சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள்
|
WSWS : Tamil : நூலகம் |
|
The Historical and International Foundations of the Socialist Equality Party (Sri Lanka)Part 1சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை) -பகுதி 1
By
the Socialist Equality Party (Sri Lanka) Use this version to print | Send feedback கொழும்பில் 2011 மே 27-29 வரை இடம்பெற்ற கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) வரலாற்று சர்வதேசிய அடித்தளங்களை உலக சோசலிச வலைத் தளம் வெளியிடுகின்றது. இது 12 பாகங்களாக வெளியிடப்படும். 1. அறிமுகம் 1-1. சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (International Committee of the Fourth International -ICFI), தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காக மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி முன்னெடுத்த அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்தின் தொடர்ச்சியை பிரதிநிதித்துவம் செய்கின்றது. காலத்துக்கு ஒவ்வாத முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கிவீசி, சமுதாயத்தை சோசலிசத்தின் அடிப்படையில் மீளக் கட்டியெழுப்புவதற்காக, தொழிலாளர்களை அணிதிரட்டவும், அவர்களுக்கு கல்வியூட்டவும் மற்றும் அனைத்துலக ரீதியில் ஐக்கியப்படுத்தவும் செயற்படும் ஒரே ஒரு அரசியல் கட்சி இது மட்டுமேயாகும். 1-2. 1930களில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்த நிலையின் பின்னர், 2008ல் பூகோள நிதி நெருக்கடியுடன் தொடங்கிய தற்போதைய மாபெரும் பொருளாதார பொறிவின் தோற்றம், முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடி ஒரு புதிய காலகட்டத்துக்குள் நுழைவதை சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், ஒரு பக்கம் அதன் சர்வதேச எதிரிகளைக் கீழறுப்பதின் மூலமும், மறு பக்கம், தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய சுமைகளை திணிப்பதன் மூலமும் தனது நிலையை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. இதில் முதலாவது முயற்சி, பெருமளவில் பூகோள பதட்ட நிலைமைகளையும் முரண்பாடுகளையும் மற்றும் யுத்தத்தை நோக்கிய நகர்வுகளையும் பெருமளவில் அதிகரிக்கச் செய்கின்ற அதேவேளை, பின்னையது, வர்க்கப் போராட்டத்துக்கு எரியூட்டுவதோடு ஒரு புதிய புரட்சிகர எழுச்சிக் காலகட்டத்தையும் திறந்து விடுகின்றது. 1-3. பூகோள நெருக்கடியானது உலக முதலாளித்துவத்தின் இதயத்தில், அதாவது அமெரிக்காவில் மையங்கொண்டுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் துரித வீழ்ச்சியும், ஆசியாவில் புதிய சக்திகளின், விசேடமாக சீனாவின் எழுச்சியும், ஏகாதிபத்திய உட் பகைமைகளை தீவிரமாக கூர்மையடையச் செய்துள்ளது. இராணுவபலத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக தனது பொருளாதாரச் சரிவில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா எடுக்கும் ஈவிரக்கமற்ற முயற்சிகள், மத்திய ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் எரிசக்தி-வளம் மிக்க பிராந்தியங்கள் மீது, ஒரு அமெரிக்க அதிகாரக் கோட்டையை ஸ்தாபித்துக்கொள்வதை இலக்காகக் கொண்டு, ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகள் உட்பட, ஒரு தொடர்ச்சியான யுத்தங்களை ஏற்கனவே தோற்றுவித்துள்ளது. இத்தகைய மோதல்கள், முதலாளித்துவ அமைப்பு முறையின் அடிப்படை முரண்பாடுகளில், அதாவது உலகப் பொருளாதாரத்துக்கும் காலாவதியான தேசிய-அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான மற்றும் சமூகமயப்படுத்தப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்களின் தனியார் உடமைக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளில் இருந்தே தோன்றுகின்றன. உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தால், இந்த முரண்பாட்டின் தீவிரத்தன்மை ஒரு புதிய மட்டத்துக்கு வளர்ச்சிகண்டுள்ளது. 1-4. கடந்த இரு தசாப்தங்களாக, சீனாவின் வளர்ச்சியும் மற்றும் அதைவிட கொஞ்சம் குறைந்த மட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியும், உலக அரசியலின் ஈர்ப்பு மையத்தை தீவிரமாக ஆசியாவை நோக்கி மாற்றியமைத்துள்ளது. 1990ல் உலகின் 10வது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்த சீனா, 2010ல் ஜப்பானையும் முந்துமளவு வளரச்சியடைந்ததோடு, உலகின் இரண்டாவது மிகப்பெரும் பொருளாதாரமாக அமெரிக்காவுக்கு அடுத்த நிலையை எட்டியுள்ளது. சீனா அதனது வளர்ந்து வரும் தொழிற்துறைக்கு தேவையான பெருந்தொகையான மூலப் பொருட்களை, விசேடமாக எண்ணெய் மற்றும் எரிவாயுவை மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யத் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. சீனா தனது கடற் பாதையை தக்க வைத்துக்கொள்வதற்காக, ஒரு ஆழ்கடல் கடற்படையை கட்டியெழுப்புவதானது, அதனை இந்திய பெருங்கடலில் ஜப்பான், இந்தியா மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்காவுடன் போட்டிக்கு கொண்டுவந்துள்ளது. இலங்கை உட்பட ஆசியாவின் ஒவ்வொரு மூலையும், ஈவிரக்கமற்ற அழிவுகரமான மோதல்களுக்கு வழிவகுக்கும் வல்லாதிக்க சக்திகளுக்கு இடையிலான பகைமையில் சிக்கிக்கொள்கின்றன. அட்லான்டிக் மற்றும் பசுபிக் பெருங்கடலில் குவிமையப்படுத்தப்பட்டிருந்த நடந்து முடிந்த இரு உலக யுத்தங்கள் போலன்றி, இந்த புதிய மோதல்களுக்கான பூகம்ப முனையாக இந்து சமுத்திரம் விளங்கலாம். 