முன்னோக்கு

கல்வித் துறையை ட்ரம்ப் அழிப்பதை எதிர்த்துப் போராட தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கல்வியாளர்கள் சாமானியர்கள் குழுவின் (அமெரிக்கா) வரவிருக்கும் இணையவழி கூட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்! மஹ்மூத் கலீலை விடுதலை செய்! ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! பொதுக் கல்வி உரிமையைப் பாதுகாப்போம்! மார்ச் 15, சனிக்கிழமை, அமெரிக்க நேரம் மதியம் 12:00 மணி - மாலை 5:30 மணி (EDT). இங்கே பதிவு செய்யவும்.

லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் ஒருங்கிணைந்த பள்ளி மாவட்ட பேரணியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தொழிலாளர்கள். மே 7, 2024.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும், கல்வித் துறையையும் ஏனைய அனைத்து கூட்டாட்சி அரசு சமூக வேலைத்திட்டங்களையும் கலைப்பதற்கான ட்ரம்பின் திட்டங்களை தடுத்து நிறுத்துவதற்கு, நாடெங்கிலுமான பள்ளி மாவட்டங்களிலும் மற்றும் பிற தொழில்துறைகளிலும் ஒருங்கிணைந்த வேலைநிறுத்தங்கள் உட்பட பாரிய நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்யுமாறு அமெரிக்கா முழுவதும் ஆசிரியர்களையும் தொழிலாளர்களையும் வலியுறுத்தி வருகின்றன.

இது, தொழிலாளர்களை அர்த்தமற்ற கடிதம் எழுதும் பிரச்சாரங்களுக்குள் மட்டுப்படுத்த முயன்று, போராட்டங்களை விற்றுத்தள்ளும் தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் வேலைநிறுத்தக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் கீழிருந்து தயாரிக்கப்பட வேண்டும்.

கடந்த செவ்வாயன்று, கல்வித்துறை தனது பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேரை நீக்குவதாகவும், சுமார் 1,950 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவித்தது. இது, அந்தத் துறையை சட்டவிரோதமாக அகற்றுவதற்கும், அதைத் தோற்றுவித்த கூட்டாட்சி அரசின் சட்டங்களை மீறுவதற்கும் ட்ரம்ப் மேற்கொள்ளும் பரந்த முயற்சியின் ஒரு பாகமாகும்.

பணி நீக்கங்களின் உடனடி விளைவுகள் பேரழிவு தருவதாக இருக்கும். பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்கள் பல்வேறு பாத்திரங்களை வகித்து வருன்றனர். அவர்களில் பலர் கூட்டாட்சி மாணவர் கடன்கள் மற்றும் மானியங்களை மாநிலங்களுக்கு விநியோகிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இந்த பணிநீக்கங்கள் ஒட்டுமொத்த கல்வியின் மீதான பாரிய தாக்குதலின் ஒரு பகுதி மட்டுமே. ஒட்டுமொத்தமாக, இதில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான உதவித் தொகை மீதான நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் வெட்டுக்கள் உட்பட, தற்போது காங்கிரஸால் பரிசீலிக்கப்பட்டவரும் வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக. பிற ஆதரவுத் திட்டங்கள் மீதான வெட்டுக்களும் அடங்கும்.

கல்வி மீதான தாக்குதல்களுடன் இணைந்த வகையில், அமெரிக்க வேளாண்மைத் துறை வறிய மாணவர்களுக்கான இலவச பள்ளி மதிய உணவுத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கல்வித் துறை மீதான தாக்குதல்களானது, பள்ளி மாணவர்களுக்கான கடன் முத்திரைகள் மற்றும் பட்டயப் பள்ளிகளுக்கு ஊடாக கல்வியை தனியார்மயமாக்குவதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் நம்பியிருக்கும் அத்தியாவசிய சமூகத் திட்டங்கள் ஒரே இரவில் அழிக்கப்படுகின்றன. பிரதிநிதிகள் சபையின் நிதி மசோதாவானது, மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவியிலிருந்து $880 பில்லியன் டாலர்கள் மற்றும் உணவு முத்திரைகள் மற்றும் பிற முக்கிய சமூகத் திட்டங்களிலிருந்து $230 பில்லியன் டாலர்கள் உட்பட நாசகரமான வெட்டுக்களை முன்மொழிகிறது.

