Print Version|Feedback
Preface to the Turkish edition of The Heritage We Defend
நாம் காக்கும் மரபியம் நூலின் துருக்கிய பதிப்புக்கான முன்னுரை
By David North
23 June 2017
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த ஒரு நாடான துருக்கியில், நாம் காக்கும் மரபியம் (The Heritage We Defend) நூல் பிரசுரிக்கப்படுவதை நான் வரவேற்கிறேன். 1929 இல் ஸ்ராலினிச ஆட்சியால் சோவியத் ஒன்றியத்திலிருந்து லியோன் ட்ரொட்ஸ்கி வெளியேற்றப்பட்டதற்குப் பின்னர், அவர் முதன்முதலில் இஸ்தான்புல் கடற்கரையில் தான் அகதியாக கரையிறங்கினார். “பேனாவைக் கொண்டு வேலை செய்வதற்கு பிரின்கிபோ (Prinkipo) ஒரு சிறந்த இடம்,” என்றவர் எழுதினார். ட்ரொட்ஸ்கி இத்தீவில் சொற்ப காலமாக நான்காண்டுகள் தங்கியிருந்த போது, எனது வாழ்க்கை (My Life), ரஷ்ய புரட்சியின் வரலாறு (The History of the Russian Revolution) மற்றும் ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் குறித்த அவரின் நிகரற்ற கட்டுரைகள் உட்பட அவரது தலைசிறந்த படைப்புகள் பலவற்றை எழுதினார். அவர், “அமைதி மற்றும் பழையதை மறந்துபோவதற்குரிய ஒரு தீவாக" பிரின்கிபோவை வர்ணித்தாலும், 1929 மற்றும் 1933 வரையில் அங்கே அவரின் பிரசன்னம், மர்மாரா கடலில் அமைந்திருந்த இந்த அமைதிப்பூங்காவை புரட்சிகர மார்க்சிச சிந்தனைக்கான உலகின் மையப்புள்ளியாக மாற்றியது.
பிரின்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கி
நாம் காக்கும் மரபியத்தின் இந்த புதிய மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்படுவதன் சிறப்பு முக்கியத்துவத்தை, ட்ரொட்ஸ்கி துருக்கியில் தஞ்சமடைந்ததற்கும் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாறுக்கும் இடையிலான உறவுகள் மட்டும் எடுத்துரைக்கவில்லை. உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையின் புவிஅரசியலில் துருக்கி கொண்டுள்ள முக்கிய இடம், இந்நாட்டின் வர்க்கப் போராட்டம் பிரமாண்டமான பரிமாணங்களை எடுக்கும் என்பதற்கு உத்தரவாதமளிக்கின்றன. ஆகவே துருக்கியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதென்பது, நான்காம் அகிலத்தின் ஓர் இன்றியமையா மூலோபாய பணியாகும். இதற்கு, குறிப்பாக மிஷேல் பப்லோ (1911–1996) மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் இன் (1923–1995) கலைப்புவாத கருத்துருக்களுடன் தொடர்புபட்ட மார்க்சிச-விரோத திருத்தல்வாதத்தின் வெவ்வேறு வடிவங்களுக்கு எதிராக மரபார்ந்த ட்ரொட்ஸ்கிசவாதிகள் தொடுத்த நீண்ட போராட்ட வரலாற்றில், துருக்கிய தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் முன்னேறிய பிரிவுகளை கற்பிப்பது அவசியமாகிறது.
ஜேம்ஸ் பி. கனன்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) பிரிட்டனின் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) விட்டோடியதன் பின், இன்றைக்கு முப்பதாண்டுகளுக்கு முன்னர் நாம் காக்கும் மரபியம் எழுதப்பட்டது. அதன் பின்னர் அனைத்துலகக் குழு எண்ணற்ற ஆவணங்களில் நிரூபித்து காட்டியுள்ளவாறு, ஒருகாலத்தில் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளைப் பாதுகாப்பதில் தொழிலாளர் புரட்சிக் கட்சி ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்தாலும், ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாக ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளை அது கைவிட்டிருந்ததன் விளைவாகவே அது விட்டோடியது. 1973 இல் ஸ்தாபிக்கப்பட்ட WRP, 1953 இல் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் பிரெஞ்சு சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி (Parti communiste internationaliste – PCI) ஆகியவற்றுடனான ஒரு கூட்டுடன் அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்த, பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திலிருந்து வழிவந்த அமைப்பாக இருந்தது. WRP இன் தலைவர் ஜெர்ரி ஹீலி (1913–1989), நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் பப்லோ-மண்டேல் செய்த திருத்தல்களை நிராகரித்து, ஜேம்ஸ் பி. கனன் ஆல் (1890–1974) எழுதப்பட்ட வரலாற்று புகழ்மிக்க "உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு பகிரங்க கடிதம்" என்பதில் கையெழுத்திட்டிருந்தார். நவம்பர் 1953 இல் பிரசுரிக்கப்பட்ட இந்த "பகிரங்க கடிதம்", ICFI இன் அடிப்படை கோட்பாடுகளை வரையறுத்தது:
1. முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண ஓலமானது, மோசமடைந்து வரும் பொருளாதார வீழ்ச்சி, உலக போர்கள் மற்றும் பாசிசம் போன்ற காட்டுமிராண்டித்தன வெளிப்பாடுகள் மூலமாக மனித நாகரீகத்தையே அழிக்க அச்சுறுத்துகின்றது. இன்று அணுஆயுதங்களின் அதிகரிப்பானது இந்த அபாயத்தை மிகவும் மரணகதியிலான சாத்தியமான விதத்தில் அடிக்கோடிட்டு காட்டுகின்றது.
2. சோசலிசத்தின் திட்டமிட்ட பொருளாதாரத்தைக் கொண்டு உலகளவில் முதலாளித்துவத்தை பிரதியீடு செய்வதன் மூலமாக, அவ்விதத்தில் முதலாளித்துவத்தால் அதனது ஆரம்ப நாட்களில் தொடக்கிவைக்கப்பட்ட முன்னேற்றத்திற்கான சுழற்சியை மீண்டும் தொடங்குவதன் மூலமாக மட்டுமே இந்த பேரழிவுக்குள் வீழ்வதைத் தடுக்க முடியும்.
3. இத்தகைய பணியானது சமூகத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மட்டுமே அடைய முடியும். ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதையில் சமூக உற்பத்திகளின் உலகளாவிய உறவு இன்றிருப்பது போல் ஒருபோதும் தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்ததில்லை என்றபோதிலும் கூட, தொழிலாள வர்க்கமே ஒரு தலைமை நெருக்கடியை முகங்கொடுக்கிறது.
4. இந்த உலகளாவிய-வரலாற்று சிறப்பு மிக்க குறிக்கோளை செயல்படுத்துவதற்காக அதனை ஒழுங்கமைக்க, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கம் லெனின் அபிவிருத்தி செய்த வடிவத்தில் ஒரு புரட்சிகர சோசலிச கட்சியைக் கட்டமைக்க வேண்டும்; அதாவது, முடிவெடுப்பதில் ஜனநாயகமும், அதை செயல்படுத்துவதில் மத்தியத்துவமும் கொண்ட, ஜனநாயகம் மற்றும் மத்தியத்துவத்தை இயங்கியல்ரீதியில் இணைக்க தகைமை கொண்டதும்; அடிமட்ட அங்கத்தவர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தலைமையும், எந்தவொரு தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலிலும் ஒழுங்கோடு முன்னேறி செல்லக்கூடிய அங்கத்தவர்களையும் கொண்ட ஒரு போராடும் கட்சியைக் கட்டமைக்க வேண்டும்.
5. இதற்கு ஸ்ராலினிசம் பிரதான தடையாக உள்ளது, அது 1917 ரஷ்ய புரட்சி பாரம்பரியத்தை சுரண்டுவதன் மூலமாக தொழிலாளர்களை ஈர்த்து, பின்னர் அது அவர்களை திரும்பவும் சமூக ஜனநாயகத்தின் கரங்களுக்குள், உற்சாகமின்மைக்குள், அல்லது முதலாளித்துவத்தில் திரும்பவும் நப்பாசையை வைக்கவும், அவர்களின் நம்பிக்கையை காட்டிக்கொடுக்கிறது. இத்தகைய காட்டிக்கொடுப்புகளுக்கு தண்டனையாக, பாசிசவாத அல்லது முடியாட்சி வகைப்பட்ட சக்திகள் பலப்படுவதன் வடிவத்திலும் மற்றும் முதலாளித்துவத்தால் தயாரிக்கப்பட்டு உருவெடுக்கும் புதிய போர் வெடிப்புகளிலும், உழைக்கும் மக்கள் விலை கொடுக்க செய்யப்படுகிறார்கள். நான்காம் அகிலம் அதன் ஆரம்பத்திலிருந்தே, சோவியத் ஒன்றியத்திற்கு உள்ளும் புறமும் ஸ்ராலினிசத்தை புரட்சிகரமான முறையில் தூக்கியெறிவதை அதன் பிரதான பணிகளில் ஒன்றாக வகுத்துக்கொண்டது.
6. நான்காம் அகிலத்தின் பல பிரிவுகளும், மற்றும் அதன் வேலைத்திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகளும் அல்லது குழுக்களும் வளைந்து கொடுக்கும் தந்திரோபாயங்களின் அவசியத்தை முகங்கொடுத்து வருகின்ற நிலையில், இது ஸ்ராலினிசத்திற்கு அடிபணியாமல் ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் (தேசியவாத அமைப்புகள் அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போன்ற) அதன் சகல குட்டி-முதலாளித்துவ முகமைகளுக்கும் எதிராக எவ்வாறு போராடுவது என்பதையும், ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல் (பகுப்பாய்வின் இறுதியில் ஏகாதிபத்தியத்தின் ஒரு குட்டி-முதலாளித்துவ அமைப்பாக உள்ள) ஸ்ராலினிசத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை தவிர்க்கவியலாத நிர்பந்தங்களாக ஆக்குகின்றது. [1]
ஏர்னெஸ்ட் மண்டேல்
ட்ரொட்ஸ்கியின் மூலோபாய கருத்துருக்களைச் சுருக்கமாக தொகுத்துரைத்த அந்த "பகிரங்க கடிதத்தை", பப்லோ மற்றும் மண்டேல் மறுத்தளித்திருந்தனர். ஸ்ராலினிசத்தை ட்ரொட்ஸ்கிச இயக்கம் எதிர்புரட்சிகரமானதாக குணாம்சப்படுத்தியதை, பப்லோவாதம், கிரெம்ளின் அதிகாரத்துவமும் மற்றும் அதன் முகமைகளும் வரலாற்றுரீதியில் முற்போக்கான புரட்சிகர பாத்திரம் வகிக்கும் தகமையை கொண்டிருப்பதாக காட்டும் ஒரு தத்துவத்தைக் கொண்டு பிரதியீடு செய்தது. பல தொடர்ச்சியான அரசியல் புரட்சிகளில் ஸ்ராலினிச ஆட்சிகளை தூக்கியெறிவதற்காக செயற்படுவதற்குப் பதிலாக, ஸ்ராலினிச தலைவர்களுக்கு ஆலோசகர்களாக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் செயல்பட்டு, அவர்களை அதிகமாக இடதுசாரி போக்குக்கு அழுத்தமளித்தால், அதிகாரத்துவம் சுய-சீர்திருத்த நிகழ்வுபோக்கை அடையுமென பப்லோவாதிகள் எதிர்பார்த்தனர். கிரெம்ளின் ஆட்சியின் உள்நாட்டு ஸ்ராலினிச முகவர்கள் ஆட்சி செய்து வந்த கிழக்கு ஐரோப்பாவின் "ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்", பப்லோ மற்றும் மண்டேலை பொறுத்த வரையில், நூற்றாண்டுகளுக்கும் நீடித்திருக்குமென வரையறுக்கப்பட்டன.
