Print Version|Feedback
French riot police assault mass protests in Paris
பாரிசில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களை பிரெஞ்சு கலகப் பிரிவு போலிஸ் தாக்குகிறது
By Alex Lantier
26 November 2018
சனியன்று, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு எதிராக, நூறாயிரக்கணக்கானோர் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்தில் இணைந்த நிலையில், பாரிசில் சாம்ப்ஸ்-எலிசே அவென்யூவை நோக்கி மத்திய அணிவகுப்பை நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை கலகப் பிரிவு போலிசார் கடுமையாகத் தாக்கினர். உள்துறை அமைச்சக ஆதாரங்கள், சாம்ப்ஸ்-எலிசேயில் ஆர்ப்பாட்டம் செய்த 8,000 பேர் உட்பட, பிரான்ஸ் எங்கிலும் ஒட்டுமொத்தமாக நடந்த 1600 ஆர்ப்பாட்டங்களில் 106,000 பேர் பங்கேற்றதாகக் கூறின.
சாம்ப்ஸ்-எலிசேயில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதி
ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள சாம்ப்ஸ்-எலிசே அவென்யூவின் கிழக்கு முனையில் வைத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலிசார் தடைவிதித்தனர். முதல் சாலைத் தடைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றடைந்தபோது, திடீர் தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் அங்கு தயாராக இருந்த போலிசார் அவர்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சியும், ரப்பர் குண்டுகள் மற்றும் அடர்ந்த கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களைத் தாக்கியதோடு, அணிவகுத்துச் சென்றவர்கள் மீது கடுமையாக தடியடியும் நடத்தினர். பின்னர், போலிசார் பலமுறை அவென்யூவிற்குள் அணிவகுத்துவந்து, ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர் அல்லது அவர்களை சுற்றிவளைக்க முயன்றனர், அல்லது நடைபாதையை தடைசெய்தனர், மற்றும் உணவக நாற்காலிகளால் தற்காலிக தடுப்புக்களை அமைத்தனர்.
இதற்கு, நடைபாதைக் கற்களையும், வானவெடிகளையும் வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிலிறுத்தனர்; மேலும் அணிவகுப்பாளர்கள், “மக்ரோன் இராஜினாமா செய்” அல்லது “மக்ரோன் வெளியேறு” என்பது போன்ற கோஷங்களை எழுப்பியும், குடிமக்களை ஆயுதமேந்துமாறு அழைப்பு விடுக்கும் பிரெஞ்சு தேசிய கீதத்தை பாடியும் அந்த நாள் முழுவதுமாக மோதல்கள் தொடர்ந்தன. 103 பேரை அப்போது போலிசார் கைது செய்தனர். நேற்று, ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், 101 பேர் 48 மணிநேர தடுப்புக் காவலில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவரையொருவர் வன்முறையாக தாக்குவதற்காக, அல்லது பாதுகாப்பு படையினரை தாக்க “வன்முறை மிக்க தீவிர-வலது மற்றும் தீவிர-இடது வலையமைப்புக்கள்” அணிவகுப்பிற்குள் ஊடுருவின என்று பாரிஸ் போலிஸ் அதிகாரிகள் கூறினர். இது முற்றிலும் பொய்யாகும், வன்முறையை போலிஸ் தான் தொடங்கியது என்பதால் அந்த பெரும் வன்முறைக்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆவார்.
புறநகர் பகுதிகளுக்கும் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கும் அவரவர் விகிதாசாரத்திற்கு சம்பந்தமில்லாத, அளவுக்கு மீறியதான எரிபொருள் வரி அதிகரிப்புக்கான மக்ரோனின் திட்டம் தான் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்தைத் தூண்டியது. இது, தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்களை ஒருங்கிணைத்துக் கொண்ட ஒரு பல்கூறுத்தன்மையுடைய அமைப்பாகும் என்பதுடன், இது, “அரசியல் சாராத” மற்றும் ஒரு “ஜனரஞ்சக” இயக்கமாக தன்னை கட்டமைக்கவும் விரும்புகிறது. இருப்பினும், சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் மக்ரோனுக்கு எதிராக அவர்களது அதிகரித்துவரும் கவனகுவிப்பானது பிரான்சிலும், சர்வதேச அளவிலும் உள்ள பரந்த தட்டினரான தொழிலாளர்களுடன் ஒரு அரசியல் உடன்பாட்டை உருவாக்குகின்றது.
