Print Version|Feedback
An open letter to Google: Stop the censorship of the Internet! Stop the political blacklisting of the World Socialist Web Site!
கூகுளுக்கு ஒரு பகிரங்க கடிதம்: இணைய தணிக்கையை நிறுத்து! உலக சோசலிச வலைத் தளத்தை இருட்டடிப்பு செய்வதை நிறுத்து!
25 August 2017
சுந்தர் பிச்சை
தலைமை செயலதிகாரி
Google, Inc.
லாரன்ஸ் பேஜ்
தலைமை செயலதிகாரி/ இயக்குனர்
Alphabet, Inc.
செர்ஜி ப்ரின்
தலைவர்/இயக்குனர்
Alphabet, Inc.
எரிக் ஸ்மித்
இயக்குனர் குழுவின் சிறப்பு தலைவர்
Alphabet, Inc.
கனவான்களே:
“உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து, உலகளவில் அனைவரும் அணுகக்கூடியவாறு அவற்றை பயனுள்ள முறையில் ஆக்குவதே" ஆரம்பத்திலிருந்து கூகுளின் குறிக்கோள் அறிக்கையாக இருந்தது. அதன் உத்தியோகபூர்வ நடத்தை விதிகள், கூகுளின் பிரபல இலட்சிய வாசகமான “தீயவராக இருக்காதே,” என்பதில் பிரகடனப்படுத்தப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், நீங்கள் நிச்சயமாக உங்கள் பாதையை தவறவிட்டுள்ளீர்கள். இப்போது நீங்கள் உலகின் தகவல்களை மறைப்பதிலும், அந்த நிகழ்முறையில், பெரும் தீய செயல்களைச் செய்வதிலும் ஈடுபட்டுள்ளீர்கள்.
அரசியல் விமர்சனங்களுக்காக தேடுபொறியின் தேடல்முடிவுகளை சீன அரசாங்கம் தணிக்கை செய்ததற்காக, கூகுள் சீனாவை மையமாக கொண்ட அதன் தேடுபொறியை உத்தியோகபூர்வமாக நிறுத்திய போது, திரு. ப்ரின் பகிரங்கமாக அறிவிக்கையில், கூகுளைப் பொறுத்த வரையில், “இணையத்தில் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்காக எவ்வாறு நாம் சிறப்பாக போராடலாம் என்பதே எப்போதும் ஒரு விவாதமாக இருந்துள்ளது. இணையத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் சுதந்திரத்தின் கோட்பாடுகளைப் பேணுவதற்கு இதுவே நாங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விடயமென்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
2013 இல், திரு. ஸ்மித் பர்மாவிற்கு விஜயம் செய்தபோது, அவர் அந்நாட்டில் சுதந்திர மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட இணைய பயன்பாட்டுக்கு ஆதரவாக பேசினார். கூகுளின் சமீபத்திய நடவடிக்கைகளின் வெளிச்சத்தில், திரு. ப்ரின் மற்றும் திரு. ஸ்மித்தின் அறிக்கைகள் முற்றிலும் பாசாங்குத்தனமானதாக தெரிகிறது.
கூகுளும் உட்குறிப்பாக அதன் தாய் நிறுவனமான Alphabet, Inc. உம், இணைய அரசியல் தணிக்கையில் ஈடுபட்டுள்ளன. நீங்கள் முன்னர் எதை பகிரங்கமாக கண்டித்தீர்களோ அதையே நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் இடதுசாரி வலைத் தளங்களை பொதுமக்கள் அணுகுவதையும் மற்றும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் தடுக்க கூகுள் அதன் இணைய தேடல்களில் மோசடி செய்து வருகிறது. உலக சோசலிச வலைத் தளம் (www.wsws.org) பாரியளவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்பதுடன், உங்கள் தணிக்கை வழிமுறைகளால் அது மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கூகுள் மூலமாக WSWS க்கு வருபவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு ஏப்ரல் க்குப் பின்னர் இருந்து அண்மித்து 70 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தளவிற்கான தணிக்கை என்பது அரசியல் இருட்டடிப்பாகும். உங்கள் நிறுவனம் வெளிவிட விரும்பாத செய்திகளை முடக்குவதும் மற்றும் உங்களுக்கு உடன்பாடில்லாத கருத்துக்களை ஒடுக்குவதுமே கூகுள் தணிக்கை நெறிமுறையின் வெளிப்படையான உள்நோக்கமாக உள்ளது. ஒரு வர்த்தக நிறுவனமாக கூகுளின் தனியுரிமைகள் என்னவாக இருந்தாலும், அரசியல் இருட்டடிப்பு என்பது ஒரு சட்டபூர்வ நடைமுறை கிடையாது. இது ஏகபோக அதிகாரத்தின் ஒட்டுமொத்த துஷ்பிரயோகமாகும். நீங்கள் செய்து கொண்டிருப்பது என்னவென்றால் பேச்சு சுதந்திரம் மீதான ஒரு தாக்குதலாகும்.
