Print Version|Feedback
On the 80th anniversary of the founding of the Fourth International
நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து எண்பது ஆண்டுகள்
By David North
3 September 2018
1938 செப்டம்பர் 3 அன்று நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாடு நடந்த எண்பதாவது ஆண்டுதினமாகும் இன்று. லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டமையானது மகத்தான வரலாற்று முக்கியத்துவம் கொண்டதும் சமகாலப் பொருத்தம் நிரம்பியதுமான ஒரு நிகழ்வாகும். உலக சோசலிச வலைத் தளம், அடுத்து வரும் மூன்று மாத காலத்திற்கு, நான்காம் அகிலத்தின் முக்கியத்துவத்தை விளக்குகின்ற தொடர்ச்சியான வெளியீடுகள் மற்றும் நிகழ்வுகளுடன் இந்த ஆண்டுதினத்தை கொண்டாடவிருக்கிறது.
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த், 70வது ஆண்டுநிறைவுக் கொண்டாட்டத்தின் போது வழங்கிய ஒரு அறிக்கையை இன்று நாங்கள் மறுபிரசுரம் செய்கிறோம்.
இந்த அறிக்கையானது, 2008 நவம்பர் 1 அன்று, அந்த ஆண்டு பராக் ஒபாமா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதில் நிறைவுற்ற ஜனாதிபதித் தேர்தலின் சமயத்தில், அன் ஆர்பரில் நடந்த ஒரு கூட்டத்தில் வழங்கப்பட்டதாகும். அதற்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த அரசியல் சூழ்நிலை மீதான பகுப்பாய்வு, ஒபாமா நிர்வாகத்தின் செயல்பாடுகள் தொடர்பிலும் சரி அமெரிக்காவிலான சமகால அரசியல் நெருக்கடி தொடர்பிலும் சரி, மிகச் சரியானவையாக நிரூபணமாகியிருக்கின்றன.
*** *** ***
1938 செப்டம்பர் 3 அன்று, நான்காம் அகிலம் அதன் ஸ்தாபக மாநாட்டை பாரிஸின் ஒரு புறநகர்ப் பகுதியில் நடத்தியது. மாநாட்டுக் குறிப்புகளின் சாரம் தெரிவித்தவாறாய், ”இந்த காங்கிரஸ் சட்டவிரோதமான சூழ்நிலைகளின் கீழ் நடத்தப்பட்ட” காரணத்தால் ஒரேயொரு நாள் உத்தியோகபூர்வ செயல்நடவடிக்கைகளுக்கு மட்டுமே மாநாட்டின் திட்டநிரல் அனுமதித்திருந்தது. குறிப்புகளது சாரம் குறிப்பிட்ட அந்த “சட்டவிரோத சூழ்நிலைகள்”, பிரான்சில் இருந்த முதலாளித்துவ-ஜனநாயக அரசின் போலிஸ், ஐரோப்பாவின் பெரும்பகுதியில் சட்ட தண்டனை அபாயமின்றி செயல்பட்டு வந்த பாசிஸ்டுகளின் ஆயுதமேந்திய கும்பல்கள், மற்றும் எல்லாவற்றையும் விட, லியோன் ட்ரொட்ஸ்கியும் அவருடன் நெருக்கமாய் ஒத்துழைத்து வேலைசெய்பவர்களும் சரீர ரீதியாக அழிக்கப்பட்டாக வேண்டும் என்ற ஸ்ராலினின் கட்டளைகளை நடத்தி முடிப்பதற்காக செயற்பட்டு வந்த சோவியத் இரகசிய போலிஸ் GPU வைச் சேர்ந்த ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் ஆகியோரால் ட்ரொட்ஸ்கிச இயக்கம் இடைவிடாது துன்புறுத்தப்பட்டு வந்த நிலைமையால் உருவாக்கப்பட்டிருந்தன.
அந்த மாநாடு எந்த மாதிரியான முற்றுகை நிலைமைகளின் கீழ் நடத்தப்பட்டது என்பது, அப்போது நான்காம் அகிலத்தின் ஒரு ஆதரவாளராய் இருந்த பியர் நவில், கூட்டத்தைத் தொடங்கி வைத்து கூறிய இக்கருத்தில் பிரதிபலித்தது:
கிளெமெண்ட்டின் துயரகரமான மரணத்தின் காரணமாக, உத்தியோகபூர்வமாய் எந்த அறிக்கையும் இருக்காது. கிளெமண்ட் ஒரு விரிவான, எழுத்து அறிக்கையை தயாரித்துக் கொண்டு வந்தார், அது விநியோகிக்கப்பட இருந்தது, ஆனால் அவரது எஞ்சிய காகிதங்களுடன் சேர்ந்து அந்த அறிக்கையும் காணாமல் போய் விட்டது. இப்போதைய அறிக்கை ஒரு சுருக்கமான தொகுப்பாக மட்டும் இருக்கும்.[1]
நவில் குறிப்பிட்ட மறைந்த அந்த மனிதரான ருடோல்ஃப் கிளெம்ண்ட், நான்காம் அகிலத்தின் சமீபத்திய செயலராக அப்போது இருந்தவர், அவர் 1938 ஜூலையில், மாநாட்டிற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலம் இருந்தவொரு நிலையில், ஸ்ராலினிச முகவர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு விட்டிருந்தார். ஸ்தாபக மாநாட்டுக்கு உடனடி முந்தைய ஆண்டில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டிருந்த முன்னணி ஆளுமைகளில் அவர் நான்காவது மனிதராவர்: (1) 1937 ஜூலையில் எர்வின் வொல்ஃப் ஸ்பெயினில்; (2) 1937 செப்டம்பரில் இக்னாஸ் ரைய்ஸ் சுவிட்சர்லாந்தில்; (3) ட்ரொட்ஸ்கியின் மகனான லியோன் செடோவ் 1938 பிப்ரவரியில் பாரிஸில்; (4) கிளெமெண்ட். இந்த நான்குபேரது படுகொலைகளை ஒழுங்கமைப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த GPUவின் ஒரு முகவர் —மார்க் ஸ்பொரோவ்ஸ்கி— அந்த காங்கிரஸில் பங்கேற்று, நான்காம் அகிலத்தின் ரஷ்யப் பிரிவின் பிரதிநிதியாக செயல்பட்டார் என்பதை நவில் அறிந்திருக்கவில்லை, அறிந்திருக்க முடியவில்லை.
இந்தப் படுகொலைகள் 1917 அக்டோபர் புரட்சியில் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகித்திருந்த புரட்சிகரத் தொழிலாளர்கள், சோசலிச புத்திஜீவிகள் மற்றும் போல்ஷிவிக் தலைவர்களில் எஞ்சியிருந்தோருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த அரசியல் படுகொலை பிரச்சாரத்துடன் பிரிக்கவியலாது பிணைந்திருந்தன. ஸ்ராலினால் வழிநடத்தப்பட்டு, 1936 ஆகஸ்டுக்கும் 1938 மார்ச்சுக்கும் இடையிலான காலத்தில் மாஸ்கோவில் நடத்தப்பட்ட மூன்று ஜோடிப்பு விசாரணைகள் சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிச, அதாவது மார்க்சிச, செல்வாக்கை முழுமையாக அழிக்கும் நோக்கம் கொண்டிருந்த ஒரு பாரிய நடவடிக்கையின் பகிரங்க வெளிப்பாடாக இருந்தன.
