Print Version|Feedback
New TamilNet slanders against WSWS: an admission of political bankruptcy
உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிராக தமிழ்நெட்டின் புதிய அவதூறுகள்: அரசியல் திவால்நிலைமைக்கு ஓர் ஒப்புதல்
By K. Nesan and V. Gnana
3 June 2016
உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இனப்படுகொலையையும் ஏகாதிபத்தியத்தையும் ஆதரிக்கிறது என்ற அதன் அவதூறுகளை தமிழ்நெட் இணைய பத்திரிகை திரும்ப பெற வேண்டுமெனக் கோரி, பெப்ரவரி 17 இல் உலக சோசலிச வலைத் தளம், தமிழ்நெட் க்கு அனுப்பிய பகிரங்க கடிதத்திற்கு, அந்த தமிழ் தேசியவாத வலைத் தளத்தின் விடையிறுப்பு அரசியல் திவால்நிலைமைக்கு ஓர் ஒப்புதலளிப்பதாக உள்ளது.
“அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சமூக ஏகாதிபத்தியத்திற்கு 'இலங்கை' பலிக்கடா" என்று தலைப்பிட்ட தமிழ்நெட் இன் பதிலுரை, உலக சோசலிச வலைத் தளம் அதன் பகிரங்க கடிதத்தில் குறிப்பிட்ட எந்த புள்ளியையும் எதிர்க்கவில்லை. அது உலக சோசலிச வலைத் தளத்திற்கு எதிரான அதன் முந்தைய அவதூறுகளை நியாயப்படுத்துவதற்கோ அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் "ஆசிய முன்னிலைக்கும்" மற்றும் கடந்த ஆண்டு இலங்கையில் ஒரு மக்கள்விரோத, அமெரிக்க ஆதரவிலான ஆட்சியை நிறுவுவதில் தமிழ்நெட் ஒரு தமிழ் தேசியவாத ஊதுகுழலாக இருந்தது என்ற உலக சோசலிச வலைத் தளத்தின் குற்றச்சாட்டை மறுப்பதற்கோ அது எந்த முயற்சியும் செய்யவில்லை, செய்யவும் முடியாது.
அதற்கு மாறாக, "தமிழ் தேசிவாத கட்சிகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளுக்குள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன என்பதையும் மற்றும் இந்திய அரசு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவுடன் இலங்கையில் செல்வாக்கை வென்றெடுக்க முயல்கிறது என்பதையும் தமிழ்நெட் ஒப்புக் கொள்கிறது. “தமிழர் தலைமையின் முந்தைய 'முறையீடுகள் பிரயோசனமின்றி' செவிடன் காதுகளில் ஊதிய சங்காக ஆன பின்னரும், தமிழர் தலைமை அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு முறையிடுவதற்கே முயல்கின்றது. தமிழர் அரசியல் வட்டாரத்தின் இந்த பிரிவு இன்னமும் ஓர் உலகளாவிய போராட்டத்தின் அடிப்படையிலான அரசியல் வட்டமாக ஆவதற்கு இலாயகின்றி இருப்பதால், இந்த தாக்குதலுக்கு அது தகுதியுடையதே,” என்றது எழுதுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) சிறிசேன ஆட்சியையும் அமெரிக்க வெளியுறவு கொள்கையையும் அரவணைத்திருப்பதில் இருந்து தமிழ்நெட் தன்னை அந்நியப்படுத்தி காட்டுவதற்கான முயற்சியில், அதன் மோசமான நம்பிக்கையே நாற்றமெடுகின்றது. தங்களுக்குச் சார்பாக இலங்கையில் தலையீடு செய்யுமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறையிட்ட தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் முறையீடுகளை, தமிழ்நெட் உட்பட, தமிழ் தேசியவாத ஸ்தாபகத்தின் சகல கன்னைகளும் ஊக்குவித்தன. வாஷிங்டனை முக்கிய பாத்திரம் வகிக்குமாறு அழுத்தமளித்து தமிழ்நெட் பல கட்டுரைகள் எழுதியுள்ளது.
