Print Version|Feedback
Eighty Years of the Fourth International: The Lessons of History and the Struggle for Socialism Today
நான்காம் அகிலத்தின் எண்பது ஆண்டுகள்: வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்துக்கான இன்றைய போராட்டமும்
By David North
9 October 2018
அக்டோபர் 7, உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மண்டபம் நிறைந்த பொதுக் கூட்டத்தில் பின்வரும் விரிவுரையை நிகழ்த்தியிருந்தார். நான்காம் அகிலத்தின் 80 வது ஆண்டு நிறைவு மற்றும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் 50 வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு இலங்கையில் நடந்த இரண்டாவது கூட்டம் இதுவாகும்.
டேவிட் நோர்த்
நான்காம் அகிலத்தின் வரலாற்றைப் பற்றி இலங்கையில் உரையாற்றும் வாய்ப்பைப் பெறுவதையிட்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். நான்காம் அகிலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் இலங்கையின் புரட்சிகர சோசலிஸ்டுகளின் வீரம்செறிந்த பங்கினை உலகெங்கும் உள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எண்ணிலடங்கா சிரமங்களை எதிர்கொண்டு, ட்ரொட்ஸ்கிச முன்னோடிகள், இந்திய மற்றும் இலங்கை தேசிய முதலாளித்துவத்தின் ஏகாதிபத்திய அரசியல் முகவர்களை எதிர்த்து, இலங்கையில் 1935ல் லங்கா சம சமாஜக் கட்சியையும் (LSSP), பின்னர், 1942ல் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியையும் (BLPI) ஸ்தாபித்தனர். அவர்கள் அடிப்படையாகக் கொண்டிருந்த அரசியல் முன்நோக்கு, இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட, 1917ல் ரஷ்ய தொழிலாள வர்க்கம் வெற்றியடைவதற்கு வழிநடாத்திய அரசியல் மூலோபாயத்தை வழங்கிய நிரந்தரப் புரட்சி தத்துவமாகும்.
1939ல், ட்ரொட்ஸ்கி இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். வரலாற்றையும் வர்க்கப் போராட்டத்தின் ஆற்றலையும் கிரகித்துக்கொள்வதில் அவருக்கிருந்த தனித்துவமான திறைமையைக் கொண்டு, இந்திய துணைக் கண்டத்தில் வெகுஜனங்கள் எதிர்கொண்டிருந்த அத்தியாவசிய மூலோபாய பிரச்சினைகளை பற்றி ட்ரொட்ஸ்கி சுருக்கமாக விளக்கினார்:
இந்திய முதலாளித்துவத்தினர் ஒரு புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுக்கும் திறனற்றவர்கள். அவர்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளதுடன் அதிலேயே தங்கியும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த சொத்தைக் காப்பாற்ற துடிக்கின்றனர். அவர்கள் வெகுஜனங்களைக் கண்டு பீதியடைந்துள்ளனர். அவர்கள் என்ன விலை கொடுத்தாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொள்ளவும், அத்தகைய சமரசத்தின் மூலம் கிடைக்கும் சீர்திருத்தங்களைக் காட்டி மக்களை அமைதிப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். காந்தியே இந்த முதலாளித்துவத்தின் தலைவரும் தீர்க்கதரிசியுமாவார். அவர் ஒரு போலியான தலைவரும் பிழையான தீர்க்கதரிசியுமாவார்!
"மக்கள் முன்னணி" என்றழைக்கப்படும் பதாகையின் கீழ், தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவத்திற்கு அடிபணியக் கோரிய, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சியின் துரோக பங்கினை ட்ரொட்ஸ்கி கண்டனம் செய்தார். அவர் எழுதியதாவது:
மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர்! “மக்கள் முன்னணி” என்பது பழைய கொள்கைக்கான ஒரு புதிய பெயரே ஆகும். தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையேயான ஒரு கூட்டணியில், வர்க்க ஒத்துழைப்பின் ஒரு சுருக்கமே இது. அத்தகைய ஒவ்வொரு கூட்டணியிலும், தலைமைத்துவம் மாற்றமின்றி வலதுசாரிகளின் கைகளுக்கே, அதாவது சொத்துள்ள வர்க்கத்திடமே போய்ச் சேரும். இந்திய முதலாளித்துவ வர்க்கம், ஏற்கனவே கூறியது போல், ஒரு சமாதானமான கொடுக்கல் வாங்கலையே விரும்புகிறது, போராட்டத்தை அல்ல. முதலாளி வர்க்கத்துடனான கூட்டணியானது பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தை கைவிடுவதற்கே வழிவகுக்கிறது. கூட்டணி கொள்கையானது ஒரே இடத்தில் இருந்து கொண்டு, காலத்தை கடத்துவது, போலி நம்பிக்கைகளை விதைப்பது, வெற்று சூழ்ச்சிகள் மற்றும் சதிகளிலும் ஈடுபடுவதையே குறிக்கின்றது. இக்கொள்கையின் விளைவாக, உழைக்கும் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாமல் ஏமாற்றம் விதைக்கப்டும் அதேவேளை, விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்திற்கு புறமுதுகு காட்டி, அவநம்பிக்கையில் மூழ்கிப் போவர்.
இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொண்ட லங்கா சம சமாஜக் கட்சியின் ஸ்தாபகர்கள், தேசிய முதலாளித்துவத்தை எதிர்த்ததோடு, இலங்கை தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த புரட்சிகர கட்சியை உருவாக்கினர். ஆனால் 1964ல், துன்பகரமான விளைவுகளோடு, லங்கா சம சமாஜக் கட்சி அதன் ஸ்தாபக கொள்கைகளுக்கு புறமுதுகு காட்டி, பண்டாரநாயக்க அம்மையாரின் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி (SLFP) அரசாங்கத்துடன் ஒரு கூட்டணியில் நுழைந்துகொண்டது. இந்த "மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு" எதிராகவே, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக ஸ்தாபிக்கப்பட்டது. அரை நூற்றாண்டு காலமும், அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியானது 1964 காட்டிக் கொடுப்பின் பின்விளைவுகளில் இருந்து தலைதூக்குவதற்கு ஒரு சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியினதும் லங்கா சம சமாஜக் கட்சியினதும் ஸ்தாபகர்கள் இலங்கையில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் புரட்சிகர சோசலிசத்திற்காக செய்த பெரும் பங்களிப்புகளை மறந்துவிடவில்லை.
வரலாற்றை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம்
இலங்கையில் எனது விரிவுரைகள், நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு எண்பதாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் சர்வதேச நிகழ்வுகளின் ஒரு பாகமாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கமானது, வரலாற்று நனவைக் கொண்டிருப்பது இன்றியமையாததாகும். வரலாற்றை அடித்தளமாகக் கொண்ட முன்னோக்கு இல்லாத பட்சத்தில், அரசியல் பகுப்பாய்வுகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வுசெய்துகொண்ட கருத்துக்களின் மட்டத்திற்கு இழிவானதாகிவிடும். ஒரு கரிசனைமிக்க அரசியலும் புரட்சிகர நடவடிக்கையும் அரசியலில் மிகமிக சீரியதான ஒன்றாகும், இதற்கு விஞ்ஞானபூர்வ வழிமுறை அவசியமாகும். கடற் போக்குவரத்தில் கோணமானி (sextant) என்ற ஒரு கருவி பயன்படுத்தப்படும். அதன் கண்டுபிடிப்பானது ஒரு கப்பலோட்டிக்கு அவரது கப்பல் இருக்கும் இடத்தை சரியாக அறிந்துகொள்ளும் இயலுமையை கொடுத்துள்ளது. அதன் மூலம் அவர் தான் காணும் தொடுவானத்துக்கும் வானியல்சார் புள்ளிக்கும் இடையிலான கோணதூரத்தை அளந்து, கப்பல் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியும். அரசியல் பயணத்தின் போது, புரட்சிகரக் கட்சியானது கண்ணுக்குத் தெரியும் அரசியல் தொடுவானத்தை ஒரு அவசியமான வரலாற்று மேற்கோள் புள்ளியுடன் தொடர்புபடுத்த வேண்டும்.
ரஷ்யாவில் புட்டினின் அரசாங்கத்தின் ஆதரவாளராகவும், அனைத்துலகக் குழுவின் ஒரு அரசியல் எதிப்பாளராகவும் உள்ள சையிட் காஃபுரோவ் (Said Gafurov), ஸ்ராலினிஸ்டுகள் செய்த குற்றங்கள் மற்றும் காட்டிக் கொடுப்புக்கள் பற்றி நாம் அம்பலப்படுத்தி வருவதை சமீபத்தில் எதிர்த்திருந்தார். கடந்த கால நிகழ்வுகளை கடந்த காலத்துக்கு உரியவையாக விட்டுவிட்டு, ஸ்ராலினின் அரசியல் வாரிசுகளுடன் இணைந்து செயல்படும் வழிகளை ஏன் எங்களால் தேட முடியாது? நாம் ஏன் இன்று கூட்டாக செயற்படுவதற்கான வழியில் கடந்தகால குற்றங்கள் மற்றும் காட்டிக்கொடுப்புகளும் இடையூறாக இருக்க அனுமதிக்க வேண்டும்? என அவர் கேட்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, 1940இல் ட்ரொட்ஸ்கி கொல்லப்பட்டு எழுபத்தெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன; ஸ்ராலின் 1953இல் இறந்து அறுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. சோவியத் ஒன்றியம் இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு 1991இல் கலைக்கப்பட்டுவிட்டது. 1930களின் கடைப்பகுதியில் சோவியத் ஒன்றியத்தில் மார்க்சிசத்தின் தலைசிறந்த பிரதிநிதிகளுக்கு எதிரான அரசியல் படுகொலைப் பிரச்சாரத்தை முன்னெடுத்த ஸ்ராலினிஸ்டுகளில் இருந்து நான்காம் அகிலத்தை பிரிக்கும் "இரத்த ஆற்றைப்" பற்றிய ட்ரொட்ஸ்கியின் குறிப்புகளை இன்னும் ஏன் நினைவுபடுத்திக்கொண்டிருக்க வேண்டும்? என்றே எமது எதிர்ப்பாளர்கள் குறைப்பட்டுக்கொள்கின்றனர்.
