ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Build the Socialist Equality Party (France)!

பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் பிரெஞ்சு பிரிவாக பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை ஸ்தாபிக்கிறது. ட்ரொட்ஸ்கிசத்தையும், செவ்வியல் மார்க்சிசத்தின் பாரம்பரியத்தையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முறிவின்றி தொடர்ச்சியாகப் பாதுகாத்து வருவதை அடிப்படையாகக் கொண்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்படும் உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு பிரான்சில் தொழிலாளர்களை வென்றெடுப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது. முதலாளித்துவத்தின் அதிகரித்துச் செல்லும் நெருக்கடிக்கும் அது பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்திற்கும் மத்தியில், இந்த வேலைத்திட்டம் பெருகும் ஆதரவை வென்றெடுக்கும் என்பதில் அது நம்பிக்கை கொண்டுள்ளது.

கால் நூற்றாண்டுக்கு முன்பாக, சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச அதிகாரத்துவம் கலைத்தபோது, முதலாளித்துவத்திற்காக வக்காலத்து வாங்கியவர்கள், கம்யூனிச அபாயத்தின் முடிவானது, அமைதி, செழுமை மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்திருப்பதாக கூறிக் கொண்டனர். உண்மையில், சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு, ஒரு நூற்றாண்டு முன்பாக ரஷ்யாவிலிருந்த அவர்களது வர்க்க சகோதர, சகோதரிகள் போல்ஷிவிக் கட்சியின் தலைமையிலான 1917 அக்டோபர் புரட்சியில் ஏன் முதலாளித்துவத்தை தூக்கிவீசத் தள்ளப்பட்டனர் என்பதை நினைவுபடுத்தியதே, கடந்த 25 ஆண்டுகாலத்தில் முதலாளித்துவம் சாதித்திருப்பதாகும்.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவினால் தூண்டப்பட்ட உலகப் பொருளாதார நிலைகுலைவும் அத்துடன் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஆரம்பகட்ட புரட்சிகர பதிலிறுப்புகளான எகிப்து மற்றும் துனிசியாவிலான 2011 ஆம் ஆண்டின் பாரிய எழுச்சிகளும், உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் முனைப்பை பெருமளவில் துரிதப்படுத்தின. ஐரோப்பாவை சுற்றிலும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா தொடங்கி கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்குள் வரையிலும், ஏகாதிபத்திய போர்களது ஒரு அதிகரிக்கும் அலையானது, ஒரு புதிய உலகப் போராக வெடிப்பதற்கு அச்சுறுத்துகின்றது. சொந்த மண்ணில், ஐரோப்பிய முதலாளித்துவமானது பனிப்போரின் சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் இருப்பினால் முன்வைக்கப்பட்டிருந்த சித்தாந்த சவாலை எதிர்கொள்ளும் பொருட்டு தான் கையிலெடுத்திருந்த அமைதிவாத மற்றும் சீர்திருத்தவாத வேடத்தை கைவிட்டு விட்டது. ஐரோப்பிய ஒன்றியமானது கண்டமெங்கிலும் ஒரு சிக்கன நடவடிக்கை கட்டளையை இரக்கமற்று திணிப்பதுடன், வங்கிகளுக்கு ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் பிணையெடுப்பை கையளிக்கின்ற அதேசமயத்தில் சமூக உரிமைகளைக் கிழித்தெறிந்து கொண்டும், ஒரு போலிஸ் அரசின் சட்ட மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை அமைத்துக் கொண்டும் இருக்கிறது. சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களை வன்முறையாக ஒடுக்குவதே போலிஸ் கண்காணிப்பு உள்கட்டமைப்பின் அடிப்படை நோக்கமாய் இருக்கிறது.

பிரான்சின் அரசியல் சூழ்நிலை ஒரு பரந்த முரண்பாட்டின் குணாம்சத்தைக் கொண்டிருக்கிறது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, மார்க்சிச சோசலிசம் தோற்றமும் அபிவிருத்தியும் அடைவதற்கு, பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் பாரம்பரியம் ஒரு முக்கியமான பங்களிப்பாக இருந்திருந்தது. அக்டோபர் புரட்சிக்கு பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த ஆதரவு கிட்டியிருந்தது என்பதோடு இருபதாம் நூற்றாண்டு பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தின் முக்கியமான புரட்சிகரப் போராட்டங்களுமே கூட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான மூலோபாய அனுபவங்களாய் இருந்தன. ஆயினும் இன்று, உலக முதலாளித்துவமானது அதிகரித்துச் செல்கின்ற ஒரு போர் நெருக்கடியாலும் பெருமந்தநிலைக்குப் பிந்தைய மிக ஆழமான பொருளாதார நெருக்கடியாலும் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் கூட, பிரான்சில் இருக்கின்ற எந்தவொரு அரசியல் போக்கும், முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தினால் புரட்சிகரமாக தூக்கிவீசப்படுவதையும் சோலிசத்தை கட்டியெழுப்புவதையும் தனது இலக்காக அமைத்துக் கொண்டிருக்கவில்லை.

அதற்கு மாறாய், 1968 முதலாக “இடது” அரசியலில் மேலாதிக்கம் செலுத்தி வந்திருக்கக்கும் சக்திகள் சோசலிசத்துக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் கடும் குரோதமாய் உள்ளன. ஒரு ஒட்டுமொத்த வரலாற்று சகாப்தத்தின் காலத்தில் சோசலிஸ்ட் கட்சியும் [PS] அதன் அரசியல் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களும் பின்பற்றி வந்திருந்த போர், சிக்கன நடவடிக்கைகள், மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் பிற்போக்குத்தனமான திட்டநிரலுக்கு எதிராய் பரந்த கோபம் வெடித்துக் கொண்டிருக்கிறது. 1969 இல் சோசலிஸ்ட் கட்சி இன் ஸ்தாபிதமும், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி [PCF] இன் பல தசாப்த கால உருக்குலைவும், அத்துடன் உத்தியோகபூர்வ “அதி இடது” அரசியல் 1968 மாணவர் இயக்கத்தில் இருந்து உருவாகியிருந்த நபர்களால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டு வந்திருந்ததும், தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாய் உரிமைகள் இல்லாதவர்களாய் ஆக்கியிருக்கிறது என்பது முன்னெப்போதையும் விட இப்போது மிகத்தெளிவாகியிருக்கிறது.

ஹாலண்ட் தனது 2012 தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில் லண்டன் வங்கியாளர்களின் ஒரு கூட்டத்தில் கூறியதைப் போல, “இன்று பிரான்சில் கம்யூனிஸ்டுகள் என்று எவருமில்லை. இடதுகள் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியிருப்பதோடு சந்தைகளை நிதி மற்றும் தனியார்மயமாக்கலுக்காய் திறந்து விட்டுள்ளனர். அங்கு அஞ்சுவதற்கு ஏதுமில்லை.”

பல தசாப்தங்களாக நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளின் வாழ்க்கைமுறை தேவைகளுக்கு ஏற்றபடி “இடது” அரசியலை மறுவரையறை செய்ய PS மற்றும் அதன் கூட்டாளிகள் முனைந்து வந்திருந்தன. அவை ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பிற்கு பதிலாய் அதன் “மனிதாபிமான” போர்களுக்கான ஆதரவை ஊக்குவித்தன, வர்க்கப் போராட்டத்திற்கு பதிலாய் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் பெருவணிகங்களுக்கும் இடையிலான “சமூக கலந்துரையாடலை” ஊக்குவித்ததுடன், சர்வதேச தொழிலாளர் ஐக்கியத்திற்கு பதிலாய் இஸ்லாமிய அச்சம் மற்றும் தேசியவாதத்தை ஊக்குவித்தன. சோசலிசத்தின் பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ள அவை அனுமதிக்கப்படுகின்ற மட்டத்திற்கு, கோபமும் வெறுப்புமடைந்த வாக்காளர்களை நவ-பாசிச தேசிய முன்னணியின் [FN] பின்னால் செல்லவே அவை உந்துகின்றன.

ஆயினும் வர்க்கப் போராட்டம் தடைகளை சகித்துக் கொள்வதில்லை. தற்போதுள்ள கட்சிகள் ஆளும் வர்க்கத்தின் அரசியல் கருவிகளாக நிரூபணம் ஆகியுள்ள நிலையில், தொழிலாள வர்க்கத்திற்குரிய ஒரு புரட்சிகர மாற்றினைக் கட்டியெழுப்புவதே இன்றியமையாத பணியாகும். சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் குட்டி-முதலாளித்துவ மார்க்சிச-விரோதம் ஆகியவற்றுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்திற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் [ICFI] போராட்டத்தின் முறிவில்லாத சர்வதேசத் தொடர்ச்சியின் மீது தனக்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்துபட்ட முன்னணிப்படை கட்சியாக உருவெடுப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சி [SEP] போராடுகிறது.

பிரான்சில் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் அத்தனை நினைவுகளையும் ஆளும் வர்க்கத்தால் அழித்து விட்டிருக்க முடியவில்லை. 1936 பொது வேலைநிறுத்தம், 1944 இல் நாஜி ஆக்கிரமிப்பில் இருந்தான விடுதலை, மற்றும் 1968 பொது வேலைநிறுத்தம் ஆகிய இருபதாம் நூற்றாண்டு பிரான்சின் புரட்சிகர வாய்ப்புக்களை ஸ்ராலினிசம் காட்டிக் கொடுத்ததற்கான எதிர்ப்புடன் அவை அழியாவண்ணம் தொடர்புபட்டிருக்கின்றன.

ஆயினும், ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பாக தன்னை அறிவித்துக் கொள்வது மட்டுமே பாரிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வென்றெடுத்து விடாது அல்லது சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்ட உள்ளடக்கத்தை தெளிவாக்கிவிடாது என்பதை சோசலிச சமத்துவக் கட்சி அறியும். எவ்வாறாயினும், 45 ஆண்டுகளாய், பிரான்சில் ட்ரொட்ஸ்கிசமானது, PS இன் சுற்றுவட்டத்தில் அல்லது அதன் உள்ளே இயங்கிக் கொண்டிருக்கின்ற, ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய குட்டி-முதலாளித்துவ ஓடுகாலிகளுடன் மோசடியாக தொடர்புபடுத்தப்பட்டு வந்திருக்கிறது. 1971 இல் பியர் லம்பேர் இன் OCI [சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு -இன்று சுயாதீன ஜனநாயகத் தொழிலாளர்கள் கட்சி POID] அப்போது ICFI இன் முன்னிலைப் பிரிவாக பிரிட்டனில் இருந்த சோசலிச தொழிலாளர் கழகத்துடன் [SLL] உடைவு கண்டதன் பின்னர், ICFIக்கு ஒரு பிரெஞ்சு பிரிவு இல்லாதிருந்து வந்திருக்கிறது. பிரான்சில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் [LCR, இப்போது புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி NPA] மற்றும் தொழிலாளர் போராட்டம் [LO] ஆகியவை அடங்கலாக எந்த குட்டி-முதலாளித்துவ ட்ரொட்ஸ்கிச-விரோதக் குழுக்களுக்கு எதிராக 1953 இல் ICFI ஸ்தாபிக்கப்பட்டிருந்ததோ அதே ஒரு சர்வதேச சூழலுக்குள்ளாக OCI மறுஇணைவு கொண்டது. இத்தகைய கட்சிகள் PS க்கு எந்த மாற்றினையும் வழங்கவில்லை என்பது சமீபத்தில் அவற்றின் கிரேக்க கூட்டாளியான சிரிசா, கிரீசில் சென்ற ஆண்டில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிய பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கட்டளைகளை அடிமைத்தனமாக அமுல்படுத்தியதில் வகித்த பாத்திரத்தின் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்திற்கான ICFI இன் ட்ரொட்ஸ்கிச போராட்டத்திற்கும் இந்த போலி-இடது கட்சிகளுக்கும் இடையில் நிலவுகின்ற சமரசமற்ற எதிர்ப்பை முன்னேறிய தொழிலாளர்களுக்கு தெளிவாக்குவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது. அக்கட்சிகளை நோக்கிய ஈவிரக்கமற்ற குரோதமே சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த அமைப்புகளில் எதனையும் அது ட்ரொட்ஸ்கிச அமைப்புகளாகவோ அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலமாக ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வைக்கத்தக்க அமைப்புகளாகவோ கருதவில்லை. அரசியல் கோட்பாடுகளுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டங்களை குறிப்பிட்டு அதனை “குறுங்குழுவாத” கட்சியாக அவை கூறும் குற்றச்சாட்டுகளை உதாசீனத்துடன் அது நிராகரிக்கிறது. ICFI மற்றும் அதன் முன்னோடிகளது பல தசாப்த கால புரட்சிகரப் போராட்டத்தின் வரலாற்று மற்றும் அரசியல் படிப்பினைகளையே அக்கட்சிகளுக்கான தனது எதிர்ப்பின் அடித்தளமாக சோசலிச சமத்துவக் கட்சி கொண்டுள்ளது.
 

The PCF and the bankruptcy of Stalinism

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ராலினிசத்தின் திவால்நிலையும்

 

இரண்டாம் உலகப் போரின் முடிவு காலம் தொடங்கி 1968 பொது வேலைநிறுத்தம் வரையில் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தில் PCF தான் முன்னணிக் கட்சியாக இருந்தது. பிரான்சில் அக்டோபர் புரட்சியின் மரபை கொண்டதாக காட்டிக்கொள்வதற்கு அது கிரெம்ளினுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளையும், இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கத்தின் தலைமையாக அது எழுந்திருந்ததையும் பயன்படுத்திக் கொண்டது. ஒரு தேசியவாத கண்ணோட்டத்தை ஊக்குவிப்பதற்கும், அத்துடன் இருபதாம் நூற்றாண்டு பிரான்சின் மாபெரும் புரட்சிகர சந்தர்ப்பங்களை காட்டிக்கொடுப்பதற்கும் அது இந்த அந்தஸ்தினை சுரண்டிக் கொண்டது. கடந்த அரை நூற்றாண்டில், 1968 பொது வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்ததிலும், PS அரசாங்கங்களை ஆதரித்தும் மற்றும் அவற்றில் பங்கேற்றும் வந்திருந்ததிலும், அத்துடன் சோவியத் ஒன்றியத்தில் கிரெம்ளினால் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதற்கு ஆதரவு அளித்திருந்ததிலும் அது மதிப்பிழந்து விட்டிருக்கிறது. அதன் நிலைச்சான்று, ஸ்ராலினிசம் உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கிற்கு எதிரான ஒரு எதிர்-புரட்சிகர மற்றும் மார்க்சிச-விரோத பிரதிபலிப்பாக இருக்கிறது என்ற ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தை சரியென நிரூபணம் செய்திருக்கிறது.

1935 இல் ஸ்ராலினிசமயமாக்கப்பட்டிருந்த மூன்றாம் அகிலமானது சோவியத் ஒன்றியத்திற்கு வெளியில் சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை நனவுடன் கைவிட்டு, மக்கள் முன்னணிக் கூட்டணிகளில் இருக்கக் கூடிய முதலாளித்துவக் கட்சிகளை ஆதரிப்பதென்ற ஒரு மூலோபாயத்தை கையிலெடுத்தது. சோவியத் அதிகாரத்துவமானது சர்வதேச புரட்சியை மறுதலித்து, “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற தத்துவத்தை சோவியத் ஒன்றியத்தில் ஏற்றுக் கொண்டதில் இருந்து, தோன்றியிருந்ததான இந்த மூலோபாயமானது, முதலாளித்துவத்திடம் இருந்தான அரசியல் சுயாதீனத்தை தொழிலாள வர்க்கம் நிலைநாட்டுவதற்கான அவசியம் என்ற மார்க்சிசத்தின் இருதயத்தானமான ஒரு கோட்பாட்டை நேரடியாக மீறியது. இது சர்வதேச அளவில் படுபயங்கர தோல்விகளை உருவாக்கியது. ஸ்பெயினில் ஒரு மக்கள் முன்னணி அரசாங்கமானது, தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை நசுக்கி ஸ்பானியக் குடியரசை அதிஉயர் ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ இன் பாசிச கிளர்ச்சிக்கு எதிராய் தோல்விக்கு அழைத்துச் சென்றது. ஸ்ராலினிஸ்டுகள், பிரான்சின் 1936 பொது வேலைநிறுத்தத்தை வணிகக் கூட்டமைப்புகளுடன் ஒப்புக்கொண்ட விட்டுக்கொடுப்புகளுக்காக காட்டிக்கொடுத்த நிலையில், பிரான்சின் மக்கள் முன்னணி அரசாங்கமானது அந்த வேலைநிறுத்தத்தின்போது பாதிப்பின்றி தாக்குப்பிடிக்க முடிந்ததுடன் 1938 வரையில் தொடர்ந்த வேலைநிறுத்த அலையை நசுக்கியும் விட்டது.

