ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fifty years of the Socialist Equality Party of Sri Lanka
Arm the working class with the program of socialist internationalism and with revolutionary leadership!

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஐம்பது ஆண்டுகள்

தொழிலாள வர்க்கத்தை சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்துடனும் புரட்சிகர தலைமைத்துவத்துடனும் ஆயுதபாணியாக்கு!

By the Socialist Equality Party (Sri Lanka) 
16 June 2018

இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காவும் உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்திற்காகவும் அது முன்னெடுத்த 50 ஆண்டுகால போராட்டத்தை நினைவுகூர்கின்றது.

1968 ஜூன் 16-17 திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) என்னும் பெயரில் இந்த கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பிரிவுகளின் வழியில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 1996ல் சோசலிச சமத்துவக் கட்சியாக பரிணமித்தது.

உலகத் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி வளர்ச்சியடைந்த நிலைமையின் மத்தியிலேயே புரட்சிகர தொழிலாள வர்க்கத் தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்காக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. அது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருந்த அதேவேளை, அவசரத் தேவையாகவும் இருந்தது. மற்றும், அப்போது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஆதிக்கம் செலுத்திய பரந்த மற்றும் வெளித்தோற்றத்தில் சக்திவாய்ந்ததாக காட்சியளித்த அனைத்து ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களுக்கும், விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட ஆயுதப் போராட்டத்தை புகழ்ந்துரைத்த மாவோவாதத்துக்கும், தமது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை "சோசலிசம்" என சித்தரித்து, மாஸ்கோவுக்கும் பெய்ஜிங்கிற்கும் மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் சாமர்த்தியங்களைக் கையாண்ட இந்தியாவின் காங்கிரஸ் கட்சி போன்ற வரலாற்றுரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள எண்ணற்ற முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கும் கோட்பாட்டு அடிப்படையிலான சவாலாகவும் இருந்தது.

இந்த அனைத்து சக்திகளும் பொதுவானது என்னவெனில், இவை அனைத்தும் தேசியவாத வேலைத்திட்டத்தை அரவணைத்துக் கொண்டதுடன் சோசலிச சர்வதேசியவாதத்தை கடுமையாக எதிர்த்தன.

மிக உடனடி அர்த்தத்தில், லங்கா சம சமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) இழிந்த காட்டிக்கொடுப்புக்கு பதிலிறுப்பாகவே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. ட்ரொட்ஸ்கிச கட்சி என கூறிக்கொண்ட லங்கா சம சமாஜக் கட்சி, காட்டிக்கொடுக்கும் வரை பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் ஒரு முன்னணிப் பகுதியாக இருந்து வந்தது.

பல ஆண்டுகால சந்தர்ப்பவாத பின்னடைவுகளுக்குப் பின்னர், 1964ல், அது தலைமை வகித்த கிளர்ச்சிமிக்க பரந்துபட்ட தொழிலாள வர்க்க இயக்கத்தை காட்டிக்கொடுத்த லங்கா சம சமாஜக் கட்சி, சிங்கள-ஜனரஞ்சகவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்து கொண்டது. லங்கா சம சமாஜக் கட்சியின் ஆதரவை எதிர்பார்த்த பிரதமர் பண்டாரநாயக்க அம்மையார், "தொழிலாளர் தலைவர்களை" அரசாங்கத்திற்குள் கொண்டு வர முடியாவிட்டால், இருக்கின்ற ஒரே மாற்றீடு, அவரது வார்த்தைகளில் "சர்வாதிகாரத்தை" பயன்படுத்துவதும் தொழிலாளர்களை "துப்பாக்கி முனையிலும் துப்பாக்கி கத்திமுனையிலும் வேலை செய்ய வைப்பது” மட்டுமே ஆகும், என நெருக்கடியில் மூழ்கிய இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கு தெளிவுபடுத்தினார்.

ட்ரொட்ஸ்கிசவாதிகள் என கூறிக்கொண்டு முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழையும் முதலாவது கட்சியாகிய லங்கா சம சமாஜக் கட்சி, நிரந்தரப் புரட்சியுடன் சகலவிதமான தொடர்புகளையும் கைவிட்டது. 1947-48ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதன் தெற்காசிய சாம்ராஜ்யத்தின் மீதான உத்தியோகபூர்வ அரசியல் கட்டுப்பாட்டை கைவிட்ட போது, இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள், சுதந்திரத்தை ஒரு வெட்கக் கேடானது என்றும் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையின் இனவாத-வகுப்புவாத பிரிவினையை ஒரு வரலாற்று குற்றம் என்றும் கண்டனம் செய்தனர். காலனித்துவ முதலாளித்துவத்தின் போட்டிப் பிரிவுகளிடம் அதிகாரம் கைமாற்றப்பட்டமை, மேலும் மேலும் கிளர்ச்சியுற்று வந்த தொழிலாள வர்க்கத்தை அடக்குவதையும், நிலப்பிரபுத்துவம், ஜாதிவாதம் மற்றும் ஏராளமான பிற நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களும் புரட்சிகரமாக கலைக்கப்படுவதை தடுப்பதையும் இலக்காகக் கொண்ட, வெறுமனே ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் வடிவத்தை மட்டுமே மாற்றுவதாக அமைந்தது.

இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய பகுதியினரான தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமைகள் மறுக்கப்படுவதை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே எதிர்த்தனர். இனவாதமானது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் ஒரு ஆயுதமாகும் என அவர்கள் எச்சரித்தனர்.

ஆனால் 1960களின் ஆரம்பத்தில், லங்கா சம சமாஜக் கட்சி முற்றிலும் நேரெதிரான முன்நோக்கை அபிவிருத்தி செய்தது. இப்போது அது, இலங்கை அரச கட்டமைப்பினுள்ளும் பாராளுமன்ற சீர்திருத்தங்கள் மூலமும் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய கேடுவிளைவிக்கும் சிங்கள பேரினவாதிகளுடனும் கூட்டணி சேர்வதன் மூலமும் சோசலிசத்தை அடைய முடியும் என்று கூறிக்கொண்டது.

லங்கா சம சமாஜக் கட்சி 1964ல் செய்த "மாபெரும் காட்டிக் கொடுப்பின்" பின்னர், புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி உட்பட, லங்கா சம சமாஜக் கட்சிக்குள்ளும் அதைச் சூழவும் இருந்த பலர், அதன் சீர்திருத்தவாத மற்றும் பாராளுமன்ற அரசியலை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டனர். ஆனால் அவர்கள் அதை ஒரு மேம்போக்கான மற்றும் முற்றுமுழுதான தேசியவாத அடிப்படையிலேயே கூறிக்கொண்டனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டமும்

வியட்நாம் போரின் தாக்கத்தினாலும் மற்றும் போலிச்சுதந்திரம் வெகுஜனங்களின் எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதில் தீர்க்கமாக தோல்வி கண்டதாலும் தீவிரமயப்பட்ட ஒரு இளைஞர் குழுவினராலேயே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உருவாக்கப்பட்டது. இந்த இளைஞர் குழுவானது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (நா.அ.அ.கு.) செல்வாக்கு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், லங்கா சம சமாஜக் கட்சி காட்டிக் கொடுப்பின் வேர்கள் மற்றும் முக்கியத்துவங்ளையும், ஆசியாவிலும் உலகம் முழுவதும் புரட்சிகர தொழிலாளர் கட்சிகளை கட்டியெழுப்புவதற்காக அதன் படிப்பினைகளையும் கிரகித்துக்கொள்வதற்காக பரந்த தொலைநோக்குடைய முடிவுகளை எடுத்தது.