“அரசு செயல்திறன் துறைக்கு” (DOGE) தலைவராக இருக்கும் ஒரு பில்லியனரும், பாசிசவாதியுமான எலோன் மஸ்க் சமூகப் பாதுகாப்பு திட்டத்தை இலக்கில் வைத்துள்ளார். இரகசிய-மோசடிப் பேர்வழியும், பங்குச் சந்தை ஊக வணிகருமான இவர், முழுமையான பாசாங்குத்தனத்துடன் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை “வரலாற்றில் மிகப்பெரிய மோசடித் திட்டம்” என்று தாக்கியுள்ளார்.

பொதுக் கல்வி மீதான தாக்குதல், ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையை பெருநிறுவன தன்னலக்குழுவின் அரசாங்கமாகவும், அதன் சார்பாகவும், அதன் மூலம் செயல்படும் அரசாங்கமாகவும் அடையாளப்படுத்துகிறது. மிருகத்தனமான செலவின வெட்டுக்களின் மூலம், அரசாங்கத்தை முதலாளித்துவ அரசின் சாராம்சம் என்று பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் விவரித்த “ஆயுதமேந்திய மனிதர்களின் சடலங்களாகவும், அனைத்து வகையான சிறைச்சாலைகளாகவும்” குறைக்க முயல்கிறது. வோல் ஸ்ட்ரீட்டை முட்டுக் கொடுத்து போருக்குத் தயாராக்குவதற்காக, தொழிலாள வர்க்கத்திடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு திருப்பி விடப்படுகின்றன.

இது, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததற்காக மஹ்மூத் கலீலை கைது செய்து நாடு கடத்த திட்டமிட்டது உட்பட, ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் தாக்குதலுடன் பிணைந்துள்ளது. கீழிருந்து வரும் அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்கும் நோக்கில் ஒரு சர்வாதிகாரத்திற்கான கட்டமைப்பை ட்ரம்ப் நிறுவுகிறார்.

தோமஸ் ஜெபர்சன் ஒரு படித்த மற்றும் விவரமறிந்த மக்களை கொடுங்கோன்மைக்கு எதிரான ஒரு அரணாக விவரித்தார். இதனால்தான் புதிய கொடுங்கோலர்கள் அதைத் தகர்க்க முயல்கிறார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அடிமைகளுக்கு கல்வி கற்பிப்பதற்கான கல்வி விரிவாக்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் விளைவாக, அதன் கூடுதல் விரிவாக்கம் உட்பட, 250 ஆண்டுகால முன்னேற்றத்தை கிழித்தெறிய ட்ரம்பும் தன்னலக்குழுவும் உறுதியாக உள்ளனர்.

ட்ரம்பின் சர்வாதிகார முயற்சிக்கு எதிரான போராட்டம், தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் பிடியிலிருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிப்பதற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் தேசியளவிலான நடவடிக்கையை ஒழுங்கமைக்க கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்க பெற்றோர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. இதுபோன்றவொரு வாழ்வா-சாவா போராட்டத்தைத் தொடங்குவதற்கு அவர்கள் மேலிருந்து வரும் “அனுமதிக்காக” —அது ஒருபோதும் வராது—காத்திருக்கக் கூடாது.

ஜனநாயகக் கட்சியின் திட்டமிட்ட கோழைத்தனம், காங்கிரசில் ட்ரம்ப்பின் கூட்டு உரையின் போது பரிதாபகரமான முறையில் பதாகைகளைக் காட்டி அசைத்தது உட்பட, ட்ரம்பின் உள்நாட்டுக் கொள்கைகளின் இலக்குகளை அது ஆதரிக்கிறது என்ற உண்மையிலிருந்து திசைதிருப்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஜனாதிபதி பைடென் 190 பில்லியன் டாலர் கூடுதல் கோவிட்-19 நிதியை காலாவதியாக அனுமதித்தார். இது, அனைத்து முக்கிய பள்ளி மாவட்டங்களிலும் நிதி நெருக்கடியை உருவாக்கி நேரடியாக பள்ளிகள் மூடப்படுவதற்கு வழிவகுத்தது.