லியோன் ட்ரொட்ஸ்கி
சமகால முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களில், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து மற்றவர்கள், ஸ்ராலினிச பயங்கரத்துக்கும் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துக்கும் அதிக சம்பந்தமிருக்கவில்லை என்று வலியுறுத்துகின்றனர். 1929 இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டிருந்த, அத்துடன் மிக சொற்பமான செல்வாக்கைக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிக்கு ஸ்ராலின் அஞ்சுவதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை என்று அவர்கள் கூறிக் கொள்கின்றனர். இந்த கற்பனையான மதிப்பீடு மறைந்த சோவியத்/ரஷ்ய வரலாற்றாசிரியரான ஜெனரல் டிமிட்ரி வோல்கோகோனோவ் —இவருக்கும் ட்ரொட்ஸ்கியை அறவே பிடிக்காது என்ற போதும்— மூலம் சவால் செய்யப்பட்டு வந்திருக்கிறது, நாடுகடத்தப்பட்ட அந்த புரட்சியாளரது “ஆவி”யால் ஸ்ராலின் வதைக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்:
ட்ரொட்ஸ்கி அப்போது இல்லை, ஆனாலும் அவர் இல்லாத நிலையில் அவர் மீது இன்னும் அதிகமான வெறுப்பை ஸ்ராலின் வளர்த்துக் கொண்டார், ட்ரொட்ஸ்கியின் ஆவியுரு அடிக்கடி வந்து இந்த தட்டிப்பறித்தவரை பயமுறுத்திக் கொண்டிருந்தது... மோலோடோவ், காகனோவிச், குருசேவ் மற்றும் ஷடனோவ் ஆகியோருடன் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டபோது அவர் ட்ரொட்ஸ்கியை நினைத்துக் கொண்டார். அமைப்பின் மீதான அவரது பிடி மற்றும் ஒரு பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அவரது திறமைகள் ஆகியவற்றால் புத்திஜீவிதரீதியாக ட்ரொட்ஸ்கி ஒரு வேறொரு மட்டத்தைச் சேர்ந்தவராய் இருந்தார். ஒவ்வொரு விதத்திலும் அவர் இந்த அதிகாரத்துவத்தினரது குழுவைக் காட்டிலும் மிக உயர்படித்தானவர், ஆயினும் அவர் ஸ்ராலினுக்கும் உயர்படித்தானவர், அது ஸ்ராலினுக்கும் தெரிந்திருந்தது. “இப்படியொரு எதிரியை எப்படி நான் எனது விரல்கள் வழியே நழுவிச் செல்ல விட்டு விட்டேன்?” என்று ஒப்பாரி வைக்காத குறையாய் அவர் புலம்பிக் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையில் அவர் செய்த மிகப்பெரும் தவறுகளில் அதுவும் ஒன்று என்பதை அவரது சிறிய நெருங்கிய வட்டத்திடம் அவரே ஒரு சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.
ட்ரொட்ஸ்கி அவருக்காக மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக இருக்கின்ற அவரது மௌனமான ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் அனைவருக்காகவும் பேசிக் கொண்டிருந்தார் என்ற சிந்தனை குறிப்பாக ஸ்ராலினுக்கு வலிதருவதாக இருந்தது. ஸ்ராலின் பொய்மைப்படுத்தல் பள்ளி, போல்ஷிவிக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம், அல்லது ஸ்ராலினிச தேர்மிடோர் போன்ற ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களை படிக்கும் போதெல்லாம், தலைவர் கிட்டத்தட்ட அவரது சுய-கட்டுப்பாட்டை இழந்து விடுவார்.... காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சியின் மொழிபெயர்ப்பை ஸ்ராலின் எரிச்சல் கொதிப்புடன் ஒரே இரவில் படித்து முடித்தார். அதுவே அவருக்கு சகிப்பின் கடைசித் துளியாக இருந்தது. சில வருடங்களாகவே அவர் இரண்டு முடிவுகளை மனதிற்குள் உரம்போட்டு வளர்த்து வந்திருந்தார், இப்போது அவற்றை நடத்தி முடிப்பதற்கு அவர் ஆலோசனையளித்தார். முதலாவதாய், என்ன விலை கொடுத்தேனும் ட்ரொட்ஸ்கியை அரசியல் அரங்கில் இருந்து அவர் அகற்றியாக வேண்டும்... இரண்டாவதாய், நாட்டிற்குள் இருக்கின்ற அத்தனை சாத்தியமான எதிரிகளையும் தீர்மானமாகரமாகவும் இறுதியாகவும் அகற்றுவதற்கான அவசியத்தின் மீது இப்போது அவர் கூடுதலான உறுதிகொண்டவராய் இருந்தார். [2]
ட்ரொட்ஸ்கி அவரது எதிரிகளின் சரீரபலத்தையும், அவரும் அவரது ஆதரவாளர்களும் முகம்கொடுத்திருந்த அபாயங்களின் அளவையும் நன்கு அறிந்திருந்தார். ஆயினும் உலக சோசலிசப் புரட்சியின் சாதனமாக நான்காம் அகிலம் என்பதன் இறுதி வெற்றியில் அசாதாரண நம்பிக்கை கொண்டு அவர் தனது வேலைகளை நடத்தினார். நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தை கொண்டாடும் விதமாய், 1938 அக்டோபர் 18 அன்று அவர் அறிவித்தார்:
தூக்கிலிடுவோர் எங்களை பயமுறுத்தி விடுவது சாத்தியம் என்று அவர்களது மழுங்கிய புத்தியிலும் சிடுமூஞ்சித்தனத்திலும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பிழைசெய்கின்றனர்! அடிகளின் கீழ் நாங்கள் வலிமையடைகிறோம். ஸ்ராலினின் மிருகத்தனமான அரசியல் வெறும் விரக்தியின் அரசியல் மட்டுமேயாகும். எங்களது படையின் தனித்தனி சிப்பாய்களைக் கொல்வது சாத்தியமாக இருக்கலாம், ஆனால் அவர்களைப் பயமுறுத்துவது சாத்தியமல்ல. நண்பர்களே, இந்த கொண்டாட்ட தினத்தில் நாம் திரும்பவும் சொல்வோம்... நம்மை பயமுறுத்துவது சாத்தியமல்ல. [3]
சோவியத் அரசின் மற்றும் சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்துவமயமாக்கம் அதிகரித்துச் சென்றதற்கு எதிராக 1923 அக்டோபரில் ட்ரொட்ஸ்கியாலும் இடது எதிர்ப்பாளர்களாலும் தொடக்கமளிக்கப்பட்ட போராட்டத்தில் தான் நான்காம் அகிலத்தின் மூலங்கள் அமைந்திருக்கின்றன. இந்த அரசியல் போராட்டம் ட்ரொட்ஸ்கியின் பிரதான எதிரியாகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் ஸ்ராலின் எழுவதற்கு முன்பே தொடங்கியிருந்ததாகும். ட்ரொட்ஸ்கியைப் பொறுத்தவரை, ஸ்ராலின் அதிகாரத்துக்கு உயர்ந்தமை தான் சோவியத் அரசின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சீரழிவின் காரணமில்லை, மாறாக அது, அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கம் பெற்ற தோல்விகளது ஒரு விளைவாய் சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக அரசியல் பிற்போக்குத்தனம் வலுப்பட்டதன் ஒரு அரசியல் வெளிப்பாடாக இருந்தது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியை பொறுத்தவரை, சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக சோசலிசத்தின் தலைவிதியானது உலக சோசலிசப் புரட்சியின் வெற்றியைச் சார்ந்ததாய் இருந்தது. சோசலிசமானது, ஒரு தனிமைப்படுத்தப்பட்டதும் மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கியதுமாக இருந்த, ரஷ்யாவிற்குள்ளாக மட்டும் அபிவிருத்தி செய்யப்பட்டு விட முடியும் என்பதான சிந்தனை மார்க்சிசத் தத்துவத்தின் மிக அடிப்படையான அடிக்கோள்களுக்கு இணக்கமற்றதாக இருந்தது.
