WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
கியூபாவில் பெரும் பணிநீக்கங்கள்: காஸ்ட்ரோயிசத்தின் முட்டுச் சந்து
Bill Van Auken
17 September 2010
Use
this version to print | Send
feedback
அடுத்த ஆறு மாதங்களில் அரை மில்லியனுக்கும் மேலான கியூபத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்று இந்த வாரம் வந்துள்ள அறிவிப்பானது காஸ்ட்ரோ ஆட்சியின் வர்க்கத் தன்மையை அப்பட்டமாகக் காட்டியுள்ளது.
இந்த மிருகத்தனமான நடவடிக்கை பற்றிய பொது அறிவிப்பு CTC எனப்படும் Central de Trabajadores Cuba, அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்க அமைப்பால் செய்யப்பட்டது. இது கியூப தொழிலாளர்களை அல்ல அரச எந்திரத்துக்குள் இருக்கும் ஆளும் தட்டுக்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
CTC அறிவிப்பானது வாடிக்கையாகப் பாராட்டப்படும் கியூப புரட்சியின் 52 ஆண்டுகளுடன் ஆரம்பித்து “நம் நாடு மற்றும் மக்களின் சோசலிசக் கட்டமைப்பைத் தொடரும் தலைமையின் விருப்பம், உறுதிப்பாடு ஆகியவை” பற்றியும் உறுதியைத் தெரிவிக்கிறது.
இந்த அரச அதிகாரத்துவத்தினர் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் எனக்கூறிக்கொண்டு உதிர்க்கும் வெற்றுச் சொற்கள், குறிப்பிடத்தக்கவகையில் மிருகத்தன, ஜனநாயக விரோத முறையில் உலகெங்கிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் தொடரும் கடுமையான சிக்கன நடவடிக்கைத் திட்டம் போல் தான் காஸ்ட்ரோ ஆட்சி செயற்படுத்துகிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. கிரேக்கம், ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இன்னும் பிற இடங்களைப் போலவே கியூபாவிலும் இத்திட்டத்தின் நோக்கம் உலக முதலாளித்துவ நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவது என்று உள்ளது.
கிட்டத்தட்ட எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், தொழிலாளர்கள் அரசாங்கத் துறையில் தங்கள் வேலைகளை இழக்கப் போகிறார்கள், கியூபாவில் அது ஒன்றுதான் வேலைகளை அளிப்பது—நீந்தித் தப்புங்கள் அல்லது மூழ்கிப்போங்கள் எனக் கூறப்படுகின்றனர்.
இது இன்னும் தெளிவான முறையில் “Information on the Recording of the Work Force” என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வெளிவந்துள்ள ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஒரு Power-Point வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. கியூபாவில் வேலைகளின் மேல் பெரும் தகர்ப்பைச் செயற்படுத்துவதற்கான தயாரிப்பாக உருவாக்கப்பட்டது.
கியூபத் தொழிலாளர்களை “பெற்றோர் அரவணைத்துச் செல்வது போன்ற” போக்கு அகற்றப்பட வேண்டும் என்று பலமுறையும் ஆவணம் தெரிவிக்கிறது. இதன் பொருள் பொருளாதார, சமூக வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டிலும் காஸ்ட்ரோ சகோதரர்கள் அதிகாரத்தைக் கொண்டு அடக்கித் தலையிட்டு வந்தார்கள் என்பது அல்ல. மாறாக மாதம் 20 டாலர்களுக்குச் சமமான சராசரி மாதாந்திர ஊதியத்தில் தொழிலாளர்கள் தப்பிப் பிழைத்து வாழ்வதை ஓரளவு இயலச் செய்யும் சமூக நலன்கள் மற்றும் உத்தரவாதங்கள் செய்யப்பட்டிருந்தது.
“பெற்றோர் தன்மை கொள்கைகளில்” முதலாவது —வெளிப்படையான காரணங்களை ஒட்டி—வேலையின்மை நலன்களுக்குக் கொடுத்து வந்த நிதி உதவியை நிறுத்துதல் ஆகும். 20 ஆண்டுகளுக்கும் குறைவான பணிமூப்புடைய தொழிலாளர்கள் அவர்கள் அடிப்படை ஊதியத்தில் 60 சதவிகிதத்தை முற்றிலும் கொடுப்பது நிறுத்துவதற்கு முன்பு ஒரே ஒருமாதம் கொடுக்கப்படுவர் என்று ஆவணம் கூறுகிறது.