ஸ்ராலினிசத்திற்கு பப்லோவாதிகளின் சரணடைவானது, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அவர்கள் கைவிட்டதன் ஒரு அம்சமாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிச நனவுக்காக போராடுவதையும், ஏகாதிபத்தியத்தின் சகல தேசிய முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ முகமைகளிடம் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கு போராடுவதையும் அவர்கள் நிராகரித்தனர்.
1950 கள் மற்றும் 1960 களில் —குறிப்பாக அனைத்துலகக் குழுவுடன் அமெரிக்க SWP உடைத்துக் கொள்வதற்கு எதிராகவும் மற்றும் 1963 இல் பப்லோவாதிகள் உடனான மறுஐக்கியத்திற்கு எதிராகவும்— நான்காம் அகிலத்தை பாதுகாப்பதில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மத்திய பாத்திரம் வகித்திருந்தாலும், திருத்தல்வாதத்தை நோக்கிய அவர்களின் சொந்த திருப்பம், 1970 களில், குறிப்பாக நவம்பர் 1973 இல் தொழிலாள புரட்சிக் கட்சி (WRP) நிறுவப்பட்ட பின்னர், அதிகரித்தளவில் வெளிப்படையாக இருந்தது. சோசலிசத்திற்கான பாதையில் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட மற்றும் அதில் வேரூன்றிய ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியமில்லை என்பதை கியூப தலைவரின் குட்டி-முதலாளித்துவ கெரில்லா இராணுவம் நிருபித்துள்ளதாக கூறிய வாதங்களை நிராகரித்து, 1960 களின் தொடக்கத்தில், WRP இன் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், பிடல் காஸ்ட்ரோவின் தீவிர தேசியவாதம் குறித்த SWP இன் போற்றிப்புகழ்தலை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தினர்.
ஆனால், WRP அதுவே 1970 களின் மத்தியில், பப்லோவாதிகளின் ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பு கொள்கைகளுக்கு நெருக்கமாக ஒத்திருக்கும் வகையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) மற்றும் லிபியாவில் மௌம்மர் கடாபியின் தீவிர தேசியவாத ஆட்சி போன்ற மத்திய கிழக்கின் பல்வேறு தேசியவாத இயக்கங்களின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு வேலைத்திட்டங்களை WRP மிகைப்படுத்தத் தொடங்கியது. [2] தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) பப்லோவாதத்திற்குத் திரும்பியமை வெறுமனே தனித்தனியான தலைவர்களது தனிப்பட்ட பிழைகளின் விளைவல்ல. உலகெங்கிலும் இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தின் மீது அப்போது ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்கங்கள் மேலாதிக்கம் செலுத்தி வந்த நிலைமைகளின் கீழ், 1960கள் மற்றும் 1970களின் தொடக்கத்தில், குட்டி-முதலாளித்துவத்தின் பரந்த பிரிவுகளது, குறிப்பாக மாணவ இளைஞர்களது பாரிய தீவிரமயப்படல்களால் ஏற்பட்ட சமூக மற்றும் சித்தாந்த அழுத்தங்களுக்கு தாக்குபிடிக்கமுடியாது ட்ரொட்ஸ்கிச அமைப்புகள் பலவீனமானதாக இருந்தன.
ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் குட்டி-முதலாளித்துவத்தின் பிரிவுகளில் இருந்து அணிதிரட்டிக்கொள்வது மீதான சவாலை எதிர்கொள்வதற்கு, ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கு எதிரான சளைக்காத போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கு அவசியப்படுவது ஓர் உறுதியான அரசியல் மற்றும் நடைமுறை நோக்குநிலை மட்டுமல்ல. பப்லோவாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட "புதிய இடதின்" கருத்தியல் கதாநாயகர்களது, போலி-மார்க்சிசம் மற்றும் முற்றுமுழுதுமான மார்க்சிச-எதிர்ப்பு ஆகியவற்றிற்கு எதிராக —அனைத்திற்கும் மேலாக "மேற்கத்திய மார்க்சிசம்,” “அரசு முதலாளித்துவம்" மற்றும் முதலாளித்துவ தேசியவாத "மூன்றாம் உலகவாதம்" (Third Worldism) ஆகியவற்றுடன் அடையாளம் காணப்பட்ட முக்கிய போக்குகளுக்கு எதிராக ஒரு நீடித்த போராட்டமும் அவசியப்பட்டது. மிகவும் பரவலாக பிரபலமான ஒருசிலரை பெயரிடுவதானால், Marcuse, Adorno, Horkheimer, Gramsci, Lefort, Castoriadis, Guevara, Fanon மற்றும் Malcolm X ஆகியோரைக் கூறலாம். இந்த நீண்ட பட்டியலில் ஸ்ராலினிசத்தின் ஒரு கடும் பிற்போக்கு மறுவடிவமான மாவோயிசத்தின் செல்வாக்கையும் நாம் சேர்த்து கொள்ளலாம், அதை அரவணைத்திருந்த எண்ணற்ற குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகள், உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இரத்தந்தோய்ந்த ஒரு தோல்வி மாற்றி மற்றொரு தோல்விக்கு இட்டுச் சென்றனர்.
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாத கொள்கைகள் அனைத்துலகக் குழுவிற்குள் எதிர்ப்பைச் சந்தித்தது. 1982 மற்றும் 1984 க்கு இடையே, அமெரிக்க ட்ரொட்ஸ்கிச அமைப்பான வேர்க்கஸ் லீக் (Workers League), WRP இன் நவ-பப்லோவாத கொள்கைகள் மீது விரிவான விமர்சனம் ஒன்றை முன்வைத்தது. WRP மீது அனைத்துலகக் குழுவிற்குள் ஒரு விமர்சனபூர்வ விவாதத்தை ஒழுங்கமைக்க முயன்ற வேர்க்கஸ் லீக்கின் முயற்சிகளை ஹீலி, மைக்கேல் பண்டா (1930-2014) மற்றும் கிளிஃப் சுலோட்டர் (1928-) உட்பட பிரதான WRP தலைவர்கள் ஒடுக்கினர். [3] இந்த கோட்பாடற்ற நடவடிக்கைகள், 1985 இன் இலையுதிர்காலத்தில் WRP க்குள் ஓர் அரசியல் நெருக்கடி உருவாக இட்டுச் சென்றது. அப்போதும் WRP இன் உடைவுக்கு அடியிலிருந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் மீதான ஒரு விவாதத்தைத் தட்டிக்கழிக்க தீர்மானகரமாக இருந்த சுலோட்டர் மற்றும் பண்டா, அதற்கு முந்தைய தசாப்தத்தில் பிரிட்டிஷ் பிரிவு பின்பற்றிய சந்தர்ப்பவாத போக்கிற்காக அனைத்துலகக் குழுவை குற்றஞ்சாட்ட முயன்றனர்.
மைக்கல் பண்டா
பெப்ரவரி 1986 இல், ட்ரொட்ஸ்கிசத்துடன் அதன் முறிவை அறிவிக்கும் ஆவணம் ஒன்றை WRP பிரசுரித்தது. அனைத்துலகக் குழு ஏன் உடனடியாக கலைக்கப்பட்டு, நான்காம் அகிலம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கு 27 காரணங்கள் என்று தலைப்பிடப்பட்ட அந்த ஆவணத்தை மைக்கல் பண்டா எழுதியிருந்தார். அந்த ஆவணம் தொல்சீர் மார்க்சிசத்தில் அதன் இடத்தை பெறும் என்று அனுமானித்து, WRP அதை பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிட்டது. யதார்த்தத்தில், பண்டாவின் ஆவணம் திரித்தல்கள், ஒட்டுமொத்த பொய்கள் மற்றும் அரைகுறை உண்மைகளின் கலவையாக இருந்ததுடன், அனைத்துலகக் குழுவை மட்டுமல்ல, நான்காம் அகிலத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையுமே மதிப்பிழக்க செய்வதே அதன் நோக்கமாக இருந்தது. பண்டாவினது கட்டுரை தலைப்பே அதன் அரசியல் நேர்மையின்மையை அம்பலப்படுத்தியது. அவரது "27 காரணங்களில்" வெறும் ஒரு பகுதி மட்டுமாவது நிலைத்துநின்றிருந்தால், நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியான உயிர்வாழ்வை நியாயப்படுத்துவது சாத்தியமே இல்லாது போயிருக்கும். அவர் இந்த ஆவணத்தை முடித்து ஓர் ஆண்டுக்கும் குறைவான காலத்தில் அவரது சொந்த வாதங்களில் இருந்து தவிர்க்கவியலாமல் தொடர்ந்த வந்த இறுதிமுடிவாக, பண்டா ட்ரொட்ஸ்கி மீது ஒரு கீழ்தரமான கண்டனத்தைப் பிரசுரித்து, ஸ்ராலின் மீதான அவரின் எல்லையில்லா பிரமிப்பை அறிவித்தார். அவரது ஆவணத்திற்கு ஒப்புதல் வழங்கிய WRP இன் தலைமை மற்றும் அங்கத்துவத்தினர் அனைவருக்கும், அவர் ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரித்தன் ஊடாக பண்டாவின் அரசியல் பரிணாமம் ஒரு முன்னுதாரணமாக இருந்தது. கணிசமானவர்கள் ஸ்ராலினிச இயக்கத்தில் இணைந்தனர். ஏனையவர்கள் ஏகாதிபத்திய முகாமிற்குள் நுழைந்து, சேர்பியாவிற்கு எதிரான நேட்டோ போரில் செயலூக்கம் மிக்க பங்களிப்பாளர்களாக மாறினர். கிளிஃப் சுலோட்டரால் ஊக்குவிக்கப்பட்ட மிகப் பெரிய குழு, புரட்சிகர கட்சிக்கான லெனின்-ட்ரொட்ஸ்கி கருத்துருவின் ஒட்டுமொத்த மரபியத்தைத் துறந்து, சோசலிசத்திற்கான போராட்டத்தைக் கைவிட்டு, தங்களின் தனிப்பட்ட வாழ்கையில் சாத்தியமான அளவிற்கு வசதியாக வாழ்வதில் ஒருமுகப்பட்டது.
