World Socialist Web Site www.wsws.org |
அக்டோபரின் படிப்பினைகள் அத்தியாயம் 3 போருக்கும், பாதுகாப்புவாதத்திற்கும் எதிரான போராட்டம் பெப்ரவரி 1917ல் ஜார் முடியாட்சி அகற்றப்பட்டமை முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு பிரமாண்டமான பாய்ச்சலுக்கு சமிக்கை காட்டியது என்பது உண்மையே. ஆனால் பெப்ரவரி நிகழ்வுகளை அதன் வரம்பிற்குள் கொண்டு மட்டுமே பார்த்தோமேயானால், அதாவது, அக்டோபரை நோக்கிய ஒரு அடி என்று கருதாவிட்டால், அதன் கருத்து உதாரணத்திற்கு பிரான்ஸ் போன்று ரஷ்யா ஒரு முதலாளித்துவ குடியரசை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான். குட்டி முதலாளித்துவ புரட்சிகர கட்சிகள், தாங்கள் எப்பொழுதும் செய்வது போலவே, பெப்ரவரி புரட்சியை ஒரு முதலாளித்துவப் புரட்சி என்றோ அல்லது சோசலிசப் புரட்சியை நோக்கிச் செல்லும் ஒரு பாதை என்றோ கருதவில்லை; இதன்மீது அவர்களைப் பொறுத்தவரையில், அது ஒருவகை சுயநிறைவு "ஜனநாயகத்தை" கொண்டிருப்பதை போன்றதாகும். இதன் மீது அவர்கள் புரட்சிகர பாதுகாப்புவாதம் என்ற கொள்கையை அமைத்துக் கொண்டனர். அவர்கள் பாதுகாத்தார்கள் என்று நீங்கள் மனநிறைவு கொண்டால், எந்த ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவில்லை மாறாக "புரட்சி", "ஜனநாயகம்" ஆகியவற்றை பாதுகாத்தனர். ஆனால் எமது சொந்த கட்சியிலேயே, பெப்ரவரி கொடுத்த புரட்சிகர உந்துதல், முதலில் அரசியல் முன்னோக்குகள் பற்றிய தீவிர குழப்பத்தைத்தான் ஏற்படுத்தியது. உண்மையில், மார்ச் மாத நாட்களில், பிராவ்தா லெனினுடைய நிலைப்பாட்டைவிட, புரட்சிகர பாதுகாப்புவாதத்திற்கு மிக நெருக்கமான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தது. "ஒரு படை மற்றொரு படையை எதிர்த்து நிற்கும்பொழுது, அவற்றில் ஒன்று ஆயுதங்களை களைந்து விட்டு வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும் என்று கூறும் திட்டத்தை விட அபத்தமான திட்டம் வேறு எதுவும் கிடையாது. அத்தகைய கொள்கை சமாதானத்திற்கான கொள்கையாக இருக்காது, மாறாக அடிமைத்தனத்திற்கான கொள்கை, சுதந்திரமான மக்களால் கோபத்துடன் நிராகரிக்கப்படும் கொள்கையாகும்" என்று அதன் தலையங்க கட்டுரைகளில் ஒன்றில் நாம் வாசிக்கின்றோம். இல்லை. மக்கள் தங்களுடைய பொறுப்பில் பெரும் தைரியத்துடன் அசையாமல் நின்று, தோட்டாவிற்கு தோட்டா, குண்டுகளுக்கு குண்டு என்று பதிலடி கொடுப்பர். இதில் எவ்வித கேள்விக்கும் இடமில்லை. "புரட்சியின் ஆயுதப்படைகளில் எவ்விதமான சீர்குலைப்பையும் நாம் அனுமதிக்கக் கூடாது" (Pravda, No.9, March 15, 1917 " எந்த இரகசிய இராஜதந்திர முறையும் தேவையில்லை" என்ற கட்டுரையில் கூறப்பட்டது.) இங்கு வர்க்கங்கள், ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்பவற்றை