Print Version|Feedback
Spanish judiciary accuses former Catalan President Puigdemont of “mobilising the masses”
ஸ்பானிய நீதித்துறை முன்னாள் கட்டலான் தலைவர் புய்க்டெமொன்ட் மீது “மக்களை அணிதிரட்டியதாக" குற்றஞ்சாட்டுகிறது
By Peter Schwarz
30 March 2018
கார்லஸ் புய்க்டெமொன்ட் இனை ஸ்பெயினிடம் ஒப்படைக்கும் எந்த உத்தேசமும் இல்லை என்று ஜேர்மன் அரசாங்கம் "உடனடியாக" அறிவிக்க வேண்டும். இது, Süddeutsche Zeitung நாளிதழ் செய்தியின்படி, அந்த முன்னாள் கட்டலான் ஜனாதிபதிக்கான ஜேர்மன் வழக்கறிஞர் வொல்ஃப்காங் ஷோம்பேர்க் முன்வைக்கும் கோரிக்கையாகும்.
ஸ்பானிய உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் கடந்த ஞாயிறன்று புய்க்டெமொன்ட் பொலிஸால் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் இப்போது நொயமுன்ஸ்ரர் ஜேர்மன் நகரின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஸ்பெயினுக்கு அனுப்புவதா வேண்டாமா என்பதை மேல்முறையீடுகளுக்கான Schleswig மாவட்ட நீதிமன்றம் முடிவெடுக்கும் வரையில் புய்க்டெமொன்ட் ஐ வெளிநாட்டிடம் ஒப்படைக்காமல் காவலில் வைத்திருக்குமாறு திங்களன்று ஒரு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு 60 நாட்கள் ஆகலாம்.
ஒப்படைக்கலாமென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், புய்க்டெமொன்டை வெளிநாட்டிடம் கையளிக்கும் அரசியல் முடிவு ஜேர்மன் அரசாங்கத்தின் கரங்களுக்கு வரும். சமூக ஜனநாயக கட்சியின் (SPD) ஓர் அங்கத்தவரான நீதித்துறை அமைச்சர் கத்தரீனா பார்லே தனது ஒப்புதலை வழங்கினால் மட்டுமே, புய்க்டெமொன்ட் ஸ்பானிய நீதித்துறையிடம் ஒப்படைக்க முடியும். இப்போது அவர் அதற்கு தனது மறுப்பை அறிவித்தால், தொடர்ந்து புய்க்டெமொன்ட் சிறைக்காவலில் வைப்பதற்கு எந்த அடித்தளமும் இல்லாது போகும்.
மறுபுறம், நீதிமன்றம் ஒப்படைப்பைச் சட்டத்திற்கு புறம்பானதென அறிவித்தால், அரசாங்கம் அந்த முடிவை மீற முடியாது.
ஸ்பெயின் வெளியிட்ட ஐரோப்பிய கைது ஆணைக்கு சட்டப்பூர்வ அடித்தளம் இல்லை என்று கூறி, ஷோம்பேர்க் அவரது கோரிக்கையை நியாயப்படுத்தினார். அது துல்லியமாக இல்லை, உறுதிசெய்யப்படவில்லை, அபாயகரமாக உள்ளது என்றவர் வாதிட்டார்.
70 வயதான ஷோம்பேர்க் சர்வதேச குற்றவியல் சட்டத்தில் வல்லுனராக கருதப்படுகிறார். கார்ல்ஸ்ரூஹ நகரில் மத்திய நீதிபதியாக சேவையாற்றிய அவர், ஹேக்கில் முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திலும், மற்றும் தான்சானியாவில் ருவான்டாவுக்கான சர்வதேச தீர்ப்பாயத்திலும் நீதிபதியாக சேவையாற்றியவர் ஆவார்.
புய்க்டெமொன்டுக்கு எதிரான 69 பக்க குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் ஜேர்மன் அரசாங்கம் அவரை ஸ்பெயினிடம் ஒப்படைத்தால், அது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் போராட்டத்தின் அனைத்து வடிவங்களையும் ஒடுக்குவதற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கும். ஐரோப்பா நடைமுறையளவில் முற்றிலுமாக ஒரு பொலிஸ் அரசாக மாறிவிடும்.