பண்டாவின் ஆவணம் கிடைக்கப் பெற்ற தருணத்திலிருந்து, அனைத்துலகக் குழு ஒரு விரிவான பதிலுரையின் அவசியத்தை உணர்ந்திருந்தது. இரண்டு மாதங்களுக்குள்ளாக, அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் பிரசுரித்த பத்திரிகைகளில், வாராந்தர முறையில் நாம் காக்கும் மரபியம் பிரசுரமாகி வந்தது. பண்டாவிற்கான பதிலுரைக்கு 500 க்கும் அதிகமான பக்கங்கள் அவசியப்படுமென நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பண்டாவின் ஆவணத்தை நான் வாசித்தபோது, நான்காம் அகில வரலாறு —குறிப்பாக 1940 இல் ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கும் மற்றும் 1953 இல் பப்லோவாதிகள் உடனான முறிவுக்கும் இடையிலான முக்கிய ஆண்டுகள்— போதுமானளவிற்கு ஒருபோதும் ஆய்வு செய்யப்பட்டிருக்கவில்லை மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இப்போதைய காரியாளர்களுக்கு பெரிதும் தெரியாமல் இருந்தது என்ற உண்மையிலிருந்து ஆதாயமடைய அவர் முனைந்திருந்தார் என்பதை நான் உணர்ந்தேன். பண்டாவின் ஓடுகாலித்தனத்தை குற்றஞ்சாட்ட அது போதுமானதாக இல்லை. நான்காம் அகிலத்தின் வரலாறை மீளாய்வு செய்து, அதன் அடிப்படையில் அதன் காரியாளர்களை கற்பிக்க வேண்டியிருந்தது.
இந்நூல் பிரசுரிக்கப்பட்டு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், அதன் எழுத்துக்களை திரும்பி பார்க்கையில், நாம் காக்கும் மரபியம் நூல் காலத்திற்கு தாக்குபிடித்து நின்றுள்ளது என்றே நான் நம்புகிறேன். நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஓர் அறிமுகமாக இருப்பதற்குரிய மதிப்பைக் கொண்டுள்ள அது, சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான இன்றைய நாள் போராட்டத்திற்கு பெரிதும் தொடர்புடைய மார்க்சிச தத்துவம், வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயம் சார்ந்த பிரச்சினைகளையும் ஆராய்கிறது.
ஜெர்ரி ஹீலி
வரலாற்று சடவாத அணுகுமுறையை பயன்படுத்தி, அரசியல் போக்குகள் உருவாகும் விதம் மற்றும் அவற்றிற்கு இடையிலான போராட்டத்தை விவரிப்பதினூடாக, நாம் காக்கும் மரபியம் மட்டுமே நான்காம் அகிலத்தின் வரலாற்றை பற்றிய நூலாக உள்ளது. தனிப்பட்ட தலைவர்களின் குணாம்சங்கள், நல்லது கெட்டது, அவர்களின் நோக்கங்கள், மேதைமைகள் அல்லது இழிவுகளில் இருந்து, அகநிலையான அணுமுறையில் தொடங்குவதை நிராகரித்து, நாம் காக்கும் மரபியம், இரண்டாம் ஏகாதிபத்திய உலக போரின் போதும் மற்றும் அதற்குப் பின்னரும், வர்க்க போராட்டத்தின் உலகளாவிய மற்றும் தேசிய அபிவிருத்திக்கும் மற்றும் உலக முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாடுகளில் இருந்து எழுந்த, நான்காம் அகிலத்தின் முரண்பாடுகளுக்கு அடித்தளத்தில் அமைந்திருந்த, புறநிலை சமூக மற்றும் அரசியல் நிகழ்வுபோக்குகளை கண்டறிய முனைகிறது. இந்த வரலாறானது, கனன், பப்லோ, மண்டேல் மற்றும் ஹீலி என பிரதான அரசியல் கதாநாயகர்களின் அகநிலையான உள்நோக்கங்களை அல்ல, மாறாக வர்க்க போராட்டத்தின் நிஜமான புறநிலை உந்துசக்திகளை முக்கிய அடித்தளமாக கொண்டிருந்தது. ஏங்கெல்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால், புறநிலை உந்துசக்திகள் “நடவடிக்கையில் ஈடுபடும் பெருந்திரளான மக்கள் மற்றும் பெரும் தலைவர்கள் என்றழைக்கப்பட்ட அவர்களின் தலைவர்களது சிந்தனைகளில் நனவுபூர்வமான நோக்கங்களாக பிரதிபலிக்கின்றன...” [4]
நான்காம் அகிலத்தினுள் நடந்த மோதல்களுக்கு முன்னறிவிப்பாக இருந்த 1951 ஆண்டு மூன்றாம் உலக மாநாட்டைத் தொடர்ந்து அபிவிருத்தி அடைந்து, நவம்பர் 1953 இல் வரலாற்று உடைவில் போய் முடிந்த மோதலை, நாம் காக்கும் மரபியம், உலக போர் மற்றும் அதற்குப் பின்னர் வேகமாகவும் சிக்கலாகவும் மாறிக் கொண்டிருந்த நிலைமைகளின் உள்ளடக்கத்தில் பகுத்தாராய்ந்தது. இந்நூல், 1940 களின் இரண்டு திரித்தல்வாத போக்குகள் மீது கவனத்தை ஈர்க்கின்றது, இவை பரந்த பிரிவு குட்டி-முதலாளித்துவ தீவிர புத்திஜீவிகளது அரசியல் நோக்குநிலையில் வலதுநோக்கிய திருப்பத்தைப் பிரதிபலித்தன. இந்த திருப்பம், நான்காம் அகிலத்திற்குள் தொடர்ச்சியான மற்றும் அதிகரித்த அரசியல் பதட்டங்களில் வெளிப்பாட்டைக் கண்டது.
“பின்னோக்கித் திரும்புபவர்கள்” (Retrogressionists) என்றும் அறியப்பட்ட இந்த “மூன்று கருத்துருக்கள்" குழு (Three Theses) ஜேர்மன் சர்வதேச கம்யூனிஸ்டுகள் அமைப்பிலிருந்து (Internationale Kommunisten Deutschlands – IKD) உருவானது. இது ஜோசெஃப் வேபர் (Josef Weber, 1901–1959) தலைமையிலான புலம்பெயர்ந்த ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் ஓர் அமைப்பாகும். நாம் காக்கும் மரபியம் பிரசுரிக்கப்படுவதற்கு முன்னதாக, நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அது வகித்த பாத்திரம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மறக்கடிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது முன்னெடுத்த கருத்துருக்கள், ட்ரொட்ஸ்கிச-விரோத மற்றும் மார்க்சிச-விரோத போக்குகளது அபிவிருத்தியில் செல்வாக்கு மிக்கதாக இருந்தன, இவை நான்காம் அகிலத்திற்கு உள்ளே மட்டுமல்ல, குட்டி-முதலாளித்துவ தீவிர கொள்கையாளர்களின் பரந்த பிரிவுகளிடையேயும் பரவி இருந்தன.
IKD, உலக சோசலிச புரட்சியின் முன்னோக்கை, நிறைவேறா ஓர் அரசியல் பகற்கனவாக நிராகரித்து, அக்டோபர் 1941 இல் ஆவணம் ஒன்றை வெளியிட்டது. நவீன உலகம், சோசலிசத்தை நோக்கி அல்ல காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது; ஐரோப்பாவில் பாசிசத்தின் வெற்றிகளானது, தொழிலாள வர்க்கம் மீண்டும் 1848 க்கு முந்தைய நிலைமைகளுக்கு தூக்கி வீசப்பட இருக்கின்றன என்பதையே அர்த்தப்படுத்துகிறது; நாஜிக்களின் இராணுவ வெற்றி, IKD இதை மாற்றவே முடியாததாக நம்பிய நிலையில், உலக வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது என்று அந்த ஆவணம் வலியுறுத்தியது. “சிறைச்சாலைகள், புதிய சேரி பிரதேசங்கள், பலவந்த உழைப்பு, கொடுஞ்சிறை முகாம்களும் போர்-கைதிகளுக்கான முகாம்களும் கூட இடைக்கால அரசியல்-இராணுவ அமைப்புக்கள் மட்டுமல்ல, அவை ஒரு நவீன அடிமை அரசை நோக்கிய அபிவிருத்தியை உள்ளடக்கி உள்ள புதிய பொருளாதார சுரண்டலுக்கான பல வடிவங்களாகும், அவை மனிதயினத்தின் ஒரு கணிசமான சதவீதத்தினரின் நிரந்தர தலைவிதியை கருத்தில் கொண்டுள்ளன,” என்றது குறிப்பிட்டது. [5]
வரலாறு பின்னோக்கி திரும்பும் நிகழ்முறையினூடாக, சோசலிசத்திற்கான போராட்டம், “தேசிய சுதந்திரத்திற்கான முனைவால்" பிரதியீடு செய்யப்பட்டுவிட்டதாக “மூன்று கருத்துருக்கள்" குழு தீர்மானித்தது. [6] அதற்கு பின்னர், 1943 இல் எழுதப்பட்ட ஓர் ஆவணத்தில், IKD, இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான போராட்டத்தில் லெனின் அபிவிருத்தி செய்திருந்ததும், 1917 இல் போல்ஷிவிக் கட்சியின் மூலோபாயம் அதன் அடித்தளத்தில் கொண்டிருந்ததுமான ஏகாதிபத்திய சகாப்தம் குறித்த வரலாற்று பகுப்பாய்வை வெளிப்படையாக நிராகரித்தது. “முதலாம் உலக போர் மற்றும் அக்காலக்கட்டத்தின் முற்றுமுழுதான நிலைமையை நாம் பின்னோக்கி பார்த்தால், அதன் வெடிப்புக்கு இட்டுச் சென்ற சகல சர்வசாதாரணமான தொடர்புகள் இருந்தாலும், அது முதலாளித்துவத்தின் ஒரு வரலாற்று துரதிருஷ்டம் என்பதற்கு அதிகமாக வேறொன்றுமில்லை, ஓர் எதிர்பாரா சம்பவமான அது வரலாற்றுரீதியில் அவசியப்படுவதற்கு முன்னரே வரலாற்றுரீதியில் அவசியமான கட்டமைப்பிற்குள் முதலாளித்துவத்தின் பொறிவாக அமைந்தது,” என்று குறிப்பிட்டது. ஆனால் உலகப் போர் ஓர் எதிர்பாரா சம்பவம் என்றால், அதுபோலவே இரண்டாம் அகிலத்தின் பொறிவும் கூட அவ்வாறென்றால், அக்டோபர் புரட்சியின் வெற்றி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஸ்தாபிதத்திற்கும் அது பொருத்தமானதே. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி நெறிப்படுத்திய, இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர மார்க்சிச மூலோபாயத்தின் ஒட்டுமொத்த புறநிலை அடித்தளமும், நடைமுறையளவில் மறுக்கப்பட்டது.
