Print Version|Feedback
1968: The general strike and the student revolt in France
Part 1—A revolutionary situation develops
1968: பொது வேலைநிறுத்தமும் பிரான்சில் மாணவர் கிளர்ச்சியும்
பகுதி 1- ஒரு புரட்சிகர சூழல் அபிவிருத்தியடைகிறது
By Peter Schwarz
29 May 2018
எட்டு பாகங்கள் கொண்ட இச் சிறு பிரசுரம் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய தாக்குதலுக்கு முன்னோடியாக இருந்த பிரான்சின் 1968 மே—ஜூன் சம்பவங்களின் அரசியல் முக்கியத்துவம் குறித்து ஆராய்கிறது. இது, மே—ஜூன் 68 இன் 40வது வருட பூர்த்தி வேளையில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலருமான பீட்டர் சுவார்ட்ஸ் ஆல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். ஆரம்பத்தில் மே 28, 2008 இல் இருந்து உலக சோசலிச வலைத் தளத்தின் ஆங்கில மொழி பக்கத்தில் எட்டு பாகங்களாக பிரசுரிக்கப்பட்டது. பின்னர் பிரெஞ்சு, ஜேர்மன், தமிழ் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது.
பாகம் 1, மாணவர் எழுச்சி மற்றும் பொது வேலைநிறுத்தம் அபிவிருத்தி அடைந்ததிலிருந்து மே மாத இறுதியில் அது அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது வரையில் விவரிக்கிறது. பாகம் 2, அவற்றின் மீது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் அதனுடன் இணைந்திருந்த தொழிற்சங்கமான CGT உம் எவ்வாறு கட்டுப்பாட்டை கொண்டிருந்தன என்பது குறித்தும் மற்றும், ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோல் மீண்டும் அதிகாரத்திற்கு வர அவை எவ்வாறு உதவின என்பதையும் ஆராய்கின்றது. பாகங்கள் 3, 4 பப்லோவாதிகள் வகித்த பாத்திரம் குறித்து ஆராய்கின்றன; பாகங்கள் 5, 6, 7, 8 பியர் லம்பேர் இன் சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பைக் (OCI) குறித்து ஆராய்கின்றன.
ஆயினும் கடந்த பத்து வருட நிகழ்வுகளின் வெளிச்சத்தில் ஒரு புதிய அறிமுகம் சேர்த்துக் கொள்ளப்படுள்ளது.
*******
அறிமுகம்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக, 1968 மே-ஜூன் மாதத்தில் ஒரு பொது வேலைநிறுத்தம் பிரான்சை பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியது. சுமார் 10 மில்லியன் தொழிலாளர்கள் கருவிகளைக் கீழே போட்விட்டு தொழிற்சாலைகளை ஆக்கிரமித்தனர், நாட்டின் பொருளாதார வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்தனர். பிரெஞ்சு முதலாளித்துவமும் டு கோல் ஆட்சியும் உயிர்பிழைத்ததென்றால் அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அது மேலாதிக்கம் செலுத்திய CGT தொழிற்சங்கத்திற்கும் மட்டுமே அவை நன்றிக்கடன்பட்டுள்ளன, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இவை தம் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்தன. பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு முன்பாக, வியட்நாமிலான போருக்கு எதிராகவும், ஈரானிய ஷா ஆட்சிக்கு எதிராகவும், ஒடுக்குமுறை சமூக சூழல் மற்றும் பிற துன்பங்களுக்கு எதிராகவும் இளைஞர்களது ஒரு உலகளாவிய தீவிரப்படல் நிகழ்ந்திருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்தில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய தாக்குதலுக்கு முகவுரையாக அது இருந்தது. இந்தத் தாக்குதல் 1970களின் மத்தி வரையில் நீடித்தது, அரசாங்கங்களை இராஜினாமா செய்யத் தள்ளியது, சர்வாதிகாரங்களை வீழ்த்தியது, ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ ஆட்சியையே அது கேள்விக்குறியாக்கியது. ஜேர்மனி 1969 செப்டம்பர் வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டது என்றால், இத்தாலி “சூடான இலையுதிர்காலத்திற்கு” ஆட்பட்டது. போலந்திலும் செக்கோஸ்லாவாக்கியாவிலும் (பிராக் வசந்தம்) தொழிலாளர்கள் ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். பிரிட்டனில் சுரங்கத் தொழிலாளர்கள் 1974 இல் கன்சர்வேட்டிவ் ஹீத் அரசாங்கத்தைப் பதவியில் இருந்து கீழிறக்கினர். கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் வலது-சாரி சர்வாதிகாரங்கள் வீழ்ந்தன. அமெரிக்கா வியட்நாமில் இருந்து தோல்விகண்டு திரும்பத் தள்ளப்பட்டது.
அரை நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர், அந்த புரட்சிகரக் காலகட்டத்தில் இருந்தான படிப்பினைகள் செறிந்த முக்கியத்துவம் கொண்டவையாக உள்ளன. வர்க்கப் போராட்டம் ஒரு நெடிய காலத்திற்கு ஒடுக்கப்பட்டு வந்திருந்த போதிலும் கூட, வர்க்க முரண்பாடுகள் இனியும் கட்டுப்படுத்தி வைக்கமுடியாத அளவுக்கான ஒரு புள்ளியை இப்போது எட்டி விட்டிருக்கின்றன. உலகெங்கிலும், முதலாளித்துவம் ஆழமான நெருக்கடியில் இருக்கிறது. மக்களின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சி கண்டு வருகிற நிலையில், சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் கற்பனைக்குஎட்டாத மட்டங்களுக்கு தம்மை வளப்படுத்திக் கொண்டு வருகின்றனர். ஏகாதிபத்திய சக்திகள் அத்தனையினது ஆளும் வர்க்கங்களும் அதிகரித்துச் செல்கின்ற சமூக மற்றும் சர்வதேசியப் பதட்டங்களுக்கு போர், இராணுவவாதம், மற்றும் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றைக் கொண்டு பதிலிறுத்திக் கொண்டிருக்கின்றன. பெருகும் எதிர்ப்பு மற்றும் வர்க்கப் போராட்டம் கூர்மையடைவது ஆகியவற்றின் அறிகுறிகள் உலகெங்கும் அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றன- அமெரிக்காவில் ஆசிரியர்களது வேலைநிறுத்தங்கள், பிரான்சில் இரயில்வே தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள், மற்றும் ஜேர்மனியில் புதிய கூட்டுப் பேச்சுவார்த்தை உடன்பாடுகள் தொடர்பாக நடைபெறுகின்ற தொழிற்துறை மற்றும் பொதுத்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களில் மிகப்பெரும் பங்கேற்பு ஆகியவை ஆரம்ப வெடிப்புகள் மட்டுமே.