ஆகவே WSWS ஐ இருட்டடிப்பு செய்வதை நிறுத்துமாறும், உங்களது புதிய பாரபட்சமான தேடல் கொள்கைகளால் எதிர்விதமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து இடதுசாரி, சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள் மீதான தணிக்கையைக் கைவிடுமாறும், உங்களையும் கூகுளையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
WSWS சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இணையவழி செய்தி பத்திரிகையாகும். இது இணையத்தில் மிகப் பரவலாக வாசிக்கப்படும் சோசலிச பிரசுரமாக விளங்குகிறது. 1998 இல் WSWS ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இது ஒரு டஜனுக்கும் அதிகமான மொழிகளில் அரசியல், வரலாறு, விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மீது 60,000 க்கும் அதிகமான கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளது. இதுவொரு முக்கியமான, தனிச்சிறப்பார்ந்த புத்திஜீவித ஆதாரவளமாக திகழ்கிறது.
WSWS இன் கட்டுரைகள் எண்ணற்ற வலைத் தளங்களில் மறுபிரசுரம் செய்யப்படுகின்றன மற்றும் உலகெங்கிலுமான அச்சு பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்படுகின்றன. WSWS இல் பிரசுரிக்கப்படும் ஆவணங்கள் அவ்வபோது பல்கலைக்கழக ஆய்விதழ்களிலும் மேற்கோளிடப்படுகின்றன மற்றும் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன. வரலாற்றாளர்கள் James McPherson மற்றும் Allen Guelzo போன்ற முன்னணி அமெரிக்க மேதைகளும், மற்றும் ஷேக்ஸ்பியர் வல்லுனர் James Shapiro உம் உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளனர். இத்தளத்தில் பிரசுரமாகும் திரைப்பட மற்றும் நாடக விமர்சனங்கள் மிகப்பெரிய சர்வதேச பின்தொடரலை ஈர்த்துள்ளன. உலக பிரசித்தி பெற்ற திரைப்பட இயக்குனர்கள் —ஒருசிலரை பெயரிட்டு கூறுவதானால், Wim Wenders, Mike Leigh, Richard Linklater, Bertrand Tavernier, மற்றும் Abbas Kiarostami— உலக சோசலிச வலைத் தளத்துடன் அவர்களின் படைப்புகள் குறித்து விவாதித்துள்ளனர். WSWS இல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளும் மற்றும் சொற்பொழிவுகளும், உலக சோசலிச வலைத் தளத்துடன் எந்த தொடர்பும் இல்லாத பதிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நூல் திரட்டுக்களில் உள்ளடங்கி உள்ளன.
பெருநிறுவன கட்டுப்பாட்டு ஊடகங்களால் போதுமானளவிற்கு கவனம்செலுத்தாத அல்லது முழுமையாக கைவிடப்பட்ட தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் சமூக பிரச்சினைகள் மீதான செய்திகளையும் உலக சோசலிச வலைத் தளம் வழங்குகிறது.
எமது கோட்பாட்டுரீதியிலான போர் எதிர்ப்பு, சமூக சமத்துவமின்மை மீதான எமது கவனம், அரசியல் மற்றும் இதழியல் நேர்மையின் எமது உயர்ந்த தரத்தின் விளைவாக, உலக அரசியல் சம்பவங்கள், பூகோளமயப்பட்ட பொருளாதாரம், சர்வதேச சோசலிசம், இருபதாம் நூற்றாண்டு வரலாறு, ரஷ்ய புரட்சி மற்றும் அதற்கு அடுத்து நடந்தவை, மற்றும் சமகால மார்க்சிசம் ஆகியவற்றின் மீது சர்ச்சைக்கிடமற்ற ஒரு அதிகாரபூர்வ பிரசுரமாக திகழ்கிறது. இனவாதம், இனவெறி மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு முன்னணி சர்வதேச குரலாக விளங்குகிறது.