1936 பொது வேலைநிறுத்தத்திற்கு சற்று பின்னர், ஸ்ராலின் மாஸ்கோ விசாரணைகளை தொடக்கி வைத்தார். இந்த விசாரணைகள் அக்டோபர் புரட்சியின் பழைய போல்ஷிவிக் தலைவர்களை பயங்கரவாதிகளாகவும் பாசிஸ்டுகளாகவும் பொய்குற்றம் சாட்டியது. இது மாபெரும் அழித்தொழிப்புகளுக்கும் கம்யூனிச அகிலத்திற்குள்ளாக மார்க்சிஸ்டுகள் அரசியல் படுகொலை செய்யப்படுவதற்கும் பாதை அமைத்துக் கொடுத்தது, இதன் உச்சக்கட்டமாய் ட்ரொட்ஸ்கியின் படுகொலை அமைந்தது. பிரான்சில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, 1936 வேலைநிறுத்தத்தை தொடர்ந்த வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தி, அரசு அவற்றை நசுக்குவதற்கு அனுமதித்த அதேவேளையில் ட்ரொட்ஸ்கியின் மீது கடும் கண்டனங்களையும் அவரது ஆதரவாளர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களையும் நடத்தியது. அதன் உயர்மட்டத் தலைமையானது, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான L'Humanité, இல் ட்ரொட்ஸ்கிக்கு எதிராகவும் பழைய போல்ஷிவிக்குகளுக்கு எதிராகவும் அவதூறுகளை வெளியிட்டு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சர்வதேச அளவில் GPU (இரகசிய போலிஸ் அமைப்பு) ஆல் படுகொலை செய்யப்படுவதை ஒழுங்கமைக்க உதவியது.

இரண்டாம் உலகப் போரின் அழிவையும், பாரிய படுகொலைகளையும் சோசலிசப் புரட்சியின் மூலமாக தடுத்து நிறுத்துவதற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் கொண்டிருந்த கடைசி வாய்ப்பையும் ஸ்ராலினிசம் தடைசெய்து விட்டது. இது 1940 இல் நாஜி ஆக்கிரமிப்புக்கு பின்னர் முதலாளித்துவ வர்க்கம் தோல்வியை ஒப்புக்கொண்டபோது பிரான்சில் பாசிச விச்சி ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு பாதை திறந்து விட்டது. தேசிய நாடாளுமன்றம் மார்ஷல் பிலிப் பெத்தானுக்கு முழு அதிகாரங்கள் வழங்கியது. அவர் நாஜிக்களுடன் ஒத்துழைப்பை மேற்பார்வை செய்தார். 1939 இல் ஸ்ராலின்-ஹிட்லர் இடையே ஏற்பட்டிருந்த ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதன் பின்னர் PCF தலைமறைவாக செயற்பட தள்ளப்பட்டிருந்தது.

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்து, உலகத்தை செல்வாக்கு வட்டங்களாய் பிரிக்கின்ற கிரெம்ளினின் எதிர்ப்புரட்சிகர கொள்கையை அடியொற்றி, PCF, நாஜி ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்ஸ் விடுதலை பெற்றதன் மூலம் வழங்கப்பட்டிருந்த புரட்சிகர சந்தர்ப்பத்தைக் காட்டிக்கொடுத்தது. பிரான்சின் கிளர்ச்சி இயக்கத்தில் தனக்கிருந்த மேலாதிக்க பாத்திரத்தைப் பயன்படுத்தி, ஒரு முதலாளித்துவ நான்காம் குடியரசை அமைத்து ஐரோப்பிய பாசிசத்தின் குற்றங்களை மூடிமறைப்பதில், தளபதி சார்ல்ஸ் டு கோல் மற்றும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அது உதவியது. “பிரான்ஸ் எதிர்த்தது” (“France resisted”) என்ற கோலின் தவறாக வழிநடத்தும் கூற்றை தழுவிக் கொண்டு நாஜி ஒத்துழைப்புவாதிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதையும் முடக்கிய அது, தொழிற்சாலைக் குழுக்களை, தொழிற்சாலை முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படுகின்ற கூட்டுநிர்வாக அமைப்புகளுக்குள் கலைத்தது, மற்றும் கோலின் அரசாங்கத்திற்கு அமைச்சர்களை வழங்கியது. கிளர்ச்சிப் போராளிகளை டு கோலின் இராணுவத்திற்குள் கலைத்தது, குறிப்பிடத்தக்க வகையில் இந்தோசீனாவிலும் பின் அல்ஜீரியாவிலும் காலனித்துவ போர்கள் தொடர்வதற்கு அனுமதித்தது. ஆரம்பத்தில் டு கோல் அரசாங்கத்தில் அது இணைந்ததோடு நான்காம் குடியரசின் ஒவ்வொரு நெருக்கடியிலும் ஸ்திரத்தன்மைக்கான ஒரு தூணாகவும் நிரூபணம் ஆனது, 1947 இன் பாரிய கிளர்ச்சி வேலைநிறுத்தங்கள் மற்றும் 1953 இன் பொது வேலைநிறுத்தங்களை விலைபேசியது. இந்த அடிப்படையில், தங்களது சித்தாந்த வடிவத்திற்கு “இடது” அல்லது மார்க்சிச வண்ணத்தை கொடுப்பதற்கு முனைந்த அதேநேரத்தில், ஒரு சோசலிசப் புரட்சியை எதிர்த்த புத்திஜீவிகளது மத்தியில் அது பரந்த ஆதரவை அனுபவித்தது.

PCF உடன் அக்டோபர் புரட்சி தவறாக அடையாளம் காட்டப்பட்டமையானது, பிரான்சில் விடுதலை இயக்கத்தில் இருந்து எழுந்த தொழிலாளர் இயக்கத்திற்கு மரணகரமான விளைவுகளைக் கொண்டதாய் இருந்தது. பாசிசத்தின் குற்றங்களால் முதலாளித்துவம் ஆழமாக மதிப்பிழந்து விட்டிருந்த நிலைமைகளின் கீழ் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் PCF இன் பின்னால் அணிவகுத்தனர். ஆயினும், ஒரு தேசியவாதக் கண்ணோட்டத்தால் நஞ்சூட்டப்பட்டிருந்ததும் அத்துடன் புரட்சியை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிய தவறான கூற்றுகளுக்கு வரலாற்றுப் பொய்களை அடித்தளமாகக் கொண்டிருந்த அமைப்புகளில் அவர்கள் இணைந்து கொண்டிருந்தனர். அவ்வாறான பொய்களில் பிரான்சில் பாசிசத்தின் குற்றங்களை மூடிமறைத்தமை, மாஸ்கோ விசாரணைகளை PCF தளர்ச்சியில்லாமல் பாதுகாத்தமை, மற்றும் அக்டோபர் புரட்சியின் தொடர்ச்சியாக ட்ரொட்ஸ்கிசத்தின் பாத்திரத்தை மறுத்தமை ஆகியவை அடங்கியிருந்தன.

1954-1962 அல்ஜீரியப் போரானது, PCF ஒரு ஒருங்கிணைந்த பாகமாக இருந்த நான்காம் குடியரசின் அரசியல் ஸ்தாபகத்தின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை விரைவில் அம்பலப்படுத்தியது. சமூக ஜனநாயக SFIO [தொழிலாளர் அகிலத்தின் பிரெஞ்சு பிரிவு] இன் தலைவரான கீ மொலே, போர் நிதிகளுக்கும் சிறப்பு அதிகாரங்களுக்கும் ஆதரவு கோரிய சமயத்தில், PCF அவற்றுக்கு ஆதரவாக வாக்களித்தது. அதன்பின் மொலேக்கு எதிரான ஒரு முறியடிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்ப்பதற்கு PCF தவறியமையானது 1958 இல் டு கோலை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவந்து, ஐந்தாம் குடியரசை ஸ்தாபிக்க இட்டுச் சென்றது. நூறாயிரக்கணக்கிலான அல்ஜீரியர்களை கூட்டமாக சித்திரவதை செய்வதிலும் படுகொலை செய்வதிலும் பிரான்ஸ் இறங்கியமையானது போருக்குப் பிந்தைய ஆட்சியினை அம்பலப்படுத்தியது. பிரான்சின் பராசூட் படையினரும், பாதுகாப்புப் படைகளும் அல்ஜீரியாவில் பயன்படுத்திய வழிமுறைகள் ஒரு தசாப்த காலத்திற்கு முன்பாய் பாசிச அதிகாரிகள் பிரான்சில் பயன்படுத்திய வழிமுறைகளை நினைவூட்டின. பிரான்சில் போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடுமையான ஒடுக்குமுறையைச் சந்தித்த வேளையில், தேசிய விடுதலை முன்னணியால் [National Liberation Front -FLN] அழைப்பு விடுக்கப்பட்ட அல்ஜீரியர்களது 1961 அக்டோபர் 17 ஆர்ப்பாட்டம் ஒன்றின் இரத்த ஆறு பாய்கின்ற படுகொலையை பாரிஸின் பிராந்திய ஆளுநரும் முன்னாள் விச்சி அதிகாரியுமான மொரிஸ் பாப்போன் மேற்பார்வை செய்தார்.

பிரான்சில் 1968 மே-ஜூனில் வெடித்த பொது வேலைநிறுத்தமானது, சர்வதேச அளவில் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ சமநிலையை உலுக்கிய தொழிலாள வர்க்கப் போராட்டங்களது அலையின் ஒரு உயர்ந்த புள்ளியாக இருந்ததுடன், பிரான்சில் இது PCF மற்றும் டு கோல் ஆட்சியை பலவீனப்படுத்தியது. சோர்போனில் மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட ஒரு குருதிகொட்டிய போலிஸ் தாக்குதல், பாட்டாளி வர்க்கத்தில் ஒரு பாரிய பதிலிறுப்பைத் தூண்டியது. பத்து மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர், பிரான்ஸ் எங்கிலும் தொழிற்சாலைகளின் மீது செங்கொடிகள் பறந்தன, அத்துடன் பிரெஞ்சு பொருளாதாரம் தரைதட்டி நின்றது. டு கோல், பாடன்-பாடனில் (Baden-Baden) இருக்கும் தனது தளபதிகளைக் காண ஒரு அவசர விஜயம் மேற்கொண்டபோது, ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கு பாரிசுக்கு அணிவகுத்துச் செல்ல, அவர்களின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் படையணியை நம்பியிருக்க முடியாது என்பதைக் கண்டார்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் தனது ஆழமான புரட்சிகர உள்ளாற்றலை வெளிப்படுத்தியது. 1968 முதல் 1975 வரை, பாரிய தொழிலாளர் போராட்டங்களும், காலனித்துவ-எதிர்ப்பு கிளர்ச்சிகளும், மற்றும் இளைஞர் ஆர்ப்பாட்டங்களும் உலகம் முழுமையிலும் பரவியது. ஸ்பெயின், போர்த்துக்கல், மற்றும் கிரீசில் சர்வாதிகாரங்கள் உருக்குலைந்தமை, அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனின் இராஜினாமா மற்றும் வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்விகண்டமை இவற்றின் மத்தியில் அமெரிக்காவிலான பாரிய வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் முதலாளித்துவத்தை அதன் அடித்தளம் வரையில் ஆட்டம்காணச் செய்தன.

தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியே சோசலிசப் புரட்சிக்கான பிரதான தடைக்கல்லாக இருந்தது. 1968 இல் பிரான்சில், PCF மற்றும் CGT, டு கோலின் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து, கிரெனெல் உடன்படிக்கைகளில் ஊதிய விட்டுக்கொடுப்புகளுக்கு பேச்சுவார்த்தை நடத்தி, அத்துடன், அடுத்த பல வாரங்களின் காலத்தில், வேலைக்குத் திரும்புவதற்கான ஒழுங்கமைப்பையும் செய்து, தொழிலாள வர்க்கம் அதிகாரத்துக்காக போராடுவதை மீண்டும் தடுத்து விட்டிருந்தது. PCF, புரட்சியை தடுத்து நிறுத்தி விட முடிந்த அதேசமயத்தில், அது ஒரு புரட்சிகரக் கட்சி என்பதான பிரமைகளையும் கீழறுத்திருந்தது.
 

The rise of the Socialist Party

சோசலிஸ்ட் கட்சியின் தோற்றம்


1968 நிகழ்வுகளின் மூலம் PCF மதிப்பிழந்ததில் இருந்து, தொழிலாள வர்க்கத்தில் ஒரு பரந்த புரட்சிகரக் கட்சி உதித்தெழவில்லை, மாறாக சோசலிஸ்ட் கட்சிதான் தோன்றியது. 1969 மற்றும் 1971 இல் நடந்த அல்ஃபோர்வில் மற்றும் எப்பினேய் காங்கிரசுகளில் ஸ்தாபிக்கப்பட்ட இக்கட்சி, ஆரம்பம் முதலே ஒரு சோசலிஸ்ட் கட்சியாக இருக்கவில்லை, மாறாக நிதி மூலதனத்தின் ஒரு கட்சியாகவே இருந்தது. SFIO இன் ஒரு புதிய பதிப்பாகவும் அது இருக்கவில்லை. SFIO, முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு விசுவாசமான சேவகனாக இருந்திருந்த கட்சி, அது முதலாம் உலகப் போரை ஆதரித்திருந்தது, அக்டோபர் புரட்சியை எதிர்த்திருந்தது, அதன் பெரும்பாலான பிரதிநிதிகள் 1940 இல் பெத்தானுக்கு ஆதரவாய் வாக்களித்திருந்தனர், அத்துடன் அல்ஜீரியாவில் அது ஒரு போரை நடத்தியது என்ற விதத்தில், அத்தகையதொரு கட்சியை ஆரம்பிப்பது என்பதே ஒரு பிற்போக்குத்தனமான முன்னெடுப்பாகவே இருந்திருக்க முடியும். ஆயினும், சோசலிஸ்ட் கட்சி, அதனினும் பரந்தவொரு கூட்டணியாக இருந்தது.

ஒரு முன்னாள் விச்சி நிர்வாகியும், மொலே அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்தவரும் மற்றும் யூதப்படுகொலையில் ஒத்துழைத்திருந்த றெனே புஸ்க்கே (René Bousquet) போன்ற விச்சி போலிஸ் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேணி வந்திருந்தவருமான பிரான்சுவா மித்திரோனுக்காக ஒரு தேர்தல் வாகனமாக இருக்கும் வகையில் சோசலிஸ்ட் கட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. SFIO இன் எஞ்சிய மிச்சம், மித்திரோனின் குடியரசு ஸ்தாபனங்களுக்கான அமைப்பு —விச்சியுடன் தொடர்பு கொண்ட பழைய Radical Party இல் இருந்தான சக்திகள், Esprit பத்திரிகை ஆதரவாளர்கள் போன்ற சமூக-கத்தோலிக்க சக்திகள் ஆகியவை அதில் இருந்தன— மற்றும் “இடது” புத்திஜீவிகள், முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள், மற்றும் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியில் (PSU) இருந்தான முன்னாள் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இதில் இடம்பெற்றிருந்தனர். பிரதானமாக அரசு எந்திரத்தில் இருந்தும், ஊடகங்களில் இருந்தும், மற்றும் கல்விநிறுவனங்களில் இருந்தும் உறுப்பினர்களை அமர்த்திக் கொண்ட ஒரு முதலாளித்துவக் கட்சியாக இது இருந்தது. எவ்வாறாயினும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும், ட்ரொட்ஸ்கிச இயக்கமும் செல்வாக்கை தக்க வைத்திருந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியியிலான ஒரு போராட்ட எழுச்சியின் நிலைமைகளின் கீழ், PS தன்னை ஒரு “சோசலிஸ்ட்” ஆக காட்டிக்கொள்ள தள்ளப்பட்டது.