சாம்ப்ஸ்-எலிசேயின் கிழக்குப் பகுதியை பாதுகாக்கும் போலிசின் சாலைத்தடுப்பு
அந்தப் பேரணியின் போது, பொலிஸ் ஒடுக்குமுறையை கண்டனம் செய்தவர்களான பாரிசின் புறநகர் பகுதிகளைச் சார்ந்த தொழிலாளர்களின் ஒரு குழுவை உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் பேட்டி கண்டனர். அதில், பொதுத்துறை தொழிலாளர் ஒருவர் பின்வருமாறு தெரிவித்தார்: “வன்முறையுடன் கூடிய அரசாங்கத்தின் இந்த பதிலிறுப்பு அவ்வளவு சிறந்ததாக இல்லை. இன்று காலையில் அவர்கள் எங்களைத் தாக்கினார்கள். நான் ஒரு தாய், நான் அமைதியாக இருக்கிறேன். எங்கள் மீது கூட கண்ணீர் புகை குண்டுகளை அவர்கள் வீசினார்கள். நாங்கள் வந்து சேர்ந்து சதுக்கத்தில் இருந்தோம், அப்போது அவர்களும் அங்கு வந்து, எங்கள் மீது தடியடி பிரயோகம் செய்தனர், துப்பாக்கிச் சூடு நடத்தினர், மேலும், எங்கள் கண்களில் கண்ணீர் புகை தாக்கியுள்ளது. அங்கு, யாரும் எந்தவொரு பொருளையும் சேதப்படுத்தவில்லை, என்றாலும் அவர்களோ தண்ணீர் பீச்சிகளை வெளியே எடுத்தார்கள். அவர்கள் எங்களை அவ்வாறு அவமதிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”
மற்றொரு தொழிலாளி இவ்வாறு கூறினார்: “பணம் தான் இங்கு ஆட்சி செய்கிறது, மக்ரோன் ஒரு வங்கியாளர். … அவர் அனைத்தையும் அடித்து நொருக்குகிறார். இது முன்னரே தொடங்கிவிட்டது, ஆனால், தற்போது நாங்கள் அதற்கான வரம்புகளை எட்டிவிட்டோம். நான் ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறேன், அனைத்து மருத்துவமனைகளும் எப்போதும் மூடிக் கிடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.” மேலும், ஓய்வூதிய வெட்டுக்களுக்கான மக்ரோனின் திட்டங்கள் பற்றி இதையும் சேர்த்துக் கூறினார்: “ஓய்வூதியம் என்பது ஒரு விசேட சலுகை அல்ல, அது ஒரு தொழிலாளரின் வாழ்நாள் உழைப்பின் பயனாகும். ஆகவே, ஓய்வு பெற்றவர்கள் கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே அது வழங்கப்படுகிறது, ஆனால், இன்று ஓய்வு பெற்றவர்கள் கண்ணியத்துடன் வாழ்வதாக நான் நினைக்கவில்லை. இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்… இங்கு மிக அதிகமாக சமூக சமத்துவமின்மை நிலவுகிறது.”
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீரைப் பாய்ச்சுவதற்கு வசதியாக தண்ணீர் பீரங்கிகளை போலிஸார் தயார்படுத்துகிறார்கள்
ஒரு மூத்த தொழிலாளி பின்வருமாறு தெரிவித்தார்: “நாங்கள் மிக மிக பின்னடைந்து விட்டோம். எங்களது பெற்றோர்கள் சமூக உரிமைகளை நிலைநாட்ட போராடினார்கள், எங்களுக்காக அவர்கள் வென்றெடுத்த அனைத்தையும் நாங்கள் இப்போது தொலைத்துவிட்டோம். நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன், இப்போது அவர்கள் பணியாளர்களை வாடகைக்கு அமர்த்துகிறார்கள், நீங்கள் தவறுதலாக ஒருமுறை ஏதேனுமொரு தவறு செய்துவிட்டாலும் கூட, நீங்கள் பணி நீக்கம் செய்யப்படுவீர்கள். இனிமேல் தொழிலாளர்கள் மதிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் எங்களை சடப் பொருட்களாக பாவிக்கின்றனரே அன்றி, வேறொன்றும் இல்லை. இது, ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் வெடித்தே தீரும் என்ற நிலையில் எப்போதும் இருந்துவந்த அந்நிலைமை, இப்போது வெடிக்கத் தொடங்கிவிட்டது.”