புய்க்டெமொன்ட் மற்றும் இன்னும் 24 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டு கிளர்ச்சியாகும். ஸ்பானிய சட்டத்தின்படி, அரசு அதிகாரத்திற்கு எதிராக ஒரு வன்முறையான மேலெழுச்சி என்பதையே இதுபோன்றவொரு குற்றச்சாட்டு உள்ளடக்கி உள்ளது. ஆனால் புய்க்டெமொன்டைச் சுற்றியிருந்த பிரிவினைவாத தலைமையிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் ஜனநாயக தேர்தல்களினூடாக அதிகாரத்திற்கு வந்தார்கள் என்பதோடு, எப்போதுமே வன்முறை பிரயோகத்தை எதிர்த்திருந்தனர் மற்றும் நாடாளுமன்ற தீர்மானங்கள் மற்றும் பாரிய மக்கள் போராட்டங்களைச் சார்ந்திருந்தார்கள்.
தலைமை தாங்கிய ஸ்பானிய நீதிபதி Pablo Llarena வசம், புய்க்டெமொன்ட் மற்றும் அவர் சகாக்கள் வன்முறை நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுத்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றபோதும், அவர் மாதக்கணக்கிலான விசாரணைக்குப் பின்னர், தங்களின் குறிக்கோள்களை எட்ட "பெருந்திரளான மக்கள் சக்தியைப்" பயன்படுத்தியதாக அவர்களைக் குற்றஞ்சாட்டியுள்ளார். Frankfurter Allgemeine Zeitung (FAZ) வெளியிட்ட ஒரு செய்தியின்படி, இப்பத்திரிகை வெளிப்படையாக குற்றப்பத்திரிகையை அணுகக்கூடியதாக இருந்த நிலையில், Llarena “கட்டலான் சுதந்திர நோக்கத்துடன் 'ஒரு குற்றகரமான திட்டத்தை' குறிப்பிட்டு" இருந்ததாகவும், “தங்களின் சொந்த அரசுக்கு அடித்தளங்களை உருவாக்குதல் மற்றும் பெருந்திரளான மக்களை அணித்திரட்டுதல்" ஆகியவை அதில் உள்ளடங்கி இருந்ததாகவும் அப்பத்திரிகை குறிப்பிட்டது.
அக்டோபர் 1, 2017 இல், கட்டலான் சுதந்திரம் மீதான கருத்து வாக்கெடுப்பு அன்று, பிரிவினைவாதிகளின் "வன்முறை வெறித்தனம்" தெளிவாக இருந்ததாக FAZ குறிப்பிடுகிறது. சான்றாக, அந்த வாக்கெடுப்பு நடப்பதை வன்முறையாக தடுக்க முயன்று, காயமடைந்த பொலிஸ் அதிகாரிகளின் வாக்குமூலங்களை அந்த குற்றப்பத்திரிகை மேற்கோளிட்டது. இதற்கு எதிர்முரணாக, பொலிஸால் அண்மித்து 1,000 பொதுமக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்பது வெறுமனே போகிறபோக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மற்ற குற்றச்சாட்டுகளும் ஒரு பொலிஸ் அரசின் தனித்தன்மைகளைத் தாங்கி உள்ளன. புய்க்டெமொன்ட் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது ஏனென்றால் ஜனாதிபதியாக அவர் கருத்து வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார், நிச்சயமாக இதற்கு பணம் செலவாகியிருந்தது. ஆனால், அவர் தனிப்பட்டரீதியில் செல்வம் சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்படவில்லை.
