Print Version|Feedback
Xi Jinping’s power grab: Bonapartism with Chinese characteristics
ஜி ஜின்பிங்கின் அதிகாரப் பிடி: சீன இயல்பிலான போனபார்ட்டிசம்
Peter Symonds
1 March 2018
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) ஆட்சி, ஜனாதிபதி பதவி இரண்டு முறை மட்டுமே வகிக்கலாம் என்பதை முடிவுக்குக் கொண்டு வர நகர்ந்ததன் மூலமாக, கடந்த மூன்று தசாப்த கால வழமையைக் கூர்மையாக முறித்துக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, இராணுவம் மற்றும் அரசு எந்திரத்தின் மீது தனது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளவரும் மற்றும் கடந்த ஐந்தாண்டுகளில் முக்கிய அரசியல் போட்டியாளர்களைக் களையெடுத்துள்ளவருமான ஜி ஜின்பிங், காலவரம்பின்றி பதவியில் இருக்க முடியும்.
சீனாவின் அரசியல் இரும்பு மனிதராக ஜி இன் வளர்ச்சி அவரது தனிப்பட்ட குணாம்சத்தின் செயல்பாடல்ல, மாறாக அனைத்துக்கும் மேலாக அது அந்நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அதீத சமூக பதட்டங்களின் ஒரு பிரதிபலிப்பாகும். ஒரு சீரழிந்து வரும் பொருளாதாரத்தையும் மற்றும் சமூக மேலெழுச்சியின் சாத்தியக்கூறையும் எதிர்கொண்டுள்ள சீன அதிகாரத்துவம், பெரும் பிரயத்தனத்துடன் ஜி இன் உருவைச் சுற்றியுள்ள அதன் சக்திகளை ஒன்று திரட்டுவதற்கு முயன்று வருகிறது. மிகச் சரியாக இந்த ஆட்சி வடிவத்தை தான் மார்க்சிஸ்டுகள் பாரம்பரியமாக போனபார்ட்டிச ஆட்சி (Bonapartist) என்று வரையறுத்தனர்.
1932 இல் லியோன் ட்ரொட்ஸ்கி ஜேர்மனியின் கூர்மையான அரசியல் நெருக்கடி குறித்து எழுதுகையில், போனபார்ட்டிசத்தின் குறிப்பிட்ட இயல்புகளை விவரித்திருந்தார்: “உடைமையாளர்களுக்கும் உடைமையற்றவர்களுக்கும், சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையிலான இரண்டு சமூக அடுக்குகளின் போராட்டம் அதன் உச்சக்கட்ட பதட்டத்தை எட்டிய உடனேயே, அதிகாரத்துவம், பொலிஸ் மற்றும் படைகளின் மேலாதிக்கத்திற்கான நிலைமைகள் நிறுவப்படுகின்றன. அரசு என்பது சமூகத்திடமிருந்து 'சுதந்திரமாகின்றது'. மீண்டுமொருமுறை நினைவுபடுத்திக் கொள்வோம்: இரண்டு முள்கரண்டிகளை சமச்சீராக ஒரு தக்கையில் குத்தினால், அத்தக்கையானது ஒரு ஊசியின் தலையில் கூட நிற்கும். இது தான் துல்லியமாக போனபார்ட்டிசம்,” [ஜேர்மனி: ஒரே பாதை]
முதலாளித்துவம் மீளமைக்கப்பட்டு மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. சமூகத்தின் ஒரு துருவத்தில், அமெரிக்காவுக்கு அடுத்து வேறெந்த நாட்டையும் விட அதிகமாக, 300 க்கும் அதிகமான டாலர் பில்லியனர்கள் மிகப்பெரியளவில் இலாபங்களைக் குவித்துக் கொண்டு, ஊதாரித்தனமான வாழ்க்கை வாழ்கின்றனர். அடுத்த முனையில், நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் அவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவே போராடுகின்றனர், பலர் இன்னமும் மானக்கேடான வறுமையில் வாழ்கின்றனர்.
கடந்த காலத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வேலையின்மைக்கு கடிவாளமிடவும் மற்றும் சமூக அமைதியின்மையை தவிர்க்கவும் அதிகரித்த வளர்ச்சியைச் சார்ந்திருந்தது. ஆனால் 2008/09 உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின்னர், சமூக ஸ்திரப்பாட்டைப் பேணுவதற்கு நீண்ட காலமாக ஒரு முக்கிய வரம்பாக கருதப்பட்ட 8 சதவீத வளர்ச்சிக்கும் குறைந்த மட்டங்களுக்கு சீனப் பொருளாதாரம் தொடர்ந்து மெதுவாகியுள்ளது. அனைத்திற்கும் மேலாக, வளர்ச்சியை ஊக்குவிக்க பாரிய ஊக்கப்பொதிகளைப் பயன்படுத்தும் இயங்குமுறைகள், ஒரு நிதியியல் உருகுதலைத் தூண்டுவதற்கு அச்சுறுத்தும் அளவுக்கு மிகப்பெரிய கடன் மட்டங்களை உருவாக்கி உள்ளது.