IKD அதன் அரசியல் அவநம்பிக்கைவாதத்தை (pessimism) திட்டவட்டமான வரையறைகளில் நெறிப்படுத்தியது. அது அறிவித்தது, தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தி என்பதெல்லாம்முடிந்துவிட்டது. அது "துண்டாடப்பட்டு, பிளவுபடுத்தப்பட்டு, உடைக்கப்பட்டுவிட்டது, அதன் வெவ்வேறு அடுக்குகள் ஒன்றுகொன்று எதிர்நிற்கின்றன, அது அரசியல்ரீதியில் தார்மீகத் தன்மையை இழந்துவிட்டது, சர்வதேசரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது...” என்றது குறிப்பிட்டது. [7] முதலாளித்துவம் அழுகிப் போய் கொண்டிருந்தாலும், அதை தூக்கியெறியும் ஆற்றல் தொழிலாள வர்க்கத்திற்கு கிடையாது என்று வலியுறுத்திய IKD, “மார்க்சிசத்தை முற்றிலும் தவறாக புரிந்து கொண்டதிலிருந்து" எழும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் "மிக பொதுவான பிழை", “முதலாளித்துவத்தை நிராகரிப்பதை மட்டுமே பாட்டாளி வர்க்க புரட்சியின் பணியாக கருதுவதை..." உள்ளடக்கி உள்ளதாக குறிப்பிட்டது. ஒரு புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கம் இருக்க இயலாமலிருப்பது பற்றி IKD அறிவிக்கையில், ஜனநாயகத்திற்கான "நூற்றாண்டிற்கு முந்திய" போராட்டத்திற்கு திரும்புவது மட்டுமே ஒரே அரசியல் வாய்ப்பாக இருப்பதாக அறிவித்தது. [8] ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான நான்காம் அகிலத்தின் அழைப்பை அது எதிர்த்தது:
ஐரோப்பா தன்னை "சோசலிச அரசுகளுக்குள்" ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கு முன்னர், அது மீண்டும் சுதந்திரமான மற்றும் தன்னாட்சி அரசுகளாக தன்னை முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். இது, உடைந்து வருவது, அடிமைப்படுத்துவது, மக்களை விரட்டியடிப்பது மற்றும் பாட்டாளி வர்க்கம் தேசங்களை மீண்டும் உருவாக்குவது சம்பந்தப்பட்ட ஒரு முழு விடயமாகும்...
நாம் பின்வரும் விதத்தில் அப்பணியை நெறிப்படுத்தலாம்: பின்னுக்கு இழுக்கப்பட்ட ஒட்டுமொத்த அபிவிருத்தியை மறுகட்டுமானம் செய்வது, (தொழிலாளர் இயக்கம் உட்பட) முதலாளித்துவத்தின் சகல சாதனைகளையும் மீண்டும் அடைந்து, அதிகபட்ச சாதனைகளை எட்டி, அவற்றை இன்னும் அதிகரிப்பது. …
ஆனால் தொழிற்துறை முதலாளித்துவம் மற்றும் விஞ்ஞான சோசலிசம் இவற்றின் வசந்தகாலத்தில் நிலவிய நூற்றாண்டு பழமையான பிரச்சினையானது —தேசிய சுதந்திரம் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் ஸ்தாபிதத்திற்கான இன்றியமையாத முன்நிபந்தனையாக, (ரஷ்யாவுக்கும் சேர்த்து) அரசியல் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதானது— மிகவும் அதிமுக்கிய அரசியல் பிரச்சினையாக உள்ளன. [9]
அரசியல் நாட்காட்டியை 1848 க்கு முந்தைய சகாப்தத்திற்கு திரும்ப திருப்புவதற்கும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தை கைவிடுவதற்கும், தேசிய இறையாண்மை மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு திரும்புவதற்குமான அதன் அழைப்பு சகல நாடுகளுக்கும் பொருந்தும் என்று IKD வலியுறுத்தியது.
[ஜனநாயகம் மற்றும் தேசிய சுதந்திரம் குறித்த] இந்த பிரச்சினை, சீனா மற்றும் இந்தியாவிலும், ஜப்பான் மற்றும் ஆபிரிக்காவிலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும், ரஷ்யா மற்றும் இங்கிலாந்திலும் என ஒட்டுமொத்த உலகிலும் வெவ்வேறு விதமாக நிலவுகிறது. ஒரு வார்த்தையில் கூறுவதானால், சகல ஐரோப்பாவிலும், வடக்கு மற்றும் தென் அமெரிக்காவிலும் கூடத்தான். பலமாக தீவிரப்பட்ட ஜனநாயக மற்றும் தேசிய பிரச்சினை இல்லாத ஒரு நாடு எங்கேயுமே கிடையாது, அரசியல்ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கமும் எங்கேயுமே கிடையாது. [10]
“தேசிய சுதந்திரம்" என்பதை மத்திய கோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென IKD பிரகடனப்படுத்தியது.
இதன் மூலம், நாம் கூற விரும்புவது இதைத் தான்: தேசிய பிரச்சினை என்பது வரலாற்று அத்தியாயங்களில் ஒன்று. இது, அவசியமானரீதியில், தொழிலாளர் இயக்கம் மற்றும் சோசலிச புரட்சியை மீளமைப்பதற்கான மூலோபாய மாற்றத்திற்குரிய புள்ளியாக மாறியுள்ளது. வரலாற்றுரீதியில் அவசியமான இந்த அத்தியாயத்தைப் புரிந்து கொள்ளாத எவரும் அதை எவ்வாறு பயன்படுத்துவதென்பதை அறியாதவர்கள் என்பதோடு, மார்க்சிசம்-லெனினிசம் குறித்தும் ஒன்றும் அறியாதவர்கள் மற்றும் புரிந்து கொள்ளாதவர்கள் ஆவர். [11]
உண்மையில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டத்தை IKD தான் கைத்துறந்து கொண்டிருந்தது. முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான போராட்டத்திலிருந்து ஜனநாயக கோரிக்கைகளுக்கான போராட்டத்தைப் பிரிப்பதென்பது, நிரந்தர புரட்சியின் தத்துவம் மற்றும் வேலைத்திட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதை அர்த்தப்படுத்துகிறது. காலங்கடந்து முதலாளித்துவ வளர்ச்சி கண்ட நாடுகளில், “ஜனநாயகம் மற்றும் தேச விடுதலையை எட்டுவதற்கான முழுமையான மற்றும் நிஜமான தீர்வு என்பது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அந்த ஒடுக்கப்பட்ட நாட்டின் தலைமையாக, அனைத்திற்கும் மேலாக அதன் பெருந்திரளான விவசாயிகளின் தலைமையாக, ஏற்றுக் கொள்வதன் மூலமாக மட்டுமே அடைய முடியும்,” என்று நிரந்தர புரட்சி தத்துவத்தில் ட்ரொட்ஸ்கி விவரித்தார். [12]
முதலாளித்துவ வளர்ச்சி குன்றிய நாடுகளில் சோசலிச கோரிக்கைகளில் இருந்து ஜனநாயக கோரிக்கைகளை IKD பிரித்ததே போதுமானளவிற்கு தவறாக இருந்தது. ஆனால் உலக முதலாளித்துவத்தின் முன்னேறிய மையங்களில் தேசிய சுதந்திரத்திற்கான ஒரு முதலாளித்துவ வேலைத்திட்டத்திற்கு உயிரூட்டுவதற்கும், மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை இப்போதைக்கு உரியதல்ல என்று நிராகரிப்பதற்குமான IKD இன் முயற்சிகள், அரசியல் சீரழிவின் நோய்வாய்ப்பட்ட மட்டத்தை பிரதிபலித்தது. ஐரோப்பா மீதான நாஜி ஆட்சி ஐம்பதாண்டுகளுக்கு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் முப்பதாண்டுகளுக்கு தொடருமென்ற கண்ணோட்டத்தை, IKD தலைவர் ஜோசெஃப் வேபர், 1940 களின் மத்தியில், வெளிப்படுத்தியதாக அவரது கூட்டாளிகளும் நண்பர்களும் பின்னர் நினைவுகூர்ந்தனர். [13]
சாக்ட்மன்வாதிகள் (Shachtmanites) IKD இன் நிலைப்பாட்டை வரவேற்றதுடன் ஊக்குவித்தனர். 1940 இல் நான்காம் அகிலத்துடன் உடைத்துக் கொண்ட சாக்ட்மன்வாதிகள், சோவியத் ஒன்றியத்தை ஒரு தொழிலாளர் அரசாக வரையறுப்பதையும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோவியத் ஒன்றியத்தை பாதுகாப்பதை நிராகரிப்பதுடன், IKD இன் வாதங்கள் முற்றிலும் பொருந்தி இருப்பதாக நம்பினார்கள். 1940 களின் போக்கில் IKD இன் அடுத்தடுத்த பரிமாணம், பின்னோக்கித் திரும்பும் தத்துவம் (retrogressionist theory) குறித்த இந்த மதிப்பீட்டில் சாக்ட்மன்வாதிகள் சரியாக இருந்ததை நிரூபித்தது.