மேலும் அவர் கூறினார்: “நாங்கள், 1,200 யூரோக்களை அமைச்சர்களுக்கு கொடுத்து மாதக் கடைசிவரை அவர்களால் வாழமுடியுமா எனப் பார்க்க வேண்டும், கூறுங்கள். எங்களது குழந்தைகள் எல்லோரும் போராடி வருகின்றனர், 30 வயதாகும் வரை அவர்கள் எமது இல்லங்களில் வசிக்கின்றனர், ஏனென்றால் அவர்களுக்கு வீடுகள் கிடைப்பதில்லை, பெரும்பாலான தொழில்களில் நுழைவு மட்டத்திலான அனைத்து வேலைகளும் மிகக்குறைந்த ஊதிய விகிதத்தையே கொண்டுள்ளன. அவர்கள் கடவுளுக்குத்தான் நன்றி கூறவேண்டும், அவர்களுக்கு அவர்களே அடிப்படை ஆதாரங்கள் எதையும் கொண்டிராத நிலையில், அவர்களுக்கு உதவுவதற்கு மூத்த குடிமக்கள் இன்னமும் தயாராக உள்ளனர். நாங்கள் முற்றிலும் விரக்தியடைந்துவிட்டோம்.”
ஒரு பதாகையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது, “யேமனில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இறக்கிறது. பிரெஞ்சு அரசாங்கம் அவர்களது கொலையாளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது. நமது தலைவர்களில் கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளது.”
கொத்தனாராக பணிபுரியும் Didier என்பவர், WSWS க்கு இவ்வாறு தெரிவித்தார்: “மக்ரோன் இராஜிநாமா செய்து பதவியை விட்டு விலக வேண்டும். அவருக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை, அவ்வளவு தான். அந்த மனிதரை இனிமேல் நாங்கள் விரும்பவில்லை என்பதால் அவர் விலக வேண்டும். அவர் செல்வந்தர்களுக்கானவர், தொழிலாள வர்க்கத்தினருக்காக அல்ல…. மூன்று மாதங்களுக்கு முன்பு எனது முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன், எனக்கு மாரடைப்பும் ஏற்பட்டது, ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் நான் உழைத்தேன். நாங்கள் போராடிக் கொண்டிருக்கையில், அவர் அங்கு வெறுமனே உட்கார்ந்து பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகளோ மேலும் ஏழைகளாகிறார்கள்; நாங்கள் அடிமைகளாக இருந்த அதே காலத்தை நோக்கி திரும்பச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதாகவே தோன்றுகிறது.”
Didier, ஐரோப்பிய இராணுவம் குறித்த மக்ரோனின் திட்டங்களையும் கண்டனம் செய்தார்: “இந்த போர்கள் பயனுள்ள நோக்கத்திற்காக உதவுவதில்லை, ஒருபோதும் அவை செய்ததில்லை. இது, வியட்நாம் போர், அல்ஜீரிய போரைப் போன்றது. அவை முட்டாள்தனமான போர்கள், எல்லாம் தமக்கு தெரியும் என்று நினைப்பவர்களால் மக்கள் கொல்லப்படுவதற்கு அனுப்பப்படுகிறார்கள்: அவர்கள் வேறு யாருமல்ல, நாங்கள் தான். இது எப்போதும் ஒரே மாதிரியானது. முதலாம் உலகப் போரினால் என்ன நிறைவேறியது? எதுவுமில்லை.”
