மத்திய கிழக்கு போரை இஸ்ரேல் பாரியளவில் விரிவுபடுத்துகிறது, லெபனானில் கிட்டத்தட்ட 500 பேர் கொல்லப்பட்டனர்

லெபனான் மீது இஸ்ரேல் திங்களன்று நடத்திய பாரிய தாக்குதலில் 35 குழந்தைகள், 58 பெண்கள் மற்றும் இரண்டு மருத்துவர்கள் உட்பட 492 பேர் கொல்லப்பட்டனர்.

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பின் [Photo: @Inteligencefnt]

திங்களன்று நடந்த வெகுஜனப் படுகொலைகள், 2006ல் லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பின் தீவிரத்தை விட மிக அதிகமானதாகும், இதன் போது ஒரு மாதத்தில் 1,000 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கள், கடந்த வாரம் அதன் பாரிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நடந்தது, அதில் ஆயிரக்கணக்கான பேஜர்களும் பிற தகவல் தொடர்புக் கருவிகளும் லெபனான் முழுவதும் வெடித்ததில் 37 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர்.

ஏற்கனவே உத்தியோகபூர்வமாக 41,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ள தற்போதைய காஸா இனப்படுகொலையை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் மொழியை எதிரொலிக்கும் மொழியில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் டானியல் ஹகாரி (Daniel Hagari) அறிவித்தார், 'ஹிஸ்புல்லா அதன் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஒரு மனிதக் கேடயமாக சாதாரண மக்களையும் குடிமக்களின் வீடுகளையும் பயன்படுத்துகிறது.'

லெபனானில் இஸ்ரேலின் படுகொலைகள் தெற்கு லெபனானில் இருந்து தலைநகர் பெய்ரூட்டிற்கு வெகுஜன வெளியேற்றங்களைத் தூண்டின. இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தெற்கு லெபனான் மக்களை வெளியேறுமாறு அழைப்பு விடுத்து, அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

ஆனால் நெதனியாகு அரசாங்கம் மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் உண்மையான திட்டங்கள் இஸ்ரேலின் புலம்பெயர்ந்தோர் மற்றும் யூத எதிர்ப்பை எதிர்த்துப் போராடும் மந்திரி அமிச்சாய் சிக்லியால் (Amichai Chikli) வெளிப்படுத்தப்பட்டன, அவர் தெற்கு லெபனானில் ஒரு நில அபகரிப்பை நடத்த இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார்.

'லெபனான், ஒரு கொடியைக் கொண்டிருந்தாலும், அதற்கு அரசியல் நிறுவனங்கள் இருந்தாலும், அது ஒரு நாட்டின் வரையறையை பூர்த்தி செய்யவில்லை,' என்று அவர் கூறினார். 'பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு இடையிலான செல்வாக்கு மண்டலங்கள் மற்றும் ஆதாரவளங்களின் விநியோகத்தை அடிப்படையாகக் கொண்ட சைக்ஸ் மற்றும் பிகோட் (Sykes and Picot) பிரிக்கும் கோடுகள், காலத்தின் சோதனையில் தப்பிப்பிழைத்திருக்கவில்லை' என்றார்.

இப்பொழுது நடத்தப்படும் இராணுவ நடவடிக்கையின் அளவிற்கு சான்றாக, இஸ்ரேலின் தேசிய ஐக்கிய கட்சித் தலைவர் எம்.கே. பென்னி கான்ட்ஸ் (MK Benny Gantz) அறிவித்தார்: 'நாம் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக மட்டும் செயல்படாமல், தன் எல்லையில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்திற்கு பொறுப்பு கொண்டுள்ள இறைமை பெற்ற லெபனான் நாட்டிற்கு எதிராகவும் செயல்பட வேண்டும்.'

இந்தப் பாரிய தீவிரப்பாடு நிகழ்நேரத்தில் அமெரிக்காவுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. அமெரிக்காவோ அதற்கு நிதியாதாரம் வழங்கி, ஆயுதமளித்து மற்றும் அரசியல்ரீதியாக ஆதரித்து வருகிறது.

திங்களன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் (Maj. Gen. Pat Ryder) அறிவிக்கையில், '[பாதுகாப்புச் செயலர்] லாயிட் ஆஸ்டின், கிழக்கு நேரப்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட்டுடன் பேசினார்.