இத்தகைய கட்டுரைகள் ஒன்றான “ஸ்டீபன் ராப் சர்வதேச விசாரணைகள் மீதான கேள்விகளை மழுப்புகிறார்" என்பதில், தமிழ்நெட், இலங்கை அரசியலில் ஒரு பலமான தலையீடு கோரி குற்றவியல்சார் உலகளாவிய நீதி பரிபாலனைகளுக்கான (Global Criminal Justice) அமெரிக்க தூதர் ஸ்டீபன் ராப்பிடம் கெஞ்சியது. “சர்வதேச விசாரணைகளுக்கான அழைப்பின் மீது ஒரு முறையான விடையிறுப்பை மழுப்புவதற்காக" ராப் ஐ விமர்சித்ததுடன், இலங்கையில் ஒரு புதிய ஆட்சிக்கான ஒரு முன்நகலை வாஷிங்டன் தயாரிக்க வேண்டுமென்ற தமிழ் தேசியவாதிகளின் முறையீடுகளை, அது அங்கீகரிக்கும் வகையில் மேற்கோளிட்டது. “அந்த தீர்மானத்தில் ஓர் அரசியல் தீர்வின் கட்டமைப்பை முன்மொழியுமாறு, விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதரிடம் உள்நாட்டு சமூக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்,” என்று அது எழுதியது.
உலக சோசலிச வலைத் தளம் இலங்கை அரசை ஆதரிப்பதாக தமிழ்நெட் தாக்கியதுடன், மிகவும் அடித்தளமற்ற அவதூறுகளுடன் அதன் முந்தைய ஏகாதிபத்திய-சார்பு நடவடிக்கைகளை மூடிமறைக்க முயல்கிறது. அது எழுதுகிறது, “எவ்வாறிருப்பினும் ஏகாதிபத்தியவாதிகளாலேயே உருவாக்கப்பட்டு முட்டுக்கொடுக்கப்பட்டு வருகின்ற 'இலங்கை' என்றழைக்கப்படுவதால் கட்டுப்பட்டுள்ள 'உலக சோசலிஸ்டுகள்', உலக தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய போராட்டத்தில் இந்த 'இலங்கை' என்பது மட்டும் ஏன் ஒரு தனி அலகாக இருக்க வேண்டும் என்ற மிகவும் முக்கிய கேள்விக்கு பதிலளிப்பதில்லை என்று மாற்று அரசியலுக்கான தமிழ் செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.”
உலக சோசலிச வலைத் தளம் இலங்கை அரசை ஆதரிக்க “கட்டுப்பட்டுள்ளது” என்று “மாற்று அரசியலுக்கான தமிழ் நடவடிக்கையாளர்கள்" என்று மர்மமான முறையில் பெயரிடப்பட்டவர்களது குற்றச்சாட்டானது, உலக சோசலிச வலைத் தளம் ஏகாதிபத்தியத்தை மற்றும் இனப்படுகொலையை ஆதரிக்கிறது என்ற தமிழ்நெட் இன் முந்தைய வாதங்களை விட பொய் மற்றும் அவதூறில் குறைந்ததில்லை.