1968 முதல் 1975 வரையான காலத்தில் முதலாளித்துவம் உயிர்தப்பியது என்றால் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளும், மற்றும் தொழிற்சங்கங்களுமே அதன் காரணமாகும், இவை தமது பரந்த செல்வாக்கைப் பயன்படுத்தி போராட்டங்களைக் கட்டுப்படுத்தி அவற்றை தோல்விக்கு இட்டுச் சென்றன. தொழிலாள வர்க்கத்தின் தாக்குதல் இந்த அதிகாரத்துவ எந்திரங்களின் செல்வாக்கைப் பலவீனப்படுத்திய போதிலும், தங்களை “சோசலிஸ்ட்”, “மார்க்சிஸ்ட்” மற்றும் இன்னும் “ட்ரொட்ஸ்கிஸ்ட்” என்றும் கூட விவரித்துக் கொண்ட பல்தரப்பான அமைப்புகள் ஒரு புரட்சிகரத் தலைமை உருவாவதைத் தடுத்ததோடு, மாறாக சமூக ஜனநாயகக் கட்சிகளை நோக்கித் திரும்பின. பிரான்சில், பிரான்சுவா மித்திரோனின் சோசலிஸ்ட் கட்சி அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு முதலாளித்துவ ஆட்சியின் மிக முக்கியமான சாதனமாக ஆனது; ஜேர்மனியில் வில்லி பிராண்ட் இன் கீழான சமூக ஜனநாயகக் கட்சி 1970களில் தமது செல்வாக்கின் உச்சத்தை எட்டியது.
கம்யூனிச அகிலமானது (மூன்றாம் அகிலம்) ஸ்ராலினிசத்தின் செல்வாக்கின் கீழ் திருப்பவியலாத வண்ணம் முதலாளித்துவ எதிர்-புரட்சியின் முகாமுக்கு சென்றுவிட்ட காரணத்தால், 1930களில், லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கும் முன்முயற்சியை மேற்கொண்டார். இருப்பினும், 1938 இல் ஸ்தாபிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே, நான்காம் அகிலத்திற்குள் குட்டி-முதலாளித்துவப் போக்குகள் எழுந்திருந்தன, அவை தொழிலாள வர்க்கத்தின் தோல்விக்கான —சீனாவில் 1927 இல், ஜேர்மனியில் 1933 இல், மற்றும் ஸ்பெயினில் 1939 இல்— பழியை அதன் தலைமையின் காட்டிக்கொடுப்புகள் மீது சுமத்துவதற்கு மாறாக, தொழிலாள வர்க்கம் அதன் புரட்சிகரக் கடமையைப் பூர்த்தி செய்வதற்கு திறனற்றதாக இருந்ததாகச் சொல்லப்பட்டதன் மீது சுமத்தின.
ஸ்ராலினிச, சமூக ஜனநாயக, மற்றும் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்கள் புறநிலை நிகழ்வுகளின் அழுத்தத்தின் கீழ் புரட்சிகர நடவடிக்கைகளை தழுவிக் கொள்ளத் தள்ளப்படும் என்பதாய் கூறி நான்காம் அகிலத்தின் பிரிவுகளை அவற்றுக்குள் கலைப்பதற்கு மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான ஒரு திருத்தல்வாதப் போக்கு செய்த முயற்சியில், 1953 இல், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தின் மீதான தாக்குதல் உச்சமடைந்திருந்தது. ட்ரொட்ஸ்கிசத்திற்கான “மாற்றீடுகளாக” அல்ஜீரியாவில் பென் பெல்லா மற்றும் கியூபாவில் ஃபிடெல் காஸ்ட்ரோ போன்ற ஸ்ராலினிச மற்றும் தேசியவாதத் தலைவர்களை அவர்கள் புகழ்ந்தனர். இந்தக் காலகட்டத்தின் போதுதான், பப்லோவாதத் திருத்தல்வாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதை பாதுகாப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (International Committee of the Fourth International - ICFI) ஸ்தாபிக்கப்பட்டது.
1968 நிகழ்வுகளின் சமயத்தில் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் (United Secretariat) பிரெஞ்சு பிரிவான பியர் பிராங்க் தலைமையிலான சர்வதேச கம்யூனிச கட்சி (Parti communiste internationaliste – PCI), மற்றும் அலென் கிறிவினின் புரட்சிகர கம்யூனிஸ்ட் இளைஞர் இயக்கம் (Jeunesse communiste révolutionnaire – JCR) ஆகியவை வகித்த பாத்திரம் குறித்து இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது பகுதிகள் விளக்கவிருக்கின்றன. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியினதும் (PCF), அதன் தொழிற்சங்க கூட்டாளியான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பினதும் (Confédération générale du travail – CGT) காட்டிக்கொடுப்புகளை JCR மூடிமறைத்ததோடு, அராஜகவாத, மாவோயிச மற்றும் பிற குட்டி-முதலாளித்துவ மாணவர் குழுக்களுக்குள் தன்னை பிசிறின்றி கலைத்துக் கொண்டது. இன்று, அவற்றின் எஞ்சியிருக்கும் அங்கத்தவர்கள், ட்ரொட்ஸ்கிசத்தை வெளிப்படையாக நிராகரிப்பதும், ஸ்ராலினிஸ்டுகள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிற முதலாளித்துவக் கட்சிகளுடன் ஒத்துழைத்து வேலைசெய்து வருவதும், அத்துடன் லிபியா மற்றும் சிரியாவில் “மனிதாபிமான” ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வந்திருப்பதுமான NPA (Nouveau parti anticapitaliste புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி) இன் பகுதியாக இருக்கின்றனர். 1974 இல் LCR (Ligue Communiste Révolutionnaire) என்று பெயர்மாற்றப்பட்ட JCR இன் முன்னாள் உறுப்பினர்கள் பலர் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிற முதலாளித்துவ அமைப்புகளில் நீண்ட தொழில்வாழ்க்கையை கொண்டிருந்தனர்.
1968 இல் ICFI மட்டுமே, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் ஆகியவற்றின் அரசியல் செல்வாக்கிற்கு எதிராகப் போராடி வந்த ஒரே போக்காக இருந்தது. ஆயினும், பெரும் அதிகாரத்துவ அமைப்புகளால் மட்டுமல்லாது, பப்லோவாதத்தின் வெறுப்பூட்டத்தக்க பாத்திரத்தினாலும் உருவாக்கப்பட்டிருந்த அதீத தனிமைப்படல் நிலைமைகளின் கீழ் தான் அது இந்தப் போராட்டத்தை நடத்தியது. சமூக மற்றும் தத்துவார்த்த அழுத்தங்களுக்குள்ளாக அது வேலைசெய்துவந்த நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சொந்த அணிகளுக்குள்ளும் தகவமைத்துக் கொள்ளும் போக்குகள் அபிவிருத்தி கண்டன.