“இன்று, ட்ரொட்ஸ்கிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஒரு வரலாற்று பண்பை மட்டுமே கொண்டிருக்கின்றன, அரசியல் தன்மையைக் கொண்டிருக்கவில்லை”, என இந்த எதிர்ப்பாளர் கூறுகிறார். “ரோபேஸ்பியர் மற்றும் ஏபேர் அல்லது டான்ரொன் இடையேயான, வரலாற்றாளர்களின் ஆர்வத்திற்கு மட்டுமே காரணமாக இருக்கின்ற, வேறுபாடுகளை விட”, ட்ரொட்ஸ்கிசத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் தற்காலத்துக்கு தொடர்பற்றவை என அவர் பிரகடனம் செய்கின்றார். இந்த வேறுபாடுகள் “படிப்பதற்கு முக்கியமானவை, ஆனால் வரலாற்றை கற்றுக்கொள்வதற்கான விருப்பத்திற்கு மட்டுமே ஆகும், (மற்றும் வரலாறு, நேர்மையாக சொல்வதென்றால், சற்று வஞ்சத்தனமானதாக யாருக்கும் ஒருபோதும் எதையும் கற்பிப்பதில்லை)” என எம்மை எதிர்ப்பவர் வலியுறுத்துகிறார்.
நமது எதிப்பாளர்களால் முன்வைக்கப்படும் வாதமானது, வரலாறும் அரசியலும் வேறுபட்ட மற்றும் ஒன்றோடொன்று தொடர்பற்ற கோளத்தில் உள்ளது என்பதே ஆகும். வரலாற்றை கற்பதானது ஒருவிதமான புத்திஜீவித ஆர்வத்திற்காக இருக்கக் கூடும். ஆனால் அது, இன்றைய நடைமுறை அரசியல் செயற்பாடுகளுக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க பெறுமதிமிக்க எதையும் நமக்கு கற்பிக்கவில்லை. இவ்வாறாக விவாதிப்பவர்களுக்கும் மார்க்சிச அரசியலுக்கும் இடையில் பொதுவான எந்த தொடர்பும் கிடையாது. வரலாற்று அனுபவம் பற்றி, தொடர்ச்சியாக விமர்சன ரீதியாக மறுவேலை செய்வதன் மூலமே, புரட்சிகர இயக்கம் அதன் வேலைத்திட்டத்தையும் செயல்பாட்டையும் அபிவிருத்தி செய்கிறது. ஒரு வரலாற்று மேற்கோள் புள்ளி இல்லாமல், வர்க்கப் போராட்டத்தின் கொந்தளிப்பான அலையின் ஊடாக பயணிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த நூற்றாண்டின் மகத்தான புரட்சிகர நிகழ்வுகளைப் பற்றிக் கற்றுக் கொள்ளாமல், ஒரு புரட்சிகர கட்சி எவ்வாறு அதன் இளம் உறுப்பினர்களையும், முழு தொழிலாள வர்க்கத்தையும் பயிற்றுவிக்க முடியும்?
வரலாற்றிலேயே இருபதாம் நூற்றாண்டுதான் மிகவும் புரட்சிகரமானதாகும். ஒவ்வொரு கண்டத்திலும் ஒடுக்கப்பட்ட மக்கள் முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான போராட்டத்தின் சூறாவளிக்குள் இழுக்கப்பட்டிருந்தனர். வரலாற்றில் முதன்முறையாக, 1917ல், போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதை கடந்த நூற்றாண்டு கண்டது. முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டி ஒரு சோசலிச சமுதாயத்தை ஸ்தாபிப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள விருப்பத்தையும் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் உலகெங்கிலும் பெருந்திரளானோரைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாகின.
ஆயினும், இவ்வளவு போராட்டங்களும் அர்ப்பணிப்புகளும் நிகழ்ந்த போதிலும், நூற்றாண்டின் முடிவில், முதலாளித்துவ வர்க்கம் உலகம் முழுவதும் அதிகாரத்தில் உள்ளது. 1917 புரட்சியில் இருந்து எழுந்த சோவியத் ஒன்றியம், அதன் சொந்த அரசாங்கத்தாலேயே கலைக்கப்பட்டுவிட்டது. சீனாவில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, முதலாளித்துவ பொருளாதாரத்தின் மிகவும் தீவிரமான பரிந்துரையாளராக ஆகிவிட்டது. நாம் இப்பொழுது சமூக சமத்துவமின்மையின் அளவு திகைப்பூட்டும் வகையில் உள்ள ஒரு உலகில் வாழ்கிறோம். இந்த அரசியல் பின்நோக்கிச் செல்லும் நிகழ்ச்சிபோக்கை எவ்வாறு விளக்குவது?
உலகம் முழுவதும், தற்போதிருக்கும் நிலைமைகள் சம்பந்தமாக அதிருப்தி பெருகி வருகிறது. "முதலாளித்துவம்" மீண்டும் ஒரு முறை அசிங்கமான வார்த்தை ஆகியுள்ளது. தற்போதைய சமூக ஒழுங்கிற்கு ஒரு மாற்றீடாக, சோசலிசத்தின் மீது ஆர்வம் புதுப்பிக்கப்படுகிறது. ஆனால், இந்த முற்போக்கான உந்துதல்களுக்கு மத்தியில், முந்தைய நூற்றாண்டின் பெரும் அரசியல் அனுபவங்கள் மற்றும் புரட்சிகரப் போராட்டங்கள் பற்றிய அறிவு சற்றும் இல்லை என்பதை வெளிப்படையாக கூறியாக வேண்டும். “புரட்சி” என்ற வார்த்தையிலேயே அதன் முக்கிய உள்ளடக்கமான, அதன் சமூக அஸ்திவாரங்கள், வர்க்க இயக்கவியல் மற்றும் அரசியல் மூலோபாயங்களைப் பற்றிய புரிதல் இல்லாதுள்ளது.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னரும் சீனாவில் முதலாளித்துவ மறுசீரமைப்பின் பின்னரும் பிறந்த இளைஞர்கள், ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகளின் வரலாறு பற்றிய விரிவான அறிவை பெறாமல் இருப்பது ஒருபுறமிருக்க, இந்த நிகழ்வுகள் எவ்வாறு தோன்றின என்பது பற்றிய அறிவும் அவர்களுக்கு இல்லை. ஸ்ராலினிசம், மாவோவாதம் அல்லது அதேபோல் காஸ்ட்ரோ வாதம் போன்ற சொற்பிரயோகங்களின் உண்மையான தத்துவார்த்த மற்றும் அரசியல் உள்ளடக்கத்துடன் அவர்கள் நெருக்கமானவர்களாக இல்லை. நிச்சயமாக, உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் சே குவேராவின் மனோரஞ்சிதமான மற்றும் சுவாரசியமான உருவப்படத்துடன் பரீட்சியமானவர்கள்தான், ஆனால், நான் வெளிப்படையாக சொல்வதென்றால் முற்றிலும் திவாலான அவருடைய அரசியல் மூலோபாயமும் மற்றும் வேலைத்திட்டம் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.
மார்க்சிசத்தின் மீதான கல்வியாளர்களது தாக்குதலின் பாதிப்பு
நிச்சயமாக, கடந்த நூற்றாண்டின் புரட்சிகர எழுச்சிகளைப் பற்றிய அவர்களுக்குள்ள மட்டுப்படுத்தப்பட்ட அறிவுக்கு இளைஞர்கள் மீது குற்றங்கூற முடியாது. தேவையான அறிவை அவர்கள் எங்கே யாரிடம் இருந்து பெறுவது? முதலாளித்துவ ஊடகங்கள், நடப்பில் உள்ள சமூக ஒழுங்கை தூக்கியெறிய பங்களிக்கக்கூடிய அறிவை நிச்சயமாக பரப்பப் போவதில்லை. பல்துறைகளில் கற்ற பேராசிரியர்களை கொண்டுள்ள பல்கலைக்கழகங்களில் நிலைமை என்ன? துரதிருஷ்டவசமாக, புத்திஜீவி சூழல் பல தசாப்தங்களாக உண்மையான சோசலிச தத்துவத்துக்கும் அரசியலுக்கும் கடும் விரோதமானதாக இருந்து வருகின்றது. மெய்யியல் சடவாதத்தில் வேரூன்றியுள்ள மார்க்சிச தத்துவம், நீண்ட காலத்திற்கு முன்னரே பிரதான பல்கலைக்கழகங்களிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது.
ஃபிராங்பேர்ட் பள்ளியின் ஃப்ரோய்டியன் போலி-விஞ்ஞான மற்றும் கருத்தியல் அகநிலைவாதமும் பின்-நவீனத்துவவாதத்தின் பகுத்தறிவற்ற பழிதூற்றல்களுமே கல்விமான் குழுக்களை ஆதிக்கம் செலுத்துகின்றன. மார்க்சிசத்தின் "மாபெரும் கதையாடல்கள்” நவீன உலகிற்கு பொருந்தாது என பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கூறுகின்றனர். முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான மற்றும் தீர்க்கமான புரட்சிகர பாத்திரத்தை ஸ்தாபித்த, வரலாற்று சடவாத கருத்தாக்கம், இடதுசாரி அரசியலின் அடிப்படையாக இருக்க முடியாது மற்றும் இருக்கவும் கூடாது என்பதையே அவர்கள் உண்மையில் அர்த்தப்படுத்துகின்றனர்.