1-5. ஆசியா, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பகைமைகளுக்கு மட்டுமன்றி சமூகப் புரட்சிகளுக்கும் கூட ஒரு பரந்த களமாக மாறும் தன்மையை கொண்டிருக்கிறது. பொருளாதார விரிவாக்கம் பிரமாண்டமான புதிய தொழிலாள வர்க்கப் படையை உருவாக்கிவிட்டுள்ளது. சீனா மட்டும் 400 மில்லியன் நகர்ப்புற தொழிலாளர் படையை கொண்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வொரு நாட்டிலும் பணக்காரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான சமூகப் பிளவு விரிவடைந்து வருகின்றது. உலகில் இரண்டாவதாக அதிகளவு பில்லியனர்களைக் கொண்டுள்ள சீனாவிலும், குறைந்த பட்சம் 250 மில்லியன் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். உலகில் மிகப் பெருமளவு வறுமை தலைவிரித்தாடும் இந்தியாவில், வெறுப்பூட்டும் வகையில் செல்வம் குவிக்கப்படுகின்றது. இத்தகைய எண்ணிலடங்கா சமூக முரண்பாடுகளை முதலாளித்துவத்தின் அடிப்படையில் தீர்க்க முடியாது. அரசாங்கங்கள் நெருக்கடியின் செலவுகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்ற நிலையில், 2008ல் இருந்து வாழ்க்கைத் தரம் துரிதமாக சீரழிந்து வருவதானது ஐரோப்பாவிலும், துனீசியா, எகிப்து மற்றும் மத்திய கிழக்கிலும் மில்லியன் கணக்கானவர்களை ஏற்கனவே போராட்டத்துக்குள் தள்ளியுள்ளது. இது ஆசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களை, கௌரவமான வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடவும், அதேபோல் இராணுவவாதத்துக்கும் யுத்தத்துக்கும் எதிராகப் போராடவும் தள்ளிச் செல்லும். அத்தகைய போராட்டங்கள், திவாலான இலாப அமைப்பு முறையையும் காலாவதியான தேசிய-அரசு அமைப்பு முறையையும் தூக்கி வீசி, உலக ரீதியில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்தை ஸ்தாபிக்க, தொழிலாள வர்க்கம் தொடுக்கும் ஒரு பூகோள எதிர்த் தாக்குதலாக ஒன்றிணைக்கப்பட வேண்டும். 1-6. எவ்வாறெனினும், தொழிலாள வர்க்கத்தால் தன்னியல்பாக ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதே, 20ம் நூற்றாண்டின் கசப்பான படிப்பினையாகும். தொழிலாள வர்க்கத்தின் தீர்க்கமான வரலாற்று அனுபவங்கள் அனைத்தையும் உட்கிரகித்துக்கொள்வதன் அடிப்படையில், புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது அதற்கு அவசியமாக உள்ளது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஸ்ராலினிசத்துக்கும் மற்றும் சகல வடிவிலான சந்தர்ப்பவாதத்துக்கும் எதிராக, ட்ரொட்ஸ்கிசத்துக்கான நீண்டகாலப் போராட்டத்தில் இருந்து பெற்ற படிப்பினைகளின் உருவடிவாகத் திகழ்கிறது. இந்தச் செழுமையான மரபு, சோ.ச.க. (அமெரிக்க) ஏற்றுக்கொண்டுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேச அடித்தளங்களில் சுருக்கிக் கூறப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் வேலைகளின் அடித்தளங்களும் உள்ளடங்கியுள்ளன. 2. நிரந்தரப் புரட்சித் தத்துவம் 2-1. ஒரு விஞ்ஞானபூர்வமான, அதாவது ஒரு மார்க்சிச புரட்சிகர முன்னோக்குக்கு லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவம் மையமானதாகும். இது பின்தங்கிய காலனித்துவ மற்றும் அரைக்-காலனித்துவ நாடுகள், அதேபோல் முன்னேறிய நாடுகளையும் உள்ளடக்கிய உலக சோசலிசப் புரட்சிக்கான ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கருத்துருவாகும். 1905ல் ரஷ்யாவில் நடந்த புரட்சியின் எழுச்சியுடன், முதலில் சூத்திரப்படுத்தப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவம், ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் மென்ஷிவிக் பிரிவின் இரண்டு-கட்ட முன்நோக்குக்கு எதிராக அபிவிருத்தி செய்யப்பட்டது. சோசலிசப் புரட்சி சாத்தியமாவதற்கு முன்னதாக, ரஷ்யா ஒரு நீண்டகால முதலாளித்துவ அபிவிருத்திக்குட்பட வேண்டும் என்பதே மென்ஷிவிக்குகளின் நிலைப்பாடாகும். ஆகவே, ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமைகளை, அதாவது ஜாரிச எதேச்சதிகாரத்தை அழித்து, கிராமப்புற பிரதேசங்களில் நில உறவுகளை தீவிரமாக மாற்றியமைப்பதை முன்னெடுப்பதில், பாட்டாளி வர்க்கம் தன்னை தாராளவாத முதலாளித்துவத்துடன் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். 