1924 இன் பிற்பகுதியில், சோசலிசம் ஒரு நாட்டிற்குள்ளாக கட்டியெழுப்பப்பட முடியும் என்ற —அதாவது, சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்கு வெளியில், குறிப்பாக மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களது விளைவில் இருந்து தனித்த விதத்தில் சோவியத் ஒன்றியம் சோசலிசத்தை சாதித்து விட முடியும் என்ற— ஸ்ராலினின் கூற்றானது அடிப்படையாக ஆளும் அதிகாரத்துவத்தின் தேசியவாத நோக்குநிலை, முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை வெளிப்படுத்தியது. “சோசலிசம்” என்று —ஸ்ராலின் தலைமையிலான— அதிகாரத்துவம் குறிப்பிட்டது, உற்பத்தி சாதனங்களை தேசிய உடைமையாக்குவதன் அடிப்படையில் அது அனுபவித்த வருவாய் மற்றும் சிறப்புச்சலுகைகளை பத்திரப்படுத்துகின்ற தேசிய பொருளாதாரத் தன்னிறைவின் ஒரு அமைப்புமுறையையே அர்த்தமாகக் கொண்டிருந்தது.
ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பாளர்களை அதிகாரத்துவம் துன்புறுத்தியதானது, போல்ஷிவிக் கட்சியின் மார்க்சிச மற்றும் சர்வதேச அடித்தளங்கள் மீதான பொய்மைப்படுத்தலாலும் மறுதலிப்பாலும் சூழப்பட்டிருந்தது. முன்னெப்போதினும் பகிரங்கமாகவும் பட்டவர்த்தனமாகவும், ஸ்ராலினிச ஆட்சி, சர்வதேச புரட்சிகர இயக்கத்தின் நலன்களை அதிகாரத்துவத்தின் தேவைகளுக்கு கீழ்ப்படியச் செய்தது. உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை அது காட்டிக்கொடுத்ததன் விளைவு சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வரிசையான அரசியல் தோல்விகளில் —பிரிட்டனில் 1926 இல், சீனாவில் 1927 இல், மிக நாசமளித்ததாய் ஜேர்மனியில் 1933 இல்— முடிந்தது. ஸ்ராலின் பேரழிவுகரமான விதத்தில் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை தவறாக வழிநடத்தியமையானது 1933 ஜனவரியில் ஹிட்லர் அதிகாரத்துக்கு உயர்வதை சாத்தியமாக்கியது. இந்த நிகழ்வு, அதன் பிரதிவிளைவாய், இரண்டாம் உலகப் போருக்கும் பத்து மில்லியன்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கும் இட்டுச்சென்ற நிகழ்வுகளின் ஒரு வரிசையை இயங்கச் செய்தது.
1927 இல் இடது எதிர்ப்பாளர்கள் அணியின் அங்கத்தவர்கள். அமர்ந்திருப்பது: செரிப்ரியகோவ், ராடக், ட்ரொட்ஸ்கி, போகுஸ்லாவ்ஸ்கி, பிரியோபிராஸ்ஹென்ஸ்கி. நிற்பது: ரகோவ்ஸ்கி, ட்ரோப்னிஸ், பெலோபோரோடோவ், ஸோஸ்னோவ்ஸ்கி.
ஹிட்லரின் வெற்றிக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கியும் சர்வதேச இடது எதிர்ப்பாளர்களும், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியையும் மூன்றாம் (கம்யூனிச) அகிலத்தையும் சீர்திருத்துவதை நோக்கி நோக்குநிலை கொண்டதாக இருந்த தமது முந்தைய கொள்கையை மாற்றினர். ஒரு புதிய அகிலம் கட்டியெழுப்பப்படுவதற்கும் சோவியத் ஒன்றியத்தில் ஒரு அரசியல் புரட்சிக்கும் ட்ரொட்ஸ்கி இப்போது அழைப்பு விடுத்தார். சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை, தொழிலாளர்’ இயக்கத்திற்குள்ளாக இருந்த ஏகாதிபத்தியத்தின் ஒரு முகமை என்று அவர் வரையறை செய்தார்.
1933க்கும் 1938க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் அடிப்படையாக நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரசுக்கான தத்துவார்த்த மற்றும் அரசியல் தயாரிப்புக்காய் அர்ப்பணிக்கப்பட்டன. 1935 இல் எழுதுகையில், ட்ரொட்ஸ்கி, இந்த வேலையை தனது வாழ்வின் மிக முக்கியமானதென்று —அக்டோபர் புரட்சியின் ஒழுங்கமைப்பு மற்றும் செம்படையின் ஸ்தாபகம் மற்றும் தலைமை ஆகியவற்றிலான அவரது பாத்திரத்தை விடவும் கூடுதல் முக்கியமானவையாக— மதிப்பிட்டார். இந்த மதிப்பீட்டை விளக்குகையில் ட்ரொட்ஸ்கி, 1917 இல் அவர் இல்லாது போயிருந்திருந்தாலும் கூட, போல்ஷிவிக் கட்சியிலான அரசியல் எதிர்ப்பை வெற்றிகண்டு அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான முடிவை மேற்கொள்வதற்கு லெனினின் தலைமையே போதுமானதாய் இருந்திருக்கும் என்று வாதிட்டார். ஆனால் இப்போது (1930களில்) புரட்சியாளர்களது ஒரு புதிய காரியாளர் படைக்கு கல்வியூட்டுவதற்கும் மார்க்சிச இயக்கத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதற்கும் திறம்படைத்த வேறொருவரும் இருக்கவில்லை. இந்த காலப் புள்ளியில், அவர் தவிர்க்கவியலாதவராக இருந்தார் என்பதையும் மார்க்சிசத்தின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை உறுதிசெய்வதற்கு அவருக்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்படும் என்றும் ட்ரொட்ஸ்கி ஒப்புக்கொண்டார். ட்ரொட்ஸ்கி இந்த மதிப்பீட்டை செய்த சமயத்தில் இருந்து சரியாக ஐந்து ஆண்டுகள் மட்டுமே அவர் உயிர்வாழ முடிந்தது, அந்த இலக்கை அடைவதிலும் அவர் வெற்றி கண்டிருந்தார்.
ட்ரொட்ஸ்கியின் வேலை ஏன் தவிர்க்கவியலாததாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். அவரது மேதமையை மட்டும் குறிப்பிடுவது போதுமானதல்ல. அவரது புத்திஜீவித மற்றும் அரசியல் ஆளுமையின் மூன்று கூறுகள் வலியுறுத்திக் கூறப்பட்டாக வேண்டும்.