மத்தியதர வர்க்க போலி-இடது அரசியலின் தத்துவாசிரியர்களையும் அதை நடைமுறைப்படுத்துபவர்களையும் பொறுத்தவரை, கடந்தகால புரட்சிகரப் போராட்டங்களின் வரலாற்றைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. அதன் படிப்பினைகள், அவர்கள் அனைவரது அரசியல்ரீதியான சந்தர்ப்பவாதங்களுடனும் பிற்போக்கு கற்பனைக்கதைகளுடனும் முரண்படுகின்றன. உண்மையில், இந்த புத்திஜீவி வட்டாரங்களுக்கு ட்ரொட்ஸ்கி வெறுப்புக்குரியவராக இருக்கிறார். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தின் படிப்பினைகளை கற்றுக் கிரகித்துக்கொள்ளாமல், இருபத்தியோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்காக போராட முடியாது. கடந்த நூற்றாண்டின் இந்த அடிப்படை தத்துவார்த்த, அரசியல் போராட்டமானது, தொழிலாளர்களும், சமகால உலகில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கான சரியான பாதையை தீவிரமாக தேடும் அனைவரும் முகம்கொடுக்கும் அரசியல் மூலோபாயத்தின் ஒவ்வொரு தீர்க்கமான பிரச்சினைகளுக்கும், மிக ஆழமான மற்றும் உடனடி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனாலேயே, நான்காம் அகிலத்தின் வரலாற்று மற்றும் அரசியல் மூலங்கள் பற்றிய சுருக்கமான விளக்கத்தை தருவது அவசியமாகிறது.
ஸ்ராலினிசத்துக்கு எதிராக ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த போராட்டத்தின் முக்கியத்துவம்
1938 செப்டம்பரில் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டமை, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். ஸ்ராலினின் தலைமையில் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிராக, லியோன் ட்ரொட்ஸ்கி 1923 அக்டோபரில் சோவியத் ஒன்றியத்துக்குள் இடது எதிர்ப்பு இயக்கத்தை ஸ்தாபித்ததில் ஆரம்பித்து, அடுத்துவந்த பதினைந்து ஆண்டுகள் அவர் முன்னெடுத்த போராட்டத்தின் அரசியல் உச்சக் கட்டமாகவே நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது.
உலக முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான சர்வதேச போராட்டம் இன்றி, மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் முக்கிய ஏகாதிபத்திய மையங்களில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தை வெற்றிகரமாக புரட்சியின் மூலம் தூக்கி வீசாமல், சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தை கட்டியெழுப்புவது சாத்தியமாகும் என்ற வாதத்தை ஸ்ராலின் முன்வைத்தபோது, 1924 பிற்பகுதியில், ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான, ட்ரொட்ஸ்கியின் நீண்டகால சர்வதேச தாக்கங்கள் கொண்ட போராட்டம் எழுச்சி பெற்றது.
இந்த "தனி நாட்டில் சோசலிசம்" என்ற வேலைத்திட்டம், போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், 1919ல் கம்யூனிச அகிலத்தை ஸ்தாபிப்பதற்குமான அடித்தளமாக இருந்த சர்வதேசிய மூலோபாயத்திலிருந்து அடிப்படைரீதியான உடைவாகும். இந்த வேலைத் திட்டம் சோவியத் ஒன்றியத்திற்குள் அரசியல் அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டு, 1917க்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் வளங்களை, தனது சொந்த நலன்களுக்காக சுரண்டிக்கொண்டு அதிலிருந்து முன்னுரிமைகளை பெற்ற, வளர்ந்து வந்த ஒரு அதிகாரத்துவத்தின் நலன்களுக்கு அரசியல் வெளிப்பாட்டை கொடுத்தது. ஸ்ராலினால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வாதிபத்திய சர்வாதிகார அரசியல் வழிமுறை, மார்க்சிச புரட்சியாளர்களை கொன்று அடக்கி, தனது அடிப்படை கருவியாக பொலிஸ் பயங்கரத்தை பயன்படுத்துவதாக இருந்தது. இதன் மூலமே சோவியத் ஒன்றியத்திற்குள் அதிகாரத்துவம் அதன் சலுகைகளை பாதுகாத்துக்கொண்டதோடு, சமூக சமத்துவமின்மையையும் செயல்படுத்தியது.
சோவியத் ஆட்சியின் தேசியவாத சீரழிவு, கம்யூனிச அகிலத்தை சோவியத் வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக மாற்றியமைப்பதில் மிகவும் பேரழிவுகரமான தாக்கத்தை கண்டது. ஸ்ராலினிச அதிகாரத்துவமானது தனி நாட்டில் சோசலிசம் என்ற தத்துவத்தில் உள்ளடங்கியிருந்த தேசியவாத நோக்குநிலையைப் பாதுகாக்க முயல்கையில், ஏகாதிபத்திய வல்லரசுகளின் இராணுவத் தலையீடு தடுக்கப்படும் வரையிலேயே சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் கட்டியெழுப்பப்பட முடியும் என்று கூறிக்கொண்டது. இவ்வாறு, கம்யூனிச அகிலத்தின் நோக்கம், வெளிநாட்டு கூட்டாளிகளை தேடுவதற்கு திசைதிருப்பப்பட்டது. ஸ்ராலினிச ஆட்சியானது முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகளுடன் கூட்டணி தேடிய நாடுகளில், இந்த கூட்டணியை உருவாக்கிக்கொள்வதானது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் இழப்பிலேயே நடைபெற்றது.
சீனப் புரட்சியின் துன்பியல்
சோவியத் அதிகாரத்துவத்தின் தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு கம்யூனிச அகிலத்தை அடிபணிய வைத்ததன் அரசியல் விளைவுகள், சீனாவில் துன்பகரமான வெளிப்பாட்டைக் கண்டன. அங்கு, சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ கோமின்டாங்கினதும் அதன் தலைவர் சியாங் கேய்-ஷேக் இனதும் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஸ்ராலின் வலியுறுத்தினார். சியாங்கை ஒரு சாத்தியமான கூட்டாளியாக நோக்கிய ஸ்ராலின், அவரை சீனாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் நம்பகமான தலைவராக சித்தரித்தார். தொழிலாள வர்க்கம், தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவுகளுக்கு ஆதரவு கொடுக்க கடமைப்பட்டுள்ளது என்று ஸ்ராலின் வாதிட்டார். முன்னேறிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தை விட முதலாளித்துவ அபிவிருத்தி காலதாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம் மிகவும் புரட்சிகரமானது என, தேசிய முதலாளித்துவத்தை காட்டுவதற்கு ஸ்ராலின் மேற்கொண்ட முயற்சிகளை ட்ரொட்ஸ்கி நிராகரித்தார். சாராம்சத்தில், 1917 இற்கு முன்னர் ரஷ்ய மென்ஷிவிக்குகளின் நிலைப்பாட்டை புதுப்பிக்கின்ற இந்த நோக்கு, காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகளின் வர்க்க இயக்கவியல் பற்றிய தவறான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது, என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். அவர் எழுதியதாவது:
சீனாவின் வாழ்வில் வெளிநாட்டு மூலதனத்தின் சக்தி வாய்ந்த பங்கு, சீன முதலாளித்துவத்தின், அதிகாரத்துவத்தின் மற்றும் இராணுவத்தினதும் சக்திவாய்ந்த பகுதியினரது தலைவிதியை ஏகாதிபத்தியத்தின் தலைவிதியுடன் பிணைத்துக்கொள்ள இட்டுச்சென்றது. இந்த பிணைப்பு இல்லாமல், நவீன சீனாவின் வாழ்வில் "இராணுவவாதிகள்" எனப்படுபவர்களின் மகத்தான பங்கு நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்திருக்கும்.
சீனாவில் வெளிநாட்டு மூலதனத்தின் பொருளாதார மற்றும் அரசியல் முகவரான தரகு முதலாளித்துவத்துக்கும் "தேசிய" முதலாளித்துவம் எனப்படுவதற்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி இருக்கின்றது என்று நம்புவது மிகவும் அப்பாவித்தனமானதாகவே இருக்கும். இல்லை, இந்த இரண்டு பிரிவுகளும் தொழிலாளர் மற்றும் விவசாய வெகுஜனங்களை விட ஒருவருக்கொருவர் ஒப்பிடமுடியாதளவு முதலாளித்துவத்திற்கு நெருக்கமாக உள்ளனர்.
ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஷங்காய் மற்றும் கன்டோனில் கம்யூனிஸ்டுகளை படுகொலை செய்யும் நடவடிக்கையை சியாங் 1927 ஏப்ரலில் தொடங்கினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அந்த தாக்குதல்களில் இருந்து தலைதூக்கவே இல்லை. இந்த பேரழிவிற்குப் பின்னர், சீன கம்யூனிஸ்ட் கட்சியானது மாவோ சேதுங்கின் தலைமையின் கீழ், நகரங்களில் இருந்து பின்வாங்கி கிராமப்புறத்திற்கு நகர்ந்தது. இந்த மாற்றமானது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்க சேர்க்கையையும் நோக்குநிலையையும் ஆழமாக மாற்றியது. அது 1927 முதல், நகர்ப்புற தொழிலாள வர்க்கத்தை விட முக்கியமாக கிராமப்புற விவசாயிகளையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. மாவோவாத நோக்குநிலை, அடுத்தடுத்த தசாப்தத்தங்களில், அத்தகைய அமைப்புகளின் கடுமையான அரசியல் தடம்புரள்வுகளதும் மூலோபாய பிழைகளதும் தோற்றுவாய் என்பதை நிரூபித்தது. இலங்கையில் ஜே.வி.பி. உட்பட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய நோக்கு நிலையை பின்பற்றிய அனைத்து அமைப்புகளும் தமது பிழையை நிரூபித்தன.
