Print Version|Feedback
France’s ruling parties launch anti-Muslim campaign against sports veil
பிரான்சின் ஆளும் கட்சிகள் உடற் பயிற்சியின் போது அணியும் முக்காடுக்கு எதிராக முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தை தொடங்குகின்றன
By Will Morrow
28 February 2019
செவ்வாயன்று மாலை, பிரான்சை மையமாக கொண்ட விளையாட்டு உடை விற்பனை நிறுவனம் டெக்காத்லோன் (Décathlon), நடைபயிற்சியின் போது அணிவதற்காக வடிவமைக்கப்பட்ட, இஸ்லாமிய உடற்பயிற்சி முக்காடை பிரான்சில் அதன் கடைகளில் விற்பனைக்கு வைக்கும் திட்டங்களை முன்னெடுக்கப் போவதில்லை என்று அறிவித்தது. இந்த பின்வாங்கல், அந்த சாதனத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென்று கோரி, மூன்று நாட்களாக நடந்து வந்த பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் இனவாத மற்றும் முஸ்லீம்-விரோத விஷமப் பிரசாரத்திற்கு விடையிறுப்பாக வந்தது. அப்பிரச்சாரத்தின் விளைவாக அந்நிறுவனத்தையும் மற்றும் அதன் பணியாளர்களையும் அச்சுறுத்துவதற்குப் பாசிசவாத அடுக்குகள் அணித்திரண்டிருந்தன.
அந்த தலைமறைப்பு வெளியிடப்பட இருப்பதாக சந்தைப்படுத்தும் வலைப்பதிவாளர் ஒருவர் தகவல் வெளியிட்டதும், வலதுசாரி குடியரசு கட்சியின் ஒரு பெண் செய்தி தொடர்பாளர் Lydia Guirgous, பெப்ரவரி 24 இல் அப்பிரச்சாரத்தைத் தொடங்கி இருந்தார். Guirgous பின்வருமாறு ட்வீட் செய்தார்: “உம்மாஹில் தங்கள் இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஹிஜாப் கொண்டு தலைகளை மூடிய பெண்களையும் மற்றும் ஆண்களையும் மட்டுமே ஏற்றுக் கொள்கின்ற #இஸ்லாமியவாதத்திற்கு டெக்காத்லோன் தன்னைத்தானே கீழ்படிய செய்து கொள்கிறது. இவ்விதத்தில் டெக்காத்லோன் சந்தை மற்றும் வகுப்புவாத சந்தைப்படுத்தலின் பலிபீடத்தில் நமது நாகரீக நன்மதிப்புகளைப் பலியிடுகிறது.”
இந்த ட்வீட் செய்தி அரசியல் ஸ்தாபகத்தில் முஸ்லீம்-எதிர்ப்பு அறிக்கைகளின் ஒரு பிரளயத்தைத் தூண்டிவிட்டது, மதவாத ஆடை விற்பனையை தடுப்பதன் மூலமாக பெண்களைப் பாதுகாக்க முயல்வதாக சிலர் அதே அர்த்தமற்ற மோசடியான சாக்குபோக்குகளைப் பயன்படுத்தினர்.
Tarn-et-Garonne மாவட்டத்திற்கான சோசலிஸ்ட் கட்சியின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வலெரி ராபோ பின்வருமாறு ட்வீட் செய்தார்: “பிரான்சில் டெக்காத்லோனைப் புறக்கணிக்கலாமா?” டெக்காத்லோனை "ஆண்-பெண் பாகுபாட்டு கொள்கையை ஊக்குவிக்கும் நிறுவனமாக" கண்டித்து, சர்வதேச பெண்ணுரிமைகள் குழு மற்றும் மதசார்பற்ற குடியரசு குழுவின் ஒரு வெட்கக்கேடான கூட்டு அறிக்கையை முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அமைச்சர் Laurence Rossignol வெளியிட்டார்.
