Print Version|Feedback
French President Macron hails fascist dictator Philippe Pétain
பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை புகழ்கிறார்
Alex Lantier
10 November 2018
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் முதலாம் உலக போர் முடிந்த நூற்றாண்டின் நாளைய பாரீஸ் கொண்டாட்டத்திற்கு முன்னதாக முதலாம் உலக போரின் போர்களங்களுக்கு விஜயம் செய்தபோது, புதன்கிழமை அவர் பிரான்சின் பாசிசவாத சர்வாதிகாரி பிலிப் பெத்தானை புகழ்ந்துரைத்தார்.
பெத்தானைக் கௌரவப்படுத்துவது "நியாயமானதே" என்று மக்ரோன் அறிவித்தார்: “அவரொரு தலைச்சிறந்த சிப்பாய், இது தான் யதார்த்தம். அரசியல் வாழ்க்கை மனித இயல்பினைப்போல் சிலவேளைகளில் ஒருவர் நம்புவதற்கு விரும்புவதை விட மிகவும் சிக்கலானதாக இருக்கும்.”
இந்த கருத்துக்கள் மக்களிடையே மிதமிஞ்சிய மனக்குமுறலைத் தூண்டிவிட்டதும், மக்ரோன் வியாழனன்று நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் தலைவரைப் பாதுகாக்க திரும்பியதோடு, முதலாம் உலகப் போரில் ஒரு தளபதியாக அவரின் முன்வரலாறைக் குறித்து புகழ்ந்துரைத்தார். அவர் அறிவித்தார், “நான் வரலாற்றின் எந்த பக்கங்களையும் மறைக்க மாட்டேன். முதலாம் உலகப் போரின்போது, மார்ஷல் பெத்தான் கூட ஒரு தலைச்சிறந்த சிப்பாயாக இருந்தார். இதுதான் எமது நாட்டின் யதார்த்தம்.”
மக்ரோனின் கருத்துக்கள், பிரெஞ்சு பாசிசவாதத்தின் முன்னணி தலைவரான பெத்தானையும் மற்றும் பிரான்ஸ் எப்போதுமே அறிந்திருந்த மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் இரத்தந்தோய்ந்த ஆட்சியான விச்சி ஆட்சியையும் புத்துயிரூட்டுவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும்.
பிரான்சில் நாஜி ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்து வந்த விச்சி ஆட்சியின் தலைவராக பெத்தான் ஐரோப்பிய பாசிசவாதத்தின் அனைத்து குற்றங்களிலும் உடந்தையாய் இருந்தார். அவர் பெருந்திரளான நாடுகடத்தல்களைத் தொடங்க உத்தரவிட்டார், அது பிரான்சில் இருந்து 75,000 க்கும் அதிகமான யூதர்களைக் கொலை முகாம்களுக்கு இட்டுச் சென்றது. அவர் சோவியத் ஒன்றியத்தில் நடத்தப்பட்ட நிர்மூலமாக்கும் நாஜி போரில் போரிட்டு வந்த அச்சு நாட்டு இராணுவங்களுக்கும் அத்தோடு நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பை நசுக்கிய பிரெஞ்சு ஆயுதமேந்திய குழுவுக்கும், பிரெஞ்சுவாசிகளை அணிதிரட்டிய ஓர் ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.
விச்சி ஆட்சி இடதுசாரிகளையும் வன்முறையாக ஒடுக்கியது, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தடை விதித்தது, தொழிற்சங்கங்களைக் கலைத்தது, வர்க்க போராட்டத்தை சட்டவிரோதமானதாக அறிவித்தது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உடனடியாக, பிரெஞ்சு குடியரசின் இடைக்கால அரசாங்கம் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் மற்றும் எதிரியுடன் நயவஞ்சக கூட்டுசதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் மீது பெத்தான் மீது ஒரு வழக்கு கொண்டு வந்தது. ஆகஸ்ட் 15, 1945 இல், பெத்தான் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார், அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது, இராணுவப் பதவி மற்றும் கௌரவங்களை இழந்து அவர் இராணுவத்திலிருந்து அகற்றப்பட்டார்.
