World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan presidential election: the NSSP and the dead-end of national opportunism

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: நவ சமசமாஜ கட்சியும் தேசிய சந்தர்ப்பவாதத்தின் முட்டுச் சந்தும்

By Vilani Peiris
10 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அல்லது சிறீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) என்ற இரு பெரும் கட்சிகளில் ஏதேனும் ஒன்றிற்குப் பின், எதிர்வரும் நவம்பர் 17ம் தேதி தேர்தலுக்காக அணிவகுத்து நிற்கின்றன.

நவசம சமாஜக் கட்சி (NSSP) க்கு பினாமியாக இருக்கும் புதிய இடது முன்னணி (NLF) இதற்கு விதிவிலக்காக இருக்கும் சிலவற்றில் ஒன்றாகும். இதன் தேசிய அமைப்பாளர் Chamal Jayaneththi NLF- ன் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதுடன் இக்கட்சி தன்னை ஓர் "இடது" மாற்றீடு என்றும் அறிவித்துக் கொண்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இதன் தேர்தல் அறிக்கை "உலகம் முழுவதும் இடது எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது" என்று பிரகடனப் படுத்தியுள்ளது; வெனிசுலா, ஆர்ஜென்டினா, பிரேசில் ஆகியவை UNP, SLFP இரண்டிற்கும் பதிலாக "ஒரு மூன்றாம் பாதையைக்" காட்டுகின்றன என்றும் கூறுகிறது.

உண்மையில் NLF இன் "மூன்றாம் பாதை" ஒரு மாற்றீடாகவே இருக்க முடியாது. "பூகோள ஜனரஞ்சக இயக்கத்தின்" சாதனைகள் பற்றிய இதன் புகழாரமும், வெளிப்படையாக வெனிசூலாவில் உள்ள ஜனாதிபதி சாவேஸ் உடையதை போன்ற முதலாளித்துவ அரசாங்கத்தை புகழ்வதும், இதன் தேசிய, சந்தர்ப்பவாத அரசியலை மறைப்பதற்கான "சர்வதேச" மூடுதிரைக்கான கந்தல்துணியை வழங்கும் ஒரு முயற்சி ஆகும்.

"பூகோள ஜனரஞ்சகவாத இயக்கத்தின்" ஏனைய கூறுகள் போலவே, NLF சோசலிசத்தை ஆழ்ந்து நினையாமல், தேசிய பொருளாதார நெறிமுறைப்படுத்தலை மீண்டும் நடைமுறைப்படுத்துவதை அடிப்படையாக கொண்ட ஒரு சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவத்தை நினைக்கிறது. "பூகோள முதலாளித்துவத்தின் திறந்த பொருளாதாரம் என்று அழைக்கப்படுவதை நாம் கைவிடவேண்டும்" என்று அதன் தேர்தல் அறிக்கை அறிவிக்கிறது; "எமது சந்தை, உள்ளூர் உற்பத்தி சக்திகளை பாதுகாக்கும் பொருட்டு", வணிகம், நாணய இயக்கம் மற்றும் மூலதனத்தின்மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் இது அழைப்பு விடுகிறது.

மூலதனமும், உற்பத்தியும் அதிக இலாபம், பணம் இவற்றை நாடி நகர்ந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில், இப்படிப்பட்ட பொருளாதார அதிசயத்தை செய்து முடிக்கும் அதன் திட்டங்களை பற்றி NLF எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. பிலிப்பைன்ஸ் கல்வியாளரும், "பூகோளமயமாக்கல் எதிர்ப்பு" கருத்தியலாளர்களில் ஒருவருமான Walden Bello, கொடுத்துள்ள கருத்துக்களைத்தான் இவர்களுடைய அறிக்கை வெளியிட்டுள்ளது: "ஒரு மூன்றாம் பாதைக்கு இடம் உள்ளது... உற்பத்தி, நுகர்வு முறையை விரிவான தேசிய அன்னியமாகாத வளர்ச்சிக்கு உட்படுத்திச் செயல்பட்டால் அது இயலும்." என்று அவர் கூறியுள்ளார்.