2-2. சர்வதேச நிதி மூலதனத்தைச் சார்ந்தும், கிராமப்புற நிலப்பிரபுக்களோடு பிணைக்கப்பட்டும், அத்துடன் தொழிலாள வர்க்கம் வளர்ந்துவருவதையிட்டு அச்சமும் கொண்டிருந்த ரஷ்ய முதலாளித்துவம், ஜனநாயகக் கடமைகளை முன்னெடுக்க இயல்பாகவே இலாயக்கற்றது என்பதை லெனினுடன் சேர்ந்து ட்ரொட்ஸ்கி அம்பலப்படுத்தினார். ஜாரிச அட்டூழியத்துக்கு எதிரான பாட்டாளிகளின் இயல்பான பங்காளி பல மில்லியன் கணக்கான விவசாயிகளே, என ட்ரொட்ஸ்கி, லெனின் ஆகிய இருவரும் முன்கண்டனர். ஆனால், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற லெனினின் சூத்திரம், ஜனநாயகப் புரட்சிக்கு குறிப்பாக ஒரு தீவிர பண்பை வழங்கிய அதேவேளை, இந்த இரு வர்க்கங்களுக்கு இடையிலான அரசியல் உறவு பற்றிய பிரச்சினையை தீர்க்கவில்லை. அவரது கருத்துரு துணிகர இயல்புடன் இருந்தபோதிலும், சமுதாயத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்வதற்கு ஜனநாயக சர்வாதிகாரத்தை ஒரு கருவியாக லெனின் கருதவில்லை. மாறாக, அது முதலாளித்துவத்தின் அபிவிருத்திக்கு முழு அளவில் உதவும் ஒரு வழிவகை என்றே கருதினார். 2-3. ட்ரொட்ஸ்கியின் முடிவுகள் இன்னும் முன்சென்றன. முழு வரலாற்றுப் பதிவுகளையும் ஆய்வு செய்ததன் அடிப்படையில், விவசாயிகளால் எந்தவொரு சுயாதீனமான புரட்சிகரப் பாத்திரத்தையும் ஆற்ற முடியாது என அவர் வலியுறுத்தினார். ஜனநாயகக் கடமைகளை முன்னெடுக்க முதலாளித்துவம் இலாயக்கற்றுள்ளதால், தன் பின்னால் உள்ள விவசாய வெகுஜனங்களுக்கு தலைமைவகிக்கக் கூடிய பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க கிளர்ந்தெழும் வெகுஜனங்களின் தலைமையில் உள்ள தொழிலாளர்கள் மீதே அந்தப் பணி சுமத்தப்படுகிறது. முதலாளித்துவத்தின் சகல பகுதிகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் சுயாதீனமடையச் செய்வதற்காக புரட்சிகரக் கட்சியால் முன்னெடுக்கப்பட வேண்டிய உறுதியான மற்றும் இடைவிடாத போராட்டம் அதற்கான ஒரு இன்றியமையாத ஆக்கக்கூறாகும். எவ்வாறெனினும், அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தொழிலாள வர்க்கம் அதனது சொந்த வர்க்க வழிமுறைகளின் ஊடாக புரட்சிகரக் கடமைகளை கட்டாயமாக ஆற்றத் தள்ளப்படுவதோடு, தவிர்க்க முடியாமல் உற்பத்திச் சாதனங்களில் உள்ள தனியார்சொத்துடைமையுள் ஆழமாக ஊடுருவிச்செல்லும். வேறு வார்த்தைகளில் சொல்வதெனில், அது சமுதாயத்தை சோசலிச முறையில் மறு ஒழுங்கு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதோடு, அவ்வாறு செய்யும்போது அது அதன் தலைவிதியை ஐரோப்பிய மற்றும் உலக சோசலிசப் புரட்சியுடன் இணைக்கின்றது. 2-4. ரஷ்யப் புரட்சியின் வர்க்க இயக்கவியல் பற்றிய ட்ரொட்ஸ்கியின் தத்துவம், உலக சோசலிசப் புரட்சியானது ஒரே சமயத்தில் நிகழாவிட்டாலும், அது ஒன்றுடன் ஒன்று இணைந்த நிகழ்வாகும் என்ற அவரது கருத்துருவில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. ரஷ்யாவில் சமூகப் புரட்சியை ஒரு நாட்டுக்குள் வரையறுக்க முடியாது, மாறாக, அது அதன் இருப்புக்காக அனைத்துலக மட்டத்துக்கு விரிவாக்கத் தள்ளப்படும். பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதுடன் புரட்சி நிறைவடைவதில்லை, மாறாக, அது கட்டவிழ்த்துவிடப்படுகிறது. சோசலிசக் கட்டுமானத்தை, தேசிய மற்றும் அனைத்துலக மட்டத்திலான வர்க்கப் போராட்டத்தின் அடித்தளங்களில் இருந்து மட்டுமே புரிந்துகொள்ள முடியும். உலக அரங்கில் முதலாளித்துவ உறவுகளின் வரம்புமீறிய செல்வாக்கு நிலவுகின்ற நிலைமைகளின் கீழ், இந்தப் போராட்டம், நாட்டுக்குள் உள்நாட்டு யுத்தங்களாகவும், வெளிநாடுகளில் புரட்சிகர யுத்தங்களாகவும் தவிர்க்க முடியாமல் வெடிப்புக்களுக்கு வழிவகுக்க வேண்டும். அங்குதான், சோசலிசப் புரட்சியின் நிரந்தரப் பண்பு தங்கியிருக்கின்றது. அது சிறிதுகாலத்திற்கு முன்னர் தனது ஜனநாயகப் புரட்சியை பூர்த்தி செய்த ஒரு பின்தங்கிய நாடாக இருந்தாலும் சரி, அல்லது ஜனநாயகத்தின் மற்றும் பாராளுமன்றவாதத்தின் நீண்ட சகாப்தத்தை ஏற்கனவே கொண்டுள்ள பழைய முதலாளித்துவ நாடாக இருந்தாலும் சரி. [1] 2-5. அதன் சாரம் அனைத்திலும், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் ரஷ்யாவில் 1917ல் நடந்த புரட்சிகர நிகழ்வுகளின் போது உறுதிப்படுத்தப்பட்டது. லெனின், நாடுகடந்த நிலையில் இருந்து 1917 ஏப்பிரலில் திரும்பி வந்தபோது, பெப்பிரவரியில் ஜார் தூக்கியெறியப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துக்கு விமர்சனபூர்வமான ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்த ஸ்ராலின் உட்பட்ட போல்ஷிவிக் தலைவர்களுடன் கூர்மையான பிரச்சினைகளை எழுப்பினார். அவரது ஏப்பிரல் ஆய்வுக் கட்டுரைகளில், லெனின் தனது ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சூத்திரத்தை கைவிட்டதோடு நடைமுறையில் நிரந்தரப் புரட்சி நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார். அவர் இடைக்கால அரசாங்கத்தை எதிர்க்குமாறும், ஜாரின் வீழ்ச்சியின் பின்னர் தோன்றிய தொழிலாளர் சபைகள் அல்லது சோவியத்துக்கள் ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்றுமாறும் தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்புவிடுத்தார். லெனின் போல்ஷிவிக் கட்சியை மறுநோக்குநிலைப்படுத்தியமை, 1917 அக்டோபர் புரட்சிக்கும் சோவியத் அரசாங்கத்தை அமைப்பதற்கும் அடித்தளத்தை அமைத்தது. அது உலக சோசலிசப் புரட்சி முன்னெடுப்புக்கு ஒரு வலிமைமிக்க உந்துசக்தியை கொடுத்தது. 2-6. 