Print Version|Feedback
இலங்கையின் வடக்கில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களுக்குள் நுழைந்தால் சுடுவதாக காணி உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல்
By our correspondent
21 February 2017
இலங்கையின் வடக்கில் விமானப்படை ஆக்கிரமித்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கோரி போராட்டம் நடத்தும் மக்கள், “தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவார்கள்” என விமானப்படை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இந்த அச்சுறுத்தல் பலகை தமிழ் ஊடகங்களில் வெளியிடப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளானதை அடுத்து, விமானப்படை திடீரென அந்தப் பலகையை “விமானப்படை முகாம் உட்செல்லத் தடை” என மாற்றியமைத்துள்ளது.
கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் ஒரு பகுதியினர்
இது மூன்று வார காலமாக தங்கள் காணிகளை விடுவிக்கக் கோரி இராணுவ முகாம்களுக்கு முன்னால் இடைவிடாமல் நில உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தை அச்சுறுத்தி நிறுத்துவதற்கான முயற்சியாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு பிரதேசத்தின் பிலக்குடியிருப்பு கிராம மக்கள் கடந்த ஜனவரி 31ம் திகதியிலிருந்து, முகாமுக்கு முன்னால் கூடாரங்களை அமைத்து இரவு பகலாகவும் வெய்யில் மழையிலும், பிள்ளைகளும் முதியோருமாக தங்கியிருந்து போராட்டத்தை தொடர்கின்ற அதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒரு குழுவினர் பெப்பிரவரி 2ம் திகதியில் இருந்து இதே போன்று போராட்டத்தை தொடங்கி இப்போது சுழற்சி முறை உண்ணாவிரதமாக மாற்றியுள்ளனர். இதேவேளை கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலும் தமது காணிகளை விடுவிக்கக்கோரி இராணுவத்துக்கு எதிராக ஒரு குழுவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் ஒரு பகுதியினர்
கேப்பாப்புலவு பிரதேசத்தில் 500 ஏக்கருக்கும் அதிகமான பொது மக்களின் காணிகள் விமானப் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிலக்குடியிருப்பு கிராமத்தில் மட்டும் 84 குடும்பங்களுக்கு சொந்தமான 42 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மத்தியில் 46 குடும்பங்களுக்கான 19 ஏக்கர் காணிகள் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் பொது மக்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இலங்கை பாதுகாப்புப் படை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. அரசாங்கம் இந்த படை முகாம்களை மேலும் மேலும் ஸ்திரப்படுத்துகிறது. சிங்கள மக்களைக் குடியேற்றி, பௌத்த விகாரைகளை அமைத்து தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்களை சிங்களமயமாக்குவதற்கான நடவடிக்கைகளும் இராணுவத்தைக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன.
பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் பொது அமைப்புக்களும் மறியல் போராட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தியுள்ளன. வட மாகாணம் பூராவும் ஆதரவு போராட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வளர்ச்சிகண்டு வரும் வெகுஜன எதிர்ப்பை தணிப்பதற்காகவும் போராட்டக்காரர்களை திருப்பி அனுப்புவதற்குமான அவநம்பிக்கையான முயற்சியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது. கேப்பாப்புலவு மக்கள் அதில் பங்குபற்ற மறுத்துவிட்ட அதேவேளை, அங்கு சென்ற புதுக்குடியிருப்பு மக்கள் பிரதிநிதிகளிடம் “கவனத்தில் எடுக்கப்படும்” என்று மட்டுமே கூறப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கடந்த 14ம் திகதி, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அறிவித்தார். அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்ன காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதேவேளை, “இரவு பகலாக போராட்டம் நடத்துகின்றனர் என்பதற்காக ஒரே இரவில் காணிகளை மீழ வளங்கிவிட முடியாது,” என்றார். இந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்காத போராட்டக்காரர்கள் காணிகளுக்குள் கால் வைத்த பின்னரே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்துவிட்டனர்.
“இந்த காணிகள் வனவளத் திணைக்களத்துக்கு சொந்தமானது,” என இராணுவம் அறிவித்துள்ளதோடு, போராட்டம் நடத்துபவர்களையும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் அச்சுறுத்தும் விதமாக இராணுவ முகாம்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களையும் அங்கு சென்றுவரும் மக்களையும் இராணுவம் மறைமுகமாக கண்காணிப்பதோடு புகைப்படங்களும் எடுத்துவருகின்றது. அதேபோல், விமானப்படை அப்பிரதேசத்தில் தொடர்ந்தும் அமர்ந்துகொள்வதற்கு திட்டமிட்டுள்ளதை அரசாங்க அதிகாரிகளின் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.