பற்றியெல்லாம் குறிப்பு இல்லை; மாறாக "சுதந்திரமான மக்கள்" என்பது பற்றிய பேச்சு உள்ளது; அதிகாரத்திற்கு போராடுகின்ற வர்க்கங்கள் பற்றிய குறிப்பு கிடையாது; மாறாக, "அவரவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பில் நிலைத்திருக்கவேண்டும்" என்றுதான் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணங்களும், சூத்திரங்களும் முற்றிலும் பாதுகாப்புவாதம்தான்! மேலும் இதே கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: எமது முழக்கம் "போர் வேண்டாம்" என்ற வெற்றுக் கூச்சல் அல்ல! -- இதன் பொருள் புரட்சிகரப்படை மற்றும் இன்னும் கூடுதலான முறையில் புரட்சிகரமாக மாறிக்கொண்டிருக்கும் படைவீரர்களை குலைப்பது என்று ஆகும். எமது முழக்கம், உலக ஜனநாயகத்தின்[!] கண்களின் முன்னே, பகிரங்கமாக உலகப் போரை முடிப்பதற்கான உடனடிப் பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகளில்[!], இடைக்கால அரசாங்கத்தை தவறாது ஈடுபட நிர்பந்திப்பதற்காக அதற்கு அழுத்தம் கொடுப்பதாகும். அதுவரை ஒவ்வொருவரும்[!], தத்தம் நிலைகளில்[!] இருக்கட்டும்." இத்தகைய திட்டம், ஒரு ஏகாதிபத்திய அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுப்பதற்கான திட்டம், அதை ஒரு பக்தி ததும்பிய முறையில் "ஊக்குவிக்கும்" திட்டம் என்பது ஜேர்மனியில் கவுட்ஸ்கி மற்றும் லேடேபோரினது, பிரான்சில் ஜோன் லோங்குவேயினது, இங்கிலாந்தில் மக்டொனால்டினது திட்டமாகும். ஆனால் இது ஒருபொழுதும் போல்ஷிவிசத்தின் திட்டமாக இருந்ததில்லை. முடிவுரையாக, இக்கட்டுரை "உலக மக்களுக்கு" (இந்தப் பிரகடனமே ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை புரட்சிகர பாதுகாப்புவாத உணர்வை கொண்டிருந்தது) என்று அழைப்பு விடுத்திருந்த பெட்ரோகிராட் சோவியத்தின் மதிப்பிழந்த பிரகடனத்திற்கு தன்னுடைய "உளங்கனிந்த வாழ்த்துக்களை" கொடுத்தது மட்டும் இல்லாமல், "பெரும் மகிழ்ச்சியுடன்" பெட்ரோகிராட் கூட்டங்கள் இரண்டில் ஏற்கப்பட்ட பாதுகாப்புவாத தீர்மானங்களுடனும் ஒன்றுபட்டு இருக்கும் ஆசிரியர் குழுவின் நிலைப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த இரண்டு தீர்மானங்களை பொறுத்தவரையில், அவற்றில் ஒன்று கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது என்றாலே போதுமானது: "ஜேர்மனி, மற்றும் ஆஸ்திரியாவில் இருக்கும் ஜனநாயக சக்திகள் எமது குரலை பொருட்படுத்தவில்லை என்றால் [அதாவது இடைக்கால அரசாங்கத்தின் "குரல்", மற்றும் சமரசவாதிகளின் சோவியத் "குரல்" என்பவற்றை, L.T], பின் நாங்கள் எங்கள் தந்தை நாட்டை எங்கள் கடைசி சொட்டு இரத்தம் வரை கொடுத்துப் பாதுகாப்போம்." (Pravda, No.9, March 15, 1917). மேலே மேற்கோளிடப்பட்ட கட்டுரை