1953 இல் ICFI இன் உருவாக்கத்தில் இணை-ஸ்தாபகராக இருந்த OCI (Organisation communiste internationaliste பியர் லம்பேர் தலைமையிலான சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு) 1968 இல் ஒரு மத்தியவாதக் கொள்கையை பின்பற்றியது. அனுபவமில்லாத அங்கத்தவர்கள் ஆயிரக்கணக்கில் கட்சிக்குள் பாய்ந்த நிலையில், அது கூர்மையாக வலது நோக்கித் திரும்பியது. 1971 இல், அனைத்துலகக் குழுவுடன் முறிவு கண்ட OCI அதன் உறுப்பினர்களை பிரான்சுவா மித்திரோனின் சோசலிஸ்ட் கட்சி (PS) க்கு உள்ளாக அனுப்பியது. இந்த சமயத்தில் PS இல் நுழைந்த OCI இன் அங்கத்தவர்களில் அதன்பின் PS இன் தலைவராகவும் பிரான்சின் பிரதமராகவும் ஆன லியோனல் ஜோஸ்பன், PS இன் இப்போதைய தலைவரான ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் (Jean-Christophe Cambadélis), மற்றும் பிரெஞ்சு இடது கட்சியின் ஸ்தாபகரும் அடிபணியா பிரான்ஸ் (La France insoumise – LFI) இயக்கத்தின் தலைவருமான ஜோன் லூக்-மெலோன்சோன் ஆகியோரும் அடங்குவர். ஒரு “இடது” தேசியவாதியான மெலோன்சோன் ஒரு அணு-ஆயுத வல்லமை கொண்ட சக்தியாக பிரான்ஸை பாதுகாப்பதோடு கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகம் செய்வதற்கும் அழைப்பு விடுக்கிறார்.
இந்தத் தொடரின் கடைசி நான்கு பாகங்கள் OCI இன் பாத்திரம், அதன் வரலாறு, மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கான ஆதரவின் முக்கியமான முட்டுத்தூணாக அது உருமாற்றம் காண இட்டுச் சென்ற தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சினைகள் ஆகியவற்றை விரிவாக அலசுகிறது. இந்த அனுபவங்களைக் கற்பதும் புரிந்துகொள்வதும் வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தைத் தயாரிப்பு செய்வதில் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
பப்லோவாதிகள் மற்றும் OCI இன் பரிணாமவளர்ச்சியானது, கல்விப்புலம் சார்ந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மத்தியில் நிகழ்ந்த ஒரு வலதுநோக்கிய நகர்வின் பகுதியாக இருந்தது. 1968 இல் மாணவர் தலைவர்கள் பலரும் மார்க்சிசமாகத் தோற்றமளிக்கின்ற வார்த்தையாடல்களைப் பயன்படுத்தினர் என்றபோதும், அவர்களது கருத்தாக்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை மறுத்த ஃபிராங்பேர்ட் பள்ளி, இருத்தலியல்வாதம், மற்றும் பிற மார்க்சிச-விரோதப் போக்குகளால் உருக்கொடுக்கப்பட்டதாக இருந்தது. புரட்சி என்பதில் —இது அவர்கள் மிதமிஞ்சி பயன்படுத்திய ஒரு கருத்தாக்கமாக இருந்தது— அவர்கள் தொழிலாள வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதை அர்த்தப்படுத்தவில்லை, மாறாக குட்டிமுதலாளித்துவ தனியாளின் சமூக, தனிமனித, மற்றும் பாலியல் விடுதலையையே அர்த்தப்படுத்தினர்.
பிரான்சில் 1968 மேயில் தொழிலாள வர்க்கம் தலையீடு செய்தமையானது “பிரெஞ்சு புத்திஜீவிகளது பரந்த அடுக்குகள் மீது மனஅதிர்ச்சி தரும் ஒரு விளைவைக் கொண்டிருந்தது” என்று உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், “போலி-இடதுகளின் தத்துவார்த்த மற்றும் வரலாற்று மூலங்கள்” என்ற தனது கட்டுரையில் எழுதினார். “புரட்சியுடனான அவர்களது ஸ்பரிசம் வலது நோக்கிய ஒரு கூர்மையான நகர்வை இயங்கச் செய்தது.” ஜோன் பிரான்சுவா றுவெல் (Jean-Francois Revel) மற்றும் பேர்னார்-ஹென்றி லெவி (Bernard-Henri Levy) உள்ளிட்ட “புதிய மெய்யியலாளர்கள்” என்பதாய் சொல்லப்பட்டவர்கள் “’மனித உரிமைகள்’ என்னும் கபடமான பதாகையின் கீழ் கம்யூனிச-விரோதத்தை தழுவிக் கொண்டனர்.” ஜோன்-பிரான்சுவா லியோத்தார் (Jean-Francois Lyotard) தலைமையிலான மெய்யியலாளர்களின் இன்னுமொரு குழு, “பின்நவீனத்துவம் குறித்த புத்திஜீவிதரீதியான நிஹிலிய (nihilist) சூத்திரமாக்கங்களைக் கொண்டு தமது மார்க்சிச மறுதலிப்பை நியாயப்படுத்தியது”. இருத்தலியல்வாத எழுத்தாளர் ஆண்ட்ரே கோர்ஸ் (André Gorz), “தொழிலாள வர்க்கத்துக்கு பிரியாவிடை!” (“Farewell to the Working Class!”) என்ற ஆத்திரமூட்டலான தலைப்புடன் ஒரு புத்தகத்தை எழுதினார்.
இந்த புத்திஜீவிகள் அனைவரும், யாருக்கு 1968 தமது சொந்த சமூகரீதியான முன்னேற்றத்திற்கான ஒரு களமாக இருந்ததோ, யார் அதன்பின்னர் அரசாங்க அமைச்சரவைகளிலும், ஆசிரியர் குழு அலுவலகங்களிலும், இன்னும் பெருநிறுவன இயக்குநரகங்களிலும் கூட தலைமையான பதவிகளை நிரப்பினரோ, அந்த நடுத்தர வர்க்கத்தின் சார்பாகப் பேசினர். இந்தத் தொடரின் நான்காம் பாகத்தில் மேற்கோளிடப்படுகின்றவாறாக, LCR இன் ஒரு நீண்டகால உறுப்பினரான எட்வீ பிளெனெல் (Edwy Plenel), முன்னணி பிரெஞ்சு தினசரியான Le Monde இன் ஆசிரியராக, 2001 இல் பின்வருமாறு எழுதினார்: “நான் மட்டும் தனியாக இல்லை: அதி இடதில் —ட்ரொட்ஸ்கிஸ்டாக அல்லது ட்ரொட்ஸ்கிசவாதி அல்லாதவராக— செயலூக்கத்துடன் இயங்கியதன் பின்னர், போராளிப் படிப்பினைகளை நிராகரித்து அந்த காலகட்டத்திலான எங்களது பிரமைகளை, பகுதி விமர்சனரீதியாக, திரும்பிப் பார்த்தவர்களாய் நிச்சயமாய் பத்தாயிரக்கணக்கில் நாங்கள் இருந்தோம்.”
