Print Version|Feedback
The struggle for socialism and the importance of history: David North interviewed on Radio Sri Lanka
சோசலிசத்திற்கான போராட்டமும் வரலாற்றின் முக்கியத்துவமும்: டேவிட் நோர்த் இலங்கை வானொலி நேர்காணலில் கலந்துகொள்கின்றார்
12 October 2018
உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் இலங்கை வானொலியின் ஆங்கில மொழி நிகழ்ச்சியான “Coffee with Dan” இல் அக்டோபர் மாதம் 8 ஆம் திகதி 30 நிமிடங்கள் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த வானொலி சேவையானது அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சேவைகளில் ஒன்றாகும்.
“Coffee with Dan” நிகழ்ச்சியானது பிரபல சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான டாக்டர். டான் மாலிக்க குணசேகரவால் நடாத்தப்படுவதாகும். குணசேகரவின் ஆர்வமான கேள்விகள் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி, அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகத்தின் குணாம்சம், சீனாவின் பொருளாதார எழுச்சியின் முக்கியத்துவம், ஏகாதிபத்திய போரின் அபாயம் மற்றும் பல தொழிலாளர்களும் மாணவர்களும் சோசலிசத்தில் ஆர்வமுற்று நான்காம் அகிலத்தின் வரலாற்றை கற்க முன்வருவது போன்ற கேள்விகள் தொடர்பான கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தது.
“Coffee with Dan” நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரநாளும் காலை 8 மணி முதலாக இலங்கை வானொலியில் தீவு முழுவதிலும் 97.4 மற்றும் 97.6 அலைவரிசையில் கேட்கலாம். நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ரேடியோ ஸ்ரீலங்காவின் “Coffee with Dan” நேரம், டான் இனி உங்கள் வசம்.
“Coffee with Dan” நிகழ்ச்சியில் டேவிட் நோர்த்
Dan: காலை வணக்கம், “Coffee with Dan” நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறேன். இந்த காலை வேளையில் என்னுடன் இருப்பது திரு.டேவிட் நோர்த். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர். இன்னும் விரிவாக அவரைப் பற்றி கூறுவதற்கு முன்பாக, திரு.டேவிட் நோர்த் அவர்களை வரவேற்று அவருக்கு காலை வணக்கத்தை தெரிவிக்கிறேன்.
DN: இங்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி டான். என்னை அழைத்ததற்கு நன்றி.
Dan: டேவிட் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார், நான் குறிப்பிட்டதைப் போல அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராவார். இலங்கையில் சில முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருக்கிறார், அக்டோபர் 1 அன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் நான்காம் அகிலத்தின் 80வது ஆண்டு மற்றும் இலங்கையில் SEP என்று அழைக்கப்படும் சோசலிச சமத்துவக் கட்சியின் 50வது ஆண்டினை கொண்டாடும் விதமாய் நடைபெறவிருந்த பொதுக் கூட்டங்கள் குறித்து பேசினார்; சென்ற வார இறுதியில் பேராதனை பல்கலைக்கழகத்திலும் அக்டோபர் 7 அன்று புதிய நகர மண்டபத்திலும் அவர் உரையாற்றினார். டேவிட், முதலில், இந்த உலக சோசலிச வலைத் தளம் பற்றி சிறிது கூறுங்களேன்.
உலக சோசலிச வலைத் தளம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணையப் பத்திரிகை ஆகும். இது உலகளாவிய விதத்தில் சுமார் 15 மொழிகளில் வெளியிடப்படும் ஒரு வலைத் தளமாகும். உலகிலேயே மிகப் பரவலாக வாசிக்கப்படுகின்ற மார்க்சிச சோசலிச வலைத் தளம் இதுதான். வாரத்தில் ஆறு நாட்கள் பதிவிடப்படுகின்றன, இந்த ஆண்டு தொடர்ச்சியான வெளியீட்டின் இருபதாவது ஆண்டினை நாங்கள் கொண்டாடினோம். பல தரப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார, வரலாற்று, தத்துவார்த்த, கலாச்சார விடயங்களை பற்றி பிரசுரிக்கின்றது. உலகளாவிய அளவில் கணிசமான வாசகர்களை அது பெற்றுள்ளது என்றே நான் கருதுகிறேன்.
Dan: நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய காரணம் என்ன?
DN: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பிரிவான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி என்னை இலங்கைக்கு அழைத்திருந்தது. இலங்கையில் இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அதன் ஸ்தாபகத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. இலங்கையில் மார்க்சிசத்தின் ஒரு நீண்ட மற்றும் பெருமிதத்துக்குரிய வரலாறு இருப்பதை ட்ரொட்ஸ்கிஸ்டாக இருக்கும் எவரொருவரும் அறிவார். 1968 இல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அதன்பின் 1990களில் சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றமடைந்தது. சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் பொதுச் செயலரான விஜே டயஸும், நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதன் 80 ஆண்டு வரலாற்றுப் படிப்பினைகள் குறித்து விரிவுரையாற்றுவதற்கு இலங்கை வர எனக்கு அழைப்பு விடுத்தனர்.
Dan: நான்காம் அகிலத்தின் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றினைக் கற்பது தொழிலாள வர்க்கத்திற்கு அவசியம் என்று சோசலிச சமத்துவக் கட்சி அல்லது நீங்கள் அழைப்பதைப் போன்று SEP வலியுறுத்துகிறது. உங்களது விரிவுரைகளிலும் இதனை ஆழ்ந்த முக்கியத்துவமான ஒன்றாக நீங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். உலக ஒழுங்கை புரட்சிகரமாக மாற்றம் செய்வதற்கு உங்களது இயக்கத்தின் வரலாறு ஏன் மிக முக்கியமானதாக இருக்கிறது என்று விளக்க முடியுமா?