அன்னியமானாலும் ஆகாவிட்டாலும், இலங்கையாயினும் பிலிப்பைன்சானாலும், வேறு எந்த நாடானாலும், சிறிதாயினும், பெரிதாயினும், பொருளாதார வளர்ச்சிக்கு, தேசியப் பாதை என்ற ஏதும் கிடையாது. கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இவற்றின் புரட்சிகரமான வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, கடந்த இரு தசாப்தங்களில் உற்பத்தி பூகோளமயமாக்கப்பட்டமை முற்றிலும் முற்போக்கான அபிவிருத்தியைக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ முறைக்குள், உலகப் பொருளாதாரத்திற்கும், காலம் கடந்துவிட்ட தேசிய அரசுமுறைக்கும் இடையே உள்ள அடிப்படை முரண்பாடு, மற்றும் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே இருக்கும் சமூகப் பிளவு ஆகியவற்றைத்தான் இது உயர்த்திக் காட்டியுள்ளது. தேசிய அரசு அமைப்பு முறைக்குள் உற்பத்தி சக்தியை கட்டிப்போடுதல் என்ற செயற்கையான, பிற்போக்கு முறையில் இதற்கு தீர்வுகாண முடியாது; மாறாக பூகோள முதலாளித்துவத்திற்கு பதிலாக உலகந்தழுவிய திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை பதிலீடுசெய்வதன்மூலம்தான் தீர்வைக் காண முடியும்.

பெல்லோவும் NLF உம் அத்தகைய ஒரு வேலைத்திட்டத்திற்கு போராடுதலை உறுதியாக நிராகரித்துள்ளனர். New Left Review விற்கு 2002ம் ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்றில், பெல்லோ அறிவித்தார்: "என்னை இனி ஒரு லெனினிசவாதி என்று நான் அழைத்துக் கொள்ளமாட்டேன்; ஏனெனில் கம்யூனிச சமூகங்களை தாக்கிய நெருக்கடி லெனினிச முன்னணி அமைப்புக்களோடு தொடர்பு உடையது என்று நான் நினைக்கிறேன்." முந்தைய சோவியத் ஒன்றியத்தை "ஒரு கம்யூனிச சமூகம்" என்று தவறாகக் கருதுபவர்கள் பலரில் அவரும் ஒருவர்; அதன் பொறிவுக்கு மார்க்சிசம் அல்லது லெனினிசத்தை குற்றம் கூறுபவர்களில் இவரும் ஒருவர். உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் பொறிவு, மிகக் கூடுதலான முறையில் அது கொண்டிருந்த தேசியப் பொருளாதாரத்தின் மீது பூகோள உற்பத்திமுறை ஏற்படுத்திய தாக்கம் அல்லது பாதிப்பினால்தான் என்பது, பொருளாதாரக் கடிகாரத்தை தேசிய முறைக்கு ஏன் திருப்பி வைக்க முடியாது என்பதற்கான மிகத் தெளிவான உதாரணங்களுள் ஒன்றாகும்.

நன்கு புலனாக்கிக் காட்டும் பகுதி ஒன்றில், 1970ல் இருந்து 1975 வரையிலான காலத்தில் முதலாளித்துவ SLFP, LSSP, மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிகாரத்தில் இருந்த காலத்திற்கு மீண்டும் செல்லவேண்டும் என்று NLF அறிக்கை கூறுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் NSSP தலைவர்கள் LSSP உறுப்பினர்களாக இருந்தனர்; அது முன்னாள் ட்ரொட்ஸ்கிச கட்சியாக இருந்து 1964ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதல் SLFP கூட்டரசாங்கத்தில் சேர்ந்தபோது, சர்வதேச சோசலிசக் கொள்கைகளை உறுதியாக முறித்துக்கொண்டிருந்தது.

1970களில் அமைக்கப்பட்ட பண்டாரநாயக்கவின் இரண்டாம் கூட்டரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு சிறிதும் நலனைத்தராத பேரழிவாகத்தான் இருந்தது. ஆயினும் இக்காலக்கட்டத்தை திரும்பிப் பார்க்கையில் NLF தக்க படிப்பினைகளை கற்றுக் கொண்டதாக கூறுகிறது. "பரந்த வகையிலான தேசிய, அன்னியமாகாத வளர்ச்சி" என்ற பெல்லோவின் கனவு பற்றி, அறிக்கை கூறுவதாவது:

"70/75 களில் இடம்பெற்ற வளர்ச்சி பற்றிய விவாதங்களின் பின்னணிக்கு இது நம்மை அழைத்துச் செல்லுகிறது. அப்பொழுது இடது தலைவர்கள் இரண்டு தவறுகள் செய்தார்கள் என்பதை கண்டோம். ஒருபுறம், தீவிர பேரினவாத முதலாளிகளுடன் கூட்டணி சேர்ந்த வகையில் அவர்கள் தேசிய ஜனநாயக பணிகளை தொடரலாம் என்று நினைத்தனர். மறுபுறம், இந்தப் பின்தங்கிய சூழ்நிலையில் தனித்த முறையில் சோசலிச வேலைத்திட்டங்களை செயல்படுத்த அவர்கள் முயன்றனர். இதன் விளைவாக ஊழல் மிகுந்த, அதிகாரத்துவ கூறுபாடுகள் செழித்த போது, மக்கள் தலையீடு செய்வதற்கான தங்களின் ஜனநாயக உரிமையை இழந்தனர். பேரினவாத பாரபட்சம் அதன் கோரமான உருவை வெளிப்படுத்தியது. அதே நேரத்தில் உள்நாட்டு தொழிலதிபர்களும், உற்பத்தியாளர்களும் உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் மிரட்டவும் பெற்றனர். அதே நேரத்தில் முதலாளித்துவத்தினர் இடது தலைவர்களை அகற்றி, அரசாங்கத்தை இதுகாறும் இல்லாத அளவிற்கு திறந்த பொருளாதாரத்தின் பக்கம் தள்ளினர்; இது JR [வலதுசாரி UNP இன் ஜெயவர்தனா] அதிகாரத்திற்கு வருமுன்னரே நடந்தது."

கூட்டணியில் "இடதுகள்"

இந்தப் பகுதி முழுவதும் தன்னை உயர்த்திக் கொள்ளுவதற்காக கூறப்பட்ட பொய்கள், அரை உண்மைகள் நிறைந்து காணப்படுகிறது: தற்போதைய NSSP தலைவர்கள், LSSP யின் பகுதியினர் என்ற முறையில், பிந்தையவர்களின் கொள்கைகளுக்கு நேரடிப் பொறுப்பு கொண்டவர்கள் என்பதை மூடிமறைப்பதற்கு வடிவமைக்கப்பட்டது. NSSP ஐ அமைத்தவர்கள், LSSP முதலாளித்துவ வாதிகளால் அல்லாமல், SLFP இன் தலைவர் பண்டாரநாயக்கவால் அரசாங்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர்தான் அதனுடன் முறித்துக் கொண்டனர். அவர் இக்கட்சி தன்னுடைய ஆட்சிக்கு "சோசலிசம்" என்ற திரையை வழங்கிய பயன்பாட்டை அது கடந்துவிட்டது என்று முடிவுக்கு வந்தார்.

மேலும், முக்கிய மந்திரிப் பொறுப்புக்களை கொண்டிருந்த LSSP தலைவர்கள் SLFP உடனான கூட்டணியின் ஜனநாயக வருங்காலம் பற்றி ஒன்றும் போலியான ஏமாற்றங்களை கொண்டிருக்கவில்லை. மாறாக அவர்கள் பேரினவாதக் கொள்கைகளை செயல்படுத்தும் பொறுப்பை நேரடியாக கொண்டிருந்தனர்; எல்லாவற்றிற்கும் மேலாக 1972ம் ஆண்டு ஒரு வகுப்புவாத அரசியலமைப்பை சுமத்தி, பெளத்தத்தை அரச மதமாக்கி, சிங்களத்தை அரச மொழியாகவும் ஆக்கினர். LSSP தலைவர் Colvin R. de Silva வரைந்திருந்த அரசியலமைப்பு, தீவின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக கல்வி, வணிகம், வேலைகள், நிலம் ஆகியவற்றில் பாரபட்சம் நிறைந்த தொடர் நடவடிக்கைகளின் கூரிய வெளிப்பாடுகளை கொண்டிருந்தது.