இந்தாண்டின் ஆரம்ப வாக்கில், Alexa இன் உலகளாவிய பட்டியலில் 36,525 ஆம் இடத்தையும், அமெரிக்காவில் 16,679 ஆம் இடத்தையும் WSWS எட்டியிருந்தது. இந்த வசந்தகாலத்தில், WSWS ஐ பார்வையிட்ட மாதாந்தர பயனர்களின் எண்ணிக்கை 900,000 ஐ தாண்டியது. ஏப்ரல் 2017 இல், எங்கள் தரவுகளின்படி, 422,460 பயனர்கள் கூகுள் தேடல் வழியாக WSWS ஐ வந்தடைந்திருந்தனர்.
கூகுள், இந்தாண்டின் ஏப்ரல் தொடக்கத்தில், சோசலிச, இடதுசாரி, போர்-எதிர்ப்பு பிரசுரங்களில் இருந்து பயனர்களை திசைதிருப்பி, அதற்கு பதிலாக அரசு மற்றும் பெருநிறுவன மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் (சான்றாக, நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், இதர பிற) கண்ணோட்டங்களை நேரடியாக வெளிப்படுத்தும் பிரதான பிரசுரங்கள் மற்றும், மிதவாத இடது என்று "நம்பப்படுகின்ற" மற்றும் அவற்றின் விமர்சனங்கள் தீங்கற்றவை என்று கருதப்படுகின்ற (சான்றாக, ஜனநாயக கட்சியின் ஒரு கன்னையாக செயல்படுகின்ற அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட்களின் வலைத் தளம் மற்றும் Jacobin Magazine போன்ற) ஒரு சிறிய எண்ணிக்கையிலான வலைத் தளங்களை நோக்கி திருப்பிவிடுவதற்கு, அதன் தேடல் முடிவுகளில் மோசடி செய்ய தொடங்கியது.
இந்த நடவடிக்கைகளுக்கு சாக்குபோக்காக, கூகுள் அறிவிக்கையில், “அங்கீகரிக்கத்தக்க விபரங்களை அதிகமாக மேற்புறத்திற்கு கொண்டு வருவதற்காக" அதன் தேடுபொறி நெறிமுறையில் அது மாற்றம் செய்து வருவதாக குறிப்பிட்டது, இந்த வாசகம், இணைய தணிக்கைக்காக, குறிப்பாக ஸ்தாபக ஊடகங்களால் வரையறுக்கப்பட்ட கருத்தொற்றுமைக்கு வெளியில் இருக்கும் அரசியல் கண்ணோட்டங்களை தணிக்கை செய்ய சர்வாதிகார ஆட்சிகளது முயற்சிகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது.
தேடுபொறி பொறியியல் துறைக்கான கூகுள் துணை தலைவர் பென் கோம்ஸ், ஏப்ரல் 25 அன்று ஒரு வலைப்பதிவில் அரசியல் தணிக்கையை திணிப்பதை நியாயப்படுத்த முயன்றார். "அப்பட்டமாக தவறாக வழிநடத்தும், தரங்குறைந்த, அத்துமீறிய அல்லது அடிமட்டத்திற்கு பொய் தகவல்களை பரப்பும் இணைய தகவல்களான 'போலி செய்தி நடைமுறைகளுக்கு' விடையிறுப்பாக நெறிமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாக அவர் வாதிட்டார்.
கோம்ஸ் இன் தகவல்படி, வலைத் தளங்களின் "தரத்தை" நியாயப்படுத்த கூகுள் சுமார் 10,000 “மதிப்பீட்டாளர்களை" நியமித்திருந்துள்ளது. “தவறாக வழிநடத்தும் தகவல்களை உள்ளடக்கியதாக" மற்றும் "ஆதரவற்ற சதி தத்துவங்களாக" கருதப்படும் வலைத் தளங்களை "தடுக்க" இந்த மதிப்பீட்டாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மதிப்பீட்டாளர்களால் கரும்புள்ளி குத்தப்பட்டவை, சமீபத்திய தொழில்நுட்ப அபிவிருத்திகளின் துணையோடு, எதிர்கால தேடல் முடிவுகள் முழுவதிலும், அப்போதைக்கு அப்போதே, தானியங்கி முறையில் தணிக்கை நடத்தும் ஒரு நெறிமுறையை அபிவிருத்தி செய்ய பயன்படுத்தப்படும் என்பதை கோம்ஸ் விளக்கினார்.