சீனாவில் அரசியல் பேரழிவின் மத்தியிலும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை சீர்திருத்துவதற்காக ட்ரொட்ஸ்கி போராடினார். 1928ல், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இருந்தும் 1927ல் வெளியேற்றப்பட்ட ட்ரொட்ஸ்கி, சோவியத் மத்திய ஆசியாவில் சீனாவின் எல்லைக்கு அருகே உள்ள அல்மா அட்டாவில், வாழ்ந்து வந்தார். மாஸ்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், ட்ரொட்ஸ்கி ஒரு புரட்சிகர மூலோபாயத்தின் வல்லுனராக இருந்தார். அப்போது ஸ்ராலினுடன் கூட்டாக இருந்த நிக்கோலாய் புக்காரினால் எழுதப்பட்ட, கம்யூனிச அகிலத்தின் வரவிருக்கும் ஆறாவது மாநாட்டின் பிரதான ஆவணத்தின் பிரதி ஒன்றை அவர் பெற்றார். தனி நாட்டில் சோசலிச தத்துவத்தின் அடிப்படையிலான இந்த ஆவணத்தை, ட்ரொட்ஸ்கி மிகக் கடுமையாக விமர்சனத்திற்கு உட்படுத்தி, மார்க்சிச இயக்கத்தின் அடிப்படை மூலோபாய நோக்குநிலையான நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அஸ்திவாரமாக இருந்த, புரட்சிகர சர்வதேசியவாதத்தை உறுதிசெய்தார். அவர் பின்வருமாறு எழுதினார்:
''எமது சகாப்தமான இந்த ஏகாதிபத்திய சகாப்தத்தில் உலகப் பொருளாதாரமும், உலக அரசியலும் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள நிலையில், எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாகவும், பிரதானமாகவும் தனது சொந்த நாட்டினுள் உள்ள நிலைமைகளின், போக்குகளின் வளர்ச்சிகளில் இருந்து ஆரம்பிப்பதன் மூலம் தனது வேலைத்திட்டத்தை ஸ்தாபிக்க முடியாது. இது சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்குள்ளே அரசு அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கும் கூட முற்றிலும் பொருந்தும். 1914 ஆகஸ்ட் 4ம் திகதி [முதலாம் உலகப் போரின் ஆரம்பம்], அனைத்துக் காலங்களுக்குமாக, தேசிய வேலைத்திட்டங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டாகி விட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சி தற்போதைய சகாப்தத்திற்கு, முதலாளித்துவத்தின் அதியுயர்ந்த வளர்ச்சியும், வீழ்ச்சியும் கொண்ட சகாப்தத்தின் தன்மையுடன் தொடர்புடையதான ஒரு சர்வதேசிய வேலைத்திட்டம் என்பது ஒரு பொழுதும் தேசிய வேலைத் திட்டங்களின் ஒட்டுமொத்தமோ அல்லது அவற்றின் பொதுத்தோற்றங்களின் கலவையோ அல்ல.
ட்ரொட்ஸ்கி தொடர்ந்தார்:
சர்வதேச வேலைத்திட்டமானது, உலகப் பொருளாதார, உலக அரசியல் அமைப்பை முழுமையாகக் கொண்டதாகவும் நிலைமைகளின் போக்குகளின் அவற்றின் அனைத்துத் தொடர்புகளையும் முரண்பாடுகளையும் அதாவது அதன் தனிப் பகுதிகள் பரஸ்பர ரீதியாகப் பகைமையுடன் ஒன்றிலொன்று தங்கியுள்ள நிலைமைகள் பற்றிய ஆய்விலிருந்தே நேரடியாக ஆரம்பிக்க வேண்டும். தற்போதைய சகாப்தத்தில் கடந்த காலத்தைவிட மிக அதிக அளவில் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய நோக்குநிலை ஒரு உலக நோக்குநிலையிலிருந்தே ஊற்றெடுக்க வேண்டும்; ஊற்றெடுக்கவும் முடியும், எதிர்மாறாக அல்ல. இங்கேதான் கம்யூனிச சர்வதேசியவாதத்திற்கும் தேசிய சோசலிசத்தின் அனைத்து வகையறாக்களுக்கும் இடையிலான அடிப்படையானதும் பிரதானமானதுமான வேறுபாடு இருக்கிறது.''
90 ஆண்டுகள் கடந்து சென்றபின்னரும், சோசலிசப் புரட்சியின் இயக்கவியல் பற்றிய, தேசிய நிலைமைகளின் மீது சர்வதேசத்தின் மேலாண்மை பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு, சோசலிசத்திற்கான போராட்டத்தின் அத்தியாவசிய மூலோபாயக் கோட்பாடாக உள்ளது.
அதிகாரத்துவ தவறின் தற்செயலான விளைவாக, ட்ரொட்ஸ்கியின் வரைவு வேலைத் திட்டத்தின் மீதான விமர்சனம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; அது ஆறாவது மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க பிரதிந்திதி ஜேம்ஸ் பி. கனன் மற்றும் கனேடிய பிரதிநிதியான மொரிஸ் ஸ்பெக்டருக்கும் தற்செயலாகக் கிடைக்கின்றது. அவர்கள் சோவியத் ஒன்றியத்திற்கு வெளியில் ட்ரொட்ஸ்கியின் ஆவணத்தை கடத்தினர். இதுவே சர்வதேச இடது எதிர்ப்பை உருவாக்க வழி வகுத்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச தேசிய சீரழிவுக்கு எதிரான போராட்டம், கம்யூனிச அகிலத்தின் சீரழிவிற்கு எதிரான போராட்டமாக விரிவடைந்தது.
ஜேர்மனி: “சர்வதேச நிலைமைக்கான திறவுகோல்”
1928 மற்றும் 1933க்கு இடையில், சர்வதேச இடது எதிர்ப்பு இயக்கம் தன்னை கம்யூனிச அகிலத்தின் ஒரு தனிக் குழுவாக கருதியது. அதன் நடவடிக்கைகள், ஸ்ராலினிச மேலாதிக்கத்திலான அகிலத்தையும் கட்சிகளையும் புரட்சிகரமாக மறுநோக்குநிலைப்படுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தன. கம்யூனிச அகிலத்தின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் இருக்கும் வரை, ட்ரொட்ஸ்கி அதைக் கைவிட விரும்பவில்லை. ட்ரொட்ஸ்கியின் அரசியல் கணப்பீடுகளில் ஒரு பிரதான காரணியாக ஜேர்மன் நெருக்கடி இருந்தது. அவர் அதை "சர்வதேச நிலைமைக்கான திறவுகோல்” என விவரித்தார்.
1929 ஜனவரியில் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரின்கிபோ என்ற துருக்கிய தீவுக்கு அனுப்பப்பட்டார். அவர் இப்போது "வதிவிட அனுமதியில்லாத ஒரு கிரகம்" என்று அவர் குறிப்பிட்ட அந்த இடத்தில் ஒரு நாடற்ற தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். ஆனால் இஸ்தான்புல் கடற்கரையோரத்தில் ஒரு தீவில் தனியாக இருந்தபோதிலும், ஜேர்மனியின் நிலைமையை பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு ஒரு அசாதாரணமான முன்மாதிரியாக இருந்தது. பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியும் இணைந்து ஐக்கிய முன்னணி ஒன்றை அமைக்க அவர் அழைப்பு விடுத்தார்.
நாஜிக் கட்சி ஒரு வெகுஜன இயக்கமாக ஆகியிருக்கிறது. அது அதிகாரத்திற்கு வந்தால், அதன் விளைவு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் பேரழிவாக இருக்கும் என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்தார். நாஜிக்கள் அதிகாரத்துக்கு வருவதை தடுத்து நிறுத்த அனைத்தையும் செய்ய வேண்டும். ஆனால் இதற்கு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பற்ற, முற்றிலும் நோக்குநிலைதவறிய மற்றும் நம்பமுடியாதளவு முட்டாள்தனமான கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவது அவசியமாகும். மாஸ்கோவில் உருவாக்கப்பட்ட பாதையை கண்மூடித்தனமாக பின்பற்றிய ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, இன்னொரு வெகுஜனத் தொழிலாளர் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க மறுத்துவிட்டது. அது இன்னமும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஆதரவை கொண்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சியை ஒரு "சமூக பாசிச" அமைப்பு என்று, நாஜிக்களோடு ஒப்பிட்டது. சமூக ஜனநாயகக் கட்சிக்கும் நாஜிக்களுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லாத நிலையில், ஹிட்லரின் படைகளுக்கு எதிராக இரண்டு வெகுஜன தொழிலாளர் கட்சிகளிடையே எந்தவிதமான பொதுவான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுப்பது சாத்தியமற்றது, என்று அது கூறிக்கொண்டது.
ட்ரொட்ஸ்கி எச்சரித்ததைப் போல், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் ஹிட்லரின் அதிகாரத்துக்கான பாதையை திறந்துவிட்டன. உயர்மட்ட முதலாளித்துவ அரசியல்வாதிகளின் விமர்சன ஆதரவுடன், 1933 ஜனவரி 30 அன்று ஹிட்லர் ஜேர்மனியின் சான்சிலர் ஆனார். நாஜி ஆட்சி விரைவிலேயே, எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பும் இல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அமைப்புகளை அழிக்க முனைந்தது. வரலாற்று ரீதியில் முன்னெப்போதும் நடந்திராத இத்தகைய அரசியல் பேரழிவின் மத்தியிலும், கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்திற்குள் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல், தனது கொள்கைகள் சரியானவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஜேர்மன் பேரழிவு ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள ட்ரொட்ஸ்கியை கட்டாயப்படுத்தியது. கம்யூனிச அகிலத்தை சீர்திருத்துவது சாத்தியமற்றது என்ற முடிவிற்கு அவர் வந்தார். மூன்றாம் அகிலம் ஒரு புரட்சிகர அமைப்பாக இருந்ததிலிருந்து இறந்துவிட்டது. எனவே நான்காம் அகிலத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகின்றது.