DN: ஆமாம், முதலில் கடந்த காலத்தை புரிந்து கொள்வதற்கு நமக்கு ஒரு வரலாற்றுரீதியான மேற்கோள் புள்ளி இருக்க வேண்டியிருக்கிறது; நாம் எப்படி இங்கே வந்துசேர்ந்தோம் என்று புரிந்துகொள்ள முடியாமல், நமது காலத்தின் பல சிக்கலான பிரச்சினைகளை நம்மால் எப்படி புரிந்து கொள்ள முடியும்? இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் மகத்தான பரிமாணங்களை கொண்டது. 1917 ரஷ்யப் புரட்சி, வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசு ஸ்தாபிக்கப்படுவதை கண்டது. ஆனால் சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபித்த அந்த புரட்சி, ஸ்ராலினின் கீழ் ஒரு பயங்கரமான சீரழிவைக் கண்டது. புரட்சி தனக்கு அடித்தளமாகக் கொண்டிருந்த அத்தனை அடிப்படைக் கோட்பாடுகள், எல்லாவற்றுக்கும் மேல் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம், உண்மையான சோசலிச ஜனநாயகத்திற்கும் சமத்துவத்திற்குமான போராட்டம், இந்த அத்தனையுமே ஸ்ராலினால் காட்டிக்கொடுக்கப்பட்டன. பேரழிவுகரமான பின்விளைவுகளைக் கொண்டிருந்த இது இறுதியில் சோவியத் ஒன்றியமே கலைக்கப்படுவதில் உச்சமடைந்தது. அதன்பின் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர் வரலாற்றின் முடிவிற்கு நாம் வந்துசேர்ந்து விட்டோம் என்றும் முதலாளித்துவம் இறுதிவெற்றி பெற்றுவிட்டிருந்தது என்றும் தாராளவாத ஜனநாயகம் தான் மனித வரலாற்றில் இறுதியான கட்டம் என்றும் கூறப்பட்டது. பிரான்சிஸ் புகுயாமா எழுதிய வரலாற்றின் முடிவு என்ற அந்த புத்தகம் மிகப் பிரசித்தமானது. அமைதி, செழுமை மற்றும் சமத்துவத்தின் ஒரு புதிய சகாப்தத்தில் நாம் நுழைந்து கொண்டிருந்ததாக நம் அனைவரிடமும் கூறப்பட்டது. நாம் காண்கின்றவாறாக கடந்த 30 ஆண்டுகளில் உலகம் கண்டிருக்கும் அபிவிருத்திக்கும் அதற்கும் சற்றும் தொடர்பில்லை. சமத்துவமின்மை, பொருளாதார நெருக்கடி, பாசிச அபாயத்தின் வளர்ச்சி மற்றும் போரின் உடனடி அச்சுறுத்தல் ஆகியவற்றின் ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான மோதலும், அத்துடன் உலகெங்கிலுமான நாடுகளில் நாம் காண்கின்ற இராணுவமயமாக்கத்தின் வளர்ச்சியும் மிகத் துயரகரமான மற்றும் பேரழிவுகொண்ட ஒரு திசையில் சென்று கொண்டிருக்கின்றன என்பதில் உலக அரசியலை உன்னிப்பாய் கவனிக்கும் எவரொருவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இப்போது இளைஞர்களின் பரந்த பிரிவினர் மத்தியிலும் பெருகும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மத்தியிலும் சோசலிசத்தின் மீது ஆர்வம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவிலும் கூட இது நடந்து வருகிறது என்பது முதலாளித்துவத்தின் கோட்டையாக மட்டுமே அமெரிக்காவை அறிந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியமாக இருக்கலாம்.
ஒரு மாற்றத்திற்கான உண்மையான விருப்பம் அங்கே இருக்கின்ற மட்டத்திற்கு நிலைமைகள் இருக்கின்றன, முதலாளித்துவம் மீண்டும் அசிங்கமானதொரு வார்த்தையாக ஆகிக் கொண்டிருக்கிறது. ஆகவே ஒரு மாற்றீடு தொடர்பாக மிகப்பெரும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் உடனடியாக எழுகின்ற பிரச்சினை என்னவென்றால், இளைய தலைமுறைக்கு, கூறப் போனால் இன்று அநேகம் பேருக்கு, சோசலிச இயக்கத்தின் வரலாறு குறித்து, சோசலிசத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்ற மாபெரும் போராட்டங்களைக் குறித்து, மிகக் குறைந்த அறிவே இருக்கிறது. சோசலிசம் குறித்த தெளிவு மிக மேலோட்டமானதாக இருக்கிறது. தொழிலாள வர்க்கம் கடந்து சென்ற மாபெரும் போராட்டங்கள் மற்றும் சோசலிச இயக்கத்தை உருவமைக்கின்ற இம்மாபெரும் போராட்டங்கள் குறித்து கற்பிப்பதற்கும் விளக்குவதற்கும் உண்மையிலேயே அவசியமாய் இருக்கிறது. ஸ்ராலினிசத்திற்கும் மாவோயிசம் உள்ளிட்ட அதன் அத்தனை வகையறாக்களுக்கும் எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் நடத்தப்பட்ட போராட்டத்தைக் காட்டிலும் மிக முக்கியமானதொரு போராட்டம் வேறு ஏதுமில்லை. ஆகவே நீங்கள் இன்றைய உலகைப் புரிந்து கொள்ள விரும்பினால், இந்த பிரம்மாண்ட அனுபவங்களின் முப்பட்டகம் வழியாகவே நீங்கள் அதனைக் கற்க வேண்டும். அத்துடன் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அரசியல் சிந்தனையாளராக இருந்தவர் லியோன் ட்ரொட்ஸ்கி. அத்தனை ஆளுமைகளிலும் அதிகமாக அவதூறு செய்யப்பட்டவர் என்பதோடு மிகவும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஆளானவராகவும் அவர் இருந்தார். எனினும் இந்த வரலாறு மிகப்பெரும் முக்கியத்துவம் கொண்டதாகும். ஆகவேதான் சென்ற நூற்றாண்டின் முக்கிய அனுபவங்களை திறனாய்வு செய்வதற்கும் இன்றைய காலகட்டத்திற்கு அதன் பொருத்தத்தை விளக்குவதற்கும் நான் இலங்கைக்கு அழைக்கப்பட்டேன்.
Dan: ஆக, 1960களில் உலகப் போருக்குப் பிந்தைய எழுச்சிக் காலகட்டம் முடிந்து போனதற்குப் பின்னும் உற்பத்தி அதிகமான அளவில் உலகமயமாக்கப்பட்டு விட்டதாலும் தொழிற்சங்கங்கள் ஒரு பிற்போக்குத்தனமான பாத்திரத்தை வகித்ததாக சோசலிச சமத்துவக் கட்சியும் உங்கள் உலகக் கட்சியான அனைத்துலகக் குழுவும், வரிசையான ஆவணங்களில் குணாம்சப்படுத்தியுள்ளன. உலக அளவில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில், தொழிற்சங்கங்கள் தமது அங்கத்தவர்களை இழந்து வந்திருக்கின்றன என்றும் செய்திகள் இருக்கின்றன. அதேசமயத்தில் தொழிலாள வர்க்கம் அவர்களது பாரம்பரியமான பிரதிநிதிகளிடம் இருந்து விலகி புதிய எதிர்ப்பு வடிவங்களை உருவாக்குகின்றன, அத்துடன் இலங்கையிலும் நாம் பார்க்கிறோம், சில சமயங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் பொது மக்களுக்கு பெரும் தொந்தரவாக ஆகி வந்திருக்கின்றன. ஆனால் இப்போது ஃபுக்குயாமா, மற்றும் சீனப் பிரச்சினை இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கிறோம். இந்த ஆர்ப்பாட்ட அரசியலில் போலி இடது என்று கூறப்படுகின்ற ஒன்று முன்னணியில் இருக்கின்றது என்று WSWS சுட்டிக்காட்டியிருக்கிறது. நான் உங்களிடம் வைக்க விரும்பும் கேள்வி என்னவென்றால் இந்த அரசியல் வடிவங்களை தொழிலாள வர்க்கத்திற்கான அரசியல் பொறிகள் என்று நீங்களும் ICFIம் குணாம்சப்படுத்தியதற்கான காரணம் என்ன?