அனைத்திற்கும் மேலாக, காசா இனப்படுகொலைக்கு எதிரான பல்கலைக்கழக வளாகப் போராட்டங்களை நசுக்கவும், போராட்டக்கார்களை “யூத விரோதிகள்” என்று அவதூறு செய்யவும், ஜனநாயகக் கட்சியினர் தொடர்ந்து குடியரசுக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் உண்மையான யூத எதிர்ப்பாளர்களும் உள்ளனர்.

டெட்ராயிட், சிக்காகோ மற்றும் பிற பிரதான நகரங்களில் பொதுக் கல்வியின் அழிப்பு பிரதானமாக ஜனநாயகக் கட்சியின் கண்காணிப்பின் கீழ் நடந்துள்ளது. தேசிய அளவில், பைடெனின் கீழ் பொதுக் கல்வி மீதான தாக்குதலுக்கு முன்னதாக, ஒபாமாவின் “உயர்ந்த இடத்திற்கான பந்தயம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதில் நூறாயிரக்கணக்கான ஆசிரியர்களின் வேலைகள் அகற்றப்பட்டன.

கூட்டாட்சி அரசின் கடனைக் குறைத்து, தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் போருக்கான வளங்களை விடுவிக்க வேண்டியதன் அவசியத்துடன் ஜனநாயகக் கட்சியினர் உடன்படுகின்றனர். இதனால்தான் உக்ரேனில் பினாமிப் போரைத் தொடருவதற்காக, அவர்கள் திடீரென்று மீண்டும் தங்கள் குரலைக் கண்டுபிடிக்கின்றனர். குடியரசுக் கட்சியினருடன் அவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு பெரிய கருத்து வேறுபாடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் மூலோபாயத்துடன் தொடர்புடையவையாகும். குறிப்பாக, உலகின் எந்தப் பகுதிகளை முதலில் கைப்பற்றுவது என்பது குறித்தாகும். இதற்கு, அவர்கள் ட்ரம்பிற்கு மற்ற அனைத்தையும் கொடுக்கத் தயாராக உள்ளனர்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாத்திரமும் இதே திட்டமிட்ட கோழைத்தனத்தால் குறிக்கப்படுகிறது. தேசிய கல்வி சங்கம் (NEA) மற்றும் அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பு (AFT) ஆகியவை கையைப் பிசைந்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஆயினும், அவை தொழிலாளர்களை காங்கிரசுக்கு கடிதங்கள் எழுதுமாறு வலியுறுத்துவதோடு தம்மை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளன. ஆனால், அவர்கள் செய்யாதது, மேலும் அவர்கள் மிகவும் உறுதியுடனும் மிருகத்தனத்துடனும் தடுக்க முயற்சிப்பது, நாடு முழுவதும் மில்லியன் கணக்கான ஆசிரியர்களையும் 14 மில்லியனுக்கும் அதிகமான தொழிற்சங்க உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு தேசிய வேலைநிறுத்தமாகும்.

சுரண்டலுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பைக் கூட நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவம், தொழிலாளர் அமைதியை அமுல்படுத்துவதற்கு பிரதிபலனாக ஆறு இலக்க சம்பளங்களைப் பெறுகிறது. தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிராக, தங்கள் நலன்களைப் பாதுகாக்க, பல தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் வெளிப்படையாக ட்ரம்பையும் பாசிசத்தையும் தழுவி வருகின்றனர்.

MSNBC இன் வலைத் தளத்தின் ஒரு சமீபத்திய தலையங்கத்தில், அமெரிக்க ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் ராண்டி வெயின்கார்டன் கல்வித்துறை வெட்டுக்களின் ஒரு எதிர்ப்பாளராக தன்னைக் காட்டிக் கொண்டார். அதேவேளையில், அவர் இப்போது தலைமை வகிக்கும் துறையை ஒழித்துக்கட்டும் ஒரே நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட ஒரு பில்லியனரான கல்வித்துறை செயலர் லிண்டா மக்மஹோனுடன் “இணைந்து வேலை செய்ய” தனது விருப்பத்தை அறிவித்தார். கல்வி மீதான வெட்டுக்களை ஒரு “தேசிய பாதுகாப்பு” பிரச்சினையாக முன்வைத்த வெயின்கார்டன், இந்த வெட்டுக்கள் அமெரிக்காவின் எதிரிகளுக்கு எதிராக போட்டியிடும் திறனை பலவீனப்படுத்தும் என்று வாதிடுவதன் மூலம் ட்ரம்பின் வர்த்தகப் போர்களுடன் மறைமுகமாக இணைந்து கொள்கிறார்.

