Print Version|Feedback
One hundred years since the November Revolution in Germany
ஜேர்மனியின் நவம்பர் புரட்சியின் நூறு ஆண்டுகள்
Ulrich Rippert and Peter Schwarz
9 November 2018
நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, நவம்பர் 9, 1918 அன்று, போர் மற்றும் முடியாட்சிக்கு எதிரான ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சி அதன் உச்சகட்டத்தை எட்டி முதலாளித்துவ அமைப்புமுறையை அதன் அடித்தளங்கள் வரை உலுக்கியது.
1918 ஆரம்பம் முதலாகவே, ஒடுக்குமுறை, அரக்கத்தனமான தணிக்கை, புரட்சிகரத் தலைவர்களை சிறையிலடைத்தமை மற்றும் முதலாம் உலகப் போருக்கு சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) தொழிற்சங்கங்களும் ஆதரவளித்தமை இவை அத்தனையையும் மீறி, போருக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முடியாட்சி அரசாங்கத்தினால் தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடியாத நிலை உண்டானது. மூன்றரை ஆண்டு கால இரத்தக்களரியான படுகொலைகளின் அழிவுகரமான விளைவுகளும் மேற்கு முனையிலான இராணுவத் தோல்விகளும் ஒரு புரட்சிகர நெருக்கடிக்கு இட்டுச்சென்றன.
நாட்டின் பல பகுதிகளில், உணவு விநியோகம் கிட்டத்தட்ட முழுமையாக பொறிந்து போனது. 1914 கோடைக்குப் பின்னர் போர் உற்பத்தி ஒரேயடியாய் அதிகரிக்கப்பட்டிருந்தது என்ற போதிலும், 1917 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த தொழிற்துறை உற்பத்தியானது அதன் போருக்கு-முந்தைய மட்டத்தைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. விவசாய உற்பத்தி 60 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருந்தது. பஞ்சம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பரந்ததாயிருந்தது.
போரின் இறுதி மாதங்களில் போர்எல்லைகள் கொஞ்சமும் நகர்ந்திருக்கவில்லை, ஆயினும் பெருமளவிலான மனிதப் படுகொலைகள் குறைவில்லாமல் தொடர்ந்தன. சிப்பாய்கள் எவ்வித அர்த்தமுமில்லாது படுகொலை செய்யப்படுவதற்கு, பதுங்குகுழிகளில் பட்டினியாய் சாவதற்கு அல்லது தொற்றுநோய் தாக்கி வேதனைப்பட்டு சாவதற்காய் அனுப்பப்பட்டனர். அச்சமயத்தில், முதலாம் உலகப் போர் நான்கு ஆண்டுகளாய் உக்கிரமாய் நடந்து வந்திருந்தது. தளபதி லூடென்ட்டோர்ஃப் (Ludendorff) உம் உயர் இராணுவத் தலைமையும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத் தாமதித்தனர், போர் இறுதியாக 1918 நவம்பரில் முடிவடைந்தபோது, உலகெங்கிலும் 10 மில்லியன் மக்கள் தங்கள் உயிரை இழந்திருந்தனர், 20 மில்லியன் படையினர்கள் காயமடைந்திருந்தனர். இது தவிர, 7 மில்லியன் பொதுமக்கள் பலியாகியிருந்தனர்.
ரஷ்யாவில் 1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகளின் தலைமையில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை வென்றிருந்தது; அது போரில் ரஷ்யாவின் பங்கேற்பை முடிவுக்குக் கொண்டுவந்தது. அவர்களது வெற்றி ஜேர்மனியில் தொழிலாளர்களுக்கு உத்வேகமளித்தது. உலகப் போரின் படுகொலைகளுக்கு மத்தியில், ரஷ்ய புரட்சியானது முதலாளித்துவத்திற்கு அப்பாற்பட்ட சுரண்டலும் போரும் இல்லாத ஒரு உலகம் சாத்தியம் என்பதை நிரூபணம் செய்தது.