பின்னர் மித்திரோன் அதை அவதானித்த அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கியதைப் போல, PCF இன் வாக்கு அடித்தளத்தை அழிப்பதும், பிரதான “இடது” கட்சியாக உருவெடுப்பதும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதுமே, PS இன் இலக்காய் இருந்தது. PCF இன் மீதும் 1960கள் மற்றும் 1970களில் வெளிக்கொண்டு வரப்பட்டிருந்த ஸ்ராலினிசத்தின் வரலாற்றுக் குற்றங்களின் மீதும் “ஜனநாயக” விமர்சனங்களை செய்வதன் மூலம் அது சோசலிஸ்டாக காட்டிக்கொண்டது. இந்த விமர்சனங்கள், தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து, ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிராய் சோவியத் ஜனநாயகத்தை ட்ரொட்ஸ்கி பாதுகாத்ததை அடிப்படையாகக் கொண்டோ அல்லது PCF இன் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தின் மீதான ஒரு ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தைக் கொண்டோ மேற்கொள்ளப்பட்டவையல்ல. மாறாக PS கம்யூனிச-விரோதத்தையும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதான பிரமைகளையுமே ஊக்குவித்தது.

1968 பொது வேலைநிறுத்தத்தினால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்த PCF இன் வலதுசாரி நகர்வை, PS சுரண்டிக் கொண்டது. 1972 இல் PS மற்றும் முதலாளித்துவ தீவிர இடது இயக்கத்துடன் ஒரு பொது வேலைத்திட்டத்தில் (Common Program) கையெழுத்திட்டதன் மூலமும், 1976 இல் “யூரோ-கம்யூனிச” திருப்பத்திற்கு மத்தியில் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிராகரித்தன் மூலமும், PCF 1968-1975 இன் புரட்சிகரப் போராட்டங்களுக்கு பதிலிறுத்தது. இந்த பொது வேலைத்திட்டமானது, 1936 இல் மக்கள் முன்னணியால் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சமூக சலுகைகளின் மூடுதிரையினுள் தன்னை மறைத்துக்கொண்ட அதே நேரத்தில், அது சமூக தேட்டங்களுக்கான மேடையை அமைக்கவில்லை மாறாக தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூகப் போரின் ஒரு ஒட்டுமொத்த சகாப்தத்திற்கே மேடையமைத்துத் தந்தது.

அனைத்திற்கும் மேல் PS, பிரெஞ்சு புத்திஜீவித்தட்டின் பரந்த பிரிவுகள் மார்க்சிசத்திற்கு மேல் நடத்திய யுத்தத்தின் மீதே தங்கியிருந்தது. அல்ஜீரிய போருக்குப் பின்னரும், சோவியத் ஜனாதிபதி நிக்கிட்டா குருச்சேவ் ஸ்ராலினது குற்றங்களை ஒப்புக்கொண்டு நிகழ்த்திய இரகசிய உரைக்குப் பின்னரும், PCF இல் இருந்து மாவோயிசத்திற்கு பெருமளவு நகர்ந்திருந்த “இடது” புத்திஜீவித்தட்டானது, 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு பின்னர் இன்னும் அதிகமாய் வலதின் பக்கம் நகர்ந்தது. சமூக புரட்சியுடனான உரசலில் மிரண்டு போன அவர்கள், PCF இன் அரவணைப்பின் கீழ் அவர்கள் பின்பற்றி வந்திருந்த மார்க்சிசத்துடனான குலாவலைக் கைவிட்டனர், அதற்குப் பதிலாக PS க்கு ஆதரவான ஒரு ஊடக மற்றும் அரசியல் பிரச்சாரத்தை முன்நிறுத்தினர்.

பேர்னார் ஹென்றி-லெவி தலைமையிலான “புதிய மெய்யியலாளர்கள்” முதல் பின்-கட்டமைப்பியல்வாதி (post-structuralist) மிஷேல் ஃபூக்கோ மற்றும் 1789 புரட்சியின் வரலாற்றாசிரியர் பிரான்சுவா ஃபுயுரே (François Furet) வரையிலும், பல்வேறு சக்திகள் “சர்வாதிபத்தியத்தின்” மீது தாக்குதல் தொடுத்ததோடு அதனை சோசலிசப் புரட்சியின் தவிர்க்கவியலாத விளைவாக சித்தரித்தனர். “சர்வாதிபத்தியம்” (“Totalitarianism”) என்ற கருத்தாக்கம் கம்யூனிசம், ஸ்ராலினிசம், மற்றும் பாசிசம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு பிற்போக்குத்தனமான கலவையாக இருந்தது என்ற அதேநேரத்தில், இந்தப் பிரச்சாரத்தின் இலக்காக பாசிசமும் இல்லை அல்லது ஸ்ராலினின் குற்றங்களும் இல்லை. புஸ்கே மற்றும் மித்திரோன் போன்று பிரான்சில் இருந்த முன்னாள் விச்சி நிர்வாகிகள் மீதோ, அல்லது மார்க்சிசத்திற்கு எதிரான கிரெம்ளினின் அரசியல் படுகொலைகள் மீதோ அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக, இந்த சக்திகள் கிரெம்ளினின் ஜனநாயக-விரோதக் கொள்கைகளின் மீதான ஒரு வலது-சாரி விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிசம் மற்றும் மார்க்சிசத்தின் மீதே தாக்குதல் தொடுத்தன. Alexander Solzhenitsyn போன்று, கிரெம்ளினால் ஒடுக்கப்படுவதற்கு குறிவைக்கப்பட்ட சுதந்திர-சந்தைக்கு ஆதரவான கலகக் குரல்களை அவர்கள் ஊக்குவித்தனர். ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்கு மவுனத்தைக் கடைப்பிடித்தும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதற்கான சோவியத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு குரோதத்தைக் கடைப்பிடித்தும், கம்யூனிச விரோதத்திற்கும், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதற்கும், முன்னாள் காலனித்துவ நாடுகளுக்கு எதிராக —அவற்றின் தலைவர்களும் “சர்வாதிபத்தியவாதிகளாய்” சித்தரிக்கப்பட்டனர்— ஏகாதிபத்தியத்தால் “மனிதாபிமான அடிப்படையிலான” போர்கள் நடத்தப்படுவதற்குமான தத்துவார்த்த கட்டமைப்பை அவர்கள் கட்டியமைத்தனர்.

தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தையும் தாக்கிய அவர்கள், அதற்கு பதிலாக, “சுய-மேலாண்மை” (“Self-management”) கொள்கைக்கு ஆலோசனையளித்தனர். ஆரம்பத்தில், திவால்நிலை எட்டிய Lip கடிகாரத் தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தி இயக்குவதற்கு தொழிலாளர்கள் மேற்கொண்ட ஒரு தோல்வியடைந்த முயற்சியுடன் தொடர்புபடுத்தப்பட்ட, “சுய-மேலாண்மை”க்கான அழைப்புகள் பின்னர் ஒரு விரிந்த, மார்க்சிச-விரோத உள்ளடக்கத்தை எடுத்தன. இந்த கருத்தாக்கம் “குழப்பம் தரக்கூடியதாக” இருந்தாலும் “சோவியத் ஒன்றியம் திணித்த ஆட்சிமுறை வகையின் ஒரு நிராகரிப்பை உடன்கொண்டிருந்த” அனுகூலமும் அதற்கு இருந்தது என PSU தலைவரான மிஷேல் ரொக்கா குறிப்பிட்டார். இன்னும் அப்பட்டமாக, “சோசலிசக் கோட்பாடுகளின்... அடிப்படையிலான சமூகப் போராட்டம் ஒரு சர்வாதிபத்திய அரசையே உருவாக்குகிறது” என்று எச்சரித்த Esprit அதற்குமாறாய் சுய-மேலாண்மை என்பது “அதிகாரத்திற்கான பெருவிருப்பை பலமிழக்கச்செய்வதாக இருக்கிறது” என்று புகழ்ந்தது.

இது, 1981 இல் PCF இன் ஆதரவுடன் மித்திரோன் அதிகாரத்திற்கு வருவதற்கு மேடையமைத்து கொடுத்தது. 1970களின் பொருளாதார நெருக்கடி மற்றும் பழமைவாத ஜனாதிபதி வலெரி ஜிஸ்கார்ட் டெ'எஸ்ட்டான் (Valéry Giscard d'Estaing) இன் சிக்கன நடவடிக்கை கொள்கைகள் ஆகியவற்றின் தாக்கத்தில் ஏற்பட்டிருந்த பரந்த அதிருப்தியை சுரண்டிக் கொண்ட மித்திரோன், முக்கிய நிறுவனங்களை தேசியமயமாக்கவும் வாங்கும் சக்தியை மேம்படுத்தவும் வாக்குறுதியளித்தார். ஆயினும், அதிகாரத்துக்கு வந்ததும், அவர் தனது வேலைத்திட்டத்தை வெகுவிரைவில் மறுதலித்தார். எதிர்பார்க்கத்தக்க வகையில் பிரான்சில் இருந்து மூலதனம் வெளியில் பறக்கும் நிலைக்கு முகம்கொடுத்த அவர், மூலதனக் கட்டுப்பாடுகளை திணிக்க மறுத்ததோடு அதற்குப் பதிலாய் சமூக செலவினங்களையும் மற்றும் வேலைகளையும் வெட்டுகின்ற ஒரு “சிக்கன நடவடிக்கை திருப்பத்தை” பிரகடனப்படுத்தினார்.

PS இன் தேர்தல் வாக்குறுதிகள் மீதான மித்திரோனின் காட்டிக் கொடுப்புகள், தொழிலாளர்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும், பெரும் ஏமாற்றத்தையும் உருவாக்கியது. இருந்தும் கூட இறுதியில், பிரான்சில் இருந்த எந்த ஒரு கட்சியும் PSக்கு எதிரான அரசியல் ரீதியாக சுயாதீனமான, புரட்சிகரக் கொள்கைக்காக போராடாததை அடுத்து, இந்த எதிர்ப்பானது எந்த ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பாட்டையும் கண்டுகொள்ளமுடியாது போனது. இந்த மிகையதார்த்தமான ஒரு சூழ்நிலையில், தொழிலாளர்களுக்கும் மாணவர் இயக்கத்திலும் மற்றும் அரச அதிகாரத்துவத்திலும் இருந்த சலுகைகொண்டிருந்த சக்திகளுக்கும் இடையிலான வர்க்கப் பிளவு முன்னெப்போதினும் பிரம்மாண்டமானதாக ஆகியபோது, அந்த தொழிலாளர் இயக்கமானது வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. வேலைநிறுத்த நடவடிக்கையும் தொழிற்சங்க அங்கத்துவமும் தரைதட்டிய நிலையில் தொழிற்சங்கங்கள் உருக்குலைந்ததோடு, பெருமளவில் வணிகங்களால் நிதியாதாரம் அளிக்கப்பட்ட ஒரு பெருநிறுவன போலிஸ் படையாக அவை எழுந்தன. தீவிரப்பட்ட குட்டி-முதலாளித்துவ தட்டானது, SOS-Racism மற்றும் மாணவர் சங்கங்கள் போன்ற PS ஆலும் அதன் அரசியல் கூட்டாளிகளாலும் கட்டுப்படுத்தப்பட்ட பலதரப்பான அமைப்புகளை உருவாக்கின. இவை வெகுஜனங்களை கண்காணிக்கவும், அவசியப்படுகின்ற சமயத்தில், மட்டுப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தி சமூக அதிருப்தியை வெளியேற்றுவதற்கான ஒரு பாதுகாப்பு வால்வு போன்று சேவை செய்தன.
 

The crisis of the Trotskyist movement in France and the OCI's split with the ICFI

பிரான்சில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நெருக்கடியும் ICFI இல் இருந்து OCI இன் உடைவும்.

 

பிரான்சில், 1968க்குப் பின்னர், PCF ஐ வலதுசாரி திசையில் இருந்து தாக்கிய ஒரு கட்சியான PS தான் ஆதிக்கம் செலுத்த எழுந்தது என்றால், அதற்கு அனைத்துக்கும் மேலான காரணமாக இருந்தது ட்ரொட்ஸ்கிச இயக்கத்திலான நெருக்கடியும், OCI இன் காட்டிக்கொடுப்புமே ஆகும். இது, இடதின் பக்கத்தில் ஒரு மாற்று எழுந்து விடுவதை தடுத்து விட்டிருந்தது. OCI, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொண்டு இடதுகளின் ஐக்கியம் (Union of the Left) என்ற முன்னோக்கினை ஏற்றுக் கொண்டு PS மற்றும் PCF உடன் ஒரு அரசியல் மற்றும் தேர்தல் கூட்டை நாட முயன்றது. அத்தகைய ஒரு முன்னோக்கு, தொழிலாளர் அமைப்புகளது ஒரு ஐக்கிய முன்னணியை (United front of workers organizations) உருவாக்கும் என அது கூறிக் கொண்டபோதும், உண்மையில் ஒரு முதலாளித்துவக் கட்சியான சோசலிஸ்ட் கட்சியின் மேலாதிக்கத்திலான ஒரு தொழிலாள வர்க்க-விரோதமான மறுகுழுவாக்கத்தையே அது உருவாக்கியது.

இது, ட்ரொட்ஸ்கி மற்றும் ICFI இன் வேலைகளது இருதயத்தானமாக இருந்த தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக முதலாளித்துவ செல்வாக்குகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை அப்பட்டமாக மறுதலிப்பதாக இருந்தது. இடதுகளின் ஐக்கியம் என்ற முன்னோக்கை OCI ஏற்றுக்கொண்டதன் மூலமாக, PS ஐ நோக்கி நோக்குநிலை அமைத்துக் கொண்ட ஒரு விரிந்த குட்டி-முதலாளித்துவ பிரிவினர்களுடன் தன்னை இணைந்து கொண்டு, கடந்த அரை-நூற்றாண்டு காலத்தில் பிரான்சில் “இடது” முதலாளித்துவ அரசாங்கங்களுக்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்க உதவியது.

தொழிலாளர் போராட்டம் (Lutte Ouvrière -LO) குழுவும் இதில் அடங்கும். 1956 இல் Voix Ouvrière என்ற தூயதொழிற்சங்கவாத அமைப்பாக (syndicalist organization) ஸ்தாபிக்கப்பட்ட இது, பின்னர் 1968 இல் LO என பெயர்மாற்றப்பட்டது. 1930கள் மற்றும் 1940களில் டேவிட் பார்ட்டா தலைமையில் செயலூக்கத்துடன் இருந்த ஒரு குழுவின் உறுப்பினர்களை இது மீண்டும் குழுச்சேர்த்தது. பார்ட்டா குழு, ட்ரொட்ஸ்கிசத்திற்கு விசுவாசமாக இருப்பதாக கூறிக்கொண்டாலும், தொழிலாள வர்க்கம் தேசிய அடிப்படையில் மட்டுமே போராடும் என்றும் ஆகவே நான்காம் அகிலம் ஒரு குட்டி-முதலாளித்துவ அமைப்பு என்றும் மார்க்சிச-விரோத முகாந்திரங்களைக் கூறி நான்காம் அகிலத்தில் இணைய மறுத்தது. பார்ட்டா குழு நான்காம் அகிலத்துடன் கூட்டு நடவடிக்கைகளில் கரம்கோர்த்து 1947 வெகுஜன வேலைநிறுத்தங்களுக்கு தூண்டிய ரெனோல்ட் வேலைநிறுத்தத்திற்காகப் போராடியது என்றபோதும், அராஜகவாத-தூயதொழிற்சங்கவாத வட்டாரங்களுடன் அது நெருக்கமான தொடர்பை பராமரித்தது. LO, அதன் வேட்பாளர் ஆர்லெட் லாகியே இன் தொடர்ச்சியான ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் சமயத்தில் போன்று, ஒரு ட்ரொட்ஸ்கிச அமைப்பாக ஊடகங்களாலும் அரசியல் உயரடுக்காலும் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது என்றாலும், அது PS இன் ஒரு நம்பிக்கைக்குரிய அரசியல் துணைக்கோளாகவே இருந்து வருகிறது. LO இன் தேசியவாத மற்றும் அராஜகவாத-தூயதொழிற்சங்கவாத நோக்குநிலையே, தொழிலாளர் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்ததை மூடிமறைப்பது, முக்காடு மற்றும் பர்தா ஆகியவற்றின் மீதான தடைகளை ஆதரிப்பதன் மூலம் முஸ்லீம்-விரோத வெறுப்புணர்வுகளை தூண்டுவது, அத்துடன் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கைக்கு மௌனமாக ஆதரவளிப்பது ஆகியவற்றில் அது வகிக்கின்ற பாத்திரத்தின் கீழ் அமைந்திருப்பதாகும்.