நீண்டகாலமாய் ’68 இன் போராளிகளில் இருந்து தமது தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கின்ற ஜேர்மனியின் பசுமைக் கட்சியினர் இந்த நிகழ்ச்சிப்போக்கின் உருவடிவாய் திகழ்கின்றனர். ஆர்ப்பாட்டங்கள், சூழலியல், மற்றும் அமைதிவாதம் ஆகியவற்றுக்கான ஒரு குட்டி-முதலாளித்துவக் கட்சியாக இருந்ததில் இருந்து ஜேர்மன் இராணுவவாதத்திற்கான ஒரு நம்பகமான முட்டுத்தூணாக அவர்கள் உருமாற்றம் கண்டனர். குறைந்தபட்சம் ஊடகங்களைப் பொறுத்தவரையேனும், பிரான்சின் மாணவர் கிளர்ச்சியின் மிக நன்கறிந்த தலைவரான டானியல் கோன்-பென்டிட், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் முதல் இராணுவத் தலையீடான அதன் யூகோஸ்லாவியத் தலையீட்டுக்கு பொறுப்பானவராய் இருந்த 1999 இல் ஜேர்மன் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜோஸ்கா ஃபிஷ்சருக்கு வழிகாட்டியாகவும் தனிப்பட்ட நண்பராகவும் இருந்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருக்கும் பசுமைக் கட்சியின் அங்கத்தவராக, கோன்-பென்டிட் லிபியா மீதான போரை ஆதரித்தார், ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கிறார் அத்துடன் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை புகழ்கிறார்.
இன்று விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் வர்க்க மோதலானது 1968-75 இன் போராட்டங்களின் போதான நிலைமைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதான நிலைமைகளின் கீழ் நடந்து கொண்டிருக்கிறது.
முதலாவதாய், முதலாளித்துவத்திற்கு சமூக விட்டுக்கொடுப்புகள் செய்ய இனியும் பொருளாதார ஆதாரவளம் இல்லை. 1968 இயக்கமானது, பகுதியாக, 1971 இல் பிரெட்டன் வூட்ஸ் முறை முடிவுக்கு வருவதற்கும் 1973 இல் மேலதிகமான மந்தநிலைக்கும் இட்டுச் சென்ற 1966 இன் முதல் பெரிய போருக்குப் பிந்தைய மந்தநிலையினால் தூண்டப்பட்டதாக இருந்தது. ஆனபோதும் போருக்குப் பிந்தைய எழுச்சியானது இந்தக் காலகட்டத்திற்கு சற்றுமுன்னர் தான் அதன் உச்சப்புள்ளியை எட்டியிருந்தது. ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளில் கணிசமான மேம்பாடுகளைக் கொடுத்து முதலாளித்துவ வர்க்கம் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. கிளர்ச்சி செய்த மாணவர்களை வீதிகளில் இருந்து திரும்பக் கொண்டுவருகின்ற விதமாக பல்கலைக்கழகங்கள் கணிசமாக விரிவாக்கம் செய்யப்பட்டன.
ஒரு தேசியக் கட்டமைப்புக்குள்ளான இத்தகைய சீர்திருத்தங்கள் இன்று இனியும் சாத்தியமில்லாதவையாக இருக்கின்றன. போட்டித்திறனுக்கான உலகளாவிய போட்டியும் உற்பத்தியின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் சர்வதேச நிதிச் சந்தைகளது மேலாதிக்கமும் பாதாளத்தை நோக்கிய ஒரு தாட்சண்யமற்ற ஓட்டத்தை தொடக்கிவிட்டிருக்கின்றன.
இரண்டாவதாக, அரை நூற்றாண்டுக்கு முன்பாக மில்லியன் கணக்கில் அங்கத்தவர்களைக் கொண்டிருந்ததும் முதலாளித்துவம் தப்பிப்பிழைப்பதை உத்தரவாதம் செய்ததுமான ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அமைப்புகள் இப்போது பரவலாக மதிப்பிழந்திருக்கின்றன. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டு விட்டதற்குப் பின்னர் சோவியத் ஒன்றியமும் இருக்கவில்லை. சீனா மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாக முதலாளித்துவச் சுரண்டலுக்கான ஒரு புகலிடமாக மாற்றப்பட்டு விட்டிருக்கிறது. மற்ற சமூக ஜனநாயகக் கட்சிகளைப் போலவே, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியும் உருக்குலைந்து விட்டிருக்கிறது, ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. தொழிற்சங்கங்கள் வேலை வெட்டுக்களை ஒழுங்கமைக்கின்ற இணை-மேலாளர்களாக உருமாற்றம் கண்டு, தொழிலாளர்களால் வெறுக்கப்படுபவையாக ஆகியிருக்கின்றன.
1968 இல் அனைத்துலகக் குழுவை தனிமைப்படுத்திய போலி-இடது அமைப்புகள் முதலாளித்துவ அரசு மற்றும் அதன் ஸ்தாபனங்களுக்குள்ளாக தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு விட்டிருக்கின்றன. அவை தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களையும் ஏகாதிபத்தியப் போர்களையும் ஆதரிக்கின்றன. எல்லா இடங்களையும் விட கிரீசில் —இங்கு “தீவிர இடதுகளின் கூட்டணி” (சிரிசா) சர்வதேச வங்கிகளின் தரப்பில் இருந்து தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை சீரழிப்பதற்கு பொறுப்பேற்றுக் கொண்டது— இது மிகத் தெளிவாக எடுத்துக் காட்டப்படுகிறது. வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்கள், தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சிக்குபொறியாக ஆகியிருக்கும் இந்த அதிகாரத்துவ அமைப்புகள் மற்றும் அவற்றின் போலி-இடது தொங்குதசைகளுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் அபிவிருத்திகாண இருக்கின்றன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், பப்லோவாதத் திருத்தல்வாதம், மற்றும் குட்டி-முதலாளித்துவ போலி-இடது அரசியலின் அனைத்து வடிவங்களுக்கு எதிரான அதன் வரலாற்றுச்சிறப்புமிக்க போராட்டமும் இந்தப் போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதில் தீர்மானகரமானதாய் நிரூபணமாகும். இந்த போக்குகளது வலது-நோக்கிய பயணப்பாதையை முன்கணிப்பதற்கும் அவற்றின் பாத்திரத்தை அம்பலப்படுத்துவதற்கும் இது திறம்படைத்திருப்பதானது, இப்போது கட்டியெழுப்பப்பட்டாக வேண்டியது மார்க்சிசக் கட்சியாகும் இது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது. ICFIம் அதன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste) மட்டுமே முதலாளித்துவத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகின்ற திறம்படைத்த ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரே போக்கு ஆகும்.