1970ளில் புரட்சிக் கம்யூனிஸ்ட் ழக ஊர்வலத்தின் ஒரு பகுதியினர்

லங்கா சம சமாஜக் கட்சியின் அரசியல் சீரழிவும் அது இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியின் மிக முக்கியமான சமூக முட்டுகொடுப்பாக மாறியமையும் பரந்த சமூக நிகழ்ச்சிபோக்கில் வேரூன்றி இருந்தன: முதலாளித்துவத்தின் தற்காலிக மறுஸ்திரப்பாட்டிற்கு பிரதிபலிக்கும் வகையில், நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டபோது அத்திவாரமாகக் கொள்ளப்பட்ட ஸ்ராலினிசம் பற்றிய ட்ரொட்ஸ்கிச பண்புமயப்படுத்தலை கைவிட்டு, புரட்சிகர தொழிலாள வர்க்கத் தலைமைத்துவத்துக்கான போராட்டத்தை நிராகரித்து, "சோசலிசத்தை" ஸ்தாபிப்பதற்காக ஏனைய சமூக சக்திகளை நாடிய, ஒரு குட்டி முதலாளித்துவ கலைப்புவாத போக்கு நான்காம் அகிலத்திற்குள்ளேயே தலைதூக்கியது.

மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட இந்த போக்கு, "உண்மையான வெகுஜன இயக்கத்துக்குள்" ஒருங்கிணைதல் என்ற பெயரில், நான்காம் அகிலத்தின் தேசியப் பிரிவுகளை ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குள்ளும் ஆசியாவில், முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்குள்ளும், அவற்றை "இடது" பக்கம் தள்ளும் நோக்கத்துடன் கலைத்துவிடுவதை பிரேரித்தது.

பப்லோவாத கலைப்புவாதத்தை எதிர்க்கவும் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தையும் நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தையும் பாதுகாக்கவும் 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

கிரெம்ளின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினதும் அதைச் சூழ இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளதும் புரட்சிகரப் பங்கு மற்றும் "சுய-சீர்திருத்தம்" என்பது பற்றிய பப்லோ மற்றும் மண்டேலின் அதீத கூற்றுக்களை எதிர்ப்பதாக ல.ச.ச.க. கூறிக்கொண்டது. ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் போராட்டமானது, தனது அதிகரித்து வரும் வர்க்க சமரச அரசியலுக்கு குழிபறிக்கும் என அஞ்சிய அது, அனைத்துலகக் குழுவில் இணைவதற்கு மறுத்துவிட்டது.

அதன்பின்னர், கொழும்புக்கும் பாரிசுக்கும் இடையில் ஒரு சந்தர்ப்பவாத தொழிற்பங்கீட்டு உறவு அபிவிருத்தி செய்யப்பட்டது. இதில், பப்லோ மற்றும் மண்டேலின் போலி நான்காம் அகிலத்திற்கு லங்கா சம சமாஜக் கட்சி ஆதரவையும் அந்தஸ்த்தையும் கொடுத்ததுடன், லங்கா சம சமாஜக் கட்சி பாராளுமன்றவாதம் மற்றும் தொழிற்சங்கவாதத்தையும் தழுவிக்கொண்டதற்கும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி அதை முதலாளித்துவ ஆட்சியுடன் கட்டிப்போடும் வழிவகையாக முதலாளித்துவம் சிங்கள ஜனரஞ்சகவாதத்தை ஊக்குவிப்பதற்கு அது அடிபணிந்து போனதற்கும் பாரிசில் உள்ளவர்கள் அரசியல் போர்வை வழங்கினர்.

கியூப புரட்சியானது தொழிலாள வர்க்க கட்சி அல்லது தொழிலாள வர்க்கப் புரட்சி இல்லாமலேயே சோசலிசத்தை ஸ்தாபிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது என்ற கூற்றின் அடிப்படையில், அவர்கள் "நான்காம் அகிலத்தை" 1963ல், “மறு ஐக்கியப்படுத்திய” போது, ஐக்கிய செயலகத்தின் பப்லோவாத தலைவர்கள், தாம் கட்டியெழுப்ப விரும்பும் "பரந்துபட்ட ட்ரொட்ஸ்கிச கட்சிகளுக்கு" ஒரு உதாரணமாக லங்கா சம சமாஜக் கட்சியை பாராட்டினர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை நிறுவியவர்கள், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதானது, அதாவது, அதை சுரண்டுவதற்கான ஒரு பொருள் என்பதில் இருந்து ஒரு புதிய சமூக ஒழுங்கின் மாற்றத்திற்கான பிரதான சக்தியாக்குவது பப்லோவாதத்திற்கும் சகல வடிவிலுமான தேசிய சந்தர்ப்பவாதத்துக்கும் எதிரான இடைவிடா அரசியல்-தத்துவார்த்த போராட்டத்துடன் பிணைந்துள்ளது என்பதை அடையாளம் கண்டனர். அல்லது, முன்னோடி அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதியான ஜேம்ஸ் பி. கனன் கூறியது போல், "சோசலிசத்திற்கான போராட்டத்தில் பத்தில் ஒன்பது, கட்சி உட்பட தொழிலாளர் அமைப்புக்களில் முதலாளித்துவ செல்வாக்கிற்கு எதிரான போராட்டமாகும்."

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஸ்தாபக மாநாடு

1968 ஜூனில் நடந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக ஸ்தாபக மாநாடு, சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்திற்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர கட்சியாக அதை தெளிவாக வரையறுத்தது.

அது மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. முதலாவது தீர்மானமானது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என உறுதிகொண்டது. அது, வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச பண்பையும், அதனால் ஒரு சர்வதேசக் கட்சியின் தேவையையும், ஸ்ராலினிசமும் சமூக ஜனநாயகமும் எதிர்ப்புரட்சிகரமானது என நான்காம் அகிலம் பண்புமயப்படுத்தியதன் சரியான தன்மையையும், "அனைத்து வடிவிலான திருத்தல்வாதத்திற்கு எதிரான சமரசமற்ற போராட்டத்துக்கும்” வர்க்கப் போராட்டத்தில் “அதிகபட்ச” தலையீட்டுக்கும் இடையிலான “பிரிக்கமுடியாத” தொடர்பையும் வலியுறுத்தியது.

இரண்டாவது தீர்மானமானது, பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்தின் 1968 மே-ஜூன் புரட்சிகர எழுச்சிக்கு மதிப்பளித்ததுடன், டு கோலின் ஆட்சியையும் பிரெஞ்சு முதலாளித்துவத்தையும் காப்பாற்றியதற்காக ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றம் சாட்டியது. "இந்த பிரம்மாண்டமான போராட்டம்" மேற்கு ஐரோப்பாவில் புரட்சிகர போராட்டங்களின் தொடக்கத்தை குறிப்பதோடு, "புரட்சியின் மையம் காலனித்துவ மற்றும் அரை காலனித்துவ நாடுகளுக்கு மாற்றப்பட்டுவிட்டதுடன் வெகுஜனங்களின் அழுத்தத்தால் ஸ்ராலினிஸ்டுகள் புரட்சியாளர்களாக மாற்றப்படுவர் என்ற பப்லோவாத திருத்தல்வாத தத்துவங்களையும் தகர்த்துவிட்டது,” என அது வலியுறுத்தியது.

மூன்றாவது தீர்மானம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் வியட்நாமிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஆதரித்தது. உண்மையான தேசிய விடுதலையை உலக ஏகாதிபத்தியத்தை தூக்கி வீசுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும், அதற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா அத்துடன் ஆசியாவிலும் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவது அவசியம் என்று அது வலியுறுத்தியது.