இன்றைய LCR/NPA ஆகியவை வேரைக்கொண்டிருந்த நான்காம் அகிலத்திற்குள் இருந்த பப்லோவாத திருத்தல்வாத போக்கிற்கு எதிரான ஒரு நேரடியான போராட்டத்தில் ICFI 1953 இல் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த திருத்தல்வாத போக்கு பாரிசில், தமது அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்த பிரெஞ்சு பிரிவின் பெரும்பான்மையை ஆரம்பத்தில் வெளியேற்றிய மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையில் இருந்த நான்காம் அகிலத்தின் சர்வதேச செயலகத்திற்குள் (International Secretariat of the Fourth International) இருந்து எழுந்த போக்காகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பரந்த தொழிலாளர் இயக்கங்கள் மற்றும் காலனித்துவ-எதிர்ப்பு இயக்கங்களின் தலைமையில் எழுந்திருந்த ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளுக்குள் நான்காம் அகிலம் தன்னைக் கலைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய பப்லோ மற்றும் மண்டேலுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தலையீடு செய்தது. ஸ்ராலினிச மற்றும் ஏகாதிபத்திய ஆட்சிகளுக்கு இடையில் போராடப்படும் “போர்-புரட்சி” (“war-revolutions”) கொள்கையானது 1917 அக்டோபரில் ரஷ்யாவில் கண்டதைப் போல தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலின் மூலமான புரட்சியை பிரதியீடு செய்யும் என்றும், வெற்றிகரமான “போர்-புரட்சிகள்” சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச ஆட்சிகள் போன்ற பல நூற்றாண்டுகள் நீடிக்கக் கூடிய சர்வாதிகாரங்களை உருவாக்கும், அதிலிருந்து ஒரு தொலைவான எதிர்காலத்தில் சோசலிசம் அபிவிருத்தி காணும் என்றும் பப்லோவாதிகள் கணித்தனர்.

வரலாறு வெகுவிரைவிலேயே பப்லோ மற்றும் மண்டேலின் கணிப்புகளை செல்லாதவையாக்கியது. அதற்கு நான்கு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தின் பின்னர், சோவியத் ஒன்றியம், சீனா, மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகள் முதலாளித்துவத்தை மீட்சி செய்தன, அத்துடன் முன்னாள்-காலனித்துவ நாடுகளில் இருந்த தேசியவாத ஆட்சிகள் தங்களை ஏகாதிபத்திய நிதி மூலதனத்திற்காய் முழுமையாய் திறந்து விட்டிருந்தன.

அதற்கு வெகுமுன்பாகவே, நிகழ்வுகள் பப்லோவாதத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரத்தை எடுத்துக்காட்டியிருந்தன. 1953 வேலைநிறுத்தத்தை பப்லோவாதிகள் தங்களை அடிபணியச்செய்திருந்த PCF விலைபேசியதின் பிந்தைய ஒரு சில மாதங்களில் பப்லோவாதிகளுடனான ICFI இன் உடைவு நிகழ்ந்தது. 1962 போரில் இருந்து எழுந்த அல்ஜீரிய முதலாளித்துவ ஆட்சியின் திவால்நிலை காலனித்துவ நாடுகளில் முதலாளித்துவத்தை நோக்கி நோக்குநிலை அமைக்கின்ற பப்லோவாத முன்னோக்கின் திவால்நிலையை அம்பலப்படுத்தியது. Messali Hadj இன் அல்ஜீரிய தேசிய இயக்கத்தில் இருந்த கூறுகளுடன் கலந்துரையாடல்கள் மூலமாக ஒரு அல்ஜீரிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை உருவாக்க, வெற்றிபெறாத ஒரு முயற்சியையேனும் OCI செய்திருந்தது, ஆனால் பப்லோவாதிகள் அதுபோன்ற ஒரு இயக்கத்தை அல்ஜீரியாவில் அபிவிருத்தி செய்வதற்கும் கூட முயற்சி செய்திருக்கவில்லை. அதற்கு மாறாய், அவர்கள் கள்ளநோட்டை அச்சடித்து தேசிய விடுதலை முன்னணியை (FLN) ஆயுதபாணியாக்க உதவினர், Boumédiène ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பின்னர் அல்ஜீரியாவை விட்டு வெளியேறும் முன்பாக பப்லோ அந்த அமைப்புக்கு ஒரு ஆலோசகராகவும் சிறிதுகாலம் சேவை செய்தார்.

அக்காலகட்டத்திலுள்ள ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத சக்திகளுக்கு தம்மை தகவமைத்துக் கொண்ட பப்லோவாதத்தை எதிர்த்த ICFI, அது மார்க்சிசத்தின் மீதான ஒரு குட்டி-முதலாளித்துவ தாக்குதல் என விளக்கியது. அரசியலை ஏகாதிபத்திய மற்றும் ஸ்ராலினிச அரசாங்கங்களுக்கு இடையிலான மோதலாக சுருக்கியதன் மூலமாக, பப்லோவாதமானது செவ்வியல் மார்க்சிசத்தின் மையமான சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை சம்பந்தமற்றதாகக் கருதியது. மேலும், அது பிரெஞ்சு முதலாளித்துவத்தில் பெரும் செல்வாக்கு பெற்ற பல கருத்துக்களை தழுவிக் கொண்டது. ட்ரொட்ஸ்கிச இயக்கம் தொடர்ந்தும் சுயாதீனமாக இயங்குவதற்கு பப்லோவாதம் காட்டிய ஆவேசமான எதிர்ப்பு, மார்க்சிசத்தின் மைய அரசியல் கருவியான புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சிக்கு எதிரான பரவலாய் வியாபித்திருந்த குட்டி-முதலாளித்துவ தப்பெண்ணங்களுக்கு அதிகளவில் இணங்கியதாக இருந்ததன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

பிரெஞ்சு பிரிவின் பெரும்பான்மையானது, பப்லோவாதத்தினை எதிர்த்த அதேநேரத்தில், ICFI மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு குறித்த ஒரு சந்தேக மனோபாவத்தை படிப்படியாய் தழுவத் தொடங்கியது. 1966 இல் நடந்த ICFI இன் மூன்றாவது காங்கிரசில், Voix Ouvrière இல் இருந்தான ஒரு குழுவை அது தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து நான்காம் அகிலத்தை “மீள்கட்டமைக்க” ஆலோசனை வைக்கத் தொடங்கியது. பப்லோவாதத்திற்கு எதிரான ICFI இன் போராட்டத்தின் குணாம்சமாய் விளங்கிய சமரசமின்மையில் இருந்து விலகி மத்தியவாத மறுநோக்குநிலை அமைத்துக் கொள்வதும் சமூக ஜனநாயகம் மற்றும் PCF இன் குட்டி-முதலாளித்துவ துணைக்கோள்களது ஒரு பரந்த அடுக்கினை நோக்கி நகர்வதும் தான் இந்த “மீள்கட்டமைப்பு” சூத்திரத்தின் அர்த்தமாக இருந்தது.

1968 இல் OCI மாணவர் போராட்டங்களை தொழிலாளர்களை நோக்கி நோக்குநிலை கொள்ளச் செய்வதற்கு பாடுபட்டது, அத்துடன் பொது வேலைநிறுத்தத்திற்கு தூண்டுவதற்கு உதவிய நான்ந் என்னும் நகரத்தில் இருந்த சுட்-அவியேசியோன் (Sud-Aviation) தொழிற்சாலையிலான வேலைநிறுத்த நடவடிக்கைக்கும் அது அழைப்பு விடுத்தது. இருப்பினும், அது ஒரு தூயதொழிற்சங்கவாத நிலைப்பாட்டையே தழுவியிருந்தது, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கட்சிகளை மறுகுழுவாக்கம் செய்து ஒரு மத்திய வேலைநிறுத்தக் குழுவை அமைப்பதற்கு மட்டுமே அது அழைப்பு விடுத்தது. PCF மற்றும் ஸ்ராலினிச தொழிலாளர் பொது கூட்டமைப்பை (CGT) அதிகாரத்தைக் கையிலெடுக்க OCI அழைத்திருந்தால் தொழிலாளர்களிடம் அரசு அதிகாரம் என்ற பிரச்சினையை முன் கொண்டுவந்திருக்க முடியும், PCF இன் எதிர்ப்புரட்சிகரக் கொள்கையை அம்பலப்படுத்தியிருக்க முடியும், அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமைக்கு போராடுவதான ஒரு இடத்தில் தன்னை இருத்திக் கொண்டிருக்க முடியும், அதைச் செய்யாததற்காக பிரிட்டிஷ் SLL சரியான வகையில் OCI ஐ விமர்சித்தது. OCI இன் அதிகரித்துச் சென்ற மத்தியவாத மற்றும் ஐயுறவுவாத நோக்குநிலையானது, 1968க்குப் பிந்தைய தீவிரப்படலின் எழுச்சியால் கட்சிக்குள் பிரதானமாய் இளைஞர்கள், மாணவர்களிடம் இருந்து புதிய உறுப்பினர்களின் ஒரு திடீர் வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்த சமயத்தில், மரணகரமான பின்விளைவுகளைக் கொண்டதாய் ஆனது.

1971 இல் SLL உம் ICFI இன் பெரும்பான்மையான பிரிவுகளும் OCI உடனான ஒரு முறிவை அறிவித்தன. OCI இன் சந்தர்ப்பவாதம் குறித்த SLL இன் விமர்சனங்கள் போதுமான நிரூபணம்பெற்றன. இரகசியமான வகையில் OCI மற்றும் PS இல் ஏககாலத்தில் உறுப்பினராக இருந்து, பின் மித்திரோனின் ஒரு உயர்நிலை உதவியாளராக மாறி, பின்னாளில் பிரான்சின் பிரதமராகவும் மாறிய லியோனல் ஜோஸ்பனின் அரசியல் வாழ்க்கை இதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது. எப்படியிருப்பினும், SLL ஆனது அரசியல் பிரச்சினைகளின் அவசியமான தெளிவுபடுத்தலுடன் இந்த முறிவை நடத்தவில்லை. அல்லது அது OCI க்குள் இருந்த சக்திகளை வென்றெடுப்பதற்கோ அல்லது பிரான்சில் ஒரு கட்சியைக் கட்டியெழுப்புவதற்கோ முனையவில்லை. அத்தியாவசிய அரசியல் பிரச்சினைகள் விவாதிக்கப்படுவதற்கு முன்பாகவே நிகழ்ந்து விட்டிருந்த இந்த முதிர்ச்சியற்ற முறிவானது, ஒரு ஒட்டுமொத்த வரலாற்று சகாப்தத்தின் காலத்தில் ஒரு ஒழுங்கமைந்த அரசியல் போக்காக இருந்ததில் இருந்து ட்ரொட்ஸ்கிசத்தை திறம்படக் கலைத்து விட்டிருந்ததோடு பிரிட்டனில் SLL க்கே கூட தீவிரமான அரசியல் பின்விளைவுகளைக் கொண்டிருந்ததாய் நிரூபணமானது.

1971 பிளவின் போது, OCI 1968 ஆம் ஆண்டிலான தனது தூயதொழிற்சங்கவாத நிலையையும் PS ஐ நோக்கிய அதன் நோக்குநிலையையும் பாதுகாத்தது. 1968 இல் PCF-CGT அரசாங்கம் அமைக்க SLL அழைப்புவிட்டமையானது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவது, OCI க்கு ஆதரவு கொடுத்திருந்த சமூக-ஜனநாயக தொழிற்சங்கங்களை தனிமைப்படுத்துவது, மற்றும் தொழிலாளர் அமைப்புகளது ஒரு ஐக்கிய முன்னணியெங்கும் விரிசலை உண்டாக்குவது என்றே அர்த்தமளித்திருக்கும் என்று அது கூறியது. இது, 1968 இல் போர்க்குணம் மிக்க தொழிலாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஒரு புரட்சிகரக் கொள்கைக்கு PCF ஐ நோக்கி எதிர்பார்த்திருந்தனரே அன்றி சமூக-ஜனநாயக தொழிற்சங்கங்களை நோக்கி அல்ல என்ற உண்மையை கருத்தில் கொள்ளாதது மட்டுமல்ல; ஒரு முதலாளித்துவக் கட்சியான PS இன் வர்க்கக் குணாம்சத்தையும் இது தவறாய் சித்தரிப்பதாய் இருந்தது.

PS உடனான ஒரு நீடித்த அரசியல் கூட்டணிக்குள் OCI நுழைந்தமையானது, ICFI இன் முன்னோக்குக்கு ஒரு அடிப்படையான மறுதலிப்பாக இருந்தது. ட்ரொட்ஸ்கிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்குமான போராட்டத்தை கைவிட்டு, OCI தன்னை ஒரு முதலாளித்துவக் கட்சியாக மாற்றிக் கொண்டது. இடதுகளின் ஐக்கியம் என்ற, 1981 மித்திரோனின் ஜனாதிபதிக் காலம் தொடங்கி PS தனது மேலாதிக்க பாத்திரத்தை செலுத்துவதற்கான அரசியல் கட்டமைப்பாக நிரூபணமான, ஒரு முன்னோக்கை அது தழுவிக் கொண்டது. PS க்குள் OCI தனது உறுப்பினர்களை அனுப்பியது, அவர்கள் PS மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஒரு கன்னையாக செயல்பட்டனர். OCI, பிரான்சில் இந்தப் பாத்திரத்தை வகித்தது மட்டுமல்லாது, சர்வதேச அளவில் தொழிலாள-வர்க்கத்திற்கு விரோதமான கட்சிகளை அமைப்பதற்கும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தியது. இலத்தீன் அமெரிக்காவில், மிக கீழ்த்தரமான விதத்தில் பிரேசிலில் ஆளும் தொழிலாளர் கட்சியை (PT) அமைக்க உதவியது. தங்களை இத்தகைய முதலாளித்துவ கட்சிகளுக்குள் கலைத்துக் கொண்டதன் மூலமாக, லாம்பேர்வாதிகள் ட்ரொட்ஸ்கிசத்திற்கு சக்திகளை வென்றெடுக்க முயற்சிக்கவில்லை, மாறாக பிரெஞ்சு, பிரேசில், மற்றும் சர்வதேச முதலாளித்துவத்தின் கொள்கைகளுக்கான அரசியல் மறைப்பை வழங்குவதற்கு தாங்கள் இருப்பதை தெரிவித்துக் கொள்வதற்கே முயற்சித்தார்கள்.
 

The ICFI's split with the WRP

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உடைவு


1971இல் OCI உடனான தெளிவுபடுத்தப்படாத உடைவுக்குப் பின்னர், SLL ஆனது அதேமாதிரியான கொள்கைகளை பிரிட்டனிலும் கடைப்பிடிக்கத் தொடங்கியது. தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) என்று தனது பெயரை மாற்றிக் கொண்ட அது, எட்வார்ட் ஹீத்தின் பழமைவாத அரசாங்கத்திற்கான வெகுஜன எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு வளர்ச்சி கண்ட அதே சமயத்தில், பப்லோவாதத்திற்கு எதிரான ICFI இன் போராட்டத்தை குறைத்து மதிப்பிடத் தொடங்கியது. 1974 இல் தொழிற் கட்சி திரும்பவும் ஆட்சிக்கு வந்த சமயத்தில், WRP தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைய தொடர்ந்து சிக்கல்பட்டுகொண்டிருந்த நிலையில், ICFI இன் ஏனைய பகுதிகளுக்கு தெரியாமல் மூன்றாம் உலக தேசியவாதிகளுடனும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் கன்னைகளுடனுமான உறவுகளில் வேறு எங்கோ தனது ஆதரவை தேட முயன்றது.