முதலாவதாய், ”செவ்வியல் மார்க்சிசத்தின்” கடைசியாய் வாழ்ந்த மகத்தான பிரதிநிதியாக —அதாவது, நேரடியாக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸில் தனது அடையாளத்தைக் கண்டதும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் எழுந்திருந்த பாரிய புரட்சிகர தொழிலாளர் இயக்கத்திற்கு பயிற்றுவித்ததும் ஆதர்சமளித்ததுமாக இருந்த ஒரு தத்துவார்த்த மற்றும் அரசியல் பள்ளி மற்றும் பாரம்பரியத்தின் பிரதிநிதியாக— இருந்தார். சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்களில் விளக்கப்பட்டவாறாக, ட்ரொட்ஸ்கி, “மெய்யியல்ரீதியாக சடவாதத்தில் வேரூன்றியதும், வெளிப்புறத்தில் புறநிலை நிஜத்தின் அறிகையை நோக்கி செலுத்தப்பட்டதாகவும், தொழிலாள வர்க்கத்தின் கல்வியூட்டல் மற்றும் அரசியல் அணிதிரட்டலை நோக்கி நோக்குநிலை கொண்டதாகவும், அத்துடன் மூலோபாயரீதியாக முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தையே எக்கணமும் சிந்திப்பதாகவும் இருக்கின்ற ஒரு புரட்சிகரத் தத்துவக் கருத்தாக்கத்தின்” உருவடிவமாகத் திகழ்ந்தார். [4]
இரண்டாவதாக, சோசலிசப் புரட்சியின் உலகளாவிய பரிமாணங்கள் மற்றும் இயங்குநிலை, சர்வதேச சமூகப்பொருளாதார நிகழ்ச்சிபோக்குகள் மற்றும் வரலாற்றுரீதியாக-தீர்மானிக்கப்படுகின்ற தேசிய நிலைமைகளின் பரஸ்பர இயங்கியல் பரிவர்த்தனை ஆகியவற்றை இருபதாம் நூற்றாண்டின் வேறெந்தவொரு அரசியல் சிந்தனையாளரை விடவும் ஆழமான விதத்தில் ட்ரொட்ஸ்கி உட்கிரகித்துக் கொண்டார். இந்தப் புரிதல், முதன்முதலில் ரஷ்யாவில் 1905 புரட்சியால் —இதில், ஒரு பின்தங்கிய நாட்டில், பாரம்பரிய முதலாளித்துவ-ஜனநாயகக் கடமைகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் உட்பொதிந்த சோசலிச போராட்டங்களுக்கும் இடையிலான உறவு, அப்போதிருந்த கருத்தாக்கங்களுக்கு முரண்பாடான ஒரு விதத்தில் எழுந்ததுடன், ஒரு புதிய தத்துவார்த்த களத்தை அவசியமாக்கியது— எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கான பதிலிறுப்பில் ட்ரொட்ஸ்கியால் சூத்திரப்படுத்தப்பட்டதாக இருந்த நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் வெளிப்பாடு கண்டது.
மூன்றாவதாக, 1903 உடைவுக்கும் 1917 இன் புரட்சிகர விளைவுமுடிவுக்கும் இடையிலான ஆண்டுகளில் மென்ஷிவிக் சந்தர்ப்பவாதம் மற்றும் மத்தியவாதத்திற்கு எதிரான லெனினின் போராட்டத்தின் அத்தியாவசியமான அரசியல் படிப்பினைகளை ட்ரொட்ஸ்கி உட்கிரகித்துக் கொண்டார். அந்த முக்கியமான உருப்பெறல் காலகட்டத்தில் அரசியல் கோட்பாடு குறித்த பிரச்சினைகளில் லெனினுடன் சண்டையிட்டு வந்திருந்த நிலையில், ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியிலும், பின்னர், 1914 இல் ஏகாதிபத்தியப் போர் வெடித்ததற்குப் பின்னர் இரண்டாம் அகிலத்திற்குள்ளும், சந்தர்ப்பவாதத்தின் அத்தனை வடிவங்களையும் எதிர்த்து நிற்பதில் லெனினின் அசாதாரண தொலைநோக்கை ட்ரொட்ஸ்கி புரிந்து கொண்டார், போற்றினார். இந்த அரசியல் அனுபவத்தில் இருந்து ட்ரொட்ஸ்கி தேற்றம் செய்த படிப்பினைகள் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்திற்கு ஒரு அத்தியாவசியமான அரசியல் அடித்தளத்தை உருவாக்கித் தந்தது.
ட்ரொட்ஸ்கியின் புத்திஜீவித மற்றும் அரசியல் பயணவழியின் இக்கூறுகள் ஒவ்வொன்றுமே விரிவான எடுத்துரைப்புக்கு தகுதிகொண்டிருக்கின்றன. ஆயினும் காலம் ஒரு கவனக்குவிப்பான அணுகுமுறையைக் கோருகிறது. ஆகவே, “செவ்வியல்” மார்க்சிச பிரச்சினை மீது நாம் கவனம்குவிப்போம். ஒரு புரட்சிகர மூலோபாயவாதியாக ட்ரொட்ஸ்கியின் ஆற்றல்கள் குறித்து பரிச்சயம் கொண்டிருந்தவர்கள் மற்றும் அவற்றில் உயரிய மதிப்பு வைத்திருந்தவர்கள் மத்தியிலும் கூட, அவரது அரசியல் சிந்தனையின் தத்துவார்த்த அடித்தளங்களுக்கு போதுமான அங்கீகாரத்தை காண்பது அபூர்வமாகவே இருக்கிறது. புரட்சிகர சிந்தனைக்கான மூலஆற்றலாக இயங்கியல் சடவாதத்தின் மீது ட்ரொட்ஸ்கி வலியுறுத்திய போதிலும், அனுதாபமுடைய வருணனையாளர்கள் கூட, மெய்யியல் உறுதிப்பாட்டுக்கான இத்தகைய வலியுறுத்தல்களை தெளிவற்றதாகவும் முக்கியத்துவமற்றதாகவும் காண்கின்றனர். உதாரணமாக, குறிப்பிடத்தக்க ஒரு கல்வியறிஞராகவும் ட்ரொட்ஸ்கியின் சமூக மற்றும் அரசியல் சிந்தனை குறித்த அறிவில் நிபுணராகவும் இருக்கும் ஒருவர், இயங்கியல் சடவாதத்தின் அடிப்படைக் கூறுகளை ட்ரொட்ஸ்கி விளக்கிக்கூறுகின்ற ஒரு பத்தியை மேற்கோளிட்டு, வெளிப்பட்ட கோபத்துடன் இவ்வாறு கேட்கிறார்: “எல்லாம் இருக்கட்டும், சமூகத்தை ஆய்வு செய்வதற்கும் மார்க்சிச புரட்சிகரக் கொள்கை மற்றும் மூலோபாயத்தை சூத்திரப்படுத்துவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” [5] ஒருபுறத்தில் மெய்யியல் கண்ணோட்டம் மற்றும் வழிமுறைக்கும் மறுபுறத்தில் அரசியல் சிந்தனை மற்றும் நடைமுறைக்கும் இடையிலான உறவு குறித்த பற்றாக்குறையான புரிதலை இந்தக் கேள்வி காட்டிவிடுகிறது. மார்க்சிச சடவாதத்திற்கும் மெய்யியல் கருத்துவாதத்தின் பல்வேறு பள்ளிகளுக்கும் இடையிலான மோதலின் உள்ளடக்கம் மற்றும் தாக்கங்களை —இவை குறித்து ட்ரொட்ஸ்கி அதீத பரிச்சயம் கொண்டிருந்தார்— குறித்து இவர் வரம்புபட்ட அளவிலேயே அறிந்து வைத்திருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
முதலாம் உலகப் போருக்கு முன்னால் ஐரோப்பிய (குறிப்பாக ரஷ்ய) சோசலிச இயக்கத்திற்குள் நடந்த பல்வேறு மோதல் போக்குகளுக்கு இடையிலான அரசியல் போராட்டங்கள் குறித்து நிறையவே எழுதப்பட்டிருக்கின்ற அதேநேரத்தில், தத்துவார்த்த மோதல்கள் குறித்து வெகு குறைந்த கவனமே செலுத்தப்பட்டிருக்கிறது. எட்வார்ட் பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதத்திற்கு எதிரான மோதலும் கூட பெருமளவில் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் நிலைப்பாட்டில் இருந்தே ஆய்வு செய்யப்பட்டிருந்திருக்கிறது. இந்த வட்டங்களிலான கருத்துபேதங்கள் தீவிரமானவை, நீடித்த முக்கியமானவைதான். ஆயினும் மார்க்சிசத்திற்கும் திருத்தல்வாதத்திற்கும் இடையிலான இந்த முக்கியமான மோதலின் இன்னுமொரு அம்சம் —அதாவது, போராட்டத்தின் மெய்யியல் பரிமாணங்கள்— வலியுறுத்தப்பட வேண்டியவையாகும். அந்த கோணத்தில் இருந்து ஆய்வு செய்யும்போது, பேர்ன்ஸ்டைன் —ஒரு நவ-காண்ட்வாதி— தனது மார்க்சிச எதிர்ப்பின் வேரை மெய்யியல்ரீதியாக பல்வேறு அகநிலை கருத்துவாத நீரோட்டங்களில் கொண்டிருந்த ஒரு பரந்த புத்திஜீவிப் போக்கின் பகுதியாக இருந்திருந்தார்.