அதேநேரத்தில், சீனா அதீத புவிசார் அரசியல் பதட்டங்களையும், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிடம் இருந்து அதிகரித்து வரும் மோதல் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டுள்ளதுடன், ஒபாமா மற்றும் ட்ரம்பின் கீழ் குறிப்பாக ஆசிய பசிபிக்கில் பொருளாதாரரீதியிலும் இராஜாங்கரீதியிலும் சீனாவைப் பலவீனப்படுத்த அமெரிக்கா ஆக்ரோஷமாக முனைந்துள்ளது, அதேவேளையில் போருக்கான தயாரிப்பில் ஆசியாவில் அதன் இராணுவப் படைகளையும் கட்டமைத்து வருகிறது. வட கொரியாவுக்கு எதிரான ட்ரம்பின் ஆக்ரோஷமான போர் அச்சுறுத்தல்கள் மற்றும் தென் சீனக் கடலில் இராணுவ மோதல் ஆகியவை சீனாவை இலக்கில் வைத்துள்ளன என்பதோடு, அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவை அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பிரதான தடையாக கருதுகிறது.
ஜி ஜின்பிங்கால் வாஷிங்டனை எதிர்கொள்ள முடியும் மற்றும் இப்போது 400 மில்லியன் எண்ணிக்கையில் உள்ள பாரிய சீனத் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு இயக்கத்தையும் அவரால் ஒடுக்க முடியுமென்ற நம்பிக்கையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அபாயங்களை எதிர்கொண்டிருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எந்திரம், அவரின் கரங்களைப் பலப்படுத்தி உள்ளது. ஆனால், லியோன் ட்ரொட்ஸ்கி விவரித்ததைப் போல, போனபார்ட்டிசம் வர்க்க சக்திகளின் தற்காலிக சமநிலை மற்றும் உள்ளார்ந்த நிலையற்ற தன்மையில் தங்கியுள்ளது—முதலாளித்துவத்தால் அதன் நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கு எந்த வழியும் காண முடியாதுள்ள அதேவேளையில், தொழிலாள வர்க்கமோ இப்போது அதிகாரத்தை அடைவதற்கான பாதையைக் காண இயலாது உள்ளது.
இரண்டு பதவிகாலத்திற்கு அதிகமாக சீன ஜனாதிபதியாக இருப்பதை தடுக்கும் தடையைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கைவிடுகிறது என்ற அறிவிப்பானது, அதிர்ச்சி, கண்டனங்கள், கவலையையும் மற்றும் மேற்கு ஊடங்களில் இருந்து நடவடிக்கைக்கான அழைப்புகளையும் தூண்டியுள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் அதன் தலையங்கத்தில் குறிப்பிட்டவாறு, 1970 களின் இறுதியில் சீனா உலகச்சந்தைக்கு திறந்துவிட்டமை இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய கட்டமைப்புக்குள் அது ஒருங்கிணைவதற்கு இட்டுச் செல்லும் மற்றும் "பொருளாதார வளர்ச்சி தவிர்க்கவியலாமல் அரசியல் தாராளமயமாக்கலுக்கு இட்டுச் செல்லும்" என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் எதிர்பார்த்தன.
சீன நடுத்தர வர்க்கத்தை —தொழிலாள வர்க்கத்தை அல்ல— விரிவாக்கும் "அரசியல் தாராளமயமாக்கலை", வாஷிங்டனுடன் இன்னும் நெருக்கமாக அணி சேரும் ஓர் ஆட்சியை வடிவமைப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளலாமென யதார்த்தத்தில் அமெரிக்க நம்பி வந்தது. இந்த சாத்தியக்கூறானது, அமெரிக்க கோரிக்கைகளுடன் உடனடியாக பிணைக்க விருப்பமற்றவராக நிரூபணமானவரும் மற்றும் வாஷிங்டனின் போர் ஆக்ரோஷத்தை எதிர் கொள்ள விரும்புகின்றவருமான ஒரு சீனத் தலைவர், காலவரையின்றி எதிர்காலத்திற்கு, பதவியில் இருக்க முடியும் என்பதால் இப்போது முறிந்து போயுள்ளது.
அதிர்ச்சியூட்டும் பாசாங்குத்தனத்துடன் நியூ யோர்க் டைம்ஸ் தலையங்கம் அறிவிக்கிறது, "சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், வெளிப்படையான விவாதம், சுதந்திர-சந்தை பொருளாதாரம் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அமைதியாக பதவியிலிருந்து விலகும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு முன்னுரிமை என இவற்றின் அடிப்படையில் அமைந்த தாராளவாத ஒழுங்கமைப்பிற்கு [சீனா] சவால்விடுத்து" வருகிறது என்றது. அப்பத்திரிகை எச்சரிக்கிறது: “சீனாவின் பரிமாணம் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு இடையே, மேற்கு இந்த அச்சுறுத்தல்களை போதியளவிற்கு தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரவில்லை.”