“விமானப் படையினரால் பயன்படுத்தப்படும் ஒருபகுதி காணி விடுவிக்கப்படமாட்டாது” என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ள அதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதீபன், “புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் ஏறகனவே இராணுவத் தேவைக்காக சுவீகரிக்கப்படிருப்பதாக” கூறினார். வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்பை விரிவாக்கி செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாலேயே, படையினர் கைப்பற்றியுள்ள நிலங்களை திருப்பித்தர அவர்கள் தயாரில்லை.
வடக்கு மற்றும் கிழக்கில் தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அரசாங்கம் மற்றும் அதற்கு முண்டு கொடுக்கும் தமிழ் முதலாளித்துவ தலைவர்கள் சம்பந்தமாக வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பு, தென் பிரதேசங்களில் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் கிளர்ச்சி நிலைமைகளுடன் சமாந்தரமானதாக உள்ளது. கொழும்பு அரசாங்கம் மீண்டும் அவசரகால சட்டத்தை திணிப்பதைப் பற்றி யோசிக்கும் அதேவேளை, புதிய ஒடுக்குமுறைச் சட்டங்களையும் தயாரித்து வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்தாயிரக்கணக்கான மக்களின் படுகொலையுடன் போர் முடிவுக்கு வந்தபோது, தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்த சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள், இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு வவுனியாவில் படையினரால் நடத்தப்பட்ட இழிநிலையிலான “நலன்புரி” முகாம்களில் சுமார் இரண்டு ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த அகதிகளை இராணுவம் 2012ல் மீள் குடியேற்றம் என்ற பெயரில், போரால் தரைமட்டமாக்கப்பட்ட கிராமங்களில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலைமையிலேயே கொண்டுவந்து கொட்டியது. கேப்பாப்புலவு மற்றும் பிலக்குடியருப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த கிராமங்களில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சீனியாமோட்டையில், இரவோடு இரவாக காடுகளை துப்புரவு செய்து கொட்டகைகள் அமைத்து குடியிருத்தப்பட்டனர்.
இதே போன்றே புதுக்குடியிருப்பு மக்களும் குடியமர்த்தப்பட்டனர். தற்போது, இராணுத்தினால் அமைக்கப்பட்ட தரமற்ற வீடுகளில் இந்த மக்கள் வாழத் தள்ளப்பட்டுள்ளார்கள். தமக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், வழங்கப்பட்டுள்ள துண்டுக் காணிகளுக்குள் விவசாயம் செய்ய முடியாது என்றும், மீனவர்கள் தொழிலுக்காக நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளதாக கூறுகின்றார்.
இந்தக் குடியிருப்புக்கு அருகில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதுடன் மக்களை இராணுவம் கண்காணித்து வருகின்றது. குடியிருப்பின் வீதிகளுக்கு இராணுவ அதிகாரிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் சீனியாமோட்டையை கேப்பாப்புலவு என்று பெயர் இராணுவம் மாற்றியுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். பிரதான வீதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தினை இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளதனால் மக்கள் காடுகளின் ஊடாக 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவளைத்து பயணம் செய்ய வேண்டியுள்ளது.
2015 ஜனவரியில் அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்காக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய அரசாங்கத்தின் கீழ் மக்களின் நிலங்கள் மீள ஒப்படைக்கப்படுவதோடு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற மாயையை பரப்பியிருந்தது. 2015 கடைப் பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த சிறிசேன, ஆறு மாதங்களுக்குள் மக்களின் நிலங்கள் அனைத்தும் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக போலி வாக்குறுயளித்திருந்த போதும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணிகள் விடுவிக்கப்பட்டதோடு அவற்றில் இருந்த மக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.