நான்காம் அகிலத்திலிருந்து IKD ஐ பிரித்துக் காட்டிய, நெறிதவறிய இந்த முன்னோக்கு, முடிவாக மொறோ-கோல்ட்மன் (Morrow-Goldman) போக்கின் வடிவத்தில் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (SWP) ஆதரவை கண்டது. நாம் காக்கும் மரபியம் எழுதுவதற்கு முன்னர், இந்த போக்கின் முக்கியத்துவம் குறித்து போதுமானளவிற்கு ஆராயப்படாமலேயே இருந்தது. 1944 இல் அது சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் எதிர்ப்பு குழுவாக எழுந்தன. அதன் இரண்டு பிரதான தலைவர்களும் நான்காம் அகிலத்திலும் மற்றும் அந்த அமெரிக்க கட்சியிலும் முக்கிய பாத்திரம் வகித்திருந்தனர். ட்ரொட்ஸ்கியின் வழக்கறிஞராக பணியாற்றிய ஆல்பேர்ட் கோல்ட்மன் (Albert Goldman, 1897-1960), 1937 இல் டுவி ஆணைக்குழுவில் (Dewey Commission) ட்ரொட்ஸ்கியின் பிரதிநிதியாக இருந்தார். 1941 ஸ்மித் சட்ட விசாரணையில், தேசத்துரோகத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்ட SWP அங்கத்தவர்களுக்காக கோல்ட்மன் தான் வாதாடினார். வாதிகளில் ஒருவராக இருந்த அவர், குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பதினெட்டு கட்சி அங்கத்தவர்களில் ஒருவராக இருந்தார். SWP அரசியல் குழுவின் ஓர் அங்கத்தவரும் சிறந்த சோசலிஸ்ட் இதழாளருமான ஃபீலிக்ஸ் மொறோ (Felix Morrow, 1906-1988), ஸ்பெயினில் புரட்சியும் எதிர்புரட்சியும் என்ற அவரின் நூலுக்காக நன்கறியப்பட்டவராவர். அவரும், 1941 விசாரணை முடிவில் சிறைக்கு அனுப்பப்பட்ட கட்சி அங்கத்தவர்களில் ஒருவராக இருந்தார். மொறோ-கோல்ட்மன் கன்னையின் மற்றொரு முக்கிய அங்கத்தவராக இருந்த Jean van Heijenoort (1912–1986), 1930 களின் போது ட்ரொட்ஸ்கியின் அரசியல் செயலராகவும், இரண்டாம் உலகப் போரின் போது நான்காம் அகிலத்தின் நடைமுறை செயலராகவும் சேவையாற்றியிருந்தார்.
ஃபீலிக்ஸ் மொறோ
மொறோ-கோல்ட்மன் போக்கின் நிலைப்பாடுகளை நாம் காக்கும் மரபியம் விரிவாக மீளாய்வு செய்கிறது. இருப்பினும், நாம் காக்கும் மரபியம் பிரசுரிக்கப்பட்டதற்குப் பின்னர், SWP இன் இன்னும் பல உள்கட்சி விவாத அறிக்கைகள் கிடைக்க பெற்றிருப்பது, மொறோ-கோல்ட்மன் போக்கு எந்தளவிற்கு IKD இன் வாதங்களில் செல்வாக்கு செலுத்தியது என்பதை முழுமையாக மதிப்பீடு செய்வதை சாத்தியமாக்குகிறது, இதற்காக இணையத்திற்கு தான் நன்றி கூற வேண்டும். 1942 இல், மார்க் லொரிஸ் (Marc Loris) என்ற பெயரில் எழுதிய Van Heijenoort மற்றும் மொறோ, "மூன்று கருத்துருக்கள்" தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களை எதிர்த்திருந்தனர். ஆனால் 1944 இன் மத்தியில் அவர்களின் நிலைப்பாடுகள், அதுவும் கோல்ட்மனின் நிலைப்பாடு, ஒரு தீவிர மாற்றத்திற்கு சென்றது. ஐரோப்பாவில் சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்திற்கு நான்காம் அகிலத்தின் ஆதரவானது, இரண்டாம் உலக போர் முடிவுக்குப் பின்னர் நிலவிய நிலைமைகளில், அதை அரசியல்ரீதியில் பொருத்தமற்றதாக ஆக்குவதாக மொறோ வாதிட்டார். ஐரோப்பாவில், அதுவும் குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் சம்பவங்களை மிகவும் பழமைவாத மற்றும் தோல்விவாத நிலைப்பாட்டில் நின்று, மொறோ-கோல்ட்மன் கன்னை வலியுறுத்துகையில், அங்கே சோசலிச புரட்சியின் சாத்தியக்கூறே இல்லை என்று வலியுறுத்தியது. சமூக ஜனநாயகம் மற்றும் ஜனநாயகரீதியில் செயல்படும் பல்வேறு முதலாளித்துவ இயக்கங்களது அணியில் சேர்ந்து, முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான ஓர் இயக்கமாக தன்னை மாற்றிக் கொள்வதை தவிர, நான்காம் அகிலத்திடம் வேறெந்த நம்பகமான அரசியல் விருப்பத்தேர்வும் இல்லை என்று அது வாதிட்டது.
மொறோவும் கோல்ட்மனும் நான்காம் அகிலத்தை முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஓர் இடது தொங்குதசையாக மாற்றுவதற்கு அறிவுறுத்திய அதேவேளையில், சாக்ட்மன்வாதிகளுடன் அரசியல் மறுஐக்கியத்திற்கும் அழைப்புவிடுத்தனர், முன்னர் சோவியத் ஒன்றிய பாதுகாப்பை நிராகரித்திருந்த அவர்கள் வேகமாக "கம்யூனிச சர்வாதிபத்தியத்திற்கு" (communist totalitarianism) எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போராட்டத்திற்கு முழு ஆதரவாக பரிணமித்து கொண்டிருந்தார்கள். நான்காம் அகிலமும் சோசலிச தொழிலாளர் கட்சியும் (SWP) பலமாக மற்றும் மிகச் சரியாக மொறோ மற்றும் கோல்ட்மனின் நெறிதவறிய முன்னோக்கை நிராகரித்தன.
ஐரோப்பிய சம்பவங்களை நோக்கிய ஒரு "சரியான நிலைப்பாடு" குறித்த வாதங்களது மதிப்பீடு, வெறுமனே புத்திஜீவித விவாதப்பொருளாக இருக்கவில்லை. பெரிதும் வடிவமற்ற மற்றும் ஸ்திரமற்ற நிலைமையில், போருக்குப் பிந்தைய அரசியல் நெருக்கடியின் விளைவு ஐயத்திற்குரியதாக இருந்த நிலையில், அந்த சூழ்நிலையிலும் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் புரட்சிகர சாத்தியக்கூறுக்கு முழு வெளிப்பாட்டை வழங்க முயன்று வந்தனர். அவர்கள் முதலாளித்துவத்தின் மீள்ஸ்திரப்பாடு தவிர்க்கவியலாதது என்ற முன்கூட்டிய அனுமானங்களின் மீதல்ல, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு நிலவிய புறநிலையான வாய்ப்புவளங்கள் மீது அவர்களது பணியை அமைத்துக் கொண்டார்கள். ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு முந்தைய மரணகதியிலான மணித்தியாலங்களுக்கு முன்னர், நிலைமை "நம்பிக்கையற்றுள்ளதா" என்று ட்ரொட்ஸ்கியிடம் கேட்கப்பட்டது. அந்த வார்த்தை புரட்சியாளர்களின் அகராதியிலேயே கிடையாது என்றவர் பதிலளித்தார். “போராட்டமே தீர்மானிக்கும்" என்று ட்ரொட்ஸ்கி அறிவித்தார். போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் சீர்குலைவு மற்றும் குழப்பத்திற்கு இடையே, புரட்சிகர விளக்கம் நம்பிக்கையற்றது என்றும் முதலாளித்துவ ஸ்திரப்பாடு தவிர்க்கவியலாதது என்றும் வாதிட்டவர்களுக்கு இந்த பதிலை தான் கூற வேண்டியிருந்தது. மொறோ மற்றும் கோல்ட்மன் அறிவுறுத்தியவாறு தோல்வியை முன்கூட்டியே ஒப்புக் கொண்டிருந்ததால், ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் முதலாளித்துவ மறுஸ்திரப்பாட்டிற்கு ஆதரவாக வேலை செய்த காரணிகளில் ஒன்றாக மாறி இருப்பார்கள்.
ஜனநாயக கோரிக்கைகளுக்கும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த முரண்பாடான வாதங்கள், வெவ்வேறு வர்க்க நிலைப்பாடுகளில் பிரதிபலித்தது. மொறோ-கோல்ட்மன் போக்கின் முன்னணி பிரதிநிதிகள் அனைவரும் துரிதமாக வலதை நோக்கி நகர்ந்தனர். கோல்ட்மன் SWP ஐ விட்டு வெளியேறி, பின்னர் சில காலத்தில் சாக்ட்மன்வாத இயக்கத்தில் இணைந்தார், பின்னர் விரைவிலேயே, மார்க்சிசத்தை கைத்துறந்தார். 1946 இல் SWP இல் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், மொறோ சோசலிச அரசியலை கைத்துறந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பனிப்போரை ஆதரித்ததுடன், புதிர் இலக்கியத்தின் செல்வ செழிப்பான பதிப்பாளராக மாறினார். சோவியத் ஒன்றியத்தை ஓர் "அடிமை அரசாக" கண்டனம் செய்த Van Heijenoort உம் நான்காம் அகிலத்திலிருந்து விலகி, சோசலிச அரசியல் உடனான அவரின் தனிப்பட்ட ஈடுபாட்டை நிறைவு செய்து, ஒரு குறிப்பிடத்தக்க கணிதவியலாளர் ஆனார்.
பனிப்போர் சூழல், போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் பொருளாதார மீள்ஸ்திரப்பாடு, தொழிலாள வர்க்க புரட்சிகர இயக்கம் அதிகாரத்துவத்தால் திக்குமுக்காட செய்யப்பட்டமை ஆகியவை இடதுசாரி குட்டி-முதலாளித்துவ புத்திஜீவிகளின் அரசியல் கண்ணோட்டத்தைப் பாதித்திருந்த நிலையில், இத்தகைய தனிநபர்களின் அரசியல் பரிணாமம் ஒரு பரந்த சமூக நிகழ்வுபோக்கின் பாகமாக இருந்தது. மார்க்சிசம் இருத்தியல் வாதத்திற்கு (existentialism) வழிவிட்டது. சமூக நிகழ்வுபோக்குகளின் மீது ஆரம்ப ஒருமுனைப்பை செய்வதற்கு பதிலாக அது தனிப்பட்ட பிரச்சினைகள் மீதான நிலைப்பாடுகளால் பிரதியீடு செய்யப்பட்டது. உளவியல் நிலைப்புள்ளியில் இருந்து வழங்கப்பட்ட அவர்களின் பொருள்விளக்கத்திற்கு ஆதரவாக, அரசியல் சம்பவங்களின் விஞ்ஞானபூர்வ மதிப்பீடு கைவிடப்பட்டது. பொருளாதார திட்டமிடலின் சாத்தியக்கூறு அடிப்படையில் அமைந்த எதிர்காலம் குறித்த கருத்துருக்கள், கற்பனாவாத பகல்கனவிற்கு வழிவிட்டது. தொழிலாள வர்க்கத்தின் மீதான பொருளாதார சுரண்டல் மீதான ஆர்வம் குறைந்தது. வர்க்க ஆட்சி மற்றும் பொருளாதார அமைப்புமுறை பிரச்சினைகளில் இருந்து பிரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மீதான முன்னீடுபாடு முன்னுக்குக் கொண்டு வரப்பட்டது.