சுய தொழில் வேலை வாய்ப்புக்களில் தொழிலாளர்கள் கீழ்க்கண்ட பிரிவுகளாக இயக்கப்படுவர் என்று ஆவணம் கூறுகிறது—முடிதிருத்துதல், செங்கல்கள் தயாரித்தல், டாக்ஸி ஓட்டுதல், இனிப்புத் தீன்பண்டம், உலர்ந்த பழங்கள் விற்றல், முயல்கள் வளர்த்தல்! இந்தப் புதிய “வணிகங்கள்” பல ஓராண்டிற்குள் தோல்வியைத் தழுவலாம் என்று ஆவணம் ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்கிறது. ஏனெனில் தொழிலாளர்களுக்கு அவற்றில் போதிய அனுபவம் இருக்காது, மூலப்பொருட்கள், கடன்வசதிகள் இன்னும் அத்தகைய முயற்சிகளுக்குத் தேவையான ஆதரவு இருக்காது. இத்தகைய தோல்வி அடைபவர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் உதவியளிக்குமா என்பது பற்றி எந்தக் குறிப்பும் கொடுக்கப்படவில்லை.
இங்கு உருவகப்படுத்தப்படுவது மற்ற இலத்தீன் அமெரிக்கா முழுவதும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதும் “முறைசாராப் பொருளாதாரம்” கியூபாவில் வளர்க்கப்பட வேண்டும் என்பதாகும். இத்துறை மக்களில் பாதிபேரைச் சூழ்ந்துகொள்ளும், இதில் நகர்ப்புற வறியவர்களும் அடங்குவர். அதன் எண்ணிக்கை கண்டம் முழுவதும் வந்துள்ள தனியார்மயமாக்கல் அலைகளினாலும் கட்டமைப்புச் சீரமைப்பு திட்டத்தினாலும் பெருகிவிட்டது.
கியூபாவில் “பெற்றோர்த் தன்மை” மீதான பிற தாக்குதல்களில் பணியிட சிற்றுண்டி நிலையங்கள் அகற்றப்படுவதும் அடங்கும். இங்கு தொழிலாளர்கள் இலவச மதிய உணவை பெற்று வந்தனர். அதைத்தவிர பகிர்வுமுறை அட்டைகள் குறைக்கப்படுதல், பணிகளைக் குறைக்கும் நோக்கத்துடன் சுகாதாரப் பாதுகாப்பு “சீர்திருத்தம்” ஆகியவையும் அடங்கும்.
இவை அனைத்தும் கியூபாவின் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆளும் உயரடுக்கு காட்டும் மறைப்பற்ற விரோதப் போக்கைக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இதுதான் கியூபாவின் ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவால் சுருக்கிக் கூறப்பட்டது, “உழைக்காமல் உலகில் வாழக்கூடிய ஒரே நாடு கியூபாதான் என்ற கருத்தை எப்போதும் அழித்துவிடுவதே என் உறுதிப்பாடு” என்று அவர் அறிவித்தார்.
இது ஒரு அவதூறு ஆகும். வேறு எந்த நாட்டிலும் உள்ளதைப் போலவே கியூப தொழிலாளர்களும் கடுமையான உழைப்பாளிகள் ஆவர். ஆனால் அவர்களுடைய பணிக்கு தக்க ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவில்லை. அவர்கள் ஆளும் அரசின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இது சலுகை பெற்ற, ஊழல் நிறைந்த அதிகாரத்துவத் தட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.
இந்த அடுக்கு வெளிநாட்டு மூலதனத்துடன் நெருக்கமான தொடர்புகளைப் பிணைத்து, நாட்டை ஸ்பெயின் இன்னும் பிற ஐரோப்பிய சர்வதேச நிறுவனங்கள் சுரண்டுவதற்குத் திறந்துவிட்டுள்ளது. இதைத்தவிர சீனா, பிரேசில், ரஷியா இன்னும் பல நாடுகளில் உள்ள நிறுவனங்களும் சுரண்டுகின்றன. இந்த வெளிநாட்டு மூலதனம் தான் பெருகிய முறையில் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஒவ்வொரு முக்கிய மந்திரியையும் ஒருவர்பின் ஒருவராகச் சூழும் முடிவில்லா ஊழல்கள் அவதூறல்களிலிருந்து தங்களுக்கு ஆதாயத்தை பெற விரும்பும் ஆளும் உயரடுக்கின் அடையாளம் இருக்கிறது. இவர்கள் இன்னும் அதிக அளவில் பகிரங்கமாகச் சொந்த சொத்துக்களை குவிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக மிருகத்தனமாக சிக்கன நடவடிக்கைகளைக் கோருகிறது.
அரை நூற்றாண்டிற்கும் மேலாக, இலத்தீன் அமெரிக்காவில் உள்ள குட்டி முதலாளித்துவ தேசியவாதிகளும் அவர்களுடைய உலகின் பிற பகுதிகளில் உள்ள சக”இடதுகளும்” பிடெல் காஸ்ட்ரோவை அதிகாரத்திற்குக் கொண்டவந்த 1959 கியூபாப் புரட்சி ஒரு “சோசலிசப் புரட்சி” எனவும் அதில் இருந்து அமைக்கப்பட்ட ஆட்சி ஒரு “தொழிலாளர் அரசு” எனவும் கூறிவந்துள்ளன.