1918 ஜனவரியில், ஹென்னிக்ஸ்டோர்ஃப் (Hennigsdorf) ஆயுத தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் தங்கள் கருவிகளைக் கீழேபோட்டனர். அருகிலிருந்த பேர்லினில் அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 400,000 பேர் கலந்து கொண்டனர். "ஜனவரி வேலைநிறுத்தமானது வில்ஹெல்மின் ஒழுங்கமைப்பு முடிவதன் தொடக்கமாக இருந்ததுடன், போர்நிறுத்தத்தால் மறைக்கப்பட்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அதனால் அதிகரிப்பட்டதாகவும் கூட இருந்த பேரரசில் (Reich) சுழன்று கொண்டிருந்த முரண்பாடுகள் அத்தனையின் ஒரு எரிமலை வெடிப்பாக இருந்தது” என்று ஜோஅஹிம் கேப்னர் தனது “1918” புத்தகத்தில் எழுதுகிறார்.
அதன்பின், தொழிற்சாலைகளில் பெருகிய எதிர்ப்பு, படைகளுக்கும் போர்முனைகளுக்கும் பரவியது. 1918 இலையுதிர் காலத்தில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து சென்று கொண்டிருந்தது. புரட்சிகர அலையைக் கட்டுப்படுத்தவும் போர்த் தோல்விக்கான பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்தவும், அரசாங்கம் ஒரு தொடர் பின்வாங்கல்களைச் செய்தது. “மேலிருந்தான சீர்திருத்தம் தான் கீழிருந்தான புரட்சியை தடுத்துநிறுத்த முடியும் என்று கருதப்பட்டது—அதுவே இப்போதைய முழுமையான திடீர்த்திருப்பத்தின் அடிப்படை சிந்தனையாக இருந்தது” என்று “1918/19 புரட்சி”யில் வோல்கர் உல்ரிச் குறிப்பிடுகிறார்.
அக்டோபர் 3 அன்று, வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கப் பொறுப்பை ஏற்கவிருந்த சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு அரசாங்கக் கூட்டணியை உருவாக்க, இளவரசர் மக்ஸ் ஃவொன் பாடன் (Max von Baden) பேரரசின் சான்சலராக நியமிக்கப்பட்டார். அதற்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர், உயர் இராணுவத் தலைமையில் மிக சக்திவாய்ந்த மனிதராக இருந்த தளபதி லூடென்ட்டோர்ஃப் நீக்கப்பட்டார்.
ஆனால் இந்த நடவடிக்கைகள் மிகத் தாமதமாக வந்திருந்தன. அவற்றைக் கொண்டு இனி புரட்சிகர எழுச்சியை கட்டுப்படுத்த இயலவில்லை. அக்டோபர் 30 அன்று, ஆழ்கடல் கப்பல் படையின் மாலுமிகள் அவர்களது நிச்சயமான மரணத்தை அர்த்தப்படுத்தக் கூடிய ”இறுதி யுத்த”த்திற்கு செல்ல மறுத்து கலகத்தில் ஈடுபட்டனர்.
Kiel நகரத்தில் மாலுமிகள் தொழிலாளர்களுடன் தோள்சேர்ந்து ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைத்தனர். நவம்பர் 4 அன்று, அவர்கள் கப்பல்களையும் Kiel நகர மண்டபத்தையும் ஆக்கிரமிப்பு செய்தனர். தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்கள் சபைகள் உருவாக்கப்பட்டன. புரட்சி நவம்பர் 5 அன்று லூபெக் (Lübeck) இல், நவம்பர் 6 அன்று ஹம்பேர்க் (Hamburg) இல், அதன்பின் பிரேமன், ஹனோவர் மற்றும் ஸ்ருட்கார்ட் போன்ற நகரங்களுக்கும் வியாபித்தது. நவம்பர் 7 அன்று 80,000 தொழிலாளர்கள் மூனிச்சில் ஆர்ப்பாட்டம் செய்தனர், தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்கள் சபை ஒன்றை அவர்கள் உருவாக்கினர். அதற்கு அடுத்தநாளில், கூர்ட் ஐஸ்னர் (Kurt Eisner) பவேரிய சுதந்திர அரசை பிரகடனம் செய்தார்.