1968க்கு முன்னர் பிரான்ஸ்
1960 களில் பிரான்ஸ் ஆழ்ந்த முரண்பாடுகளால் குணாம்சப்பட்டிருந்தது. அந்த அரசியல் ஆட்சி சர்வாதிபத்தியமாக, ஆழ்ந்த பிற்போக்குத்தனமானதாக இருந்தது. ஏதோ வேறொரு சகாப்தத்திலிருந்து வந்தவராக தெரிந்த, மற்றும், ஐந்தாம் குடியரசை தனது தனிப்பட்ட வடிவத்தின் ஆளுருவாக்க மாதிரியாக ஜெனரால் டு கோல் விளங்கினார். 1958 இல் டு கோல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு 68 வயதாகும், 1969 இல் அவர் இராஜினாமா செய்தபோது அவருக்கு வயது 78. ஆனால் அந்த பழைய ஜெனராலின் வாட்டிவதைத்த ஆட்சியின் கீழ், பிரெஞ்சு சமூகத்தின் சமூகச் சேர்க்கையை அடிப்படைரீதியில் மாற்றியமைத்து, ஒரு வேகமான பொருளாதார நவீனமயமாக்கல் நடந்து வந்தது.
இரண்டாம் உலக போரின் முடிவில், பிரான்சின் பெரும் பகுதிகள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டிருந்தன. மக்கள் தொகையில் 37 சதவீதம் பேர் அப்போது நிலத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். அதற்கடுத்த 20 ஆண்டுகளில், பிரெஞ்சு விவசாயிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் நிலத்தை விட்டு நகரங்களை நோக்கி நகர்ந்தார்கள், அங்கே அவர்கள் —புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து— ஓர் இளம் போர்குணமிக்க சமூக அடுக்காக விளங்கிய மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவமே கட்டுப்படுத்த சிரமப்பட்டு கொண்டிருந்த, தொழிலாள வர்க்க பிரிவினருடன் இணைந்தனர்.
1962 இல் அல்ஜீரிய போர் முடிந்த பின்னர், பிரெஞ்சு பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. அதன் காலனிநாடுகளின் இழப்பு, பிரெஞ்சு முதலாளித்துவத்தை இன்னும் பலமாக ஐரோப்பாவை நோக்கி அதன் பொருளாதாரத்தை திருப்ப நிர்பந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் (European Economic Community) ஸ்தாபக ஆவணமாக விளங்கிய ரோம் உடன்படிக்கையில், 1957 இல் அப்போதே பிரான்ஸ் கையெழுத்திட்டிருந்தது. ஐரோப்பாவின் பொருளாதார ஒருங்கிணைவு தொழிற்துறையில் புதிய பிரிவுகளைக் கட்டமைக்க சாதகமாக இருந்தது, அது நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் ஏனைய பழைய தொழிற்துறைகளின் வீழ்ச்சியை ஈடுகட்டுவதையும் விட மேலதிகமாக இருந்தது. வாகனத்துறை, விமானத்துறை, விண்வெளித்துறை, ஆயுதங்கள் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் புதிய நிறுவனங்களும் புதிய தொழிற்சாலைகளும் அரசாங்கத்தின் உதவியுடன் திறக்கப்பட்டன. பெரும்பாலும் பழைய தொழிற்துறை மையங்களுக்கு வெளியே அமைந்திருந்த அவை, 1968 பொது வேலைநிறுத்தத்தின் பலம்வாய்ந்த மையங்களாக இருந்தன.
நோர்மோன்டியில் இருந்த கோன் (Caen) நகரம் இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். அந்நகரில் வசித்தோரின் எண்ணிக்கை 1954 மற்றும் 1968க்குள் 90,000 இல் இருந்து 150,000 ஆக அதிகரித்தது, அதில் பாதி பேர் 30 வயதிற்கு குறைவானவர்கள். கார் உற்பத்தி நிறுவனமான ரெனோல்ட்டின் துணை நிறுவனம் சாவியம் (Saviem) சுமார் 3,000 தொழிலாளர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் ஜனவரியில், அதாவது பொது வேலைநிறுத்தத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், தற்காலிகமாக ஆலையை ஆக்கிரமித்தும் பொலிஸூடன் மூர்க்கமாக சண்டைகளில் ஈடுபட்டு, வேலைநிறுத்தத்தில் இறங்கியிருந்தனர்.
தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு தீவிரமயமாதல் போக்கு இருந்தது. பழைய, கத்தோலிக்க தொழிற்சங்கம், CFTC (Confédération Française des Travailleurs Chrétiens) உடைந்தது, அதிலிருந்த பெரும்பான்மை அங்கத்தவர்கள் மதசார்பற்ற அடிப்படையில் CFDT ஐ (Confédération Française Démocratique du Travail) மறுஒழுங்கமைத்தனர். அது "வர்க்க போராட்டத்தை" ஏற்றுக் கொண்டதுடன், 1966 தொடக்கத்தில் CGT உடன் சேர்ந்து ஓர் ஐக்கியப்பட்ட நடவடிக்கைக்கும் உடன்பட்டது.
புதிய தொழிற்சாலைகள் ஸ்தாபிக்கப்பட்டமை, அதனுடன் சேர்ந்து கல்வித்துறையின் துடிப்பார்ந்த விரிவாக்கத்தைக் கொண்டு வந்தது. புதிய பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், திறன்சார் தொழிலாளர்கள் உடனடியாக அவசியப்பட்டனர். 1962 மற்றும் 1968க்கு இடையில் மட்டும், மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. பல்கலைக்கழகங்களில் நெரிசல் அதிகரித்தது, ஆனால் அவை தொழிற்சாலைகளைப் போலவே போதுமான வசதிகளை கொண்டிருக்காததுடன், பழமைவாத மனோபாவங்களைக் கொண்ட ஓர் பரம்பரை ஆட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன.
மாணவ விடுதி அறைகளில் தங்கும் ஆண்களோ/பெண்களோ எதிர் பாலின மாணவ அறைகளுக்குச் செல்லக்கூடாது போன்ற ஏனைய விடயங்களோடு சேர்ந்து, மோசமான படிப்பிட நிலைமைகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் ஏதேச்சதிகார அணுகுமுறை ஆகியவற்றின் மீதான எதிர்ப்பு, மாணவர் தீவிரமயப்படுத்தலின் ஒரு முக்கிய காரணியாக இருந்தன. அவர்கள் விரைவிலேயே அதுபோன்ற பிரச்சினைகளை அரசியல் பிரச்சினைகளுடன் இணைத்தனர். மே 1966 இல் வியட்நாம் போருக்கு எதிராக முதல் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓராண்டுக்குப் பின்னர், 2 ஜூன் 1967 இல், மாணவர் பென்னோ ஒனெசோர்க் பேர்லினில் பொலிஸால் சுட்டுக் கொல்லப்பட்டதால் உண்டான ஜேர்மன் மாணவர் போராட்டங்கள் பிரான்சிலும் எதிரொலித்தன.
