தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Tamil nationalists conceal ongoing use of torture by Sri Lankan government இலங்கை அரசாங்கம் சித்திரவதையினை தொடர்வதை தமிழ் தேசியவாதிகள் மூடிமறைக்கின்றனர்By K. Nesan
Use this version to print| Send feedback தென்னாபிரிக்காவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனித உரிமைக் குழு அளித்திருக்கும் விரிவான அறிக்கை இலங்கையில் தமிழ் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக அரச பயங்கரம் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருவதை அம்பலப்படுத்துகிறது. இலங்கையில் இருக்கும் அமெரிக்க ஆதரவு ஆட்சியானது உள்நாட்டின் அரசியல் எதிர்ப்பாளர்களை சித்திரவதை செய்வதில் தொடர்ச்சியாய் ஈடுபட்டிருப்பதாக, தென்னாபிரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் “அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்டம் ஸ்ரீலங்கா” (ITJP) என்ற அமைப்பு புதிதாக வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. “2015 இல் சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாகி தப்பியவர்கள் மௌனிக்கப்பட்டவர்கள்” (Silenced: survivors of torture and sexual violence in 2015) என்ற தலைப்பிலான அதன் ஆவணம் தமிழ் இன சிறுபான்மையினருக்கு எதிராய் தொடர்ந்து அரச பயங்கரம் நிகழ்த்தப்பட்டு வந்திருப்பதை அம்பலப்படுத்துகிறது. “பரவலாகவும் திட்டமிட்டதாகவும்” இருப்பதாக ITJP குறிப்பிடுகின்ற சித்தரவதை மற்றும் ஒடுக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விரிவான விவரிப்புகள், ஒரு வருடத்திற்கு முன்பாக அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கையால் அமர்த்தப்பட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆட்சி, ஜனநாயகத்திற்காகவும் “நல்லாட்சி”க்காகவும் போராடி வருவதாகக் கூறுகின்ற கூற்றுகளை மறுதலிப்பதாக இருக்கின்றன. இலங்கையின் சிறிசேன ஆட்சிக்கு முக்கியமான முட்டுத்தூண்களாய் எழுந்திருக்கின்ற தமிழ் தேசியவாத குழுக்கள் இதில் உடந்தையாய் இருந்தது திடுக்கிடச் செய்யும் வகையில் அம்பலமாகியிருப்பதுதான் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சித்திரவதைக்கு உட்பட்டவர்களில் பலரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) ஆதரவாளர்களாய் இருந்துள்ளனர். இந்த கட்சிகள் தமது சொந்த உறுப்பினர்கள் உட்பட்ட இலங்கை ஆட்சியின் சித்திரவதை நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்திருந்தும் அவற்றை மூடி மறைப்பதற்கு தம்மால் இயன்ற அத்தனையையும் செய்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டிருந்த விவரத்தை, அவர்களது உறவினர்கள் தகவலளித்ததன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் அறிந்திருந்தனர் என்று பாதிக்கப்பட்டவர்களில் ஆறுபேர் தெரிவித்தனர். நான்கு சந்தர்ப்பங்களில், பெரும் பணயத்தொகைகள் கொடுத்து விடுவிக்கப்பட்டிருந்தவர்களை இவர்களே விமான நிலையத்திற்கு வாகனத்தில் அழைத்து வந்து அரசாங்கத்தினால் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதை மூடிமறைப்பதற்காக நாட்டிற்கு வெளியில் அனுப்பி வைத்தனர். சாட்சி 131 தெரிவித்தார்: “2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலின் போதும் அதற்கு முன்பும், 2015 ஆகஸ்ட் நாடாளுமன்ற தேர்தலின் போதும் நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உதவினேன். அவர்களுக்கு துண்டறிக்கைகள் விநியோகம் செய்து மக்களை அவர்களுக்கு வாக்களிக்க கூறினேன். பிரச்சாரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றேன். இதை பணம் பெற்றுக் கொள்ளாமல் ஒரு தொண்டனாக செய்தேன். XX என்ற தமிழ் அரசியல்வாதியுடன் (சாட்சியை பாதுகாக்கும் நோக்கங்களுக்காய் பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது) நான் வேலை செய்தேன். அவருக்கு என்னை தெரியும்.” 