1925-27 சீனப் புரட்சியும், முதலாளித்துவ வளர்ச்சி காலதாமதமான நாடுகளில் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் தொலைநோக்கினை நிரூபித்தது. ஆயினும் அது துன்பகரமான முறையிலும் எதிர்மறையானவகையிலுமே நிரூபிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் தொடர்ச்சியான தனிமைப்பட்ட நிலை மற்றும் பின்தங்கிய நிலையில் இருந்து தோன்றி, தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை அபகரித்துக்கொண்ட ஸ்ராலினின் தலைமையிலான சோவியத் அதிகாரத்துவமே எல்லாவற்றுக்கும் மேலாக சீனப் புரட்சியின் தோல்விக்கு பொறுப்பாளியாகும். தனிநாட்டில் சோசலிசம் என்ற பதாகையின் கீழ், ஸ்ராலினிச அதிகாரத்துவம், மூன்றாவது அகிலத்தை உலக சோசலிசப் புரட்சியின் ஒழுங்கமைப்பு மையம் என்ற நிலையில் இருந்து, சோவியத் வெளிநாட்டுக் கொள்கையின் ஒத்திசைந்துபோகும் அமைப்பாக மேலும் மேலும் மாற்றியதோடு, முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களோடு சூழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பயன்படுத்திக்கொண்டது. ஏகாதிபத்திய ஒடுக்குமுறை தேசிய முதலாளித்துவத்தை ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை வகிக்க கட்டாயப்படுத்துகிறது என வலியுறுத்திய ஸ்ராலின், சீனாவில் மென்ஷிவிக்குகளின் இரண்டு-கட்ட தத்துவத்தை உயிர்ப்பித்தார். அவர், சீனப் புரட்சியின் முன்னணிப் படையாக தன்னால் போற்றப்பட்ட முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு இளம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை அடிபணியச் செய்ததன் விளைவாக, முதலில் 1927 ஏப்பிரலில் ஷங்ஹாயில் கோமின்டாங்கின் தலைவர் சியாங் கேய்-ஷேக்கின் கைகளிலும், பின்னர் 1927 ஜூலையில் வுஹானில் இடது கோமின்டாங் அரசாங்கத்தினாலும் புரட்சிகர இயக்கம் நசுக்கித் தோற்கடிக்கப்பட்டது. 2-7. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை அரசியல்ரீதியில் எதிர்த்துப் போராட 1923ல் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பும், ட்ரொட்ஸ்கியும், ஸ்ராலினின் கொள்கைகளை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியதோடு, அவ்வாறு செய்ததன் மூலம் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை செழுமைப்படுத்தினர். கோமின்டாங்கில் இருந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை அரசியல் ரீதியாக சுயாதீனமடையச் செய்வதற்காக ஊக்கமுடன் போராடிய ட்ரொட்ஸ்கி, ஸ்ராலின் கூறிக்கொண்டது போல், ஏகாதிபத்தியமானது தேசிய முதலாளித்துவத்தை பாட்டாளி வர்க்கத்துடனும், விவசாயிகளுடனும் மற்றும் புத்திஜீவிகளுடனும் நான்கு வர்க்கங்களின் ஒரு புரட்சிகர கூட்டாக இணைக்கவில்லை என விளக்கினார். ட்ரொட்ஸ்கி விளக்கியதாவது: ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் உழைக்கும் வெகுஜனங்களை கிளர்ந்தெழவைக்கும் அனைத்து விடயங்களும், தவிர்க்க முடியாமல் தேசிய முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியத்துடனான ஒரு பகிரங்கமான கூட்டுக்கு தள்ளிச்செல்லும். முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர் மற்றும் விவசாய வெகுஜனங்களுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பலவீனமடையவில்லை, அதற்கு நேரெதிராய், அது ஒவ்வொரு புள்ளியிலும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால் இரத்தக்களரி மிக்க உள்நாட்டு யுத்தத்தின் நிலைக்கு கூர்மைப்படுத்தப்படுகின்றது.[2] 1927ல் புரட்சிகர அலை தணிந்த நிலையில், தோல்விக்குத் தயாராக இருந்த கன்டோன் மற்றும் ஏனைய பெரு நகரங்களிலும், முன்தயாரிப்பற்ற கிளர்ச்சியை நடத்துமாறு முடமாகிப் போயிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஸ்ராலின் கட்டளையிட்டது குற்றத்தன்மைகொண்டதாகும். சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் 15வது மாநாட்டுச் சமயத்திலேயே கன்டோன் கம்யூனும் அமைக்கப்பட வேண்டுமென கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது இடது எதிர்ப்பை முழுமையாக கட்சியில் இருந்து வெளியேற்றி, ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில், ஸ்ராலினின் புரட்சிகர நம்பகத் தன்மையை எடுத்துக்காட்டவே இது மேற்கொள்ளப்பட்டது. 2-8. 20ம் நூற்றாண்டின் பாதையில், இரண்டு-கட்ட தத்துவம் மற்றும் நான்கு வர்க்கங்களின் கூட்டு என்ற பதாதையின் கீழ், முற்போக்கு முதலாளித்துவம் எனச் சொல்லப்படுகின்ற ஒன்றிற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்தமை, மாற்ற இயலாதவாறு அழிவுகரமான தோல்வியில் முடிவடைந்தது. அதே சமயம், ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களும், பொதுவில் ட்ரொட்ஸ்கிசத்துக்கும், விசேடமாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்துக்கும் எதிராக ஒரு இடைவிடாத அவதூறுப் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். ஆயினும், ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர் தொடங்கி ட்ரொட்ஸ்கிக்கு இருந்த அசாதாரணமான தத்துவார்த்த நுண்ணறிவு, இப்போது ஒரு புரட்சிகர முன்னணிப் பாதையை எதிர்பார்க்கும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்றியமையாத வழிகாட்டியாக உள்ளது. இலங்கையில் போன்று வேறெந்த நாட்டிலும் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்காக அந்தளவு உறுதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த சிறிய தீவில் ட்ரொட்ஸ்கிசத்துக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் வளமான மூலோபாய அனுபவங்கள் சோசலிச சமத்துவக் கட்சியில் உருவடிவம் பெற்று, ஆசியா, ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்கா மற்றும் உலகம் பூராவும் புரட்சிகர வெகுஜனக் கட்சிகளை கட்டியெழுப்ப இன்றியமையாத படிப்பினைகளை வழங்குகிறது. 