அதே ஆண்டில் உலகளாவிய மந்தநிலைமையின் தாக்கங்கள் உணரப்பட்டு வந்ததுடன், அவை தொழிலாளர்கள் மீது தீவிரமயமடைவதற்கான தாக்கங்களை கொண்டிருந்தன. வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலையிட நிலைமைகள் ஆண்டுக்கணக்காக பொருளாதார அபிவிருத்தியின் வேகத்திலிருந்து பின்தங்கி வீழ்ச்சி அடைந்திருந்தன. ஊதியங்கள் குறைக்கப்பட்டு, வேலை நேரங்கள் நீடிக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்குள் தொழிலாளர்களுக்கு எவ்வித உரிமைகளும் இல்லாமல் இருந்தது. இப்போது வேலைவாய்ப்பின்மையும் வேலைபளுவும் அதிகரிக்க தொடங்கி இருந்தது. சுரங்கத்தொழில்துறை, எஃகுத்துறை, ஜவுளித்துறை மற்றும் கட்டுமானத்துறை தொழிற்சாலைகள் மந்தமடைந்தன.
கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே தொழிற்சங்கங்களின் தலைமை மேலேயிருந்து போராட்டங்களை ஒழுங்கமைத்தன. ஆனால் அடிமட்டத்திலிருந்து உள்ளூர் போராட்டங்கள் உருவானதுடன், அவை பொலிஸால் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கப்பட்டன. பெப்ரவரி 1967 இல் பெஸன்சோன் (Besançon) நகரில் ஜவுளித்துறை உற்பத்தி நிறுவனம் றோடியாசெற்றா (Rhodiacéta) இன் தொழிலாளர்களே, வேலை வெட்டுக்களுக்கு எதிராக போராடியும் சிறந்த வேலையிட நிலைமைகளைக் கோரியும், அவர்களது ஆலையை முதன்முதலில் ஆக்கிரமித்தனர்.
விவசாயிகளும் வீழ்ச்சியடைந்துவந்த வருவாய்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 1967 இல் பிரான்சின் மேற்கில், விவசாயிகளின் பல ஆர்ப்பாட்டங்கள் வீதி சண்டைகளாக வளர்ந்தன. அப்போதைய ஒரு பொலிஸ் அறிக்கையின்படி, அந்த விவசாயிகள் "எண்ணிக்கையில் அதிகமாக, ஆக்ரோஷமாக, ஒழுங்கமைக்கப்பட்டரீதியில், இரும்பு தகடுகள், உருளைக்கற்கள், உலோக குத்தூசிகள், போத்தல்கள் மற்றும் கூழாங்கற்கள் போன்ற பல வீசியெறியும் பொருட்களுடன் ஆயுதமேந்தி" இருந்தனர்.
1968 இன் தொடக்கத்தில், பிரான்ஸ் ஒப்பீட்டளவில் மேற்பார்வைக்கு அமைதியாக இருப்பதாக தெரிந்தது, ஆனால் அடியில் சமூக பதட்டங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. ஒட்டுமொத்த நாடும் ஒரு வெடி உலைக்கு ஒத்திருந்தது. மொத்தமும் வெடிப்பதற்கு ஏதேனும் ஒரு சிறிய தீப்பொறி போதுமானதாக இருந்தது. அந்த தீப்பொறி, மாணவர் போராட்டங்களால் வழங்கப்பட்டது.
மாணவர்கள் கிளர்ச்சியும் பொது வேலைநிறுத்தமும்
1960 களில் கட்டப்பட்ட கல்லூரிகளில் நாந்தேர் (Nanterre) பல்கலைக்கழகமும் ஒன்றாகும். பாரீஸில் இருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில், முன்னர் ஆயுத படைகளுக்கு சொந்தமாக இருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த அது, 1964 இல் திறக்கப்பட்டது. அதைச் சுற்றி வறுமை-நிறைந்த அண்டைகுடியிருப்புகளும், “குடிசை சேரிகள்" (bidonvilles) என்றழைக்கப்படுபவை மற்றும் தொழிற்சாலைகளும் நிறைந்திருந்தன. போராடிவந்த மாணவர்கள், ஜனவரி 8, 1968 இல், ஒரு புதிய நீச்சல்குளம் திறக்க அப்பகுதிக்கு வந்திருந்த இளைஞர் மந்திரி பிரான்சுவா மிஸ்ஸோஃப் (François Missoffe) உடன் மோதலில் இறங்கினர்.
அந்த சம்பவமே ஒப்பீட்டளவில் பெரிய முக்கியமானதல்ல என்றபோதினும், மாணவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளும், அத்துடன் பொலிஸின் தொடர்ச்சியான தலையீடுகளும், மோதலைத் தீவிரப்படுத்தியதுடன், நாந்தேரை ஓர் இயக்கத்திற்கு தொடக்க புள்ளியாக மாற்றியது. அது வேகமாக அந்நாடு முழுவதிலும் இருந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்குப் பரவியது. சிறந்த படிப்பிட நிலைமைகள், பல்கலைக்கழகங்களை அணுகுவதற்குரிய கட்டுப்பாடற்ற வசதி, மேலும் தனிநபர் சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம், கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை போன்ற கோரிக்கைகளும், அதனுடன் ஜனவரியின் இறுதியில் டெட் படையெடுப்பு (Tet Offensive) தொடங்கிய வியட்நாமுக்கு எதிரான அமெரிக்க போருக்கு எதிர்ப்பும் அதன் மையத்தில் இருந்தன.