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் அடிப்படை ஜனநாயக உரிமைகளும் சட்ட வழிமுறைகளும் தாக்குதலின் கீழ் இருக்கும் கட்டத்தில், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற பெருநிறுவனங்கள் வாஷிங்டனுக்கு சார்பாக இணைய தணிக்கை செய்து கொண்டிருக்கையில், பொலிஸ் அரசு நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்டு வருகின்ற கட்டத்தில், மேற்கு ஜனநாயகங்களது நெறிமுறைகள் சரியாக இருப்பதாக நியூ யோர்க் டைம்ஸ் வாதிடுகிறது.
தங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஓர் அரசியல் இரும்புமனிதர் மட்டுமே ஒரே வழி என்று முடிவெடுத்திருப்பது சீனா மற்றும் ரஷ்யாவின் ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல. அதே அடிப்படை சமூக மற்றும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் —அனைத்திற்கும் மேலாக, மிகப்பெரியளவில் தோற்றுவிக்கப்பட்ட கூர்மையான சமூக பதட்டங்களும், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையே விரிந்து வரும் இடைவெளியும்— தாராளவாத ஜனநாயகங்கள் என்றழைக்கப்படும் நாடுகளது முதலாளித்துவ வர்க்கத்தையும், ஏதேச்சதிகார ஆட்சி வடிவங்களுக்கு உந்தி வருகின்றன.
அமெரிக்காவில், தளபதிகள் மற்றும் பில்லியனர்கள் செல்வாக்கு செலுத்தும் ஒரு நிர்வாகத்திற்கு பாசிசவாத ஜனாதிபதி ட்ரம்ப் தலைமை தாங்கி வருகின்ற நிலையில், அவர் வர்த்தக போர், சீனாவுக்கு எதிரான போர், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பொலிஸ்-இராணுவ எந்திரத்தின் கட்டமைப்பு ஆகியவற்றிற்கு தயாரிப்பு செய்து வருகிறார். ஜேர்மனியில், பல மாதங்களாக அந்நாட்டில் ஓர் அரசாங்கம் அமைக்க இயலாதவாறு ஏற்பட்டுள்ள ஒரு கூர்மையான அரசியல் நெருக்கடியானது, ஸ்தாபக கட்சிகளின் ஒரு பெரும் கூட்டணி என்ற வடிவில் நடைமுறையளவில் ஒரு நாடாளுமன்ற சர்வாதிகாரம் என்பதன் மூலமாக மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளது. பிரான்சில், பாரம்பரிய கட்சிகள் தோல்வி அடைந்ததால் ஜனாதிபதி பதவிக்கு மேலுயர்ந்த மக்ரோன், வேலைகள் மற்றும் வேலையிட நிலைமைகள் சீரழிக்கப்படுவதற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்கவும், தனியார்மயமாக்கலுக்கும் மோசமான தொழில்சார் உத்தரவாணைகளைப் பயன்படுத்தி வருகிறார்.
அரசாங்கங்களால் சிக்கன கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பைக் கடந்து வர முடியாத நிலையாலும் மற்றும் ஜனநாயக நிகழ்வுபோக்குகளாலும் உலகெங்கிலும் உள்ள ஆளும் வட்டாரங்களில் உணரப்படும் ஆழ்ந்த பதட்டம், 2016 கூட்டாட்சி தேர்தலின் மற்றொரு எந்தவொரு தரப்பிற்கும் பெரும்பான்மையற்ற முடிவுகளுக்குப் பின்னர், ஆஸ்திரேலிய சில்லறை வியாபாரத்துறை பில்லியனர் ஜெர்ரி ஹார்வேயால் தொகுத்தளிக்கப்பட்டது. “சீனாவைப் போன்றவொரு சர்வாதிகாரி அல்லது அதுபோன்ற ஏதோவொன்றை நாம் கொண்டிருப்பதே ஒரே தீர்வு. இப்போதைக்கு நமது ஜனநாயகம் செயல்படவில்லை,” என்று ஹார்வே அறிவித்தார்.
போனபார்ட்டிசம் மற்றும் பிற எதேச்சதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி தீவிரமடைந்து வரும் இந்த போக்கில் இருந்து, தொழிலாளர்களும் இளைஞர்களும் கூர்மையான எச்சரிக்கை அடைந்தாக வேண்டும். சர்வாதிகாரத்தை நோக்கிய தூண்டுதல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, சோசலிச வழியில் சமூகத்தை மறுவடிவமைக்கும் தொழிலாள வர்க்க அடிப்படையிலான போராட்டத்தின் மூலமாக மட்டுமே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.