IKD தலைவர்களது பரிணாமம், சமூகரீதியில் புத்திஜீவித "பின்னோக்கி திரும்பும்" தீர்மானகரமான நிகழ்ச்சிப்போக்கில் தெளிவாக உள்ளது. நான்காம் அகிலத்துடனான அதன் உறவுகளை IKD கடுமையாக்கி கொண்ட பின்னர், ஜோசெஃப் வேபர் முற்றிலுமாக மார்க்சிச அரசியலுடன் உடைத்துக் கொண்டு, ஓர் அரை-அராஜகவாத சுற்றுச்சூழல் கற்பனாவாதத்தின் ஒரு தீர்க்கதரிசியாக ஆனார். அவரது பிரதான சீடர்களில் ஒருவரும் சோசலிச தொழிலாளர் கட்சியின் முன்னாள் அங்கத்தவருமான முர்ரே புக்சன் (Murray Bookchin, 1921-2006), 1971 இல், Post-Scarcity Anarchism என்ற அவரது நூலை ஜோசெஃப் வேபருக்கு அர்பணித்தார். மார்க்சிசத்தின் ஒரு கடுமையான எதிர்ப்பாளராக மாறியிருந்த புக்சன், “இந்நூலில் அபிவிருத்தி செய்யப்பட்ட கற்பனாவாத திட்டத்தை வரையறுக்க இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நெறிப்படுத்திய" அவரது ஆலோசகருக்கு நன்றி தெரிவித்தார். [14] முதலாளித்துவ தேசியவாத குர்திஷ் தொழிலாளர் கட்சியின் (PKK) தலைவர் அப்துல்லா ஓச்சலன் (Abdullah Öcalan) 1999 இல் துருக்கிய அரசாங்கத்தால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்குப் பின்னர், புக்சினின் எழுத்துக்கள் அவர் கவனத்திற்கு வந்தது. புக்சினின் எழுத்துக்களில், “ஜனநாயகக் கூட்டமைப்புவாதம்" (Democratic Confederalism) குறித்த அவரின் சொந்த முன்மொழிவுகளுக்குப் பொருந்திய சிந்தனைகளை ஓச்சலன் கண்டார். புக்சினின் மரணத்தின் போது, PKK அவரை "20 ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த சமூக விஞ்ஞானிகளில் ஒருவர்" என்று கௌரவித்தது. [15]
அரசியலை வர்க்க நலன்களின் தர்க்கவியலே ஆள்கிறது. அகநிலை தகுதிவகைகளின் அடிப்படையில் அரசியல் கன்னைகளை மதிப்பிட முனைபவர்கள், குறிப்பாக கல்வியாளர்கள், இந்த அடிப்படை உண்மையை அடிக்கடி மறந்துவிடுகிறார்கள். அனைத்திற்கும் மேலாக, அவர்களது தீர்மானங்கள் குறித்து குறிப்பாக சந்தர்ப்பவாதிகள் மற்றும் புரட்சியாளர்களுக்கு இடையிலான ஓர் சர்ச்சையை மதிப்பிடும் விடயத்தில், அவர்களது சொந்த குறிப்பிடப்படாத அரசியல் பாரபட்சம் மேலோங்கி இருக்கும். குட்டி-முதலாளித்துவ கல்வியாளர்களைப் பொறுத்த வரையில், சந்தர்ப்பவாதிகள் முன்னெடுக்கும் கொள்கைகள் வழமையாக புரட்சியாளர்கள் முன்னெடுக்கும் கொள்கைகளை விட மிகவும் "யதார்த்தமானதாக" தெரிகிறது. ஆனால், இங்கே எதுவும் அப்பாவித்தனமான மெய்யியல் கிடையாது என்பதைப் போல, இங்கே அப்பாவித்தனமான அரசியலும் கிடையாது. முன்உணர முடிகிறதோ இல்லையோ, ஓர் அரசியல் வேலைத்திட்டம் புறநிலை விளைவுகளைக் கொண்டுள்ளது. வரலாற்றுக்கு அப்பாற்பட்ட தேசிய சுதந்திரம் மற்றும் அனைவருக்குமான ஜனநாயகம் குறித்த IKD இன் வேலைத்திட்டம் சோசலிசத்திற்கு விரோதமான, வர்க்க நலன்களுக்கு அன்னியப்பட்ட ஒரு வெளிப்பாடாக இருந்ததை, 1940 களில், நான்காம் அகிலமும் SWP உம் கண்டு கொண்டன.
1950 களின் ஆரம்பத்தில், பின்னோக்கி திரும்பும் கருத்துருக்களுக்கு அராஜவாத மற்றும் சுற்றுச்சூழல் தத்துவத்தின் கட்டமைப்பிற்குள் மறுவடிவம் கொடுக்கப்பட்டன. அதற்கு சிலகாலத்திற்குப் பின்னர், மார்க்சிச-விரோத புக்சினின் முயற்சிகளால் ஜோசெஃப் வேபரின் கருத்துருக்கள், பிரதான ஏகாதிபத்திய சக்திகளுடன் முடிவில்லா தந்திரங்களும் கூட்டுறவுகளும் சார்ந்த அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டிருந்த குர்திஷ் தேசியவாதிகள் உட்பட, குட்டி-முதலாளித்துவத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்குள் ஒரு பரந்த சமூக மற்றும் அரசியல் அடித்தளமாக அபிவிருத்தி அடைந்தன. ட்ரொட்ஸ்கிசத்தை கைத்துறந்த பின்னர், பண்டா முதலாளித்துவ தேசியவாதத்திற்குத் திரும்பி, ஓச்சலனை உணர்வுபூர்வமாக பாராட்டும் ஒருவராக மாறியதுடன், PKK இன் செயலூக்கம் கொண்ட ஆதரவாளராகவும் மாறினார்.
1940 களின் சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கத்தினுள், சாக்ட்மன்வாதிகள், “மூன்று கருத்துருக்கள்" குழு மற்றும் மொறோ-கோல்ட்மன் போக்கினை, அதற்கு சிலகாலத்திற்குப் பின்னர் உருவெடுத்த பப்லோவாத திருத்தல்வாதத்துடன் இணைத்த ஒரு முக்கிய அரசியல் கருத்துரு என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியத்திறனை நிராகரிப்பதாகும். இந்த நிராகரிப்பு, துல்லியமாக பல்வேறு வடிவங்களை எடுத்தன. ஒரு புதிய ஆளும் வர்க்கமாக மாறிவரும் நிகழ்ச்சிப்போக்கில் இருந்த, அல்லது ஏற்கனவே மாறியிருந்த, ஓர் அதிகாரத்துவ உயரடுக்கால் கட்டுப்படுத்தப்படும் "கூட்டமைப்பு" சமூகத்தின் ஒரு புதிய வடிவத்தையே, சோவியத் ஒன்றியம் பிரதிநிதித்துவம் செய்ததாக சாக்ட்மன் ஊகித்தார். சோவியத் ஒன்றியம் "அரசு முதலாளித்துவத்தின்" ஒரு வடிவம் என்பது சாக்ட்மன் தத்துவத்தின் வேறொரு வடிவமாக இருந்தது. மொறோ-கோல்ட்மன் போக்கைப் பின்தொடர்ந்து, “மூன்று கருத்துருக்கள்" குழு சோசலிச புரட்சியானது வரலாற்றுரீதியில் தனது பாதையை இழந்துவிட்டதாக தீர்மானித்தது.
பப்லோ மற்றும் மண்டேலின் திருத்தல்கள், ட்ரொட்ஸ்கிசத்தை கைவிட்டதை, அதிரடி வீராவேசங்களைக் கொண்டு மறைத்திருந்தது. ஆனால் அவர்களின் முன்னோக்கில், தொழிலாள வர்க்கம் அல்ல ஸ்ராலினிச அதிகாரத்துவமே சோசலிச ஸ்தாபிதத்திற்கு முன்னணி சக்தியாக இருந்தது. பப்லோவாத தத்துவம் சாக்ட்மன் தத்துவத்திற்கு ஒரு தலைகீழ் வினோதமாக இருந்தது. சாக்ட்மன்வாதிகள் ஸ்ராலினிச ஆட்சியை வெடிப்பார்ந்த "அதிகாரத்துவ கூட்டமைப்புவாத" (bureaucratic collectivist) சமூகம் எனும் ஒரு புதிய வடிவத்தின் முன்னோடி என்று குற்றஞ்சாட்டிய நிலையில், பப்லோவாத போக்கோ இரண்டாம் உலக போருக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்தாபிக்கப்பட்ட அதிகாரத்துவ ஸ்ராலினிச ஆட்சிகள், முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறுவதற்கான வரலாற்று மாற்றத்திற்கு அவசியமான வடிவமாக இருக்குமென பிரகடனப்படுத்தியது. இந்த போக்குகள் எல்லாம், ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வழியில், தொழிலாள வர்க்கம் புரட்சிகர பாத்திரம் வகிக்காது என்ற அவற்றின் அரசியல் முன்னோக்கை அடித்தளத்தில் கொண்டிருந்தன. இதன்படி, தொழிலாள வர்க்கம் வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் ஒரு செயலூக்கம் கொண்ட சக்தியாக மட்டுமல்லாது ஒரு தீர்க்கரமான சக்தியாக கூட இருக்கவில்லை.