நான்காம் அகிலத்தை ட்ரொட்ஸ்கி ஸ்தாபித்தார்
நான்காம் அகிலத்தை உருவாக்குவதற்கான ட்ரொட்ஸ்கியின் அழைப்பு, சோவியத் ஆட்சி மீதான அவரது மதிப்பீட்டுடன் தொடர்புடையதாக இருந்தது. அதிகாரத்துவ ஆட்சியை சீர்திருத்தம் செய்வது சாத்தியமற்றது என்று அவர் முடிவிற்கு வந்தார். அதிகாரத்துவமானது சோவியத் ஒன்றியத்திற்குள் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதன் மூலம் ஒரு எதிர்-புரட்சிகர சமூக சக்தியாக மாறியுள்ளது; மற்றும் சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை சிடுமூஞ்சித்தனமாக காட்டிக் கொடுக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் சோசலிசத்திற்கான பரிணாம வளர்ச்சி ஸ்ராலினிச ஆட்சியை ஒரு அரசியல் புரட்சியில் தூக்கியெறிவதிலேயே தங்கியிருக்கின்றது. சோவியத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர கிளர்ச்சியினால் அதிகாரத்துவத்தை தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே சோவியத் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டவும் சோவியத் ஒன்றியத்தின் அழிவைத் தடுக்கவும், முதலாளித்துவம் மீள் ஸ்தாபிதம் செய்யப்படுவதை தடுக்கவும் முடியும்.
நான்காம் அகிலத்தை உருவாக்குவதற்கு ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்த 1933ம் ஆண்டுக்கும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாடு நடந்த 1938ம் ஆண்டுக்கும் இடையிலான ஐந்து ஆண்டுகள் சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் மிகவும் துயர்நிறைந்தவை ஆகும். உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியின் மத்தியிலும் கூட, தொழிலாள வர்க்கம் தொடர்ச்சியாக பேரழிவுகரமான தோல்வியை சந்தித்தது. தோல்விகளுக்கான காரணம் போராடுவதற்கான விருப்பமின்மை அல்ல. மாறாக, 1933 க்கும் 1938 க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் வர்க்கப் போராட்டத்தில் ஒரு பெரும் எழுச்சியைக் கண்டன. 1936 இல், புரட்சிகர பண்பு கொண்ட வேலைநிறுத்தங்களால் பிரான்ஸ் கொந்தளித்துக் கொண்டிருந்தது. மே மற்றும் ஜூன் மாதங்களில், கிட்டத்தட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்குபற்றிய 12,000 வேலை நிறுத்தங்களுக்கும் அதிகமாக இடம்பெற்றன. இவை தொழில்துறைகளின் ஒவ்வொரு பிரிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. புரட்சிகர சிந்தனை கொண்ட தொழிலாளர்களால் ஆலைகளை கைப்பற்றப்பட்டமை மிகவும் போர்க்குணமிக்க நடவடிக்கைகளாகும். 1936 ஜூலையில், பிரான்சிஸ் பிராங்கோவின் தலைமையிலான பாசிச-சிந்தனையுள்ள தளபதிகள் ஒரு இராணுவச் சதியை செய்ய முயற்சித்த போது, ஸ்பானிய மற்றும் கட்டலான் தொழிலாளர்கள், சக்திவாய்ந்த எழுச்சியில் அதை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் பிரான்சிலும் ஸ்பெயினிலும், தொழிலாள வர்க்கத்தின் ஆரம்ப வெற்றிகள் விரக்தியிலும் தோல்வியிலும் முடிவடைந்தன. ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் முதலாளித்துவ வர்க்கத்துடன் கூட்டு சேர்ந்த "மக்கள் முன்னணி" அரசியலே இந்த தோல்விக்கான அரசியல் கருவியாக இருந்தது. இந்த கூட்டணியின் வெளிப்படையான அடித்தளம், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிலாசைகளுக்கு எதிராக முதலாளித்துவ சொத்துக்களை பாதுகாப்பதாகும். பாசிசத்திற்கு எதிரான போராட்டமானது முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பதைக் காட்டிலும் வேறு எதுவும் இல்லை என்று ஸ்ராலினிஸ்டுகள் வலியுறுத்தினர். தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ வர்க்கத்தின் தாராளவாத ஜனநாயக பிரிவுகளுடன் ஒரு கூட்டணியை அமைப்பதன் மூலமே பாசிசத்தை எதிர்த்து நிற்க முடியும் என்று ஸ்ராலினிஸ்டுகள் வலியுறுத்தினர். சோசலிச வேலைத் திட்டமானது ஜனநாயக முதலாளித்துவத்தை அந்நியப்படுத்தி, அவர்களை பாசிஸ்ட்டுகளின் முகாமுக்கு கொண்டுசெல்லும் என்பதால் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதையும் அதன் அடிப்படையில் போராடுவதையும் அனுமதிக்க முடியாது என ஸ்ராலினிஸ்டுகள் கூறினர்.
மக்கள் முன்னணியின் எதிர்ப்-புரட்சிகர உள்ளடக்கம் ஸ்பெயினில் அதன் முழுமையான வெளிப்பாட்டைக் கண்டது. அங்கு சோவியத் இரகசிய போலிசான GPU இன் முகவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வந்த ஸ்ராலினிச கட்சி, பிராங்கோவை தோற்கடிக்க ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் அணிதிரட்ட வேண்டும் என வலியுறுத்தியவர்களை வேட்டையாடி கொன்று தள்ளியது. ஸ்ராலினிஸ்டுகள் பிராங்கோவின் வெற்றியை உறுதி செய்தனர்.
ஸ்ராலின், சோவியத் யூனியனின் எல்லைகளுக்கு அப்பாலும் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுப்பதை முன்னெடுத்த நிலையில், 1936 மற்றும் 1938 க்கு இடையில் மாஸ்கோவில் நடந்த மூன்று பகிரங்க விசாரணைகளால் சோவியத் யூனியனுக்குள் முன்னெடுக்கப்பட்ட ஸ்ராலினின் "பெரும் பயங்கரம்", மார்க்சிச புரட்சியாளர்களின் முழு தலைமுறையினரையும் உடல் ரீதியில் அழிப்பதை இலக்காகக் கொண்டிருந்தது.
இத்தகைய நிலைமைகளின் கீழேயே ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். புதிய அகிலத்தை உருவாக்குவதற்கான அவசியத்தை அவர் வலியுறுத்தியபோது, அதை எதிர்த்தவர்கள் எல்லாம், ஸ்ராலினிச ஆட்சிகள் மீதான அவரது கண்டனம் மிகவும் சமரசமற்றதும் மற்றும் மிகவும் கடுமையானதும் என்று கூறினர். இன்னொரு விமர்சனம், ட்ரொட்ஸ்கிச இயக்கமானது ஒரு புதிய அகிலத்தை ஸ்தாபிப்பதற்கு மிகச் சிறியதாக உள்ளது, என்றும், ஒரு அகிலத்தை சர்வதேச அளவிலான "பெரும் நிகழ்வுகளின்" அடித்தளத்தில் மட்டுமே ஸ்தாபிக்க முடியும் என்றும் கூறியது.
நான்காம் அகிலத்தின் ஸ்தாபகமானது உண்மையில் "பெரும் நிகழ்வுகளையே" அடிப்படையாகக் கொண்டது என்று ட்ரொட்ஸ்கி பதிலளித்தார்: வரலாற்றில் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய தோல்விகளே அவை. இந்த தோல்விகள், பழைய அமைப்புகளின் துரோகம் மற்றும் அரசியல் பிரயோசனமற்ற தன்மையை அம்பலப்படுத்தியுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, முக்கிய பிரச்சினை கட்சியின் அளவு அல்ல, மாறாக அதன் வேலைத்திட்டத்தின் தரமே ஆகும். அதாவது நான்காம் அகிலம் அபிவிருத்தி செய்த வேலைத்திட்டமானது, வரலாற்று சகாப்தத்தின் இயல்பு மீதான சரியான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டதா மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பணிகள் பற்றி சரியாக சூத்திரப்படுத்தி உள்ளதா என்பதைக் கொண்டே அதன் தரம் மதிப்பிடப்பட வேண்டும்.
நிச்சயமாக, அளவு பற்றிய பிரச்சினை முக்கியம் அல்ல. ஒரு சிலரின் சதித்திட்டத்தின் மூலம் முதலாளித்துவத்தை தூக்கியெறிய முடியாது. சோசலிசப் புரட்சிக்கு, பரந்துபட்ட மக்கள் நனவுபூர்வமாக பங்கேற்பது அவசியமாகும். ஆனால், கட்சியின் வேலைத் திட்டமானது, புறநிலை அவசியத்தை அடையாளம் கண்டு அதை தெளிவாக வெளிப்படுத்தினால் மட்டுமே, தத்துவமானது வரலாற்று ரீதியில் முற்போக்கான மற்றும் புரட்சிகர உணர்வுடன் ஒரு சடத்துவரீதியான சக்தியாக மாறமுடியும் என்பது, மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை ஆகும். புறநிலை நிலைமைகள் பற்றிய தவறான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட, வரலாற்று சகாப்தத்தின் கோரிக்கைகளுக்கு ஒத்துப் போகாத வேலைத்திட்டத்தை கொண்ட கட்சிகள், அவற்றின் குறுகிகால உயிர்வாழும் வெற்றிகள் என்னவாக இருந்தபோதிலும், அவை அரசியல் பேரழிவின் துன்பத்தை எதிர்கொள்ளும்.