2015 ஜனவரியில் அமெரிக்க தலையீட்டின் “ஜனநாயகப் புரட்சி”யில் இருந்து உருவாகிய அரசாங்கத்தின் கொடிய குணத்தை அம்பலப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்டவர்களை பகிரங்கத்திற்கு கொண்டுவர தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் மறுத்து விட்டன. பாதுகாப்புப் பிரிவுகளில் இருந்த தமது தொடர்புகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை அவசர அவசரமாக நாட்டிற்கு வெளியே அனுப்பியதன் மூலம், மக்களைப் பயமுறுத்துவதற்கு சேவை செய்கின்ற சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறையில் தம்மையும் உடந்தையாக்கி கொண்டுள்ளன. இது, இலங்கையின் அனைத்து தேசியங்களது ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்தும், பரந்துபட்ட தொழிலாளர்களிடமிருந்தும் தமிழ் தேசியவாத கட்சிகளின் முதலாளித்துவ சக்திகளை பிரித்து நிற்கின்ற சமூகப் பிளவை எடுத்துக்காட்டுகிறது. இலங்கை அரசில் தமது அந்தஸ்துகளை நிலைப்படுத்தி கொள்வதற்கும் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் நடவடிக்கைகளுக்கு ஒட்டச் சுரண்டப்படுகின்ற தமிழ் தொழிலாளர்களை பணியமர்த்துகின்ற வணிக வாய்ப்புகளை பெறுவதற்கும் முனைகின்ற அவர்கள், வெகுஜனங்களை கண்டு மிரட்சியடைகின்றனர். ஆகவே அவர்கள் கொழும்பில் இருக்கும் ஆட்சியின் பக்கம் தங்களை நிறுத்திக் கொண்டு வெகுஜனங்களுக்கு எதிரான அதன் அட்டூழியங்களை மூடிமறைக்கின்றனர். 2015 ஜனவரியில் சிறிசேன ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர் நாட்டை விட்டு வெளியேறி மூன்று வெவ்வேறு நாடுகளில் வசித்து வருகின்ற 15 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் சட்டவிரோத சிறைக்காவல், பாதுகாப்பு படையினரது தொடர்ச்சியான சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்த விரிவான விபரங்களை அளித்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பதினைந்து பேர் சென்ற ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் கடத்தப்பட்டவர்களாவர், ஐந்து பேர் ஆகஸ்டில் பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் கடத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் முந்தைய ஆட்சியின் ஒரு வழக்கமான முறையான வெள்ளை வான் மூலமாக கொண்டு செல்லப்பட்டிருந்தார். சாட்சியங்களில் இருந்து, இவர்களில் சிலர், இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின் போது தமிழ் தேசியவாத விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கட்டாயமாக சேர்க்கப்பட்ட, சரணடைய தவறிய, சிறுவர் போராளிகள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களில் சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களில் நான்கு பேர் 2013 இல் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணத்திற்கு வந்த சமயத்தில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தியதொரு ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றிருந்தனர். அடித்து உதைத்தல், சாட்டையடி, சிகரட்டால் சுடுவது, இரும்புக் கம்பிகளால் சூடு வைப்பது, நீரிலான சித்திரவதை, பெட்ரோல் அல்லது மிளகாயில் ஊறிய பிளாஸ்டிக் பையை கழுத்தில் கட்டி மூச்சு திணறல், தலைகீழாகத் தொங்க விடுதல், பாதங்களில் அடித்தல் மற்றும் உடல் வழியாக மின்சாரம் பாய்ச்சல் உள்ளிட்ட சித்திரவதைகள் தங்களுக்கு எதிராய் பயன்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். பலரும் சிறையில் பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆவணத்தில் வெளியிடப்பட்டிருக்க கூடிய சாட்சிகள் கூறியதன் பல விடயங்கள் இலங்கை அரசினால் பயன்படுத்தப்படுகின்ற நெஞ்சை உறைய வைக்கின்ற சித்தரவதை முறைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. சாட்சி 158 கூறுகிறார், “எனக்கு இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. நான் சிறையில் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை மட்டுமே மனைவியிடம் கூறினேன், வன்புணரப்பட்டதை சொல்லவில்லை. இவை எல்லாம் மனைவியிடம் சொல்லக் கூடிய விடயம் அல்ல. இலங்கை சிறையில் நான் அனுபவித்த சித்திரவதையின் விளைவாகவும் எனது மனைவி குழந்தைகள் எனது தாயகம் மற்றும் வாழ்க்கை முறையில் இருந்து பிரிந்திருக்கும் சோகத்தின் விளைவாகவும் மன நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறேன்.” 