3. லங்கா சமசமாஜக் கட்சியின் ஸ்தாபிதம் 3-1. லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) 1935 டிசம்பரில் இலங்கையில் (அப்போது சிலோன்) இளைஞர் கழகங்களின் உறுப்பினர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனியாதிக்க நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு தேர்வு செய்யப்பட்ட அரச சபையை உருவாக்கும் 1931 இன் மட்டுப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அந்த இளைஞர் கழகங்கள் எதிர்த்திருந்தன. இந்தியாவில் வெகுஜன சுதந்திர இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர் கழகங்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவுகட்டுமாறு கோரியதோடு மட்டுமன்றி, பெருமந்த நிலையினால் தோற்றுவிக்கப்பட்ட சமூக துன்பங்களின் மத்தியில், சோசலிசத்தை நோக்கியும் திரும்பின. 3-2. இந்த இளைஞர் கழகங்கள், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்கள் மத்தியில் வேரூன்றியிருந்தன. அவர்கள் மிகவும் திறமையான வகையில் வெள்ளவத்தை கைத்தறி மற்றும் நெசவு ஆலைகளில் 1933ல் நடந்த வேலை நிறுத்தங்களின் போது, கொழும்பில் தொழிற்சங்க இயக்கத்தின் மீதான ஏ.இ. குணசிங்கவின் கட்டுப்பாட்டை சவால் செய்தனர். 1920களில் குறிப்பிடத்தக்க தொழிற்சங்க போராட்டங்களுக்கு தலைமை வகித்த குணசிங்க, 1930களில் பெரும் வேலையின்மை நிலைமைகளின் கீழ், வேலை நிறுத்தங்களை குழப்புபவராகவும் மற்றும் குடியேற்ற-விரோத இனவாதத்தைத் தூண்டுபவராகவும் செயற்பட்டார். 1934ல், இந்த இளைஞர் கழகங்கள் மலேரியா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு பரந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தன. வருமான வீழ்ச்சி மற்றும் குறைந்த அறுவடையினால் ஏற்பட்ட ஊட்டச்சத்தின்மையால் மேலும் உக்கிரமடைந்த மலேரியா தொற்று, குறைந்தபட்சம் 100,000 உயிர்களைப் பலிகொண்டது. 3-3. ஆரம்பத்தில் இருந்தே, லங்கா சமசமாஜக் கட்சி மாறுபட்ட கூறுகளைக் கொண்டிருந்தது. ஐரோப்பாவை மையமாகக் கொண்டு வளர்ச்சிகண்ட பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவே அது ஸ்தாபிக்கப்பட்டது. அப்போதுதான், ஸ்ராலினதும் மற்றும் மூன்றாம் அகிலத்தினதும் குற்றவியல் கொள்கைகளின் விளைவாக, 1933ல் ஜேர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். 1928ல் மூன்றாம் அகிலத்தின் அதி-தீவிர இடது ஏற்றுக்கொண்ட மூன்றாவது காலகட்டம் (Third Period) என்ற கொள்கையினால், ஜேர்மன் தொழிலாள வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டு செயலற்றதாக்கப்பட்டது. சமூக ஜனநாயகக் கட்சியை சமூக பாசிஸ்டுகள் என கண்டனம் செய்யும் ஸ்ராலினின் கொள்கைக்கு எதிராக, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஐக்கிய முன்னணிக்காக ட்ரொட்ஸ்கி போராடினார். இந்த ஐக்கிய முன்னணி தந்திரோபாயமானது தீர்க்கமான குறிக்கோள்களைச் சூழ ஐக்கியமாக செயற்படுவதை அடிப்படையாகக் கொண்டிருந்ததே அன்றி, அரசியல் வேலைத்திட்டம், சுலோகங்கள் அல்லது பதாகைகளை ஒன்றோடொன்று கலந்துகொள்வதை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் குறிக்கோள், நாஜிகளுக்கும் மற்றும் அவர்களின் அதிரடி துருப்புக்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் பலத்தை அணிதிரட்டுவதாக இருந்த அதேவேளை, சமூக ஜனநாயகத் தலைமைத்துவத்தின் துரோகத்தை அம்பலப்படுத்துவதாகவும் இருந்தது. நாஜிக்கள் ஆட்சிக்கு வந்த பின்னரும், ஸ்ராலினின் கொள்கைகள் சம்பந்தமாக மூன்றாம் அகிலத்தில் எந்தவொரு விமர்சனமும் முன்வைக்கப்படாமையினால், தொழிலாள வர்க்கம் ஒரு புதிய அகிலத்தை, அதாவது நான்காம் அகிலத்தை கட்டியெழுப்புவதை நோக்கித் திரும்ப வேண்டும் என ட்ரொட்ஸ்கி முடிவு செய்தார். 3-4. லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமைகளில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கல்வி கற்ற ஒரு புத்திஜீவி இளைஞர் தட்டினரே முன்னணியில் இருந்தனர். ஐரோப்பாவிலும் சர்வதேச ரீதியிலும் அரசியல் எழுச்சிகளால் ஏற்படுத்தப்பட்ட அறிவார்ந்த கொந்தளிப்புக்கு மத்தியில், அவர்கள் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களால் பலமாக ஈர்க்கப்பட்டனர். இவர்களில் பிலிப் குணவர்த்தனா முதலாமவராக இருந்தார். அவர் 1928ல் பிரிட்டனுக்கு செல்வதற்கு முன்னதாக அமெரிக்காவில் கல்வி கற்றார். அவர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்ட போதும், இந்தியா மற்றும் சீனாவில் ஸ்ராலினின் கொள்கைகளை விமர்சித்ததை அடுத்து அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடன் இருந்தவர்களில் கொல்வின் ஆர். டி சில்வா, லெஸ்லி குணவர்த்தனா, என்.