DN: உங்கள் கேள்வியில் பல வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பற்றி குறிப்பிட முயற்சிக்கிறேன். முதலில் தொழிற்சங்கங்களது பிரச்சினைக்கு வருவோம். இந்த அமைப்புகள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஒரு திகைப்பூட்டும் சீரழிவுக்குள் சென்றிருக்கின்றன. ஊதியங்களை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சி, வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சி, வேலைகளில் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சி என்று தொழிற்சங்கங்கள் பாரம்பரியமாக எந்தெந்த செயல்பாடுகளில் தொடர்புபடுத்தப்பட்டு வந்தனவோ, அந்த அடிப்படையான செயல்பாடுகளும் கூட இன்று தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படுவதில்லை. அவை முற்றுமுழுதாக பெருநிறுவன ஆதிக்கத்தின் கட்டமைப்புக்குள்ளாக ஒருங்கிணைக்கப்பட்டு விட்டிருக்கின்றன. இதற்கான அடிப்படைக் காரணம் வெறுமனே அதற்குத் தலைமை கொடுப்போரின் மோசமான குணங்களில் காணக்கூடியதல்ல, மாறாக இறுதி ஆய்வில் இந்த அமைப்புகள் தமக்கு அடிப்படையாக ஒரு தேசிய வேலைத்திட்டத்தை, ஒரு தேசிய மூலோபாயத்தைக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையிலேயே காணக்கூடியதாக உள்ளது.
ஆயினும் இதற்கு, தொழிலாளர்கள் தங்களை தமது சொந்த ஆளும் உயரடுக்கின் கொள்கைகளுக்கு கீழ்ப்படியச் செய்துகொள்வதை அவசியமாக்குகிறது. நீங்கள் ஒரு மிக அனுபவமிக்க பொருளாதார அறிஞரென்று, முன்னர் என்னிடம் தெரிவித்திருந்தீர்கள். இன்று உலகின் மேலாதிக்கமான காரணிகள் சர்வதேசரீதியானவை என்று உங்களுக்குத் தெரியும். நாம் உலகளாவிய ஒருங்கிணைப்பு கொண்ட ஒரு பொருளாதாரத்தில் வாழ்கிறோம். ஒவ்வொரு முதலாளித்துவ வர்க்கமும் அரசும் மேலாதிக்கத்திற்கான ஆக்ரோஷமான போட்டியில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மிகவும் ஈவிரக்கமற்று செயல்படுவது அமெரிக்கா. ஆகவே இந்த கட்டமைப்புக்குள்ளாக ஒரு தேசியக் கொள்கை என்பது முற்றிலும் பொருத்தமற்றதாகவே உள்ளது. ஆளும் உயரடுக்குகள் அவர்கள் நடத்துகின்ற வர்த்தகப் போர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர்கள் மேலும் மேலும் அதிகமாய் தம்மை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கோருகின்றனர்.
அவர்கள் தமது உற்பத்திப்பொருட்கள் போட்டித்திறனுடன் இருப்பதற்காக மலிவுகூலி உழைப்பை வழங்குகின்றனர். ஆகவே இந்த தொழிற்சங்கங்கள், மற்றும் முன்னர் சீர்திருத்தக் கட்சிகளாக இருந்த அனைத்துக்கும் இந்த சர்வதேச நெருக்கடிக்கு ஒரு தேசியக் கொள்கையினால் அவர்களிடம் எந்த பதிலும் இல்லை என்பது அவர்களின் அடிப்படைத் தோல்வியாக இருக்கிறது. முதலாளித்துவம் இந்த பிரச்சினையை போரின் மூலமாக, வர்த்தகப் போரின் மூலமாக, பொருளாதாரப் போரின் மூலமாக, இறுதியில் ஒரு இராணுவ மோதலின் மூலமாக, தீர்க்க முயற்சி செய்கின்றனர். தொழிலாள வர்க்கம் தேசிய அரசை தாண்டிய ஒரு மிக மாறுபட்ட அணுகுமுறையை முன்வைக்க வேண்டும். அடுத்து போலி இடது தொடர்பான பிரச்சினையை எடுத்துக் கொண்டோமென்றால், நாங்கள் போலி இடது என்ற வார்த்தையை ஒரு மிகைப்படுத்தலாக பயன்படுத்தவில்லை, மாறாக இடது என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்புகள் மார்க்சிசத்துடன் தொடர்புடைய எதனையும் எவ்விதத்திலும் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையின் அடிப்படையிலான ஒரு சொல்லாகவே பயன்படுத்துகிறோம். ஒரேயொரு அடிப்படை பிரச்சினையில் மட்டும் கவனம்குவித்து சொல்கிறேன். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசத் தன்மையை அங்கீகரிப்பது என்பது மார்க்சிசத்தின் மையமான மூலோபாய அடித்தளமாகும். மார்க்ஸ் ஏங்கெல்ஸின் அத்தனை மகத்தான படைப்புகளுமே இதனை நிலைநாட்டுவதற்காகவும் வர்க்கப் போராட்டமே வரலாற்றின் அடித்தளம் என்பதை விளங்கப்படுத்துவதற்காகவுமே அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. அவ்வாறிருந்தும் போலி இடது அமைப்புகள் அடையாள அரசியல் என்று சொல்லப்படுகின்ற ஒன்றைக் கொண்டு வர்க்கப் போராட்டத்தை பிரதியிடுவதோடு அடிப்படை பிரிவாக வர்க்கம் இருப்பதை நிராகரித்து பாலினம், பாலியல் வகை, இனம், நிறம் என்று இரண்டாம் நிலை பிரச்சினைகளது அத்தனை வகைகளையும் ஊக்குவிக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான மாற்றீடாக இவை அத்தனையும் முன்தள்ளப்படுகின்றன, மிகவும் அழிவுகரமான மற்றும், வெளிப்படையாக கூறுவதானால், தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அல்லாமல், சமூகத்தின் உச்சத்திலான செல்வப் பகிர்வில், தனது பங்கை அதிகரிக்கக் கோருவதற்காக அடையாளம் குறித்த சண்டைகளைப் பயன்படுத்திக் கொள்கின்ற உயர் நடுத்தர வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட அடுக்கின் நலன்களையே பிரதிபலிக்கின்றதான விதத்தில் இது செய்யப்படுகிறது.
அதாவது, நான் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை கொண்டவனாக இருந்தால், ஒரு சலுகைமிக்க இடத்திற்கு நான் உரிமை கோரலாம். சோசலிசம் எவரொருவருக்கும் முன்னுரிமைகளுக்கு முற்படுவதில்லை. சோசலிசம் சமத்துவத்திற்கு விழைகிறது, அது உழைக்கும் மக்கள் அனைவரது சமத்துவத்தை எதிர்நோக்குகிறது. அது தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை எதிர்நோக்குகிறது, ஆகவே தான் நாங்கள் போலி இடது வகையான அரசியலை எதிர்க்கிறோம். பல்கலைக்கழகங்களிலும், நாம் அமெரிக்காவில் காண்பதைப் போல முதலாளித்துவ அரசின் பிரிவுகள் மத்தியிலுமே கூட அதிகமான அளவில் மிகவும் வலுவாக ஊக்குவிக்கப்படுகின்ற போலி இடது அரசியலானது மக்களை சற்று வலது-சாரி அடிப்படையில் ஒழுங்கமைப்பதற்கான ஒரு பொறிமுறையாக ஆகிவிட்டிருக்கிறது.
Dan: மன்னிக்க வேண்டும். முன்னதாய் நீங்கள் சொன்னீர்கள், முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் என்ற தலைப்பிலான லியோன் ட்ரொட்ஸ்கியின் 1938 ஆவணம் இன்றும் பொருத்தமாய் இருப்பதாக. அதனை சற்று விளக்கிச் சொல்ல முடியுமா?