சுருக்கமாகச் சொன்னால், நனவின் மீது சடப்பொருளின் பிரதானத்தை திட்டவட்டம் செய்கின்ற மெய்யியல் மற்றும் வரலாற்று சடவாதத்தை இந்த போக்குகள் நிராகரித்தன. இந்த அடிப்படையில், மனித சமூகத்தின் புத்திஜீவித அபிவிருத்தி உள்ளிட்ட அபிவிருத்தியானது சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்புடன் தொடர்புடைய விதிகளுக்கு இணங்க முன்னேறியது என்ற கருத்தாக்கத்தையும் அவை நிராகரித்தன.
வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கத்தில் ட்ரொட்ஸ்கியை விட மிகத் தீர்க்கமான மேம்பட்டவர் இருக்கவில்லை, அவரது தத்துவார்த்தக் கல்வி —1890களில் தொடங்கியது— செல்வாக்கு பெருகிச் சென்ற அகநிலை கருத்துவாத மற்றும் பகுத்தறிவின்மைவாத சிந்தனைகளுடனான தொடர்ச்சியான மோதலிலேயே முன்னேறியது. அவரது நெடிய புரட்சிகர அரசியல்வாழ்வின் இறுதியின் நெருக்கத்தில், ட்ரொட்ஸ்கி மார்க்சின் சடவாதக் கண்ணோட்டத்தைக் குறித்து பின்வரும் விளக்கத்தை வழங்கினார்:
இயற்கையின் புறநிலையான மறுநிகழ்வுகள் குறித்த அறிகையாக விஞ்ஞானத்தை ஸ்தாபித்து விட்டிருக்கின்ற பின்னர், மனிதன், புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட சக்திகளுடனான கலந்துறவாக சொல்லப்படுவதன் வடிவத்தில் (மதம்), அல்லது காலத்திற்குஅப்பாற்பட்ட அறநெறி வாக்குகளின் வடிவத்தில் (கருத்துவாதம்) தனக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் ஒதுக்கிக் கொண்டு, தன்னை மட்டும் இந்த விஞ்ஞானத்தில் இருந்து விலக்கி வைத்துக் கொள்வதற்கு பிடிவாதமாகவும் விடாப்பிடியாகவும் தொடர்ந்து முயற்சித்து வந்திருக்கிறான். மார்க்ஸ் மனிதனுக்கு இந்த வெறுக்கத்தக்க சலுகைகளை திட்டவட்டமாகவும் என்றென்றைக்குமாய் இல்லாதுசெய்தார், அவர் அவனை சட இயற்கையின் பரிணாமவளர்ச்சி நிகழ்வுப்போக்கிலான ஒரு இயற்கையான இணைப்பாகக் கண்டார்; மனித சமூகத்தை உற்பத்தி மற்றும் விநியோகத்தின் ஒழுங்கமைப்பாக கண்டார்; முதலாளித்துவத்தை மனித சமூகத்தின் அபிவிருத்தியிலான ஒரு கட்டமாகக் கண்டார்...
முதலாளித்துவ சமூகத்தின் மறுநிகழ்வுகளுக்கான காரணங்களை அதன் அங்கத்தவர்களது அகநிலை நனவில் —நோக்கங்களில் அல்லது திட்டங்களில்— காண இயல்வது முற்றிலும் சாத்தியமற்றதாகும். முதலாளித்துவத்தின் புறநிலை மறுநிகழ்வுகள் விஞ்ஞானம் அவற்றைக் குறித்து தீவிரமாக சிந்திப்பதற்கும் முன்னரே சூத்திரப்பட்டு விட்டன. மனிதர்களில் மிகப்பெரும்பான்மையானோருக்கு முதலாளித்துவ சமூகத்தை ஆட்சி செய்கின்ற விதிகளைக் குறித்து இன்றுவரை எதுவும் தெரியாது. பொருளாதார நிகழ்வுப்போக்குகளை நோக்கிய மார்க்சின் அணுகுமுறையானது, குறிப்பிட்ட மனிதர்களின் அகநிலைக் கண்ணோட்டத்தில் இருந்தானதாக இல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் அபிவிருத்தியின் புறநிலைக் கண்ணோட்டத்தில் இருந்து வருவதாக, எப்படி ஒரு ஆய்வியல் இயற்கை விஞ்ஞானி ஒரு தேனீக் கூட்டை அல்லது ஒரு எறும்புப் புற்றை அணுகுவாரோ அவ்வாறானதாக, இருந்தது என்பதில் தான் அவரது வழிமுறையின் ஒட்டுமொத்த வலிமையும் இருந்தது.
பொருளாதார விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, மனிதர்கள் எவ்வாறு செயலில் ஈடுகிறார்கள் என்பதுதான் தீர்மானகரமான முக்கியத்துவமுடையதே தவிர, அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைக் குறித்து என்ன கருதிக் கொள்கிறார்கள் என்பதல்ல. சமூகத்தின் அடித்தளத்தில் இருப்பது மதமும் அறநெறியும் அல்ல, மாறாக இயற்கையும் உழைப்பும் தான். மார்க்சின் வழிமுறை ஏன் சடரீதியானது ஏனென்றால், அது இருப்பில் இருந்து நனவுக்கு முன்னேறியது, அதன் தலைகீழாய் அல்ல. மார்க்சின் வழிமுறை இயங்கியல்ரீதியானது ஏன் என்றால், அது இயற்கை மற்றும் சமூகம் இரண்டையுமே பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பவையாகவும், அத்துடன் பரிணாம வளர்ச்சியையே கூட மோதும் சக்திகளது தொடர்ச்சியான போராட்டமாகவும் கருதியது. [6]
அரசியல் போராட்ட உலகில், மார்க்சின் சடவாதக் கண்ணோட்டத்தை செயலுறுத்துவதென்பது, புரட்சிகரக் கொள்கை, முதலாகவும் முதன்மையாகவும், புறநிலை சமூக-பொருளாதார நிலைமைகள் குறித்த ஒரு பகுப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டிருப்பதை அவசியமாக்கியது. புரட்சிகரக் கட்சியானது தனது நடவடிக்கைகளுக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டியது, அப்போது நிலவும் வெகுஜன மனோநிலைகள் மற்றும் பிரமைகளை அல்ல, மாறாக முதலாளித்துவத்தின் சமூக-பொருளாதார முரண்பாடுகளின் உண்மையாக நிலவுகின்ற மட்டத்தையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். வெகுஜனங்களின் மனோநிலைகளும் கூட அவற்றினளவில் புறநிலைமைகளின் ஒரு சிதறடித்த பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. புரட்சிகரக் கட்சியானது, தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக முதலாளித்துவ நெருக்கடி குறித்தும் அதன் அரசியல் தாக்கங்கள் குறித்துமான ஒரு சரியான புரிதலுக்காக அது போராடுகின்ற மட்டத்திற்கு மட்டுமே இந்த மனோநிலைகளை அது வெற்றிகாண முடியும்.
நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரசின் சமயத்தில் 1938 மே மாதத்தில் ட்ரொட்ஸ்கிக்கும் அவரது அமெரிக்க ஆதரவாளர்களுக்கும் இடையில் நடந்த விவாதங்களில், ட்ரொட்ஸ்கி புரட்சிகர வேலைத்திட்டத்தின் இந்த புறநிலை தொடக்கப் புள்ளியின் மீது வலியுறுத்தினார்:
அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல்ரீதியான பின்தங்கியநிலை மிகப்பெரிதாய் இருக்கிறது. ஒரு பாசிச பேரழிவுக்கான அபாயம் மிகப் பெரிய அளவில் இருப்பதையே இது குறிக்கிறது. இதுவே நமது அத்தனை நடவடிக்கைக்குமான தொடக்கப் புள்ளியாகும். வேலைத்திட்டமானது தொழிலாளர்களின் பின்தங்கியநிலையை அல்லாமல் தொழிலாள வர்க்கத்தின் புறநிலைக் கடமைகளையே வெளிப்படுத்த வேண்டும். அது சமூகத்தை உள்ளவாறாக பிரதிபலிக்க வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் பின்தங்கியநிலையை அல்ல. அது பின்தங்கியநிலையை வெல்வதற்கும் முறியடிப்பதற்குமான ஒரு சாதனமாக இருக்கிறது. ஆகவே தான் நமது வேலைத்திட்டத்தில், முதல் வரிசையில் அமெரிக்கா உள்ளிட முதலாளித்துவ சமூகத்தின் சமூக நெருக்கடிகளது ஒட்டுமொத்த கூர்மையான தன்மையை நாம் வெளிப்படுத்தியாக வேண்டும். நம்மைச் சார்ந்திராத புறநிலைமைகளை தள்ளிப்போடுவதோ அல்லது மாற்றுவதோ நம்மால் இயலாது. வெகுஜனங்கள் நெருக்கடியை தீர்ப்பார்கள் என்று நாம் உத்தரவாதம் கூற முடியாது; ஆயினும் சூழ்நிலையை உள்ளபடியே நாம் வெளிப்படுத்தியாக வேண்டும், அதுவே இந்த வேலைத்திட்டத்தின் பணியாகும். [7]
இந்த வார்த்தைகள் இப்போதைய சூழ்நிலையில் கூர்மையான பொருத்தம் கொண்டிருக்கின்றன. இன்று புரட்சிகர அரசியலின் தொடக்கப்புள்ளியாக எது இருக்க வேண்டும், 1930களின் பெருமந்த நிலைக்கு பிந்தைய காலத்தில் நிகரேதும் கூறமுடியாத ஆழத்தையும் தீவிரத்தன்மையையும் கொண்டிருக்கக் கூடிய அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் கட்டவிழ்கின்ற நெருக்கடியின் புறநிலை இயல்பு மற்றும் தாக்கங்களையா, அல்லது தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையிலானோர் மத்தியில் இப்போதிருக்கின்ற குழப்பமான அரசியல் நனவு நிலையில் இருந்தா? இன்றைய தினம் பராக் ஒபாமாவின் தேர்தல் வாய்வீச்சில் தொழிலாளர்கள் மத்தியில் இருக்கின்ற பிரமைகளுக்குத் தக்கவாறாய் நமது வேலைத்திட்டத்தை நாம் தகவமைத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது தேன்குழைத்த வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கிற நஞ்சை அம்பலப்படுத்தி, பொருளாதார நெருக்கடியின் தீவிரப்படலால் தவிர்க்கவியலாமல் உருவாக்கப்படவிருக்கும் மாபெரும் சமூக மோதல்களுக்கு பரந்த மக்களை தயார்படுத்த வேண்டுமா?
தேர்தல் மூன்று நாட்களில் நிறைவடைய இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் காங்கிரஸ் தேர்தலில் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளில் எது வெற்றிபெற்றாலும், அது சுழன்றெழுந்து வருகின்ற பொருளாதார அழிவின் பின்விளைவுகளுக்கு முகம்கொடுக்கப் போகிறது. இப்போது அநேகமாய் நடக்கவிருப்பதாக தெரிவதைப் போல, ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவாரேயானால், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தேசிய மற்றும் சர்வதேசிய நலன்களைப் பின்பற்றிச் செல்வதற்கான மைய பொறுப்பை அவர் ஏற்பார். நெருக்கடி மக்களின் அத்தனை வர்க்கங்களையும் ஒரேவிதத்தில் தான் பாதிக்கிறது என்றும், “அமெரிக்க மக்கள் இதுவிடயத்தில் ஒன்றாய் நிற்கிறார்கள்” என்றும், “தியாகங்கள்” “பகிர்ந்து கொள்ளப்பட” முடியும் அதுநடக்கும் என்றும், ஏழைகளின் நலன்களும் பணக்காரர்களின் நலன்களும் ஒன்றுதான் என்றுமான பிரமைகளை அவரால் எத்தனை நாட்களுக்கு காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறீர்கள்? நெருக்கடியால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளை தனது சொந்த அதிகப்பட்ச வளப்படுத்தலுக்காக சுரண்டிக் கொள்வதற்கு நிதியப் பிரபுத்துவம் அடக்கமுடியாத தீர்க்கமான உறுதியுடன் இருப்பதும், அல்லது இந்த முனைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஒபாமா, ஒருவேளை அவர் விரும்பினாலும் கூட, இதில் சக்தியற்றவராக இருப்பதும் பரந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு வலிமிக்க விதத்தில் வெட்டவெளிச்சமாகும் முன்பாக, எத்தனை காலத்திற்கு அவர் அதைச் செய்து விட முடியும்?
ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் புதிய ஒப்பந்தம் குறித்து —இதனை பொதுவாக வரலாற்றாசிரியர்கள் அரசாங்க தீவிரப்படலின் உச்சமாய் சித்தரிக்கிறார்கள்— 1939 இல் ட்ரொட்ஸ்கி கூறிய கருத்துகளை நினைவுகூருவது பயன் தரக் கூடியதாகும். அமெரிக்க முதலாளித்துவத்துடனான ரூஸ்வெல்ட்டின் மோதல்களது பொதுவாக பயனளிக்காத தன்மை குறித்து ட்ரொட்ஸ்கி சற்று கிண்டலாக இவ்வாறு குறிப்பிட்டார்:
இன்று, ஏகபோகவாதிகள் தான் ஆளும் வர்க்கத்தின் வலிமையான பிரிவுகளாய் இருக்கின்றனர். அரசாங்கம் ஏகபோகத்திற்கு எதிராக, அதாவது எந்த வர்க்கத்தின் விருப்பத்தின் பேரில் அது ஆட்சி செய்கிறதோ அதனை எதிர்த்து, சண்டையிடுவதான நிலையில் பொதுவாக இல்லை. ஏகபோகத்தின் ஒரு கட்டத்தின் மீது தாக்குகின்ற வேளையில், ஏகபோகத்தின் பிற கட்டங்களில் ஒரு கூட்டாளியைத் தேட அது கடமைப்பட்டிருக்கிறது. வங்கிகள் மற்றும் இலகுரக தொழிற்துறைகளுடன் சேர்ந்து கொண்டு கனரக தொழிற்துறையின் நம்பிக்கைகள் மீது அவ்வப்போது அடி கொடுக்கலாம், எப்படிப் பார்த்தாலும் அவை, அதனால் பெரும் இலாபங்கள் ஈட்டுவதை நிறுத்தி விடப் போவதில்லை.[8]
அதே கதிதான் ஜனாதிபதி ஒபாமாவுக்கும் நேருமா? திருவாளர். “ஆம், நம்மால் முடியும்” இன் வாய்வீச்சு முரசுகொட்டல்களால் அமெரிக்க முதலாளித்துவத்தின் சுவர்கள் அதிர்ந்து விழுமா? இல்லை விழாது. உண்மையாகப் பார்த்தால், இழிபுகழ்பெற்ற வங்கிப் பிணையெடுப்பு நெருக்கடியின் போது அவரது செயல்பாடு —செனட்டர் மெக்கெயினின் செயல்பாடு குறித்து குறிப்பிடவும் வேண்டியதில்லை— ஆளும் நிதிப்பிரபுத்துவ அடுக்கின் கோரிக்கைகளுக்கு முகம்கொடுக்கும்போது ஒபாமா நிர்வாகம் எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதற்கான ஒரு அறிகுறியை வழங்கியது.
