Print Version|Feedback
Sri Lankan plantation companies reap huge profits while attacking workers’ wages and conditions
இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நிலைமைகளை வெட்டும் அதே வேளை பாரிய இலாபத்தினை குவிக்கின்றன
By Saman Gunadasa
27 February 2019
கடந்த டிசம்பரில் அடிப்படை நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக (5.50 டாலர்) அதிகரிக்க கோரி இலட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அதை நிராகரித்த இலங்கை பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதியான இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், அதை தாங்க முடியாது என அறிவித்தது.
கம்பனிகளின் வருடாந்த அறிக்கையின் படி, பெரும்பாலான பெருந்தோட்டக் கம்பனிகள் பாரிய இலாபத்தினை பெற்றுள்ள நிலைமையிலேயே இவ்வாறு கூறிக்கொள்கின்றன. மேலும், தேசிய தரகு நிறுவனங்களதும், அதேபோல் உலக சந்தையை கையாளும் சர்வதேச கம்பனிகளினதும் இலாபம் உயர்ந்துகொண்டே இருக்கின்றன.
இந்த தேயிலை கம்பனிகள், உற்பத்தி மற்றும் வருகைக்கான கொடுப்பனவுகளை வெட்டிய பின்னர், 20 ரூபாய் அற்ப சம்பள உயர்வுடன், தொழிலாளர்களின் மொத்த நாள் சம்பளத்தை 750 ரூபாவாக ஆக்கியுள்ளன.
நாட்டில் 24 பிராந்திய தோட்ட கம்பனிகள் உள்ளன. பின்வருவன, அவற்றில் ஏழு கம்பனிகளின் 2017-2018 நிதி ஆண்டுக்கான தேறிய இலாபமாகும்.
* கொட்டகல பிளான்டேஷன்: 255 மில்லியன் ரூபாய்கள் (1,417,769 டாலர்கள்)
* மஸ்கெலியா பிளாண்டேஷன்: 251 மில்லியன் ரூபாய்கள்
* பொகவந்தலாவ பிளாண்டேஷன்: 163 மில்லியன் ரூபாய்கள்
* கலனிவெளி பிளாண்டேஷன்: 160 மில்லியன் ரூபாய்கள்
* ஹொரன பிளாண்டேஷன்: 84 மில்லியன் ரூபாய்கள்
* வட்டவள பிளாண்டேஷன் மற்றும் ஹட்டன் பிளாண்டேஷன் (சன் சயின் ஹோல்டிங்ஸ்): 1,200 மில்லியன் ரூபாய்கள்
* எல்பிடிய பிளாண்டேஷன்: 335 மில்லியன் ரூபாய்கள்
சுமார் எட்டு தேசிய தேயிலை தரகு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் இரண்டினது 2017-2018 நிதி ஆண்டுக்கான தேறிய இலாபம் பின்வருமாறு.
* சிலோன் டி புரோக்கர்ஸ்: 100 மில்லியன் ரூபாக்கள் (556.000 டாலர்)
* ஏசியா சியக கமோடிட்டிஸ்: 97 மில்லியன் ரூபாய்கள்
கூட்டுத்தாபன மற்றும் தனி பங்கு உரிமையாளர்கள் இலாபமடையும் அதேவேளை, கம்பெனிகளின் நிர்வாகிகள் பாரிய செல்வ வளங்களை பெறுகின்றனர். கலனிவெளி பிளாண்டேஷனின் மூன்று நிறைவேற்று அதிகாரிகளுக்கான வருடாந்த சம்பளம் 35 மில்லியன் ரூபாய்களாகும். அதாவது அவர்களில் ஒவ்வொருவரது மாதாந்த சம்பளம் ஒரு மில்லியனுக்கு அதிகமாகும்.