DN: ட்ரொட்ஸ்கி முதலாளித்துவத்தின் மரண ஓலம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியபோது, அவர் பேசியது 24 மணி நேர வைரஸ் குறித்தல்ல, மாறாக சமூக ஒழுங்கின் ஒரு ஆழமான மற்றும் மரணகரமான நோயைக் குறித்து அவர் பேசினார். அவர் அந்த ஆவணத்தை இரண்டாம் உலகப் போரை ஒட்டிய காலத்தில், பாசிசம் பின்புலத்தில் நின்று கொண்டிருக்கையில், உலகெங்கிலும் முதலாளித்துவ ஜனநாயகம் நொருங்கிக் கொண்டிருந்த நிலையில், கொந்தளிப்பான பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் சமயத்தில் எழுதினார். நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதை அடுத்து உடனடியாகப் பின்தொடர்ந்தது என்னவெனில்: இரண்டாம் உலகப் போரின் வெடிப்பாகும், அதை தொடர்ந்த ஒரு வருடத்திற்குப் பின்னரான படுபயங்கரமான மனிதப் படுகொலைகள் நிச்சயமாக உலக நிலை குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை ஊர்ஜிதம் செய்தன.
போருக்குப் பின்னரான காலத்தில், நாம் பேசிக் கொண்டிருப்பது, ஸ்ராலினிசத்தின் உதவியுடனும் சோவியத் அதிகாரத்துவத்தின் துரோகத்தனமான கொள்கைகளது உதவியுடனும் முதலாளித்துவம் எவ்வாறு தன்னை ஸ்திரம் செய்து கொள்ள முடிந்தது என்ற ஒரு நெடிய நிகழ்சிப்போக்கை குறித்தாகும். முதலாளித்துவம் குறித்த ட்ரொட்ஸ்கியின் மதிப்பீடு ஏதோவொரு விதத்தில் மிகைப்படுத்தப்பட்டது என்பதாய் பலரும் நம்புவதற்கு இது இட்டுச்சென்றது. ஆனால் ட்ரொட்ஸ்கி எழுதியதை நீங்கள் ஆய்வுசெய்தால், அவர் பேசிக் கொண்டிருந்த நெருக்கடி ஒரு சகாப்தத்தின் தன்மைபற்றியதாகும் என்ற புள்ளியை அவர் கவனத்துடன் குறிப்பிட்டிருந்தார். மீட்சிக் காலகட்டங்கள் இருக்கக் கூடும், ஓரளவுக்கான அமைதிக் காலகட்டங்கள் இருக்கக் கூடும். ஆயினும், அவையெல்லாம் தற்காலிகமானவையே என்றார். புற்றுநோய் இருக்கிற ஒருவர் அவ்வப்போது சில சமயங்களில் நோய் ஓய்ந்தது போல உணரலாம், ஆனாலும் அவருக்கு நோய் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பது அவரது மூளையில் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும். நோய் மீண்டும் திரும்பும், நாம் இன்று முகம்கொடுக்கின்ற நிலை இதுவே. தேசிய அரசு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் பிரச்சினை, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தனியார் உடைமைக்கு எதிராய் நிற்கின்ற பிரச்சினை ஆகிய இருபதாம் நூற்றாண்டில் தீர்க்கப்பட்டிராத அடிப்படையான முரண்பாடுகள் அனைத்திலும் எதுவொன்றும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை, அவை இப்போது உண்மையாகவே கொடூரமான வடிவத்தில் மறுஎழுச்சி கண்டு கொண்டிருக்கின்றன. ஆகவே மரண ஓலமாக ட்ரொட்ஸ்கி உருவகம் செய்தது நமது காலத்தில் ஆழ்ந்த பொருத்தமுடையதாகத் தென்படக் கூடும். சமீபத்தில் ஜேர்மனி சென்றிருந்தேன். உலக ஊடகங்களில் போதுமான அளவு என்ன பேசப்பட்டிருக்கவில்லை என்றால் அங்கு நவ-நாஜி அரசியல் கவனிக்கத்தக்க அளவுக்கு மிக ஆபத்தான மட்டத்திற்கு மீளெழுச்சி கண்டிருக்கிறது ஏனென்றால் ஜேர்மன் அரசில் நாஜிக்கள் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருக்கின்றனர்.
இது இறுதியாக உலக ஊடகங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது கடந்த ஐந்து வருடங்களாக நாங்கள் சுட்டிக்காட்டி வருகின்றதொரு விடயமாகும், ஹிட்லரிசத்திற்கு வக்காலத்து வாங்குவதற்கும் அதனை நியாயப்படுத்துவதற்கும் செல்லுகின்ற அளவுக்கு ஜேர்மன் கல்வித்துறை சமூகத்தில் வரலாறு பற்றி ஒரு திரித்தல் இருந்து வருகிறது.
இப்போது நவ-நாஜி ஆர்ப்பாட்டங்களின் மீளெழுச்சியை காண்கிறீர்கள். இப்போது இரண்டாம் உலகப் போர் முடிந்து 72 ஆண்டுகள், 73 ஆண்டுகள் ஆகின்றன. ஜேர்மனியில் ஒரு அச்சுறுத்தலாக நாஜிசத்தின் யதார்த்தத்தை பேசுகிறன்போது, இதனை ஒருவர் எவ்வாறு விளக்குவது? புதைக்கப்பட்டு விட்டதாக எவரும் கருதிய பூதங்கள் உண்மையில் மிகவும் உயிருடன் இருக்கின்றன என்பதே அதன் அர்த்தமாகும். அவை மீண்டும் எழுந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே அரசியலை வெறுமனே அன்றாட நிகழ்வுகளது கண்ணோட்டத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் வரலாற்றில் நாம் வாழுகின்ற ஒரு பரந்த சகாப்தத்தில் நிறுத்திக் கொண்டு பார்க்கின்ற ஒரு கூடுதல் கவனத்துடனான மதிப்பீட்டை நோக்கி நாங்கள் திரும்ப வேண்டியதிருக்கிறது. நாங்கள் வழங்குகின்ற பதில் நாம் முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண ஓலத்தினது ஒரு மிக முன்னேறிய கட்டத்தில் இருக்கிறோம் என்ற வரலாற்றில் வேரூன்றியதொரு பதிலாகும். தொழிலாள வர்க்கம் இந்த நெருக்கடிக்கு ஒரு சோசலிசத் தீர்வை கண்டுபிடிக்கத் தவறுமானால், சர்வாதிகாரமும் போரும் தான் முதலாளித்துவம் வழங்குகின்ற தீர்வாக இருக்கும்.
ஆக இதுதான் பிரதான அம்சம், இதில் பெரும் ஆர்வம் இருக்கிறது என்று நினைக்கிறேன். மறுபடியும் சொல்கிறேன், சோசலிசத்தில் ஆர்வமின்றி இருப்பதல்ல இன்றைய பிரச்சினை. அதிலிருந்து மிகவும் மாறுபட்டதாகும். அதிலும், கம்யூனிச-விரோதமும் சோசலிச-விரோதமும் அரச மதம் போன்ற ஒரு வகையாக ஆகியிருந்த அமெரிக்காவில், அதன் நம்பகத்தன்மை நொருங்கிக் கொண்டிருக்கிறது.