ஸ்தாபக மாநாடானது, லங்கா சம சமாஜக் கட்சியும் (LSSP), அதற்கு முன்னதாக அதன் இப்போதைய நெருங்கிய கூட்டாளியான ஸ்ராலினிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் (CPC), "சிங்களம் முதலில்" என்ற கொள்கையை தழுவிக்கொண்டதன் ஆழ்ந்த பிற்போக்கு உள்ளர்த்தங்களைப் பற்றி எச்சரித்தது. "(SFLP-LSSP-CPC) கூட்டணியின் முகாமினால் முன்னெடுக்கப்படும் தேசியவாத பிரச்சாரம், "சிங்கள பௌத்த சர்வாதிகாரத்திற்கு பொருத்தமான களத்தை அமைக்கின்றது” என மாநாடு தீர்க்கதரிசனமாக எச்சரித்தது.

அனைத்திற்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனும் அது அபிவிருத்திசெய்த புரட்சிகர முன்னோக்குடனும் இணைந்துகொண்டதன் மூலம், மாநாடானது இலங்கை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகள் மத்தியில் நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை புதுப்பித்தது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், தாமதமாக முதலாளித்துவ வளர்ச்சிகண்ட நாடுகளில் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகள், தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சி மூலமே தீர்க்கப்படும் என்ற புரிதலும் இதில் அடங்கும்.

இதற்கேற்ப, போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் மறுஸ்திரமாக்கலின் பாகமாக 1947-1948ல் ஸ்தாபிக்கப்பட்ட பிற்போக்கு தேசிய-அரசு கட்டமைப்பு பற்றிய ட்ரொட்ஸ்கிச பண்புமயப்படுத்தலை திரும்பவும் உறுதி செய்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், தெற்காசியாவிலும் இறுதியாக உலகம் முழுவதிலும் சோசலிசப் புரட்சியை அபிவிருத்தி செய்வதில் இருந்து பிரிக்கப்பட்டு மற்றும் தனியாக இலங்கையில் புரட்சியை செய்தல் என்ற எந்தவொரு தேசியவாத நிலைப்பாட்டையும் நிராகரித்தது.

இலங்கையில் முதலாளித்துவ ஆட்சியை மீட்பதில் லங்கா சம சமாஜக் கட்சியின் பங்கானது உலகைச் சூழ நிகழ்ந்தவற்றை முன்னறிவிப்பதாகவும் சமாந்தரமானதாகவும் இருந்தது.

1968 மற்றும் 1975க்கு இடையே, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ செழிப்பு வீழ்ச்சியுற்றபோது, ​​தொழிலாள வர்க்கம் ஒரு உலகளாவிய புரட்சிகர தாக்குதலை உக்கிரமாக்கியது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக மாநாடு எதிர்பார்த்தபடி, 1968 மே-ஜூன் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தை ஒரு வெற்றிகரமான எழுச்சி பின்தொடர்ந்தது. இதில் 1969 இத்தாலியில் "சூடான கோடை" (hot summer), ஹீத்தின் பழைமைவாத அரசாங்கத்தை கவிழ்த்த 1974 பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர் போராட்டம் மற்றும் கிரேக்கத்திலும் போர்த்துக்கலிலும் பாசிச ஆட்சிகளின் வீழ்ச்சியும் அடங்கும்.

ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் எதிர்ப்புரட்சிகர பங்கின் காரணமாக இறுதியில் ஏகாதிபத்தியத்தால் இந்த தாக்குதலை எதிர்த்து நிற்க முடிந்தது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முயற்சிகளை அடக்குவதில், அதிகாரத்துவ "தொழிலாளர்களின் கட்சிகளுக்கு" பப்லோவாதிகள் உதவியும் ஒத்தாசையும் கொடுத்தனர். இந்த பப்லோவாதிகள் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் திட்டமிட்டு பிரமைகளை பரப்பிய அதேவேளை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை தனிமைப்படுத்த செயற்பட்டதுடன் புரட்சிகர ட்ரொட்ஸ்கிச வேலைத் திட்டத்தை அணுகவிடாமல் தொழிலாள வர்க்கத்தை தடுத்தனர்.

இலங்கையில், குறுகிய காலம் வாழ்ந்த 1964 கூட்டணியைத் தொடர்ந்து, 1970 இலிருந்து 1975 வரை "இரண்டாவது கூட்டணி" உருவானதோடு இது தொழிலாள வர்க்கத்துடனும் கிராமப்புற வெகுஜனங்களுடனும் மேலும் மேலும் வெளிப்படையான மோதலுக்குச் சென்றது. லங்கா சம சமாஜக் கட்சியின் குற்றவியல் பங்கு, 1972 பேரினவாத அரசியலமைப்பின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது. லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர். டி. சில்வாவினால் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், தமிழ் சிறுபான்மையினர் மீது வேலை மற்றும் கல்வி ஒதுக்கீடுகள் மீது பாரபட்சங்களை திணித்ததுடன் பௌத்தத்தை அரச மதமாகவும் சிங்களத்தை ஒரே ஆட்சி மொழியாகவும் பிரகடனம் செய்தது.

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பு, வலதுசாரி சக்திகளுக்கு சகல வழிகளிலும் முட்டுக்கொடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு பிரமாண்டமான சவால்களை உருவாக்கிவிட்டது.


1970 ளில் புரட்சிக் கம்யூனிஸ்ட் ழகத்தின் கூட்டம்

இந்தியாவில், ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.), பெரும் வணிக காங்கிரஸ் கட்சி உடனான அதன் நெருங்கிய உறவுகளாலும் 1962 இந்தோ-சீன எல்லை போரில் புது டில்லிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்ததாலும் மோசமாக மதிப்பிழந்தது. ஆனால் லங்கா சம சமாஜக் கட்சி (ஆசியாவில் “ட்ரொட்ஸ்கிச” கட்சியாக பிரசித்தி பெற்ற, ஆனால் அதில் இருந்து தொலைவில் இருந்த கட்சி) ஆற்றிய குற்றவியல் பங்கினை சுட்டிக்காட்டி, ஸ்ராலினிஸ்டுகளும், குறிப்பாக மாவோவாத நக்சலைட் இயக்கமும், புரட்சிகர சிந்தனைகொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உண்மையான ட்ரொட்ஸ்கிச பக்கம் செல்ல விடாமல் தடுக்க முடிந்தது.

இலங்கையில், தொழிலாள வர்க்கத்தை லங்கா சம சமாஜக் கட்சி அரசியல் ரீதியில் நசுக்கியமை, கட்டற்று இனவாத அரசியல் வளர்வதற்கான கதவுகளைத் திறந்துவிட்டது. சிங்கள பேரினவாதத்தை நியாயப்படுத்துவதன் மூலமும், தனது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை எதிர்பார்க்க முடியும் என்ற தமிழ் சிறுபான்மையினரின் நம்பிக்கையை இல்லாதொழித்ததன் மூலமும் இது நடந்தது.

குட்டிமுதலாளித்துவ தீவிரவாத ஜே.வி.பி.க்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த போராட்டம்

மாவோவாதம், காஸ்ட்ரோவாதம் மற்றும் சிங்கள “தேசப்பற்று” அல்லது பேரினவாதத்தினதும் கலவையை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் மற்றும் விவசாய இளைஞர்கள் மத்தியில் பரவலான ஆதரவைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) குட்டி முதலாளித்துவ தீவிரவாத அரசியலுக்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எடுத்த கொள்கை ரீதியான நிலைப்பாடு, அதன் அபிவிருத்திக்கு தீர்க்கமானதாக இருந்தது.