இறுதிப் பகுப்பாய்வில், ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்க முதலாளித்துவம் முகம்கொடுக்கின்ற புற நிலைமைகளால் தீர்மானிக்கப்படுவனவாகவே இருக்கும். அந்த புள்ளியில் தான் ரூஸ்வெல்ட்டின் சகாப்தத்தில் இருந்த அமெரிக்காவுக்கும் ஒபாமாவின் சகாப்தத்தில் இருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒரு தெளிவான பிரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். பிராங்ளின் ரூஸ்வெல்ட் முதன்முதலில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, அமெரிக்கா அதன்மீதே தான் பயம்கொள்ளலாமே தவிர பயப்படுவதற்கு வேறொன்றும் கிடையாது என்று பிரகடனம் செய்து முக்கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டிருக்கிறது. அதன் அத்தனை பொருளாதார சிக்கல்களைத் தாண்டியும், தனது உத்தரவின் கீழ் மிகப் பிரம்மாண்டமான ஆதாரவளங்களை அப்போதும் கொண்டிருந்த ஒரு முதலாளித்துவ நாட்டின் தலைவராக அவர் அப்போது பேசினார். அமெரிக்காவின் தொழிற்துறை வலிமையுடன் ஒப்பிட்டால், மற்ற அத்தனை நாடுகளும் சிறு எறும்புகளாகவே இருந்தன. அந்த நாட்கள் எப்போதோ கடந்து விட்டன. அமெரிக்கா பல தசாப்தங்களாய் பொருளாதார வீழ்ச்சியில் இருக்கிறது. தொழிற்சாலைகள் சிதைவடைந்த நிலையில் அது பாரிய கடன்களை குவித்திருக்கிறது. சொல்லப் போனால், பொருளாதார நெருக்கடியின் அத்தியாவசியமான ஊற்றுமூலத்தை, செல்வக் குவிப்பு நிகழ்ச்சிபோக்கை சடரீதியான உற்பத்தி நிகழ்ச்சிபோக்குகளில் இருந்து பிரித்ததில் கண்டடையலாம். பொருளாதார நெருக்கடியின் வெடிப்பின் சமயத்தில், அத்தனை இலாபங்களிலும் அமெரிக்க நிதித் தொழிற்துறையின் பங்கு 40 சதவீதமாய் இருந்தது!
அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு வழங்க ஜனாதிபதி ஒபாமாவிடம் ஒரு புதிய ஒப்பந்தம் இருக்கப் போவதில்லை; ரூஸ்வெல்ட்டின் புதிய ஒப்பந்தமும் கூட பெருமந்தநிலையை முடிவுக்குக் கொண்டுவர திறனற்றதாய் நிரூபணமானது என்பதை ஒருவர் நினைவுகூரலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும். பொருளாதார நெருக்கடியானது இரண்டாம் உலகப் போர் மூலமாகவே “தீர்க்கப்பட்டது”. தவிரவும், 1930களில் சாதிக்கப்பட்ட எந்த பலன்களாய் இருந்தாலும், அவை அரசாங்க சீர்திருத்தங்கள் மற்றும் கையளிப்புகளின் விளைபொருளாய் இருந்தவையல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் தீவிர சமூகப் போராட்டங்களின் —Toledo Auto-Lite வேலைநிறுத்தம், மினியாப்பொலிஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ பொது வேலைநிறுத்தங்கள், ஃபிளிண்ட் தர்ணா போராட்டம் மற்றும் பிற சக்திவாய்ந்த மற்றும் இரத்தம்தோய்ந்த போராட்டங்கள் போன்றவை— விளைபொருளாகவே இருந்தன.
அப்படியானால், அமெரிக்காவில் சோசலிசத்துக்கான வாய்ப்புவளங்கள் எந்த அளவில் இருக்கின்றன? இந்தக் கேள்வி குறித்து ட்ரொட்ஸ்கி —அமெரிக்க சமூகத்தின் மற்றும் அதன் பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புகளின் ஒரு ஆழ்ந்த அவதானிப்பாளராய் அவர் இருந்தார்— மிகப்பெருமளவில் சிந்தித்திருந்தார். ”வரம்பற்ற வாய்ப்புகளுடைய மண்” எனச் சொல்லப்பட்ட நாட்டில் முதலாளித்துவ சித்தாந்தத்தின் சக்தி மற்றும் செல்வாக்கு குறித்து அவர் மிக நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். 1939 இல் அவர் எழுதினார்:
ஒரு மில்லியன் வைத்திருப்பவர் ஒரு மில்லியனுக்கு “மதிப்புள்ளவர்” என்று குறிப்பிடப்படுவதாய் இருக்கும் அமெரிக்காவில், வேறெங்கையும் விட சந்தைக் கருத்தாக்கங்கள் ஆழமாய் சரிந்து விட்டிருக்கின்றன. சற்று சமீபகாலம் வரையிலும், அமெரிக்கர்கள் பொருளாதார உறவுகளின் இயல்புக்கு மிகக் குறைந்த சிந்தனையே கொடுத்திருந்தனர். மிகச் சக்திவாய்ந்த பொருளாதார அமைப்புமுறையின் நாட்டில், பொருளாதாரத் தத்துவமானது மிதமிஞ்சிய அளவில் தரிசானதாகவே தொடர்ந்து இருந்து வந்திருந்தது. அமெரிக்க பொருளாதாரத்தின் இப்போதைய ஆழ்ந்து-செல்லும் நெருக்கடிதான், முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையான பிரச்சினைகள் பொது அபிப்ராயத்துடன் பட்டவர்த்தனமாக மோதல் காணும்படி செய்திருக்கிறது.[9]
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அறிவொளி நிகழ்ச்சிபோக்கு இரண்டாம் உலகப் போரால் —அமெரிக்கா இதில் இருந்து இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் மட்டுமின்றி பொருளாதாரரீதியாகவும் வெற்றிகரமாக வெளிவந்தது— முந்திக் கொள்ளப்பட்டு விட்டது. தொழிற்துறை உற்பத்தியில் 75 சதவீதம் அமெரிக்காவில் இருந்த நிலையிலும், டாலர் “தங்கத்தின் அதேஅளவுக்கு” மதிப்புடையதாகவும் இருந்த ஒரு சமயத்தில், முதலாளித்துவத்தின் அங்கீகாரநியாயத்தை தொடர்ந்தும் கேள்வி கேட்க என்ன அவசியம் அங்கே இருந்தது? மேலும், போருக்குப் பிந்திய கம்யூனிச-விரோத சூனிய-வேட்டைகள் அமெரிக்காவில் புத்திஜீவித வாழ்வை ஒடுக்குவதையும் அமெரிக்க முதலாளித்துவத்தின் மீதான மார்க்சிச விமர்சனத்தை —முழுமையாக குற்றமாக்காவிடில்— ஏற்பற்றதாக்குவதையும் நோக்கம் கொண்டிருந்தன. மிகச் சமீபத்தில், 1980களின் பிற்பகுதியிலும் மற்றும் 1990களின் ஆரம்பத்திலும், சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவானது, முதலாளித்துவத்தின் திருப்பவியலாத வெற்றிக்கும், இன்னும் “வரலாற்றின் முடிவு”க்கும் கூட திட்டவட்டமான சான்றாகக் கூறி பாராட்டப்பட்டது.