யதார்த்தம் மிகவும் தெளிவாக இதை காட்டுகின்றது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை, ஒரு குடும்பத்தை தொடக்குவதில் சிரமங்களை, மாணவர்கள் கடன்களை அனுபவிக்கின்றனர். யதார்த்தத்தில் டொனால்ட் ட்ரம்ப் போன்றதொரு ஆளுமை ஜனாதிபதி பதவிக்கு உயரந்துள்ளார், எதிர்க்கட்சிகள் எனக்கூறப்படுபவற்றால் எந்த முற்போக்கான மாற்றையும் முன்வைக்க இயலாதிருக்கின்றது. சற்று அமெரிக்க அரசியல் விவகாரத்தைப் பேசுவதாக இருந்தால் இவற்றையெல்லாம் கூறலாம். அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள், ட்ரம்ப் அடையாளப்படுத்தும் ஒவ்வொன்றையும் மக்கள் வெறுப்பது நியாயமே, உலகெங்குமே இது தெரிகிறது. நாடுகள் மற்றும் மக்களுக்கு எதிராக பொறுப்பற்று மிரட்டல்கள் விடுக்கின்ற அவர் ஒரு உண்மையான அரக்கத்தனமான ஆளுமையாக பார்க்கப்படுகிறார். ஆனால் நான் அவர்களுக்கு சொல்வது, ட்ரம்ப் ஒரு ஆழமான நோயின் அறிகுறி மட்டுமேயாவார், ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால் விடயங்கள் அடிப்படையில் வேறுமாதிரியானவையாக இருந்திருக்கும் என்று அவர்கள் நம்பினால், அவர்கள் ஒரு பாரிய பிழை செய்கிறார்கள். அமெரிக்க அரசியல் வாழ்விலான ஆழமான போக்குகளின் ஒரு அதீத கொடூரமான வெளிப்பாடாக மட்டுமே ட்ரம்ப் இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அரசியலில் மக்கள் விரைவில் மறந்து விடுவது வழக்கமாயிருக்கிறது. நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் அமெரிக்கா 1990 இல் ஈராக் மீது அது முதன்முதலாக படையெடுத்தது முதலாக கிட்டத்தட்ட தொடர்ச்சியாக போரில் ஈடுபட்டு வந்திருக்கிறது, அதன்பின் பயங்கரவாதத்தின் மீதான போர் இப்போது 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது, இந்த பயங்கரவாதத்தின் மீதான போரின் நோக்கம் அமெரிக்க புவியரசியல் மேலாதிக்கத்தை பாதுகாத்துக் கொள்வதுதான் என்பதை இப்போதும் கூட இராணுவம் ஒப்புக்கொள்கிறது, அது சீனாவுக்கு எதிராக ரஷ்யாவுக்கு எதிராகவே செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்துடன் அமெரிக்க அரசியலில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில் வெளிப்பாட்டைக் காண்கின்ற மோதல்கள் இறுதி ஆய்வில் தந்திரோபாய பிரச்சினைகள் தொடர்பானவையே. ட்ரம்ப் அவரது சீன விரோத அரசியலை மிக ஆக்ரோஷத்துடன் ஊக்குவிப்பதாகத் தெரிகிறார். ஜனநாயகக் கட்சி ரஷ்ய விரோத அரசியலில் கூடுதல் கவனக்குவிப்பு கொடுக்கிறது.
புட்டினும் ஃபேஸ்புக்கில் செலவிடப்பட்ட மொத்தமாய் 100,000 டாலர்களுமாய் சேர்ந்து அமெரிக்க தேர்தலின் முடிவைத் தீர்மானித்துவிட முடியும் என்று அவர்கள் எல்லோரையும் நம்ப வைக்கப் பார்க்கிறார்கள். அதாவது அது வெளிப்படையாக அத்தனை அபத்தமானது. ஆனால் அவர்களுக்கு இடையில் இருக்கும் பேதங்கள் போர் பிரச்சினை தொடர்பானவையல்ல அமெரிக்காவின் மேலாதிக்கம் குறித்த பிரச்சினை தொடர்பானவையல்ல; அல்லது அமெரிக்காவிற்குள் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பின்பற்றுகின்ற பிரச்சினையைக் கூட விடுவோம் அதன் மூர்க்கமான உலகக் கொள்கைகள் குறித்த பிரச்சினை தொடர்பானவையல்ல. அவர்களிடையேயான பேதங்கள் இந்தப் பிரச்சினைகளில் முற்றிலும் தந்திரோபாய ரீதியானவையாகும். புவியரசியல் மூலோபாயம் தொடர்பாக அவர்கள் நிச்சயமாக முரட்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதற்கு எதிராக, யாருக்கு எதிராக முதலில் போருக்கு செல்ல வேண்டும் என்பதுதான் அவர்களது பிரச்சினையாக இருக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்கு இந்த அப்பட்டமான பிற்போக்குத்தனமான மற்றும் இன்னும் உண்மையிலேயே குற்றவியல்தனமான இலட்சியங்களை பின்பற்றிச் செல்வதில் சற்றும் ஆர்வமில்லை. எந்த நாடும் வேறெந்த ஒரு நாட்டின் மீதும் மேலாதிக்கம் செலுத்தக்கூடாது. இதற்கான பதில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்களாகச் சொல்லப்படும் புனைவுகளில் காண வேண்டியதல்ல, மாறாக உலகெங்கிலும் இராணுவவாதத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில் காண வேண்டியதாகும்.
Dan: இந்த காலை வேளையில் “Coffee with Dan” நிகழ்ச்சியில், இன்று நம்முடன் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான திரு. டேவிட் நோர்த் பேசிக் கொண்டிருக்கிறார். சோசலிச சமத்துவக் கட்சி குறித்து சோசலிச இயக்கத்தின் இந்த குறிப்பான வடிவத்திற்கு தலைமை கொடுத்துக் கொண்டிருக்கும் உலகக் கட்சி குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது மீண்டும் கலந்துரையாடலுக்குள் செல்வோம். டேவிட், சீனா, உங்களுக்குத் தெரியும், இரண்டாவது பெரும் பொருளாதாரமாக இருக்கிறது. அது ஆசிய மற்றும் ஆபிரிக்க பிராந்தியத்தில் தன் செல்வாக்கை துரிதமாக அபிவிருத்தி செய்து கொண்டிருக்கிறது. வளர்ச்சிகுறைந்த நாடுகளுக்கு மிகப்பெரும் அபிவிருத்திக் கடன்களையும் கூட அளிக்கிறது, இலங்கை சமூகத்திற்கும் இங்கே சீனா குறித்து நிறைய கவலை இருக்கிறது. சீனா இந்த நாடுகளில் ஆழமான பொறிகளை அமைப்பதாகவும் அதன்பின் அந்த அரசாங்கங்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆகஸ்ட் 27 என்று நினைக்கிறேன், வாஷிங்டன் போஸ்ட், உலகெங்கும் சீனாவின் கடன் பொறி மீது குற்றம்சாட்டியது, அதன் ஏகாதிபத்திய இலட்சியத்திற்கான அடையாளச்சின்னமாகவும் அதனைக் கூறியது. சீனா ஒரு ஏகாதிபத்திய அரசா?
DN: நல்லது, அந்தக் கேள்விக்கு சற்றுநேரத்தில் வருகிறேன், ஒரு அமெரிக்கனாக நான் பேசினாலும் கூட, எவரொருவரையும் ஏகாதிபத்திய இலட்சியங்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டுவதென்பதை, ஒருவேளை அபத்தமானதில்லை என்றால், இரட்டைவேடமாகக் காண்கிறேன் என்பதை நான் கூறியாக வேண்டும்.