1970ல், 19 வயதிலேயே கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கீர்த்தி பாலசூரிய, ஜே.வி.பி. இன் அரசியல் மற்றும் வர்க்க சுபாவம் என்ற விரிவான மார்க்சிச விமர்சனத்தை எழுதினார். பிற்போக்கு தேசியவாதத்தில் வேரூன்றியுள்ள, தேசிய முதலாளித்துவத்தின் "முற்போக்கான" சாத்தியமான தன்மை பற்றியும், விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட ஆயுதப் போராட்டத்தின் செயற்திறம் பற்றியும் ஆபத்தான மாயையைப் பரப்புகின்ற ஜே.வி.பி., தொழிலாள வர்க்கத்துக்கு விரோதமானது என அம்பலப்படுத்தினார். ஆயுதப் போராட்டமே புரட்சிகர அரசியலின் உரைகல் என்ற கூற்றை நிராகரித்த தோழர் பாலசூரிய, "வர்க்கங்கள் மற்றும் அவற்றின் இயக்கவியலுக்கும் இடையிலான உள் உறவுகளைப் பற்றிய ஒரு உண்மையான புரட்சிகர மதிப்பாய்வு இல்லாமல், புரட்சி பற்றிய கேள்வியை எழுப்பக்கூட முடியாது,” என எழுதினார்.


1970 ல் கூட்டமொன்றில் கீர்த்தி பாலசூரிய உரையாற்றுகின்றார்

"சலுகைபெற்ற" தமிழ்-பேசும் தோட்ட தொழிலாளர்களை கண்டனம் செய்வது உட்பட ஜே.வி.பி. இன் சிங்கள பேரினவாதம், பாசிசத்திற்கு வழிவகுக்கிறது என்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலாளர் எச்சரித்தார். "ஜே.வி.பி எதிர்காலத்தில் ஒரு பாசிச இயக்கத்தால் நன்கு பயன்படுத்திக்கொள்ளக் கூடிய ஒரு தொழிலாள-வர்க்க விரோத இயக்கத்தை இலங்கையில் உருவாக்குகிறது" என்று அவர் எச்சரித்தார்.

ஜே.வி.பி.யின் அரசியலை அம்பலப்படுத்தியதன் ஊடாக, தீவிரவாத சிங்கள ஜனரஞ்சகவாதம் மற்றும் ல.ச.ச.க. மற்றும் அதற்கு அடிபணிந்து போன புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி உட்பட சகல கட்சிகளில் இருந்தும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தனது வர்க்க வேறுபாட்டை ஆழப்படுத்திக்கொண்டது.

ஜே.வி.பி. அரசியல் ரீதியில் திவாலான ஒரு "ஆயுத எழுச்சியை” முன்னெடுத்த பின்னர், அடுத்த ஆண்டு தீவின் தென்பகுதியில் ஜே.வி.பி.க்கும் கிராமப்புற இளைஞர்களுக்கும் எதிராக முதலாளித்துவ கூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலை எதிர்ப்பதற்கு, இதே புரட்சிகர திசையமைவால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஊக்குவிக்கப்பட்டது. இந்த கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்காக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பத்திரிகைகள் 1971ல் சட்டவிரோதமானவையாக அறிவிக்கப்பட்டதுடன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கட்சி இரகசியமாகவும் அரச வன்முறை அச்சுறுத்தலின் கீழும் செயல்பட வேண்டியிருந்தது. இருப்பினும், அரச ஒடுக்குமுறையை எதிர்க்குமாறு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பிரச்சாரம் செய்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், "அரசியல் கைதிகளை விடுதலை செய்" என்ற கோரிக்கையை எழுப்பியது. அச்சமயத்தில் நாங்கள் விளக்கியது போல், முதலாளித்துவத்துக்கும் அதன் அரசுக்கும் எதிராக விவசாயிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்கும் முன்னெடுப்பின் பாகமாக, தொழிலாள வர்க்கத்துக்கு கிராமப்புற வெகுஜனங்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது.

1978ல் சிறையில் இருந்து விடுதலையான ஜே.வி.பி. தலைவர் விஜேவீர, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அலுவலகத்திற்கு வந்து தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த பாதுகாப்பு பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கத் தள்ளப்பட்டார்.

முதலாளித்துவ எதிர்த்-தாக்குதலும் தமிழர்-விரோத யுத்தமும்

1968-1975 இல் உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சி தடம்புரளச் செய்யப்பட்டமை, முதலாளித்துவ எதிர்த்தாக்குதலுக்கு அடித்தளம் அமைத்தோடு, அது 1970களின் பிற்பகுதியில் தொடங்கியதும் ஆரம்ப கட்டங்களில் எப்போதும் ரொனால்ட் ரீகன் மற்றும் மார்கரெட் தாட்சரின் பெயர்களுடன் தொடர்புபட்டும் இருந்தது.

தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களின் தோள்கள் மீது முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை திணிக்க "சோசலிச" SLFP-LSSP-CPC கூட்டணி எடுத்த முயற்சிகள், 1977ல் ஜே.ஆர். ஜெயவர்தனவின் கீழ் வெளிப்படையான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஆட்சிக்கு வர வழி வகுத்தது. பூகோள மூலதனம் தடங்கலின்றி சுரண்டுவதற்காக இலங்கையை திறந்துவிட்ட அந்த அரசாங்கம், 1980 அரசாங்க ஊழியர்களின் பொது வேலை நிறுத்தத்தை நசுக்கியதுடன், குவிந்து வந்த சமூக பதட்டங்களையும் கோபத்தையும் பிற்போக்கு திசையில் திருப்பி விடுவதன் பேரில் சிங்கள இனவாதத்தை கிளறிவிட்டது. இந்த நடவடிக்கைகள், கொழும்பு 1983ல் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு உள்நாட்டு யுத்தத்தை முன்னெடுப்பதில் உச்சக்கட்டத்தை எட்டியது.

அடுத்து வந்த காலாண்டு பூராவும் தீவின் அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய யுத்தத்துக்கு எதிராக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகப் போராடியது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் அரச படைகளையும் உடனடியாக திருப்பி அழைக்க வேண்டும் என்று அது கோரியதுடன், யுத்தமானது ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தினதும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை முறையாக அம்பலப்படுத்தியது.

அதே சமயம், அது தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (புளொட்) போன்ற ஏனைய தமிழ் தேசியவாத அமைப்புக்களதும் தேசியவாத-பிரிவினைவாத முன்னோக்கை எதிர்த்ததுடன் இலங்கை அரசிற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்க ஐக்கியத்தை கட்டியெழுப்புவும் போராடியது.

தமிழ் தேசியவாத இயக்கங்கள் புது டில்லியின் ஆதரவை எதிர்பார்த்திருந்ததோடு இந்திய முலாளித்துவத்தின் புவிசார் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக ஒரு இழிந்த சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, அவற்றுக்கு ஆயுதங்களை வழங்கிய இந்திய அரசாங்கம், 1987ல் தனது குறிக்கோளை மாற்றிக்கொண்டபோது, அந்த இயக்கங்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டன. இலங்கை நெருக்கடி, ஒட்டுமொத்தமாக பிற்போக்கு தெற்காசிய தேசிய-அரச அமைப்பு முறைக்கும் குழி பறித்துவிடும் என்று அஞ்சிய புது தில்லி, தமிழ் கிளர்ச்சிக் குழுக்களுக்கு கொடுத்த ஆதரவை கைவிட்டது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களாலும் ஆதரிக்கப்பட்ட 1987 ஜூலை இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ், இந்திய துருப்புக்கள் அமைதிப் படை என்ற பெயரில் தீவிற்குள் நிலைகொண்டன. ஆனால் உண்மையில், இலங்கை முதலாளித்துவ அரசின் ஒற்றையாட்சி அமைப்பை உறுதிப்படுத்தவே இந்தியா படைகளை அனுப்பியது.

தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் நிலைப்பாட்டில் இருந்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து நின்ற ஒரே அமைப்பு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மட்டுமே.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக தலைமைத்துவத்துடனான தீவிர கலந்துரையாடல்களை தொடர்ந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, "இலங்கை நிலைமையும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் பணிகளும்." என்ற தலைப்பில் விபரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் ஸ்தாபிக்கப்பட்ட சுதந்திர அரசுகளின் அனுபவங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் அது விளக்கியதாவது: "மாற்றமுடியாதவாறு, ஏகாதிபத்திய ஒப்புதலுடனான 'சுதந்திரம்', முறைகேடாகப் பிறந்த அரசுகளை அமைப்பதையே குறிக்கிறது. இந்த அரசுகளின் அத்திவாரமே ஜனநாயக கோட்பாடுகளை நாசகரமாக நசுக்குவதன் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இந்த வழிவகையில், தேசிய முதலாளித்துவமானது ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்பவராக செயல்படவில்லை, மாறாக, ஏகாதிபத்திய கொள்ளையடிப்பின் இளைய பங்காளியாகவே செயற்படுகின்றது. இந்த முறையில் உருவாக்கப்பட்ட அரசுகளின் வகை, உற்பத்தி சக்திகளின் முற்போக்கான வளர்ச்சி சாத்தியமற்றதாகவே இருந்து வருகின்ற, அழுகிப் போகும் முதலாளித்துவத்துக்கு ஒரு சிறைச்சாலையே என்பதற்கும் மேலாக ஒன்றுமே இல்லை. இந்த சூழ்நிலையில் இருந்து, முதலாளித்துவத்தின் ஆரவாரமான ஒப்புதலுடன் தலைதூக்குவது இனவாத யுத்தங்களே ஆகும். முதலாளித்துவ ஆட்சி நிலவும் வரை, இந்த நிலைமையை மாற்ற முடியாது. இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ் மற்றும் பர்மாவின் -உண்மையில் உலகின் ஒவ்வொரு முன்னாள் காலனித்துவ நாட்டினதும்- சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாறு, உலக முதலாளித்துவத்தால் உண்மையான தேசிய ஐக்கியத்தையும் அரசியல் சுயாதீனத்தையும் ஸ்தாபிக்க முடியாது என்பதையே நிரூபிக்கிறது."

இந்த அறிக்கை, கொழும்பு முன்னெடுத்த இனவாத யுத்தத்திற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வெளிப்படுத்திய தளராத எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்த அதேவேளை, சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை யதார்த்தமாக்க முடியும் என்று ஐயப்பாடின்றி வலியுறுத்தியது. சிங்கள, தமிழ் முதலாளித்துவ கன்னைகளுக்கும் அவர்களின் போட்டி தேசியவாதங்களுக்கும் எதிராக, அது ஸ்ரீலங்கா, தமிழ் ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான அழைப்பை அபிவிருத்தி செய்தது.

துரதிர்ஷ்டவசமாக, தோழர் கீர்த்தி பாலசூரிய எழுதிய கடைசி பிரதான அறிக்கையாக அது இருந்தது. 1987 டிசம்பரில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு திறமைமிக்க மூலோபாயவாதியை இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அபகரித்துக்கொண்டது. அவர் 39 வயதிலயே உயிரிழந்தார்.


ீர்த்தி பாலசூரிய

இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு பதிலளிக்குமுகமாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் அனைத்துலகக் குழுவும் அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சி வேலைத் திட்டத்தின் அடிப்படையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஐரோப்பாவில் அடைக்கலம் புகத் தள்ளப்பட்ட இளம் தமிழ் போராளிகள் மத்தியில் தலையிட முடிந்தது. இதில் மிகவும் தொலைநோக்குடையவர்கள், அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை நோக்கிய திசையமைவினதும் அடிப்படையிலேயே தமிழ் தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். இந்த சக்திகள் அனைத்துலகக் குழுவில் சேர்ந்து, ஐரோப்பா மற்றும் தெற்காசியாவிலும் தமது பணியை வலுப்படுத்தின.

அடுத்து வந்த ஆண்டுகளில், உள்நாட்டுப் போர் புதுப்பிக்கப்பட்ட சூழ்நிலையிலும் அரசு, ஜே.வி.பி மற்றும் புலிகளதும் தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள் அதன்மீது நடந்த நிலைமையின் கீழும், பு.க.க./சோ.ச.க. தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியது. பு.க.க. ஸ்தாபித்த அத்தகைய ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் மற்றும் பாரம்பரியத்தின் வலிமையின் காரணமாக, தீவில் புலிகளின் கட்டுப்பாட்டிலான பகுதிகளில் இருந்த ஆதரவாளர்களுடன் அதனால் தொடர்புகளை பேணக் கூடியதாக இருந்ததுடன், கட்சியின் வேலைத்திட்டத்திற்காக போராடியதற்காக 1998ல் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட நான்கு சோ.ச.க. உறுப்பினர்களை, அனைத்துலகக் குழுவின் உதவியுடன் முன்னெடுத்த சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தின் மூலம் விடுவித்துக்கொள்ள முடிந்தது. உள்நாட்டுப் போர் முடிந்த உடன், வடக்கு மற்றும் கிழக்கில் வெளிப்படையான அரசியல் பணியை மீண்டும் தொடங்கவும் மற்றும் அனைத்து முதலாளித்துவ பகுதிகளுக்கும் அவற்றின் தேசியவாத-வகுப்புவாத அரசியலுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தை சோ.ச.க. விரிவுபடுத்த முடிந்தது.


ஜே.வி.பி. குண்டர்களால் கொலை செய்யப்பட்ட ஒரு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அங்கத்தவரான ஆர்.ஏ. பிட்டவெல டிசம்பர் 1988 இல் கொல்லப்பட்டதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு கீர்த்தியின் இறுதிச்சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இறுதியில், இலங்கை முதலாளித்துவத்தால், ஏகாதிபத்திய நாடுகளதும் இந்தியாவினதும் உதவியுடன் புலிகளை வெல்லவும் 2009ல் தீவை அதன் பிற்போக்கு ஆட்சியின் கீழ் "மறு ஐக்கியப்படுத்தவும்" முடிந்தது.

2011ல் வெளியான சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் தீர்மானத்தில், மூன்று தசாப்த கால கொடூரமான இனவாத போருக்குப் பிந்தைய காலத்தில், தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பணிகளைப் பற்றி ஒரு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