இதை ஒரு தொழிலாளியின் மாத சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதைய அற்ப அதிகரிப்புக்குப் பின்னர், ஒரு தொழிலாளி மாதம் 26 நாட்கள் வேலை செய்துள்ளதாக கருதினால், அவன் அல்லது அவளுடைய சம்பளம் 19,500 ரூபாவாகும். வேறு வேர்த்தையில் சொல்வதானால், ஒரு நிறைவேற்று அதிகாரி, தன்னுடைய வேலை ஆளைவிட 50 மடங்கு சம்பளத்தை பெறுகிறார்.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட, மிகப் பிராமாண்டமான பூகோள தேயிலை கம்பனியான யுனிலிவர், லிப்டன் வணிகவகையின் கீழ் உலகெங்கிலும் தேயிலையை விற்பனை செய்கிறது. யுனிலிவர் அதன் "புத்துணர்வூட்டல்" உற்பத்தி பண்டங்களின் பிரிவில் ஐஸ் கிறீம் உடன் சேர்த்து தேயிலையை விற்பனை செய்கின்றது. இந்தப் பிரிவின் 2017 இற்கான தேறிய இலாபம் 11.3 வீதமாகும், அதாவது 6,486 மில்லியன் பவுண்டுகளாகும். கடந்த வருடம் அதன் இலாபம் 9.8 சதவீதம் ஆகும், அதாவது 5,547 மில்லியன் பவுண்டுகளாகும்.
உலகின் இரண்டாவது தேயிலை வணிகவகையான டெட்லே, இந்தியாவை தளமாக கொண்ட டாடா குளோபல் பிவரேஜஸ்சுக்கு சொந்தமானதாகும். இந்த பன்னாட்டுக் கம்பனி உலகெங்கும் தேயிலை விற்றபனை செய்து 5,670 மில்லியன் இந்திய ரூபாய்கள் (80 மில்லியன் டாலர்) தேறிய இலாபத்தை 2017-2018 இல் பெற்றுக்கொண்டது. அதற்கு முந்திய வருட இலாபம் 4,640 மில்லின் ரூபாய்கள் ஆகும்.
இலங்கை, கென்யா, வியட்நாம், தென் ஆபிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் தோட்டத் தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டி, இந்த சர்வதேச கூட்டுத்தாபனங்கள் பாரிய இலாபத்தினை பெறும் அதேவேளை, அவற்றின் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதாக பாசாங்கு செய்கின்றன.
யுனிலிவர் கம்பனியின் 2017-2018 வருடாந்த அறிக்கை கூறுவதாவது: "மூலோபாய மனித உரிமை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு வணிக சிக்கல்களுக்கு உதவுவதுடன் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் தொடரும் துஷ்பிரயோகங்களை தடுக்கவும் செயற்படுவதன் மூலம், இது வணிக வளர்ச்சியுடன் ஒரு சாதகமான சமூக தாக்கத்தை ஏற்படுத்தவும் முற்படுகிறது."
இது ஒரு பொய்யாகும். இதக்கு மாறாக, ஒரு "சாதகமான சமூக தாக்கத்தை" ஏற்படுத்துவதை விட, உண்மையில் இந்த நிறுவனங்கள், தங்களின் அதி சிறந்த இலாபங்களை உயர்த்துவதற்காக தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகளை மேலும் குறைத்து வருகின்றன. உலகளாவிய கொள்வனவு கம்பனிகள், அதி சிறந்த இலாபங்களை பேணுவதை அடிப்படையாகக் கொண்டே, தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளை தேர்வு செய்கின்றன.
போட்டித்திறன் மற்றும் தங்களுடைய சந்தைகளையும் இலாபங்களையும் தக்க வைத்துக் கொள்வதன் பேரில், தோட்டக் கம்பெனிகள் உற்பத்தி செலவுகளைக் குறைப்பதன் மூலமே கொள்வனவு கம்பனிகளுக்கு சேவை செய்ய முயற்சிக்கின்றன. இந்தச் செயல்பாட்டில் மையமாக இருப்பது, தொழிலாளர்களின் செலவுகளை குறைப்பதே ஆகும். அதாவது தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை வெட்டிக் குறைப்பதாகும்.
இதன் உச்சக் கட்டமாக, முன்னெப்போதும் இல்லாதளவு ஆகக் கூடிய மட்டத்திலான சுரண்டல் ஊடாக அதி உயர்ந்த உற்பத்தி திறனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, தோட்டக் கம்பனிகள், இப்போது "வருமானப் பகிர்வு மாதிரியை" அல்லது "வெளியார்-உற்பத்தி முறையை" அறிமுகப்படுத்துகின்றன. கம்பெனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சமீபத்தில் கையொப்பமிடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரிவுகளில் ஒன்று, “வெளியார் உற்பத்தி" மாதிரியை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது பற்றி கூறுகிறது.
இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் படி, பெருந்தோட்ட சேவைகள் குழுவின் தலைவர் ரொஷான் இராஜதுரை அறிவித்ததாவது: "எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலைமைகளால் நாங்கள் நெருக்கப்படுகின்றோம். இலங்கை தேயிலைகளில் 95 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றுமதி செய்யப்படுகிறது, அதன் விலைகள் எங்களால் தீர்மானிக்கப்படவில்லை, உலகச் சந்தையினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.” (டெய்லி FT, டிசம்பர் 12, 2018).
இந்த "வெளியே-உற்பத்தி" திட்டத்தின் கீழ், ஆயிரம் தேயிலை செடிகளை கொண்ட ஒரு காணித்துண்டு ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படும். கம்பனியானது உரம், இரசாயணங்கள், உபகரணங்கள் போன்றவற்றை வழங்குவதோடு, உற்பத்தியை அதிகரிப்பதற்காக தொழிலாளர்களின் முழு குடும்பமும் இந்த நிலத்தை வேலை செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. பறித்த தேயிலை கொழுந்துகளை கம்பனி கொள்வனவு செய்துகொண்டு, கொடுத்த பொருட்கள் மற்றும் அலுவலக பராமரிப்புக்கான செலவுகளையும் இலாபத்தையும் கழித்துக்கொண்டு, எஞ்சியதை தொழிலாளிக்கு கொடுக்கும்.
அதன் வருடாந்த அறிக்கையில், கலனிவெளி பிளாண்டஷன், "வெளியார்-உற்பத்தி திட்டத்தின் வழியில் கட்டமைக்கப்பட்டுள்ள வருமானப் பகிர்வு மாதிரியானது தொழிலாளர்கள் தங்கள் கொழுந்து பறிக்கும் சராசரி அளவை அதிகரிக்க ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்ட ஒரு துணிவான புதிய முயற்சியாகும்," என தெரிவித்துள்ளது.
கம்பனிகளின் குறிக்கோள், "சம்பள முறையை" அகற்றி, தொழிலாளர்களை ஒரு நவீன குத்தகை-விவசாயிகளாக மாற்றுவதே ஆகும். இந்த நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட பலத்தை தகர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பொகவந்தலாவ பிளாண்டேஷனின் ஆண்டு அறிக்கை, "தொழிற்துறையில் உயர்ந்த பேரம் பேசல் சக்தியுடனான ஆகக் கூடிய உழைப்புச் செறிவும், குறைந்த உற்பத்தித் திறனும், வேலை நிறுத்தங்களும் உள்ளன", மற்றும் இவை "கம்பனியின் இலாபத்துக்கும் அழிவுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று வலியுறுத்துகிறது.
வேறு வார்த்தைகளில் கூறினால், பெரிய சர்வதேச தேயிலை உற்பத்தி கம்பனிகள், உலக சந்தையில் போட்டியிடுவதற்கும், தங்கள் இலாபங்களைப் பாதுகாப்பதற்கும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகளை வீழ்த்துவதற்கு பல்வேறு முறைகளை பயன்படுத்துகின்றன. அதன் மூலம், இந்த எல்லா நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் ஒரே விதமான சர்வதேச தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இது உலக முதலாளித்துவத்தின் சீரழிந்த நிலைமைகளின் கீழ் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதல்களின் பாகமாகும்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் போன்ற இலங்கை பெருந்தோட்டங்களில் உள்ள தொழிற்சங்கங்கள், தமது சர்வதேச சக தரப்பினரைப் போலவே, அரசங்கத்தின் ஆதரவுடன் கம்பனிகளின் இந்த தீவிரமான தாக்குதல்களை முழுமையாக அதரிக்கின்றன.
முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டத்தின் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். இலாப நோக்கு அமைப்பு முறைக்கு முடிவுகட்டி, உற்பத்தியை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஒழுங்கமைப்பதற்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குமான போராட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படல் வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) ஆதரவோடு எபோட்சிலி தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவானது, மார்ச் 17 அன்று தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கும் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் உள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்படும்.