தார்.
பிரிட்ஜிங் (bridging) மற்றும் தற்காலிக விசாக்கள் எனப்படுவனவற்றின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் ஒரு தசாப்தம் அல்லது அதற்கும் மேலாக வாழ்ந்துவரும் சுமார் 12,000 பேரில் யோகலிங்கமும் ஒருவர். இவற்றில் பல மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து 2010களின் முற்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு வந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில், முந்தைய ரட்-கில்லார்ட் தொழிற்கட்சி அரசாங்கங்கள், ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் எந்த வழியில் நுழைந்தார் என்பதைப் பொருட்படுத்தாமல், புகலிட உரிமையை வழங்கும் சர்வதேச சட்டக் கோட்பாட்டை வெளிப்படையாக நிராகரித்தன. படகில் வரும் அகதிகள் உடனடியாக கிறிஸ்மஸ் தீவு மற்றும் தெற்கு பசிபிக் மாநிலங்களான நவுரு மற்றும் பப்புவா நியூ கினியாவில் உள்ள முகாம்களுக்கு நாடு கடத்தப்பட்டனர் - இறுதியில் ஆஸ்திரேலியாவில் வசிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் பாதகமான விளைபயனுடன் எந்த உரிமையும் இல்லாமல் இருக்கின்றார்கள்.
ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவில் உடனடி நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலின் கீழ் வாழ்ந்து வளர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரஜைகளுக்கு இருப்பது போல், எந்தவிதமான நலன்புரி வருமான ஆதரவு, மருத்துவப் பாதுகாப்பு அல்லது ஏனைய பொது சுகாதார வசதி, அவர்களின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக அனுமதி மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக்கும் அனுமதி இல்லை.
முன்னாள் லிபரல்-தேசிய அரசாங்கத்தால் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'துரித தரவு தேடல்' (fast track) முறைமையின் கீழ் யோகலிங்கத்தின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த 'துரித தரவு தேடல்' முறைமை என்பது அவர்களை ஒரு 'நரகச் சூழ்நிலைக்குத்' தள்ளியதால், அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் வரையறுக்கப்படாத மற்றும் நாள் குறிப்பிடப்படாத நாடு கடத்தல் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். இந்த நிலை இப்போது ஒரு தசாப்தம் அல்லது அதற்கும் மேலாக நீடித்து வருகின்றது. இந்த கொடூர முறைமைக்குள் அகப்பட்டவர்களில், மிக இளம் குழந்தைகளாக ஆஸ்திரேலியாவிற்கு வந்த, தங்கள் பாடசாலை நண்பர்களுக்கு இருக்கின்றது போன்ற உரிமைகள் எதுவும் இல்லாத நிலையில், உயர்நிலைப் கல்லூரிகளில் பட்டம் பெறவிருக்கும் ஏராளமான அகதிகளும் அடங்குவர்.
10,000க்கும் மேற்பட்ட மக்களின் ஆவணப்படுத்தப்படாத மற்றும் பாதிப்புகளுடன் கூடிய நாடற்ற நிலையைத் தீர்க்க, அல்பனீஸின் தொழிற்கட்சி அரசாங்கம் எதையும் செய்ய மறுப்பது, அதன் ஈவிரக்கமற்ற மற்றும் வலதுசாரித் தன்மையின் மற்றொரு வெளிப்பாடாகும்.
உலக சோசலிச வலைத் தளம், மனோ யோகலிங்கத்தின் துயர மரணத்திற்கு சற்று முன்னர், மெல்பேர்னில் ஆர்ப்பாட்ட முகாமின் தலைவர்களில் ஒருவரான தமிழ் அகதிகள் பேரவையின் ரதி பார்த்லேட் உடன் பேசியது. 'இது அவர்களுக்கு ஒரு விளையாட்டு, அவர்கள் எங்களை அகதிகளாக வைத்து விளையாடுகிறார்கள். அரசாங்கம் அதனது உண்மையான முகத்தை காட்டிவிட்டது” என அவர் தொழிற்கட்சி அரசாங்கத்தை கண்டனம் செய்தார்.