நான்காம் அகிலத்தின் நீடித்த நிலைத்திருப்பு
அப்படியென்றால், நான்காம் அகிலத்தின் வரலாற்று நிலைத்திருப்பிற்கு காரணம் என்ன? அனைத்துக்கும் மேலாக, நான்காம் அகிலத்தின் பகுப்பாய்வும் வேலைத்திட்டமும் இந்த சகாப்தத்தின் புறநிலை குணாம்சத்துடன் பொருந்தி இருக்கின்றது. நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணம், தற்போதைய வரலாற்று சகாப்தத்தை முதலாளித்துவத்தின் மரண ஓலமாக வரையறுத்தது. ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:
பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொருளாதார முன்நிபந்தனை, ஏற்கனவே பொதுவில் முதலாளித்துவத்தின் கீழ் அடையக் கூடிய மிக உயர்ந்த முதிர்வடைந்த நிலையை அடைந்துள்ளது. மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகள் தேக்கநிலையில் உள்ளன. ஏற்கனவே புதிய கண்டுபிடிப்புகளும் மேம்படுத்தல்களும் சடத்துவ செழுமைநிலையை உயர்த்தத் தவறிவிட்டன. முழு முதலாளித்துவ அமைப்புமுறையினதும் சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ் காணப்படும் அக்காலகட்டத்திற்கான பொருளாதார நெருக்கடி, மக்களின் மீது மிக அதிகமான இழப்புக்கள் மற்றும் துன்பங்களை சுமத்துகின்றன. அதிகரித்துவரும் வேலையின்மையின் விளைவு, அரசுகளின் நிதிநெருக்கடியை மேலும்மோசமடைய செய்கின்றது. பாசிச ஆட்சிகளைப் போலவே ஜனநாயக ஆட்சிகளும் ஒரு திவால்நிலையில் இருந்து இன்னொரு திவால்நிலைக்கு மாறிக்கொண்டிருக்கின்றன.
ஒரு பேரழிவு பற்றிய ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் யதார்த்தமாகின. நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்திற்குப் பின்னர் சரியாக ஒரு ஆண்டுக்குள் வெடித்த இரண்டாம் உலகப் போர், 60 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்டது. ஸ்ராலினிசக் கட்சிகளின் இன்றியமையாத உதவியுடன், போருக்குப் பின் உலகம் முழுவதும் பரவிய எழுச்சிகளில் இருந்து, அரசியல் சமரசங்கள், தந்திரோபாய விட்டுக்கொடுப்புகள் மற்றும் முற்றிலும் தேவையானபோது ஈவிரக்கமற்ற அடக்குமுறையின் ஒரு கூட்டு மூலமும், முதலாளித்துவ வர்க்கத்தால் உயிர்தப்ப முடிந்தது. பல தசாப்தங்களாக, போரின் இடிபாடுகளில் இருந்து தன்னை மீளமைத்துக்கொண்ட முதலாளித்துவம், கணிசமான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தது. ஆனால், சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சக்திகளின் தனியார் உடைமைக்கும் இடையிலான, மற்றும் உலகப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த தன்மைக்கும் தேசிய-அரச அமைப்புமுறைக்கும் இடையிலான, முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன.
கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்டதை, உலகம் முழுவதும் ஆளும் உயரடுக்குகளும் அவற்றின் ஊடக பிரச்சாரகர்களும் மற்றும் அதற்கு வக்காலத்து வாங்கும் கல்விமான்களும், சோசலிசத்தின் மீதான முதலாளித்துவத்தின் வெற்றியாக பாராட்டினர். 1990 களின் வெற்றிக் கொண்டாட்டமாது, ஸ்ராலினிச ஆட்சிகள் சோசலிச ஆட்சிகளாக இருந்தன, முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் எப்படியோ கடக்கப்பட்டுவிட்டன, என்ற இரண்டு பொய்களை அடிப்படையாக கொண்டிருந்தது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளின் அனுபவங்களின் வெளிச்சத்தில் பார்த்தால், முதலாளித்துவத்தின் வெற்றி பற்றிய கொண்டாட்டங்கள் இன்று குறைந்தபட்சமேனும் காலத்திற்கு முந்திய ஒன்று என்பது தெளிவாகிறது. ஸ்ராலினிச ஆட்சிகள் கலைக்கப்பட்ட பின்னர், முதலாளித்துவம் மனித இனத்திற்கு சமாதானத்தையும், செழிப்பையும் உலகளாவிய ஜனநாயகத்தையும் வழங்கும் என ஆளும் உயரடுக்குகள் அறிவித்தன.
யதார்த்தம் வேறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 1991இல் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் யூகோஸ்லாவியாவில் உள்நாட்டுப் போரில் இருந்து தொடங்கி, முடிவில்லா இராணுவ மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. 2001 செப்டம்பர் 11இல் அமெரிக்கா மீதான தாக்குதலுக்குப் பின்னர், “பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது அதன் பதினெட்டாவது ஆண்டை கடக்கிறது. அதற்கு முடிவு கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியவில்லை. மாறாக பூகோள அரசியல் போட்டிகள் மற்றும் முரண்பாடுகள் தீவிரமடைவதானது தவிர்க்கமுடியாமல் மூன்றாம் உலகப் போரின் வெடிப்புக்கு வழிவகுக்கிறது. அமெரிக்காவானது பிரதான உலக சக்தி என்ற தனது நிலையை சீனா பதீலிடு செய்ய அனுமதிக்காது என்பதை தெளிவாக்கியுள்ளது. அது சீனாவின் எழுச்சியை தடுக்க இராணுவ சக்தியைப் பயன்படுத்தவும் தயாராக உள்ளது. அதே நேரம், அமெரிக்கா ரஷ்யாவுடன் ஒரு மோதல் போக்கில் உள்ளது. வாஷிங்டன், யூரேசியா மற்றும் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் தனது திட்டங்களுக்கு ரஷ்யாவை ஒரு தடையாக கருதுகிறது. கடந்த வாரம் தான், எதிர்த் தாக்குதல் ஆயுதங்களை ரஷ்யா சட்ட விரோதமாக நிலைநிறுத்தி இருப்பதாக கூறிக்கொண்டு, ரஷ்யாவிற்கு எதிராக முன்கூட்டிய தாக்குதலை நடத்த தயாராவதாக நேட்டோவுக்கான அமெரிக்க தூதுவர் அறிவித்துள்ளார். அத்தகைய ஒரு வெளிப்படையான அச்சுறுத்தல், இரு பெரும் அணு ஆயுதம் கொண்ட சக்திகளுக்கு இடையிலான மோதலின் ஒரு ஆபத்தான விரிவாக்கமாகும். உலகம் ஒரு அணுவாயுத யுத்தத்தின் விளிம்பிற்கு நகர்வதுடன் அது காவுகொள்ளப்போகும் உயிர்கள் எண்ணிலடங்காதவையாக இருக்கும்.
அதிகரித்து வரும் சர்வதேச வன்முறையின் பின்னணியில், ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பாக அமெரிக்கா உட்பட ஏனைய முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் சமூக பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடியும் சமூக சமத்துவமின்மையின் அளவு அதிகரித்துக் காணப்படுவதும் இந்த பதட்டங்களின் அடிப்படை காரணங்களாக உள்ளன. ஒரு டசினுக்கும் குறைவான பில்லியனர்கள் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்களின் செல்வத்தை தன்னகத்தே வைத்திருக்கிறார்கள். அமசன் உரிமையாளரான ஜெஃப் பெஸோஸ், 150 பில்லியன் டாலர் மதிப்பிலான தனிப்பட்ட சொத்துக்களை வைத்துள்ளார். ஒரு மணி நேரத்திற்குள், அவரது சொத்துக்களுக்கு சேர்க்கப்படும் மில்லியன்கள், ஒரு சராசரி தொழிலாளி வாழ்நாள் முழுவதும் பெறும் மொத்த தொகையை விட கணிசமான மடங்கு அதிகமாகும்.
சமூக சமத்துவமின்மையும் ஜனநாயகத்தின் பொறிவும்
சமூக சமத்துவமின்மையானது தவிர்க்க முடியாதவாறு சமூக மற்றும் வர்க்க மோதல்களை உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூக பதட்டம் மிகவும் தீவிரமாகும் போது, ஜனநாயக வழிமுறைகள் பொறிந்து விழத் தொடங்குகின்றன. இதுவே இப்போது உலகெங்கும் வளர்ந்து வரும் நிலைமை ஆகும். அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை, முதலாளித்துவ வர்க்கம் ஆட்சி செய்து வந்த நீண்டகாலமாக நிறுவப்பட்ட அதே ஜனநாயக அரசியல் கட்டமைப்புமுறையின் பொறிவின் அறிகுறியாகும். பாசிசம் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் அபாயத்தை பற்றி பரந்தளவில் பேசப்படுகிறது.
ஜனநாயகம் எப்படி மரணிக்கிறது (How Democracy Dies), என்ற நூலின் ஆசிரியர்களான ஸ்டீவன் லெவிட்ஸ்கியும் டானியல் சிப்லாட்டும் வேதனையுடன் பின்வருமாறு எழுதுகின்றார்கள்:
நமது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதா? இப்படி ஒரு கேள்வி கேட்கப்படும் என்று நாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை … கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசியல்வாதிகள் அமெரிக்காவில் முன்பில்லாத விஷயங்களை பற்றி பேசுவதையும் செய்வதையும் நாங்கள் கவனித்திருக்கிறோம் — ஆனால், ஏனைய நாடுகளிலும் ஜனநாயக நெருக்கடியின் முன்னறிகுறியை நாம் அடையாளம் கண்டுள்ளோம். பல அமெரிக்கர்களைப் போலவே, நாங்கள் பயப்படுகிறோம், எவ்வாறாயினும், உண்மையில் நிலைமை இங்கே அந்தளவு மோசமாக இருக்க முடியாது என்று நமக்கு நாமே உறுதிப்படுத்த முயல்கிறோம்.
