சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Egyptian Revolution

எகிப்திய புரட்சி

David North
1 February 2011

Use this version to print | Send feedback

ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டங்கள், தொழிற்சாலை ஆக்கிரமிப்புக்கள் மற்றும் காலவரையற்ற பொதுவேலைநிறுத்தம் பரவி வரும் நிலையில், எகிப்திய புரட்சியின் உந்துசக்தியாக தொழிலாள வர்க்கம் எழுச்சி பெற்று வருகிறது. செய்திகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதினும், 80 மில்லியன் மக்களைக் கொண்ட அந்நாடு முழுவதிலும் உள்ள பெருநகரங்களிலும், சிறுநகரங்களிலும் வேலைநிறுத்தங்களும், போராட்டங்களும் பெருக்கெடுத்து வருகின்றன என்பது தெளிவாக உள்ளது.  

தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த சமூக சக்தியின் வெளிப்பாடு, ஆளும் வர்க்கத்தை மற்றும் முக்கிய ஊடகங்களில் இருக்கும் அதன் செய்தித்தொடர்பாளர்களை ஆட்டம் காண செய்துள்ளது. ஆர்ப்பாட்டங்கள் "வெளிப்படையான வர்க்க யுத்தமாக மாறி வருகின்றன" என்று நியூ யோர்க் டைம்ஸ் கண்டித்தது. “ஒரு புதிய அரசாங்கம் அவர்களின் நிலச் சலுகைகளை திரும்ப பறித்துக் கொள்ளக்கூடும்" என்ற அச்சத்தால் எகிப்தில் முதலீடுகள் செய்திருந்த அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் பொறிந்தன என்று CNN விவரித்தது.

எவ்வாறிருப்பினும் நிதியியல் பிரபுத்துவம் ஒரு எண்ணெய் வயலின் அல்லது சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமாக உள்ள எகிப்தின் சூயஸ் கால்வாய் போன்ற ஒரு கடல்வழியின் இழப்பையும் தாண்டி அதற்கும் அதிகமாக அஞ்சுகிறது. மிக அடிப்படையான அரசியல் பிரச்சினைகள் பணயம் வைக்கப்பட்டுள்ளன.

1991இல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் அதிகாரத்துவ சிதைவைத் தொடர்ந்து வந்த முதலாளித்துவ-சார்பு தற்பெருமைவாதம், எகிப்திய புரட்சியால் ஒரு பலமான அடியைச் சந்தித்து வருகிறது. நவீன உலகில் வர்க்க போராட்டம், சோசலிசம், மற்றும் மார்க்சிசம் பொருத்தமற்றவையாக அறிவிக்கப்பட்டிருந்தன. "இதுநாள் வரையிலான சமூகங்களின் வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறே ஆகும்" (கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ்) என்பதில் உள்ளபடிவரலாறு" என்பது முடிந்துவிட்டிருந்தது எனக்குறிப்பிட்டது. இதுவரையில், அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் முன்கூட்டியே "வர்ணம்-தீட்டப்பட்டு", அரசியல்ரீதியாக எழுதப்பட்ட மற்றும் சமூகத்தின் ஏராளமான முதலாளித்துவ-சார்பு பிரிவுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டவை தான் ஊடகங்களால் கருதப்பட்ட ஒரே புரட்சிகளாக இருந்தன.  

இத்தகைய சுயதிருப்தி கொண்ட மற்றும் பிற்போக்கான நிலைமை தான் துனிசியா மற்றும் எகிப்தில் குமுறி வெடித்துள்ளது. பழிதீர்ப்பதற்கு வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. கெய்ரோ மற்றும் எகிப்து முழுவதும் தற்போது கட்டவிழ்ந்துள்ளது என்னவென்றால், அது புரட்சி- ஒரு நிஜமான புரட்சி. இவ்விஷயத்தில் முதன்மை நிபுணரான லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.