தமிழ் முதலாளித்துவத்தின் சலுகைகளை தக்க வைத்துக்கொள்வதற்காக கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அதற்காக ஏகாதிபத்தியங்களின் ஆதரவை பெறுவதற்கே இந்த போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை சுரண்டிக்கொள்கின்றது. எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் உக்கிரமாக்குவதற்கும், அதேபோல், இலங்கையில் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை ஏகாதிபத்தியவாதிகளின் திட்டங்களால் ஆபத்தான நிலைமைகளுக்குள் இழுத்து தள்ளுவதற்கு கொழும்பு அரசாங்கத்தைப் போலவே தமிழ் கூட்டமைப்பும் பொறுப்பாளியாகும். சீனாவுக்கு எதிரான தனது போர் திட்டங்களுக்குள் இலங்கையை இணைத்துக்கொள்வதன் பாகமாகவே அமெரிக்கா கொழும்பில் ஆட்சி மாற்றத்தை ஏற்பாடு செய்தது.
உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய விவசாயியான சிதம்பரநாதன், “எங்களை ஏமாற்றி வாக்குப் பெற்ற கூட்டமைப்பு எமது காணிகளை விடுவிப்பதற்கான முயற்சியை செய்யவில்லை, மாறாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது,” என்றார். “2016ல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வரும் என தேர்தலின் போது தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் சொன்னார். ஆனால் எங்கள் காணிப் பிரச்சினை கூட தீர்க்கப்டவில்லை. புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டுள்ளோம் என்று கூறிய அரசாங்கமும் இராணுவமும், மீட்ட நிலத்தினை தாங்களே ஆக்கிரமித்துக்கொண்டன. இது நில மீட்பா அல்லது ஆக்கிரமிப்பா?” எனக் கேட்டார்.
இன்னொரு விவசாயியான விவேகானந்தன், “இது எமது சொந்த இடம், இறுதி யுத்தத்தில் நாம் அகதிகளாக ஓடியபோது இராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டு, தற்போது தரமுடியாது என்றால் என்ன நியாயம்,” என அவர் கேட்டார். “என்ன நல்லாட்சி? நாங்கள் வயலில் வேலை செய்யும்போது அடிக்கடி படையினர் வந்து தலையீடு செய்கின்றார்கள். எமது காணியை விட்டால் அந்தப் பிரச்சினை இருக்காது. வாக்குப் போட்ட எங்கள் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசி தீர்க்க வேண்டும். எமது கடற்றொழிலாளர்கள், யுத்தகாலத்தில் செல் வீச்சு மற்றும் பீரங்கி தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டார்கள். இன்னும் அவர்களை கடலுக்குள் அனுமதிக்க தடை விதிக்கப்படுகின்றது.” எனினும் அரசாங்கம் தங்களது பிரச்சினைகளைத் தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு கிடையாது.
கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் குழந்தைகள்
போர் முடிவுக்கு வந்த, “முள்ளிவாய்க்கால் அவலம் இன்னும் எமக்கு முடியவில்லை” எனக் கூறிய ஒரு பெண், “எமது குழந்தைகளுடன் பனி, மழை மற்றும் வெயிலிலும் இங்கு இருக்கின்றம்,” என்றார். “அரசாங்கம் எம்மைக் கவனத்தில் எடுக்கவில்லை. எமது காணிகளை விடுவிக்க வேண்டும். இராணுவம் கட்டித் தந்த வீடுகள் தரமானவை அல்ல. அந்த குடியிருப்புக்குள் வேறு நிறுவனங்கள் வருவதற்கு முடியாது. அந்தக் குடியிருப்பில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. கிணறுகளும் அதிகம் இல்லை,” என்றார்.
இராணுவம் ஆக்கிரமித்துள்ள ஒரு வீடு
“எமது வீட்டில் இராணுவம் குடியிருக்கின்றது. யுத்தம் முடிந்தால் இராணுவம் திரும்பவும் போக வேண்டியதுதானே? என ஒரு குடும்பத் தலைவர் கேட்டார். “இன்னும் இங்கு சண்டை நடக்கின்றதா? இல்லையே? எங்களைக் கேட்காமல் எங்கள் காணி ஒன்றில் தொலைத்தொடர்புக் கோபுரம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு நல்லாட்சி இல்லை. எங்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. கூட்டமைப்பினர் மெல்லவும் முடியாமல் விழங்கவும் முடியாமல் நிற்கின்றனர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் காப்பாற்றுவதற்கே முயற்சிக்கின்றார். எமது பிரச்சினையை தீர்ப்பத்ற்கு அல்ல,” என அவர் ஆத்திரத்துடன் கூறினார்.