எனினும், நாம் கவலைப்படுகிறோம். ... உலகின் பழமையான மற்றும் மிகவும் வெற்றிகரமான ஜனநாயக நாடுகளில் ஒன்றின் வீழ்ச்சி மற்றும் சீரழிவினோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?
முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மடலைன் ஆல்பிரைட், பாசிசம்: ஒரு எச்சரிக்கை, (Fascism: A Warning) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார், இதில் அமெரிக்காவில் அதிதீவிர வலதுசாரிகளின் மீள்எழுச்சிக்கு அவர் பின்வரும் எளிமையான விளக்கத்தை அளிக்கிறார்:
"பாசிசமானது கடந்த காலத்தில் இருந்த ஆறிப்போன புண் என்று நாங்கள் நினைத்தோமேயானால், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை இருத்தியமை, கட்டுத்துணியை அகற்றி புண்ணின் மேற்பரப்பை சுரண்டி மீண்டும் புண்ணாக்குவது போன்ற செயலாகும்.
ஆனால் இந்த அரசியல் கண்டறிதல் என்பது, சர்வாதிபத்தியத்தின் மீள்எழுச்சி ஒரு உலக அளவிலான போக்கு என்பதை புறக்கணிக்கிறது. மக்கள் எதிர் ஜனநாயம் (The People Versus Democracy) என்ற நூலில், யாஸ்ஷா மூன்க் என்பவர், பாசிச இயக்கங்களின் புத்துயிர்ப்பு பற்றி உலகளாவிய அளவில் கவனம் செலுத்துகிறார்:
உதாரணமாக, டொனால்ட் ட்ரம்ப்பை ஒரு தனித்துவமான அமெரிக்க நிகழ்வுப்போக்காக பார்ப்பது ஏமாற்றுவதாகவே இருக்கும். ... ஆனால் இன்னும், ட்ரம்ப் முன்வைக்கும் அச்சுறுத்தலின் உண்மையான தன்மை மிக பரந்த உள்ளடக்கத்திலேயே புரிந்து கொள்ளப்பட முடியும்: ஏதென்ஸில் இருந்து அங்காரா, சிட்னி முதல் ஸ்டாக்ஹோம், மற்றும் வார்சோவில் இருந்து வெலிங்டன் வரை, ஒவ்வொரு பிரதான ஜனநாயகத்திலும், அதிதீவிர வலதுசாரி ஜனரஞ்சகவாதிகள் வலிமை பெற்றுவதை நாம் அவதானிக்க வேண்டும். இந்த எல்லா நாடுகளிலும் தலை தூக்கி வரும் ஜனரஞ்சகவாதிகளுக்கு இடையில் தெளிவான வேறுபாடுகள் இருந்த போதும், அவற்றின் பொதுவான தன்மைகள் ஆழமானவைகளாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் அரசியல் அமைப்புமுறைக்கு வியக்கத்தக்கவாறு ஒத்த வழிகளில் ஆபத்தை ஏற்படுத்துவனவாக உள்ளன.
சமீபத்தில் வெளியான மற்றொரு புத்தகம், பாசிசம் எப்படி செயற்படுகிறது (How Fascism Works) என்பதாகும். இதை எழுதிய ஜேசன் ஸ்ரான்லி, வலதுசாரி அதிதீவிரவாதத்தின் வளர்ச்சியின் பூகோள தன்மையில் கவனம் செலுத்துகிறார்:
சமீபத்திய ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சில வகையான அதிதீவிர வலதுசாரி தேசியவாதத்தால் மேலாதிக்கம் செலுத்தப்படுகின்றன; இந்த பட்டியலில் ரஷ்யா, போலந்து, இந்தியா, துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும் ... ஒரு நபர் அதிகாரத்துவ தலைவராக ஒரு நாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் சில வகையான இன, மத, கலாச்சாரத்தின் அதீததேசியவாதத்திற்கு 'பாசிசம்' என்ற முத்திரையை நான் தேர்ந்தெடுக்கின்றேன்.
பாசிச எழுச்சியின் மிக ஆபத்தான வெளிப்பாடானது, ஜேர்மனியில் சமீபகால அபிவிருத்திகளால் காணக்கூடியதாக இருக்கின்றது. அங்கு மூன்றாம் குடியரசும் (Third Reich) மற்றும் இரண்டாம் உலகப் போரும் முடிவடைந்து எழுபது ஆண்டுகளுக்கும் பின்னர், நாஜிகள் மீண்டும் ஒரு தீவிர அரசியல் சக்தியாக தலை தூக்கியுள்ளனர். நாஜி ஆர்ப்பாட்டக்காரர்கள், இனவெறி மற்றும் யூதவிரோத கோஷங்களை எழுப்பிக்கொண்டு, கெம்னிட்ஸ் மற்றும் டோர்ட்முண்ட் தெருக்களில் ஊர்வலம் வந்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களின் முக்கியத்துவம் இருப்பது குறிப்பாக அவற்றின் அளவில் அல்ல. நாஜிகள் இன்னமும் சிறிய அரசியல் சக்தியாகவே உள்ளனர், மேலும் அவர்கள் ஜேர்மனிக்குள் வெறுக்கப்படுகிறார்கள். ஆனால் நாஜிகள் ஜேர்மன் அரசின் உயர்ந்த மட்டத்தில் சக்திவாய்ந்த ஆதரவை பெற்றுள்ளனர். கெம்னிட்ஸில் நடந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹோஃவர், நாஜி கும்பலுக்கான அவரது அன்பான ஆதரவை வெளிப்படுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த வெளிநாட்டவர்களை அந்த கும்பல் அச்சுறுத்தியதை, அரசியலமைப்பின் பாதுகாப்புக்கான அமைச்சகத்தின் தலைவரான ஹான்ஸ் ஜோர்க் மாஸென், மறுத்தார். அதற்கான ஒளிப்பதிவு ஆதாரம் இருந்த போதிலும் அவர் இந்த மறுப்பை வெளியிட்டார்.
மூன்றாம் குடியரசின் முழு பயங்கரத்தையும் அனுபவித்த நாடான ஜேர்மனியில் நாஜிகளின் புத்துயிர்ப்பிற்கு எது காரணமாகின்றது? நாடெங்கிலும் ஹிட்லரிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுடைய நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் எண்ணற்ற நினைவுச்சின்னங்கள் உள்ளன. ஆனால், குணப்படுத்தப்படாத தொற்று நோயைப் போன்று, பழைய அறிகுறிகள் மீண்டும் தங்களை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. பாசிசத்தைப் பற்றிய மிகச்சிறந்த பகுப்பாய்வை செய்த ட்ரொட்ஸ்கி, இதற்கான அரசியல் தோற்றுவாய், முதலாளித்துவத்தின் முரண்பாடுகளிலும், பூகோள பொருளாதார நெருக்கடியிலுமே உள்ளது என்றார். பூகோள பொருளாதார நெருக்கடியின் அழுத்தங்கள், சர்வதேச புவிசார் பதட்டங்கள் மற்றும் உள்நாட்டு சமூக மோதல்களின் அழுத்தத்தின் கீழ், முதலாளித்துவ ஜனநாயகம் பொறிந்து போவதை தடுக்க முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
முதலாளித்துவத்தின் அடிப்படையில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க மற்றும் மீளமைக்க முடியாது. மக்கள் முன்னணி என்ற துரோக அரசியலை கண்டனம் செய்து 1930ல் ட்ரொட்ஸ்கி விடுத்த எச்சரிக்கை, மிகப் பெருமளவில் சமகால பொருத்தத்தை கொண்டுள்ளது. இந்த மக்கள் முன்னணி கொள்கை, "தாராளவாத" மற்றும் "முற்போக்கான" முதலாளித்துவக் கட்சிகள் என அழைக்கப்படுவனவற்றுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்து, அதன் மூலம் பாசிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. 1936ல் ட்ரொட்ஸ்கி இப்படி எழுதினார்:
தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பாராளுமன்ற மாயைக்குள் அடக்குவதன் மூலம், போராடுவதற்கான அவர்களது விருப்பத்தை முடக்குவதன் மூலம், மக்கள் முன்னணியானது பாசிசத்தின் வெற்றிக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குகிறது. முதலாளித்துவத்துடன் கூட்டணி அமைக்கும் கொள்கையினால், புதிய கொடுமைகள், பலிகொடுத்தல்கள் மற்றும் பல ஆண்டுகால பாசிச பயங்கரத்துடன் பாட்டாளி வர்க்கம் விலை கொடுக்கவேண்டியிருக்கும்.
ட்ரொட்ஸ்கியின் அனைத்து எச்சரிக்கைகளும் யதார்த்தமாகியுள்ளன. "மக்கள் முன்னணி" என்பது 1939க்கும் 1945க்கும் இடையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவுகொண்ட பேரழிவுகளில் முடிவடைந்தது. இன்னமும், ட்ரொட்ஸ்கிசத்தின் எதிரிகள் —அதாவது வரலாற்றின் படிப்பினைகளை நிராகரிக்கும் போலி-இடது அரசியல் மோசடிக்காரர்கள்— இன்று 1930கள் மற்றும் 1940களின் பேரழிவுகளுக்கு பொறுப்பான அதே கொள்கைகளுக்காக வக்காலத்து வாங்குகின்றனர். தற்காலத்திய போலி-இடது தத்துவவாதிகளில் மிகவும் பிரபலமான பேராசிரியை சாந்தால் மூஃப் (Chantal Mouffe), நவ-ஸ்ராலினிச மக்கள் முன்னணி வர்க்க ஒத்துழைப்பின் சமீபத்திய வடிவமாக, ஒரு "இடது ஜனரஞ்சகவாதத்தை" முன்வைக்கின்றார். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட "அத்தியாவசிய" இடது அரசியலை நிராகரிக்கவும், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை நிராகரிக்கவும் வெளிப்படையாக அழைப்பு விடுக்கும் மூஃப், "தாராளவாத ஜனநாயக ஆட்சியுடன் ’புரட்சிகரமான’ முறையில் முறித்துக்கொள்ள வேண்டும்” என இடது ஜனரஞ்சகவாதம் வலியுறுத்தவில்லை எனக் கூறுகிறார்.