உண்மையில் காஸ்ட்ரோ ஆட்சியானது ஒரு தொழிலாளர் புரட்சியின் விளைபொருள் அல்ல. கியூப குட்டி முதலாளித்துவத்தைத் தளமாகக் கொண்ட கெரில்லா இயக்கத்தின் விளைபொருள் ஆகும். கியூபா அரசு தொழிலாளர்களால் தோற்றுவிக்கப்படவில்லை, அவர்கள் மீது சுமத்தப்பட்டது. இதில் அரசு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் போலி தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களும் அடங்கும்.
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து அடக்கப்பட்டிருந்த நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஏராளமான முதலாளித்தவ தேசியவாத ஆட்சிகளின் இடது வகைகளில் ஒன்று தான் கியூபா அரசாங்கம் ஆகும். இவை பல நேரமும் தம்மை “ஏகாதிபத்திய-எதிர்ப்பு”, மற்றும் “சோசலிஸ்ட்” என்று அறிவித்துக் கொண்டு தேசியப் பொருளாதாரக் கொள்கைகைகளை செயல்படுத்தின.
மூன்று தசாப்தங்கள் கியூபப் பொருளாதாரம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெறப்பட்ட நிதி உதவிகளைப் பெருமளவு நம்பியிருந்தது. இந்தப் பாஸ்டிய பேரத்தின் ஒரு பகுதியாக காஸ்ட்ரோ உலக அரங்கில் மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எதிர் புரட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்தார். 1991ல் சோவியத் ஒன்றிய அதிகாரத்துவம் கலைக்கப்பட்டதானது காஸ்ட்ரோ ஆட்சியை மீளாத நெருக்கடியில் தள்ளியது. அதை எதிர்கொள்ளும் விதத்தில் இது வெளிநாட்டு மூலதனத்தை நாடியது. அதற்குக் கியூபாவின் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரங்களில் குறைப்பு தேவைப்பட்டது.
காஸ்ட்ரோயிசக் கட்டுக்கதை சோசலிசத்திற்கான ஒரு புதிய பாதையை அது பிரதிபலிக்கிறது என்று நான்காம் அகிலத்தை தாக்கிய பப்லோவாத திருத்தல்வாதப் போக்கினால் உரத்த குரலில் துதிபாடப்பட்டது. ஸ்ராலினிச, சீர்திருத்த அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்தின் மேலாதிக்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்திடையே சோசலிச நனவை வளர்த்து சுயாதீன அரசியலை ஐக்கியப்படுத்தும் ட்ரொட்ஸ்கிச போராட்டத்தை கைவிடுவதற்காக இது கியூபப் புரட்சியை தழுவியது.
காஸ்ட்ரோயிசம் மற்றும் கெரில்லாவாதம் ஆகிய போலித் தோற்றங்களை வளர்த்ததானது இலத்தீன் அமெரிக்காவில் மிகப் பெரிய அழிவிற்கு வகை செய்தது. அங்கு ஒரு முற்போக்குத்தனமான இளைஞர்களின் தலைமுறையானது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரிக்கப்பட்டு தற்கொலை தன்மையுடைய “ஆயுத ஏந்திய போராட்டங்களை” நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்தன. அவை தொடர்ச்சியான இராணுவ சர்வாதிகாரங்களால் குருதியில் மூழ்கடிக்கப்பட்டன.
ட்ரொட்ஸ்கிச உறுப்பினர்களை இந்த கெரில்லா இயக்கங்களில் கரைத்துவிட்டதானது, ஸ்ராலினிச மற்றும் பெரோனிய அதிகாரத்தவங்களின் தொடர்ந்த மேலாதிக்கத்தை உறுதி செய்து, கண்டம் முழுவதிலும் பரவியிருந்த புரட்சிகர போராட்ட அலைகளை மூச்சுத்திணற அடிப்பதற்கும் காட்டிக் கொடுப்பதற்குமான திறனையும் உறுதிப்படுத்தியது.
இன்று 70 ஆண்டுகளில் மோசமான உலகப் பொருளாதார நெருக்கடியானது இலத்தீன் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் சமூகப் புரட்சியின் ஒரு புது வெடிப்பிற்கான நிலைமைகளை தோற்றுவித்துக் கொண்டு வருகிறது. புரட்சிகர எழுச்சியின் கடைசிக் காலத்தில் இருந்து மூலோபாயப் படிப்பினைகளை பற்றி எடுத்தல் மிகவும் முக்கியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கான சுயாதீன புரட்சிகரக் கட்சிகளை கட்டமைப்பதின் தேவை ஏற்பட்டுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்த வேலைத்திட்டம், இலத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் முன்னேறிய பிரிவுகளை ஈர்க்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் இது தவிர்க்க முடியாமல் கியூபாவிலேயே வெடிக்க இருக்கும் கடுமையான சமூகப் போராட்டங்களுக்கு ஒரு புரட்சிகர நோக்குநிலையை கொடுக்கும் என்று நம்புகிறது.
கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார்:
|