அதாவது “மூன்றாம் உலகம்” என்பதாக சொல்லப்படும் நாடுகளிலான அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையைக் குறித்து பரிச்சயமுள்ள எவரொருவரும் அமெரிக்கா ஒரு பொதுநல திட்டத்தை பின்பற்றி வந்திருப்பதாக கூறுவார்கள் என்று நான் கருதவில்லை. அமெரிக்கா எப்போது பணம் கொடுத்தாலும் அது தனது நோக்கங்களை சாதித்துக் கொள்கின்ற எண்ணத்தில் இருந்துதான் அதனைச் செய்திருக்கிறது. உலகெங்குமான தேர்தல்களில் அது தலையிடுகிறது. அரசாங்கங்களின் மீது செல்வாக்கு செலுத்துவதுடன் மட்டுமல்ல, அவை பின்பற்றுகின்ற கொள்கைகள் மீது திருப்தியில்லை என்றால் அவற்றை தூக்கியெறியவும் செய்கிறது; சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கடனுதவி சம்பந்தமாக சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் கோபமும் கூட அமெரிக்கா இலங்கை மக்களின் தலைவிதி பற்றி கவலைப்படுவதால் அல்ல, அது இலங்கை மீதான ஏகாதிபத்திய செல்வாக்கின் மீதான தாக்கத்தின் சாத்தியத்திற்கு அஞ்சுவதனாலேயே என்று நான் சந்தேகிக்கிறேன்.
இலங்கை புவிமூலோபாயரீதியாக மிக மிக முக்கியமான நாடாக பார்க்கப்படுகிறது என்ற உண்மையிலேயே அவர்கள் உண்மையில் கவலை கொண்டுள்ளனர். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனா அதன் வர்த்தகப் பாதைகளுக்கு அணுகல் பெறாமல் தடுக்க அமெரிக்கா முடிவெடுக்கும்பட்சத்தில், கூடிய பரந்த இராணுவ முக்கியத்துவ சாத்தியம் கொண்டதாக ஆகும். அத்துடன் தெற்கு இந்தியப் பெருங்கடல் இன்று வர்த்தகத்திற்கான ஒரு இன்றியமையாத சந்திப்பாக இருக்கிறது. இலங்கையில் சீனா செல்வாக்கு செலுத்துவது அந்த மூலோபாயத்திற்கு தீங்கிழைக்கும் சாத்தியம் கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு சொல்கின்ற போதிலும், சீனாவினால் பின்பற்றப்படுகின்ற கொள்கைகள் அவர்களது தேசிய நலன்களாக கருதப்படுவனவற்றால் முன்செலுத்தப்படுவதாக இருக்கின்றன, அவை வெறுமனே தேசிய நலன்களால் மட்டுமல்ல ஆளும் உயரடுக்கின் நலன்களுமாகும். சீனாவின் விடயத்திலான துயரம் என்னவென்றால் அது மிகப்பெரும் பொருளாதார முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது, அதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது, இந்த உலகளாவிய புவியரசியலின் வட்டத்திற்குள் அவர்கள் தாமதமாக நுழைந்திருக்கிறார்கள் என்ற உண்மைக்கு அவர்கள் இப்போது முகம்கொடுத்திருக்கின்றனர். அவர்களது வளர்ச்சியைத் தடுப்பதற்கு அமெரிக்கா அதன் அத்தனை ஆதாரவளங்களையும் பயன்படுத்தும். நான் ஏராளமான ஆய்வறிக்கைகளில் படித்திருக்கிறேன், அவற்றில் சிலவற்றை நீங்களும் கூட படித்திருக்கலாம், அதில் அமெரிக்கா என்ன சொல்கிறது என்றால், கடந்த 10,15,20 ஆண்டுகளின் நிலை தொடருமானால் சீனா மேலாதிக்கமான சக்தியாக மாறும், அதைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா தீர்மானத்துடன் இருக்கிறது என்கிறது. இது போருக்கு இட்டுச் செல்கிறது. சீனா ஒரு சோசலிச நோக்குநிலையைக் கைவிட்டு முதலாளித்துவக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அதன் கொள்கையும் அவ்வாறேயிருக்கிறது. சீனா இப்போது ஒரு மிக ஆபத்தான நிலைமையில் தன்னைக் காண்கிறது. சந்தேகத்திற்கிடமற்ற அதன் பொருளாதார வளர்ச்சிகள் இருந்தபோதிலும், முதலாளித்துவ வளர்ச்சியின் அடிப்படையில் அதனால் ஒரு சாத்தியமான தீர்வைக் காண இயலாது, ஏனென்றால் போர் தான் முதலாளித்துவ பாதைகளின் வழியான தீர்வு, ஆகவே முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிரான ஒரு போராட்டமே சீனாவின் பரந்த மக்களுக்கு முன்னிருக்கின்ற கேள்வியாகும்.
மிக உண்மையான அபாயமாக நிற்கின்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சீனாவை அது பாதுகாத்தாக வேண்டியிருக்கிறது. உதாரணமாக ஏகாதிபத்தியவாதிகள் உலகெங்கிலும் அவர்கள் செய்வதைப் போலவே சீனாவிற்குள்ளும் இன மற்றும் மொழி பேதங்களைக் கிளறி விட முயற்சிக்கின்றனர். ஒரு புரட்சிகர சோசலிசக் கொள்கையின் மூலமாக மட்டுமே இது எதிர்கொள்ளப்பட முடியும். ஆகவே சீனா ஒரு ஏகாதிபத்திய நாடு என்ற வரையறையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு கூறுவது ஒரு மிக மிக சிக்கலான வரலாற்று நிகழ்சிப்போக்கை எளிமைப்படுத்தி சொல்வதாக அதனை நான் கருதுகிறேன். சீனா நிச்சயமாக ஒரு முதலாளித்துவ நாடாக ஆகியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அது உலகளாவிய ஏகாதிபத்தியக் கொள்கைகளின் ஒரு வகையான கட்டமைப்புக்குள்ளாக தன்னைக் காண்கிறது, அந்தக் கொள்கைகளை அந்த கட்டமைப்புக்குள்ளாக வெல்ல முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால், சீனாவின் தொழிலாள வர்க்கம் மீண்டும் அதன் சோசலிசப் பாதைக்குத் திரும்ப வேண்டும்.
ஆனால் மாவோயிச ஆட்சி என்னவாக இருந்தது மாவோ என்னவாக இருந்தார் என்பது குறித்த ஒரு தாட்சண்யமற்ற விமர்சனத்தின் மூலமாக மட்டுமே அது செய்யப்பட முடியும், அது ஸ்ராலினிசத்தின் ஒரு வடிவமாக இருந்தது. அத்துடன் சீனாவில் முதலாளித்துவத்தின் மீட்சி ஒரு அதிகாரத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்டது. தொழிலாள வர்க்கத்தின் மற்றும் மாணவர்களின் எதிர்ப்பை தியானென்மென் சதுக்கத்தில் ஒடுக்கியதற்குப் பின்னர்தான் அது நடந்தது-துரிதப்பட்டது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆகவே இந்தப் பிரச்சினைக்கு, ஏகாதிபத்தியத்திலிருந்து சுயாதீனப்பட்டும் அதற்கு எதிராகவும் தன் மக்களை ஐக்கியப்படுத்துவது என்ற சீனப் புரட்சியின் கேள்விகளுக்கு ஒரு குறுகிய கால பத்திரிகையாளர் அணுகுமுறையாக அல்லாமல் மாறாக ஒரு அதிகமான வரலாற்றுரீதியான அணுகுமுறையை நாங்கள் எடுக்கிறோம், எடுப்பதற்கு விழைகிறோம். இப்பிரச்சினை இன்று ஆசிய மற்றும் உலக பரந்த மக்களது ஐக்கியப்படுத்தல் என்ற மிக முன்னேறியதொரு விதத்தில் முன்நிற்கிறது. இங்கே அங்கே எங்கெங்கும் என கூட்டாளிகளை விலைக்கு வாங்குவதன் மூலம், இருக்கின்ற கட்டமைப்புக்குள்ளாக இதற்கு சீனா செய்கின்ற முயற்சி அதன் வரலாற்றுப் பிரச்சினையைத் தீர்க்கப் போவது கிடையாது.