இந்த புரட்சி அதன் ஆரம்ப கட்டங்களில் தான் உள்ளது. வெடிப்பினால் கட்டவிழ்ந்துள்ள வர்க்க சக்திகள், தெளிவாக முன்தெரியும் கோரிக்கைகளில் மட்டும் தம்மை வரையறுக்க தொடங்கியுள்ளன. வேலைத்திட்டங்கள் இன்னும் ஒழுங்கமைக்கப்படாமல் உள்ளன. பல தசாப்தங்களின் ஒடுக்குமுறையிலிருந்து எழுச்சி பெற்றிருக்கும் இந்த தொழிலாள வர்க்கம், அதன் சொந்த வேலைத்திட்டங்களை இன்னும் ஒழுங்கமைக்கவில்லை. இந்த பரந்துவரும் போராட்டங்களின் இத்தகைய ஆரம்பகட்ட நிகழ்வுகளில், அது வேறுவிதமாக இருக்க முடியாது தான். மீண்டும் ட்ரொட்ஸ்கி மேற்கோளின்படி, “சமூக மறுகட்டமைப்பிற்காக தயாரிக்கப்பட்ட ஒரு திட்டம் இல்லாமல், ஆனால் பழைய ஆட்சியின் வேதனையைத் தாங்க முடியாமல், மக்கள் ஒரு கூர்மையான உணர்வுடன் ஒரு புரட்சிக்குள் நுழைகின்றார்கள்புரட்சியின் அடிப்படை அரசியல் நிகழ்போக்கானது இவ்வாறு சமூக நெருக்கடியிலிருந்து எழுந்த பிரச்சினைகளால் ஒரு வர்க்கம் படிப்படியான புரிதலுக்குள், ஒரு கூட்டு மதிப்பீடுகளின் வழிமுறையால் ஏற்பட்ட பரந்தமக்களின் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்பிற்குள் செல்வதைக் கொண்டிருக்கிறது.”

ஒரு புரட்சிகர கொந்தளிப்பின் ஆரம்ப கட்டங்களில் எப்போதும் இருப்பதை போன்றே, தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் முழக்கங்கள் பொதுவான ஜனநாயக குணாம்சத்தை கொண்டிருக்கின்றன. படுபாதாளமான படுகுழி அணுகி வருவதைக் கண்டு அஞ்சும் ஆளும்வர்க்கம், பழைய அமைப்புமுறையிலிருந்து அவர்களால் எதையெல்லாம் தக்கவைத்துக்கொள்ள முடியுமோ, அவற்றை அது மூர்க்கத்தனமாக முயன்று வருகிறது. அவர்களின் உதடுகளிலிருந்து "சீர்திருத்த" வாக்குறுதிகள் மிக சுலபமாக உதிர்கின்றன. சமூகத்தின் மேல் அடுக்குகள், அவற்றின் செல்வவளம் மற்றும் சமூக அந்தஸ்தை அச்சுறுத்தாத அளவிற்கு மாற்றங்களை விரும்புகின்றன. அவர்கள் -சொன்னாலும் சொல்லாவிட்டாலும், முதலாளித்துவ வர்க்க பிரதிநிதிகளின் அரசியல் கட்டுப்பாட்டின்கீழ்- அனைத்து ஜனநாயக சக்திகளின் "ஐக்கியத்திற்கு" அழைப்பு விடுக்கின்றனர். இந்த "ஐக்கியத்தின்" அடையாளப்பாடுதான் -குறைந்தபட்சம் தற்போதைக்கு- மொஹமத் எல்பரடேய் ஆகும்.          

எவ்வாறிருப்பினும் எல்பரடேயினால் முன்மொழியப்பட்ட ஒருவகையான ஜனநாயக ஐக்கியம், தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் வீதிகளில் இறங்கியிருக்கும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளுக்கு உள்ளடக்கத்தில் எதையும் வழங்கிவிடப்போவதில்லை. எகிப்திய சமூகத்தின் பெருந்திரளான மக்களின் முக்கிய தேவைகள், தற்போது நிலவும் சொத்து உறவுகளை முற்றிலும் கவிழ்க்காமல் மற்றும் அரசியல் அதிகாரம் தொழிலாள வர்க்கத்திடம் மாறாமல் அடையப்படமுடியாது.  