எம். பெரேரா மற்றும் வேர்னொன் குணசேகராவும் அடங்குவர். 3-5. எவ்வாறெனினும், ஸ்ராலினிச அனுதாபிகளும் தீவிர முதலாளித்துவ தேசியவாதிகளும் லங்கா சமசமாஜக் கட்சியில் உள்ளடங்கியிருந்தனர். கட்சியின் உறுப்பினர்களில் இவ்வாறு பலரும் கலந்திருந்தமை, அதன் ஒழுங்கற்ற வேலைத் திட்டத்தில் பிரதிபலித்தது. உற்பத்திச் சாதனங்களின் சமுகமயமாக்கம், பண்டங்களின் விநியோகம் மற்றும் பரிவர்த்தனை ஊடாக, ஒரு சோசலிச சமுதாயத்தை ஸ்தாபிப்பதே கட்சியின் அடிப்படை இலக்கு என அதன் வேலைத்திட்ட அறிக்கை பிரகடனம் செய்தது. அது தேசிய சுதந்திரத்தைப் பெறுவதற்கும் மற்றும் பொருளாதார, அரசியல் சமத்துவமின்மையை மற்றும் வர்க்க, இன, சாதி, மத மற்றும் பால் வேறுபாட்டில் இருந்து எழும் ஒடுக்குமுறையை தூக்கி வீசுவதற்கும் அழைப்பு விடுத்தது. ஆனால், அந்த வேலைத் திட்டம், லங்கா சமசமாஜக் கட்சியை ஒரு தொழிலாள வர்க்க கட்சியாக அடையாளப்படுத்தாததோடு, சோசலிசத்தை அடைவதற்கான ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தையும் விவரிக்கவில்லை. அது சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருந்த எந்தவொரு பிரச்சினையையும், எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ராலினிசத்தின் தோற்றம் மற்றும் அதன் காட்டிக்கொடுப்புகளையும் பற்றி ஆராய முயற்சி எடுக்கவில்லை. 3-6. லங்கா சமசமாஜக் கட்சி உழைப்பாளிகளை நோக்கிய ஒரு தீவிரமான மற்றும் காலனித்துவ-எதிர்ப்பு கட்சியாக தோன்றியமை, இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார பின்தங்கிய நிலமையினதும் மற்றும் அது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு அரசியல் சேவகம் செய்ததன் ஒரு விளைவுமாகும். ஜவுளி, சணல், நிலக்கரி மற்றும் உருக்கு தொழிற்துறைகளில் பிரபல்யமாக இந்தியாவில் இருந்த உள்நாட்டு முதலாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்தாலும் கூட இலங்கையில் இருந்த அவர்களது சகாக்கள் ஒரு சிறிய பொருளாதாரப் பாத்திரத்தையே ஆற்றினர். பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திய மற்றும் மிகவும் இலாபகரமான தொழிற்துறையான தேயிலை பெருந்தோட்டங்கள் பிரிட்டனுக்கு சொந்தமாக இருந்தன. துறைமுகம் மற்றும் புகையிரதம் போன்ற பிரதான போக்குவரத்து உட்கட்டமைப்பு, பிரிட்டிஷ் முதலீட்டிலேயே கட்டப்பட்டன. இலங்கை முதலாளித்துவ வர்க்கம், காலனித்துவ அரசின் சேவகர்களாக சேவையாற்றியதன் மூலம், மதுபானம் உற்பத்தி செய்யும் பண்ணைகளை வாடகைக்கு விடுவதன் மூலம், மற்றும் இறப்பர், தென்னந் தோட்டங்கள் மற்றும் காரிய சுரங்கங்களை சொந்தமாக வைத்திருந்ததன் மூலமாகவும் காலனித்துவ பொருளாதார மூலதன திரட்சியில் குறைந்த இலாபமீட்டிய இடங்களை நிரப்பியது. 3-7. பொருளாதாரத்தை அரசியல் பின்தொடர்ந்தது. 1919ல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress -CNC), 1885ல் இந்திய முதலாளித்துவத்தால் ஸ்தாபிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸின் (Indian National Congress -INC) ஒரு மங்கலான பிரதிபலிப்பாகவே இருந்தது. 1907ம் ஆண்டிலேயே சுய-ராஜ்ஜியத்துக்கு அழைப்பு விட்ட இந்திய தேசிய காங்கிரஸ், முதலாம் உலக யுத்தத்தின் பின்னர், சுயாட்சிக்கான வெகுஜனப் பிரச்சாரத்தை முன்னெடுத்த அதே சமயம், இலங்கை தேசிய காங்கிரஸ் அரசியலமைப்பு மாற்றத்துக்காக கொஞ்சமும் துணிவற்ற வேண்டுகோள்களை விடுக்க மட்டுமே இலாயக்காக இருந்தது. 1907ல் அமைக்கப்பட்ட முஸ்லிம் லீக், 1915ல் அமைக்கப்பட்ட அனைத்து இந்திய இந்து மஹாசபை ஆகிய இந்தியாவின் வகுப்புவாத அமைப்புக்களின் பிற்போக்கு நோக்கங்களுடன் இலங்கை தேசிய காங்கிரஸ் மிகவும் பொதுவான தன்மையைக் கொண்டிருந்தது. இந்த அமைப்புக்கள் ஏதாவதொரு அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்திருக்குமானால், அவை பாரம்பரிய இந்து மற்றும் முஸ்லிம் பிரபுக்களின் நலன்களை பாதுகாத்துக்கொள்ளும் நிலைப்பாட்டிலேயே அவ்வாறு செய்தன. இலங்கையில் இலங்கை தேசிய காங்கிரஸ், தீவில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு விரோதமான, சிங்கள எஜமானர்களின் பௌத்த மறுமலர்ச்சியில் தங்கியிருந்தது. 1921ல் தமிழ் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவரும், பிரசித்தி பெற்ற தமிழ் தலைவருமான பொன்னம்பலம் அருணாசலத்தின் கோரிக்கைகளுக்கு இலங்கை தேசிய காங்கிரஸ் தலைமைத்துவம் இணங்க மறுத்ததை அடுத்து அது பிளவுபட்டது. இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் உயர்தட்டுக்களின் அமைப்புகள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு தங்களது இன்னும் மிக அதிகமான அடிபணிவின் மூலமே தங்களை இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறுபடுத்திக்கொண்டன. 3-8. சக்திவாய்ந்த, போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தின் தோற்றத்தையிட்டு இலங்கை முதலாளித்துவத்தின் சகல தட்டுக்களும் எல்லையற்ற பீதியில் இருந்தன. தமிழ் பேசும் தொழிலாளர்கள் தென்னிந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக கொண்டுவரப்பட்ட தேயிலைப் பெருந்தோட்டங்களிலேயே பாட்டாளி வர்க்கம் ஒன்றுகுவிந்திருந்தது. 