கோன் (Caen) மற்றும் போர்தோ (Bordeaux) போன்ற சில நகரங்களில், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் உயர்நிலைபள்ளி மாணவர்களும் ஒன்றுசேர்ந்து வீதிகளில் இறங்கினர். ஒரு சீற்றங்கொண்ட வலதுசாரியால், பேர்லின் வீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜேர்மன் மாணவர் ரூடி டுட்ஸ்க்க (Rudi Dutschke) இற்கு ஆதரவாக ஏப்ரல் 12 அன்று, பாரீஸில் ஒரு ஒற்றுமையுணர்வை காட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மார்ச் 22 இல், 142 மாணவர்கள் நாந்தேர் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடத்தை ஆக்கிரமித்தனர். அந்நிர்வாகம் பல்கலைக்கழகத்தை முற்றிலுமாக ஒரு மாதத்திற்கு மூடுவதாக அறிவித்து தனது பதிலை காட்டியது. பின்னர் அந்த மோதல் பாரீஸின் இலத்தீன் வட்டார பகுதியில் (Quartier latin) அமைந்துள்ள பிரான்ஸின் மிகப்பழைய பல்கலைக்கழகமான சோர்போனுக்கு திசைதிரும்பியது. மே 3 இல், பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எவ்வாறு நடவடிக்கையை முன்னெடுப்பது என்பது குறித்து விவாதிக்க ஒன்றுகூடினர். இதற்கிடையே அதிதீவிர வலதுசாரி குழுக்கள் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தன. பல்கலைக்கழக தலைவர் பொலிஸை அழைத்தார்; பொலிஸ் அந்த வளாகத்தை விடுவிக்கத் தொடங்கியதும், ஒரு மிகப்பெரிய, தன்னியல்பான ஆர்ப்பாட்டம் வெடித்தது. பொலிஸ் மிகவும் மூர்க்கமாக எதிர்நடவடிக்கை காட்டியது, மாணவர்களோ தடையரண்களை எழுப்பி விடையிறுப்பு காட்டினார்கள். அந்த இரவுக்குள், சுமார் நூற்றுக் கணக்கானவர்கள் காயப்படுத்தப்பட்டனர்; நூற்றுக் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த கைது நடவடிக்கைகளுக்கு அடுத்த நாள், முழுமையாக பொலிஸ் அதிகாரிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் நீதிமன்றம், 13 மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதித்தது.
அரசாங்கமும் ஊடகங்களும் இலத்தீன் வட்டார பகுதியில் நடந்த வீதிப் போராட்டங்களை தீவிரமயப்படுத்தப்பட்ட குழுக்களின் மற்றும் தொல்லை கொடுப்பவர்களின் வேலையாக சித்தரிக்க முனைந்தன. கம்யூனிஸ்ட் கட்சியும் மாணவர்களுக்கு எதிரான கூச்சலில் இணைந்து கொண்டது. அதன் இரண்டாவது முக்கிய பிரமுகர் ஜோர்ஜ் மார்ஷே (Georges Marchais), இவர் பின்னர் அக்கட்சியில் பொது செயலாளராக ஆனார், இவர் கட்சி நாளிதழ் l’Humanité இன் முதல் பக்கத்தில் மாணவ “போலி புரட்சியாளர்களுக்கு” எதிராக ஒருதலைபட்சமாக தாக்கினார். "பாசிச ஆத்திரமூட்டுவோருக்கு" துணைபோவதாக அவர் அவர்களைக் குற்றஞ்சாட்டினார். அனைத்திற்கும் மேலாக மாணவர்கள் "துண்டறிக்கைகள் மற்றும் ஏனைய பிரச்சார அறிக்கைகளை அதிக எண்ணிக்கையில் ஆலை வாயில்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசித்த மாவட்டங்களிலும் வினியோகித்த" சம்பவத்தால், மார்ஷே நிலைகுலைந்து போனார். அவர் காழ்ப்புணர்ச்சியோடு பின்வருமாறு அறிவித்தார்: “இந்த பொய் புரட்சியாளர்கள் கோலிச ஆட்சி மற்றும் பெரிய முதலாளித்துவ ஏகபோகங்களின் நலன்களுக்கு புறநிலைரீதியாக சேவை செய்வதற்காக, அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.”
ஆனால் அதுபோன்ற வெறுப்பூட்டல்கள் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. வானொலி நிலையங்களிலிருந்து ஒலிபரப்பப்பட்ட பொலிஸின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை அறிந்து நாடே அதிர்ந்து போனது. சம்பவங்கள் இப்போது அவற்றின் சொந்த வேகத்தை எடுத்தன. கடந்து சென்ற ஒவ்வொரு நாளும் பாரீஸில் ஆர்ப்பாட்டங்கள் மிகப் பெரியளவில் வளர்ந்ததுடன், ஏனைய நகரங்களிலும் பரவின. அவை பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக திரும்பியதுடன், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரின. உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தனர். மே 8 அன்று மேற்கு பிரான்சில் முதல் ஒருநாள் வேலைநிறுத்தம் நடந்தது.
மே 10-11 இல் இருந்து இலத்தீன் வட்டார பகுதி, “தடையரண்களின் இரவாக” (“Nuit des barricades”) மாறியது. பல்கலைக்கழகம் இருந்த பகுதியில் பத்தாயிரக் கணக்கானவர்கள் அவர்களே தடையரண்களாக நின்றார்கள், பின்னர் அங்கே அதிகாலை இரண்டு மணியளவில் பொலிஸ் கண்ணீர் புகைகுண்டுகளைப் பிரயோகித்து தாக்கியது. அதில் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
அதற்கடுத்த நாள், பிரதம மந்திரி ஜோர்ஜ் பொம்பிடோ (Georges Pompidou), அப்போதுதான் ஈரான் அரசு விஜயத்திலிருந்து திரும்பியிருந்த அவர், சோர்போன் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுமென்றும், காவலில் வைக்கப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார். ஆனால் அவரது நடவடிக்கைகளாலும் கூட நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குமிகுந்த CGT உட்பட தொழிற்சங்கங்கள் பொலிஸ் ஒடுக்குமுறைக்கு எதிராக மே 13 இல் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தன. அவை வேறு ஏதேனும் வகையில் நடந்து கொண்டால், போர்குணமிக்க தொழிலாளர்கள் மீதான கட்டுப்பாட்டை அவை இழக்க நேரிடுமென தொழிற்சங்கங்கள் அஞ்சின.
வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எண்ணற்ற நகரங்கள், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களைக் கண்டன. பாரீஸில் மட்டும் 800,000 பேர் வீதிகளில் இறங்கினர். அரசியல் கோரிக்கைகள் முன்னுக்கு வந்தன. பலர் அரசாங்கம் அகற்றப்பட வேண்டுமெனக் கோரினர். மாலை வேளையில், சோர்போன் மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்கள் மீண்டும் மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.
வேலைநிறுத்தங்களை ஒரு நாளோடு மட்டுப்படுத்தும் தொழிற்சங்கங்களின் திட்டம் நடைமுறையில் தோல்வி அடைந்தது. அதற்கடுத்த நாள், மே 14 அன்று, தொழிலாளர்கள் நான்ந்த் (Nantes) என்னும் நகரத்தில் இருந்த Sud-Aviation (சுட்-அவியேசன்) என்னும் விமான தயாரிப்பு ஆலையை ஆக்கிரமித்தனர். அந்த ஆலை ஒரு மாதம் தொழிலாளர்களது கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, அதன் நிர்வாக கட்டிடத்தின் மீது செங்கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அதன் பிராந்திய இயக்குனர் டுவோஷெல் (Duvochel) 16 நாட்கள் ஆக்கிரமிப்பாளர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அந்நேரத்தில் Sud-Aviation இன் பொது மேலாளராக இருந்தவர் மொறிஸ் பப்போன் (Maurice Papon), இவர் ஒரு நாஜி ஒத்துழைப்பாளரும், போர் குற்றவாளியும் ஆவார். 1961 இல் அவர் பாரீஸின் பொலிஸ் தலைவராக இருந்தபோது, அல்ஜீரிய போருக்கு எதிரான போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் படுகொலைக்கு பொறுப்பாகி இருந்தார்.