இந்த நடவடிக்கைகளின் பின்னணியில், எண்ணெய் விலையில் கடுமையான உயர்வு, பணவீக்கம், உலகம் பொரளாதார பெருமந்த நிலைக்குச் சரிவு, சமூக அழுத்தங்கள் ஏற்றம் பெற்றவை இவற்றால் முன்னுக்குக் கொண்டுவரப்பட்ட பொருளாதார நெருக்கடி இருந்தது. 1971ம் ஆண்டு கூட்டரசாங்கம் இரக்கமற்ற முறையில் அதிருப்தி அடைந்திருந்த கிராமப்புற இளைஞர்கள் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தலைமையில் செய்திருந்த எழுச்சியை அடக்கியது; இதில் 15,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகொலையுண்டனர்; ஒருதலைப்பட்சமாக இன்னும் 20,000 பேர் காவலில் வைக்கப்பட்டனர். அரசாங்கம் தீய வகுப்புவாதக் கொள்கைக்கு திரும்பியது நாட்டின் தென்பகுதியில் இருக்கும் சிங்களர்களின் ஆதரவுத் தளத்தை வலுப்படுத்திக் கொள்ளும் இலக்கை கொண்டிருந்தது.

"தனிமைப்பட்ட சோசலிச செயற்திட்டங்கள்" என்பவை இந்த நோக்குநிலையுடன் பிணைந்திருந்தன. தேயிலைத் தோட்டங்கள், மற்ற அமைப்புக்கள் தேசியமயமாக்கப்பட்டமை சோசலிச நடவடிக்கை அல்ல; தீவின் முதலாளித்துவ பொருளாதாரத்தை உறுதியாக்குவதற்காக அவை மேற்கொள்ளப்பட்டவை ஆகும். தேயிலைத் தோட்டங்களை பொறுத்தவரையில், பெரும் பாரபட்சத்தை அது கொண்டிருந்தது. பெரும்பான்மையான தொழிலாளர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தபோதிலும்கூட, புதிய நிர்வாகம் மிகப் பெரிய வகையில் சிங்களவரிடமே இருந்தது. ஆழ்ந்த பொருளாதாரப் பின்னடைவு, வேலையின்மை ஆகியவை தோட்டப் பகுதிகளில் இருந்தபோது, நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினியினால் இறந்து போயினர்; இது வேண்டுமேன்றே தமிழ் தொழிலாளர்கள் இந்தியாவிற்கு சென்றுவிடவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

NSSP தன்னுடைய அறிக்கையில் வாதிடும் பல கொள்கைகளும் LSSP தலைவர்களால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டவை ஆகும். இலங்கையின் பொருளாதாரத்தை உலகப் பொருளாதார பின்னடைவில் இருந்து காத்துத் தனித்து வைக்க வேண்டும் என்பதற்காக LSSP-இன் முக்கிய தலைவரான நிதி மந்திரி என்.எம்.பெரேரா மூலதனம், இறக்குமதி, விலை, நாணயக் கட்டுப்பாடு என்ற அடுக்குத் திட்டங்களை சுமத்தினார். தொழிலாளர்கள் வயிற்றை இறுக்கிக்கொண்டு (மிகுந்த சிக்கனத்துடன் இருந்து) விலைவாசி உயர்வுகளுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்; குழந்தைகளுக்கான பால் மா போன்ற அடிப்படைப் பொருட்கள் பலவும் கிடைக்கவில்லை; அரிசி, மல்லி, சர்க்கரை, கோதுமை மா போன்றவை பகிர்ந்துதான் கொடுக்கப்பட்டன. பொருட்களை வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

உற்பத்தியை உலகளாவிய முறையில் மறுசீரமைத்தல், மிகப் பரந்த இருப்புக்களான குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு, குறிப்பாக ஆசியாவில் இருப்பதை சுரண்ட வேண்டும் என்ற முதலாளித்துவத்தின் உந்துதலினால் விளைந்த சர்வதேச நெருக்கடியின் ஒரு பகுதிதான் இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஆகும். 1975ல் இதற்காக அது தனது "இடது" நட்புக் கட்சிகளையும் ஒதுக்கித்தள்ளி, பெரிய சக்திகளினால் கோரப்பட்ட தடையற்ற சந்தைக் கொள்கை முறையை முதலில் ஆரம்பித்த அரசாங்கங்களில் பண்டாரநாயக்கவின் அரசாங்கமும் ஒன்றாகும். ஆனால் பெருகிய மக்கள் விரோதப்போக்கின் கூர்மையை மழுங்கச் செய்வதற்கு இதனால் இயலவில்லை. கிராமப்புற பகுதிகளில், பெரேராவின் கட்டுப்பாட்டு ஆட்சியின் கீழ் தங்களுடைய விளைபொருட்களை விற்கமுடியாமல் போன விவசாயிகள் பழமைவாத ஐக்கிய தேசிய கட்சிக்கு 1977 தேர்தலில் தங்கள் ஆதரவைத் திருப்பினர். 168 பிரதிநிதிகள் கொண்ட பாராளுமன்றத்தில் SLFP க்கு 8 இடங்கள்தாம் கிடைத்தன; LSSP, CP இரண்டும் தங்கள் இடங்கள் அனைத்தையும் இழந்தன.

புதிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பிரதம மந்திரியான J.R.Jayewardene தன்னுடைய மிகப் பெரிய பெரும்பான்மையை பயன்படுத்தி அரசியலமைப்பை மாற்றி, ஒரு சர்வாதிகார, நிர்வாகப் பொறுப்பு நிறைந்த ஜனாதிபதி முறையை கொண்டுவந்து அடுத்த 17 ஆண்டுகளுக்கு தன்னுடைய கட்சியை அதிகாரத்தில் நிலைப்படுத்தினார். பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அவருடைய அரசாங்கம் விரைவுபடுத்தியது; வளர்ந்துவரும் எதிர்ப்புக்கு பதில்கொடுக்கும் விதமாக தொழிலாளர்களை பிளவுபடுத்த, சிங்கள பேரினவாதத்தை தூண்டிவிட்டது. 1983ம் ஆண்டு யுத்தம் ஏற்பட ஐக்கிய தேசிய கட்சி காரணமாக இருந்த வகையில், SLFP-LSSP கூட்டரசாங்கத்தின் வகுப்புவாதக் கொள்கைகள் அதற்கு எரியூட்டின, இக்கொள்கைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் NSSP தலைவர்களே ஆவர்.

சோசலிசத்தை NSSP உதறி எறிகிறது.

இரண்டு தசாப்தங்கள் கடந்த பின்னர், தேசியப் பொருளாதார நெறிமுறைக் கொள்கைகளுக்குத் திரும்பலாம் என்ற ஆலோசனை கேலிக்கூத்தாகும். தங்களுடைய வரலாற்றைப் பற்றி ஒரு புறநிலை மதிப்பீடு செய்யத் திறனற்ற வகையில், NSSP கற்றுக் கொண்ட ஒரே பாடம், உள்ளூர் வணிகர்கள், உடைமையாளர்கள் மனமுறிவு கொள்வர் என்ற அச்சத்தினால் "சோசலிச" வாய்ச்சவடால்களை பற்றிப் பேசுகையில் கூடுதலான கவனம் எடுக்க வேண்டும் என்பதுதான்.

சோசலிசத்தை முற்றிலும் NSSP நிராகரித்ததை இன்னும் வெளிப்படையான முறையில் NLF வேட்பாளர் Jayaneththi, ராவய செய்தித்தாளுக்கு அக்டோபர் 30 அன்று கொடுத்துள்ள பேட்டியின் மூலம் அறியப்படலாம். மறைமுகமாக சோசலிச சமத்துவக் கட்சியை தாக்கும் வகையில், அவர் அறிவித்தார்: "தங்களை இடது என்று அழைத்துக் கொள்ளும் சிலர் ஜனாதிபதித் தேர்தலில் சோசலிசம் பற்றி வாதிடுகின்றனர். ஒரு நாட்டில் சோசலிசம் காண்பது என்பது இயலாததாகும். சோசலிசம் என்ற சொல்லையே நாங்கள் தெளிவுடன் நிராகரிக்கிறோம். நமக்கு இப்பொழுது சோசலிசம் தேவையில்லை. நாடு கண்டு கொண்டிருக்கும் நெருக்கடிக்கு இடதின் தீர்வு என்ன என்பதுதான் பிரச்சினை."