1921 அளவில், தீவின் மொத்த 4.5 மில்லியன் ஜனத்தொகையில் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் சுமார் 500,000 பேராக இருந்தனர். கொழும்பிலும் விசேடமாக துறைமுகம், புகையிரத வேலைத் தளங்கள் மற்றும் உருவாகிக்கொண்டிருந்த தொழிற்துறைகளில் இருந்தும் நகர்ப்புற பாட்டாளி வர்க்கம் வளர்ந்தது. இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கீழ், பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்து சலுகைகளை பெறுவதற்காக, வெகுஜனங்களின் காலனித்துவ-எதிர்ப்பு உணர்வுகளுக்கும் மற்றும் அவர்களது சமூகப் பொருளாதார துன்பங்களுக்கும் வரம்பிற்குட்பட்ட மற்றும் இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்ட முறையில் அழைப்பு விடுக்க முயற்சித்தது. இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து சுதந்திரத்தை கோராத இலங்கை தேசிய காங்கிரஸ், அரசியல் அல்லது சமூக சீர்திருத்தங்களுக்காகப் பகிரங்கப் பிரச்சாரம் எதனையும் முன்னெடுக்கவில்லை. 1931 அரசியலமைப்புத் திருத்தத்தின் பாகமாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதை இலங்கை தேசிய காங்கிரஸ் தீவிரமாக எதிர்த்தமை, வெகுஜனங்கள் மீதான அதனது இயல்பான பகைமையைப் பிரதிபலித்தது. 3-9. இவ்வாறாக 1930களில், இலங்கையின் ஒடுக்குமுறை நிலைமைகளாலும், ஐரோப்பாவின் அரசியல் எழுச்சிகளாலும் மற்றும் அதிகரித்து வந்த யுத்த ஆபத்துக்களாலும் தீவிரமடைந்த புத்திஜீவித் தட்டுக்களின் கருத்துக்களுக்கு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்திற்குள் இடம் கிடைக்கவில்லை. இந்தியாவில் போன்று இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் அரவணைப்பின் கீழ் கொழும்பு தொழிற்சங்க தலைவராயிருந்த குணசிங்காவால் 1928ல் ஸ்தாபிக்கப்பட்ட தொழிற் கட்சி மட்டுமே தொழிலாள வர்க்கத்தைத் தளமாகக் கொண்ட ஒரே கட்சியாக இருந்தது. அது சுதந்திரத்துக்கு ஆதரவளிக்கவோ அல்லது சோசலிசத்தை பரிந்துரைக்கவோ இல்லை என்பதோடு மார்க்சிசத்துக்கு கடும் விரோதமாக இருந்தது. இதனால் லங்கா சமசமாஜக் கட்சி பல்வேறு அரசியல் போக்குகளின் உறைவிடமாகியது. ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கி ஈர்க்கப்பட்டவர்கள், அதேபோல் வெகுஜனங்களை அணுகுவதற்காக சோசலிச அல்லது மார்க்சிச சாயம் ஒன்று அவசியம் எனக் கருதிய போர்க்குணம் மிக்க முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளும் இதில் அடங்கியிருந்தனர். 3-10. தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்த மிகவும் துணிகரமானதும் புரட்சிகரமானதுமான கூறுகளாய் இருந்த ட்ரொட்ஸ்கிச குழு அல்லது T-குழு என்று அழைக்கப்பட்டவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமைக்கு உந்தப்பட்டமையானது இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அந்த நேரத்தில் நிலவிய அதீத வர்க்கப் பதட்டங்களின் ஒரு அளவீடாக இருந்தது. லங்கா சமசமாஜக் கட்சியின் முதலாவது தலைவராக கொல்வின் ஆர். டி சில்வாவும், லெஸ்லி குணவர்தனா அதன் முதலாவது செயலாளராகவும் ஆயினர். பிலிப் குணவர்தனாவும் என்.எம். பெரேராவும் 1936 பெப்பிரவரியில் அரச சபைக்கு தெரிவானதோடு, அச்சுறுத்திக்கொண்டிருந்த உலக யுத்தத்தில் பிரிட்டனுக்கு எந்தவொரு ஆதரவும் வழங்குவதற்கு லங்கா சமசமாஜக் கட்சியின் எதிர்ப்பை உறுதியாகப் பிரகடனப்படுத்த தமது பதவிகளை அவர்கள் பயன்படுத்தினர். குணசிங்கா மற்றும் அவரது தொழிற்சங்க அமைப்பின் வன்முறையான எதிர்ப்பின் மத்தியில், அடிப்படை உரிமைகள் மற்றும் நிலைமைகளை உறுதியாகப் பாதுகாத்தமையினால் லங்கா சமசமாஜக் கட்சி கொழும்பு தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஆதரவை வென்றது. காலனித்துவ ஆட்சியிலிருந்தான விடுதலை உள்ளிட மட்டுப்படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தங்களுக்காக அல்லது ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவது ஒரு புறம் இருக்க, முதலாளித்துவக் கட்சிகள் அவற்றுக்காக வாதாடக் கூட தவறின. இதன் அர்த்தம் அந்தப் பணிகளை நிறைவேற்றுவது தோன்றிவரும் பாட்டாளி வர்க்க பிரதிநிதிகள் மீது வீழ்ந்தது. ஒடுக்குமுறையான கிராமத் தலைவர் முறையில் மாற்றங்கள், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவது மற்றும் வேலையற்றவர்களுக்கு நிவாரணம் உட்பட ஒரு தொடர் முழுமையற்ற சீர்திருத்தங்களுக்காக லங்கா சமசமாஜக் கட்சி பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றது. 3-11. 