1947 இல், இந்திய தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர எழுச்சியை, இந்திய பிரிவினை மூலமாக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆதரவுடன் கருக்கலைப்பு செய்ததற்குப் பின்னர், இந்திய துணைக்கண்டத்தில் உருவான பிற்போக்குத்தனமான இந்த அரசு அமைப்புமுறையை, உலக சோசலிச வலைத் தளம் அல்ல, தமிழ்நெட் தான் ஏற்றுக் கொள்கிறது. வடக்கு இலங்கையில் ஒரு சிறிய தனித்தமிழர் நாட்டை பெறுவதற்காக, தமிழ்நெட் தான் இந்த கட்டமைப்பிற்குள் வேலை செய்ய விரும்புகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தை பிரசுரிக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் அதன் இலங்கை பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) இன் முன் வரலாறு நன்கறியப்பட்டதாகும். அது 1947 க்குப் பிந்தைய அமைப்புமுறையையோ அல்லது ஒற்றையாட்சி முறையையோ (unitary state) ஒருபோதும் ஆதரித்ததில்லை. 1947 இல் இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான கூட்டுழைப்பில் உருவான சம்பிரதாயபூர்வ சுதந்திர முதலாளித்துவ அரசுகளை அது புரட்சிகரமாக தூக்கியெறிய போராடுவதுடன், ஐக்கிய சோசலிச தெற்காசிய அரசுகளின் பாகமாக ஐக்கிய சோசலிச ஸ்ரீலங்கா-ஈழம் அரசுகளுக்கான போராட்டத்திற்கு அறிவுறுத்தி வருகிறது.
1947-1948 இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் முடிவில் இந்திய பிரிவினையிலிருந்து உருவான முதலாளித்துவ அரசு அமைப்புமுறைக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு, இலங்கை அரசை இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக வரையறுத்து சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அதனை சளைக்காது எதிர்த்துள்ளது என்பதை தமிழ்நெட் அதுவே கூட முந்தைய கட்டுரைகளில் ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கை அரசு கொள்கையை எவ்வாறு விமர்சிப்பது என்பதில் தமிழ்நெட் நிச்சயமற்று இருந்தபோது, அது சிலவேளைகளில் உலக சோசலிச வலைத் தளத்தின் வாதங்களை நோக்கியதுடன், அவற்றை அதிகளவில் மேற்கோளிடவும் செய்தது —இப்போது அதையே அது இலங்கை அரசுக்கு ஆதரவளிப்பதாக அவதூறு கூறுகிறது.
இவ்விதத்தில் 2012 இல், இலங்கை உள்நாட்டு போரின் முடிவில் தமிழர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் பாரிய படுகொலை குறித்த ஒரு விசாரணைக்கான முறையீடுகள் அதிகரித்தபோது, கற்றுக்கொண்ட பாடங்களுக்கான மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு (LLRC) என்பதை உருவாக்கி அரசே விசாரணையை நடத்தும் என்ற இராஜபக்ஷ இன் எரிச்சலூட்டும் முன்மொழிவால், தமிழ்நெட் விருப்பமின்றி ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. இது சர்வதேச விசாரணைக்கான தமிழ் தேசியவாதிகளின் கோரிக்கைகளைக் குறுக்காக வெட்டியது. இலங்கை அதிகாரிகள், இத்தகைய சர்வதேச விசாரணையை, இராஜபக்ஷவை மதிப்பிழக்கச் செய்ய முயலும் அமெரிக்க ஆட்சி-மாற்ற நடவடிக்கையாக குற்றஞ்சாட்டினர். இலங்கை அரசின் LLRC முன்மொழிவை விமர்சிப்பதற்கான ஒரு அரசியல் அடித்தளத்தைக் காண, தமிழ்நெட், உலக சோசலிச வலைத் தளத்தின் வாதங்களை நோக்கி திரும்பியது.
அது எழுதியது, “சோசலிசம் மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு என்ற போர்வையில் [ஐநா சபைக்கான இலங்கை தூதர்] தமாரா [குணநாயகம்] இனப்படுகொலையின் குற்றத்திற்கு ஆளான ஏஜண்டு அரசைப் பாதுகாக்க என்ன எழுதினாரோ அதற்கு முரண்பட்ட வகையில், சரத் குமாரா எழுதி உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரை, கொழும்பை மையப்படுத்திய அரசு மற்றும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் LLRC கேலிக்கூத்தை மிகச் சரியாக அம்பலப்படுத்துகிறது. … 'தொழிலாளர்களது மற்றும் விவசாயிகளது அரசாங்கம் மற்றும் சோசலிஸ்ட் கொள்கைகளுக்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில், தொழிலாள வர்க்கம் மட்டுமே, மிக அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும் மற்றும் இத்தகைய கொடூர போர் குற்றங்களைத் தண்டிக்க முடியும்,' என்று சரத் குமாரா முடிக்கிறார்,” என்றது குறிப்பிட்டது.