WRP இன் சீரழிவுக்கு ICFI க்கு உள்ளாக இருந்த எதிர்ப்பு, WRP இன் நிலையின் மீதான அரசியல் மற்றும் தத்துவார்த்த விமர்சனங்களை ICFI உடன் ஐக்கியப்பட்டு இருந்த அமெரிக்கக் கட்சியான வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலாளர் டேவிட் நோர்த் எடுத்துக்காட்டி வரையறுத்தபோது உச்சம் பெற்றது. 1985இல், WRP க்குள்ளாக ஒரு கன்னை மோதல் வெடித்ததற்குப் பின்னர், WRP ஐ ICFI தனது பிரிட்டிஷ் பகுதியாக இருப்பதில் இருந்து இடைநீக்கம் செய்து விட்டு, ICFI இன் சர்வதேச ஆளுமையையும், முன்னோக்கையும் ஏற்றுக் கொண்ட பிரிட்டிஷ் பகுதியின் உறுப்பினர்களை திரும்ப இணைத்துக்கொண்டது. WRP இன் பொதுச் செயலரான மைக்கல் பண்டாவிடம் இருந்தான ஒரு வெறுப்புமிக்க தாக்குதலுக்கு எதிராக, ட்ரொட்ஸ்கிசத்திற்காக ICFI நடத்திய போராட்டத்தின் வரலாற்றை பாதுகாத்து, தொ.பு.க ட்ரொட்கிசத்தை காட்டிக் கொடுத்தது எப்படி, மற்றும் டேவிட் நோர்த்தின் நாம் காக்கும் மரபியம் ஆகிய ஆவணங்கள் மூலம் WRP மீதான ஒரு முழுமையான அம்பலப்படுத்தலை ICFI வெளியிட்டது. தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு தக்கவாறு WRP தன்னை மாற்றிக் கொண்டதற்கும், முதலாளித்துவ தேசியவாதத்தை அது தழுவிக் கொண்டதற்கும் எதிராக, ICFI ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு பாதுகாத்தது என்பதை இந்த ஆவணங்கள் ஸ்தாபித்தன.

தொழிலாள வர்க்கத்திற்கும், தொழிலாளர் இயக்கத்தின் பழைய தேசிய-நோக்குநிலை கொண்ட அதிகாரத்துவங்கள் மற்றும் அவற்றை நோக்கி நோக்குநிலை கொண்ட குட்டி-முதலாளித்துவ கட்சிகளுக்கும் இடையிலான மோதல், முன்கண்டிராத அளவுகளுக்கு பெருகிய அந்தவேளையில், ICFI குட்டி-முதலாளித்துவ திருத்தல்வாதத்திற்கு எதிராய் ஒரு சக்திவாய்ந்த அரசியல் தாக்குதலை முன்னெடுத்தது. அமெரிக்காவில் 1981 PATCO வேலைநிறுத்தம் மற்றும் ஐரோப்பாவில் 1984-1985 பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆகியவை உள்ளிட சர்வதேச அளவில் மிகப்பெரும் வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டன, எல்லாவற்றுக்கும் மேல் மிக்கையில் கோர்பச்சேவ் ஜனாதிபதியாக இருந்த சோவியத் ஒன்றிய ஆட்சியால் பெரஸ்த்ரோய்கா (மீள்கட்டுமானம்) சுதந்திர-சந்தை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்சிசெய்யப்படுவதை நோக்கி இட்டுச்சென்ற நடவடிக்கைகள், LCR மற்றும் OCI போன்ற வலது-நோக்கி நகர்ந்துகொண்டிருந்த குட்டி-முதலாளித்துவ குழுக்களிடம் இருந்து ICFI ஐ பிரிக்கின்ற வர்க்கப் பிளவை தெளிவாக்கியது. பிரதான ஏகாதிபத்திய அரசாங்கங்களின் அதேவரிசையில், அவை, பெரெஸ்த்ரோய்காவை அதிகாரத்துவத்தால் செய்யப்பட்ட ஒரு ஜனநாயக சீர்திருத்தமாக பாராட்டின. ICFI மட்டுமே, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் இறுதியில் முதலாளித்துவத்தை மீட்சிசெய்வதை நோக்கி நகரும் என்ற ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கையை அடித்தளமாய்க் கொண்டு, சோவியத் தொழிலாளர்கள் அதிகாரத்துவத்தை தூக்கிவீசவில்லையென்றால் கோர்பச்சேவின் சீர்திருத்தங்கள் முதலாளித்துவத்தின் மீட்சிக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்தது.

சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டமையும், அத்துடன் இறுதியாக 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையும் ஒரு வரலாற்றுரீதியான மற்றும் அரசியல் ரீதியான திருப்புமுனையை குறித்ததாய் இருந்தது. அரை-நூற்றாண்டு காலத்திற்கும் முன்னரே ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் குறித்து ட்ரொட்ஸ்கி வழங்கிய எச்சரிக்கைகள் முழுமையாக நிரூபணமாயின. 1968க்குப் பின்னர், தொடர்ந்து ஆதரவு ஆதரவை இழந்து கொண்டிருந்த வீழ்ச்சி கண்டுகொண்டிருந்த ஐரோப்பிய ஸ்ராலினிச கட்சிகள் உருக்குலைந்தன. சோவியத்திற்கு பிந்தைய காலத்தில் உருவான முதலாளித்துவக் குடியரசுகளில் நிகழ்ந்திருந்த தொழிற்துறை மற்றும் பொருளாதார சீரழிவையும், அத்துடன் குண்டர்கள் குழு பாணியிலான சிலவராட்சியின் எழுச்சியையும் கணக்கிலெடுக்காமல், இது வரலாற்றின் முடிவையும் முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியையும் குறித்ததாக பிற்போக்கர்கள் பிரகடனப்படுத்தினர்.

இந்த சக்திகளுக்கு எதிரான வகையில் ICFI, முதலாளித்துவத்தின் மீட்சியானது சந்தேகத்திற்கிடமில்லாமல் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பலத்த அடிதான் என்ற அதேநேரத்தில், ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் கட்டவிழ்ந்திருந்த ஏகாதிபத்திய போரினதும் உலக சோசலிசப் புரட்சியினதும் சாகாப்தத்தின் முடிவை குறித்துநிற்கவில்லை என்று வலியுறுத்தியது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, மார்க்சிசத்தினால் அடையாளம் காணப்பட்ட முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை தீர்த்து விட்டிருக்கவில்லை. இன்னும் சொன்னால், சோவியத் ஒன்றியத்தினை பலவீனப்படுத்திய, அத்துடன் முதலாளித்துவத்தை மீட்சி செய்வதற்கு ஸ்ராலினிச ஆட்சியை நெருக்கிய, அதே பொருளாதார நிகழ்ச்சிப் போக்குகளும் புவி-மூலோபாய மோதல்களும் தான் உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையையும் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தன.

அதிகபட்ச இலாபத்திற்கான ஒரு தயவுதாட்சண்யமற்ற போராட்டத்தில், சர்வதேச விநியோகச் சங்கிலிகளை ஒழுங்கமைத்த பொருளாதார பூகோளமயமாக்கல் மற்றும் நாடுகடந்த பெருநிறுவனங்களின் அபிவிருத்தியை ICFI சுட்டிக்காட்டியது. இந்த நிகழ்ச்சிப் போக்குகள் ஒரு தேசியமட்டத்தில் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுவதையோ அல்லது ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகளை பற்றி பேரம்பேசுவதையோ சாத்தியமற்றதாக்கி விட்டிருந்தன. முன்னாள் காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவ வர்க்கங்களின் “தேசிய அபிவிருத்தி” மூலோபாயங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் மூலமான தேசிய-அடிப்படையிலான பேரம்பேசல், மற்றும் ஸ்ராலினிசத்தின் தன்னிறைவு நோக்குநிலை அத்தனையும் காலாவதியாக்கப்பட்டு விட்டிருந்தன. பதிலாக, அவை இன்னும் முழு அப்பட்டமாக, தொழில் ஒப்பந்ததாரர்கள் போல செயல்பட்டு, சர்வதேச நிதி மூலதனத்திற்கு மிகப்பெரும் இலாப விகிதத்தை வழங்குவதற்காக தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மோசமாக்க போட்டியிட்டன.

உக்கிரமடைந்துள்ள சமூக நெருக்கடியுடன் ஒன்றிணைந்து உலக ஏகாதிபத்திய ஒழுங்கின் நெருக்கடியும் அதிகரித்துச் சென்றது. பூகோளமயமாக்கல் மற்றும் அதனால் விளைந்த பொருளாதார அதிகாரத்தின் மறுபங்கீடு ஆகிய நிகழ்ச்சிப்போக்குகள் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை மட்டும் பலவீனப்படுத்தவில்லை, மாறாக அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான புறநிலை அடித்தளத்தையும் கூட பலவீனப்படுத்தியது. அதன் அதிபலம்கொண்ட எதிரி மறைந்து விட்டதால், தனது இராணுவ வலிமையைக் கொண்டு சரிந்திருக்கும் தனது பொருளாதார வலிமையை ஈடுகட்டி விடலாம் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் பித்தேறி கனவுகண்டு கொண்டிருந்த போதிலும், மத்திய கிழக்கிலும் மற்றும் மத்திய ஆசியாவிலும் படையெடுப்பதற்கு அல்லது இராணுவரீதியாக மேலாதிக்கம் செய்வதற்கு அது மேற்கொண்ட முயற்சிகள் அழிவுக்கே இட்டுச் சென்றன. பழைய, தேசிய-அடிப்படையிலான பொருளாதார வாழ்க்கை வடிவங்களுக்கு திரும்புவதென்பது சாத்தியமற்றதாகி விட்டது, இன்னும் மோசமாய், முதலாளித்துவத்தின் பூகோளமயமாக்கலானது முந்தைய தசாப்தங்களில் உலகப் போர்களாகவும் புரட்சிகளாகவும் வெடித்திருந்த முரண்பாடுகள் அத்தனையையும் உச்சவேகத்தில் மேலே கொண்டுவந்துள்ளது. இதுவே உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடிப்படையாக இருந்ததும், தொடர்ந்து இருந்து வருவதும் ஆகும்.

ஆயினும், புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியும் அத்துடன் அரசியல் மற்றும் வரலாற்று முன்னோக்கின் நெருக்கடியுமே, சர்வதேச தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கும் முக்கிய பிரச்சினையாக இருந்தது. புதிய சகாப்தத்தில் சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படைக்கு உருக்கொடுப்பதற்கும் அதனை தொழிலாள வர்க்கத்திற்குள் கொண்டுசெல்வதற்கும் ICFI போராடியது. ட்ரொட்ஸ்கியை கண்டனம் செய்து, ஸ்ராலினிசத்திற்கும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கும் அங்கு எந்த சோசலிச மாற்றும் இருந்திருக்கவில்லை என்று வலியுறுத்திவந்த சோவியத்திற்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் பள்ளியின் கல்வியாளர் பிரதிநிதிகளை மறுதலிப்பதற்கு அது தளர்ச்சியின்றிப் போராடியது.

1995 இல், முன்னதாக கழகங்களாய் ஒழுங்கமைந்திருந்த ICFI இன் தேசியப் பகுதிகள், தங்களை சோசலிச சமத்துவக் கட்சிகளாக மறுஒழுங்கு செய்து கொண்டன. தொழிலாள வர்க்கத்தை நோக்கிய ICFI இன் உறவு மாற்றமடைந்துள்ளது என்ற கருத்தாக்கமே, இந்த முன்னெடுப்பின் அடித்தளமாக இருந்தது. தேசியவாதத்தை அடிப்படையாக கொண்ட பழைய அமைப்புகள், வெளிப்படையாக தொழிலாளர்-விரோதக் கொள்கைகளை நோக்கி திரும்பியதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் அவற்றின் அடித்தளம் இல்லாதொழிந்ததுமே, இந்த அமைப்புக்களிடம் கோரிக்கைகளை வைப்பதன் மூலமும் அவற்றுக்குள்ளே இருந்து தொழிலாளர்களை வென்றெடுப்பதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தை மறுநோக்குநிலைப்படுத்தலை சாத்தியமில்லாததாக்கிவிட்டது என்று நா.அ.அ.கு வலியுறுத்தியது. சோசலிச சமத்துவக் கட்சி [அமெரிக்கா] பின்வருமாறு விளக்கியது: “உலகெங்கிலும் தொழிலாள வர்க்கமானது, தொழிற்சங்கங்கள், கட்சிகள் மற்றும் முந்தையதொரு காலத்தில் அது உருவாக்கிய அரசுகளும் கூட ஏகாதிபத்தியத்தின் நேரடியான சாதனங்களாக உருமாற்றம் கண்டிருக்கின்றன என்ற உண்மைக்கு முகம்கொடுத்து நிற்கிறது. தொழிலாளர் அதிகாரத்துவங்கள் வர்க்கப் போராட்டத்தில் ‘மத்தியஸ்தம்’ செய்து வர்க்கங்களுக்கு இடையிலான இடைத்தடை பாத்திரத்தை ஆற்றிய காலம் முடிந்து விட்டது. …மற்றவர்களை தலைமை கொடுக்கக் ‘கோருவதன்’ மூலமாக தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை நம்மால் தீர்க்க முடியாது. ஒரு புதிய கட்சி உருவாகவேண்டும் என்றால், நாம் தான் அதனைக் கட்டியெழுப்பியாக வேண்டும்.”

1998 இல் ICFI, ஒரு இணையவழி சோசலிச தினசரியாக உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) ஆரம்பித்தது. WSWS மூலமாக ICFI இன் பிரிவுகள் ஒரு பொதுவான அரசியல் நிலைப்பாட்டுக்கு கூட்டாக உருக்கொடுப்பதோடு, உலகத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மீதான பகுப்பாய்வை, முன்னோக்கை மற்றும் தலைமையையும் வழங்குகின்றன. 18 வருடங்களுக்கும் அதிகமான காலத்திலான தொடர்ச்சியான அன்றாட பிரசுரத்தின் மூலமாக, உலகில் மிகப் பரவலாய் வாசிக்கப்படுகின்ற சோசலிச வலைத் தளமாக WSWS தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.
 

The ICFI's struggle against the pseudo-left in France

பிரான்சில் போலி-இடதுகளுக்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டம்


ICFI இன் செறிவான அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகள் பிரான்சில் அதன் தலையீட்டுக்கான அடித்தளமாய் உள்ளன. 1990களிலும், 2000களிலும், பாரிய 1995 புகையிரதத்துறை வேலைநிறுத்தம் உள்ளிட்ட ஓய்வூதியவெட்டுகளுக்கு எதிரான போராட்டங்கள், மற்றும் முதலாவது வேலை ஒப்பந்த [CPE] சீர்திருத்தத்திற்கு எதிரான இளைஞர் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை உள்ளிட்ட கணிசமான வர்க்கப் போராட்டங்களையும் சமூக ஆர்ப்பாட்டங்களையும் பிரான்ஸ் கண்டது. இந்த காலகட்டத்தில், PCF இன் உருக்குலைவுக்கான பதிலிறுப்பாக, தொழிலாளர்களின் அடுக்குகள் ஒரு ட்ரொட்ஸ்கிச மாற்றினை நோக்கித்திரும்பியிருந்தன. ஆயினும், அவை LCR, LO, மற்றும் OCI ஆகியவற்றின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தினால் தடுக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சியை ஆதரித்திருந்த இந்தக் கட்சிகள், ஐரோப்பாவில் உலர்ந்துபோன ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்ததோடு, ஊடக வலைப்பின்னல்கள், கல்விச்சாலைகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்குள் தங்களை இன்னும் ஆழமாக ஒருங்கிணைத்துக் கொண்டன. இடது ஆக காட்டிக்கொண்டு அவை ஏகாதிபத்தியப் போர், சமூக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளித்தன.

2002 ஜனாதிபதித் தேர்தல் நெருக்கடி முதலான காலகட்டமானது அவற்றின் திவால்நிலையை எடுத்துக்காட்டுகிறது. அந்த ஆண்டில், PS வேட்பாளரான லியோனல் ஜோஸ்பன் முதலாம் சுற்றில் வெளியேற்றப்பட்டார், பழமைவாத ஜாக் சிராக் மற்றும் FN வேட்பாளரான ஜோன்–மரி லு பென் இடையிலான இறுதிச் சுற்று தேர்தலுக்கு எதிராய் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. LCR, LO, மற்றும் தொழிலாளர் கட்சி [PT - முன்னாள் OCI] ஆகியவை சேர்ந்து 3 மில்லியன் வாக்குகளை வென்றிருந்தன. அதே ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா சட்டவிரோதமாக படையெடுப்பதற்கு எதிராக சர்வதேச அளவில் போர்-எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன [இறுதியில் 2003 இல் அப்படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது]. ஆயினும், LCR, LO, மற்றும் PT ஆகியவை வாய்ப்பினை வீணடிக்கும் திறனை மட்டுமே கொண்டிருந்தன என்பது நிரூபணமாகியது.