1937ல், இந்தியாவில் இருந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கமலாதேவி சடோபத்யாயாவின் வருகைக்கு லங்கா சமசமாஜக் கட்சி ஏற்பாடு செய்தது. அவர் கொழும்பு காலிமுகத் திடலில் 35,000 பேர் பங்குபற்றிய கூட்டமொன்றில் உரையாற்றினார். லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்திருந்தவரும் பெருந்தோட்ட உரிமையாளர் ஒருவரிடம் பயிற்சிப் பணியாளராக இருந்தவருமான மார்க் பிரேஸ்கேடல் என்ற இளம் ஆஸ்திரேலியர் பெருந்தோட்ட பிரதேசங்களில் கமலாதேவியுடன் இணைந்து உரையாற்றினார். அப்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை கண்டனம் செய்தார். பிரேஸ்கேடலை நாடுகடத்த காலனித்துவ நிர்வாகம் எடுத்த முயற்சி அதற்கும் லங்கா சமசமாஜக் கட்சிக்கும் இடையில் டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் இடையிலான மோதலைப் போல மாறி தீவையே அதிர்வுக்குள்ளாக்கியது. கட்டுமீறிய மக்கள் எதிர்ப்பு, அரச சபையில் ஆளுனர் மீது கண்டனம் வெளியிடப்பட்டமை மற்றும் பிரேஸ்கேடல் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது ஆகியவற்றுக்கு முகம் கொடுத்த நிலையில் காலனியாதிக்க அதிகாரிகள் பின்வாங்கத் தள்ளப்பட்டனர். இது லங்கா சமசமாஜக் கட்சியின் அரசியல் அந்தஸ்தை பெருமளவில் உயர்ந்தது. 3-12. எவ்வாறெனினும், லங்கா சமசமாஜக் கட்சி எதிர்கொண்ட மிகவும் அடிப்படையான பிரச்சினைகள் சர்வதேச நிகழ்வுகளுடன் பிணைந்திருந்தன. 1935ல் லங்கா சமசமாஜக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்தே, ட்ரொட்ஸ்கியும் அவரது சக-சிந்தனையாளர்களும் ஸ்ராலினிசத்துக்கு எதிராகவும் நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் முன்னெடுத்துவந்த ஜீவமரண அரசியல் போராட்டத்தைப் பற்றி அது பகிரங்கமான நிலைப்பாடு எதனையும் எடுத்திருக்கவில்லை. அதற்கிருந்த சர்வதேசத் தொடர்பு 1934ல் இந்திய தேசிய காங்கிரசினுள் உருவாக்கப்பட்ட ஒரு தளர்ந்த சோசலிச பிரிவு மட்டுமே. ஆயினும், 1935 மற்றும் 1939க்கு இடையில், லங்கா சமசமாஜக் கட்சி தலைமை மேலும் மேலும் ஸ்ராலினிச மூன்றாம் அகிலத்துடனான மோதலுக்குள் இழுபட்டதோடு அந்தக் காலத்தின் தீர்க்கமான சர்வதேச பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளத் தள்ளப்பட்டது. T-குழு என்றழைக்கப்பட்டது, ஸ்ராலினால் பரிந்துரைக்கப்பட்ட மக்கள் முன்னணி அரசியலினால் - இந்த மக்கள் முன்னணி அரசியலின் விளைவாக, 1930களில் பிரான்சில் அரை-கிளர்ச்சி வேலை நிறுத்த இயக்கமும் ஸ்பானியப் புரட்சியும் அழிவுகரமாக தோற்கடிக்கப்பட்டன - பெரிதும் குழப்பத்துக்குள்ளானது. இந்த மக்கள் முன்னணியானது ஜேர்மனியில் ட்ரொட்ஸ்கி பரிந்துரைத்த ஐக்கிய முன்னணிக்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். பாசிசத்துக்கு எதிராக நடத்தும் போராட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்ற பெயரில், அது சந்தர்ப்பவாதிகளுடனும் முதலாளித்துவக் கட்சிகளுடனும் வெளிப்படையாக ஒரு பொது அரசியல் களத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. இது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்துடனும் தனிச்சொத்துடமையுடனும் மற்றும் அரசுடனும் கட்டிப்போட்டதோடு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன புரட்சிகர நடவடிக்கையையும் தடுத்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவமானது மக்கள் முன்னணி கொள்கையினதும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் ஜனநாயகவாத சக்திகளுடனான அதன் சூழ்ச்சி நடவடிக்கைகளதும் பாகமாக, அந்த நாடுகளின் கீழ் காலனிகளாக இருந்தவற்றின் முழு சுதந்திரத்துக்காக முன்னர் மூன்றாம் அகிலம் கொடுத்த முழு ஆதரவையும் கைவிட்டது. அவ்வாறு செய்ததன் மூலம், அபிவிருத்தியடைந்து வந்த காலனித்துவ-எதிர்ப்புப் புரட்சியை அது காட்டிக்கொடுத்தது. 3-13. 1936 மற்றும் 1938க்கு இடையில் நடந்த கொடூரமான மாஸ்கோ போலி வழக்கு விசாரணைகளை லங்கா சமசமாஜக் கட்சி தலைமை தனிப்பட்ட முறையில் எதிர்த்தது. இந்த விசாரணைகள், எல்லாவற்றுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை இலக்கு வைத்திருந்தாலும், ரஷ்யப் புரட்சியை முன்னெடுத்த தலைமுறையின் மிகச் சிறந்த பிரதிநிதிகளான போல்ஷிவிக் தலைவர்கள், செஞ்சேனை தளபதிகள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்கள் உட்பட, நூறாயிரக்கணக்கான சோசலிஸ்டுகளை திட்டமிட்டு படுகொலை செய்வதையும் உள்ளடக்கியிருந்தது. லங்கா சமசமாஜக் கட்சி தலைவர்கள், 1938ல் முதல்முறையாக ஆங்கிலத்தில் கிடைத்த காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி: சோவியத் ஒன்றியம் என்றால் என்ன? அது எங்கே செல்கின்றது? என்ற நூலில் ஸ்ராலினிசம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் ஆழமான ஆய்வுகளால் பலமாக ஈர்க்கப்பட்டிருந்தனர். எவ்வாறெனினும், இரண்டாம் உலக யுத்தத்தின் வெடிப்பு, லங்கா சமசமாஜக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கி திரும்புவதற்கும் இலங்கையிலும் இந்தியாவிலும் நான்காம் அகிலத்தின் பகுதியொன்றை ஸ்தாபிக்கவும் தீர்க்கரமாக இருந்ததை நிரூபித்தது. தொடரும்... [நிரந்தரப் புரட்சி, www.wsws.org, தமிழ், நூலகம்] [சீனா பற்றி லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியவற்றில், சீனப் புரட்சியும் தோழர். ஸ்ராலினின் ஆய்வுகளும், மொனாட் அச்சகம், பக்கம் 161] |