ஒரு கடைக்காரரான டானியல் இவ்வாறு கூறினார்: “நான் பாஸ்தா சாப்பிடுகிறேன், நிறைய பாஸ்தா சாப்பிடுகிறேன், அடுத்து உருளைக் கிழங்கு சாப்பிடுகிறேன். எப்போதும் உருளைக் கிழக்கு சாப்பிடுவதால் நான் நோய்வாய்படுகிறேன்… முந்தைய ஜனாதிபதிகளும் எங்களுக்கு நிறைய தீங்கிழைத்தனர், என்றாலும் இவர் எல்லோரையும் விட மிகவும் மோசமானவராக இருக்கிறார். மக்கள் வீதிகளுக்கு வந்துவிட்டனர், அவர் கேட்க வேண்டும், அப்படியல்லாமல், உண்மையில் மலத்தின் மீது துப்புவது போல் அவர் எங்கள் மீது துப்புகின்றார். அவர் இதை தொடர்ந்தால், ஒட்டுமொத்த பிரான்சும் வெடிக்கும், அதையும் அவர் அறிவார்.” மேலும் டானியல், “எனது ஓய்வூதியம் மாதத்திற்கு வெறும் 480 யூரோக்கள் தான், எனவே எங்களிடம் இருந்து பறிப்பதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் விளக்கமளித்தார்.
சமூகத்தின் மேல்தட்டினரின் 10 சதவிகிதத்திற்கு வெளியே உள்ள மக்களின் கவலையை பிரதிபலிக்கும் கோரிக்கைகளின் இந்த வெளிப்பாடு பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவிலான ஆளும் உயரடுக்கினரை தடுமாறச் செய்து வருகிறது. சிறிய அரசாங்கத்திடம் வெறும் ஒரு வரி கிளர்ச்சியை மட்டுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைக்கின்றனர் என்பது மோசடியானது. உண்மையில், சமூக சமத்துவமின்மை மற்றும் போர் மீதான அவர்களது விமர்சனங்கள், ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களால் வெறுக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாத கொள்கைகளுக்கான எதிர்ப்பையே பிரதிபலிக்கின்றது.
“இன்று நாம் ஜூலை 14, 1789 இல் இருக்கிறோம்” என மஞ்சள் சீருடை குறிப்பிடுகிறது,
பாரிஸ் ஆர்ப்பாட்டத்தின் மீதான மக்ரோனின் பகிரங்கமான நியாயப்படுத்தமுடியாத என்பது ஒரு வர்க்கப் பிரச்சினையாகும். அது அதன் செல்வாக்கையும் சலுகைகளையும் பாதுகாக்கும் என்ற நிலையில், நிதியப் பிரபுத்துவம் நனவாக தொழிலாளர்களுக்கு விரோதமாக உள்ளது. சமூக கோபமும் அரசியல் எதிர்ப்பும் வெடிக்கத் ஆரம்பித்துள்ளன என்பது நன்றாகத் தெரிந்தும், சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கான ஒரு முயற்சியாக, பிரான்சில் அனைவருக்குமான இராணுவ சேவைக்கு திரும்புவது உட்பட, அவர்கள் போருக்கும் இராணுவவாதத்திற்கும் தயார்செய்து கொண்டிருக்கின்றனர். மஞ்சள் சீருடையாளர்களின் கோரிக்கைகள் புரட்சிகர தாக்கங்களைக் கொண்டுள்ளன, அத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கும் நிதியியல் பிரபுத்துவத்திற்கும் இடையிலான ஒரு அரசியல் மோதலும் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
இது, பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்களையும் செல்வந்த நடுத்தர வர்க்கத்துடன் இணைந்த அரசியல் கட்சிகளையும் அம்பலப்படுத்துகிறது. இந்த சக்திகள் மஞ்சள் சீருடை எதிர்ப்பாளர்களின் அணிவகுப்பை புறக்கணித்தனர். மாறாக, ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), தொழிலாளர் போராட்டம் (Lutte ouvrière-LO), மற்றும் பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) உறுப்பினர்களும் பாலியல் வன்முறைக்கு எதிராக ஓபரா சதுக்கத்தில் நடந்த ஒரு சிறிய எதிர்ப்பில் கலந்து கொண்டனர்.