'இரண்டு அழைப்புகளின் போதும், செயலாளர் ஆஸ்டின் இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமைக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்' என்று ரைடர் கூறினார். “இப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் பணியாளர்களைப் பாதுகாக்க அமெரிக்கா தொடர்ந்து தயாராக இருப்பதாகவும் செயலாளர் தெளிவுபடுத்தினார். ”

இப்பகுதிக்கு அமெரிக்கா கூடுதல் அமெரிக்க துருப்புகளை அனுப்பும் என்று ரைடர் அறிவித்தார். தற்போது, ஈராக் மற்றும் சிரியா உட்பட மத்திய கிழக்கு முழுவதிலும் சுமார் 40,000 அமெரிக்க துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. USS ஆபிரகாம் லிங்கன் விமானந்தாங்கி கப்பல் தற்பொழுது இப்பகுதியில் நிலைகொண்டுள்ளது, USS Harry S. Truman கப்பல் தற்போது அப்பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது

பைடென் நிர்வாகம் பதட்டங்களைத் தணிக்கவும் மற்றும் ஒரு 'போர்நிறுத்தத்தை' பாதுகாக்கவும் முயல்வதாக பகிரங்கமாக அறிவித்திருந்தாலும், யதார்த்தம் என்னவென்றால், காஸாவில் இனப்படுகொலை மற்றும் மத்திய கிழக்கில் அதன் பரந்த தாக்குதல்கள் இரண்டிலும் இஸ்ரேலின் பாத்திரத்திற்கு அது நிதியளித்து, செயல்படுத்தி வருகிறது மற்றும் ஊக்குவிக்கிறது.

ஜூலை மாதம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காங்கிரசின் இரு அவைகளிலும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து ஒரு எழுந்து நின்று பாராட்டுக்களைப் பெற்றார், அதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருடன் தனித்தனியாக சந்திப்புகள் நடத்தப்பட்டன. நெதன்யாகுவுடனான அவரது சந்திப்புக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹாரிஸ் அறிவித்தார்: “ஈரான் மற்றும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற ஈரான்-ஆதரவிலான போராளிக் குழுக்களிடமிருந்து இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நான் எப்போதும் உறுதிப்படுத்துவேன்” — மோதலை காஸாவுக்கு அப்பாலும் விரிவுபடுத்துவதற்கான தெளிவான அங்கீகாரம்

மேலும், அமெரிக்க பத்திரிகைகள் இஸ்ரேலின் திட்டங்களின் அளவைப் பற்றி ஒரு துப்பு கொடுக்கத் தொடங்குகின்றன. திங்களன்று வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் நியூ யோர்க் டைம்ஸின் தலைமை வாஷிங்டன் நிருபர் டேவிட் சாங்கர் எழுதினார், “ஹிஸ்புல்லாவின் அதிகாரத்தை அவ்வப்போது தட்டிக் கேட்பதில் நெதன்யாகு இனியும் திருப்தியடையவில்லை. அவரது பார்வையில், அக்டோபர் 7 அனைத்தையும் மாற்றிவிட்டது மற்றும் காஸாவிலும் லெபனானிலும் பிரச்சினையை ஒரேயடியாகத் தீர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்ரேலும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் அக்டோபர் 7 தாக்குதல்களை பாலஸ்தீனிய பிரச்சினைக்கான அவர்களின் 'இறுதி தீர்வை' முன்னெடுப்பதற்கு மட்டுமல்ல, மாறாக பிராந்தியந்தழுவிய போரைத் தூண்டுவதன் மூலம் மத்திய கிழக்கை ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் முழுமையாக மறு ஒழுங்கு செய்யவும் பற்றிக் கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்த உலகிலும் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கு வைக்கும் ஒரு உலகளாவிய போராட்டத்தின் ஒரு முன்னணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த போரைக் காண்கிறது.

லெபனானில் படுகொலையைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பின், நெதன்யாகு நியூ யோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுவார். இது ஏகாதிபத்திய சக்திகளால் ஒரு போர் உச்சிமாநாடாக மாற்றப்பட்டுள்ளது.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று இஸ்ரேலிய முற்றுகை மற்றும் காஸா மீதான குண்டுவீச்சு ஆகியவற்றால் தோற்றுவிக்கப்பட்ட பேரழிவைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காஸாவில் 41,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் – அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சில நேரங்களில் முழு குடும்பங்களும் உட்பட பொதுமக்கள் – கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது மற்றும் 95,500 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. … 2 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பு, உணவு, தண்ணீர், சுகாதாரம், தங்குமிடம், சுகாதாரம், கல்வி, மின்சாரம் மற்றும் எரிபொருள் - உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் இல்லாமல் உள்ளனர். குடும்பங்கள் வெளியேற வழியின்றி ஒரு ஆபத்தான இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளன.

லெபனானுக்குள் போர் விரிவடைந்துள்ள நிலையில், காஸா மக்கள் மட்டுமல்லாமல், மத்திய கிழக்கின் பெரும்பான்மையான மக்களும் இதேபோன்ற பேரழிவுகரமான நிலையை எதிர்கொள்ளும் ஆபத்தில் உள்ளனர்.

Loading