இந்த இறுதிச் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கான ஒரு பிரச்சாரத்தை முன்மொழிந்து, ICFI இந்த மூன்று கட்சிகளுக்கும் ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டது. தனது அரசியல் பேதங்களை மறைக்காமல், ICFI, ஒரு செயலூக்கமான புறக்கணிப்பானது, போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டி, சிராக் பின்பற்றவிருக்கும் கொள்கைகளை எதிர்ப்பதில் தொழிலாள வர்க்கத்தை சிறந்த வகையில் தயாரிப்பு செய்யும் என்று விளக்கியது. ஆனால் இந்தக் கட்சிகள் பதிலளிக்கக்கூட அக்கறையெடுத்துக் கொள்ளவில்லை, நவ-பாசிசம் ஆட்சிக்கு வராமல் தடுப்பதாகக் கூறி சிராக்கிற்கு வாக்களிக்க PS மேற்கொண்ட பிரச்சாரத்தின் பின்னால் அணிவகுத்தன.

அடுத்த பதினான்கு ஆண்டுகள், ஆளும் உயரடுக்கு நவ-பாசிசத்தை நோக்கித் திரும்பி வரிசையான நவ-காலனித்துவ போர்களை நடத்திய நிலையில் இவை சிராக் மற்றும் PS ஐ பின்பற்றின. பிரெஞ்சு அரசு, ஈராக் போருக்கான அதன் ஆரம்ப எதிர்ப்பைக் கைவிட்ட நிலையில், “அதி இடதாக” சொல்லப்பட்ட இந்த அமைப்புகள் முக்காடு மற்றும் பர்தாவிற்கு எதிரான இனவாத மற்றும் முஸ்லீம்-விரோத சட்டங்களை ஆதரிக்கவும் கூட செய்தன. 2008 நிதிப் பொறிவுக்குப் பின், சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஆரம்பகட்ட பதிலிறுப்பாக எகிப்து மற்றும் துனிசியாவில் 2011 இல் நடந்த புரட்சிகர எழுச்சிகளுக்குப் பின்னர் இவை மேலும் வலது நோக்கித் திரும்பின. சென்ற ஆண்டில் இவற்றின் கிரேக்க சக-சிந்தனையாளர்கள் அதிகாரத்திற்கு வந்த சமயத்தில், கிரேக்க பிரதமரான அலெக்சிஸ் சிப்ராஸ் மக்களுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து திணித்துக் கொண்டிருந்த நிலையிலும் இவை அவரை ஆதரித்தன. லிபியா மற்றும் சிரியாவிலான நேட்டோக்களின் போரை மட்டுமல்லாது, உக்ரேனில் ரஷ்யாவுடனான ஒரு முழு-வீச்சிலான போரைத் தூண்டுவதற்கு அச்சுறுத்துகின்ற ஒரு அதி-வலது, நேட்டோ-ஆதரவு ஆட்சியை அதிகாரத்தில் அமர்த்திய பாசிசத் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பையும் கூட இவை “ஜனநாயகப் புரட்சிகள்” என்று கூறி ஆதரித்தன. இத்தகைய கொள்கைகள், உலகை அணுஆயுதப் போர் மற்றும் பொருளாதார உருக்குலைவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன.

1968 மாணவர் இயக்கத்திற்கு பிந்திய சீரழிவில் வேரூன்றி இருந்ததும், நடுத்தர வர்க்கத்தின் உயர் அடுக்குகளை அடிப்படையாகக் கொண்டதும், குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் குரோதம் கொண்டதாய் இருப்பதோடு, ஏகாதிபத்தியப் போர், சிக்கன நடவடிக்கை மற்றும் போலிஸ்-அரசு நடவடிக்கைகளை ஆதரிக்கின்ற மார்க்சிச-விரோதம் கொண்ட இந்த சக்திகளை, போலி-இடது போக்கு என ICFI வகைப்படுத்துகிறது. இவை தொழிலாள வர்க்கத்திற்கு அழிவை மட்டுமே உருவாக்கித்தர முடியும். அதேநேரத்தில், PS மற்றும் அதன் போலி-இடது கூட்டாளிகளுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்திடம் உருவாகின்ற வெடிப்புமிக்க அதிருப்தியானது, SEP ஒரு வெகுஜன ட்ரொட்ஸ்கிச கட்சியாக அபிவிருத்தி காண்பதற்கான புறநிலையான அரசியல் அடித்தளத்தை அமைத்துத் தருகிறது.

எழுபத்தி-எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, நான்காம் அகிலமானது தனது ஸ்தாபக இடைமருவு வேலைத்திட்டத்தை வெளியிட்டு, இரண்டாம் உலகப் போருக்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாய், முதலாளித்துவத்தின் மரண ஓலம் குறித்தும் எச்சரித்திருந்தது. பொருளாதார நெருக்கடியாலும் அமெரிக்க மேலாதிக்கத்தின் உயிர்வாழ்க்கை நெருக்கடியின் தாக்கங்களாலும் திகைத்துப் போய், ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புகின்ற நிலையில், முதலாளித்துவம் மீண்டும் தீர்க்கவியலாத ஒரு வரலாற்று நெருக்கடிக்கு முகம்கொடுத்து நிற்கிறது. போர் அபாயமும், சமூக சமத்துவமின்மையின் அவலட்சணமான மட்டங்களும், அத்துடன் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களும் உலகெங்கும் மேலாதிக்கம் செலுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகள் அதன் பிற்போக்குத்தனமான தன்மையை தோலுரித்துக் காட்டுகின்ற நிலையிலும், நவ-பாசிசமானது ஐரோப்பாவெங்கும் எழுந்து வருகின்ற நிலையிலும், மத்திய கிழக்கிலான போர்களில் இருந்தோ, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுடனான நேட்டோவின் மோதல்களில் இருந்தோ, மற்றும் சீனாவை தனிமைப்படுத்தும் நோக்கம் கொண்ட அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தில்” இருந்தோ உலகப் போர் வெடிப்பதற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 1938 இல் போலவே, இப்போதும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தினதும் சோசலிசத்திற்கான போராட்டத்தினதும் முறையாகும்.

சோசலிசமும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமும் என்ற தலைப்பிலான அதன் 2014 ஆம் ஆண்டு தீர்மானத்தில் ICFI எழுதியது: “இன்னுமொரு ஏகாதிபத்திய இரத்த ஆறு பாய்வது சாத்தியம் என்பது மட்டுமல்ல; ஒரு புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிடாத பட்சத்தில் அது தவிர்க்கமுடியாததும் ஆகும். …ஆயினும், ஏகாதிபத்தியத்தை விளிம்புக்குத் தள்ளுகின்ற அதே முரண்பாடுகள்தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலையான உந்துசக்தியையும் வழங்குகின்றன.” அது மேலும் கூறியது: “அனைத்துலகக் குழுவின் தலைமையின் கீழ், நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதே, மையமான மூலோபாயப் பிரச்சினை ஆகும். தொழிலாள வர்க்கம் சர்வதேசரீதியில் ஐக்கியப்படுத்தப்படுவதற்கு இது ஒன்றே சிந்திக்கத்தக்க வழிமுறையாக இருக்கிறது. … புதிய நாடுகளில் மற்றும் உலகெங்குமான பகுதிகளில் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்காக வேலைசெய்வதே இப்போது ICFI இன் பணியாகும்.”

இந்த முன்னோக்கு மற்றும் வரலாற்றின் அடிப்படையில், சோசலிச சமத்துவக் கட்சி [பிரான்ஸ்] பின்வரும் கோட்பாடுகளை தனது அரசியல் வேலைக்கான வழிகாட்டியாக முன்வைக்கின்றது.
 

Principles of the Socialist Equality Party (France)

பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியின் கோட்பாடுகள்
 

Internationalism and the struggle for World Socialist Revolution

சர்வதேசியவாதமும் உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டமும்


ICFI இன் அரசியல் ஆளுமையை ஏற்று, அது தலைமை கொடுக்கின்ற உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு பிரான்சில் உள்ள தொழிலாளர்களை வென்றெடுப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது. இப்புரட்சியானதுநனவான அரசியல் போராட்டத்திற்குள் வெகுஜனங்கள் காலடி எடுத்து வைப்பதை அடையாளப்படுத்துகிறது என்பதோடு, மனிதகுலம் சமூகரீதியாக வர்க்கங்களாக ஒழுங்குபட்டிருக்கும் நிலையும், அதன்மூலமாக, மனிதனால் மனிதன் சுரண்டப்படும் நிலையும் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதன் முன்னறிவிப்பாகவும் திகழும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தின் பாகமாக சோசலிசக் கொள்கைகளை பின்பற்றுகின்ற ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபிக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே பிரான்சிற்குள் அதன் கடமையாக இருக்கும்.

முதலாளித்துவ அரசின் கட்டமைப்புகளுக்கு, சோசலிஸ்டுகளை தேர்வு செய்வதன் மூலமாக தொழிலாளர்’ அதிகாரம் ஸ்தாபிக்கப்பட முடியாது. பாரிய புரட்சிகரப் போராட்டங்களின் ஊடாக தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையை உண்மையாகப் பிரதிநிதித்துவம் செய்யும் பொருட்டு உருவாக்கப்படுகின்ற பங்கேற்பு ஜனநாயகத்தின் புதிய அமைப்புகள் தொழிலாளர் அரசின் அடித்தளங்களாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அத்தகையதொரு அரசு, அது பொருளாதார வாழ்க்கையை சோசலிச ரீதியாக உருமாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அறிமுகம் செய்கின்ற அதேநேரத்தில், முடிவெடுக்கும் நிகழ்முறைகளின் மீதான ஜனநாயகரீதியான, தொழிலாள வர்க்கக் கட்டுப்பாட்டை பரந்த அளவில் விரிவாக்கம் செய்வதை ஊக்குவிக்கும். சோசலிச நனவு ஊட்டப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அணிதிரட்டலின் உட்பொருளில் மட்டுமே இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகும். ஒரு உண்மையான ஜனநாயக, சமத்துவ மற்றும் சோசலிச சமூகத்தின் அபிவிருத்திக்கு அவசியமான புறநிலையான முன்நிபந்தனைகளை இது உருவாக்கும்.

அனைத்து நாடுகளது தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தி, பூகோளரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட முதலாளித்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் மனிதகுலத்தின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வகையில் பயன்படுத்தப்படுவதையும் விரிவு செய்யப்படுகின்றதையும் ஜனநாயக ரீதியாக மேற்பார்வை செய்கின்ற வகையில், தொழிலாளர் அரசுகளின் ஒரு உலகக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சர்வதேசப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே இந்த இறுதி இலக்கானது எட்டப்பட முடியும். ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் விளக்கியது போல, “சோசலிசப் புரட்சியானது தேசிய அரங்கில் ஆரம்பிக்கிறது, அது சர்வதேச அரங்கில் கட்டவிழ்கிறது, உலக அரங்கில் பூர்த்தியாகிறது. இவ்வாறாக, சோசலிசப் புரட்சியானது, நிரந்தரப் புரட்சி என்ற வார்த்தைகளது இன்னும் புதிய மற்றும் பரந்த அர்த்தத்தில் நிரந்தரமானதொரு புரட்சியாக மாறுகிறது: நமது ஒட்டுமொத்த கோளத்திலும் புதிய சமூகம் இறுதி வெற்றி காணும்போதே அது நிறைவடையும்.”

தொழிலாளர்களது அரசியல் அறிவெல்லைகளை பிரான்சின் எல்லைகளைக் கடந்து மேலுயர்த்துவதற்கும், பிரான்சின் தொழிலாளர் போராட்டங்கள் உலக சோசலிசப் புரட்சியின் மேலெழும் நிகழ்முறையுடன் பிரிக்கவியலாது பிணைக்கப்பட்டிருப்பதால் அதற்கு ஒரு சர்வதேச மூலோபாயமும் முன்னோக்கும் அவசியமாக இருக்கிறது என்பதை விளங்கப்படுத்துவதற்கும் SEP போராடுகிறது. நிறம், இனம், மொழி, மதம், பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை ஆகியவற்றின் அடிப்படையிலான பேதத்தைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த மேற்கொள்ளப்படும் அத்தனை முயற்சிகளுக்கும் எதிராக SEP போராடுகிறது. அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் அனைவரும் தாங்கள் விரும்புகின்ற நாட்டில் முழு குடியுரிமைகளுடன் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் கல்வி கற்பதற்கும் கொண்டுள்ள உரிமைகளை SEP பாதுகாக்கிறது. புரட்சிகரப் போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதையே அது தனது கொள்கைகளுக்கு அடித்தளமாகக் கொண்டுள்ளது.

வர்க்க சமுதாயத்தை ஒழிப்பதென்பது ஒரு ஒட்டுமொத்த சகாப்தத்தின் பணியாகும். ஆகவே, ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியை காட்டிக்கொடுத்ததற்கு —சோவியத் அதிகாரத்துவம் சர்வதேசியவாதத்தின் இடத்தில் தேசியவாதத்தை பிரதியீடு செய்ததில் இது வேரூன்றியிருந்தது— எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டம், மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான ICFI இன் இடைவிடாத போராட்டம் ஆகிய இந்த ஒட்டுமொத்த சகாப்தத்தின் வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு SEP இன் கொள்கைகள் அமைந்துள்ளன.
 

The crisis of capitalism

முதலாளித்துவத்தின் நெருக்கடி
 

முதலாளித்துவமும், அதன் பொருளாதார அடித்தளங்களில் அபிவிருத்தியாகின்ற ஏகாதிபத்திய உலக அமைப்புமுறையுமே வறுமை, சுரண்டல், வன்முறை, மற்றும் மனிதத் துயரத்திற்கான பிரதான காரணங்களாக இருக்கின்றன. இரண்டு உலகப் போர்கள், எண்ணிலடங்கா “உள்நாட்டு” போர்கள், மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான பாசிச சர்வாதிகாரங்கள் என இருபதாம் நூற்றாண்டின் இரத்தம்தோய்ந்த வரலாறு முதலாளித்துவத்தின் மீது மறுக்கமுடியாத ஒரு குற்றப்பத்திரிகையை உள்ளடக்கியதாக இருக்கிறது.

நவீன சமூகத்தின் பரந்த உற்பத்தி சக்திகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதமளிக்க போதுமானதாகும். ஆயினும் முதலாளித்துவ சமூகம் தனது பொருளாதார, சமூக, சூழலிய, அல்லது கலாச்சாரப் பிரச்சினைகள் எதனையும் தீர்க்க இயலாமல் இருக்கிறது. அதற்கு மாறாய், பெருமந்தநிலைக்குப் பிந்தைய ஆழமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில், பரந்த மக்களது வாழ்க்கை நிலைமைகள் வீழ்ச்சி கண்டு கொண்டிருக்கின்றன. சமூக சமத்துவமின்மையானது அவலட்சணமான விகிதாசாரங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது: ஒரு சில டஜன் பல்கோடி-பில்லியனர்கள், உலகின் கீழிருக்கும் 50 சதவீத மக்கள் கொண்டிருப்பதை விடவும் அதிகமான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர், அத்துடன் பெருஞ்செல்வம் படைத்த மேலிருக்கும் 1 சதவீதத்தினர் கீழிருக்கும் எஞ்சிய மொத்த மக்களும் கொண்டிருக்கும் அளவுக்கான செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர்.

மனித கலாச்சாரமானது முன்னோக்கும், வருங்காலத்திற்கான நம்பிக்கையும் பறிக்கப்பட்டு, மறுபடியும் பாசிசம் மற்றும் போர் எனும் காட்டுமிராண்டித்தனத்தால் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிக்கான தீர்வு முதலாளித்துவம் சீர்திருத்தப்படுவதில் இல்லை, மாறாக அது தூக்கிவீசப்படுவதில் தான் இருக்கிறது, ஏனென்றால் அது சீர்திருத்தக் கூடிய நிலையனைத்தையும் கடந்து விட்டிருக்கிறது. எப்படி நிலப்பிரபுத்துவமானது முதலாளித்துவத்துக்கு வழிவிட்டதோ, அதைப்போலவே முதலாளித்துவமும் சோசலிசத்துக்கு வழிவிட்டாக வேண்டும்.
 