2013 இல் உருவாக்கப்பட்ட ITJP, தென்னாபிரிக்க மனித உரிமை அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உறுதி செய்யப்பட்ட சாட்சிகளது ஒரு பெரும் தொகுப்பு தன்னிடம் இருப்பதாகக் கூறும் இது, “இலங்கையில் போர்க் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் போருக்குப் பிந்தைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் நீதி கிடைக்கச் செய்வதே” தனது இலட்சியம் என்று அறிவிக்கிறது. இதன் உறுப்பினர்களில் பலரும் தங்களை அடையாளப்படுத்தி கொள்ளவில்லை. பலரும் முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளில் வேலைசெய்த சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் ஆவர். “போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது”தான் ITJP அறிவித்திருக்கும் இலட்சியமாய் இருந்தாலும், அது முன்வைக்கின்ற பரிந்துரைகள் சிறிசேன அரசாங்கத்திற்கான அரசியல் மூடிமறைப்பை வழங்குவதற்கு ஆலோசனை சொல்வதாக இருக்கிறது, அரசாங்கம் தனது சொந்த பாதுகாப்பு சேவைகள் மற்றும் நீதி முறையை சீர்திருத்துவதற்கு அழைப்பு விடுகிறது.“இறுதியில், இந்த கொடிய குற்றங்களை இழைத்தவர்களை அடையாளம் காண்பதற்கும், விசாரணை செய்வதற்கும் மற்றும் தண்டிப்பதற்குமான பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடமே இருக்கிறது” என்று அதன் ஆவணம் கூறுகிறது. உண்மையில், ஒரு வருடத்திற்கு முன்னால் அதிகாரத்திற்கு வந்திருந்த சிறிசேன அரசாங்கம், ஜனநாயகத்தை கொண்டுவருவதற்கான அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முற்றிலுமாய் தோல்விகண்டிருந்தது என்பதை ITJPயின் அறிக்கையே தெளிவாக்கி விடுகிறது. தொழிலாள வர்க்கத்தையும் பரந்த வெகுஜனங்களையும் பயமுறுத்தி வைப்பதற்கு இராணுவம், போலிஸ் மற்றும் துணைஇராணுவப் பிரிவுகளை தாட்சண்யமற்றுப் பயன்படுத்துவதன் மீது அரசு தங்கியிருக்கும் நிலையில், அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீறல்கள் அங்கு தொடர்ந்து வருகின்றன. இலங்கையின் முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகத்தைக் கொண்டுவருவதில் தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்ள முடியாது. அதன் அத்தனை அரசியல் பிரதிநிதிகளுமே சித்திரவதை மற்றும் மக்களுக்கு எதிரான பிற குற்றங்களில் சம்பந்தமுடையவர்கள் ஆவர். சிறிசேன அரசாங்கத்தின் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகளின் அநேக தலைவர்கள் 30 ஆண்டுகால இலங்கை உள்நாட்டுப் போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நேரடிப் பொறுப்பாளிகளாக இருக்கின்றனர். சிறிசேனாவும் கூட, தப்பி ஓடிய ஆயிரக்கணக்கிலான அப்பாவி மக்களை இராணுவம் படுகொலை செய்த போரின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக செயல்பட்டவரே ஆவார். சென்ற ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தது, “சிறுபான்மையினர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் விடயத்தில் இராஜபக்ஷவை [முந்தைய ஜனாதிபதி] விடவும் சிறிசேன ஈவிரக்கமற்றவராக இருப்பார்.” என்று. பிபிசி தொடர்புகொண்டபோது, மந்திரி சபை செய்தித்தொடர்பாளரான ரஜித சேனரத்ன ITJP ஆவணத்தில் இடம்பெற்றுள்ள சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். “அவர்களிடம் ஆதாரம் இருந்தால் எங்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள். நாங்கள் அதை விசாரிக்கிறோம்” என்றார். |
|
|