Bouches-du-Rhone மாவட்டத்திற்கான குடியரசுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் Valérie Boyer கூறுகையில், "பொது இடங்களில் பெண்கள் மீது சுமத்தப்படும் ஆண்-பெண் பாகுபாட்டை நீடித்துக் கொண்டு செல்ல தெரிவு செய்திருக்கும் இந்த பிரெஞ்சு நிறுவனத்தைக் கண்டு கொதிப்படைந்திருப்பதாக" தெரிவித்தார்.
டெக்காத்லோன் நிறுவனம் Guirgous இக்கான ஒரு பதிலில், "ஹிஜாப் ஒரு சில நடைப்பயிற்சியாளர்களுக்கு தேவைப்பட்டது, உடற்பயிற்சிக்கான இந்த தேவைக்கு நாங்கள் விடையிறுத்தோம்,” என்று ட்வீட் செய்ததும், அதற்கடுத்த நாள் இத்தாக்குதல்கள் தீவிரமடைந்தன. இந்த சாதனம் ஏற்கனவே மொரோக்கோவில் விற்பனையில் உள்ளது.
செவ்வாயன்று காலை மக்ரோன் அரசாங்கம் பகிரங்கமாக இப்பிரச்சாரத்தில் இணைந்தது. RTL உடனான ஒரு பேட்டியில், நல்லிணக்கம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Agnes Buzyn கூறுகையில், “ஒரு பிரெஞ்சு நிறுவனம் முக்காட்டை ஊக்குவிக்காமல் இருப்பதையே நான் விரும்புவேன். இது சட்டவிரோதமானதல்ல, ஆனாலும், இது நான் பகிர்ந்து கொள்ளாத பெண்களின் பார்வை. அது நமது தேசத்தின் நன்மதிப்புகளை எடுத்துக்காட்டாது என்று காண்கிறேன்,” என்றார். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கான மற்றொரு செய்தி தொடர்பாளர் Aurore Bergé, அவர் “நமது நன்மதிப்புகளை முறிக்கும் ஒரு வர்த்தக சின்னத்தின் மீது இனியும் நம்பிக்கை வைக்க போவதில்லை" என்று ட்வீட் செய்தார்.
அதேநாள் காலை, வலதுசாரி கட்சியான எழுக பிரான்ஸின் நிக்கோலா டுபோன்-எய்னியோன் பிரான்ஸ்2 தொலைக்காட்சி பேட்டி ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார், அவர் அவரின் இரண்டு மகள்களை சவூதி அரேபியா போன்ற ஒரு நாட்டில் வளர அனுமதிக்க விரும்பவில்லை என்று தெரிவித்ததுடன், டெக்காத்லோனை புறக்கணிக்குமாறும் கோரினார்.
Emmanuelle Gave இன் சமூக ஊடக பதிவுகளில் ஒன்று "100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிறைய கறுப்பினத்தவர்கள் இருக்கிறார்கள்" என்றும், “வீட்டு வேலையாளர்களாகவோ அல்லது பராமரிப்பாளர்களாகவோ முஸ்லீம்களை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என்றும் குறிப்பிட்டிருந்த நிலையில், செய்தி நிறுவனங்கள் அப்பெண்மணியின் பதிவுகளைப் பிரசுரித்ததும், ஒரு வாரத்திற்கு முன்னர் தான், ஐரோப்பிய தேர்தல்களில் வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து அவர் பின்வாங்க நிர்பந்திக்கப்பட்டார்.
அதே நாளில், மரீன் லு பென்னின் அதிதீவிர வலது தேசிய பேரணி, “பொதுவிடங்களில் இஸ்லாமிய வகுப்புவாதத்தின் சமீபத்திய அத்துமீறலை" கண்டித்து, ஓர் அறிக்கை பிரசுரித்தது. அது சோசலிஸ்ட் கட்சியினதும் மற்றும் மற்றவர்களினதும் முஸ்லீம்-விரோத தர்மயுத்தத்தை வரவேற்ற அதேவேளையில், "பாரியளவிலான புலம்பெயர்வு கொள்கைகளே வகுப்புவாதத்திற்கான மிகவும் ஐயத்திற்கிடமற்ற காரணங்கள்" என்று அது குறிப்பிட்டு வருகின்ற கொள்கைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரியது.