அதன்பின் நிகழ்வுகள் வேகம்பெறத் தொடங்கின. தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்கள் சபையின் நிர்வாக சபைத் தலைவராக, நவம்பர் 9 அன்று பேர்லின் எழுச்சியில் ஒரு தலைமைப் பாத்திரம் வகித்த ரிச்சார்ட் முல்லர், அதனை இவ்வாறு விவரிக்கிறார்:
“காலையுணவு இடைவேளைக்குப் பின்னர், விடயங்கள் உயிர்ப்படையத் தொடங்கின. நம்பவியலாதவொரு துரித கதியில் தொழிற்சாலைகள் காலியாகின. தெருக்கள் பெரும் மக்கள் கூட்டங்களால் நிரம்பின. மிகப்பெரும் தொழிற்சாலைகள் அமைந்திருந்த புறநகர்ப் பகுதிகளில், பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் உருவாக்கப்பட்டு, அவை நகரின் மையம் வரை நீண்டு வந்தன.”
முடியாட்சியைப் பாதுகாப்பதற்கும் ஒழுங்கைப் பராமரிப்பதற்குமாய் பேர்லினுக்குச் செல்ல கட்டளையிடப்பட்டிருந்த சிப்பாய்கள், எவருமே அவ்வாறு செய்யுமாறு கூறாமலே தொழிலாளர்களது ஆர்ப்பாட்டங்களில் சேர்ந்து கொண்டனர் என்பதை முல்லர் விவரிக்கிறார். “ஆண்களும், பெண்களும், ஆயுதமேந்திய மக்களும் வெள்ளம் போல் திரண்டு அருகிலிருந்த இராணுவ முகாம்கள் வரையிலும் அணிவகுத்து நின்றிருந்தனர்”. மோஅபிட் (Moabit) சிறையிலும் ரேகல் (Tegel) சிறை முகாமிலும், சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர். “மிகப்பெரும் செய்தித்தாள்கள், Wolff தந்தி அலுவலகம், தந்தித் துறை, ஜேர்மன் நாடாளுமன்ற (Reichstag) கட்டிடம் ஆகியவை மாலையின் முதல் மணித்தியாலங்களிலேயே ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு விட்டிருந்தன.”
“இந்த எழுச்சியின் குணாம்சமானது, அதன் வியாபித்தலில் அனைத்தையும் உள்ளடக்கியிருந்த அளவிலும் அதன் வெடிப்பின் அடிப்படை சக்தியில் தங்கியிருந்ததுடன் மற்றும் பெரும் பேர்லினின் மிக பரந்த பகுதியின் அத்தனை பகுதிகளிலும் ஐக்கியப்பட்ட, கிட்டத்தட்ட வழிமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருந்ததில் அமைந்திருந்தது” என்று முல்லர் நிகழ்வுகளை சுருங்கக் கூறுகிறார்.
போரினால் உலுக்கப்பட்டிருந்த முடியாட்சி, தொழிலாள வர்க்கத்தின் இந்த பெரும் தாக்குதலின் கீழ் நிலைகுலைந்து சீட்டுக்கட்டைப் போல சரிகிறது. இரண்டாம் பேரரசர் வில்ஹெல்ம் (Kaiser Wilhelm II) முடிதுறப்பதை அதிகாலையிலேயே பேரரசின் சான்சலர் மக்ஸ் ஃவொன் பாடன் அறிவிக்கிறார். மதிய வேளையில், அவர் அலுவலகத்தை சமூக ஜனநாயகக் கட்சியின் ப்ரீட்ரிக் ஏபேர்ட் (Friedrich Ebert) இடம் ஒப்படைக்கிறார். முன்மாலையில், SPD உறுப்பினரான பிலிப் ஷைடமான் (Philipp Scheidemann) பேர்லின் நகர அரண்மனையின் மாடத்தில் இருந்து மக்களின் ஒரு மிகப்பெரும் கூட்டத்தின் முன்னால் ஜனநாயகக் குடியரசை பிரகடனம் செய்கிறார். ஸ்பார்டகுஸ் லீக் (Spartacus League) தலைவரான கார்ல் லீப்னெக்ட், அதற்கு சற்று தள்ளி அருகிலிருக்கும் லுஸ்ட்கார்டின் (Lustgarten) இல் சோசலிசக் குடியரசைப் பிரகடனம் செய்கிறார்.