ஏனைய ஆலைகளில் இருந்த தொழிலாளர்களும் Sud-Aviation ஐ முன்னுதாரணமாக கொண்டு பின்தொடர்ந்தனர். மே 15 இல் இருந்து மே 20 வரையில் நாடெங்கிலும் ஆக்கிரமிப்பு அலை பரவியது. எங்கெங்கிலும் செங்கொடிகள் பறக்கவிடப்பட்டன, பல ஆலைகளில் நிர்வாகம் சிறைபிடிக்கப்பட்டது. அந்நடவடிக்கைகள் நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களைப் பாதித்தன, அதில் 1947 வேலைநிறுத்த அலையில் ஒரு மத்திய பாத்திரம் வகித்த பியான்கூர் இல் இருந்த பிரதான ரினோல்ட் ஆலையான அந்நாட்டின் மிகப்பெரிய தொழிற்சாலையும் உள்ளடங்கும்.
ஆரம்பத்தில் தொழிலாளர்கள் உடனடி கோரிக்கைகளைத்தான் உயர்த்தினர், அது இடத்திற்கு இடம் மாறுப்பட்டும் இருந்தது: நியாயமான ஊதியம், வேலை நேரத்தைக் குறைப்பது, பணிநீக்கங்கள் கூடாது, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு அதிக உரிமைகள் போன்றவை அதில் இருந்தன. ஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அவற்றை சுற்றியிருந்த பகுதிகளில் உருவாகிய தொழிலாளர்களது குழுக்கள் மற்றும் நடவடிக்கை குழுக்களில் உள்ளூர் குடிவாசிகளும், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களும் வேலைநிறுத்த தொழிலாளர்கள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பணியாளர்களுடன் இணைந்து கொண்டனர். அந்த குழுக்கள் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்க பொறுப்பேற்றதுடன், ஆழ்ந்த அரசியல் விவாத சபைகளை அபிவிருத்தி செய்தன. அது பெரியளவில் மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தி இருந்தது.
மே 20 இல் ஒரு பொது வேலைநிறுத்தத்துடன் ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பித்தது, ஆனால் தொழிற்சங்கங்களோ அல்லது ஏனைய எந்தவொரு அமைப்புகளோ அதுபோன்றவொரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை. தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன, உற்பத்தி மற்றும் போக்குவரத்து அமைப்புமுறை முடங்கியது. கலைஞர்கள், இதழாளர்கள், கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் கூட அந்த இயக்கத்தில் இணைந்தனர். பிரான்சின் 15 மில்லியன் பலமான தொழிலாளர் சக்தியில், பத்து மில்லியன் கணக்கானவர்கள் அந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் வந்த ஆய்வுகள் இந்த எண்ணிக்கையை சுமார் 7-9 மில்லியன் என்று குறைத்து திருத்தம் செய்தன, ஆனால் அப்படியிருந்தாலும் கூட அது பிரெஞ்சு வரலாற்றில் மிக பிரமாண்டமான பொது வேலைநிறுத்தமாக இருக்கிறது. 1936 பொது வேலைநிறுத்தத்தில் 3 மில்லியன் தொழிலாளர்கள் "மட்டுமே" பங்கெடுத்தனர், அதேவேளையில் 1947 பொது வேலைநிறுத்தத்தில் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர்.
மே 22 மற்றும் 30க்கு இடையே அந்த வேலைநிறுத்தம் அதன் உச்சத்தை எட்டியது, ஆனால் ஜூலை வரையில் அது நீடித்தது. 4 மில்லியனுக்கு அதிகமான தொழிலாளர்கள் மூன்று வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர், 2 மில்லியன் பேர் நான்கு வாரங்களுக்கு அதிகமான காலத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரெஞ்சு தொழிலாளர் அமைச்சகத்தின் தகவல்படி, 1968 இல் வேலைநிறுத்தத்தின் காரணமாக மொத்தம் 150 மில்லியன் வேலை நாட்கள் இழக்கப்பட்டது. இதனோடு ஒப்பிடுகையில், எட்வார்ட் ஹீத் தலைமையிலான பழமைவாத கட்சி அரசாங்கத்தை கவிழ்த்த, 1974 பிரிட்டன் சுரங்க தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் மொத்தம் 14 மில்லியன் வேலை நாட்கள் இழக்கப்பட்டன.
மே 20 வாக்கில் அந்த அரசாங்கம் பெரிதும் நாட்டின் கட்டுப்பாட்டை இழந்திருந்தது. டு கோல் மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை —அதாவது "பத்து ஆண்டுகள் போதும்" என்ற முழக்கம்— ஊடுருவி பரந்து பரவியது. மே 24 அன்று, டு கோல் தேசத்திற்கு ஆற்றிய தொலைக்காட்சி வழி உரையுடன் நிலைமையின் மீது மீண்டும் கட்டுப்பாட்டைப் பெற முயன்றார். பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக உரிமைகள் வழங்க ஒரு வெகுஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு அவர் உறுதியளித்தார். ஆனால் அவரது பிரசன்னம் அவரது திராணியற்றதன்மையைத்தான் எடுத்துக்காட்டியது. அவர் உரை முற்றிலும் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.
மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களில், பிரான்சில் ஒரு புரட்சிகர சூழல் உருவாகி இருந்தது, வரலாற்றிலேயே இதைப்போன்ற ஒருசில முன்மாதிரிகள்தான் இருக்கின்றன. ஒரு தீர்க்கரமான தலைமையுடன், அந்த இயக்கமே டு கோல் மற்றும் அவரது ஐந்தாம் குடியரசின் அரசியல் தலைவிதிக்கு முடிவுகட்டியிருக்கும். அப்போதும் பாதுகாப்பு படைகள் ஆட்சிக்குப் பின்னால் நின்றிருந்த போதிலும் அவை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் எதிர்ப்பின் முன் நின்றுபிடித்திருந்திருக்க முடியாது. அந்த இயக்கத்தின் உயர்ந்துசென்ற அளவானது அக்கட்சி அணிகளில் இருந்தவர்களையே நிலைகுலைக்கும் அளவிற்கு பாதிப்பைக் கொண்டிருந்திருக்கும்.
தொடரும்.....