செப்டம்பர் 1939 இல், மக்ஸ் சாக்ட்மன் (Max Shachtman) மற்றும் ஜேம்ஸ் பேர்ன்ஹாம் (James Burnham) தலைமையில், சோசலிச தொழிலாளர் கட்சிக்குள், குட்டி-முதலாளித்துவ எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கத்திலேயே, பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள வரலாற்று முன்னோக்கு குறித்த அடிப்படை கேள்வியில் கவனம் செலுத்துமாறு ட்ரொட்ஸ்கி அழைப்புவிடுத்தார். நான்காம் அகிலம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை மட்டும் வலியுறுத்தவில்லை என்று எழுதிய ட்ரொட்ஸ்கி, கடந்தகால தோல்விகளில் இருந்து படிப்பினைகளைக் கற்று, அதிகாரத்துவ கட்டுப்பாட்டு பதவிகளில் இருந்து சோசலிசத்தின் காட்டிக்கொடுப்பாளர்களை நீக்கி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தின் வெற்றிக்கு அவசியமான தலைமையைத் தொழிலாள வர்க்கத்தினுள் கட்டியெழுப்புவதையும் சாத்தியமானது என்று எழுதிய ட்ரொட்ஸ்கி, குட்டி-முதலாளித்துவ இடது இந்த அடிப்படை புரட்சிகர முன்னோக்கை நிராகரித்ததாக குறிப்பிட்டார்:
ஏமாற்றமடைந்திருந்த மற்றும் உதறல் எடுத்திருந்த போலி-மார்க்சிசத்தின் பல்வேறு வகைப்பட்ட எல்லா பிரதிநிதிகளும், தலைமையின் திவால்நிலைமையானது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கான அதன் தகைமையின்மையை மட்டுமே "பிரதிபலிக்கிறது" என்ற அனுமானத்தில், நேரெதிராக சென்றனர். நமது எதிர்ப்பாளர்களில் ஒருவர் கூட இந்த கருத்தை தெளிவாக வெளிப்படுத்தவில்லை, ஆனால் ஸ்ராலினிசவாதிகள் மற்றும் சமூக-ஜனநாயகவாதிகளைக் குறித்து கூற வேண்டியதே இல்லை என்ற நிலையில், அதிதீவிர இடதுகள், மத்தியவாதிகள், அராஜகவாதிகள் என இவர்கள் அனைவருமே அவர்களது தோல்விகளுக்கான பொறுப்பைப் பாட்டாளி வர்க்கத்தின் தோள்களுக்கு மாற்றுகின்றனர். அவர்களில் யாருமே துல்லியமாக எந்த நிலைமைகளின் கீழ் பாட்டாளி வர்க்கம் சோசலிச திருப்பத்தை பூர்த்திசெய்யும் தகைமை கொண்டிருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டவில்லை.
தோல்விகளுக்கான காரணம் பாட்டாளி வர்க்கத்தின் சமூக பண்புகளில் தான் வேரூன்றியுள்ளது என்று நாம் எடுத்துக் கொண்டால், பின்னர், நவீன சமூகத்தின் நிலைமையை அவநம்பிக்கைக்கு உரியதாக நாம் ஒப்புக்கொள்வதாக ஆகிவிடும். [16]
பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு அடியில் இருந்த அவநம்பிக்கைவாதம் —இதை ஒருவர் மனக்கசப்பு (despair) என்பதாக கூட விவரிக்கலாம்— 1951 மூன்றாம் உலக மாநாட்டிற்கு முன்னதாக அபிவிருத்தி செய்யப்பட்ட அதன் "போர்-புரட்சி" (war-revolution) தத்துவத்தில் ஒருமித்த வெளிப்பாட்டைக் கண்டது. பப்லோவாத ஆவணம் அறிவித்தது, “நமது இயக்கத்தைப் பொறுத்த வரையில், புறநிலை சமூக யதார்த்தமானது, இன்றியமையாத விதத்தில் முதலாளித்துவ ஆட்சி மற்றும் ஸ்ராலினிச உலகை உள்ளடக்கி உள்ளது.” சோசலிசத்திற்கான போராட்டம் இந்த இரண்டு முகாம்களுக்கு இடையிலான ஒரு போர் என்ற வடிவத்தை எடுக்கும், அதிலிருந்து ஸ்ராலினிச முறை வெற்றிகரமானதாக உருவெடுக்கும். அணுவெப்ப உமிழ்வு போரின் (thermo-nuclear war) சாம்பல்களில் இருந்து ஸ்ராலினிசவாதிகள் உயிர்த்தெழுந்து, கிழக்கு ஐரோப்பாவில் ஏற்கனவே உள்ளதைப் போன்ற "ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளை" ஸ்தாபிப்பார்கள், அவை நூற்றாண்டுகளுக்கும் நீடித்திருக்கும். இந்த விநோதமான சூழலில், தொழிலாள வர்க்கத்திற்கோ அல்லது நான்காம் அகிலத்திற்கோ எந்த சுயாதீனமான பாத்திரமும் இருக்காது. அதன் காரியாளர்கள் ஸ்ராலினிச கட்சிகளுக்குள் நுழைந்து, அவர்களுக்கு அழுத்தமளிக்கும் இடது குழுவாக செயல்பட அறிவுறுத்தப்படுவார்கள். இந்த கலைப்புவாத முன்னோக்கு (liquidationist perspective) ஸ்ராலினிச கட்சிகளுக்குள் நுழைவதோடு நின்றுவிடவில்லை. இந்த தொகுப்பில் விளக்கப்பட்டவாறு:
ஸ்ராலினிசத்தை ஏற்பதென்பது, புதிய பப்லோவாத கண்ணோட்டத்தின் ஒரு மத்திய அம்சமாக இருந்தது என்றாலும், இதை அதன் இன்றியமையா குணாம்சமாக பார்ப்பது பிழையாக இருக்கும். பப்லோவாதம் எப்போதுமே அதன் போக்கில் கலைப்புவாதமாக இருந்தது (இருக்கிறது): அதாவது, சோசலிச புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் மேலாளுமையை கைவிடுவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று பாத்திரத்தைத் தெளிவாக நனவுபூர்வமாக வெளிப்படுத்தும் வகையில், நான்காம் அகிலத்தினது உண்மையான சுயாதீனமான இருப்பைக் கைவிடுவதுமாக இருந்தது. மத்திய கலைப்புவாத ஆய்வுப்பொருளை விளக்குவதற்கு போர்-புரட்சி தத்துவம் ஆரம்ப கட்டமைப்பை வழங்கியது: அதாவது நான்காம் அகிலத்தின் பிரிவுகள் இயங்கிவந்த நாடுகளில் தொழிலாளர் இயக்கம் அல்லது பாரிய பெருந்திரளான இயக்கத்தில் எந்த அரசியல் போக்குகள் மேலாளுமை கொண்டிருந்தாலும் அவற்றிற்குள் சகல ட்ரொட்ஸ்கிச கட்சிகளும் கலைக்கப்பட வேண்டும் என்பதாகும். [17]
நவம்பர் 1953 இல் நடந்த உடைவு, சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்களில் ஒன்றாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் உயிர்பிழைப்பே —அதாவது ஒட்டுமொத்த சோசலிச போராட்ட மரபின் நனவுபூர்வமான மற்றும் அரசியல்ரீதியிலான வெளிப்பாடு— பணயத்தில் வைக்கப்பட்டிருந்தது என்பதற்கு குறைவின்றி இருந்தது. நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அந்த மிக முக்கிய தருணத்தில், கனனின் "பகிரங்க கடிதம்" இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகள் மற்றும் எதிர்புரட்சிகளின் மூலோபாய படிப்பினைகளில் இருந்து எடுக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிசத்தின் அடிப்படை கோட்பாடுகளை தெளிவாக மீளவலியுறுத்தியது. நான்காம் அகிலத்தின் கலைப்பு என்பதன் அர்த்தம், ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் அதன் அரசியல் முகமைகளான ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் எதிராக அரசியல்ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட மார்க்சிச எதிர்ப்பை முடித்துக் கொள்வது என்றாகும். இதுவொரு ஊக புனைவுகோள் அல்ல. இது ஒரு வரலாற்று உண்மை விடயம், அதன் கலைப்புவாத கொள்கைகள் நடைமுறைபடுத்தப்பட்ட பல நாடுகளில், நடைமுறையளவில் ஒவ்வொரு கண்டத்திலும், இதை பப்லோவாதத்தின் பேரழிவுகரமான விளைவுகளை ஆய்வு செய்வதன் மூலமாக சரிபார்க்க முடியும்.
சோவியத் ஒன்றியத்தின் கதியைப் பொறுத்த வரையில், ஸ்ராலினிச ஆட்சியின் முடிவு வரையில் பப்லோவாத தலைவர்கள் அதிகாரத்துவ சுய-சீர்திருத்த தத்துவத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதை கண்டிப்பாக நினைவுகூர வேண்டும். மிக்கைல் கோர்பசேவ் பதவிக்கு வந்ததன் மீதான மற்றும் அவரது பெரெஸ்துரோய்கா (புனர்நிர்மாணம் - perestroika) சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மீதிருந்த இணக்கம், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்சிக்கான இறுதி தயாரிப்பைக் குறித்தது என்று அனைத்துலகக் குழு 1986 இன் தொடக்கத்திலேயே எச்சரித்த போதினும், பப்லோவாதிகள் அவரது பிற்போக்குத்தனமான கொள்கைகளைச் சோசலிசத்தை நோக்கிய தீர்க்கமான முன்னெடுப்பாக புகழ்ந்தனர். ஏர்னெஸ்ட் மண்டேல் 1988 இல் கோர்பசேவ் ஐ "ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் தலைவராக" வர்ணித்தார். கோர்பசேவ் இன் கொள்கைகள் முதலாளித்துவத்தின் மீட்சிக்கு இட்டுச் செல்கின்றன என்ற எச்சரிக்கைகளை "அபத்தமென" உதறிவிட்டு, மண்டேல் அறிவித்தார்: “ஸ்ராலினிசமும் பிரெஷ்னேவ்விசமும் (Brezhnevism) நிச்சயமாக இறுதிகட்டத்தில் உள்ளன. சோவியத் மக்களும், சர்வதேச பாட்டாளி வர்க்கமும், ஒட்டுமொத்த மனிதயினமும் நிம்மதி பெருமூச்சு விடலாம்.” [18]
மண்டேலிடம் பயின்ற பிரிட்டிஷ் பப்லோவாத தாரிக் அலி, கோர்பசேவ் ஆட்சியின் கொள்கைகள் மீதான அவரது உற்சாகத்தில் முன்பினும் அதிகமாக தங்குதடையின்றி இருந்தார். 1988 இல் பிரசுரிக்கப்பட்ட மேலிருந்து புரட்சி: சோவியத் ஒன்றியம் எங்கே செல்கிறது? என்ற அவரது நூலில், அலி பப்லோவாதத்தின் பல குணாம்ச கூறுபாடுகளை ஒருங்கிணைத்திருந்தார்: ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கான வரம்பில்லா ஆதரவு, மோசமான அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் யதார்த்ததை புரிந்துகொள்ள முற்றிலும் தகைமையின்மை ஆகியவற்றை அது ஒருங்கிணைத்திருந்தது. அவரது முகவுரையில், அலி அந்நூலின் சாராம்சத்தை வழங்கியிருந்தார்:
மேலிருந்து புரட்சி நூல், சோவியத் உயரடுக்கிற்குள் கோர்பசேவ் ஒரு முற்போக்கான, சீர்திருத்தவாத போக்கை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்று வாதிடுகிறது, அவர் வேலைதிட்டம், வெற்றி அடைந்தால், உலகளவில் சோசலிசவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகளுக்கான ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பிரதிநிதித்துவம் செய்யும். உண்மையில் கோர்பசேவ் இன் நடவடிக்கை அளவு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனின் முயற்சிகளை நினைவூட்டுகின்றன. [19]
ஆப்ரஹாம் லிங்கன் அரசியல் உயரத்திற்கு கோர்பசேவ் ஐ அவர் உயர்த்திக் காட்டியும் ஸ்ராலினிசத்திற்கு அவரின் சொந்த அர்பணிப்பின் முழு அளவை அது போதுமானளவிற்கு வெளிப்படுத்தவில்லை என்று கவலை கொண்டு, தாரிக் அலி தனது தொகுப்பை பணிவுடன், “சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி அங்கத்தவர் போரிஸ் யெல்ட்சினுக்காக, அவரது அரசியல் தைரியம் அந்நாடு முழுவதிலும் ஒரு முக்கிய அடையாளமாக அவரை ஆக்கியிருந்தது" என்று அர்பணித்தார். [20]
சோவியத் ஒன்றியத்தின் இறுதி அழிப்பின் இரண்டு முக்கிய கட்டமைப்பாளர்களான மிக்கைல் கோர்பசேவ் மற்றும் போரிஸ் யெல்ட்சினுக்கு பப்லோவாத தலைவர்கள் அவர்களின் மூடுமறைப்பற்ற ஆதரவை வழங்கியமை, பப்லோவாதத்தின் பிற்போக்குத்தனமான குணாம்சத்திற்கும் மற்றும் ஏகாதிபத்தியத்தின் இந்த அழிவுகரமான குட்டி-முதலாளித்துவ அரசியல் முகமைக்கும் எதிராக அனைத்துலகக் குழு தசாப்தங்களாக தொடுத்து வந்திருந்த போராட்டங்களின் சட்டபூர்வத்தன்மைக்கு மறுக்கவியலாத வரலாற்று உத்தரவாதத்தை வழங்கியது.