நியூயோர்க் டைம்ஸ் அதன் அரசியல் தெளிவின் அரிய எடுத்துக்காட்டுகளில் ஒன்றில், எகிப்தில் நிலவும் சமூக மோதலின் அடித்தளத்தில் கவனம் செலுத்த அழைப்புவிடுத்தது: “கடந்த தசாப்தத்தில், குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் நகர வாழ்வில் வெளிப்படையாக தெரியும் விஷயங்களில், கெய்ரோவின் பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையில் விரிவடைந்திருக்கும் பெரும்பிளவும் ஒன்றாக உள்ளதுஆனால் அரசு தொழில்களை அதிகப்படியாக தனியார்மயமாக்க எடுக்கப்பட்ட முபாரக் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் சிலருக்கு ஒரு பொருளாதார செழிப்பைத் தொடங்கிவிட்டு, வசதிபடைத்த எகிப்தியர்கள் நகரத்தினை விட்டு ஓடிவிட்டனர். மனமகிழ் மன்றங்களைச் சுற்றி முழுவதும் பெரிய அமெரிக்க-பாணியிலான வீடுகளால் மூடப்பட்டிருந்த குடியிருப்புகளுக்குள் அவர்கள் கூடியிருந்தனர் என்பதுடன், சராசரி எகிப்தியர்களிடமிருந்து அவர்களின் வாழ்க்கை தனித்திருந்ததும் வெளிப்படையாக காணக்கூடியதாக மாறியிருக்கின்றன.”            

ஆனால் இந்த வெளிவிவகாரங்கள் முற்றிலும் ஓர் எகிப்திய இயல்நிகழ்வா? கெய்ரோவில் உள்ள சமூக பிளவைக் குறித்த நியூ யோர்க் டைம்ஸின் விளக்கம், அமெரிக்கா உட்பட முதலாளித்துவ உலகின் ஒவ்வொரு முக்கிய நகரத்திற்கும் தோற்றப்பாட்டளவில் பொருந்தும். சான்றாக, நியூ யோர்க் நகரத்தின் நிலைமையையே கூட எடுத்துப்பாருங்கள். சமீபத்தில் வருமான கணக்கெடுப்பு ஆணையத்தின் (Fiscal Policy Institute) அறிக்கைப்படி, நியூயோர்க் நகரில் வாழும் ஒரு சதவீத பணக்காரர்கள், அங்கே குடியிருக்கும் அனைத்து குடியிருப்போர் பெறும் மொத்த வருமானத்தில் 44 சதவீதத்தைப் பெறுகிறார்கள்.   

உலகம் முழுவதிலுமே சமூக சமத்துவமின்மை நிலைகேடான விகிதங்களை எட்டியுள்ளது. உண்மையில், சில அறிக்கைகளின்படி, அமெரிக்காவின் வருமான சமத்துவமின்மை, எகிப்து மற்றும் துனிசியாவில் இருப்பதையும் விட அதிகமாக உள்ளது. அதற்கும்மேலாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதிலும், அரசாங்கங்கள் சமூக செலவினங்களில் பெரும் வெட்டுக்களைத் திணித்தும், கோரியும் வருகின்றன. தொழிலாள வர்க்கத்தின் மிகப்பரந்த பிரிவுகள் வறுமையில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.

சந்தேகத்திற்கு இடமின்றி மிக நவீன பிரச்சார அமைப்புகளை கொண்டுள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள அரசியல் ஆட்சிகள் எகிப்திய அரசாங்கத்தைப் போன்றே பரந்த மக்களின் அதிருப்திக்கு கவனமெடுக்காதவையாகவும், கடுமையாகவும் இருக்கின்றன. கடந்த வாரம் தான், அமெரிக்க ஜனாதிபதி "நாட்டு நிலைமை பற்றி உரை நிகழ்த்தினார். நாட்டின் மக்கள்தொகையில் அண்ணளவாக 10சதவீதமானோர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர் என்பதை அவர் அதில் கூறத் தவறினார். திரு. ஒபாமாவைப் பொறுத்த வரையில், வோல் ஸ்ட்ரீட்டின் "உயர்ந்துவரும்" பங்கு மதிப்புத்தான் நாட்டு நிலைமையின்  மிக முக்கிய குறிப்பாக உள்ளது.    

கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா மற்றும் அந்நாடு முழுவதிலும் எது பரவிவருகிறதோ, அது சர்வதேச வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எகிப்திய நிகழ்வுகள், மிக முன்னேறிய நாடுகள் உட்பட, ஒவ்வொரு நாட்டிலும், சமூக மாற்றம் எடுக்கும் வடிவத்தை வெளிப்படுத்துகிறது. உலக சோசலிச புரட்சியின் ஒரு புதிய சாகப்தத்தின் முதல் வெடிப்புகளை இந்த பழமைவாய்ந்த மண்ணில் நாம் பார்த்து வருகிறோம்.