அதற்கு பின்னர் சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாடோ அல்லது உலக சோசலிச வலைத் தளத்தின் நிலைப்பாடோ மாறவில்லை. மாறாக சீனாவைத் தனிமைப்படுத்தி அதற்கு எதிரான போருக்கு தயாரிப்பு செய்வதற்கான அமெரிக்காவின் "ஆசிய முன்னிலையின்" பாகமாக, இராஜபக்ஷைவை பதவியிலிருந்து கவிழ்த்து சிறிசேனவை ஆட்சியில் நிறுவிய, இலங்கையில் ஆட்சி மாற்றத்தை நடைமுறைப்படுத்திய அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைக்குள் தமிழ் தேசியவாதிகள் தான் இழுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கையின் பிரதான தமிழ் தேசியவாத கட்சியான TNA நிபந்தனையின்றி ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரித்ததுடன், இப்போது அது அத்தீவின் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளைத் தாக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரும் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் அரசாங்கத்திற்கு உடந்தையாய் உள்ளது. புதிய அரசாங்கம் நாட்டை மீள்கட்டுமானம் செய்யும் என்றும், வேலைகள் மற்றும் "நல்லாட்சியை" வழங்கும், தமிழர்களுக்கு முழு ஜனநாயக உரிமைகளை வழங்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டணி போர் பாதித்த பகுதிகளில் பிரமைகளைப் பரப்பியது. ஆனால் உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் சமூக நிலைமை வெறுமனே மோசமடைந்து மட்டுமே உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு "ஜனநாயக மறுமலர்ச்சியாக" புகழும் இந்த புதிய அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்துள்ளதுடன் ஜனவரி 2015 இல் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து இழிவார்ந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 21 தமிழர்களைக் கைது செய்துள்ளது. நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் உட்பட இப்போது TNA அதிகாரிகள் உயர்மட்ட அரசு பதவிகளில் அமர்ந்திருந்தாலும், சிறிசேன ஆட்சிக்கு எதிராக அதிகரித்துவரும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பானது, இலங்கை, இந்தியா மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள தமிழ் தேசியவாதத்தை மற்றும் தமிழ் தேசியவாத கூட்டணியையும் மதிப்பிழக்க செய்யுமென தமிழ்நெட் அஞ்சுகிறது. தொழிலாளர்களிடையே அதிகரித்துவரும் புரட்சிகர மனோபாவம் குறித்த அச்சம் தான் தமிழ்நெட் ஐ உலக சோசலிச வலைத் தளத்தைக் கண்டிக்க உந்துகிறது.
ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தின் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழியும் சர்வதேச புரட்சிகர மூலோபாயத்தை தமிழ்நெட் வன்மையாக குறைகூறுகிறது. அது எழுதுகிறது, “குறிப்பாக சீனாவின் ஆக்ரோஷமான பெருநிறுவன மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மூடிமறைப்பதில் பகுதியாகவும், ஈழத் தமிழர் இனப்படுகொலையில் அது போட்டிப்போட்டு வகித்த பாத்திரத்தை மூடிமறைக்கவும், அத்தீவில் உள்ள உலக சோசலிஸ்டுகள் மொத்தத்தில் 'இலங்கையில்' இருந்து தொடங்கி இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி தெற்காசியாவை ஒருங்கிணைக்கும் ஒரு திடீர் தந்திரத்துடன் இப்போது வந்திருக்கின்றனர்.”
