முன்னோக்கு

காஸாவில் நெதன்யாகுவின் பாரிய நிர்மூலமாக்கும் திட்டத்தை ஆதரித்துவரும் ஏகாதிபத்திய சக்திகள் யஹ்யா சின்வர் படுகொலையைப் பாராட்டுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த வியாழனன்று, இஸ்ரேலிய படைகள் ரஃபாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரைக் (Yahya Sinwar) கொன்றுள்ளன. சின்வார் மீதான படுகொலையானது, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தின் தலைவர்களிடம் இருந்து நெதன்யாகு அரசாங்கத்திற்கு கட்டுப்பாடற்ற ஆதரவு குறித்த அறிக்கைகளை வெளியிடத் தூண்டியுள்ளது. காஸாவிலுள்ள 2.2 மில்லியன் மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய அரசாங்கத்தின் நிர்மூலமாக்கும் மற்றும் இனச் சுத்திகரிப்பு தாக்குதலை வெளிப்படையாக அங்கீகரிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை இவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

சின்வார் தனது கொலையாளிகளை எதிர்க்கும் போது இறந்துள்ளார். ஆனால், அவர் எதிர்த்தார் என்ற உண்மை, அவரது மரணத்தை ஒரு கொலைக்கு எந்த வகையிலும் குறைந்ததாக ஆக்கவில்லை. காஸாவின் மக்களை அழித்தொழிப்பது மற்றும் 1967ல் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பை இணைத்துக்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்படும் சட்டவிரோதப் போரின் ஒரு பகுதியாக அவரது படுகொலை அமைந்துள்ளது.

காஸா பகுதியின் டெய்ர் அல் பலாவில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் முற்றத்திலுள்ள ஒரு கூடாரப் பகுதியை இஸ்ரேல் தாக்கியதை அடுத்து ஏற்பட்ட தீப் பிளம்புகளை பாலஸ்தீனியர்கள் அணைக்க முற்படுகின்றனர். அக்டோபர் 14, 2024 திங்கட்கிழமை [AP Photo/Abdel Kareem Hana]

அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தப் பிராந்தியம் முழுவதும் தங்களது இராணுவத் தாக்குதலை விரிவுபடுத்தி வருகையில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் அனைத்து தலைவர்களையும், அத்துடன் முக்கிய ஈரானிய பிரமுகர்களையும் இலக்கு வைத்து நடத்தப்படும் சட்டவிரோத படுகொலைத் தாக்குதலைத் தொடர்ந்து சின்வாரின் படுகொலை நடந்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கடந்த மாதம் லெபனானில் 2,000ம் இறாத்தல் எடையுள்ள 80 குண்டுகளால் வீசப்பட்டு கொல்லப்பட்டார். ஜூலை மாதம் தெஹ்ரானில் ஹமாஸ்சின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.

சின்வார் அக்டோபர் 29, 1962 அன்று காஸாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தார். 1948 இல் ஏகாதிபத்திய ஆதரவுடன் இஸ்ரேலாக மாறிய பகுதியில் இருந்து அரேபியர்களை இனச்சுத்திகரிப்பு செய்த போது, தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோன் என்றும் அறியப்படும் மஜ்தல் அஸ்கலனில் இருந்து அவரது குடும்பம் வெளியேற்றப்பட்டது. சின்வாருக்கு ஐந்து வயதாக இருந்தபோது, பாலஸ்தீனிய பகுதிகள் அனைத்தையும் ஆக்கிரமித்ததன் ஒரு பகுதியாக காஸா சட்டவிரோதமாக இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஏறத்தாழ அவரது வாழ்நாள் முழுவதும், இஸ்ரேல் காஸா மக்களை ஒரு முழு முற்றுகைக்கு உட்படுத்தி, அதை உலகின் மிகப்பெரிய சித்திரவதை முகாமாக மாற்றியதுடன், அங்கு வசிப்பவர்களுக்கு ஒவ்வொரு அடிப்படை மனித உரிமைகளையும் மறுத்து வந்தது. மேலும், இஸ்ரேல் எந்தவித தண்டனையும் இன்றி, காஸாவிலுள்ள மக்களை கடத்திச் சென்றும், சித்திரவதை செய்தும் படுகொலை செய்து வந்தது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நெதன்யாகுவை ஜனாதிபதி ஜோ பைடென் வியாழன் அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த கொலைப் பணிக்கு வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. “ஹமாஸ் இனி ஒருபோதும் காஸாவை கட்டுப்படுத்த முடியாது” என்று அந்த அறிக்கை அறிவித்தது.