அப்போதிருந்து, பெத்தானின் புகழ்பாடுவது என்பது பிரத்யேகமாக நவ-பாசிசவாதிகளின் களத்திலேயே இருந்துள்ளது, பெத்தானின் முதலாம் உலக போர் முன்வரலாறை மக்ரோன் கௌரவப்படுத்துவதானது ஆகஸ்ட் 15, 1945 வழக்கை தூக்கிவீசுவதற்கான அவர்களின் முயற்சிகளை எதிரொலிக்கிறது.
பெத்தானை மக்ரோன் புகழ்வது சிறிதும் வெட்கமின்றி அதிவலதிடம் கோரிக்கை வைப்பதாகும். தொழிலாள வர்க்கத்திற்குள், மக்ரோன் "செல்வந்தர்களின் ஜனாதிபதி" என்று வெறுக்கப்படுகிறார். அவர் தொழிலாள வர்க்க கூட்டத்தை எதிர்கொள்ளும் போதெல்லாம் வெறுப்பு மிகுந்த கூச்சலை எதிர்கொள்கிறார். வியாழனன்று அவரது முதலாம் உலக போர் சுற்றுப்பயணத்தின் பாகமாக Maubeuge இன் ஒரு ரெனோல்ட் ஆலைக்கு விஜயம் செய்தபோது, அவர் வசைமொழிகளால் வாழ்த்தப்பட்டார், தொழிற்சங்க அதிகாரி ஒருவர் அவர் "அங்கே வரவேற்கப்படவில்லை" என்பதை அவருக்கு தெரிவித்தார்.
இதற்கு விடையிறுப்பாக, மக்ரோன், அவரின் இராணுவவாதம் மற்றும் சமூக சிக்கன பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு ஓர் அடித்தளத்தை உருவாக்குவதற்காக நவ-பாசிசவாதிகளை கவர்ந்து இழுக்க முயன்று வருகிறார். இதில், மக்ரோன் அவரின் ஜேர்மன் கூட்டாளி, அதாவது கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) க்கு இடையிலான மகா கூட்டணி அரசாங்கத்தின் கொள்கையை மீண்டும் முன்னுக்குக் கொண்டு வருகிறார்.
ஹிட்லரின் தோல்விக்குப் பின்னர் முதல்முறையாக, ஓர் இராணுவ "வல்லரசாக" ஆவது என்ற பேர்லினின் 2014 முடிவு பெருவாரியான மக்களிடையே செல்வாக்கிழந்திருந்த நிலையில், அந்த மகா கூட்டணி திட்டமிட்டு அதிவலதை வளர்த்துவிட்டது. அதிவலது தீவிரவாத பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியைச் சுற்றிய ஒரு சதிக்கூட்டத்தின் தலைமையில் ஹிட்லரின் குற்றங்களைக் குறைத்துக் காட்டுவதற்கான ஒரு ஆரம்ப பிரச்சார நடவடிக்கை, அதிவலதை ஊக்குவிப்பதற்கான ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பிரச்சாரமாக தீவிரமடைந்துள்ளது.
நவ-பாசிசவாதத்திற்கு எதிராக நூறாயிரக் கணக்கானவர்களின் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில், ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி (AfD) ஆயுதப்படை மற்றும் உள்நாட்டு உளவுத்துறையில் அதிகரித்து வரும் ஆதரவை அனுபவிக்கிறது, முன்னாள் உளவுத்துறை தலைவர் ஹன்ஸ்-ஜோர்க் மாஸன் முதலாளித்துவத்திற்கான எதிர்ப்பை "இடதுசாரி தீவிரவாதம்" என்று முத்திரை குத்தும் ஓர் அறிக்கையைப் பிரசுரிக்க AfD உடன் நெருக்கமாக கூட்டு சேர்ந்து செயல்பட்டார். உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் கெம்னிட்ஸில் நடந்த நவ-நாஜி கலகங்களில் இணைய விரும்பியதாக அவரே கூறிய கருத்தைப் போன்ற பாசிசவாத, அரசுப் பிரச்சாரம் தொழிலாளர்கள் மீது வெள்ளமென பொழிகின்றன.