The struggle against imperialist war

ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம்


முதலாளித்துவத்தின் நெருக்கடியானது மனிதகுலத்தை மீண்டும் உலகப் போரை கொண்டு அச்சுறுத்தக் கூடிய ஏகாதிபத்திய கொள்ளைப் போர்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களிடையேயான போட்டிகளின் பரவுதலில் மிகவும் வன்முறையான வெளிப்பாட்டை காண்கிறது. லெனினும், ட்ரொட்ஸ்கியும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் பகுப்பாய்வு செய்த முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளான உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு அமைப்புமுறைக்கும் இடையிலானதும், உற்பத்தி முறைகளின் சமூக தன்மைக்கும் உற்பத்தி சாதனங்கள் தனிச்சொத்துடைமையாக இருப்பதற்கும் இடையிலானதுமான முரண்பாடுகளிலிலிருந்து இந்த மோதல்கள் எழுகின்றன. உற்பத்தி சாதனங்கள் நாடுகடந்த நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்டு உலகளாவி இயங்குகின்ற வேளையில், முதலாளித்துவமானது ஒவ்வொரு நாட்டின் முதலாளித்துவ வர்க்கமும் அதன் உலகளாவிய நலன்களை முன்னெடுப்பதற்கான செயல்பாட்டுத் தளமாக சேவை செய்கின்ற தேசிய-அரசுகளின் ஒரு அமைப்புமுறையில் வேரூன்றியதாகவே தொடர்கிறது. சந்தைகளையும், அதிமுக்கிய ஆதாரவளங்களின் கட்டுப்பாட்டையும், மலிவு உழைப்புக்கான அணுகலையும், செல்வாக்கு வட்டங்களையும், மற்றும் புவிமூலோபாய அனுகூலத்தையும் கைப்பற்றுவதற்கான ஏகாதிபத்திய சக்திகளது கட்டுப்படுத்த முடியாத உந்துதலானது தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்கிறது.

பிரான்ஸ் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக, சர்வதேச அளவில் போர் மற்றும் தலையீடுகளின் மூலமாக தனது வேட்டையாடும் பொருளாதார மற்றும் இராணுவ நலன்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. 19ம் நூற்றாண்டில், அது ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா எங்கிலுமான பத்து மில்லியன் கணக்கிலான காலனித்துவ அடிமைகளின் ஒரு சாம்ராஜ்யத்தை வெற்றிகொண்டது. இன்று அது தனது செல்வாக்கு வட்டத்தை மீண்டும் வெற்றிகொள்ள விரும்புவதால், ஒரு புதிய உலகப் போரை கட்டவிழ்த்து விட அச்சுறுத்துகின்ற வகையில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து ரஷ்யா மற்றும் சீனா வரையிலும் ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்படும் போர்களின் அலைஎழுச்சியில் அது இணைந்து கொண்டிருக்கிறது.

பிரான்ஸ் மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்படுகின்ற அனைத்துப் போர்களையும் SEP கண்டனம் செய்வதோடு, அவற்றின் தலையீடுகள் மனித உரிமைகளுக்கு ஆதரவான அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்கள் என்பதாக ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது போலி-இடது வக்காலத்துவாதிகளும் முன்னெடுக்கின்ற போலியான சாக்குபோக்குகளை அது நிராகரிக்கிறது. மக்களுக்கு தம்மையும் தமது நாடுகளையும் நவ-காலனித்துவ படையெடுப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் அடிப்படை உரிமை இருப்பதை அது அங்கீகரிக்கிறது. இந்த கோட்பாடுமிக்க நிலைப்பாடானது ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் அல்லது உலகெங்கிலும் அப்பாவி மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையான நடவடிக்கைகளுக்கு SEP காட்டும் எதிர்ப்பை எவ்விதத்திலும் குறைத்து விடுவதில்லை. பயங்கரவாத நடவடிக்கை என்ற நியாயமான வரையறையை பெறத்தக்க இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கைகள் பொதுமக்களை குழப்பத்திற்குள்ளாக்கி நோக்குநிலை தவறச் செய்கிறது, இனவாத மற்றும் பிரிவினைவாதப் பதட்டங்களை ஆழப்படுத்துகிறது, அத்துடன் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தில் இருந்து நாடுகளை விடுவிப்பதற்கான ஒரே அடிப்படையான பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கான போராட்டத்தை கீழறுக்கிறது. பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்குகளது கரங்களில் சிக்கி, அவை போரில் இறங்குவதை நியாயப்படுத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

SEP ஏகாதிபத்திய போருக்கு எதிரான பரந்த அளவிலான போராட்டங்களை ஊக்குவிக்கிறது, ஆதரவளிக்கிறது. ஆயினும், போருக்கான காரணங்கள் முதலாளித்துவ சமூகத்தின் கட்டமைப்பிலும் அது தேசிய அரசுகளாக அரசியல் பிளவுபட்டுக் கிடப்பதிலும் பொதிந்திருப்பதால், ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டமானது, ஒரு சர்வதேச புரட்சிகர மூலோபாயத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுகின்ற மட்டத்திற்குத் தான் அது வெற்றிகரமாக அமைய முடியும். ICFI சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அதன் அறிக்கையில் எழுதியவாறாக,
 

• போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், மக்கட்தொகையின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முன்நிற்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும்.

 

• புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ எதிர்ப்புடையதாகவும் சோசலிசத்தன்மை உடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும் இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படையான காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் வழியாக அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.
 

• ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமானதாகவும் மற்றும் அவற்றுக்கு விரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.
 

• எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும். முதலாளித்துவத்தின் நிரந்தரமான போருக்கு, தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கை கொண்டு - தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதும் ஒரு உலக சோசலிச கூட்டமைப்பை ஸ்தாபிப்பதுமாகிய மூலோபாய இலக்கால் பதிலளிக்கப்பட வேண்டும். உலகத்தின் வளங்கள் அறிவார்ந்த வகையில், திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதையும், அந்த அடிப்படையில், வறுமை ஒழிக்கப்படுவதையும் மனித கலாச்சாரம் உயர்ந்த மட்டங்களை எட்டுவதையும் அது சாத்தியமாக்கும்.
 

Defense of democratic rights

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு


பிரான்சின் நிலப்பிரபுத்துவ மற்றும் அதன் பிந்தைய முதலாளித்துவ பிரபுத்துவங்களுக்கு எதிராய் இரண்டு நூற்றாண்டுக்கும் அதிகமான புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக வென்றெடுத்திருந்த அத்தனை ஜனநாயக உரிமைகளையும் SEP முன்னெடுக்கிறது மற்றும் பாதுகாக்கிறது. ஆயினும் இந்த உரிமைகள் அத்தனையும், குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு பின்னர், 2008 பொருளாதார நெருக்கடி, மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்று அழைக்கப்படும் ஒன்றில் முழுமையாக இணைவதான பிரான்சின் முடிவு ஆகியவற்றிக்கு பின்னர் மிகப்பெருமளவில் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டுள்ளன.

ஐரோப்பாவில் அதி-வலது சக்திகளுக்கு மறுநிவாரணம் அளிக்கப்படுவதும், உள்நாட்டு எதிர்ப்புக்கு எதிராக பிரெஞ்சு இராணுவத்தை பயன்படுத்துவதற்கான தயாரிப்பும், மற்றும் பிரெஞ்சு மற்றும் சர்வதேச உளவு முகமைகள் மூலமாக பரந்த மக்கள் மின்னணுக் கண்காணிப்புக்கு ஆட்படுத்தப்படுவதும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிதைவு முற்றிய நிலைக்குச் சென்று விட்டிருப்பதற்கு சாட்சியம் கூறுகின்றன. PS மற்றும் போலி-இடதுகள் மார்க்சிசத்தையும் புரட்சியையும் ஜனநாயகத்திற்கான பெரும் அச்சுறுத்தல்களாய் கண்டனம் செய்கின்றன என்பதோடு போலிஸ்-அரசு நடவடிக்கைகளை ஆதரிப்பவையாகவும் அவை நிரூபணமாகியுள்ளன. ஜனநாயகத்திற்கான அபாயமானது, முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கைகளில் இருந்தும் வரலாற்று ரீதியாக நிராகரிக்கப்பட்ட சமூக அமைப்பு முறையான முதலாளித்துவத்தின் நெருக்கடியில் இருந்துமே தோன்றுகிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது சோசலிசத்துக்கான போராட்டத்தில் இருந்து பிரிக்கமுடியாதவகையில் பிணைந்துள்ளதாகும்: எப்படி ஜனநாயகம் இன்றி சோசலிசம் இருக்கவியலாதோ, அவ்வாறே சோசலிசம் இல்லாமல் ஜனநாயகமும் இருக்க முடியாது. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே பிரான்சிலும் மற்றும் முதலாளித்துவ-ஜனநாயக பாரம்பரியம் கொண்ட அத்தனை நாடுகளிலும் ஜனநாயகத்தின் சிதைவுக்கு எதிரான போராட்டம் அமைய முடியும்.
 

The struggle for the political independence of the working class

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம்


அதிகாரத்திற்கான இந்தப் போராட்டமானது முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகள், அரசியல் பிரதிநிதிகள், தத்துவாசிரியர்கள் மற்றும் முகவர்களிடம் இருந்து தொழிலாள வர்க்கம் நிபந்தனையற்ற அரசியல் சுயாதீனம் பெறுவதை அவசியமாகக் கொண்டிருக்கிறது. பிரான்சில் புரட்சிகர சந்தர்ப்பங்கள் ஸ்ராலினிசத்தாலும் போலி-இடதுகளாலும் தொடர்ந்து காட்டிக்கொடுக்கப்பட்டமையானது பிற வர்க்க சக்திகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகளுடனான பலவீனப்படுத்துகின்ற கூட்டணிகளுடன் பாட்டாளி வர்க்கம் பிணைக்கப்பட்டிருந்த சூழ்நிலைகளால் விளைந்த துயரகரமான பின்விளைவுகளது ஆகத்துல்லியமான எடுத்துக்காட்டுகளை வழங்குகின்றது. பிரான்சில் இது அர்த்தப்படுத்துவது என்னவென்றால், சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் பல்வகைப்பட்ட ஸ்ராலினிச மற்றும் போலி-இடது துணைக்கோள்களுக்கு முதலாவதான மற்றும் முதன்மையான சமரசமற்ற எதிர்ப்பு காட்டுவதையும், இந்த சக்திகள் மற்ற முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒப்பிட்டால் குறைந்த தீமையையே குறிப்பதாகக் கூறப்படுகின்ற பொய்யை நிராகரிப்பதையும் ஆகும்.

ஆயினும், இந்த திவாலாகிப்போன அரசியல் ஸ்தாபகத்தினை SEP எதிர்க்கிறது என்பதால், அந்த அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராக எழுகின்ற எந்த கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ ஆதரவளிக்கும் கடமை SEP க்கு இருக்கிறது என்று அர்த்தமல்ல. இத்தகைய போக்குகளை, தனித்தனிப் பிரச்சினைகளில் அவை அவ்வப்போதான காலகட்டத்தில் எடுக்கும் நிலைப்பாடுகளை கொண்டு SEP மதிப்பிடுவதில்லை, மாறாக அவற்றின் வரலாறு, வேலைத்திட்டம், முன்னோக்கு, சமூக அடித்தளம் மற்றும் வர்க்க நோக்குநிலையின் அடிப்படையிலேயே மதிப்பிடுகிறது.

முதலாளித்துவத்தின் இயல்பை ஆளுமை செய்யும் விதிகளையும் மற்றும் வர்க்க சமூகத்தின் அரசியல் இயக்கவியல் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வமான, மார்க்சிச புரிதலின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையான நலன்களை SEP பாதுகாத்து நிற்கிறது. இது குறுகியகால தந்திரோபாய வெற்றிகளை பெற்றுக்கொள்வதற்காக தொழிலாள வர்க்கத்தின் நீண்டகால நலன்களை தியாகம் செய்கின்ற சந்தர்ப்பவாத அரசியலுக்கான சமரசமற்ற எதிர்ப்பான நிலையில் SEP ஐ நிறுத்துகிறது. எப்படியிருந்தபோதினும், சந்தர்ப்பவாதம் என்பது வெறுமனே புத்திஜீவித்தன மற்றும் தத்துவார்த்த பிழைகளின் விளைபொருளன்று. அது முதலாளித்துவ சமூகத்தின் சடவாத சக்திகளில் வேரூன்றியிருந்து, தொழிலாளர்’ இயக்கத்திற்குள்ளாக பாட்டாளி வர்க்கத்திற்கு குரோதமான வர்க்க சக்திகளது ஒரு வெளிப்பாடாக வளர்ச்சியடைகின்றது. போல்ஷிவிக் கட்சியில் 1920களில் அபிவிருத்தி கண்ட ஸ்ராலினுடைய, பின்னர் நான்காம் அகிலத்திற்குள்ளாக 1950களில் அபிவிருத்தி கண்ட பப்லோ, மண்டேல் ஆகியோருடைய மற்றும் 1970களில் PSக்கு OCI தகவமைத்துக் கொண்டமை போன்ற சந்தர்ப்பவாத வெளிப்பாடுகள் தொழிலாள வர்க்கத்தின் மீது முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதில் சென்று முடிவடைந்ததில் காணலாம். இத்தகைய செல்வாக்குகளுக்கு எதிரான போராட்டம் என்பது, கட்சி கட்டுவதில் ஒரு திசைதிருப்பல் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கம் ஈடுபட்டிருக்கும் மார்க்சிசத்திற்கான போராட்டத்தில் ஒரு மிக உன்னதமான புள்ளியாகும்.

’புரட்சிகர சோசலிச நனவு தொழிலாள வர்க்கத்தில் தன்னியல்பாக அபிவிருத்தி காண்பதில்லை’ என்ற போல்ஷிவிக் கட்சியின் கட்டுமானத்தில் லெனின் அபிவிருத்தி செய்த மற்றும் நான்காம் அகிலத்தைக் கட்டுவதற்கான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற செவ்வியல் மார்க்சிச கருத்தாக்கத்தை SEP பாதுகாக்கிறது. வரலாற்று அபிவிருத்தி மற்றும் முதலாளித்துவம் குறித்த நியதிகளுக்குள் விஞ்ஞானபூர்வமான ஒரு ஆழ்ந்த பார்வை இந்த நனவுக்கு அவசியமானதாய் இருக்கிறது. இந்த புரிதல் தொழிலாள வர்க்கத்திற்குள் அறிமுகம் செய்யப்பட வேண்டும், இதுவே மார்க்சிச இயக்கத்தின் முக்கிய கடமையாகும். புரட்சிகர நனவுக்கான போராட்டத்தை சிறுமைப்படுத்துவது என்பது பிற்போக்குத்தனமான கல்வித்துறை அறிஞர்கள் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதிகளின் வழமையான கையிருப்பாகும்.
 

The Betrayal of the trade unions

தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு


தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக்கொள்ள SEP அழைப்பு விடுக்கிறது. தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்டு முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை பரந்த அளவில் அணிதிரட்டுவதற்கான ஒரு புரட்சிகர, சோசலிச முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்படும்போது மட்டுமே தொழிலாளர் போராட்டங்கள் வெற்றிபெற முடியும். சாமானிய தொழிலாளர்களின் நலன்களை உண்மையாக பிரதிநிதித்துவம் செய்வதுடன் அவர்களது ஜனநாயகரீதியான கட்டுப்பாட்டுக்கும் ஆட்பட்டதாக இருக்கின்ற தொழிற்சாலை குழுக்கள் மற்றும் வேலையிடக் குழுக்கள் போன்ற புதிய, சுயாதீன அமைப்புகளை உருவாக்குவதை அனைத்துவகையிலும் அது ஊக்குவிக்கிறது.

தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வமான புரிதலுக்காக SEP போராடுகின்றது. ஏற்கனவே பிரிட்டனில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்ப நாட்களிலேயே, மார்க்ஸ், சர்வதேச அளவில் முதலாளித்துவத்தை தூக்கிவீச முனைவதற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட நாட்டில் முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாள வர்க்கம் சுரண்டப்படும் நிலையை பேரம்பேசுவதாய் அமைகின்ற தொழிற்சங்கங்களை விமர்சித்தார். “‘நியாயமான நாள் வேலைக்கு நியாயமான நாள் கூலி’ என்ற பழமைவாத இலக்கிற்குப் பதிலாய் ‘கூலி முறையை ஒழிப்பது’ என்ற புரட்சிகர சுலோகத்தை அவர்கள் தங்கள் பதாகையில் பொறிக்க வேண்டும்” என்று மார்க்ஸ் எழுதினார்.