சீன வெளியுறவு கொள்கையின் குற்றங்களை சோசலிச சமத்துவக் கட்சி உதறிவிடுகிறது என்ற இந்த வாதம், அதன் சொந்த கட்டுரைகளிலேயே மறுக்கப்பட்ட தமிழ்நெட் இன் மற்றொரு அவதூறாகும். வடக்கு இலங்கையில் தமிழ் பிரிவினைவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பாரிய படுகொலையை நடத்துவதன் மூலமாக உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 2009 இல் கொழும்பு ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டியதற்காக, சீனா உள்ளடங்கலாக சகல பிரதான சக்திகளையும் சோசலிச சமத்துவக் கட்சி விமர்சித்தது.
ஜூலை 1, 2013 இல், கே. ரட்நாயக்க எழுதிய உலக சோசலிச வலைத் தள கட்டுரையிலிருந்து மேற்கோளிட்டு தமிழ்நெட் எழுதுகையில், “'சகல பிரதான உலகளாவிய மற்றும் பிராந்திய சக்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட வகுப்புவாத போரை ஆதரித்தன, இராணுவ உதவிகளை வழங்கின மற்றும் படைத்துறைசாரா அப்பாவி மக்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களைக் குறித்து மவுனமாக இருந்தன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளும் வெறுமனே போரின் இறுதி மாதங்களில் தான், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைக் குறித்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட கவலைகளை வெளிப்படுத்த தொடங்கினர், அதுவும் தமிழர்கள் மீதான அக்கறையில் அல்ல, மாறாக சீனாவிடம் இருந்து அரசாங்கம் தன்னைத்தானே தூர விலக்கி கொள்வதை நிர்பந்திப்பதற்காக,'” என்று இந்த ஆசிரியர் போதுமான சாராம்சம் இல்லாமல் எழுதுகிறார்,” என்று குறிப்பிட்டது.
சீன அரசு மற்றும் இலங்கையில் பெருநிறுவன செல்வாக்கு குறித்த தமிழ்நெட் இன் விமர்சனங்கள் முற்றிலும் பிற்போக்குத்தனமானவை. அவை, உலக அரசியலில் மிக ஆதிக்க சக்திகளாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளான ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான அவர்களது அணிசேர்க்கையை மறைத்து, தமிழ் தேசியவாதிகளின் ஏகாதிபத்திய-சார்பு கொள்கைக்கு ஒரு மெல்லிய "இடது" திரையை வழங்க மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளன.
தமிழ்நெட் நிலைநோக்கு ஏகாதிபத்திய-சார்பானது என்பதுடன், அது இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களை ஐக்கியப்படுத்தும் போராட்டத்திற்கு வன்மையான விரோதமாக உள்ளது. இந்த அடிப்படையில், அவர்கள் இலங்கை அரசைப் பாதுகாக்கிறார்கள் என்பதோடு, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக இரத்தந்தோய்ந்த குற்றங்களுக்கு ஒப்புதல் வழங்க தயாராகவும் இருக்கிறார்கள். சிங்கள இனத்தவர் மீதான கொழும்பு ஆட்சியினரால் திரும்பதிரும்ப செய்யப்பட்ட பாரிய படுகொலைகளை பற்றி அவர்கள் அச்சமூட்டும் அலட்சியம் முக்கியமாக குறிப்பிடத்தக்கதாகும்.
உலக சோசலிச வலைத் தளத்தின் பகிரங்க கடிதம் எழுப்பிய புள்ளிகளுக்கு தமிழ்நெட் பதிலளிக்கும் ஒரு பந்தியில், அது, சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய எழுச்சிகள் மற்றும் வேலைநிறுத்தங்களை இலங்கை அரசு ஒடுக்குவதற்கு உதவிய தமிழ் தேசியவாதிகளின் முற்றிலும் பிற்போக்குத்தனமான கொள்கையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறது. தமிழ்நெட் எழுதுகிறது, “அத்தீவில் உள்ள உலக சோசலிஸ்டுகள் 1971 மற்றும் 1989 இல் 160,000 JVP சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் குறித்து பேசுகிறார்கள். JVP ஒருபோதும் தமிழர்களுக்காக முன்வரவில்லை, துரதிருஷ்டவசமாக தமிழர்களும் மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்,” என்றது.