புய்க்டெமொன்ட் குற்றகரமான நடவடிக்கைகளுக்காக அல்ல அரசியல் காரணங்களுக்காக வழக்கில் இழுக்கப்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையாக இருந்தாலும், இதுவரையிலான எல்லா அறிகுறிகளும் ஜேர்மன் அரசாங்கம் அவரை ஒப்படைக்க உடன்படும் என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. புய்க்டெமொன்டை கைது செய்தமை நியாயமானதே என்றும் ஏனென்றால் அது ஐரோப்பிய கைது பிடியாணை தொடர்பான ஜேர்மன் சட்டம் மற்றும் ஒழுங்குமுறையின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்றும் ஜேர்மன் அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் சைய்பேர்ட் தெரிவித்தார். ஸ்பெயின் ஒரு ஜனநாயக, அரசியலமைப்பு கொண்ட அரசு என்றவர் வாதிட்டார்.
சர்வதேச கைது உத்தரவாணைகளில் Llarena ஆல் பெயரிடப்பட்ட ஆறு அரசியல்வாதிகளில் தற்போது சிறைக்காவலில் இருக்கும் ஒருவர் புய்க்டெமொன்ட் மட்டுமே ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது புரூசெல்ஸில் உள்ள மூன்று அமைச்சர்கள் மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கார்லா பொன்சாட்டி ஆகியோர் சுதந்திரமாக உள்ளனர்.
பணயத்திலிருக்கும் பிரச்சினை வெறுமனே கட்டலான் சுதந்திரம் தான் என்றால், ஜேர்மன் அரசாங்கம் அனேகமாக மத்தியஸ்தம் செய்து ஒரு சமரசத்தை எட்ட முனைந்திருக்கும். புய்க்டெமொன்ட் ஒரு புரட்சியாளரோ அல்லது ஒரு இடதுசாரியோ இல்லை. அவர் கட்சி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தாராளவாத குழுவின் ஓர் அங்கத்துவ கட்சியாக உள்ளதுடன், இதுவரை அவரை நொய்முன்ஸ்ரர் சிறைக்கு சென்று சந்தித்துள்ள ஒரே முக்கிய பார்வையாளர் வலதுசாரி ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதி பெர்ண்ட் லுக்க ஆவார், இவர் ஜேர்மனிக்கான மாற்றீட்டின் துணை ஸ்தாபகர் ஆவார்.
ஜேர்மன் அரசாங்கம் ஸ்பானிய அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுக்க மற்றும் உடனிருக்க மறுத்து வருகிறது ஏனென்றால் அதுவும் நீதிபதி Llarena போலவே, “பெருந்திரளான மக்கள் சக்திக்கு" அஞ்சுகிறது. ஐரோப்பாவில் சமூக பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன, ஸ்பெயினில் நூறாயிரக் கணக்கான ஓய்வூதியதாரர்கள் வீதிகளில் இறங்கி வருகின்றனர், பிரான்சில் அரசாங்கத்திற்கும் இரயில்வே தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது, இத்தாலி ஸ்திரமின்மைக்குள் சரிந்து வருகிறது மற்றும் ஜேர்மனியில் பொதுத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர், இந்த நிலைமைகளின் கீழ் தான் பேர்லின் ஸ்பானிய பிரதம மந்திரி மரீயானோ ரஹோய் அரசாங்கத்தின் எதேச்சதிகார ஆட்சிகளை ஆதரிக்கிறது.
கட்டலோனியாவில் பல ஆர்ப்பாட்டக்காரர்கள், ஸ்பானிய புரட்சியின் கொடூர ஒடுக்குமுறையில் ஹிட்லர் மற்றும் பிராங்கோவுக்கு இடையிலான கூட்டணியையும், கட்டலான் ஜனாதிபதி லூயிஸ் கொம்பானிஸ் ஐ கெஸ்டாபோ கைது செய்து, பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு தூக்கிலிட மாட்ரிட் வசம் ஒப்படைக்கப்பட்டதையும் சரியான விதத்தில் நினைவுகூர்கிறார்கள்.
ஒரு கருத்துக்கணிப்பின்படி, ஜேர்மனியர்களில் 51 சதவீதத்தினர் புய்க்டெமொன்ட் ஒப்படைக்கப்படுவதை எதிர்க்கின்றனர் மற்றும் அவ்வாறு செய்வதற்கு வெறும் 35 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவளிக்கின்றனர் என்ற நிலையில், எதிர்கட்சிகளின் முகாம் உட்பட அங்கே அரசியல் வட்டாரங்களில் அரசாங்கத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.