அடுத்த நாள், SPD தலைவரான ப்ரீட்ரிக் ஏபேர்ட், “மக்கள் பிரதிநிதிகள் சபை” (Rat der Volksbeauftragten) என்ற ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குகிறார், இதில் மூன்று பெரும்பான்மை சமூக ஜனநாயகக் கட்சியினரும் (Ebert, Philipp Scheidemann மற்றும் Otto Landsberg) USPD இன் மூன்று உறுப்பினர்களும் (சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சியினர், Hugo Haase, Wilhelm Dittmann மற்றும் Emil Barth) இடம்பெற்றிருந்தனர். USPD என்பது 1917 ஏப்ரலில், பரந்த மக்களின் அழுத்தத்தின் கீழ், மேலதிக போர் செலவினங்களுக்கு ஒப்புதலளிக்க மறுத்து ஆகவே SPD இல் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த SPD உறுப்பினர்களால் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாகும். பேர்லின் உலோகத் துறையில் பெரும் செல்வாக்கு செலுத்திய புரட்சிகரப் பிரதிநிதிகள் அமைப்பிலும் எமில் பார்த் ஒரு உறுப்பினராய் இருந்தார்.
ஒரு சில நாட்களில் நாடெங்கும் காட்டுத்தீயாக பரவி, முடியாட்சியை மட்டுமல்லாது, முதலாளிகள் மற்றும் நிலவுடைமையாளர்களின் சொத்துக்களுக்கும் இராணுவ அடுக்கின் அதிகாரத்துக்கும் அச்சுறுத்தலைக் கொடுத்த பெரும் புரட்சிகர அலையை சிறைப்பிடிக்கின்ற, கழுத்தை நெரிக்கின்ற மற்றும் குருதிகொட்ட நசுக்குகின்ற பொறுப்பை மக்கள் பிரதிநிதிகள் சபை (Der Rat der Volksbeauftragten) எடுத்துக் கொண்டது.
1914 கோடையில், SPD தலைவர்கள் ஜேர்மன் அரசாங்கத்தின் போர் செலவினங்களுக்கு ஒப்புதல் வழங்கி வாக்களித்திருந்தனர், அதன்மூலமாக மில்லியன் கணக்கான தொழிலாளர்களை ஏகாதிபத்தியப் போரின் கொலைக்களத்திற்கு அனுப்பியிருந்தனர். நான்கு ஆண்டுகளின் பின்னர், அவர்கள் முதலாளித்துவ ஆட்சியின் மிக முக்கியமான பாதுகாவலர்களாக நிரூபணமாகினர். ஏபேர்ட், தளபதி குரோனரின் கீழான உயர் இராணுவத் தலைமையுடன் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை முடிக்கிறார். எதிர்ப்புரட்சியின் படைத்தலைவர்களுடன் அன்றாட, நேரடி ஒத்துழைப்புடன் புரட்சிகரத் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்யப்படுகின்றன.
தளபதி குரோனர் தனது ஞாபகார்த்த தொகுப்பில் ஏபேர்ட் உடனான இந்த கூட்டணி குறித்து இவ்வாறு எழுதினார்: “தீவிரமயத்திற்கும் போல்ஷிவிசத்திற்கும் எதிரான போராட்டத்தை எடுக்கின்ற ஒரு அரசாங்கத்துடன்தான் இராணுவ அதிகாரிகள் ஒத்துழைக்க முடியும். ஏபேர்ட் அதற்கு தயாராக இருந்தார்.” ஏபேர்ட்டிடம் அவர், இராணுவம் அவரது அரசாங்கத்திற்காக சேவை செய்ய தயாராக இருப்பதாகவும் ஆனால் அதேசமயத்தில் போல்ஷிவிசம் எதிர்த்துப் போராடப்பட வேண்டும் என்று அது கோருவதாகவும் நவம்பர் 10 அன்று தெரிவித்திருந்தார். “ஒரு கூட்டணிக்கான எனது ஆலோசனைக்கு ஏபேர்ட் பதிலிறுத்தார். அதுமுதலாக, அவசியமான நடவடிக்கைகளை ஒவ்வொரு நாள் மாலையிலும் பேரரசின் சான்சலரிக்கும் இராணுவத் தலைமைக்கும் இடையிலான ஒரு இரகசிய வழியில் நாங்கள் விவாதித்தோம். இந்தக் கூட்டணி தன்னை நிரூபணம் செய்திருக்கிறது.”