ரதி 2013 இல் இலங்கையை விட்டு வந்து, முதியோர் பராமரிப்புப் பணியாளராகப் பணிபுரிந்த அதே சமயம், அவரது நண்பர் மிகுந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இரண்டு தொழில்களைச் செய்து பாடசாலை வயதுடைய தங்கள் இரு பிள்ளைகளுக்கு ஒத்துழைத்துள்ளார். 2022 மே மாதம் தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றியானது, தங்களின் விசா பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று தானும் ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்களும் நம்பியதாக ரதி விளக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், அவரும் மேலும் 21 பெண்களும், அதிகளவில் தமிழ் இலங்கை மற்றும் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்களும், மெல்பேர்னில் இருந்து கான்பெரா வரை, கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக, ஒரு எதிர்ப்புப் பேரணியை மேற்கொண்ட போதிலும், அரசாங்க அதிகாரிகளால் அவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.
அதன்பிறகு, கடந்த ஜூலை மாதம், புகலிடம் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மெல்போர்னில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் அலுவலகங்களுக்கு வெளியே 24 மணி நேர அமர்வுப் போராட்டத்தைத் தொடங்கியதுடன், அதோடு ஒருங்கிணைந்தவாறு சிட்னியில் உள்துறை அமைச்சர் டோனி பர்க்கின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆகஸ்ட் 16 அன்று மெல்போர்னில் முகாம் அமைத்துப் போராடியவர்கள் முகமூடி அணிந்த நவ-நாஸிக்களால் தாக்கப்பட்ட வேளை பொலிசார் காப்பாற்றினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து ரதி கூறியதாவது: “இது இலங்கையர்கள், ஈரானியர்கள், வங்கதேசம், பாகிஸ்தானியர்கள் மற்றும் ஏனையோரையும் ஒன்றிணைக்கிறது. எமக்கான ஆதரவை வழங்குமாறு சமூகத்தவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். நான் 2013 இல் ஒரு அகதியாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி வந்த போதிலும், இப்போதும் இன்னும் பிரிட்ஜிங் விசாவில்தான் இருக்கிறேன். அதனால் எல்லாம் மறுக்கப்படுகிறது. என்னால் எந்த சுகாதார பாராமரிப்பும் பெற முடியாது; நான் மேலும் படிக்க விரும்புகிறேன், ஆனால் சர்வதேச மாணவர் போல் பல்லாயிரக்கணக்கான டொலர்கள் செலுத்த வேண்டியிருப்பதால் என்னால் படிக்க முடியாது. நான் அதிக ஊதியம் பெறும் வேலைகளுக்குச் சென்றால், எனது தொழில் உரிமைகள் என்ன என்று முதலாளிகள் என்னிடம் கேட்கிறார்கள்—இது முதியோர் பராமரிப்புத் துறையில் எந்த ‘உயர்ந்த’ பதவியும் பெற முடியாமல் என்னைத் தடுக்கிறது.
ரதி, தனது மூத்த மகள் இளம் குழந்தையாக ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டதாகவும், உயர்நிலைப் பாடசாலைப் படிப்பை முடிக்கவுள்ள போதிலும், இப்போதுதான் அவள் தன் நண்பர்கள் மற்றும் வகுப்புத் தோழிகளிடமிருந்து எப்படி சட்டரீதியாக வேறுபட்டவளாக இருக்கின்றாள் என்பதை புரிந்துகொள்கிறாள் என்று விளக்கினார். பொதுவாக வசதியான சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் முழுக் கட்டண இடங்களுக்கு மட்டுமே தகுதியுடையவராக இருப்பதால், ரதியின் கல்வித் தகுதியுள்ள மகளால் பொதுவாக மானியம் கிடைக்கும் பல்கலைக்கழகப் படிப்புகளை பெற முடியவில்லை.
'கடந்த 12 ஆண்டுகளில், எனது குடும்பம் இந்த சமூகத்திற்கு மிகவும் பாரிய பங்களித்துள்ளது; நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்,” என்று ரதி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். “எனது கணவரும் ஒரு முதியோர் பராமரிப்பு பணியாளர். அதே நேரம், அவர் ஒரு களஞ்சிய சுமைதூக்கி சாரதியாக வேறொரு வேலையும் செய்கிறார். நாங்கள் கடின உழைப்பாளிகள். நான் 18 வருடங்களாக என் அம்மாவைப் பார்க்கவில்லை - இது உணர்ச்சி அதிர்ச்சியையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. ஆம், நாங்கள் ஒரு சமூகத்தில் இருக்கிறோம் - ஆனால் அது ஒரு திறந்த சிறை, நான் பிரிட்ஜிங் விசாவுடன் எங்கும் பயணிக்க முடியாது. இந்த நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாங்கள் அனைவரும் 12 ஆண்டுகளாக இதை வலியுறுத்தி வருகிறோம். எங்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும் என்று தான் அரசிடம் கேட்கிறோம். அதனால்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம், அமைதியான முறையில் போராட்டம் நடத்த வந்துள்ளோம்.”