இந்தக் கருத்துக்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கையை தவறாகப் பிரதிபலிப்பவையாகும். சோசலிசம் தனியொரு நாட்டில் என்பது, அது இலங்கையாயினும் சரி வேறு எங்காயினும் சரி இயலாததொன்று எனத் தெளிவாக அந்த ஆவணம் கூறியிருக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியின், மற்றும் அதனுடைய சர்வதேச சகோதரக் கட்சிகளான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளின் வேலைத்திட்டத்தின் மையத்தானமே, உலகப் பொருளாதாரத்தை சோசலிச வகையில் மறுசீரமைக்கும் தேவையை அடிப்படையாகக் கொண்டு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பூகோள தாக்குதலில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதற்கு போராடுவதாகும். வேறுவிதமாகக் கூறினால், பூகோள முதலாளித்துவத்திற்கு உண்மையான சோசலிஸ்டுகளின் விடையிறுப்பு உலகந்தழுவிய சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும்.

ஆனால் NSSP முற்றிலும் மாறுபட்ட முடிவுரைகளை பற்றி எடுக்கிறது. சோசலிசம் தனியொரு நாட்டில் கட்டமைக்கப்பட முடியாது என்பதை போலிக் காரணமாக கொண்டு சோசலிசத்தையே முற்றிலும் நிராகரித்து, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், தேசிய முதலாளித்துவ பிரதிநிதிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணிக்கு அது முயலுகின்றது. கடந்த மூன்று தசாப்தங்களில், NSSP இன் அனைத்து சந்தர்ப்பவாத திரித்தல், திருப்பங்கள் என்பவற்றைக் கொண்ட வரலாற்றை பற்றி விவரித்து எழுதவேண்டும் என்றால் ஒரு சிறு புத்தகமே பதிப்பிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் NSSP ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுஜனமுன்னணிக்கு (PA) 1994ல் ஆதரவைக் கொடுத்தது, 1990களின் கடைசியில் JVP சிங்கள பேரினவாதிகளுடன் உடன்பாட்டை கண்டது, மற்றும் 2004 பொதுத் தேர்தலில் வலதுசாரி UNP ஐ, "குறைந்த தீங்கு" என்று ஆதரித்தது.

"பேரினவாதத்தை" எதிர்க்கையில் NSSP இலங்கையின் அதிகாரபூர்வ அரசியல் வாழ்வில் இருக்கும் வகுப்புவாத வடிவமைப்பை ஏற்கிறது. "அமைதி வழிவகை" என்று பெரிய ஏகாதிபத்திய சக்திகளும் உள்ளூர் பெருநிறுவன தலைவர்களும் ஏற்கும் திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது ஒரு உதாரணமாகும். போருக்கு ஒரு சோசலிச வகைத் தீர்வை சுற்றி தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு பதிலாக, NSSP கொழும்பு அரசாங்கமும் LTTE யும் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஒன்றிற்கு ஆதரவைக் கொடுக்கிறது; அது வகுப்புவாத பிரிவினைகளை அதிகப்படுத்தி, தொழிலாள வர்க்கம் சுரண்டப்படுவதையும் ஆழப்படுத்தும்.

ஜூன் மாதம் Sunday Lakbima இல் அவரது பத்தியில் புதிய "தத்துவார்த்த" புதுப்பித்தலில், NSSP தலைவரான விக்கிரமபாகு கருணாரத்ன தன்னுடைய கட்சியில் அரசியல் போக்கு இன்னும் சீரழிவு காண்பதற்கு சமிக்கை கொடுத்துள்ளார். வெனிசூலாவின் முன்னாள் தளபதிகளைப் புகழ்ந்துள்ளது மட்டும் இல்லாமல், NSSP இப்பொழுது பெரிய ஏகாதிபத்திய சக்திகளே முற்போக்கான மாறுதலுக்கு சக்தியாக உள்ளவை என்று அறிவித்துள்ளது.

அவர் எழுதினார்: "இன்றைய உலக முதலாளித்துவம் கூடுதலான நிதியை தாராளவாத ஜனநாயக இயக்கத்தை வளர்ப்பதற்காக செலவிடுகிறது. கடந்த காலத்தில் பிரச்சாரத்திற்காகவும், இரகசிய அடக்குமுறைக்காகவும் முன்பு அவர்கள் செலவழித்த பணமெல்லாம், இப்பொழுது எமது நாட்டைப் போன்றவற்றில் தாராள இயக்கங்கள் வளர்ச்சியுறச் செலவிடப்படுகின்றன."