மக்ரோனின் ஜேர்மன் கூட்டாளிகளிடமிருந்து வரும் இதுபோன்ற அறிக்கைகள் பெத்தானுக்கு புத்துயிரூட்டுவதற்கான மக்ரோனின் முயற்சிகளது குணாம்சத்தை முற்றிலும் தெளிவாக்குகின்றன. முதலாம் உலக போர் கொலைக்களங்களில் கொலை செய்யும் பெத்தானின் திறமையைப் பாராட்டுவது வரலாற்று நினைவுகளைக் குறித்த நடுநிலையான நடவடிக்கை அல்ல, மாறாக அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்புக்கு இடையே சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கான மதிப்பிழந்த கொள்கைகளைத் தீவிரப்படுத்துவதற்காக அதிவலதைப் பலப்படுத்துவதற்கு நோக்கம் கொண்ட ஓர் அரசியல் ஆத்திரமூட்டலாகும்.
1930 களின் மந்தநிலை மற்றும் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளிலும் மற்றும் முதலாளித்துவத்திலும் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடிக்கு இடையே, பாரீசில் நேற்று அரசு தலைவர்கள் முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு தினத்திற்காக ஒன்று கூடியிருந்தனர். ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அணுஆயுத போருக்குத் தயாரிப்பு செய்வதற்காக ட்ரம்ப் மத்தியதூர அணுசக்தி ஆயுத உடன்படிக்கையிலிருந்து வெளியேறி உள்ள அதேவேளையில், மக்ரோன் ரஷ்யா மற்றும் சீனாவை மட்டுமல்ல, மாறாக அமெரிக்காவை எதிர்கொள்வதற்காகவும் ஓர் ஐரோப்பிய இராணுவத்தை கட்டமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
உலக மேலாதிக்கத்திற்கான ஒரு முயற்சியை செய்வதற்காக தங்களைப் பிணைத்துக் கொள்வதற்கான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் முயற்சிகளுக்கு, வர்க்க உறவுகளை விரைவாக மறுசீரமைப்பு செய்வதும் மற்றும் பாசிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து சமூக மற்றும் ஜனநாயக சலுகைகளை திரும்ப பறிப்பதும் அவசியமாகிறது. பிரான்ஸ் 2023 க்குள் இராணுவத்திற்காக 300 பில்லியன் யூரோ செலவிடும் என்று இந்தாண்டின் முனீச் பாதுகாப்பு மாநாட்டில் மக்ரோன் அரசாங்க அதிகாரிகள் அறிவித்தனர். மக்ரோன் மிகப்பெரும் செல்வந்தர்களுக்கு பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை வரி வெட்டுக்களாக வாரிவழங்கி உள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு எதிரான ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளின் அடித்தளத்தில் மட்டுமே இராணுவத்திற்காக வழங்கப்படவுள்ள செலவுகள் சாத்தியமாகும்.
பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சமூக உரிமைகளை வெட்டவும் மற்றும் இராணுவவாதத்தை ஊக்குவிக்கவும், பிரெஞ்சு முதலாளித்துவம் விச்சி சர்வாதிகாரத்தை சட்டபூர்வமாக்க முனைந்துள்ளது. 1943 இல், தேசிய எதிர்ப்புக் குழுவின் (CNR - National Resistance Council) ஸ்ராலினிச, சமூக-ஜனநாயக மற்றும் முதலாளித்துவ சக்திகளின் "பொருளாதாரம் மீது ஆட்சி செலுத்தும் மிகப்பெரும் பொருளாதார மற்றும் நிதியியல் பிரபுத்துவ எச்சசொச்சங்களை நீக்குவதற்கு" சூளுரைத்தன.