இந்த மிதமிஞ்சிய அருவருக்கத்தக்க நடவடிக்கை அதன் உள்நோக்கத்தின் விளைவைக் கொண்டிருந்தது, அந்நிறுவனத்தையும் அதன் பணியாளர்களையும் அச்சுறுத்த பாசிசவாத அடுக்குகள் அணிதிரண்டன. டெக்காத்லோன் ட்வீட் செய்தது, “இன்று காலையில் இருந்து எங்களின் வாடிக்கையாளர் சேவைகளுக்கு 500 க்கும் அதிகமான அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்துள்ளன. எங்கள் பணியாளர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர், அச்சுறுத்தப்பட்டுள்ளனர், சிலவேளைகளில் சரீரரீதியிலும் கூட.”
டெக்காத்லோன் அதற்கு வந்த பல்வேறு முஸ்லீம்-விரோத மற்றும் யூத-எதிர்ப்புவாத தகவல்களின் சாரக் குறிப்புகளை வெளியிட்டது. ஒரு குறிப்பு குறிப்பிட்டது: “கேவலமான கும்பல். பணத்தை மோப்பம் பிடிக்காதே. நீ பிரெஞ்சு குடியரசின் நன்மதிப்புகளைக் காட்டிக்கொடுக்கிறாய். இஸ்லாமியவாத படையெடுப்புக்குப் பங்களிப்பு செய்வதற்காக நீ வெட்கப்பட வேண்டும். போலாந்தின் உலைகளில் இடப்பட்ட வேண்டத்தகாதவர்களைப் போன்ற நிலைக்கு நீ ஆளாவாய்.” மற்றொரு செய்தியோ அந்நிறுவனம் “வெடிகுண்டு பட்டைகளை" (explosive belts) சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதா என்று வினவியது.
அச்சாதனம் “தூண்டிவிட்டுள்ள வன்முறை விவாதத்தை முகங்கொடுப்பதால்" மற்றும் "எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் கவலையினால்" அந்த சாதனத்தைக் காலவரையின்றி திரும்ப பெறுவதாக செவ்வாயன்று மாலை டெக்காத்லோன் அறிவித்தது.
இதற்கு விடையிறுப்பாக, குடியரசு கட்சியின் (LR) சட்டமன்ற உறுப்பினர் Lydia Guirons, “நம் நாரீகத்தின் நன்மதிப்புகள் ஜெயித்தன. ஹிஜாப்புகள் விற்பதிலிருந்து டெக்காத்லோன் நீக்கி இருப்பதைக் குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவொரு புத்திசாலித்தனமான முடிவு. இஸ்லாமியவாதத்திற்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு மோதலாக இருக்கும்,” என்பதை நிலைநிறுத்தி உள்ள "குடிமக்களின் அணிதிரள்வு" என்று களிப்புடன் ட்வீட் செய்தார்.
இந்த வெறுக்கத்தக்க நடவடிக்கையானது, முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டு வரும் கட்சிகளில் ஒவ்வொன்றும் நடத்துகின்ற "யூத-எதிர்ப்புவாதத்திற்கு" எதிரான உத்தியோகபூர்வ பிரச்சாரத்தினது மோசடி குணாம்சத்தை அம்பலப்படுத்துகிறது. இதற்கும் யூத-எதிர்ப்புவாதத்தை எதிர்ப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மேலும் இவை ஒவ்வொன்றும் தொழிலாள வர்க்கத்தில் சமூக சமத்துவமின்மைக்கு அதிகரித்து வரும் இடதுசாரி எதிர்ப்பை யூத-எதிர்ப்புவாதம் என்றும் பாசிசவாதம் என்றும் அவதூறு செய்வதுடன் சம்பந்தப்பட்டுள்ளது.