தேடுபொறி நெறிமுறையில் கூகுள் என்ன தொழில்நுட்ப மாற்றங்கள் செய்திருந்தாலும் சரி, தேடல் முடிவுகளில் இடது-எதிர்ப்பு நிலைப்பாடு இருப்பதை மறுக்க முடியாது. கூகுள் தணிக்கை நடவடிக்கைகளின் மிகவும் மலைப்பூட்டும் விளைவு என்னவென்றால், சோசலிசம், மார்க்சிசம் அல்லது ட்ரொட்ஸ்கிசம் மீது ஆர்வம் காட்டும் தேடல் விசாரணைகளைச் செய்யும் பயனர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை நோக்கி இப்போது திருப்பிவிடப்படுவதில்லை என்பதுதான். தேடல் கோரிக்கை முடிவுகளில் இருந்து கூகுள் WSWS ஐ "மறைத்து" வருகிறது. சான்றாக, இந்தாண்டு மே மாதம் "லியோன் ட்ரொட்ஸ்கி" என்பதன் கூகுள் தேடல்கள் 5,893 வலைப் பக்க தொடுப்புகளை (தேடல் முடிவுகளில் WSWS ஐ சுட்டிக்காட்டும் திரிகள்) கொண்டு வந்தது. ஜூலையில், இதே தேடல், 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச இயக்கத்தின் இணைய பதிப்பான WSWS இன் ஒரு வலைப்பக்க தொடுப்பைக் கூட சுட்டிக்காட்டவில்லை.
சோசலிசம், வர்க்கப் போராட்டம், வர்க்க மோதல், சோசலிச இயக்கம், உலகில் சமூக சமத்துவமின்மை, வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை, போர்எதிர்ப்பு இலக்கியம், மற்றும் ரஷ்ய புரட்சி ஆகிய ஏனைய அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களது கூகுள் தேடல் முடிவுகளிலும் இப்போது WSWS தொடுப்புகளில் வருவதில்லை. முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசம் (socialism vs. capitalism) என்றவொரு தேடல், சமீபத்தில் ஏப்ரல் மாதம் வரையில், தேடல் முடிவுகளின் முதல் பக்கத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் எட்டு பக்கங்களையாவது பட்டியலிட்டிருக்கும், ஆனால் இப்போது முற்றிலுமாக WSWS இன் எந்த பக்கத்தையும் தேடல் முடிவுகளில் கொண்டு வருவதில்லை. ஏப்ரல் மாத தேடல் முடிவுகளில் WSWS ஐ கொண்டு வந்த முக்கிய 150 தேடல் வார்த்தைகளில் 145 இப்போது அவ்வாறு இல்லை.
மேலே குறிப்பிட்ட அனைத்து தேடுசொற்களும் ஒரு இடதுசாரி, சோசலிச அல்லது மார்க்சிச சம்பவங்களைக் குறித்து அறிய முயலும் பயனர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுபவை ஆகும். பயனர்களின் தேடல் விசாரணைகளுக்கு "எதிர்பாரா" விடைகள் வருவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதிலிருந்து விலகி, கூகுள் அவர்களின் பயனர்களில், அதுவும் உலக சோசலிச வலைத் தளத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கக்கூடிய பயனர்களின் இடதுசாரி மற்றும் முற்போக்கு பிரிவுகள் அதை காண முடியாததை உறுதிப்படுத்தி வைக்க அதன் நெறிமுறையில் மோசடி செய்து வருகிறது. அனைத்திற்கும் மேலாக, தேடல் முடிவுகளில் இருந்து WSWS ஐ தவிர்த்திருக்கும் அளவும் துல்லியமும், புதிய நெறிமுறையின் சோசலிச-விரோத நிலைப்பாடு சர்வாதிகார-பாணியில் நேரடியாக மற்றும் திட்டமிட்டு கரும்புள்ளி குத்தும் வகையில், கூகுள் நபர்களின் உண்மையான ஸ்தூலமான தலையீட்டை கொண்டுள்ளதை அறிவுறுத்துகிறது.