"தாராளவாத-ஜனநாயக அமைப்புகளை அழிக்காமலேயே தற்போதைய மேலாதிக்க ஒழுங்கை மாற்றுவது சாத்தியமாகும்" என்று அவர் எழுதுகிறார். சுரண்டல், அடக்குமுறை மற்றும் சமத்துவமின்மையின் கொடூரமானதும் பாரியளவில் ஆயுதம்தரித்த பாதுகாவலனான முதலாளித்துவ-ஏகாதிபத்திய அரசின் மீது கைவைக்க கூடாது. முதலாளித்துவ அரசையும், முதலாளித்துவ செல்வந்த தன்னலக்குழுவையும் உற்பத்தி மற்றும் நிதியியல் வழிமுறையின் தனியார் சொத்துடைமைகளையும் அகற்றுவது போன்ற புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்திற்கு எதிராக பேராசிரியை மூஃப் முன்வைக்கும் மாற்றீடு என்ன? அவர் எழுதியதாவது: "இடது ஜனரஞ்சக அணுகுமுறையானது, வலதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு வேறுபட்ட சொற்பதங்களை மற்றும் ‘வேறு ஒரு மொழியை’ பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்"! அரசியல் திவால்நிலையின் இதைவிட மிகவும் தெளிவான வெளிப்பாட்டை கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டாமல் பாசிச அபாயத்தை எதிர்க்க முடியும் என்று பேராசிரியை மூஃப் எம்மை நம்பவைக்கின்றார். சீர்திருத்தவாதத்தை ஒரு புதிய சொற்பதத்துடன் அலங்கரிப்பது அவர்களுக்கு அவசியமாகியுள்ளது.
புரட்சிகர தலைமைத்துவத்தின் நெருக்கடி
முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தத்திற்கு அதுவே முன்வைக்கும் அரசியல் மாற்றீடு, ஒன்று பாசிச காட்டுமிராண்டித்தனம் அல்லது சோசலிசப் புரட்சியாகும். இதில் ஏதாவதொன்றின் வெற்றியே மனிதகுலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். பாசிசத்தின் வெற்றி மனித நாகரீகத்தின் மரணத்தை குறிக்கும். சோசலிசப் புரட்சியின் வெற்றியானது மனித நாகரீகத்தின் புத்துயிர்ப்பும் மலர்ச்சியும் ஒரு புதிய மட்டத்தில் தோன்றுவதை சாத்தியமாக்கும். இதுவே நம் முன்னுள்ள தெரிவு.
இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் புரட்சிகரப் போராட்டங்களின் ஏற்றத்தாழ்வுகளை பற்றிக் கண்டறிந்து, 1917 அக்டோபரின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து வந்த பல தோல்விகளுக்கான காரணத்தை விளக்க முற்பட்ட ட்ரொட்ஸ்கி, "புரட்சிகர தலைமையின் நெருக்கடியே" சகாப்தத்தின் அடிப்படை பிரச்சனை என்று அடையாளம் கண்டார். சோசலிசத்தின் வெற்றிக்கான புறநிலை நிலைமைகள் இருந்தன. ஆனால் அகநிலை காரணியான தலைமைத்துவம் என்ற தீர்க்கப்படாத பிரச்சினையே எஞ்சியுள்ளது. இதுவே நமது சகாப்தத்தின் அடிப்படை பணியாகும்.
ட்ரொட்ஸ்கிசத்தின் எதிர்ப்பாளர்கள், குறிப்பாக எண்ணற்ற குட்டி முதலாளித்துவ போலி-இடது அரசியலின் பிரதிநிதிகளிடையே உள்ளவர்கள், நான்காம் அகிலத்தை "குறுங்குழுவாதிகள்" என்று தாக்குவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். குட்டி முதலாளித்துவ போலி-இடதுகளைப் போல், ஆளும் வர்க்கத்துடன் தொடர்புகளை வைத்திருக்க அனைத்துலகக் குழு மறுப்பதையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
கோட்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் தம்முடன் மில்லியன் கணக்கானவர்களை சேர்க்க முடியவில்லை என்ற உண்மையை நமது எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "நான்காம் அகிலம் ட்ரொட்ஸ்கியால் பிரகடனப்படுத்தப்பட்டதே அன்றி, அது ஒருபோதும் கட்டியெழுப்பப்படவில்லை" என்பது எமது எதிரிகளிடையே பிரபலமான ஒரு கூற்று ஆகும். இந்த கருத்தின் மூலம் அவர்கள் கடந்த எண்பது ஆண்டுகளில் வர்க்கப் போராட்டத்தின் முழு வரலாற்றிலிருந்து நான்காம் அகிலத்தின் பரிணாமத்தை பிரிக்கின்றனர். ஸ்ராலினிஸ்டுகள், மாவோவாதிகள், முதலாளித்துவ தேசியவாதிகள், தொழிலாளர் அதிகாரத்துவங்கள் போன்ற, போலி-இடதுகளால் ஆதரிக்கப்படும் கட்சிகளும் அமைப்புக்களும், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீது அவதூறு சுமத்தி, சிறையில் அடைத்து மற்றும் கொலை செய்வதன் மூலம் நான்காம் அகிலத்தின் அபிவிருத்தியை தடுக்க முயற்சித்ததை அவர்கள் மறந்துவிட விரும்புகின்றனர்.
நமது எதிரிகள் நான்காம் அகிலத்திற்கு ஒரு மாற்றீடாக எதை முன்வைக்கின்றனர்? அவர்கள் கடந்த எண்பது, நாற்பது அல்லது இருபது ஆண்டுகள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை நினைவுகூர முயன்றால், எந்த அரசியல் சாதனைகளை அவர்களால் பெருமையுடன் சுட்டிக்காட்ட முடியும்? ஸ்ராலினிஸ்டுகளால் சோவியத் ஒன்றியத்தின் துகள்களையும் ரஷ்யாவின் பொருளாதார சீரழிவையும் சுட்டிக்காட்ட முடியும். மாவோவாதிகளால் சீனாவை பூகோள முதலாளித்துவத்தின் ஒரு மைய புள்ளியாகவும் டசின் கணக்கான புதிய பில்லியனர்களின் இருப்பிடமாகவும் மாற்றியதையே சுட்டிக்காட்ட முடியும். காஸ்ட்ரோவாதிகளால் கியூபா மீண்டும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் ஒரு புகலிடமாக எப்படி மாறியுள்ளது என்பதையும், உள்நாட்டுப் பொருளாதாரம் உயிர்பிழைக்க அமெரிக்க டாலர்கள் அவசியமாகி இருப்பதையும் சுட்டிக்காட்ட முடியும். சமூக ஜனநாயகக் கட்சிகள் முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய வலதுசாரிக் கட்சிகளிடமிருந்து ஏறத்தாழ வேறுபட்டவை அல்ல. சமூக ஜனநாயக அமைப்புகள் சோசலிசத்திற்கான போராட்டத்தின் கருவிகளாக மாற்றப்பட முடியாது என்பதை நிரூபிக்க பிரிட்டனில் கோர்பின் ஒரு சிறந்த உதாரணம். உண்மையில், அவர்களை இனி ஓரளவான சமூக சீர்திருத்த கருவிகளாகவும் கூட மாற்ற முடியாது. ட்ரொட்ஸ்கி பயன்படுத்திய சொற்றொடரை ஞாபகப்படுத்தினால், இந்த அமைப்புகளுக்கு இடையில் பொதுவாக உள்ள விடயம், அவை மேலும் மேலும் அழுகிப்போய்க்கொண்டிருக்கின்றன.
தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமை நெருக்கடியை தீர்க்க ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தத்தில் முன்வைக்கப்படும் அரசியல் பணிகளை எளிதில் பூர்த்திசெய்ய முடியாது என்பதை அவர் புரிந்து கொண்டார். ஸ்ராலினிச ஆட்சியின் ஒரு முகவரால் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, 1940 மே மாதம் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:
நீண்டகால மரண ஓலத்தை அலட்சியம் செய்தால், முதலாளித்துவ உலகிற்கு மாற்று வழி இல்லாமல் போகும். பல ஆண்டு கால, அல்லது பல தசாப்த கால போர், எழுச்சிகள், மோதல் தவிர்ப்புகள், புதிய போர்கள், புதிய எழுச்சிகள் ஆகியவற்றை எதிர்கொள்ள நீண்ட தயாரிப்புகள் அவசியமாக இருக்கும். ஒரு இளம் புரட்சிகர கட்சி இந்த முன்னோக்கை அடித்தளமாகக் கொள்ள வேண்டும்.
ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்ததைப்போல மனித இனம் "பல தசாப்த கால போர், எழுச்சிகள், மோதல்கள், புதிய போர்கள் மற்றும் புதிய எழுச்சிகளைக்" கடந்து வந்துள்ளது. மிகவும் சாதகமற்ற சூழ்நிலைமைகளின் கீழ் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினராக இருந்து மார்க்சிசத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க, அனைத்துலகக் குழுவின் தலைமையில் நான்காம் அகிலம் மிகப்பரந்த அனுபவத்தை திரட்டிக்கொண்டுள்ளது. நிகழ்வுகள் அதன் வரலாற்று முன்னோக்கை நிரூபித்துள்ளன. தற்போதைய இந்த மிக முதிர்வடைந்த கட்டத்தில், முதலாளித்துவத்தின் மரண ஓலம், சோசலிசப் புரட்சியின் பரந்த உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதற்கான நிலைமைகளை உருவாகியுள்ளன.