ட்ரொட்ஸ்கிச இயக்கம் விவரித்ததைப் போல, இத்தகைய சக்திகள் ஒரு புரட்சியின் குரல்வளையை நெரித்து, தொழிலாள வர்க்கத்திற்கு நீண்டகால நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தின—தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்தன, முதலாளித்துவத்தை தக்க வைத்ததுடன் பாசிசவாத ஆளும் வர்க்கங்களை பாதுகாத்தன. ஆனால் 1943-44 இல் ஐரோப்பா எங்கிலும் நடந்த ஆயுதமேந்திய கிளர்ச்சிகள் மற்றும் 1946-47 இல் பாரிய வேலைநிறுத்த அலைகள் ஆகியவற்றுக்குப் பின்னர், பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு தொழிலாளர்களுக்கு பாரிய விட்டுக்கொடுப்புகளை வழங்க நிர்பந்திக்கப்பட்டது. இரயில்வே துறை மற்றும் எரிசக்தித்துறை நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன, அரசு ஓய்வூதியங்கள், இலவச மருத்துவ பராமரிப்பு மற்றும் இலவச பொதுக்கல்வி ஆகியவை பிரான்சிலும் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளிலும் அமைப்புமயப்படுத்தப்பட்டன.
பல தசாப்தங்களுக்குப் பின்னர், இந்த வெற்றிகளில் என்ன எஞ்சியிருக்கின்றனவோ அவற்றை போர் எந்திரத்திற்கு தீனி போடுவதற்காக மக்ரோன் அழிக்க விரும்புகிறார். இந்த வசந்தகாலத்தில், 95 சதவீத இரயில்வே துறை தொழிலாளர்களிடம் இருந்து வந்த வேலைநிறுத்த நடவடிக்கை மற்றும் எதிர்ப்புக்கு மத்தியிலும், அவர் சட்ட உத்தரவாணைகளைக் கொண்டு தேசிய இரயில்வேயை தனியார்மயமாக்கினார். இப்போது, அவரின் செல்வாக்கு விகிதம் வீழ்ச்சி அடைகின்ற போதினும் மற்றும் அவரது அமைச்சரவை உடைந்து கொண்டிருக்கையிலும் கூட, அவர் ஓய்வூதியங்கள், மருத்துவ பராமரிப்பு, வேலைவாய்ப்பின்மை காப்பீடு ஆகியவற்றின் மீதான வெட்டுக்களை முன்னெடுத்து வருகிறார், அதேவேளையில் அரசின் பொலிஸ் அதிகாரங்களைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பெத்தானை மக்ரோன் புகழ்வது அவர் கொள்கையில் உள்ள பாசிசவாத குணாம்சத்தை எடுத்துக்காட்டுகிறது. 2017 தேர்தல்களில் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னைக் காட்டிலும் மக்ரோன் "தீமை குறைந்தவர்" என்று அவரை ஊக்கப்படுத்திய நடுத்தர வர்க்க அமைப்புகள் மற்றும் கட்சிகளும் —இப்போது இவை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மூலமாக மக்ரோனின் சமூக வெட்டுக்கள் மீது பேரம்பேசி வருகின்ற நிலையில்— இவை அனைத்தும் திவாலானவையாக மற்றும் பிற்போக்குத்தனமானவையாக அம்பலப்பட்டுள்ளன.
பாசிசவாத சர்வாதிகாரி பெத்தானுக்கு புத்துயிரூட்டுவதற்கான மக்ரோனின் முயற்சிகளானது, போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை நோக்கி வளைந்துள்ள உலகின் ஆளும் உயரடுக்குகள் பாசிசவாதத்தின் புத்துயிரூட்டலைச் செயலூக்கத்துடன் ஊக்குவித்து வருகின்றன என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினது எச்சரிக்கையை நிராகரிக்க முடியாதவாறு உறுதிப்படுத்துகின்றன. போர் மற்றும் சர்வாதிகாரத்தின் மூலவேரான முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கிவீச முனைகின்ற ஒரு சோசலிச அரசியல் வேலைத்திட்டம் மட்டுமே 1930 களின் காட்டுமிராண்டித்தனம் திரும்பி வருவதைத் தடுப்பதற்கு மனிதயினத்திற்கு வழிவகைகளை வழங்குகிறது.