மேலே குறிப்பிட்டவாறு, ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர், தங்களை முற்போக்கு, சோசலிச அல்லது போர்-எதிர்ப்பு பிரசுரங்களாக முன்நிறுத்தும் ஏனைய இடதுசாரி பிரசுரங்களும் அவற்றிற்குரிய கூகுள் தேடல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளன:
* alternet.org, 63 சதவீதம் சரிந்தது
* globalresearch.ca, 62 சதவீதம் சரிந்தது
* consortiumnews.com, 47 சதவீதம் சரிந்தது
* mediamatters.org, 42 சதவீதம் சரிந்தது
* commondreams.org, 37 சதவீதம் சரிந்தது
* internationalviewpoint.org, 36 சதவீதம் சரிந்தது
* democracynow.org, 36 சதவீதம் சரிந்தது
* wikileaks.org, 30 சதவீதம் சரிந்தது
* truth-out.org, 25 சதவீதம் சரிந்தது
* counterpunch.org, 21 சதவீதம் சரிந்தது
* theintercept.com,19 சதவீதம் சரிந்தது
“போலி செய்திகள்" என்பது போன்ற கடுமையான வார்த்தைகளைக் கொண்டு கூகுள் அரசியல் தணிக்கை திணிப்பை நியாயப்படுத்தி வருகிறது. இந்த வார்த்தை, சரியாக பயன்படுத்தப்பட்டால், ஒருபோதும் நிகழ்ந்திராத சம்பவத்தை செயற்கையாக கட்டமைப்பதன் அடிப்படையில் அல்லது மொத்தத்தில் சம்பவத்தை செயற்கையாக அதீதளவில் மிகைப்படுத்தப்படுத்தும் அடிப்படையில் உருவாக்கப்படும் செய்திகளைக் குறிக்கும். “போலி செய்தி" மீதான இன்றைய-நாள் பரபரப்பே கூட ஒரு புனைவு சம்பவத்திற்கான மற்றும் செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சொல்லாடலுக்கு ஒரு சான்றாகும். உள்ளதை உள்ளபடியே கூறும் தகவல்களையும், மதிப்பிழந்த அரசாங்க கொள்கைகள் மற்றும் பெருநிறுவன நலன்களுக்கு சவால்விடுக்கும் ஆழமான பகுப்பாய்வுகளையும் மதிப்பிழக்கச் செய்ய, "போலி" என்ற இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. WSWS ஐ சம்பந்தப்படுத்தி, “போலி செய்தி" என்ற வார்த்தையைத் துணைக்கு இழுப்பது, எந்தவொரு சாரத்திலோ அல்லது நம்பகத்தன்மையிலோ அர்த்தமற்றது. உண்மையில் வரலாற்று பொய்மைபடுத்தலை எதிர்ப்பதற்கான எங்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மேதமை தாங்கிய American Historical Review ஆய்விதழும் இதில் உள்ளடங்கும்.
WSWS மற்றும் பிற இடதுசாரி பிரசுரங்களை தணிக்கை செய்து இருட்டடிப்பு செய்ய கூகுள் அதன் தேடல் முடிவுகளில் சூழ்ச்சி செய்கிறது என்பதையே உண்மைகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. இது அரசியலமைப்பில் தொலைதூர பாதிப்புக்களோடு, மிகவும் ஆழ்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. கூகுள் அதன் தணிக்கை திட்டத்தை அமெரிக்க அரசாங்கத்துடன் அல்லது அதன் இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து செய்கிறதா?