ஸ்பானிய நீதித்துறையின் மிகவும் உறுதியான ஆதரவாளர்களில் பசுமை கட்சி அரசியல்வாதி யூர்கன் ரிட்டீன் உம் ஒருவராவார், ஏழு ஆண்டுகள் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த இவர் அக்கட்சியின் "இடதுசாரி" பிரதிநிதியாக கருதப்படுகிறார். அவர் Mitteldeutsche Zeitung க்கு கூறுகையில், அங்கே "சட்டத்தின் ஆட்சிப்படி நடைமுறை" இருப்பதாக, அதாவது ஸ்பெயின் "ஒரு சுதந்திர மற்றும் தைரியமான நீதித்துறையை" கொண்டுள்ளதாகவும், மற்றும் "ஓர் ஐரோப்பிய பிடியாணை இருந்தால்,” "ஒருவரின் கண்களை மூடிக் கொண்டு" அவரால் இருக்க முடியாது என்றார்.
ஜேர்மன் அரசாங்க நிலைப்பாடு மீது அங்கிருக்கும் எந்தவொரு விமர்சனமும் எந்தளவுக்கு இருக்கிறதென்றால், அது மாட்ரிட்டின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இல்லை. அதற்கு பதிலாக அந்த மோதல் கட்டுப்பாட்டை மீறி தீவிரமடைந்துவிடுமோ என்ற அச்சத்தால் உந்தப்பட்டுள்ளது.
இதுதான் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஊதுகுழலான நியூ யோர்க் டைம்ஸின் கண்ணோட்டமாகவும் உள்ளது. அது ஸ்பானிய அரசாங்கம் எடுத்த நிலைப்பாட்டை ஆமோதித்தது. “ஸ்பானிய அரசாங்கம் அதன் நல்லிணக்கத்தைப் மற்றும் அதன் அரசியலமைப்பைப் பாதுகாக்க அதன் உரிமைகளுக்குள் செயல்பட்டுள்ளது,” என்று எழுதிய அது, “ஐரோப்பிய அரசுகள் கட்டலான் பிரிவினைவாதிகளுக்கு எந்த ஆதரவும் வழங்காமல் இருப்பது சரியே,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.
"நன்கு சிந்திக்காத கட்டலான் சுதந்திரத்திற்கான முன்னெடுப்பை தேசத்துரோகமாக கையாள்வதன் மூலம் அந்த இயக்கத்திற்கு தகுதியற்ற ஒரு தார்மீக அதிகாரத்தை வழங்குகிறது என்று மாட்ரிட்டுக்கு கூறுவதன்மூலம்" பேர்லின் "சிறப்பாக செயல்படும்" என்று ஆலோசனை வழங்குமளவுக்கு டைம்ஸ் சென்றது. அது தொடர்ந்து எழுதியது, “கட்டலோனியாவை நோக்கிய சமரச பாவனை, வெகு தொலைவு சென்றுவிட்ட ஒரு மோதலை தணிக்க உதவும்.”
ஜேர்மன் அரசாங்கம் இதுபோன்ற ஆலோசனைகளை அதன் மனதில் ஏற்கும் என்பதற்கு எந்தவொரு அறிகுறியும் வழங்கவில்லை. பேர்லின் ஸ்பானிய அரசாங்கத்திற்கு பின்னால் அணி சேர்ந்து வருகிறது ஏனென்றால் அது ஜேர்மன் மட்டத்திலும் ஐரோப்பிய மட்டத்திலும் பரந்த பொலிஸ் அரசை ஸ்தாபிக்க முயன்று வருகிறது. ஐரோப்பாவின் இராணுவவாதத்துடன் சேர்ந்து, இதுதான், சமீபத்தில் நிறுவப்பட்ட ஜேர்மன் அரசாங்கத்தினது கூட்டணி உடன்படிக்கையில் பழமைவாத கட்சிகளும் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியும் உடன்பட்டுள்ள மைய குறிக்கோள்களில் ஒன்றாக உள்ளது.