இந்தக் கூட்டணியின் அடிப்படையில், SPD தலைமையானது புரட்சிகரத் தொழிலாளர்களுக்கு எதிராய் அடிக்கு மேல் அடியாக ஒவ்வொன்றாய் ஒழுங்கமைத்தது. எழுச்சிக்கு எதிராய், துணை இராணுவப்படையான Freikorps இன் சிதறிக் கிடந்த பிற்போக்கான சிப்பாய்களில் இருந்து ஆட்களை சேர்க்குமாறு இராணுவம் மற்றும் கடற்படைக்கான மக்கள் ஆணையர் அறிவுறுத்தப்படுகிறார். “வேட்டைவிலங்கு பாத்திரத்தை யாரோ ஒருவர் ஏற்றுத்தான் ஆக வேண்டியிருக்கிறது” என்ற வார்த்தைகளுடன் அவர் இந்த பொறுப்பை ஏற்றார். நாஜி அதிரடிப்படையின் முன்னோடியாக இருந்த Freikorps உடன் ஒத்துழைப்பதற்கான அழைப்பு SPD செய்தித்தாளான Vorwärts இல் “ஸ்பார்ட்டாகுஸிடம் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!” என்ற தலைப்பின் கீழ் வெளியானது.
ஒரு பக்கத்தில் தொழிலாள வர்க்கத்திற்கும் மறுபக்கத்தில் Freikorps, எதிர்ப்புரட்சி துருப்புகள் மற்றும் ஏபேர்ட் அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல் ஒரு பகிரங்கமான உள்நாட்டுப் போராக அபிவிருத்தியடைகிறது. ஆயினும், ஆயுதமேந்திய சண்டை பேர்லின் வீதிகளில் உக்கிரமடைந்த டிசம்பர் 29 வரையிலும், USPD அமைச்சர்கள் ஏபேர்ட் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை. நிகழ்வுகளில் இம்மியளவும் செல்வாக்கு செலுத்தாமல், அவர்கள் ஒரு இடது-சாரி மூடிமறைப்பாக செயல்பட்டு வந்திருந்தனர்.
கார்ல் லீப்னெக்ட்டும் ரோஸா லுக்செம்பேர்க்கும், போர் தொடங்கியதில் இருந்தே SPD இன் காட்டிக்கொடுப்புக்கு எதிராகப் போராடி வந்திருந்தனர், “Gruppe Internationale” மற்றும் அதன்பின் “Spartakusbund” ஐ உருவாக்கியிருந்தனர்; 1918/19 திருப்பத்தின் சமயத்தில் மாபெரும் புரட்சிகரப் போராட்டங்களது நெருப்பின் மத்தியில் அவர்கள் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர். ஒரு கோட்டையில் நெடுங்காலம் சிறையிலடைக்கப்பட்டதில் இருந்து ஒரு சில வாரங்களுக்கு முன்பாகத்தான் விடுதலை செய்யப்பட்டிருந்த ரோஸா லுக்செம்பேர்க் ஸ்தாபக காங்கிரசில் பிரதான உரை நிகழ்த்தினார். கார்ல் ராடெக் போல்ஷிவிக் கட்சியிடம் இருந்தான வாழ்த்துக்களை வழங்கினார். அதற்கு இரண்டு வாரங்களின் பின்னர், ஜனவரி 15 அன்று, லுக்செம்பேர்க்கும் லீப்னெக்டும் சிறைப்பிடிக்கப்பட்டு குஸ்டாவ் நொஸ்க (Gustav Noske) இன் Freikorps படையினரால் துரோகத்தனமாய் கொல்லப்பட்டனர்.
எதிர்ப்புரட்சி வெற்றியடைகிறது! பேர்லினிலும் மற்ற தொழிற்துறைப் பகுதிகளிலுமான புரட்சிகரத் தொழிலாளர்களுக்கு எதிராய் படுபயங்கர கொடூரத்துடன், அது ஆவேசம் காட்டுகிறது. பத்தாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சமூக ஜனநாயகக் கட்சி இராணுவ அமைச்சரின் துருப்புகள் புரட்சியை இரத்தத்தில் மூழ்கடிக்கின்றன.