* * * * * *
1988 இல் நாம் காக்கும் மரபியம் பதிப்பிக்கப்பட்டதில் இருந்து, வெடிப்பார்ந்த அரசியல் அபிவிருத்திகளுக்கு அப்பாற்பட்டு குறிப்பிடுவதானால், உலகம் ஆழ்ந்த பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களைக் கண்டுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, “வரலாற்றின் முடிவு" என்று கூறப்பட்டது ஒருபுறம் இருக்கட்டும், சோவியத்திற்குப் பிந்தைய ஏகாதிபத்திய வெற்றி பரவச நாட்களில் உறுதியளிக்கப்பட்டவாறு அது சமாதானத்திற்கான ஒரு புதிய சகாப்தத்தைக் கொண்டு வரவில்லை. உலகம் "நெருக்கடியில்" உள்ளது என்று கூறுவதே கூட குறைத்துக் கூறுவதாக உள்ளது. “பெருங்குழப்பங்கள்" என்பது அதைவிட சற்று பொருத்தமான விவரிப்பாக இருக்கும். கடந்த கால் நூற்றாண்டு காலகட்டம், தொடர்ச்சியான போர்களால் அலைக்கழிக்கப்பட்டுள்ளது. உலகில் முன்பினும் அதிக பாகங்கள் ஏகாதிபத்திய புவிசார் அரசியல் மோதலின் பெருஞ்சுழலுக்குள் இழுக்கப்பட்டு வருகிறது. 1991 க்குப் பின்னர் உலகை ஆட்சி செய்வதற்கான அதன் எதிர்பார்ப்பில் விரக்தியடைந்து போயுள்ள அமெரிக்கா, முன்பினும் அதிகமாக பொறுப்பற்ற ரீதியில் அதன் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் உலக போர் பேரழிவிலிருந்து உருவான ஏகாதிபத்திய உலக ஒழுங்கமைப்பின் அடித்தளமோ, சிதைந்து வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடன் தீவிரமடைந்து வரும் வாஷிங்டனின் மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்காவுக்கும் மற்றும் அதன் பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய "பங்காளிகளுக்கும்", குறிப்பாக ஜேர்மனிக்கும் இடையிலான அரசியல் உறவுகளே கூட துரிதமாக சீர்குலைந்து வருகின்றன.
பொருளாதார முகப்பில், முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடி மாற்றி நெருக்கடியால் தடுமாறிக் கொண்டிருக்கிறது. 2008 பொருளாதார பொறிவின் விளைவுகள் இன்னும் கடந்து வரப்படவில்லை. பொறிவுக்கான மரபார்ந்த பிரதான நிகழ்வுபோக்குகள் சமூக சமத்துவமின்மையை தீவிரப்படுத்தி, ஜனநாயக கட்டமைப்பிற்குள் நிலைத்திருக்க முடியாத மட்டங்களை எட்டியுள்ளது. ஒரு சிறிய உயரடுக்கிற்குள் மலைப்பூட்டும் அளவிற்கான செல்வவள திரட்சியானது, முதலாளித்துவ அரசாங்கங்களின் அதிகரித்துவரும் அரசியல் ஸ்திரமின்மையை அடிக்கோடிடும் ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்காக உள்ளது. உலகின் ஒவ்வொரு பாகத்திலும் வர்க்க மோதல் அதிகரித்து வருகிறது. முதலாளித்துவ உற்பத்தி மற்றும் நிதி பரிவர்த்தனைகளின் பூகோளமயமாக்கம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு பொதுவான போராட்டத்திற்குள் ஈர்த்து வருகிறது.
புரட்சிகர வர்க்க போராட்டம் ஆழமாக விரிவடைவதற்கு புறநிலைமைகள் தூண்டுதல் அளித்து வருகின்றன. ஆனால் இந்த புறநிலை தூண்டுதல்கள், அரசியல்ரீதியில் நனவுபூர்வ நடவடிக்கைகளாக மாற்றப்பட வேண்டும் என்பதோடு, இது தொழிலாள வர்க்கத்தின் தலைமை குறித்த அதிமுக்கிய கேள்வியை உயர்த்துகிறது.
நாம் காக்கும் மரபியத்தின் ஆங்கில பதிப்பைப் பெற இங்கே அழுத்தவும்
உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழ்ந்த நெருக்கடி மற்றும் முதலாளித்துவத்தின் உயர்ந்த மட்டங்களில் நிலவும் பொதுவான அரசியல் குழப்பங்களுக்கு இடையே, ஒரு முன்னோக்கிய பாதையைக் காண்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் முயற்சிகளானது, அதன் இயக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தவறாக வழிநடத்தவும் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு தசாப்தங்களின் அனுபவங்கள் பெருந்திரளான மக்களின் நனவில் அவற்றின் சுவடுகளை விட்டுச் சென்றுள்ளன. உத்தியோகபூர்வ "சோசலிச" கட்சிகளின் திவால்நிலைமை பரவலாக உணரப்படுகிறது. ஆனால் பெருந்திரளான மக்கள், சமூக பிரச்சினைகளுக்கு இன்னும் அதிக தீவிர அணுகுமுறைக்கு வாக்குறுதி அளிக்கும், கிரீஸில் சிரிசா போன்ற, புதிய அமைப்புகளை நோக்கி திரும்புகையில், அவற்றின் வாக்குறுதிகள் வெற்றுத்தனமானவை என்பது விரைவிலேயே அம்பலமாகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான மக்கள் போராட்ட அலை மீதேறி அதிகாரத்திற்கு வந்த சிரிசா, அதன் ஆதரவாளர்களுக்கு அது அளித்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் கைத்துறக்க வெறும் ஒரு சில மாதங்களே ஆனது. ஸ்பெயினில் பெடெமோஸ் அல்லது பிரிட்டனில் கோர்பைன் அல்லது அமெரிக்காவில் சாண்டர்ஸ் அதிகாரத்திற்கு வந்திருந்தாலும் கூட, விளைவு வித்தியாசமாக இருந்திருக்கப் போவதில்லை.
புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியைத் தீர்ப்பதே தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மத்திய வரலாற்றுப் பணியாகும். இந்த சவாலை பூர்த்தி செய்ய போராடி வரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு வெளியே, உலகில் இதற்காக போராடும் வேறெந்த அரசியல் அமைப்பும் இல்லை. இந்த அறிக்கையின் மதிப்பு, லியோன் ட்ரொட்ஸ்கியின் உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபை பாதுகாப்பதில், இப்போது அறுபத்தி ஐந்தாண்டுகளுக்கு நீளும், ICFI இன் போராட்ட வரலாற்றினால் உறுதிப்படுத்தப்படுகின்றது.
டேவிட் நோர்த்
டெட்ராய்ட்
ஜூன் 22, 2017
குறிப்புகள்:
[1] நாம் காக்கும் மரபியத்தில் மேற்கோளிடப்பட்டது (Detroit: Labor Publications, 1988), pp. 231–32
[2] WRP இன் சந்தர்ப்பவாத சிதைவு, WRP எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக்கொடுத்தது 1973-1985 என்பதில் விரிவாக ஆராயப்பட்டது, வெளியீடு: Fourth International, Vol. 13, No. 1, Summer 1986.
[3] தொழிலாளர் கழகத்தின் ஆவணங்கள், ICFI ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாக்கிறது 1982-1986 என்பதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது, வெளியீடு: Fourth International, Volume 13, No. 2, Autumn 1986.
[4] Marx and Engels, Collected Works, Volume 26 (Moscow: Progress Publishers, 1990), p. 389.
[5] “The National Question in Europe: Three Theses on the European Situation and the Political Tasks,” dated October 19, 1941, published in the December 1942 edition of Fourth International, pp. 370-372. Available: www.marxists.org/history/etol/newspape/fi/vol03/no12/3theses.htm.
[6] Ibid.
[7] “Capitalist Barbarism or Socialism,” published in The New International, October 1944, p. 333.
[8] Ibid., emphasis in the original.
[9] Ibid., p. 340, emphasis in the original.
[10] Ibid., emphasis in the original.
[11] Ibid., emphasis in the original.
[12] The Permanent Revolution (London: New Park Publications, 1962), p. 152, emphasis in the original.
[13] Marcel Van Der Linden, “The Prehistory of Post-Society Anarchism: Josef Weber and the Movement for a Democracy of Content (1947–1964),” Anarchist Studies, 9 (2001), p. 131.
[14] Ibid. p. 127
[15] https://roarmag.org/essays/bookchin-kurdish-struggle-ocalan-rojava/
[16] “The USSR in War,” In Defense of Marxism (London: New Park Publications, 1971), p. 15.
[17] The Heritage We Defend, p. 191.
[18] Ernest Mandel, Beyond Perestroika (London: Verso, 1989), p. xvi.
[19] Tariq Ali, Revolution From Above (Surry Hills, Australia: Hutchinson, 1988). p. xiii.
[20] Ibid., dedication page.
நாம் காக்கும் மரபியம்: நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு ஒரு பங்களிப்பு