ஆனால் இன்று, பொருளாதார அமைப்புமுறையின் பேரழிவுகரமான தோல்விக்குப் பிந்திய காலத்தில், அந்த முதலாளித்துவ வெற்றிக்களிப்புவாதத்தில் என்ன எஞ்சியிருக்கிறது? ஒரு மாதத்திற்கு சற்று முந்தியதொரு காலத்தில் தான், வங்கிகளின் பிணையெடுப்புக்கு மக்கள் ஆதரவுக்கு விண்ணப்பித்த ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், அமெரிக்காவில் முதலாளித்துவ அமைப்புமுறை பொறிவின் விளிம்பில் நின்று கொண்டிருந்ததாக தேசிய மட்டத்திலான பார்வையாளர்களின் முன்னால் அறிவித்தார். இரண்டு நாட்களின் பின்னர், தனது கேபினட் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத் தலைவர்களிடம் கூறுகையில், “இந்த சனியன் கீழே போய்க் கொண்டிருக்கிறது!” (“This sucker is going down!”) என்றார். அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்த சித்தாந்தமும் —சந்தையின் தோற்கவியலாமை குறித்தது, அரசில் இருந்து சந்தையின் முற்றிலுமான சுயாதீனம் குறித்தது— அத்தனை நம்பகத்தன்மையையும் தொலைத்தது. சந்தை வழிபாட்டின் மிக உயரிய தீர்க்கதரிசி அலன் கிரீன்ஸ்பான் —ஃபெடரல் ரிசர்வின் “மாஸ்ட்ரோ” என்று போற்றப்பட்டவர்— நாடாளுமன்றக் கமிட்டி ஒன்றின் முன்பாக நிலைகுலைவின் விளிம்பில் இருந்த ஒரு கிறங்கி கிறுகிறுத்துப் போன மனிதராக வந்து நின்று, சந்தைகள் அவர் நம்பிய விதத்தில் நடந்து கொள்ளத் தவறிவிட்டன என்று திகைப்புடன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தார்.
இந்த நெருக்கடியின் பின்புலத்தில் தான், பயம்கொள்ளச் செய்கின்ற “பகிர்வு” வார்த்தை (“S” word) அமெரிக்க அரசியல் வாழ்வில் மீண்டும் காட்சியளித்திருக்கிறது. செல்வத்தை பகிர்ந்து கொள்வது குறித்து ஒபாமா வாய்தவறி கூறிய ஏதோ வார்த்தை, அதில் நிச்சயமாக அவர் எந்த ஆபத்தையும் அர்த்தப்படுத்தவில்லை, ஒபாமா அமெரிக்காவிற்குள் சோசலிசத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதற்கான சான்றாக மெக்கெயின் மற்றும் பாலின் ஆகியோரால் பிடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒபாமா, உண்மையில், நெருக்கமான-மார்க்சிசவாதியா என்று தொலைக்காட்சியில் செனட்டர் பைடனிடம் கேட்கப்பட்டது! இந்த அத்தியாயங்கள் ஆளும் வர்க்கத்திற்குள்ளாக நிழலாடுகின்ற பயங்களை வெளிப்படுத்துகின்றன. “செல்வத்தை பகிர்வதற்கு” திட்டமிடுவதற்காக ஒபாமாவும் பைடனும் அவர்களது நப்பாசைமிக்க குடியரசுக் கட்சி எதிரிகளால் சீண்டப்படுகின்றனர். ஜனநாயகக் கட்சியினர் வெட்கங்கெட்டு இந்தக் குற்றச்சாட்டை மறுக்கின்றனர். ஆனால், பெருகும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பாரிய முன்மூடல்கள் நிலைமைகளின் கீழ், அமெரிக்கத் தொழிலாளர்களது பரந்த எண்ணிக்கையினர், “செல்வத்தைப் பகிர்ந்து கொள்வது” உண்மையிலேயே அத்தகைய ஒரு மோசமான யோசனை என்பதற்கு உடன்படுவார்களா?
சமூக இருப்பு தான் சமூக நனவைத் தீர்மானிக்கிறது. நெருக்கடியின் நிலைமைகள் பழைய சித்தாந்தங்களை மதிப்பிழக்கச் செய்வதுடன் நிற்பதில்லை. புறநிலை யதார்த்தத்தின் வரிசையிலான கருத்தாக்கங்களுக்கு அவை எழுச்சியளிக்கின்றன. அமெரிக்க மற்றும் உலக நெருக்கடி குறித்த விவாதங்களில் மார்க்சிசத்திற்கு பாதி-உத்தியோகப்பூர்வ தடை விதிப்பை பராமரிப்பதென்பது சாத்தியமாக இயலாது. ட்ரொட்ஸ்கி முன்கண்டதைப் போல, புறநிலை நிகழ்வுகள் அரசியல் வாழ்வில் ஒரு ஆழமான மாற்றத்தை நிர்ப்பந்திக்கும். 1939 இல் அவர் எழுதியது இப்போதைய சூழ்நிலையில் அசாதாரணமான பொருத்தத்தைப் பெறுகிறது:
பகுதியான சீர்திருத்தங்களும் ஒட்டுவேலைகளும் எந்த பயனுமளிக்காது. பரந்த மக்களது நேரடியான தலையீடு மட்டுமே பிற்போக்குத்தன முட்டுக்கட்டைகளைத் தூக்கிவீசி விட்டு ஒரு புதிய ஆட்சிக்கான அடித்தளங்களை இட முடியும் என்ற தீர்மானகரமான கட்டங்களில் ஒன்றுக்கு வரலாற்று அபிவிருத்தியானது வந்து சேர்ந்திருக்கிறது. உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமைகளாய் இருப்பதை ஒழிப்பதே, முதலில் தேசிய அளவிலும் இறுதியாக உலக அளவிலும், திட்டமிட்ட பொருளாதாரத்துக்கு, அதாவது மனித உறவுகளின் வட்டத்திற்குள்ளாக பகுத்தறிவை அறிமுகம் செய்வதற்கு, முதல் முன்நிபந்தனையாக இருக்கிறது.... விடுதலை பெற்ற மனிதகுலமானது அதன் முழு உயரத்திற்கு தன்னாலே நிமிர்ந்து நிற்கும். [10]
Notes:
1. Documents of the Fourth International (New York: Pathfinder Press, 1973), p. 284.
2. Stalin: Triumph and Tragedy (New York: Grove Weidenfeld, 1988), pp. 254–60.
3. Writings of Leon Trotsky 1938 – 39 (New York: Pathfinder Press, 1974), p. 94.
4. The Historical and International Foundations of the Socialist Equality Party(Mehring Books, 2008), p. 59.
5. Baruch Knei-Paz, The Social and Political Thought of Leon Trotsky (Oxford: Oxford University Press, 1978), pp. 487–88.
6. Leon Trotsky, Marxism in Our Time.
7. The Transitional Program for Socialist Revolution (New York: Pathfinder Press, 2001), pp. 189–90.
8. Leon Trotsky, Marxism in Our Time.
9. Ibid.
10. Ibid.
மேலதிக வாசிப்புகளுக்கு.
லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தைந்து ஆண்டுகள்
[20 August 2015]
லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகள்
[30 September 2015]
பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம், கெல்ஃபான்ட் வழக்கும் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியின் சாட்சியமும்
[10 November 2015]
லியோன் சடேவ் : மகன், நண்பன், போராளி
[15 December 2009]
வரலாற்றாசிரியர்கள் மாநாட்டில் உரை: லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து
[4 October 2012]
லியோன் ட்ரொட்ஸ்கியும் வரலாற்றுஉண்மையின் பாதுகாப்பும்
[20 March 2012]