இன்று உத்தியோகபூர்வ வரலாற்றுத்துறையினர், இந்த நவம்பர் புரட்சியை, ஜேர்மனியில் ஜனநாயகத்தின் விழிப்பாக ஜனநாயகத்தின் தொடக்கமாக சித்தரிக்கின்றனர். ஆனால் அதுமாதிரியான எந்த வகையிலும் அது சேராது. 1930 இல் லியோன் ட்ரொட்ஸ்கி மிகப்பொருத்தமாக எடுத்துக் காட்டியவாறாக, “1918 ஜேர்மன் புரட்சியானது முதலாளித்துவப் புரட்சியின் ஒரு ஜனநாயகப் பூர்த்தியடைவு அல்ல” மாறாக “ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி சமூக ஜனநாயகக் கட்சியால் தலைசீவப்பட்டதாகும்: இன்னும் சரியாகச் சொல்வதானால், இது பாட்டாளி வர்க்கத்தை வெற்றி கண்டதன் பின்னர் போலி-ஜனநாயக வடிவங்களைப் பாதுகாக்கத் தள்ளப்பட்ட ஒரு முதலாளித்துவ எதிர்ப்புரட்சியாகும்.”
ஜேர்மனியின் முதலாளித்துவ வர்க்கம் அதற்கு 70 ஆண்டுகளுக்கும் முன்பாகவே ஜனநாயக அபிலாசைகளுக்கு கடைசியாய் விடைகொடுத்து விட்டிருந்தது. 1848 இல் அது, ஜேர்மனியெங்கிலும் மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் வியாபித்திருந்த ஜனநாயகப் புரட்சியை முதுகில் குத்தி தன்னை நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்துடன் கூட்டுச்சேர்த்துக் கொண்டுவிட்டிருந்தது. அதன்பின் ஒரு ஏகாதிபத்திய வல்லரசாக ஜேர்மனியின் எழுச்சியானது Hohenzollern முடிஆட்சியின் கீழ் நடைபெற்றது. பிரஷ்ய இராணுவவாதமும், எதேச்சாதிகார பிரஷ்ய அரசு எந்திரமும், அதன் முதுகெலும்பாய் விளங்கிய பெரு நில உடைமையாளர்களும் ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கும் அது தன் ஏகாதிபத்திய இலக்குகளை பின்பற்றிச் செல்வதற்கும் கொண்டிருந்த அபிலாசைகளுக்கு சேவைசெய்தனர். இது முதலாம் உலகப் போரின் பேரழிவில் உச்சம்கண்டது, இப்போர் வெடித்ததற்கு ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கமே பெரும் காரணமாய் இருந்தது.
நான்காண்டு கால காட்டுமிராண்டித்தனமான படுகொலை மற்றும் சொல்லமுடியாத போர்க்குற்றங்களுக்குப் பின்னர் மொத்தமாய் திரண்டெழுந்த தொழிலாளர்களும் சிப்பாய்களும் முதலாளித்துவ-ஜனநாயகப் புரட்சியை பூர்த்தி செய்கின்ற கடமைக்கு முகம்கொடுக்கவில்லை. முதலாளித்துவ வர்க்கம் அரச ஆட்சியின் பாதுகாப்பின் கீழ் ஆளும் வர்க்கமாகி வெகுகாலமாகியிருந்தது; அது போரைக் கொண்டு தனது வரலாற்றுத் திவால்நிலையை நிரூபணம் செய்துவிட்டிருந்தது. முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இராணுவ அடுக்கிற்கும் அவர்களது சடத்துவ அடித்தளத்தை இல்லாது செய்வது, தொழில் முதலைகள், போர் இலாபமீட்டுபவர்கள் மற்றும் நிலவுடைமையாளர்களைப் பறிமுதல் செய்வது, ஒரு சோசலிச தொழிலாளர் அரசை ஸ்தாபிப்பது என்ற பணிக்கு தொழிலாளர்களும் சிப்பாய்களும் முகம்கொடுத்திருந்தனர்.