வெய்ன்கார்டன், அமெரிக்க இராணுவவாதத்திற்கு ஆதரவாக இஸ்ரேலில் இருந்து உக்ரேனுக்கு பயணம் செய்யும் ஒரு உயர் பதவியில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர் ஆவர். கோவிட் தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது, ​​ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பெரும் எதிர்ப்பை மீறி, பள்ளிகளை மீண்டும் திறக்க கட்டாயப்படுத்த அவர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வேலை செய்தார். இது, ட்ரம்ப் நிர்வாகத்திலும் அதைச் சுற்றியுள்ள திறந்த தடுப்பூசி எதிர்ப்பாளர்களுடனும் தொடர்பு கொள்ள அவருக்கு வழிவகுத்துள்ளது.

தொழிலாள வர்க்கம் தலையிட வேண்டும்! ட்ரம்பின் சமூக எதிர்ப்புரட்சி மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகள் என்பன பாரிய எதிர்ப்புக்களைத் தூண்டிவிடுகின்றன மற்றும் தொடர்ந்து தூண்டிவிடப்படும். கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்கள், பொது சுகாதாரத்தின் அழிவை முகங்கொடுக்கும் சுகாதாரப் பணியாளர்கள், சுங்கவரிகள் மற்றும் வேலை வெட்டுக்களால் பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தித்துறை தொழிலாளர்கள், போரை எதிர்க்கும் மாணவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுடன் கல்வியாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் கனிந்துள்ளன. சிக்காகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் பிற நகரங்களில் ஜனநாயகக் கட்சியினர் இந்த வெட்டுக்களை உள்ளூர் மட்டத்தில் செயல்படுத்தும்போது, கல்வியாளர்களின் முக்கிய போராட்டங்கள் காத்திருக்கின்றன.

தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமாக, சாமானிய தொழிலாளர் குழுக்களை அபிவிருத்தி செய்து, ட்ரம்பின் பாரிய வேலைநீக்கங்கள், சமூக வேலைத்திட்ட அழிப்பு மற்றும் பொதுக் கல்வியைத் தனியார்மயமாக்குவதற்கு எதிரான ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்கள், சுகாதாரத்துறை தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஐக்கியப்படுத்துவது அவசியமாகும்.

சாமானிய தொழிலாளர் குழுக்கள், தொழிலாளர்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், வேலையிடங்கள் மற்றும் பிராந்தியங்கள் எங்கிலும் ஒழுங்கமைப்பதற்கும், தேசியளவிலான வேலைநிறுத்தங்கள் உட்பட சக்திவாய்ந்த, கூட்டு நடவடிக்கைக்கு தயாரிப்பு செய்வதற்குமான வழிவகையாக சேவையாற்றும். இந்தக் குழுக்களானது, பொதுக் கல்வியைப் பாதுகாக்கும் போராட்டங்கள், நாடுகடத்தலை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போராட்டங்கள், பணிநீக்கங்கள், பாதுகாப்பற்ற நிலைமைகளை எதிர்த்துப் போராடும் தொழில்துறை தொழிலாளர்கள், மருத்துவ உதவி, மருத்துவப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் சுகாதாரப் பணியாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தும்.

ட்ரம்பின் வெளிப்படையான பலம் அவரது உத்தியோகபூர்வ “எதிர்ப்பாளர்களின்” குணாம்சத்தில் இருந்து வருகிறது. ஆனால், வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த சமூக சக்தியான தொழிலாள வர்க்கம், அதன் பலத்தை உணர்ந்து, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்துவிட்டால், இந்த அழுக்கை துடைத்தெறிய முடியும். இதற்கு தொழிலாளர்கள், ட்ரம்பிற்கு எதிராக மட்டுமல்ல, அவரை உருவாக்கிய முழு முதலாளித்துவ இலாப அமைப்பு முறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதையும், இந்த அமைப்பு பெரும்பான்மையான மக்களின் மிக அடிப்படையான நலன்களுடன் பொருந்தாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.