ஒன்றும் விதிவிலக்காக வெளிவரவில்லை. மாறாக, ரஷ்யாவிற்கு லெனின் திரும்புமுன் பிராவ்தாவின் நிலையை மிகத் துல்லியமாகத்தான் வெளிப்படுத்தியிருந்தது. எனவே ஏட்டின் அடுத்த பதிப்பில் "போரைப் பற்றி" என்ற கட்டுரையில், "உலக மக்களுக்கு ஒரு பிரகடனம்" என்பதைப் பற்றி சில குறைகள் கூறப்பட்டாலும்கூட, கீழ்க்கண்டவாறு வந்துள்ளது: "உலக மக்களுக்கு, தங்கள் அரசாங்கத்தை இந்தப் படுகொலையை ஒரு முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நிலைப்பாட்டை உடைய, பெட்ரோகிராட் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களுடைய சோவியத்தின் நேற்றைய பிரகடனத்தை புகழாமல் இருக்க முடியாது." (Pravda, NO.10, March 16, 1917). போருக்கு தீர்வு காணும் வழிவகையை எங்கே காண்பது? அதற்கு இக்கட்டுரை பின்வரும் விடையை கொடுக்கின்றது: "போரில் இருந்து வெளியேறுவதற்கான பாதை, இடைக்கால அரசாங்கத்திடம் அது உடனடியாக சமாதானப் பேச்சு வார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்தல் வேண்டும் என்று கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுக்கப்படவேண்டும்." இதேபோன்ற, வெளிப்படையான பாதுகாப்புவாத, சமரசத் தன்மை ஆகியவைற்றை கொண்ட பல மேற்கோள்களை கூறிக் கொண்டே போகலாம். இதே காலத்தில், இன்னும் சில வாரங்களுக்கு முன்பு, தன்னுடைய சூரிச் (சுவிஸ்) கூண்டில் இருந்து இன்னும் தன்னை விடுவித்துக் கொள்ளாத லெனின் "தொலைவிலிருந்து வந்த கடிதங்கள்" என்ற (அவருடைய கடிதங்களில் பல பிராவ்தாவை அடையவே இல்லை) கடிதங்களில் பாதுகாப்பு வாதத்திற்கும், சமரசவாதத்திற்கும் எதிராக இடிமுழக்கங்கள் செய்தார். "இது முற்றிலும் அனுமதிக்கப்படமுடியாதது" என்று சிதைந்திருந்த முதலாளித்துவ தகவல்களின் கண்ணாடியில் புரட்சிகர நிகழ்வுகளை நுணுகிக் கண்ணுற்ற அவர் மார்ச் 9 அன்று எழுதினார்; "இந்த அரசாங்கம், ஏகாதிபத்திய போரை தொடரவேண்டும் என்ற கருத்து கொண்டிருப்பதை, அது ஒரு பிரிட்டிஷ் மூலதனத்தின் முகவர் என்பதை, அது முடியாட்சியை மீட்டு நிலச்சுவாந்தர்களினதும், முதலாளிகளினதும் ஆட்சியை தொடர நினைக்கிறது என்பதை நமக்கும் நம்முடைய மக்களுக்குமே மறைத்தல் என்பது முற்றிலும் அனுமதிக்கப்பட முடியாதது." பின்னர் மார்ச் 12 அன்று அவர் கூறினார்: "ஒரு ஜனநாயக முறையிலான சமாதானத்தை முடித்துவிடுக என்று வலியுறுத்துவது விபச்சார இல்லங்கள் நடத்துவோரிடம் உயர்ந்த அறத்தை பற்றி உபதேசிப்பது போலாகும்." பிராவ்தா இடைக்கால அரசாங்கத்திடம் "அழுத்தம் கொடுத்து", "உலக ஜனநாயகத்தின் கண்களின் முன்னே" சமாதானத்திற்காக தலையிட வேண்டும் என்று வாதிட்டு வந்தபோது லெனின் பின்வருமாறு எழுதினார்: "குச்கோவ்-மிலியுகோவ் அரசாங்கத்தை ஒரு விரைவான, நேர்மையான, ஜனநாயக, நல்ல அண்டை நாடாக