ஜேர்மனியின் நவம்பர் புரட்சி, அபிவிருத்தி கண்டு வந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு பிரிக்கவியலாத பாகமாக இருந்தது. அதற்கு ஒரு வருடம் முன்பாக ரஷ்யாவில் போல்ஷிவிக்குகளின் தலைமையில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை வென்றிருந்தது. அக்டோபர் புரட்சியின் தலைவர்களாய் இருந்த, லெனினும் ட்ரொட்ஸ்கியும், தமது ஒட்டுமொத்த மூலோபாயத்திற்கும் ஒரு சர்வதேச முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்டிருந்தனர். அவர்கள் ரஷ்யப் புரட்சியை சோசலிச உலகப் புரட்சிக்கான முன்னுரையாக புரிந்திருந்தனர். முதலாம் உலகப் போரில் வெளிப்படுத்தப்பட்ட ஏகாதிபத்திய உலக அமைப்புமுறையின் முரண்பாடுகள் மற்ற நாடுகளின் தொழிலாள வர்க்கத்தையும் புரட்சிக்குள் தள்ளும், அதன்வழியாக ரஷ்யத் தொழிலாளர் அரசை அதன் ஆரம்பகட்ட தனிமைப்படலில் இருந்து துரிதமாக விடுவிக்கும் என்று அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். ஜேர்மனியின் நிகழ்வுகள் இந்த முன்னோக்கை ஊர்ஜிதம் செய்தன.
அக்டோபர் புரட்சியின் வெற்றியானது ஜேர்மன் தொழிலாளர்களுக்கு உத்வேகமளித்த அதேவேளையில், ஆளும் உயரடுக்கினரிடம் அச்சத்தையும் மிரட்சியையும் அது தூண்டியது. “போல்ஷிவிசத்திற்கு எதிரான பாதுகாப்பு” என்பது முற்றுமுதலான பிற்போக்குத்தனத்தின் யுத்தமுழக்கமாக மட்டுமன்றி, SPD மற்றும் UPSD இன் யுத்தமுழக்கமாகவும் ஆனது. “கார்ல் லீப்னெக்ட் .... நவம்பர் 9 அன்று சுயேச்சைகளது ஜேர்மன் நாடாளுமன்ற (Reichstag) கன்னையை “அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே” என்ற ரஷ்ய சுலோகத்திற்கு உறுதிபூணச் செய்ய முயற்சி செய்தபோது, அங்கிருந்த எடுவார்ட் பேர்ன்ஸ்டைன் ’“தலையில் இடி இறங்கியது போல எதிர்வினையாற்றினார்: ‘இது எதிர்ப்புரட்சியை நமக்குக் கொண்டுவருகிறது” என்று நீண்ட மேற்குப் பாதையில் (Der lange Weg nach Westen) ஹைன்ரிக் விங்க்லர் எழுதினார்.
ஒரு புரட்சிகரத் தலைமை இல்லாதிருந்த காரணத்தால் ஜேர்மன் புரட்சி தோல்வியடைந்தது. ஆகுஸ்ட் பேபல் மற்றும் வில்ஹெல்ம் லீப்னெக்ட்டின் தலைமையில், SPD உலகின் மாபெரும் மார்க்சிசக் கட்சியைக் கட்டியெழுப்பியிருந்தது. ஆனால் அதன் தலைமை அடுக்குகள் பொருளாதார எழுச்சி தம்மை இழுத்துச்செல்லப்பட அனுமதித்தன; 1914 இல் தமது சொந்த வேலைத்திட்டத்தைக் காட்டிக்கொடுத்து முதலாம் உலகப் போரை ஆதரித்தன.
இந்த அடியில் இருந்து தொழிலாள வர்க்கம் காலத்தே மீள முடியாதிருந்தது. USPD போர் தொடங்கி மூன்று ஆண்டுகளின் பின்னர்தான் உருவாக்கப்பட்டது, அதுவும் அதன் சொந்த முன்முயற்சியால் உருவாகவில்லை, மாறாக SPD இனால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதன் மூலம் அதற்கு வேறு தேர்வின்றி செய்திருந்தது. அதன் கொள்கைகள் எப்போதும், ஈபேர்ட்டின் அரசாங்கத்தில் பங்கேற்றதில் போலவே, மத்தியவாதப்பட்டதாக, ஒவ்வொரு முதலாளித்துவ அழுத்தத்திற்கும் தகவமைத்துக் கொண்டதாக இருந்தது. ஸ்பார்ட்டகுஸ் லீக்கில் இருந்த தொழிலாள வர்க்கத்தின் மிகப் புரட்சிகரமான மற்றும் மிகத் தீரமான பிரதிநிதிகளும் கூட சரியான நேரத்தில் SPD மற்றும் USPD இல் முறித்துக் கொள்வதற்கு சிரமப்பட்டனர்.
நவம்பர் புரட்சியின் தோல்வி நாசகரமான பின்விளைவுகளைக் கொண்டிருந்தது. அது சோவியத் ஒன்றியத்தை தனிமைப்படுத்தி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை செய்தது. பதிலாக கம்யூனிச அகிலத்தின் கொள்கைகளில் ஜோசப் ஸ்ராலினின் செல்வாக்கு அதிகரித்தமை சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மேலதிக தோல்விகளில் ஒரு முக்கிய காரணியாக ஆனது. இவ்வாறாக, KPD (ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி) அதன் தவறான கொள்கைகளின் விளைவாக ஒரு அசாதாரணமான புரட்சிகர சூழ்நிலையைத் தவறவிட்டது. அத்துடன் 1933 இல், ஸ்ராலினால் உத்தரவிடப்பட்டதாகவும் நாஜிக்களுக்கு எதிரான ஒரு ஐக்கிய முன்னணிக்கு கடுமையான எதிர்ப்பு காட்டியதாகவும் இருந்த KPD இன் பேரழிவுகரமான கொள்கைகள் ஒரு துப்பாக்கிக் குண்டும் கூட சுடப்படாமல் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் விளைந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நவம்பர் புரட்சியானது 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிட்லருக்கு உதவவிருந்த அத்தனை சக்திகளது —Stinnes, Krupp மற்றும் Thyssen போன்ற தொழிற்துறை முதலைகள்; போல் வோன் ஹிண்டன்பேர்க்கும் மற்ற தளபதிகளும் சார்ந்திருந்த நிலப் பிரபுக்கள்; மற்றும் Freikorps படையினர், இவர்களில் இருந்தே ஹிட்லரின் அதிரடிப் பறக்கும்படைக்கு ஆளெடுக்கப்பட்டது— அதிகாரத்தையும் உடைமைகளையும் எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டது. பெரும் நிலப்பிரபுக்கள் பறிமுதல் செய்யப்படுவது அல்லது ஒழிக்கப்படுவது என்ற பிரெஞ்சுப் புரட்சி 120 ஆண்டுகளுக்கு முன்பாக முழுமையாக நிறைவு செய்திருந்த ஒரு பணியையும் கூட அது முன்னெடுக்கவில்லை.
ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மனியிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் 1918 இன் அதே சவால்களுக்கே மீண்டும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதீத சமூக சமத்துவமின்மை, வர்த்தகப் போர் மற்றும் போர் என முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி தீவிரப்படுகின்ற நிலைமைகளில், இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தும் திரும்பிக் கொண்டிருக்கின்றன. வலது-சாரி தீவிரவாதக் கட்சிகள் ஜேர்மனியில் உள்ளிட எங்கெங்கிலும் மேலெழுச்சி கண்டுவருகின்றன, அவ்வாறே இராணுவவாதமும் அரசு அதிகாரங்களது அதிகரிப்பும் மேலெழுந்து வருகின்றன. வர்க்கப் போராட்டம் ஒரு முட்டுமோதலுக்கு வருகிறது. எண்ணிப்பார்க்கத்தக்கவொரு எதிர்காலத்தில் ஒரு சோசலிசப் புரட்சி இல்லையென்றால், மனிதகுலம் மீண்டும் போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் மூழ்குவதற்கு அச்சுறுத்துகிறது.
வர்க்கப் போராட்டத்தின் மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளைத் உள்ளீர்த்துக்கொண்டு ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக போராடுகின்ற ஒரே அரசியல் போக்காக சோசலிச சமத்துவக் கட்சியும் (The Sozialistische Gleichheitspartei) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மட்டுமே இருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல்-சுயாதீனமான, புரட்சிகர சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவசர அவசியமே ஜேர்மன் புரட்சியின் அத்தியாவசியப் படிப்பினையாகும், அதுவே இன்றைய மையமான பணியாகவும் திகழ்கிறது.