இதுவொரு அரசியல் பொய்யாகும். சிங்கள இளைஞர்களின் பாரிய படுகொலையின் போது தமிழ் மக்களிடையே பாரிய அதிர்ச்சியும், கோபமும் இருந்தது. அவர்களில் சிலர் தமிழர் வாழும் பகுதிகளில் பாதுகாப்பு தேடி வந்திருந்தனர். ஆனால் தமிழ் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் மக்களும் அந்த படுகொலையைத் தடுக்க தலையீடு செய்யாதது, ஏனென்றால் தமிழ் தேசியவாதிகள் அத்தீவு எங்கிலும் தொழிலாளர்களின் ஒரு பொதுவான புரட்சிகர போராட்டத்தை தடுக்க இனரீதியில் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி வைத்திருந்தனர். விடுதலை புலிகள், இதிலிருந்து தான் தமிழ்நெட் உருவானது, இவர்கள் வடக்கு இலங்கையில் இருந்து சிங்கள மற்றும் முஸ்லீம்களை வெளியேற்றி, அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இனரீதியில் சுத்திகரித்திருந்தனர்.
ஒரு பிற்போக்குத்தனமான தொழில்பங்கீடு உருவாகியது. அதில் அத்தீவில் அடுத்தடுத்து எழுந்த பாரிய எழுச்சிகளை நசுக்க இந்திய, இலங்கை அரசுடன் தமிழ் தேசியவாதிகள் கூடி செயல்பட்டனர்.
இந்திய இராணுவத்தை அனுப்பிய 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் விடுதலை புலிகளையும் மற்றும் ஏனைய ஆயுதமேந்திய குழுக்களையும் நிராயுதபாணியாக்கும் நிபந்தனைகள் குறிப்பிட்டிருந்த போதினும், தமிழீழ விடுதலை புலிகள் கையெழுத்திட்டனர். தொடக்கத்தில் விடுதலை புலிகள் இந்திய இராணுவத்தின் தலையீட்டிற்கு ஒத்துழைத்தனர், ஆனால் பின்னர் அது இந்திய படைகளுக்கு எதிராக இலங்கை அரசை ஒரு கூட்டாளியாக ஏற்க முயன்றது. 1989 இல், விடுதலை புலிகள், அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு, இந்தியர்களுக்கு எதிராக போராட ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைப் பெற்றனர், அதேவேளையில் பிரேமதாசா தெற்கில் கிளர்ச்சிகளை நசுக்க இலங்கை இராணுவத்தை பயன்படுத்தினார்.
இலங்கையின் ஆளும் கட்சிகளும் மற்றும் தொடர்புபட்ட அமைப்புகளும் தான் அந்த படுகொலைகளுக்கு பிரதானமாக பொறுப்பாகின்றன. 1989 இல் பாராளுமன்றவாத தமிழ்-தேசியவாத கட்சிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் “மவுனமான” ஆதரவு கிடைக்காது இருந்திருந்தால், அந்த படுகொலைகளே சாத்தியமில்லாமல் போயிருக்கலாம். இத்தகைய கடுந்தாக்குதல்களுக்கு தமிழ்நெட் முற்றிலுமாக அலட்சியமாக இருப்பதானது, அது ஏகாதிபத்தியத்தின் மற்றும் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் இரத்தந்தோய்ந்த இன்றைய குற்றங்களுக்கு ஒப்புதல் வழங்க தயாரிப்பு செய்து வருகிறது என்பதையே காட்டுகிறது.