Dan: நமக்குத் தெரியும் சீனா ஒரு கம்யூனிச நாடாக இருக்கிறது என்று...
DN: பொதுவாக அவ்வாறு கூறப்படுவது
DN: ஆம், சீனா ஒருபோதும் உண்மையான சோசலிச அல்லது ஒருபோதும் கம்யூனிச நாடாக இருந்ததில்லை, ஸ்ராலினிசம் தான் அங்கு இருந்தது, அது சோசலிசக் கொள்கைகளின் ஒரு ஆழமான திரிப்பில் விளைந்தது.
Dan : ஆயினும் அது பின்னர் சந்தைகளைத் திறந்துவிட்டு ஒரு நவ-முதலாளித்துவ நாடாக ஆனது. இப்போது நீங்கள் சரியாகக் குறிப்பிட்டதைப் போல அந்நாட்டில் உண்மையாகவே எந்த ஏகாதிபத்திய அணுகுமுறையும் இல்லையென்பதாக சிலர் காணலாம். ஆயினும், அதன் உலகளாவிய தன்மை மற்ற ஏகாதிபத்திய நாடுகளின் தன்மையில் இருந்து எந்தவிதத்தில் வேறுபடுகிறது?
DN: மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கிறது, அது ஒரு மிக மாறுபட்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் வரலாற்று அபிவிருத்தியை ஆய்வுசெய்யாமல் அந்நாட்டினை ஆய்வு செய்வது இயலும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வாறான ஒரு வரலாற்று அணுகுமுறை இல்லாதபோது ஒருவர் பொருத்தமற்ற ஒப்பீடுகளைச் செய்வதற்கு தள்ளப்படுகிறார். அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய நாடாக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்தது, அது ஒரு வகையான உலகளாவிய நிகழ்வாக இருந்தது, அந்த சமயத்திலான ஏராளமான எண்ணிக்கையிலான பொருளாதார அறிஞர்களால் அது குறிப்பிடப்பட்டது, அது காலனித்துவ நிகழ்ச்சிப்போக்குடன் பிணைந்ததாயிருந்தது. ஆனால், பிரதான வங்கி நிறுவனங்களிடையேயான சண்டை, நிதி மூலதன ஏகபோகத்தின் ஒரு கருவியாக அரசு என சீனா, சந்தேகமில்லாமல், அதன் நிதிச் செல்வாக்கின் நீட்சியின் சில அம்சங்களை வெளிப்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை, ஆயினும் வெறும் கடந்த 25 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் நீங்கள் இந்த நிகழ்வுப்போக்குகளை உண்மையாகவே விளக்கி விட முடியாது. சீனாவுக்கு எதிராக, ஏகாதிபத்தியம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை நான் கேட்கின்ற போது —நான் இங்கே மறுபடியும் அழுத்திக் கூறியாக வேண்டும், நான் சீனாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவாய் பேசவில்லை, நான் பேசுவதற்கும் அதற்கும் துளியும் சம்பந்தமில்லை— அந்த வார்த்தை குறிப்பாக போலி-இடது அமைப்புகள் மத்தியில் தான் பயன்படுத்தப்படுகிறது, அவர்கள்தான் சீனா ஒரு ஏகாதிபத்தியம் என்று கூறுகிறார்கள். அவர்கள் சீனாவை சொல்வதும், ரஷ்யாவை ஏகாதிபத்தியம் என்பதும் அல்லது ஈரானை ஏகாதிபத்தியமென்பதும் பொதுவாக அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு அவர்கள் அளிக்கின்ற ஆதரவுடன் பிணைந்ததாக இருக்கிறது. சீனாவின் வெளியுறவுக் கொள்கையை ஏற்கனவே நான் எதிர்க்கிறேன் என்பதால் என்னை இந்த வார்த்தை வரையறைக்கு நீங்கள் உடன்படச் செய்கிறீர்கள் என்று வையுங்கள். அதன் தாக்கங்கள் என்னவாய் இருக்கும்? இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வோர் சீனாவில் உள்ள அத்தனை வகையான இன மொழி சிறுபான்மையினருக்கு சுய-நிர்ணயத்திற்கான உரிமைக்கு உடன்பட வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புவது தான் பொதுவாக நடக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், சீனாவை உடைப்பதற்கான ஒரு சாதனமாக அது ஆகிறது, இது மிக பிற்போக்கான ஒரு நிகழ்ச்சிப்போக்காக இருக்கும்.
இதைப் பற்றி பேசும்போது அது மிகவும் சிக்கலானதாக தென்படலாம் என்றே நான் நினைக்கிறேன், ஏனென்றால் ஒரு வானொலி நேர்காணலில் நீங்கள் ஏராளமான பிரச்சினைகளை மிகக் குறுகியதொரு காலத்தில் பேசுவதற்கு முயற்சிக்கிறீர்கள். ஒரு எளிமைப்படுத்தப்பட்ட வரையறையை திணிப்பது யதார்த்தத்திற்கு அநீதி இழைப்பதாகி விடும். இவ்வாறு சொல்வதனால், நாங்கள் சீனாவின் வெளியுறவுக் கொள்கையுடன் உடன்படுகிறோம் அல்லது அதற்கு ஆதரவளிக்கிறோம் என அர்த்தமல்ல. சீனாவின் வெளியுறவுக் கொள்கையென்பது இறுதியாய்வில் ஒரு எழுந்து வருகின்ற முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களால் உத்தரவிடப்படுவதாக இருக்கிறது. சீனா, பில்லியனர்களை அதிதுரித வேகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் வெளியுறவுக் கொள்கை தொழிலாளர்களின் நலன்களுக்கு சேவை செய்யக் கூடியதாக இல்லை. அதன் வெளிநாட்டு கொள்கை அதன் தர்க்கவியல் காரணமாக ஜப்பானுடன் மோதலுக்கும், அமெரிக்காவுடன் மோதலுக்கும், மற்றும் இந்தியாவுடன் மோதலுக்கும் இட்டுச் செல்கின்றது. இவையனைத்துமே பேரழிவுகரமான பின்விளைவுகளைக் கொண்டவையாகும், ஆகவேதான் சோசலிஸ்டுகள் இந்த தேசிய அரசுப் போட்டி என்ற கொடுங்கனவான தர்க்கத்தில் இருந்து வெளிவரும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு விரும்புகிறார்கள். உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளியுறவுக் கொள்கையை கட்டியெழுப்புவதன் மூலமான சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் மட்டுமே அந்த வழி கண்டறியப்பட முடியும். இது பல சமயங்களில் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும், நடைமுறைசாத்தியமற்றதாக தோன்றும் என்பதை அறிவேன். ஆனால் இந்த கோளம் உயிர்பிழைப்பதைக் குறித்து நான் பேசிக் கொண்டிருக்கிறேனாயின், அது ஒன்று மட்டுமே நடைமுறைசாத்தியமான வெளியுறவுக் கொள்கையாகும்.