இருக்கவேண்டும் என்ற கருத்தோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள் என்று கூறுவது, ஒரு கிராமத்து பாதிரியார், நிலச்சுவாந்தர்களையும், வணிகர்களயும் "கடவுளின் பாதையில் நடவுங்கள்", "உங்கள் அண்டை வீட்டாரை நேசியுங்கள், மற்ற கன்னத்தையும் காட்டுங்கள்" என்று உபதேசிப்பது போல் ஆகும்." [CW, Volf.23, Letters from Mar" (March 9 and 12, 1917). pp.31--36)]. பெட்ரோகிராட்டுக்கு அவர் வந்த மறுநாளான ஏப்ரல் 4ம் தேதி, லெனின் போர் மற்றும் சமாதானப் பிரச்சினையில் பிராவ்தாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக உறுதியுடன் வெளிப்பட்டார். அவர் எழுதினார்: "இடைக்கால அரசாங்கத்திற்கு எந்த ஆதரவும் கிடையாது; அதன் உறுதிமொழிகள் அனைத்தின் அப்பட்டமான மோசடிகளும், அதிலும் குறிப்பாக நாட்டிணைப்புக்கள் கைவிடப்படும் என்பது தொடர்பானவை தெளிவாக்கப்படவேண்டும். முதலாளித்துவவாதிகளின் அரசாங்கம் ஒரு ஏகாதிபத்திய அரசாங்கமாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று இந்த அரசாங்கத்திடம் அனுமதிக்கப்படக்கூடாத, பிரமைகளை வளர்க்கும் ''கோரிக்கைகளை'' வைப்பதற்கு பதிலாக அம்பலப்படுத்தவேண்டும். [[CW, Volf.24, "The Tasks of the Proletariat in the Present Revolution" (April 4,1917). p.22]. மார்ச் 14 அன்று சமரசவாதிகளால் வெளியிடப்பட்ட பிரகடனம், லெனினால் "இழிந்தது", "குழம்பியிருந்தது" என்று விவரிக்கப்பட்டது என்று கூறாமல் அது செல்கிறது. அது பிராவ்தாவிடமிருந்து பெரும் பாராட்டுக்களை சந்தித்திருந்தது. மற்ற நாடுகளை தங்கள் வங்கியாளர்களுடன் முறித்துக்கொண்டு வருவதற்கு அழைப்புக் கொடுக்கும் அதேநேரத்தில் தன்னுடைய நாட்டின் வங்கியாளர்களுடனேயே கூட்டணி அரசாங்கம் அமைத்துக்கொள்ள அழைப்பு விடுப்பது என்பது பாசாங்குத்தனத்தின் உச்சக்கட்டமாகும். "...அரசாங்கங்கள் மீது அனைத்துவித அழுத்தங்களையும் கொண்டுவருவதற்காக, தங்களுடைய அரசாங்கமும் ஒவ்வொருவிதத்திலும் "சமாதானம் பற்றி மக்களுடைய விருப்பம் என்ன என்பதை அறிவதற்காக, மையங்கள் அனைத்தும் பெருங்கூரலில் தாங்கள் மார்க்சிஸ்டுகள், சர்வதேசவாதிகள், தாங்கள் சமாதானத்திற்காக இருக்கிறோம்" என்றெல்லாம் சபதம் செய்கிறது மற்றும் அறிவிக்கிறது. [CW, Volf.24, "Tasks of the Proletariat in Our Revolution a Draft Platform for the Proletarian Party" (May 28, 1917), p.76]. ஆனால் முதற்பார்வையில் எவரேனும் ஆட்சேபனையை எழுப்பலாம்: ஒரு முதலாளித்துவ வர்க்கத்தின் மீதும் அதன் அரசாங்கத்தின் மீதும் "அழுத்தங்கள் கொடுப்பதை" ஒரு புரட்சிக் கட்சி மறுக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பது என்பது சீர்திருத்தப் பாதைதான். ஒரு புரட்சிகர மார்க்சிச கட்சி சீர்திருத்தங்களை