இருபதாம் நூற்றாண்டின் அனுபவங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பொதுவாய் எதிர்ப்புரட்சிகரமான பாத்திரத்தை ஊர்ஜிதம் செய்தன. பிரான்சிலும் இதுவே நடந்தேறியது. இங்கு 1936, 1945, மற்றும் 1968 இல் புரட்சிகர சந்தர்ப்பங்களை ஒடுக்குவதில் CGT (தொழிற்சங்க பொதுக் கூட்டமைப்பு) தொழிற்சங்கம் PCF உடன் கரம்கோர்த்து ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றியது. எப்படியிருப்பினும், போர்க்குணமிக்க தொழிலாளர்களது ஒரு பரந்த எண்ணிக்கையானது தொழிற்சங்கங்களின் மூலமாக போராட முனைந்த மட்டத்திற்கு, ட்ரொட்ஸ்கிச இயக்கமானது சரியானவிதமாய் தொழிற்சங்கங்களுக்குள் தலையீடு செய்ய முனைந்தது. தொழிலாளர்களை அணுகுவதற்கான போராட்டத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்வதற்கான சாக்காக, தொழிற்சங்கங்களது அரசியலைக் கண்டனம் செய்த எண்ணிலடங்கா குட்டி-முதலாளித்துவ “இடது” குழுக்களிடம் இருந்து ICFI யை இது தனித்துவப்படுத்திக் காட்டியது.

1968க்கு பிந்தைய பூகோளமயமாக்கமும் தொழிற் சங்கங்களில் தொழிலாளர் அங்கத்துவ எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்த அமைப்புகளை உருமாற்றம் செய்திருக்கிறது. ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகளில் தேசிய அடிப்படையிலான பேரம்பேசல் மூலமாக தொழிலாளர்களது குறுகியகால நலன்களைப் பாதுகாத்த அமைப்புகளாக இருந்ததில் இருந்து அவை, ஊதியங்கள் மற்றும் வேலைகளை வெட்ட திட்டமிடுவதன் மூலமாக பெருநிறுவனங்களின் உலகளாவிய போட்டித்திறனை பாதுகாக்கின்ற சலுகைபடைத்த அதிகாரத்துவங்களாக மாறியிருக்கின்றன. பிரான்சில் அவை, ஆளும் உயரடுக்கின் அரசியல் தேவைகளுக்கு அளவெடுத்தது போல் இருக்கின்ற அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டங்களை மேற்பார்வை செய்த அதேவேளையில், வேலைநிறுத்த செயல்பாட்டில் ஒரு பாரிய அளவிலான குறைப்பையும் மேற்பார்வை செய்திருக்கின்றன. இந்த நிகழ்முறையால், அவர்களின் அங்கத்துவ அடித்தள வீழ்ச்சி, சமூக வெட்டுகள், பாரிய வேலைக்குறைப்புகள், மற்றும் ஆலை மூடல்கள் இத்தனைக்கு பின்னரும் தொழிற்சங்கங்களின் வருவாய்கள் தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளன. அதற்குக் காரணம் பெருநிறுவனங்களிடம் இருந்தும் அரசிடம் இருந்தும் சட்டபூர்வமாகவும் அரை-சட்டபூர்வமாகவும் அவர்களுக்கு இறைக்கப்படுகின்ற பில்லியன் கணக்கான யூரோக்கள் தான். அவை இனியும் தொழிலாளர் அமைப்புகளாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கத்தினால் நிதியாதாரம் அளிக்கப்பட்டு, போலிஸ் மற்றும் உளவு முகமைகளுடன் தொடர்புடைய குட்டி-முதலாளித்துவ நிர்வாகிகளால் ஊழியம் செய்யப்படும் வெற்றுக் கூடுகளாகும். இன்று அவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் செலுத்தப்படுகின்ற ஒரு தொழிற்துறை போலிஸ் படை போன்றே செயல்படுகின்றன.


 

For a Leninist vanguard party in the working class

தொழிலாள வர்க்கத்தில் ஒரு லெனினிச முன்னணிப்படை கட்சிக்காக

 

தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகரக் கட்சியால் தலைமை கொடுக்கப்படாத பட்சத்தில் புரட்சியானது வெற்றிபெற முடியாது என்பதையே இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த வரலாறும் எடுத்துக்காட்டுகின்றது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச முன்னணிப் படையின் கட்சியை கட்டியெழுப்புவதற்கு போலி-இடதுகளின் பிற்போக்குத்தனமான குட்டி-முதலாளித்துவ வட்டாரங்கள் காட்டுகின்ற ஆக்ரோசமான குரோதத்தின் கீழமைந்திருப்பது இதுவேயாகும். SEP தொழிலாள வர்க்கத்தின் பரந்த போராட்டத்தை ஊக்கப்படுத்துவதோடு ஒவ்வொரு உண்மையான வெற்றியையும் வரவேற்கிறது. ஆனால், தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு நன்கு உருவமைக்கப்பட்ட புரட்சிகர மூலோபாயத்தினைக் கொண்டு ஒரு மார்க்சிச கட்சி வழிநடத்துவதை, போர்க்குணமிக்க போராட்டங்களை ஒழுங்கமைப்பதைக் கொண்டு பிரதியீடு செய்துவிட எண்ணுவதான தூயதொழிற்சங்கவாத கருத்தாக்கங்களை, அது அடிப்படையாக எதிர்க்கிறது.

தொழிலாளர்களிடம் உண்மையைச் சொல்வது என்ற அத்தியாவசியமான புரட்சிகர சோசலிசக் கோட்பாட்டை SEP தாங்கி நிற்கிறது. அரசியல் நிதர்சனம் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வமான மற்றும் புறநிலையான மதிப்பீட்டின் மீது அது தனது வேலைத்திட்டத்திற்கும் மற்றும் அரசியல் வேலைக்குமான அடித்தளத்தை அமைத்துக் கொள்வதுடன் தனது மார்க்சிச முன்னோக்கினை தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் மிக முன்னேறிய அடுக்குகளுக்கு கொண்டுசெல்வதின் மூலமாக வெகுஜனங்களின் சோசலிச நனவை அபிவிருத்தி செய்யப் போராடுகிறது. வெகுஜனங்களது நனவில் நிலவும் மட்டத்தை —அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், குட்டி-முதலாளித்துவ பிலிஸ்தியர்கள் அவ்வாறாய் கற்பனை செய்யும் மட்டத்தை— மார்க்சிஸ்டுகள் தமது தொடக்கப் புள்ளியாக கொள்ள வேண்டும் என்பதான வஞ்சகமான கூற்றை அது நிராகரிக்கிறது. “புறநிலை சூழ்நிலையையும், அந்த சூழ்நிலையிலிருந்து பிறக்கின்ற வரலாற்றுக் கடமைகளையும் குறித்த ஒரு தெளிவான மற்றும் நேர்மையான சித்திரத்தை தொழிலாளர்களுக்கு, அவர்கள் இன்று அதற்கு பக்குவப்பட்டுள்ளார்களா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், வழங்குவதே கட்சியின் முதல் பொறுப்பாகும்” என ட்ரொட்ஸ்கி விளக்கியிருந்தார். நமது கடமைகள் தொழிலாளர்களின் மனப்போக்கை சார்ந்ததல்ல. தொழிலாளர்களின் மனப்பாங்கை அபிவிருத்தி செய்வதும் நமது கடமையே ஆகும். வேலைத்திட்டமானது அதனையே சூத்திரப்படுத்துவதாகவும் முன்னேறிய தொழிலாளர்களின் முன்னால் வழங்குவதாகவும் இருக்க வேண்டும்.

தொழிலாளர்களின் புரட்சிகரப் போராட்டத்திற்கு அமைப்பு அவசியம், அந்த அமைப்பு என்பது ஒரு கட்டுகோப்பு இல்லாமல் சாத்தியமற்றதாகும். ஆனபோதும் புரட்சிகர போராட்டத்திற்கு அவசியமான அந்த கட்டுகோப்பானது மேலிருந்து திணிக்கப்பட இயலாது, அது கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக வந்தடையப்படுகின்ற ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படுவதாக இருக்க வேண்டும். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட SEP இன் அமைப்புரீதியான கட்டமைப்பில் இது வெளிப்பாடு காண்கிறது. கோட்பாடு மற்றும் தந்திரோபாயங்களுக்கு உருக்கொடுப்பதில், கட்சிக்குள்ளாக முழுமையான ஜனநாயகம் நிலவியாக வேண்டும். கட்சியின் யாப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவை தவிர்த்த வேறெந்த கட்டுப்பாடுகளும் SEP இன் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த உள்முக விவாதத்தின் இருக்க முடியாது. தலைவர்கள் உறுப்பினர்களால் ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களாவர், அவர்கள் விமர்சனத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டவர்கள். ஆனாலும் கொள்கை உருவாக்கத்திற்கு பரந்த விவாதமும் வெளிப்படையான மற்றும் நேர்மையான விமர்சனமும் அவசியமாக இருக்கின்ற அதேநேரத்தில், அதனை அமல்படுத்துவதில் மிகக் கடுமையான கட்டுக்கோப்பு அவசியமாக இருக்கிறது. கட்சிக்குள்ளாக ஜனநாயகரீதியில் வந்தடையப்படுகின்ற முடிவுகள் அனைத்து உறுப்பினர்கள் மீதும் கட்டுப்பாடு செலுத்தத்தக்கதாகும். மத்தியத்துவத்தின் இந்த அடிப்படையான கூறுக்கு ஆட்சேபம் எழுப்புபவர்களும், அல்லது ஒழுங்கிற்கான கோரிக்கையை தமது தனிமனித சுதந்திரத்தின் மீதான அத்துமீறலாகக் காண்பவர்களும் புரட்சிகர சோசலிஸ்டுகள் அல்லர், மாறாக வர்க்கப் போராட்டத்தின் கோரிக்கைளையும் தாக்கங்களையும் புரிந்துகொள்ளாத அராஜகவாத தனிநபர்களேயாவர்.
 

Defense of Marxism

மார்க்சிசத்தை பாதுகாத்து


மார்க்சிசத்தின் வரலாற்று மற்றும் தத்துவார்த்த பாரம்பரியத்தை பாதுகாத்து நிற்பதானது SEP இன் மையமானதொரு கடமை ஆகும். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, பாரிஸ் கம்யூனின் 50வது ஆண்டுதினத்தை ஒட்டி ட்ரொட்ஸ்கி எழுதினார், “வேறெந்த பாட்டாளி வர்க்கத்தைக் காட்டிலும் அதிகமான தியாகங்களை பிரெஞ்சு பாட்டாளி வர்க்கம் புரட்சிக்காக செய்திருக்கிறது. ஆயினும், வேறெந்த பாட்டாளி வர்க்கத்தைக் காட்டிலும் அதுவே அதிகமாய் ஏமாற்றப்பட்டும் இருக்கிறது. அநேக சமயங்களில் முதலாளித்துவத்தின் தளைகளைக் கொண்டு அதனைக் கட்டிப்போடுகின்ற விதமாக குடியரசுவாதம், தீவிரமயவாதம் மற்றும் சோசலிசத்தின் அத்தனை வண்ணங்களையும் கொண்டு முதலாளித்துவம் அதனை மதிமயக்கியிருக்கிறது. முதலாளித்துவ வர்க்கமானது தனது முகவர்கள் மூலமாகவும், தனது வக்காலத்துவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலமும் கட்டவிழ்த்து விட்டிருக்கக் கூடிய ஒரு மிகப் பெரும் எண்ணிக்கையிலான ஜனநாயகவாத, நாடாளுமன்றவாத, மற்றும் தன்னாட்சிவாத சூத்திரங்கள் அனைத்துமே பாட்டாளி வர்க்கத்தின் முன்னேறிய நகர்வைத் தடுத்து அதன் கால்களை கட்டிப் போட்டிருக்கின்ற தடைகளே அன்றி வேறொன்றும் இல்லை.” கடந்த நூற்றாண்டின் போது, இந்த அரசியல் மற்றும் தத்துவார்த்த புதிர்ப்படுத்தல் வேலை இன்னும் மிகப் பரந்த அளவில் தொடர்ந்து நடந்தேறியிருக்கிறது என்பதையும் இதனுடன் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வரலாறு மற்றும் சமூகத்தின் புறநிலை விதிகள் மீதான ஒரு பகுப்பாய்வையே SEP தனது நடவடிக்கைகளுக்கான அடிப்படையாகக் கொள்கிறது. சடவாதத்தில் காலூன்றி, நனவிற்கும் மேல் பருப்பொருளின் பிரதானத்தின் மீது மார்க்சிசம் வலியுறுத்துகிறது. “கருத்து என்பது சடத்துவ உலகம் மனித மூளையில் பிரதிபலித்து சிந்தனை வடிவங்களாக ஆக்கம் பெறுகின்றதே அன்றி வேறொன்றுமில்லை” என்று மார்க்ஸ் எழுதினார். மார்க்சிசத்தின் சடவாதமானது, சடத்துவ உலகத்தையும் சிந்தனையிலான அதன் பிரதிபலிப்புகளையும் நிலையான, உள்முகரீதியாக வேறுபடுத்தப்படமுடியாத பொருட்கள் மற்றும் சிந்தனையாக்கங்களின் தொகுப்பாகக் காண்பதில்லை, மாறாக முரண்பாடான மற்றும் வெவ்வேறு விதமான போக்குகளுடன் தொடர்ச்சியாக நகர்ந்துகொண்டிருக்கும் ஒன்றுடன் ஒன்று இடையுறவிலிருக்கும் சிக்கலான நிகழ்முறைகளின் ஒரு பின்னலாகவே காண்கிறது. வர்க்க மோதல், முதலாளித்துவ சமூகத்திலுள்ள சுரண்டல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் ஆகியவை குறித்த ஒரு புறநிலையான புரிதலை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞான சோசலிசத்தை கார்ல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கெல்சும் அபிவிருத்தி செய்வதற்கான தத்துவார்த்த அடிப்படையை இந்தக் கருத்தாக்கமே வழங்கியது.

இருபதாம் நூற்றாண்டில் பிரான்சில் தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையிலானோருக்கு சோசலிச மனோநிலைகளே உயிரூட்டியிருந்தன என்றபோதிலும், மார்க்சிசத்திற்கு விசுவாசமாயிருப்பதாகக் கூறிக் கொண்ட நடுத்தர வர்க்கத்தின் புத்திஜீவி பிரிவுகளில் இந்தக் கருத்தாக்கங்கள் நிலவவேயில்லை. முதலாளித்துவ நெருக்கடி, ஏகாதிபத்தியப் போர், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களது நடப்பு சகாப்தத்தில், போலி-இடது கட்சிகளின் உருக்குலைவானது இந்த அனைத்து மார்க்சிச-விரோதத் தத்துவங்கள் மற்றும் இவற்றை முன்னுதாரணமாக்கிக் கொண்ட கட்சிகளது திவால்நிலையை நிரூபணம் செய்திருக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான தத்துவார்த்த அடிப்படையை வழங்கும் பொருட்டு செவ்வியல் மார்க்சிசத்தின் ஒரு மறுமலர்ச்சிக்காக SEP போராடுகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை, அதன் முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ எதிரிகளின் தாக்குதல்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்களுக்கு எதிராக, SEP பாதுகாத்து நிற்கிறது. பனிப்போர் கால கம்யூனிச-விரோத அல்லது ஸ்ராலினிச சித்தாந்தவாதிகளது வாரிசுகளிடமிருந்தோ, அல்லது “பல ட்ரொட்ஸ்கிசங்கள்” இருப்பதாக மோசடியாகக் கூறுவதன் மூலமாக தங்களது ட்ரொட்ஸ்கிச-விரோதக் கொள்கைகளை மூடிமறைக்க முயல்கின்ற போலி-இடது சக்திகளிடம் இருந்தோ வருகின்ற இத்தாக்குதல்கள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவின் அபிவிருத்தியை தடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தை —இது ICFI ஆல் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுகிறது— முதலாளித்துவத்திற்கான புரட்சிகர மாற்றீட்டுக்கான மார்க்சிச இயக்கத்தின் போராட்டத்தின் தொடர்ச்சி என்பதை அவை நிராகரிக்கின்றன.

****