Dan: நிறைவாக உங்களைக் கேட்க விரும்புகிறேன், சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒரு இளைர் இயக்கமும் இருக்கிறது. சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு அல்லது நீங்கள் அழைப்பதைப் போன்று IYSSE. அதன் வேலைத்திட்டம் என்ன. கல்வி வெட்டுக்கள், தனியார்மயமாக்கம், நல உதவி வெட்டுக்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக இளைஞர்களுக்கு உங்கள் கட்சி முன்வைக்கின்ற வேலைத்திட்டம் என்ன? ஏனென்றால் இலங்கையில் இதுதொடர்பாக மிக மிகப் பெரும் பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்கிறோம், இந்த “Coffee with Dan”, நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் உங்களிடம் நான் குறிப்பிட்டதைப் போல, சிலசமயங்களில் இது நாட்டிற்கு ஒரு பொதுவான தொந்தரவாகவும் ஆகி விடுகிறது.
DN: இன்று உலகெங்கும் இளைஞர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் மிகக் கடுமையானவை. அது நாம் அழுத்திக் கூறியாக வேண்டிய ஒரு விடயம் என்று நான் நினைக்கிறேன். இலங்கைக்கு மூன்று தசாப்தங்களாக வந்துபோகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. நான் இலங்கைக்கு முதன்முதலில் விஜயம் செய்து வெறும் 30 ஆண்டுகளுக்கு மேலிருக்கும். அதற்குள் வெளிப்பட மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன: சமூக மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள்.
ஒரு உள்நாட்டுப் போரின் துயரகரமான அனுபவத்தின் ஊடாகவும் நீங்கள் பயணித்து வந்திருக்கிறீர்கள். சிங்கள அல்லது தமிழ் இனப் பேரினவாத வடிவங்கள் அத்தனையையும் எதிர்த்து வந்திருக்கின்ற, இலங்கையில் உள்ள அத்தனை தேசிய மற்றும் இனக் குழுவாக்கங்கள் மற்றும் மதக் குழுவாக்கங்களின் ஐக்கியத்திற்காக போராடி வந்திருக்கின்ற ஒரு கட்சியுடன் நான் தொடர்புபட்டிருப்பது குறித்து நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் என்பதை நான் சுட்டிக்காட்டியாக வேண்டும். நான் உங்கள் கேள்விக்கு பதிலாக அழுத்திச் சொல்ல விரும்புவது என்னவென்றால் இளைஞர்களின் பிரச்சினைகள் சர்வதேசியப் பிரச்சினைகளாகும். முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி சர்வதேச அளவிலானது. கல்விக்கான அணுகல் இல்லாமலிருப்பது, கண்ணியமான வேலைகளுக்கான அணுகல் இல்லாமலிருப்பது, ஒரு வருங்காலத்திற்கான அணுகல் இல்லாமலிருப்பது, போருக்கான ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் ஆகிய பிரச்சினைகள் உலகெங்கும் இளைஞர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளாகும். ஆகவே சோசலிச சமத்துவக் கட்சிகளின் இளைஞர் இயக்கமான IYSSE ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இளைஞர்களை ஐக்கியப்படுத்துகின்ற ஒரு முன்னோக்கைக் கொண்டிருக்கிறது. சோசலிசத்துக்கான அடிப்படைக் கோட்பாடாக சமத்துவம் இருப்பதால் தான் அது சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு என பெயர்கொண்டுள்ளது. நீங்கள் பிறந்த குடும்பத்தைக் கொண்டு அந்தஸ்து தீர்மானிக்கப்படுகின்றதான ஒரு உலகத்தை இளைஞர்கள் காண்கிறார்கள். உங்களது குடும்பம் வசதியானதாக இருந்தால் அது உங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை அடிப்படையாகத் தீர்த்து விடுகிறது, அறநெறிப் பிரச்சினைகள், கலாச்சார பிரச்சினைகள் போன்ற மற்ற பிரச்சினைகளை அது உருவாக்கலாம் என்பது வேறு. ஆனால் சாத்தியங்களையும் சந்தர்ப்பங்களையும் கொடுப்பதென்பது எல்லாவற்றுக்கும் மேல் உங்கள் குடும்பத்தின் செல்வத்தால் தீர்மானிக்கப்படுகிறது, அத்துடன் உலகின் இளைஞர்களில் மிகப் பெரும்பான்மையான மிகப்பரந்த எண்ணிக்கையிலான மிக இளைய வயதினர் வறுமைக்கும், வறுமையின் அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுத்து நிற்கின்றனர், வாய்ப்புகளை மிகக் குறைந்த அளவில் கொண்டுள்ளனர், இலங்கை, இந்தியா, ஜேர்மனி, அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளைக் குறித்து நீங்கள் பேசுகிறீர்களாயின், இதுவே உண்மைநிலை. ஆகவே தான் நாங்கள் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை முன்வைக்கிறோம், அந்தக் காரணத்தினால் தான், முன்னெப்போதினும் மிகப்பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் இப்போது சோசலிசத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். சோசலிசத் தத்துவத்தில், வரலாற்றில் அவர்களுக்கு கல்வியூட்டுவது மிகவும் முக்கியமானதாக ஆகிறது. எனது பெரும்பகுதி நேரம் வரலாற்று உரைகளில் செலவாவதை நான் காண்கிறேன். இது அரசியலில் இருந்து கவனம்திருப்புவதாக நான் காணவில்லை. இன்று அதுதான் அரசியலுக்கான சாரமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். அரசியல், வரலாற்றில் வேரூன்றியதாக இருப்பது அவசியம். நடைமுறை அரசியலில் தான் ஆர்வம், வரலாற்றில் ஆர்வமில்லை என்று சொல்பவர்கள் மொத்தமாய் உருப்படியான அரசியலிலேயே ஈடுபாடு கொண்டவர்களாக இல்லை என்றே நான் சொல்லுவேன்.
Dan: இன்றைய காலையின் “Coffee with Dan” நிகழ்ச்சியில் டேவிட் நோர்த் நம்முடன் இருக்கிறார். அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவராவார். அவர் இலங்கைக்கு ஒரு மிக முக்கியமான நிகழ்வுக்காக விஜயம் செய்திருந்தார். நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதன் 80வது ஆண்டு மற்றும் இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி அல்லது SEP இன் 50வது ஆண்டினைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவதற்காக அவர் வந்திருந்தார். இன்றைய “Coffee with Dan” நிகழ்ச்சியில் சோசலிச சமத்துவக் கட்சி குறித்தும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கம் குறித்தும் நாம் பேசினோம். “Coffee with Dan” நிகழ்ச்சிக்கு விஜயம் செய்ததற்கு குறிப்பாக இலங்கைக்கு விஜயம் செய்ததற்கு மிக்க நன்றி டேவிட்.
DN: என்னை இங்கே அழைத்ததற்கு நன்றி திரு.டான். மிகவும் மகிழ்ச்சி.