கிரேக்கத்தில் சிக்கன-சார்பு சிரிசா அரசாங்கத்தின் கூட்டணியான ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் அலெக்சிஸ் கோர்பியர், “தேர்தல்களுக்காக” மக்ரோனைக் கேட்டுள்ளமை, சென்ற ஆண்டு மக்ரோனின் பிரதமராக விரும்புவதாக மெலோன்சோன் முன்வைத்த வாய்ப்பை மறுதலிக்கின்றது. இது, மக்ரோனை அதிகாரத்தில் இருந்து நீக்க விரும்பும் பிரான்ஸ் முழுவதிலுமான மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு மோசடியாகவும் அரசியல் முட்டுசந்தாகவும் உள்ளது.
பிரான்சிலும் சர்வதேசரீதியாகவும் மஞ்சள் சீருடையாளர்களின் கோரிக்கைகள் புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாகவும், அரசியல் அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்தின் கையில் மாற்றுவதன் மூலமாகவும் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதே தெளிவாக தெரிகின்றது.
சாம்ப்ஸ் எலிசேவிலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதற்கு சி.ஆர்.எஸ். கலகப் பிரிவு போலிசார் தயாரிப்பு செய்கின்றனர்
சிறிய உறுப்பினர் கட்டணத்தை அடித்தளமாகவும், நாட்டின் அரச மானியங்களில் பில்லியன் கணக்கான யூரோக்களைப் பெறுவதுமான பிரெஞ்சு தொழிற்சங்கங்களை மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்கள் நிராகரிக்கின்றனர். தொழிற்சங்க அதிகாரிகளால் அவர்கள் பலமுறையும் நவ-பாசிஸ்டுகள் என தாக்கப்பட்டுள்ளனர். மேலும், டானியல் இவ்வாறு குறிப்பிட்டார்: “அரசு, தொழிற்சங்கங்களுக்கு நிதி வழங்குகிறது. நாங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு நிதியளிக்கப்படுகின்றது. மக்களின் தேவைக்காக அவர்கள் சிலவற்றை கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த கூடுதலாக தாங்கள் ஒன்றும் செய்யக்கூடாது என கூறிக்கொள்கின்றர்.”
மேலும் Didier கூறினார், “தொழிற்சங்கங்களைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்… என்னைப் பொறுத்தவரை, தொழிற்சங்கங்கள் என்பவை ஒரு பெரிய கொழுத்த பூஜ்யம். அவர்கள் அவர்களது வேலையை செய்யவில்லை. இப்பவும் அதையே அவர்கள் திரும்பச் செய்துள்ளனர்; மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், “நாங்கள் வேலைநிறுத்தம் செய்கிறோம்,” என்று ஒரு தொழிற்சங்கம் கூறினால் போதும், அங்கு ஒரு வேலைநிறுத்தம் நடந்தது. ஆனால், இன்று ஒரு தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றபோது, ‘இல்லை, தோழர்களே, வீட்டிலேயே இருப்போம்,’ என்று மற்றவர்கள் கூறிவிடுகிறார்கள். மூடுவதற்கு திட்டமிடப்படுவதான பேவ்வாஸில் உள்ள நெஸ்லே நிறுவனத்தில் வேலை செய்யும் Didier இன் உறவினர்கள், இதையும் சேர்த்துக் கூறினர்: “அது வேலைநிறுத்தத்தில் இருந்தபோது, நான் அந்த ஆலையை பார்த்திருக்கிறேன். பாதி பேர் வெளியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர், பாதி பேர் உள்ளே இருந்தனர். இதுதான் தொழிற்சங்கங்கள் செய்யும் வேலை என்பது மட்டும் தெரிகிறது.”
மேலும் அவர், “அமைச்சர்களும், தொழிற்சங்கங்களும் ஒரே சட்டியில் இருந்தே உண்கின்றனர். அது பிரித்தாளும் கொள்கையாகும்: இங்கே இருங்கள், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள், ஆனால் விடயங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் எப்படி செயலாற்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும்” என்றும் கூறினார்.