போரின் முடிவானது "சமாதானத்தையும் சுபீட்சத்தையும்" கொண்டுவரும் என்ற கொழும்பு கூறிக்கொண்டதன் முழு மோசடித் தன்மையையும் சுட்டிக்காட்டி, முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பயன்படுத்த ஒரு பரந்த இராணுவ-பாதுகாப்பு இயந்திரத்தை பராமரித்து வருகிறது என்று எச்சரிக்கை செய்த பின்னர், அது பிரகடனம் செய்ததாவது: “நீண்டகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த அடியிலுள்ள பிரச்சினைகளில் எதுவும் புலிகளின் இராணுவத் தோல்வியினால் தீர்க்கப்பட்டிருக்கவில்லை... தசாப்தகாலமாக பலப்படுத்தப்பட்ட பாரபட்சங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களால் உணரப்படும் துயரங்களும் கோபங்களும் தவிர்க்கமுடியாமல் புதிய வடிவங்களில் வெடிக்கும். ஆயினும், அவசியமான அரசியல் படிப்பினைகள் கிரகித்துக்கொள்ளப்பட வேண்டும். புலிகளின் தோல்வியானது அடிப்படையில் இராணுவத் தோல்வி அல்ல, மாறாக அதன் அரசியல் முன்னோக்கில் உள்ளடங்கியிருந்த பலவீனங்களின் விளைவே ஆகும். ஆரம்பத்தில் இருந்தே, இந்தியா அல்லது ஏனைய பிராந்திய மற்றும் உலக சக்திகளின் ஆதரவுடன், தமிழ் முதலாளித்துவத்தின் சார்பாக ஒரு முதலாளித்துவ ஈழத்தை அமைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இதே சக்திகள் புலிகளுக்கு எதிராக தீர்க்கமாகத் திரும்பியபோது, இராணுவத் தாக்குதல்களை நிறுத்துமாறு ‘சர்வதேச சமூகத்திடம்’ பயனற்ற கோரிக்கையை வைக்குமளவுக்கு கீழிறங்கி வந்தனர். இலங்கையின் முதலாளித்துவத்திற்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் எதிராக, உண்மையான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்துவதற்கு சமுதாயத்தில் வல்லமைபடைத்த ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும். ஆனாலும், தமிழ், சிங்களத் தொழிலாளர்களை வர்க்க அடிப்படையில் ஐக்கியப்படுத்தும் எந்தவொரு நோக்கத்துக்கும் புலிகள் எப்போதும் இயல்பாகவே எதிரானவர்களாக இருந்தனர். சிங்களப் பொதுமக்கள் மீதான புலிகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள், கொழும்பு ஆளும்தட்டினரின் தேவைகளுக்குப் பயன்பட்டதோடு இனவாதப் பிளவை ஆழப்படுத்தியது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளில், அவர்கள் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சமூகத் தேவைகளையும் நசுக்கினர்.”

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும்

அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த-அரசியல் வேலைகளுக்கு சளைக்காத அர்ப்பணிப்பு கொண்டு செயலூக்கத்துடன் பங்குபற்றியதன் காரணமாக, இலங்கையில் மேலோங்கி இருந்த கொந்தளிப்பான உள்நாட்டுப் போர் நிலைமைகள் மற்றும் அடிப்படையில் பிற்போக்கான அரசியல் சூழலிலும், பு.க.க./சோ.ச.க., தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர பாதையை தெளிவாக வகுக்கவும் நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தை அபிவிருத்தி செய்யும் திறனையும் கொண்டிருந்தது.

1950களிலும் 1960களிலும் பப்லோவாதத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வகித்த பங்கின் மூலம் தாம் பெற்றிருந்த அதிகாரத்தை சுரண்டிக்கொண்டு, அதே பப்லோவின் வழியை அனைத்துலகக் குழுவுக்குள் திணிக்க முற்பட்ட பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (தொ.பு.க.) தேசிய சந்தர்ப்பவாதிகளோடு 1985-86ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிளவுபட்டபோது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக தலைமைத்துவமும் காரியாளர்களும் அதை ஒருமனதாக ஆதரித்தனர். லெனினை, முதலாளித்துவ தேசியவாதத்திற்கு வக்காலத்து வாங்குபவராக சித்தரிக்க முயன்ற, "தமிழ் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை எழுதி, பிரசுரிக்க மற்றும் பிரசித்தப்படுத்தவும் புலிகளின் "தத்துவாசிரியரான" அன்டன் பாலசிங்கத்துக்கு 1979ல் உதவி செய்தமையும் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நடவடிக்கையில் அடங்கும். நாம் முன்னர் விளக்கியது போல், "மார்க்சிசவாதிகளைப் பொறுத்தவரை, தேசியப் பிரச்சினையில் மிக முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டியிருப்பது 'தொழிலாள வர்க்கத்தின் சுய-நிர்ணயமே' என லெனின் கூறியதை, தமிழ் முதலாளித்துவத்தின் பிரிவினைவாத அபிலாசைகளுக்கு விமர்சனமற்ற ஆதரவாளர்களாக மார்க்சிஸ்டுகள் இருக்க வேண்டும் என்று லெனின் கேட்டுக்கொண்டார் என பாலசிங்கம் வாதிட்டார்."

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக பொதுச் செயலாளர் கீர்த்தி பாலசூரிய, தொழிலாளர் புரட்சிக் கட்சி நிரந்தர புரட்சியை கைவிட்டதைப் பற்றிய பல பிரதான பகுப்பாய்வு ஆவணங்களுக்கு பங்களிப்பு செய்துள்ளார். தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்தது, 1973-1985 என்ற ஆவணமும் இதில் அடங்கும்.

தொழிலாளர் புரட்சிக் கட்சி ஓடுகாலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள், தங்கள் சொந்த அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மீதான முழுமையான கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றனர், அதன் மூலமாக தவிர்க்க முடியாதபடி தேசிய சூழலுக்கு அடிபணிவதுடன் கலந்திருந்த பப்லோவாத சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான மூன்று தசாப்த கால போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய அடித்தளங்களை வலுப்படுத்துவது, அடுத்து வரும் தசாப்தத்திலான அடிப்படை அரசியல் மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்கள் குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆய்வின் அபிவிருத்திக்கு இன்றியமையாதது என்பதை நிரூபித்தது. அந்த மாற்றங்களாவன: உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் முதலாளித்துவம் வரலாற்று ரீதியில் வேரூன்றி இருந்துவரும் தேசிய அரச அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாட்டை பண்புரீதியாக புதிய மட்டத்திற்கு உயர்த்தியுள்ள முதலாளித்துவ பூகோளமயமாக்கத்தின் புரட்சிகர முக்கியத்துவம்; கோர்பச்சேவின் வருகை, சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவ மீட்சிக்கு திரும்பியமை; மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை அதிகரிப்பதற்காக நிர்வாகங்களின் பெருநிறுவன தொங்கு சதைகளாக மாற்றம் பெற்றமை ஆகியவையாகும்.

1968-2018 மற்றும் நிரந்தரப் புரட்சியின் நிரூபணம்

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்த, கிட்டத்தட்ட 25 வயதிற்குட்பட்ட, சில டஜன் பேர்கள் 1968ல் எடுத்த நிலைப்பாட்டின் முழு முக்கியத்துவத்தை, கடந்த ஐந்து தசாப்தங்களும் எதை எடுத்துக் காட்டியிருக்கின்றன என்ற வெளிச்சத்திலேயே புரிந்துகொள்ள முடியும்.

1968ல் தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் அபிமானத்தைக் கொண்டிருந்த மற்றும் சோசலிசத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்ட கட்சிகளையும் அமைப்புக்களையும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உறுதியுடன் சவால் செய்தது, அவை மோசடியானவையாக, தொழிலாள வர்க்கத்தின் விரோதிகளாக மற்றும் ஏகாதிபத்தியத்தின் இரண்டாம் முகவர்களாகவும் அம்பலமாகியுள்ளன.


இன்றைய சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலர் விஜே டயஸ், 1977 இல் அக்டோபர் புரட்சியின் 60 வது ஆண்டு விழாவில் உரையாற்றுகிறார்

அதன் உச்சக்கட்ட காட்டிக் கொடுப்பில், கிரெம்ளின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் ரஷ்யாவிலும் ஏனைய சோவியத் குடியரசுகளிலும் முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்தாபித்தது. இந்த முன்னெடுப்புகள் 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் நிறைவடைந்தது. இதேவழியில், "தனி நாட்டில் சோசலிசத்தை" மாவோ முன்னெடுத்தமை, முதலில் அமெரிக்காவுடன் கூட்டணி வைப்பதற்கே வழியமைத்தது. "பெரிய சுக்கான் இயக்குபவராக" 1972ல் ஜனாதிபதி நிக்சனை சந்தித்து அவரே முத்திரை குத்தி  ஆரம்பித்து வைக்கப்பட்டு, அவரை அடுத்து வந்தவர்களால் பூகோள மூலதனத்தின் அடிப்படை மலிவு-உழைப்பு உற்பத்தி களமாக சீனா மாற்றப்பட்டது.