வியாழனன்று, “எங்களது உளவுத்துறை உதவியுடன், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள், ஹமாஸ்சின் தலைவர்களை இடைவிடாது பின்தொடர்ந்து, அவர்களை மறைவிடங்களில் இருந்து வெளியேற்றி, அவர்களை ஓடுவதற்கு கட்டாயப்படுத்தியது.... எவ்வாறாயினும், உலகெங்கிலும் உள்ள எந்தவொரு பயங்கரவாதியும், எவ்வளவு காலம் எடுத்தாலும் நீதியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது” என்று பைடென் அறிவித்தார்.

“ஹமாஸின் தலைமையையும் இராணுவக் கட்டமைப்பையும் அகற்ற இஸ்ரேலுக்கு எல்லா உரிமையும் உள்ளது” என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

சின்வர் கொல்லப்பட்டதைப் பாராட்டி பைடென் வெளியிட்ட கருத்துக்கள் ஒரு பாசிசத் தலைவரால் செய்யப்பட்டிருக்கலாம். அமெரிக்க அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் ஜனநாயகக் கோட்பாடுகள் நிராகரிக்கப்படுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன. படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகள் “ஜனநாயக” நாடுகளின் தலைவர்களால் நியாயமான கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது ஜனநாயக வடிவங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களின் சிதைவின் ஒரு பகுதியாகவும், மேலும் ஆழமான குற்றச் செயல்களுக்குள் இறங்குவதாகவும் உள்ளது.

பேர்லினில் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த அறிக்கைகளில், சின்வார் கொல்லப்பட்டது “அமைதிக்கான பாதையைத் தேடுவதற்கான வாய்ப்பை வழங்கியது” என்று பைடென் கூறினார். ஆனால், அவரது முந்தைய அறிக்கையில், “சமாதானம்” என்பதன் அர்த்தம் என்னவெனில், ஹமாஸால் “இனி ஒருபோதும் காஸாவைக் கட்டுப்படுத்த முடியாது” என்பதை உறுதி செய்வதாகும். அதாவது இனப்படுகொலையாளர் நெதன்யாகு அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட நிபந்தனைகளின் பேரிலான அமைதியாகும்.

பைடெனின் அறிக்கைகள் பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் இத்தாலியின் தலைவர்களாலும், அத்துடன் சின்வாரை “அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருந்த ஒரு போர்க் குற்றவாளி” என்று அறிவித்த செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் உட்பட அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளாலும் எதிரொலிக்கப்பட்டது.

அக்டோபர் 17, 2024 வியாழக்கிழமை அன்று இஸ்ரேலிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ கிராப், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் என இஸ்ரேலிய இராணுவத்தால் அடையாளம் காணப்பட்ட ஒரு நபர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது, அவரது கை வெடித்துச் சிதறியுள்ளது. [AP Photo/IDF]

ஏகாதிபத்திய சக்திகளால் வெளியிடப்படும் இஸ்ரேலுக்கான ஆதரவு அறிக்கைகள், காஸா இனப்படுகொலை ஒரு முக்கியமான புதிய கட்டத்தை நோக்கி நகரும் வேளையில், அதற்கு ஒப்புதல் அளிப்பதாக அமைகிறது. அதில் இஸ்ரேல் காஸா மக்களை பாரிய பட்டினி மற்றும் இனச்சுத்திகரிப்பு செய்வது அதன் வெளிப்படையான நோக்கம் என்பதை தெளிவுபடுத்துகிறது.

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவரான ஜியோரா எய்லாண்ட் (Giora Eiland) உருவாக்கிய “தளபதிகளின் திட்டம்” என்று அறியப்படுவதை இஸ்ரேல் செயல்படுத்தி வருகிறது.

நவம்பரில் இருந்து, எய்லாண்ட் பகிரங்கமாக பட்டினியை ஒரு போர் முறையாக ஏற்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறார். உண்மையில் இஸ்ரேல் செய்துள்ளது போல் நடைமுறையில் மட்டுமல்ல, மாறாக உத்தியோகபூர்வ கோட்பாடாக இது உள்ளது.

கடந்த ஆண்டு, எய்லண்ட் பின்வருமாறு எழுதினார்:

காஸாவின் “ஏழை” பெண்கள் யார்? அவர்கள் அனைவரும் ஹமாஸ் கொலைகாரர்களின் தாய்மார்கள், சகோதரிகள் அல்லது மனைவிகள்... காஸாவில் மனிதாபிமான பேரழிவு மற்றும் கடுமையான தொற்றுநோய்கள் குறித்து சர்வதேச சமூகம் நம்மை எச்சரிக்கிறது. இது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாம் இதிலிருந்து விலகிச் செல்லக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, காஸா பகுதியின் தெற்கில் கடுமையான தொற்றுநோய்கள் வெற்றியை நெருக்கமாகக் கொண்டுவரும் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தினரின் இறப்புகளைக் குறைக்கும்.