யூத-எதிர்ப்புவாதத்திற்கும் பாசிசவாதத்திற்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பைக் குறைத்துக்காட்டவும் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிச எதிர்ப்புடன் பிணைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வார சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதைப் போல, யூத-எதிர்ப்புவாதம் மீதான பிரச்சாரமானது லு பென்னின் தேசிய பேரணியையும் (RN) மற்றும் முஸ்லீம்-விரோத விஷமப்பிரச்சாரத்தை ஊக்குவித்து வரும் ஏனைய பாசிசவாத சக்திகளையும் பலப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
“மஞ்சள் சீருடை" போராட்டங்களில் ஓர் ஆரம்ப வெளிப்பாட்டை மட்டுமே காட்டியுள்ள தொழிலாள வர்க்கத்தின் இடது நோக்கிய இயக்கத்திற்கு விடையிறுப்பதில், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் வேகமாக வலதுக்கு நகர்ந்து வருகின்றன.
மக்ரோன் கடந்த புதனன்று ஓர் உரையில், "தீவிர இஸ்லாம்" வளர்ச்சி குறித்து மீண்டும் மீண்டும் எச்சரித்ததுடன், தொழிலாள வர்க்க அண்டைப்பகுதிகளில் போலிஸ் நடவடிக்கைகளை அதிகரிக்க அழைப்பு விடுத்தார். “இந்த சித்தாந்தம் குறிப்பிட்ட புறநகர் பகுதிகளில் அழுகல் போல பரவி வளர்ந்து வருகிறது,” என்று கூறிய அவர் "குடியரசு இந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற" அழைப்பு விடுத்தார்.
பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் நீண்டகாலமாகவே முஸ்லீம் முகத்திரைக்கு எதிரான பிரச்சாரங்களை இஸ்லாமிய-விரோத வெறுப்பைத் தூண்டிவிடுவதற்கும் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தவும் பயன்படுத்தி வருகிறது. 2010 இல், உலகளாவிய நிதிய பொறிவும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் சமூக செலவினக் குறைப்பும் தொடங்கி இரண்டாண்டுகளுக்குப் பின்னர், ஜனாதிபதி சார்க்கோசி சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் முழுமையாக முகத்தை மூடும் முகத்திரைகளுக்குத் தடை விதித்தார்.
ஆளும் உயரடுக்கினர் அவர்களின் பிரச்சாரத்தில், முகத்திரைகள் மீதான தடைகளை ஆதரித்துள்ள அல்லது ஏற்றுக் கொண்டுள்ள பிரெஞ்சு இடது என்று கூறி வந்துள்ளவைகளின் உடந்தையான மவுனத்தை பெரிதும் கணக்கில் கொண்டுள்ளன.
அடிபணியா பிரான்சின் தலைவர் (La France Insoumise – LFI) ஜோன் லூக் மெலோன்சோன் முஸ்லீம்-விரோத பிரச்சாரத்தின் மத்தியில் மவுனமாக இருந்தார். LFI இன் வலைத் தளத்தில் அறிக்கை ஒன்றுமே இல்லை—அதில் பெரும்பாலானவை ஜேர்மன் இடது கட்சியின் சாரா வாகன்கினெக்ட் இனது Aufstehen இயக்கத்தை ஆதரிக்கிறது, இது முஸ்லீம்-எதிர்ப்பு பெஹிடா இயக்கத்துடன் அணிசேர்வது குறித்து விவாதித்து வருகிறது. முகத்திரை மீதான தடைகளுக்கு ஒரு நீண்டகால ஆதரவாளரான லூத் ஊவ்றியேர் (Lutte ouvrière – LO) போலவே, டெக்காத்லோன் விவகாரம் மீது மெலோன்சோனின் பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் பக்கங்களும் மவுனமாக உள்ளன.