இது, 1960களிலும் 1970களிலும் தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு வாய்ச்சவடால் அடித்து முதல் அனுபவத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம் இருந்து வரும் அசாதாரண அறிக்கையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் படையெடுத்து அவற்றை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு இன்னும் அசாதாரணமானது ஆகும். இந்தப் புதிய காலனித்துவ செயல்பாடுகளுடன் தன்னுடைய அறிக்கைகள் எப்படிப் பொருந்தும் என்று விளக்குவதற்கு கருணாரத்ன முயற்சிக்கவில்லை; அதேபோல் காபூலிலும், பாக்தாத்திலும் இருக்கும் கைப்பாவை அரசாங்கங்கள், வாஷிங்டனுடைய "தாராள இயக்கங்களுக்கு" ஆதரவு என்பதற்கு சான்றுகளா என்றும் அவர் தெளிவுபடுத்தவில்லை.

ஈராக்கில் அமெரிக்கக் குற்றங்களை மறந்து விடும் கருணாரத்ன ஜனாதிபதி குமாரதுங்க மற்றும் UNP தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான ரனில் விக்கிரமசிங்க ஆகியோரை மேற்கோளிட்டு, இலங்கையில் அமைதி வழிவகைக்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதை அமெரிக்காவின் "தாராள இயக்கங்களுக்கான" ஆதரவிற்கு சான்று என்று கூறுகிறார். நீண்ட காலமாக ஜனநாயக உரிமைகளை தாக்குதல், தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரத்தை நசுக்குதல் போன்றவற்றைச் செய்யும் இந்த முதலாளித்துவ அரசியல் வாதிகள், கட்சிகள் ஆகியவற்றிற்கு NSSP இன் ஆதரவு, மிக இழிந்தது என்பதை தவிர வேறெதுவும் இல்லை. தீவிரப்போக்கு அரசியல் முட்டுச் சந்தில் உள்ளது என்பதைத்தான் இது பிரதிபலிக்கிறது.

ஏகாதிபத்திய சக்திகள், குறிப்பாக புஷ் நிர்வாகம், உலகம் முழுவதும் "தாராளவாத இயக்கங்களை" ஆதரித்து ஊக்கம் கொடுக்கிறது என்னும் கூற்று அரசியல் குற்றம் என்றுதான் கூறப்படவேண்டும். மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் அது கொண்டுள்ள முன்னோக்கைவிட, வாஷிங்டன் இலங்கையில் வேறுவிதமான முன்னோக்கைக் கொண்டிருக்கவில்லை. தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடியினால் உந்தப்பெறும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐரோப்பிய, ஆசிய போட்டியாளர்கள்மீது தன்னுடைய ஆதிக்கத்தை நிறுவ முற்பட்டுள்ளது. இலங்கையில் நடக்கும் யுத்தம், இந்தியத் துணைக் கண்டத்தில் அது கொண்டுள்ள மூலோபாய பேரவாக்களுக்கு பெரும் தடையாக உள்ளது. இலங்கையின் தற்போதைய சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வாஷிங்டன் காட்டும் ஆதரவு ஒரு தந்திரோபாயம்தான்; தற்பொழுது நடக்கும் பேச்சுவார்த்தைகள் அதனுடைய நலன்களுக்கு ஏற்ப இல்லை என்றால், அதன் தந்திரோபாயம் விரைவில் மாறிவிடும்.

NSSP இன் அரசியலின் அருவருப்பான தோற்றம், முதலாளித்துவ அரசியலுக்கு முற்றிலும் அடிபணிதலை அதற்கேற்ப ஆடும் நிலையைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறது. NSSP கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு நேர் எதிர் நிலையில் சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கம் தன்னுடைய ஜனநாயக உரிமைகளையும் சமுக நிலைப்பாடுகளையும் இந்த முதலாளித்துவ கட்சிகள், அவற்றின் எடுபிடி அமைப்புக்களில் இருந்து தீர்க்கமாய் அரசியல் முறிவை செய்வதன் மூலமே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று வலியுறுத்துகின்றது. சாத்தியமில்லாத ஒரு கற்பனாகாட்சி என்பதற்கு பதிலாக, சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டம் ஒன்றுதான் பூகோள மூலதனத்தின் சூறையாடும் கொள்கைகளுக்கு மற்றும் ஏகாதிபத்தியம் போர் வெடிப்பு ஆகியவற்றிற்கு யதார்த்தபூர்வமான ஒரே விடை ஆகும்.

See Also:

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Top of page