இப்பொழுது, முக்கிய அமெரிக்க செய்தி ஊடக வெளியீடுகள், இஸ்ரேல் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளன. வெள்ளியன்று வாஷிங்டன் போஸ்டில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை, இஸ்ரேலிய அரசியல் விஞ்ஞானி கெயில் தல்ஷிரின் (Gayil Talshir) அறிக்கை ஒன்றை மேற்கோளிட்டது. “வடக்கு காஸாவில் இப்போது என்ன நடந்து வருகிறதோ அதன் ஒரு பகுதி எய்லாண்ட் திட்டத்தின் ஒரு சோதனை ஆகும்,” என்று அறிவித்தார்.

“அக்டோபர் முதல் இரண்டு வாரங்களில், போரால் நாசமாக்கப்பட்ட வடக்கு காஸாவில் இருந்த 400,000 மக்களுக்கு எந்த உணவும் சென்றடையவில்லை” என்று அந்தக் கட்டுரை தெரிவித்தது.

அது தொடர்ந்தது:

காஸா பகுதியில் என்ன நடந்தது என்பது, வடக்கு காஸாவின் முழுக் கட்டுப்பாட்டையும், பின்னர் அப்பகுதியின் பெரும் பகுதிகளையும் முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ஒரு முன்னாள் இஸ்ரேலிய ஜெனரல் வடிவமைத்த சர்ச்சைக்குரிய முற்றுகைத் திட்டத்தை ஓரளவு பிரதிபலிக்கிறது. மேலும், குடிமக்கள் வசிக்கும் பகுதிகளை முறையாக காலி செய்வதையும், பட்டினி கிடப்பதையும்-அல்லது தங்கியிருக்கும் எவரையும் சுட்டு வீழ்த்துவதையும் இது கற்பனை செய்கிறது.

காஸாவின் மக்களைப் பட்டினியில் ஆழ்த்துவது மற்றும் வடக்கு காஸாவில் உள்ள ஒவ்வொரு பாலஸ்தீனிய ஆண், பெண் மற்றும் குழந்தைகளையும் கொன்று அல்லது இடம்பெயரச் செய்யும் ஈலாந்தின் திட்டத்தை செயல்படுத்துவதானது, ஈரானுக்கு எதிரான திட்டமிட்ட பாரிய இஸ்ரேலிய தாக்குதலை ஆதரித்து, 100 அமெரிக்க தரைப்படைகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான பின்னணியை உருவாக்குகிறது.

ஏகாதிபத்திய சக்திகளால் படுகொலை, பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் வெளிப்படையான அரவணைப்பின் இன்றியமையாத உள்ளடக்கம், உலகெங்கிலும் உள்ள போரின் விரிவாக்கம் ஆகும்.

இந்த வாரம், வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் ஜோர்ஜ் வில் அறிவிக்கையில், “மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது ((World War III is already underway).” இந்த போரின் இலக்கு “இன்றைய அச்சு: சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா” ஆகும். இது ஏகாதிபத்திய சக்திகளால் தொடுக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய போர் நிலைமைகளின் கீழ், ஏகாதிபத்திய அரசுகள் அவற்றின் புவிசார் அரசியல் நோக்கங்களை எட்டுவதற்கு படுகொலை மற்றும் இனப்படுகொலை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுவதாக அறிவித்து வருகின்றன.

எச்சரிக்கை செய்ய வேண்டும். இந்த உலகப் போருக்கு மத்தியில் சட்டப்பூர்வமாக்கப்படும் படுகொலை மற்றும் குடிமக்களை அழித்தொழிக்கும் முறைகள் உள்நாட்டு அரசியல் எதிர்ப்புக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். மேலும், போர் முயற்சியின் ஒரு பகுதியாக கோரப்படும் நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.

மத்திய கிழக்கு முழுவதும் ஏகாதிபத்திய சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற இனப்படுகொலை, பயங்கரவாதம் மற்றும் உலகெங்கிலும் ஏகாதிபத்திய வன்முறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இராணுவ வன்முறையின் வெறியாட்டம் என்பன, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட போருக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவசரத் தேவையை சுட்டிக்காட்டுகிறது.

Loading