தொழிற் கட்சி அரசாங்கத்தால் வதிவிட உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள பல புகலிடக் கோரிக்கையாளர்கள், WSWS நிருபர்களிடம் பேசிய போது, தங்களதும் ஏனையோரதும் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் ஏற்படும் தீங்கான தாக்கம் பற்றி கூறினார்.
தங்கள் குடும்பத்தவர்களிடம் இருந்து தூர விலக்கி வைக்கப்பட்டுள்ள நிலையை எதிர்கொள்ளும் பலர், மன அழுத்தம், இதய செயலிழப்பு, மனச்சோர்வு மற்றும் பதட்டம் உட்பட தீவிரமான மன மற்றும் உடல் ஆரோக்கிய பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். பிரிட்ஜிங் விசாக்கள் என அழைக்கப்படும் பலவற்றுக்கு வழக்கமான புதுப்பித்தல் அவசியமாகும். அத்தகைய விசாக்கள் மறுக்கப்படும் பட்சத்தில் குடும்பம் நாடுகடத்தப்படும் அபாயம் உள்ளது. குறைந்தபட்சம் ஒரு குடும்பம் தங்கள் பிள்ளை 18 வயதை அடைந்தவுடன் நாடு கடத்தப்படுமோ என்று அஞ்சுகிறது என்பதை WSWS புரிந்துகொள்கிறது. அதன் விளைவாக பல குடும்ப உறுப்பினர்கள் தற்கொலை பயத்தால் கண்காணிக்கப்படுகிறார்கள்.
புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா இல்லையா என்பது மற்றொரு பிரச்சினை.
மெல்போர்னில் உள்ள ஒரு போராட்டக்காரரான கவி, தான் 2012 இல் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும், முன்பு வேலை செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் தெளிவான காரணமின்றி வேலை உரிமைகள் மூன்று மாதங்களுக்கு முன்பு பறிக்கப்பட்டதாகவும் விளக்கினார். 'நான் ஒரு களஞ்சியத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன், ஆனால் இப்போது என்னால் எதுவும் செய்ய முடியாது, என்னால் வேலை செய்யவே முடியாது. எனக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை – அரசாங்க சேவைகள் இல்லை, மருத்துவப் பராமரிப்பு இல்லை, எனவே இப்போது நான் உயிர்வாழ முயற்சிக்கிறேன். நான் என் சேமிப்பிலேயே இப்போது வாழ்கிறேன்.
யோகலிங்கத்தின் துயர மரணமானது, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஆஸ்திரேலிய தொழிற்கட்சி மற்றும் லிபரல்-தேசிய அரசாங்கங்கள், புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு சர்வதேச ரீதியில் வழிகாட்டியாக இருந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. போர் மற்றும் எதேச்சாதிகாரத்திற்கான உந்துதலுக்கு மத்தியில், சர்வதேச அளவில் பாசிச இயக்கங்கள் மற்றும் அரசாங்கங்களால் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை சமூக நெருக்கடிக்காக அகதிகளை பலிகடா ஆக்கி, தொழிலாள வர்க்கத்தை தேசிய அடிப்படையில் பிளவுபடுத்த முயல்கின்றன.
சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட முழு தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட இயக்கத்திற்கான போராட்டமே இதற்கு மாற்றீடாகும். தொழிலாளர்களுக்கு முழு பிரஜா உரிமைகளுடன் அவர்கள் விரும்பும் இடத்தில் வாழவும் வேலை செய்யவும் உரிமை உண்டு என்ற சர்வதேச கொள்கையின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் பாதுகாப்பது அந்த போராட்டத்தின் ஒரு பிரதான அங்கம் ஆகும்.
மேலும் படிக்க
- ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கம் தமிழ் அகதி குடும்பத்திற்கு பாதுகாப்பற்ற தற்காலிக வதிவிட அனுமதியை மட்டுமே வழங்குகிறது
- தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று வயது தமிழ் அகதிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுக்கின்றனர்
- ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் மனிதத்தன்மையற்ற நிலைமைகளை எதிர்க்கின்றனர்