நிராகரிக்கவில்லை. ஆனால் சீர்திருத்தத்திற்கான பாதை இரண்டாந்தரமாகத்தான் உதவியாக இருக்குமே அன்றி அடிப்படைப் பிரச்சினைகளில் அல்ல. அரச அதிகாரம் சீர்திருத்தங்களின் மூலம் அடையப்படமாட்டாது. "அழுத்தம்" என்பது முதலாளித்துவ வர்க்கம் அதன் முழு தலைவிதியே அடங்கியிருக்கும் பிரச்சினையில் தனது கொள்கையை மாற்றிக் கொள்வதற்கு ஒருபோதும் தூண்டுதலாக இருக்க முடியாது. வேறு எந்தவிதமான சீர்திருத்தவாத "அழுத்தத்திற்கும்" இடம் அது இடமில்லாது செய்துவிட்டது என்ற உண்மையான காரணத்தினால்தான், போர் ஒரு புரட்சிகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இதற்கு ஒரே மாற்றீடு, முதலாளித்துவ வர்க்கத்துடன் முழுமையாக செல்லுதல் அல்லது அதிகாரத்தை அதன் கைகளில் இருந்து பறித்துக் கொள்ள மக்களை அதற்கு எதிராக எழுப்பிவிடுதல் ஆகும். முதல் வழியில் அது உள்நாட்டுக் கொள்கை தொடர்பாக தொந்திரவு செய்யாமலிருக்க முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து சில சலுகைகள் பெற்றிருக்க கூடும்; அதற்கு ஈடாக வெளிநாட்டு ஏகாதிபத்திய கொள்கையில் நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுக்க வேண்டியிருக்கும். இந்தக் காரணத்தினால்தான், போரின் ஆரம்பத்தில் சமூக சீர்திருத்தவாதம் வெளிப்படையாகவே தன்னை சமூக ஏகாதிபத்தியம் என்று மாற்றிக் கொண்டது. இதே காரணத்தையொட்டி, உண்மையான புரட்சிகரக் கூறுபாடுகள் ஒரு புதிய அகிலத்தை தோற்றுவிப்பதை முன்முயற்சிக்க கட்டாயப்படுத்தப்பட்டன. பிராவ்தாவின் கண்ணோட்டம் பாட்டாளி வர்க்கத்தின் தன்மையைக் கொண்டிருக்கவும் இல்லை, புரட்சிகரமானதும் இல்லை; ஆனால் அது ஒரு ஜனநாயக பாதுகாப்புவாதத்தை, அதனுடைய பாதுகாப்புவாதம் ஊசலாடிக் கொண்டிருந்தபோதும் கொண்டிருந்தது. நாம் ஜார் மன்னராட்சியை அகற்றிவிட்டோம்; இப்பொழுது எமது ஜனநாயக அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை காட்டவேண்டும். அதன் நோக்கம் உலக மக்களுக்கு சமாதானத்தை கொண்டுவருவதாகும். ஜேர்மன் ஜனநாயகம் தன்னுடைய அரசாங்கத்தின்மீது அழுத்தத்தைக்காட்ட இயலாமற் போயிற்று என்றால், பின்னர் நாம் எமது "தந்தை நாட்டை", கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை பாதுகாப்போம். சமாதானத்திற்கான முன்னோக்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான பணி என்று காட்டப்படவில்லை; அதில் தொழிலாளர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கும் மேலாகச் சென்று அதனை சாதிப்பார்கள் என்று காட்டவில்லை; ஏனெனில் பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் கைப்பற்றப்படுவது என்பது நடைமுறை புரட்சிகரப்பணியாக காட்டப்படவில்லை. ஆயினும்கூட இந்த இரண்டு பணிகளும் பிரிக்கவியலாதபடி ஒன்றாக இணைந்திருந்தன. |