சமூக ஜனநாயக சோசலிஸ்ட்டுகளும் தொழிற் கட்சிகளும் நீண்ட காலத்திற்கு முன்னரே தமது சீர்திருத்த திட்டங்களை தூக்கியெறிந்து விட்டதோடு, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய யுத்தக் கட்சிகளாக மாறியுள்ளன.

சோசலிஸ்டுகளாக காட்டிக் கொண்ட பல முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள், கடந்த கால் நூற்றாண்டாகவும் அதற்கும் மேலாகவும், தாமே ஏகாதிபத்தியத்துக்கு முன்னால் மண்டியிடுவதில் காலத்தை  செலவழித்துள்ளன. இந்திய முதலாளித்துவம் இந்து மேலாதிக்கவாத பி.ஜே.பி.யை தனது பிரதான கட்சியாக ஆக்கிக்கொள்ளும் வரை, காங்கிரஸ் கட்சி இந்தியாவை சர்வதேச முதலீடுகளுக்கு ஒரு கொத்தடிமை களமாக மற்றுவதற்கும் இந்திய-அமெரிக்க "பூகோள மூலோபாய" பங்காண்மையை உருவாக்குவதற்குமான முயற்சிகளுக்கு தலைமை வகித்தது.

சி.பி.எம்., சி.பி.ஐ., ஆகிய இந்திய ஸ்ராலினிச கட்சிகளைப் பொறுத்தவரை, அவை நவ தாராளமயக் கொள்கைகளையே முன்னெடுத்த இந்திய தேசிய அரசாங்கங்கள் ஆட்சிக்கு வர முட்டுக் கொடுத்தன. அவை அரசாங்கத்தை அமைத்த இந்திய மாநிலங்களில் எல்லாம், "முதலீட்டாளர் சார்பு" என அவையே விவரித்த நடவடிக்கைகளை அமுல்படுத்தின.

இந்த சகல அமைப்புகளதும் சிதைவு அவற்றின் தேசியவாத வேலைத்திட்டங்கள் மற்றும் நோக்குநிலையில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. இந்த தேசியவாத வேலைத்திட்டங்கள் மற்றும் நோக்குநிலை, எப்போதும் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சியுடன் முரண்பாடனவையாக இருக்கின்றன. இந்த உலகப் பொருளாதார ஒருங்கிணைப்பானது முதலாளித்துவத்தின் கீழ் ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் யுத்தத்துக்கும் உந்துதலளித்து வந்தாலும், அதுவே சோசலிசத்திற்கான முன்நிலைமைகளையும் உருவாக்கியுள்ளதுடன், சோசலிசத்திற்காக, இலாபத்திற்கான உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் முதலாளித்துவ தேசிய அரசில் இருந்து விடுவித்தாக வேண்டும்.

இதே நிகழ்ச்சி போக்குகளே இலங்கையில் அரசியல் கட்டமைப்பை மாற்றியுள்ளன.

ஸ்ரீ.ல.சு.க. உடனான தமது பல ஆண்டுகால கூட்டணியின் விளைவாக, ல.ச.ச.க. மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும், இராஜபக்ஷ மற்றும் குமாரதுங்க போன்றவர்களுக்கு அவ்வப்போது “இடது” பூமாலைகளைப் போடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வெற்றுக்கூடுகளாக சீரழிந்து போயுள்ளன.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், ஏனைய இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் மீது நடத்திய பாசிச தாக்குதல்கள் உட்பட, சிங்கள முதலாளித்துவ உயரடுக்கு இந்திய-இலங்கை உடன்படிக்கையை கவிழ்த்ததில் குண்டர் ஜனாதிபதி பிரேமதாச உடன் ஜே.வி.பி. ஒத்துழைத்த பின்னர், வன்முறையான புதிய சுற்று அரச அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டது. ஆயினும், அதன் பின்னர் விரைவிலேயே, அது முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ந்து வாஷிங்டனின் ஆசீர்வாதத்தை தேடி ஓடுவதோடு, அது கேட்டுக்கொண்டதன் படி தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை மூடிமறைப்பதில் மகிழ்ச்சியடைகின்றது.

நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) மட்டுமே, அவசர அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட "பொது எதிர்ப்பு" வேட்பாளரைக் கொண்டு, சீனாவுடன் மிக நெருக்கமானவராக கருதப்பட்ட இராஜபக்ஷவை பதிலீடு செய்ய, 2015 ஜனாதிபதி தேர்தலில் வாஷிங்டன் மேற்கொண்ட தலையீட்டுக்கு ஆதரவு வழங்கிய போலி-இடது அமைப்புக்களில் மிகவும் வெட்கக் கேடான கட்சியாக இருந்தது. ஜனாதிபதியாக சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டதையும் பிரதமராக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதையும் நவ சம சமாஜக் கட்சி "ஜனநாயகப் புரட்சி" என பாராட்டியது. சிறிசேன இராஜபக்ஷவின் கையாளாக இருந்தவர் மற்றும் விக்கிரமசிங்க இனவாத போரைத் தொடக்கிய ஐ.தே.க.யின் தலைவர் என்பதைப் பற்றி அதற்கு கவலையில்லை. இதற்கு பொருத்தமானவாறு, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளை வெளிப்படையாக ஆதரிக்கும் பப்லோவாத சர்வதேசத்தின் இலங்கைப் பகுதியாக நவ சம சமாஜக் கட்சி உள்ளது.

இதற்கிடையில், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்குநாள் மேலும் அவசரமான ஒன்றாகின்றது.

சமூக சமத்துவமின்மை ஈடு இணையற்ற மட்டங்களை எட்டியுள்ளது. எட்டு பணக்கார பில்லியனர்கள் உலக மக்களில் அதி வறிய அரைவாசிப் பேரை விட அதிக செல்வத்துக்கு உரிமையாளர்களாக உள்ளனர்.

பூகோள நிதிய பொறிவின் பத்து ஆண்டுகளுக்கு பின்னர், உலக முதலாளித்துவம் ஒரு வரலாற்று வீழ்ச்சியில் மூழ்கியுள்ளது. இதற்கு போட்டியான தேசிய-அடிப்படையிலான முதலாளித்துவ குழுக்களின் பதிலிறுப்பு என்னவென்றால் தொழிலாளர்களிடம் இருந்து இலாபம் சுரண்டும் முயற்சியை உக்கிரமாக்குவதோடு புவிசார் அரசியல் சூழ்ச்சிகள், வர்த்தகம் மற்றும் யுத்தங்கள் ஊடாக உலக அளவில் தனது கொள்ளையடிக்கும் நோக்கத்தை மிகவும் ஆக்கிரோசமாக முன்னெடுப்பது தான்.

மத்திய கிழக்கு, பால்கன் மற்றும் மத்திய ஆசியாவிலும் ஒரு தொடர் நாசகரமான சட்டவிரோத போர்களை நடத்துவதன் ஊடாக, கடுமையாக சரிந்து வந்த தனது ஒப்பீட்டளவிலான பொருளாதார அதிகாரத்தை தக்க வைக்க முயற்சித்த கால் நூற்றாண்டுக்குப் பின்னர், இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஒரு புதிய "பெரும் வல்லரசு போட்டியை" பிரகடனம் செய்வதுடன், அணு ஆயுதம் கொண்ட ரஷ்யா மற்றும் சீனா மீது இராணுவ மூலோபாய பதட்டத்தை திட்டமிட்டு கொந்தளிக்க வைக்கிறது. ஜேர்மனியை முன்னணியில் கொண்ட ஏனைய முன்னணி ஏகாதிபத்திய சக்திகள், இதை கருத்திலெடுத்து மறுஆயுதபாணியாகி வருகின்றன.

தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியமே இந்த நீர்ச்சுழிக்குள் இழுபட்டு வருகின்றது. சந்தைகளுக்கும் இலாபத்திற்குமான போட்டியில் முன்நோக்கி நகர்வதற்கு ஏங்கும் இந்திய முதலாளி வர்க்கம், அதுவாகவே முன்னெப்போதையும் விட இன்னும் நெருக்கமாக வாஷிங்டனுடன் இணைந்து, சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு "முன்னிலை அரசாக" இந்தியாவை மாற்றி வருகின்றது. இலங்கை மற்றும் குட்டி மாலைதீவு தொடக்கம் இந்தியா மற்றும் அதன் பரம எதிரியான பாக்கிஸ்தான் வரை, தெற்காசியாவில் ஒவ்வொரு அரசிலும், பிராந்தியம் ஏகாதிபத்திய மற்றும் பெரும் வல்லரசு போட்டியின் மத்திய அரங்காக மாறுவதன் மூலம் அரசியல் மற்றும் வர்க்க உறவுகள், கொந்தளிப்புக்குள்ளாகி வருகின்றன.

இந்தியாவில் 120க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் இந்தியாவின் “எழுச்சியை” கொண்டாட மோடியுடன் இணையும்போது, நாட்டின் 1.3 பில்லியன் மக்களில் முக்கால் பகுதியினர், மிகமோசமான வகையில் 2 அமெரிக்க டாலர் அல்லது அதைவிட குறைவான தொகையில் உயிர்வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதற்காக முதலாளித்துவத்துக்கு எதிரான தாக்குதலில் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்க போராட்டங்களை ஐக்கியப்படுத்தும் நிரந்தரப் புரட்சி வேலைத் திட்டம் மட்டுமே தொழிலாள வர்க்கத்துக்கு உள்ள ஒரே வேலைத் திட்டம் என்பது இதில் இருந்து தெளிவாகிறது. இதுவே சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டமாகும்.

இந்த வேலைத்திட்டமே தொழிலாள வர்க்கத்தின் புறநிலை தேவைகளுக்கு பொருத்தமாக இருப்பதால், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கடந்த மூன்று தசாப்தங்களில் பெருமளவில் வலுவாக வளர்ந்துள்ளது.

அதிகாரத்துவ தேசிய-அடிப்படையிலான "தொழிலாளர்" அமைப்புக்களின் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான சீரழிவை சமிக்ஞை செய்த வர்க்க உறவுகளிலான மாற்றத்தை அடையாளங் கண்டுகொண்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பழைய அமைப்புகளின் துரோகத்தை அம்பலப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டிருந்த அனைத்துலகக் குழுவின் பிரிவுகளான கழகங்களை, 1995-96ல் சோசலிச சமத்துவக் கட்சிகளாக மாற்றியது. இதன் மூலம் அது தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகரத் தலைமையை வழங்குவதற்கான நேரடிப் பொறுப்பை எடுத்துக் கொண்டது.

இரு ஆண்டுகளுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது உலக சோசலிச வலைத் தளத்தை தொடக்கி வைத்தது. இதுவே உலகின் முதல் மற்றும் மிகவும் புகழ்பெற்ற சோசலிச வலைத் தளமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது தனது வர்க்க பிரதிபலிப்பை திசையமைவுபடுத்தக் கூடியவாறு, உலக சோசலிச வலைத் தளம் மூலம் ஆங்கிலம், சிங்களம், தமிழ் மற்றும் ஏனைய மொழிகளிலும் வர்க்கப் போராட்டம், உலக அரசியல் மற்றும் புவிசார் அரசியல் பற்றிய மிக முக்கியமான முன்னேற்றங்கள் பற்றிய தினசரி பகுப்பாய்வுகளை உலக தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கி வருகிறது. தேசிய எல்லைகளையும் கண்டங்களையும் கடந்து பரவக் கூடிய மற்றும் பரவ வேண்டிய ஒரு போராட்டமான தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ந்து வரும் சர்வதேச போராட்டத்தின் உயர்ந்த நனவான வெளிப்பாடாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைகளை உலக சோசலிச வலைத் தளம் ஐக்கியப்படுத்தி ஒருங்கிணைக்கிறது.

புரட்சிகர போராட்டத்தின் ஒரு புதிய சகாப்தம்

நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் போராட்டம், இப்போது தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் இயக்கத்துடன் ஒருங்கிணைந்து வருகிறது. தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளால் வர்க்கப் போராட்டம் செயற்கை முறையில் ஒடுக்கப்பட்ட பல தசாப்தங்களுக்குப் பின்னர், தொழிலாள வர்க்கம் அதன் வர்க்க நலன்களை மீண்டும் வலியுறுத்த தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர்க்குணம் கொண்ட வேலைநிறுத்த அலைகளை 2018 கண்டது.

இந்தியாவில், தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் இந்திய பில்லியனருக்கு சொந்தமான ஒரு செம்பு உருக்கும் ஆலையினால் சூழல் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து, கடந்த மாதம் போராட்டம் நடத்தியபோது, உழைக்கும் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டவாறு, மோடி அரசாங்கமும் இந்திய ஆளும் வர்க்கமும் ஒரு சமூக வெடிகுண்டின் மீது உட்கார்ந்துகொண்டிருக்கின்றன. இலங்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பேரில் அரசாங்கம் மேற்கொள்ளும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளையும் ஒட்டு மொத்த தனியார்மயமாக்கலையும் சவால் செய்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணியானது; சமூக சமத்துவமின்மை, வறுமை, ஜனநாயக உரிமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதல் மற்றும் இராணுவவாதத்துக்கும் போருக்கும் எதிரான அதன் எதிர்ப்பின் புறநிலை தர்க்கம், தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டமே என்பதை தொழிலாள வர்க்கத்தின் முன் தெளிவுபடுத்துவதாகும். இதற்கு, லெனினின் இன்றியமையாத படைப்புகளில் ஒன்றான என்ன செய்ய வேண்டும்? என்ற நூலில் அவரது வார்த்தைகளிலேயே கூறினால், தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குவதே ஆகும்.

இந்த நோக்கத்துடனும் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதன் பாகமாகவும், தொடர் கட்டுரைகள், விரிவுரைகள், உலக சோசலிச வலைத் தள கட்டுரைகள் மற்றும் கட்சியின் தலைவர்களுடனான நேர்காணல்களுடன் சோ.ச.க. அதன் ஐம்பது ஆண்டுகால போராட்டத்தை நினைவுகூர்கின்றது. இது, தொழிலாள வர்க்கத்தின் புறநிலை புரட்சிகர நலன்களை தெளிவுபடுத்தும் வேலைத் திட்டம் மற்றும் முன்னோக்கை விரிவாக்குவதில் அது கையாண்ட முக்கிய பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் நிலைப்பாட்டில் இருந்து கட்சியின் வரலாற்றை மதிப்பாய்வு செய்யும்.

இந்தப் பிரச்சாரம், 1938ல் ட்ரொட்ஸ்கியின் தலைமைத்துவத்தின் கீழ் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதன் 80வது ஆண்டு நிறைவை அனைத்துலகக் குழு நினைவுகூர்வதன் பாகமாகவும் அதனுடன் இணைந்தும் முன்னெடுக்கப்படுகிறது.