கூகுள் அனேகமாக சூழ்ச்சி தத்துவமயமாக்கலுக்கு ஒரு சான்றாக இக்கேள்வியை நிராகரித்துவிடலாம். ஆனால் கூகுள் அரசுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகிறது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்ற நிலையில் இது நியாயமானதே. திரு. ஸ்மித் அவர்களே, 2016 இல், பராக் ஒபாமாவின் பாதுகாப்பு செயலர், அஸ்டன் கார்ட்டர், பாதுகாப்புத்துறைக்கான புதிய கண்டுபிடிப்பு ஆலோசனை குழுவின் தலைவராக உங்களை நியமித்தார். இந்நிறுவனத்திற்கும் பென்டகனுக்கும் இடையே நிகழ்ந்து வரும் மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பைக் குறித்து விவாதிக்க, இம்மாத தொடக்கத்தில், பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் கூகுள் தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்தார். மிகவும் பொதுவாக, The Intercept இல் வந்த ஒரு செய்தியின்படி, ஜனவரி 2009 இல் இருந்து அக்டோபர் 2015 நெடுகிலும் கூகுள் பிரதிநிதிகள் சராசரியாக குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது வெள்ளை மாளிகை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூகுள் ஒரு தனியார் பெருநிறுவனமாக கூறிக்கொள்கிறது என்றாலும், அது அரசாங்க கொள்கையை நெறிப்படுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் ஆழமாக சம்பந்தப்பட்டுள்ளது. வர்த்தக நலன்கள் மற்றும் அரசு நோக்கங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை கண்டறிவதே அதிகரித்தளவில் சிரமமாகி வருகிறது. கூகுள் தணிக்கை திட்டம், தகவல்களை சுதந்திரமாக அணுவதை மற்றும் பரிமாறிக் கொள்வதை தடுப்பதன் மூலமாக, இருப்பத்தியோராம் நூற்றாண்டின் ஓர்வெல்லியன் "வலது-சிந்தனையின்" வடிவத்தை நடைமுறைப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது. அது முற்போக்கான மற்றும் அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட அரசியல் எதிர்ப்பின் அபிவிருத்திக்கு குழிபறித்து வருகிறது. அது போர், சமத்துவமின்மை, அநீதி மற்றும் பிற்போக்குத்தனத்தின் ஆதரவாளர்களுக்கு உதவி வருகிறது.
இடதுசாரி வலைத் தளங்கள், குறிப்பாக WSWS மீதான தணிக்கை, ஒரு நிஜமான சோசலிச முன்னோக்கு, நியாயமாக செவிமடுக்க அனுமதிக்கப்பட்டால், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பாரிய வெகுஜனங்களை கொண்டிருக்கும் என்ற அச்சத்தைப் பிரதிபலிக்கிறது. பேச்சு சுதந்திரம் மற்றும் சிந்தனையை ஒடுக்குவதற்கான உங்களின் முயற்சிகளுக்கு பரந்த மக்கள் எதிர்ப்பு உள்ளது. அதனால் கூகுள் தவறாக வழிகாட்டும் வாதங்கள் மற்றும் முற்றுமுழுதான பொய்களுடன் அதன் ஜனநாயக-விரோத கொள்கைகளை மூடிமறைக்க நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக உணர்கிறது. கூகுளின் தணிக்கை முயற்சிகளை நிறுத்தக் கோரி WSWS வெளியிட்ட ஒரு இணையவழி மனு ஏற்கனவே ஐந்து கண்டங்களின் 70 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வாசகர்களிடம் இருந்து பல ஆயிரக் கணக்கான கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது. எங்கள் பிரசுரத்தைத் தணிக்கை செய்வதற்கான கூகுளின் முயற்சிகளை நிறுத்தவும், மற்றும் கூகுள் தணிக்கை குறித்து சர்வதேச அளவில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாங்கள் தீர்மானமாக உள்ளோம். இந்த கொள்கை தொடரும் வரையில், மக்களின் நம்பகத்தன்மை இழப்பில் கூகுள் மிகப்பெரிய விலை கொடுக்கும்.
கூகுள் தேடல் முடிவு பட்டியல்களிலும் மற்றும் அதன் தேடுபொறி நெறிமுறையிலும் ஏப்ரல் மாதத்திற்குப் பிந்தைய ஜனநாயக-விரோத மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், WSWS மற்றும் ஏனைய இடதுசாரி, சோசலிச, போர்-எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தள பிரசுரங்களை தேடி அணுகுவதற்கான வாய்ப்பைத் தடுக்கும் அதன் முயற்சியை கூகுள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு வலியுறுத்துகிறது.
இப்படிக்கு,
டேவிட் நோர்த்
தலைவர், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு