wsws : Tamil : History
Download the Font

 

அத்தியாயம் 1

நாம் அக்டோபர் புரட்சியை பற்றி கட்டாயம் கற்க வேண்டும்

Use this version to print | Send feedback

அக்டோபர் புரட்சியில் நாம் வெற்றி கண்டோம், ஆனால் எமது பத்திரிகைகளில் அக்டோபர் புரட்சி குறைந்த வெற்றியையே சந்தித்திருக்கிறது. அக்டோபர் எழுச்சியை பற்றி பரந்த சித்திரம் தீட்டி, அதன் மிகவும் முக்கியமான அரசியல் மற்றும் அமைப்புரீதியான தன்மையை பற்றி தக்கமுறையில் வலியுறுத்திக்கூறும் ஒரு படைப்பை இதுவரையும் நாம் பெற்றிருக்கவில்லை. இன்னும் மோசமானது என்னவென்றால், புரட்சிக்கான தயாரிப்பு அல்லது புரட்சி பற்றி பல குறிப்புக்களையும் கொண்டிருக்கும் வகையில் நேரடியாக தொடர்புபட்ட முதல்தர, முக்கிய ஆவணங்கள்கூட இன்னும் வெளியிடப்படவில்லை என்பதாகும். புரட்சியில் அக்டோபருக்கு முன்னால் நிகழ்ந்தவை பற்றியவை, மற்றும் கட்சியின் அக்டோபருக்கு முந்தைய வரலாறு பற்றிய கணக்கிலடங்கா ஆவணங்களும் மற்றைய குறிப்புக்களும் வெளிவந்துள்ளன. ஆனால் அக்டோபர் புரட்சியை பொறுத்தவரையில், மிகக் குறைவான கவனத்தையே அது பெற்றுள்ளது. புரட்சியை சாதித்த பின்னர், நாம் அக்டோபர் புரட்சியை ஒருபோதும் திரும்பச் செய்யவேண்டிய தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டோம் போலும். அக்டோபர் புரட்சியை பற்றிய படிப்பு, அது நேரடியாக தயாரிக்கப்படுவதற்கான வகையில் இருந்த உண்மையான நிலைமை, அது உண்மையில் சாதிக்கப்பட்ட தன்மை, முதல் சில வாரங்களில் அதை உறுதிப்படுத்துவதற்கான பணிகள் ஆகியவை உடனடியாகவோ, நேடியாகவோ தள்ளிப்போடமுடியாத வருங்கால ஆக்கப் பணிகளிடையே எந்தப் பங்கையும் பெறா என்று நாம் எண்ணுவது போல் தோன்றுகிறது.

அத்தகைய அணுகுமுறை அது உள்மனம் சார்ந்ததாக (அரை உணர்மையுடன்) இருந்தாலும், அது ஆழ்ந்த முறையில் தவறானது மட்டுமின்றி, குறுகிய மற்றும் தேசியத் தன்மை படைத்ததும் ஆகும். அக்டோபர் புரட்சியின் அனுபவங்களை நாம் மீண்டும் செய்யத்தேவையில்லாது இருக்கலாம்; ஆனால் அந்த அனுபவத்தில் இருந்து நாம் எதையும் கற்கவேண்டிய தேவையில்லை என்ற உட்குறிப்பு பொருந்தாதது ஆகும். நாம் அகிலத்தின் ஒரு பகுதியாவோம், உலகின் பல நாடுகளில் இருக்கும் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த "அக்டோபர்" பிரச்சினைக்கு தீர்வை இன்னும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு மேற்கு நாடுகளின் மிகவும் முன்னேறிய கம்யூனிஸ்ட் கட்சியினர்கூட, எமது அக்டோபர் அனுபவத்தை உள்ளீர்த்துக் கொள்வதில் தோல்வியடைந்தனர் என்பது மட்டுமின்றி, உண்மையான நிகழ்வுகளின் தன்மைகளைப் பற்றியும் கிட்டத்தட்ட முழு அறியாமையில்தான் இருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

அக்டோபரை பற்றிப் படித்தலோ, அல்லது அக்டோபர் பற்றிய ஆவணங்களை வெளியிடுவதோ, பழைய கருத்து வேறுபாடுகளை கிளப்பும் ஆபத்தில்லாமல் முடியாது என்ற ஆட்சேபனை எழும்பும் என்பது உண்மையே. ஆனால் இந்தப் பிரச்சினை பற்றி, அத்தகைய அணுகுமுறை மிகவும் குறுகிய தன்மையுடையதாகும். 1917ல் இருந்த கருத்துவேறுபாடுகள் என்பது உண்மையில் ஆழ்ந்த தன்மையை கொண்டிருந்துடன், அவை ஒன்றும் தற்செயலானவையும் அல்ல. ஆனால் பல ஆண்டுகள் கடந்த பின்னர் அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு அப்பொழுது தவறு விட்டவர்களை தாக்குவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்துவது மிக அற்பத்தனமான செயலாகும். அவ்வாறிருந்தபோதிலும், அதையும் விட அனுமதிக்க முடியாதது என்னவென்றால், மிகச்சிறிய தனிப்பட்ட கருத்துக்களின் காரணமாக சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அக்டோபர் புரட்சி பற்றிய முக்கியமான பிரச்சினைகளை பற்றி மௌனமாக இருந்துவிடுதல் ஆகும்.

கடந்த ஆண்டு நாம் பல்கேரியாவில் இரு தவிடுபொடியாக்கும் தோல்விகளை சந்தித்தோம். முதலாவதாக, தவிர்க்கவியலாத நிலை மற்றும் வறட்டுச்சூத்திரத்தை பற்றுவதன் காரணமாக (விதி, கோட்பாடு என்ற கருத்துகளினால்) கட்சி, புரட்சிகர நடவடிக்கை மிகப் பெரியமுறையில் சாத்தியமாக இருந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டது. (அந்த இயக்கம் சான்கோவின் ஜூன் மாத சதிக்கு பின்னர் எழுந்த விவசாயிகள் எழுச்சியாகும்.) அதன் பின், கட்சியானது தன்னுடைய தவறினை ஈடுசெய்யும் வகையில், செப்டம்பர் புரட்சியில் தேவையான எந்தவித அரசியல் அல்லது அமைப்புரீதியான தயாரிப்புக்களும் இல்லாமல் இறங்கியது. ஜேர்மனிய புரட்சிக்கு முன்னுரை போல் பல்கேரிய புரட்சி கட்டாயமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, மோசமான பல்கேரிய முன்னோடி இன்னும் கூடுதலான, மோசமான விளைவை ஜேர்மனியிலேயே ஏற்படுத்தியது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில், உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான அசாதாரணமான நிலைமையை முற்றிலும் நழுவ விட்டுவிட முடியும் என்பதை ஜேர்மனியில் தேர்ந்த நிரூபணமாக கண்டோம். ஆனால் மீண்டும், கடந்த ஆண்டின் பல்கேரிய அல்லது ஜேர்மனிய அனுபவங்கள் போதுமான கவனத்தை பெறவும் இல்லை, சரியான முறையில் ஸ்தூலமான மதிப்பீட்டிற்கு உட்படவுமில்லை. இவ்வரிகளை எழுதிக்கொண்டிருக்கும் ஆசிரியர் கடந்த ஆண்டு ஜேர்மனியில் நிகழ்ந்த செயற்பாடுகளை பற்றி ஒரு பொது வரையறையை எழுதியிருந்தார். அதன் பின்னர் நிகழ்ந்த அனைத்துமே இந்த வரையறையை பகுதியாகவும் மற்றும் முழுமையாகவும் நிரூபித்துக்காட்டின. வேறு எவரும், வேறு எந்த விதமான விளக்கத்தையும் கொடுக்கக் கூட முயற்சியெடுக்கவில்லை. ஆனால் வெறும் கோடிட்டுக் காட்டுதல் மட்டும் நமக்குப் போதாது. ஜேர்மனியில் கடந்த ஆண்டின் அபிவிருத்திகளின் ஸ்தூலமான மதிப்பீடு, முழு உண்மையான விவரங்களை நாம் கொண்டிருப்பது இன்றியமையாதது. மிக மோசமான வரலாற்றுத் தோல்வியை பற்றிய காரணங்கள் பற்றிய ஸ்தூலமான விளக்கத்தை அளிக்கும் இவ்வாறான ஒரு மதிப்பீடுதான் நமக்குத்தேவை.

ஆயினும், இன்றுவரை நாம் அக்டோபர் புரட்சியைப்பற்றி அரசியல் ரீதியான, தந்திரோபாய ரீதியான விரிவான மதிப்பீட்டை கொடுக்காத நிலையில் பல்கேரிய, ஜேர்மனிய நிகழ்வுகள் பற்றிய பகுப்பாய்வை பற்றிப் பேசுவது கடினமானது ஆகும். நாம் என்ன செய்து முடித்துள்ளோம், எப்படி முடித்துள்ளோம் என்பது பற்றி நாமே நமக்கு ஒருபோதும் தெளிவாக்கிக் கொள்ளவில்லை. அக்டோபருக்கு பின்னர், வெற்றியின் களிப்பில், ஐரோப்பாவில் நிகழ்வுகள் அவற்றின் சொந்த இயல்பாக வளர்ச்சியுறும் என்று தோன்றியது; மேலும் ஒரு மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் அக்டோபர் பற்றிய படிப்பினைகளை பற்றி எந்தவித தத்துவார்த்த ரீதியான உள்ளீர்த்துக் கொள்ளலுக்கும் நேரம் இல்லாததாக தோன்றியது.

ஆனால், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு வழிகாட்டும் திறனுடைய ஒரு கட்சி இல்லாமல், புரட்சி என்பதே நடைமுறைப்படுத்தப்பட முடியாது என்று நிழ்வுகள் உறுதிப்படுத்தின. பாட்டாளி வர்க்கம் தன்னியல்பான எழுச்சியாலே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. மிக உயர்ந்த தொழிற்துறை வளர்ச்சி மற்றும் கலாச்சார வளர்ச்சியடைந்துள்ள ஜேர்மனியிலேயே, நவம்பர் 1918ல் தோன்றிய தன்னியல்பான உழைக்கும் மக்களின் எழுச்சி பூர்சுவாக்களிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதில்தான் வெற்றியை காணமுடிந்தது. சொத்துடைமை பெற்ற ஒரு வர்க்கம், மற்றொரு சொத்துடைமை பெற்ற இன்னொரு வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை தன்னுடைய கைகளில் எடுத்துக் கொள்ளமுடிவதற்கு காரணம் அது தன்னுடைய செல்வங்கள், கலாச்சார மட்டத்திலும் மற்றும் பழைய அரச எந்திரங்களுடனான கணக்கிலடங்கா தொடர்புகளையும் தனக்கே அடித்தளமாக கொண்டுள்ளதாலாகும். ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு தன்னுடைய கட்சியை தவிர மாற்றீடாக செயலாற்றுவதற்கு அமைப்பு ஏதும் இல்லை.

1921ம் ஆண்டின் நடுப்பகுதியை ஒட்டித்தான், கம்யூனிஸ்ட் கட்சிகளை முற்றிலும், முறையாக கட்டமைக்கும் பணி ("மக்களை வென்றிடுக", "ஐக்கிய முன்னணி" போன்ற முழக்கங்களை பயன்படுத்தி) ஆரம்பிக்கப்பட்டது. அக்டோபர் புரட்சியின் சிக்கல்கள் பின்னே போய்விட்டன; அதேநேரத்தில் அக்டோபர் புரட்சியை பற்றி பயிலவேண்டும் என்ற சிந்தனையும் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு நாம் மீண்டும் பாட்டாளி வர்க்க புரட்சியின் பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள நேரிட்டது. அச்சிடப்பட்டவை, மற்ற கிடைக்கும் ஆதாரங்கள் என்று அனைத்து ஆவணங்களையும் நாம் திரட்டி அவற்றை நன்கு ஆராய்வதற்கு தயாராகிவிடும் நேரம் வந்துவிட்டது!

ஒவ்வொரு நாடும், வர்க்கமும், ஏன் கட்சியும்கூட தன்னுடைய சொந்த அனுபவத்தின் கடுமையான அடிகளில் இருந்துதான் முதலாவதாய் படிப்பினைகளை பெறுகிறது என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் அதற்காக மற்ற நாடுகள், வர்க்கங்கள், கட்சிகள் ஆகியவற்றின் அனுபவங்கள் குறைந்த முக்கியத்துவம் உடையவை என்று பொருள் கொண்டுவிடக்கூடாது. மகத்தான பிரெஞ்சுப் புரட்சியை, மற்றும் 1848ம் ஆண்டுப் புரட்சி மற்றும் பாரிஸ் கம்யூனை பற்றி நன்கு பயிலவில்லை என்றால், 1905ம் ஆண்டின் அனுபவத்தை கடந்திருந்தபோதிலும்கூட, நாம் ஒருநாளும் அக்டோபர் புரட்சியை சாதித்திருக்க மாட்டோம். சொல்லப்போனால், நம்முடைய இந்த "தேசிய" அனுபவத்தை கூட முந்தைய புரட்சிகளில் இருந்த படிப்பினைகளின் அடிப்படையில், அவற்றின் வரலாற்று வழியை விரிவுபடுத்துவதில் நம்மை அடித்தளமாக கொண்டுதான் செயலாற்றினோம். அதன் பின்னர், எதிர்ப்புரட்சியின் முழுக் காலகட்டமும் 1905ம் ஆண்டு நிகழ்வுகளில் இருந்து கற்கப்பட வேண்டிய, பற்றி எடுத்துக்கொள்ளப்பட்ட வேண்டிய படிப்பினைகளுடன் கவனஞ்செலுத்தப்பட்டது.

ஆயினும்கூட 1917ன் வெற்றிகரமான புரட்சியைப் பற்றி, ஏன், அதில் பத்தில் ஒரு பங்கு கூட எழுதப்பட்டிருக்கவில்லை. நாம் இப்பொழுது ஒன்றும் எதிர்விளைவு நடக்கும் ஆண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, புலம்பெயர்ந்த நிலையிலும் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. மாறாக, நம்முடைய அதிகாரத்திற்குள் இருக்கும் சக்திகளும், வளங்களும் அந்தக் கடினமான ஆண்டுகளில் நாம் பெற்றிருந்ததோடு எவ்விதத்திலும் ஒப்புமை செய்து பார்க்கும்படியாகவும் இல்லை. நாம் கண்டிப்பாக செய்யவேண்டியதெல்லாம், கட்சி அளவிலும், முழுமையான சர்வதேச அளவிலும் அக்டோபர் புரட்சியை பற்றி தெளிவாகவும், உண்மையாகவும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டியதுதான். முழுக்கட்சிக்கும், குறிப்பாக அதன் இளைய தலைமுறைக்கும் இத்தகைய செயலான அக்டோபர் புரட்சியின் அனுபவங்களை படிப்படியாக படித்து உள்ளீர்த்து கொள்ளுவது என்பது இன்றியமையாததாகும்; அக்டோபர் அனுபவம் என்பது கடந்த காலத்தின் தலையாய, ஐயத்திற்கு இடமில்லாத மற்றும் கடந்த காலத்தின் மீட்டுப்பெறமுடியாத சோதனையை வழங்குகிறது மற்றும் எதிர்காலத்திற்கான கதவுகளையும் அகலத் திறந்து வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜேர்மனிய படிப்பினை ஒரு அலட்சியம் செய்யமுடியாத நினைவூட்டல் என்பது மட்டுமில்லாமல், ஒரு கடுமையான எச்சரிக்கையும் ஆகும்.

அக்டோபர் புரட்சியின் பாதை பற்றி மிக முழுமையான அறிவுகூட, எமது ஜேர்மன் கட்சியின் வெற்றிக்கு எந்தவிதத்திலும் உத்திரவாதம் கொடுக்காது என்று ஒரு ஆட்சேபனை சந்தேகத்திற்கிடமில்லாமல் எழுப்பப்பட்டிருக்கும். ஆனால் இத்தகைய ஒட்டுமொத்த மற்றும் அடிப்படையில் பண்பற்ற நியாயப்படுத்தி வாதிடல் நம்மை எந்த முன்னேற்றத்திற்கும் அழைத்துச் செல்லாது. உண்மையில், அக்டோபர் புரட்சியை பற்றிய ஆய்வு மட்டும் மற்ற நாடுகளில் வெற்றியை கொள்ளுவதற்கு போதுமானதாக இருக்காது; ஆனால் ஒரு புரட்சிக்கு தேவையான முன் நிபந்தனைகள் அனைத்தும் இருக்கும் இடத்தில், புரட்சியின் விதிகள், மற்றும் வழிமுறைகள் பற்றி புரிந்துகொள்ளுவதில் அசையா உறுதியுள்ள, தொலைநோக்குடன் உறுதியாகச் செயல்படும் கட்சித் தலைமை தவிர்த்து நிலைமைகள் எதிர்ப்படலாம். கடந்த ஆண்டு ஜேர்மனியில், சரியாக இத்தகைய நிலைமைதான் இருந்தது. இதேபோன்ற நிலைமைகள் ஏனைய நாடுகளிலும் திரும்ப ஏற்படலாம். ஆனால் பாட்டாளி வர்க்க புரட்சியின் விதிகள் மற்றும் வழிவகைகள் பற்றி கற்பதற்கு நம்முடைய அக்டோபர் அனுபவத்தைவிட வேறு முக்கிய ஆழ்ந்த ஆதாரங்கள் எதுவும் இதுகாறும் இருந்ததில்லை. அக்டோபர் புரட்சியின் வரலாற்றை விமர்சனரீதியாகவும் விரிவாகவும் படிப்பதன் மூலம் நன்கு உள்வாங்கி கொள்ளத் தவறிய ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், கடந்த ஏகாதிபத்திய போரின் மூலோபாயம், தந்திரோபாயம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் தன்மைகள் பற்றி ஆராயாது, தற்கால சூழ்நிலையில் புதிய போர்களுக்கு தயார் செய்யும் ஒரு தலைமைத்தளபதியை ஒப்பர். அத்தகைய தலைமைத் தளபதி தவிர்க்கமுடியாமல் தன்னுடைய படைகளை வருங்காலத்தில் பேரழிவிற்குத்தான் இட்டுச் செல்வார்.

கட்சிதான் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அடிப்படைக் கருவியாகும். எமது அனுபவத்தின் அடிப்படையில், பெப்ரவரி 1917ல் இருந்து பெப்ரவரி 1918வரையிலான ஒரு ஆண்டை மட்டும் எடுத்துக் கொண்டாலும், மற்றும் பின்லாந்து, ஹங்கேரி, இத்தாலி, பல்கேரியா மற்றும் ஜேர்மனியில் மேலும் கூடுதலான அனுபவங்களை எடுத்துக்கொண்டாலும், புரட்சிகர நடவடிக்கையின் முன்னேற்பாட்டிலிருந்து அதிகாரத்திற்கான உடனடியான போராட்டத்திற்கு இடைமருவுவதில் கட்சி நெருக்கடி என்பது தவிர்க்கமுடியாதது என்பது கிட்டத்தட்ட மாற்ற முடியாத விதி என்பதை இப்போதைக்கு நாம் உண்மையென ஏற்றுக் கொள்வோம். பொதுவாக கூறுகையில், கட்சியின் போக்கில் தீவிர மாற்றம் வரும் ஒவ்வொரு நேரமும், மாற்றத்திற்கு முன்னோடியாகவோ அல்லது அதன் பலாபலனாகவோ கட்சிக்குள் நெருக்கடிகள் வரலாம்:

இதற்கான விளக்கம் கட்சியின் வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அது தனக்கென சொந்த சிறப்புக் கூறுபாடுகளை கொண்டுள்ளதுடன் குறிப்பிட்ட முறையில் பழக்கங்களும் வேலைமுறைகளும் இருக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுகிறது. தந்திரோபாய திருப்பம் என்பது இந்த பழக்கவழக்கங்கள் மற்றும் வழிமுறைகளில் இருந்து கூடுதலான அல்லது குறைவான முறிவு என்பதை குறிப்பாக தெரிவிக்கின்றது. இங்குதான் கட்சியின் உட்பிளவுகள், நெருக்கடிகள் இவற்றின் நேரடியான, மிகுந்த உடனடிக் காரணம் அமைந்திருக்கிறது. "வரலாறு ஒரு கூர்மையான திருப்பத்தை எடுக்கும்போது, முற்போக்கான கட்சிகள்கூட சில நேரங்களில் புதிய நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ள முடியாமல் போய், முன்பு சரியாக இருந்து, வரலாற்றில் கூர்மையான திருப்பம் 'திடீரென்று' இருந்ததால் 'திடீரென்று' அனைத்து அர்த்தங்களையும் தற்போது இழந்திருக்கின்ற முழக்கங்களை திரும்பக்கூறும் நிலை மிகவும் அடிக்கடி நடந்திருக்கின்றது" என்று லெனின் குறிப்பிட்டுள்ளார். [CW, Vol.25, "On Slogans" (mid-July1917), p.183]. திருப்பம் மிக எதிர்பாராமலோ அல்லது மிகத் திடீரென்று ஏற்பட்டாலோ, முந்தைய காலத்தில் மிகக் கூடுதலான முறையில், செயலற்ற மற்றும் பிற்போக்குத் தன்மையான கூறுபாடுகள், கட்சியின் தலைமை அமைப்புகளில் குவிந்திருந்ததாலோ, ஆண்டுகள் கணக்கில் அல்லது பத்தாண்டுகால கணக்கில் எதற்காக தன்னைத்தானே தயார்ப்படுத்திக்கொண்டு வந்ததோ, அந்த உச்சக் கணத்தில் மற்றும் நெருக்கடியான தருணத்தில் அதன் தலைமையை நிரப்பிவிட முடியாது என்பதை நிரூபிக்கும். இதையொட்டி கட்சி ஒரு நெருக்கடியினால் பெரும் அழிவிற்கு ஆளாகும், இயக்கமானது கட்சியை தலைமுதல் பாதம்வரை தோல்வியை நோக்கி இட்டுச்செல்லும்.

ஒரு புரட்சிக் கட்சி மற்றைய அரசியல் சக்திகளின் அழுத்தங்களுக்கும் உட்பட்டிருக்கும். அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், கட்சி தான் இந்த அழுத்தத்தை எதிர்க்கும் மற்றும் எதிர்த்து வினையாற்றும் அதன் சொந்த வழிமுறைகளை விரிவுபடுத்தும். ஓர் தந்திரோபாய திருப்பத்தின்பொழுது, மற்றும் உள் மறுஅணிசேர்தல்கள் மற்றும் முறுகல்கள் இவற்றின் விளைவாக, கட்சியின் எதிர்த்து செயலாற்றும் திறன் பலவீனமடையும். இதிலிருந்து, தந்திரோபாயங்களில் திருப்பத்தின் அவசியத்திலிருந்து தோன்றும் கட்சியில் உள் குழுசேர்தல்கள், ஆரம்பத்தில் இருந்த சர்ச்சைக்குரிய புள்ளிகளுக்கு பெரிதும் அப்பால் வளர்ச்சியடையும் மற்றும் பலவித வர்க்கப் போக்குகளுக்கு ஆதரவாக சேவை செய்யும் சாத்தியப்பாடு எப்பொழுதும் எழும். இன்னும் தெளிவான முறையில் இதைப் பற்றி கூறுவோமானால்: தன்னுடைய வர்க்கத்தின் வரலாற்றுப் பணிகளோடு இயைந்து நடக்காத ஒரு கட்சி, மற்ற வர்க்கங்களின் நேரடி அல்லது மறைமுகக் கருவிகளாக மாறிவிடும் ஆபத்தைக் கொண்டுள்ளது.

தந்திரோபாயங்களின் ஒவ்வொரு முக்கிய திருப்பத்திலும் நாம் மேலே கூறியது உண்மை என்றால், மூலோபாயத்தின் மாபெரும் திருப்பங்களின்போது அவை இன்னும் கூடுதலான முறையில் உண்மையாகும். அரசியலில் தந்திரோபாயம் என்று கூறும்போது, இராணுவ அறிவியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்போமானால், அது தனித்தனியான நடவடிக்கைகளை நடத்தும் கலை என்று குறிப்பிடலாம். மூலோபாயம் என்பது வெற்றிகொள்ளும் கலை என நாம் புரிகிறோம், அதாவது, அதிகாரத்தை கைப்பற்றலாகும். போருக்கு முன்னர் இந்த வித்தியாசத்தை ஒரு விதியாக உருவாக்கவில்லை. இரண்டாம் அகிலத்தின் சகாப்தத்தில் நாம் முற்றிலும் சமூக ஜனநாயக தந்திரோபாயங்களோடு நிறுத்திக் கொண்டாம். இது ஒன்றும் தற்செயல் நிகழ்வும் அல்ல. சமூக ஜனநாயகம் பாராளுமன்ற தந்திரோபாயங்கள், தொழிற்சங்க தந்திரோபாயங்கள், நகரசபை தந்திரோபாயங்கள், கூட்டுறவுச் சங்க தந்திரோபாயங்கள் என்ற பலவற்றையும் செயல்படுத்தியது. ஆனால் எதிரியை வெற்றிகொள்வதற்காக அனைத்து சக்திகளையும் வளங்களையும் --அனைத்து வகையான துருப்புக்ளையும்-- ஒன்றிணைக்கும் பிரச்சினை அதிகாரத்திற்கான போராட்டத்தில் நடைமுறைப் பணியாக எழுப்பப்படாதவரைக்கும், இரண்டாம் அகிலத்தின் சகாப்தத்தில் அது உண்மையில் ஒருபோதும் எழுப்பப்படவே இல்லை. 1905ம் ஆண்டு புரட்சியின் போதே முதன் முறையாக, நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாட்டாளி வர்க்க போராட்டத்தின் அடிப்படையான பிரச்சினைகள் அல்லது மூலோபாய பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. இக்காரணத்தை ஒட்டி, புரட்சிகர ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள், அதாவது போல்ஷிவிக்குகளுக்கு அது மகத்தான நலன்களை பெற்றுக் கொடுத்தது. புரட்சிகர மூலோபாயத்தின் பாரிய சகாப்தம் 1917ம் ஆண்டு தொடங்கியது; இது முதலில் ரஷ்யாவிற்கும் பின்னர் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கும் தொடங்கியது. தந்திரோபாயங்கள் இல்லாமல் மூலோபாயம் இல்லை என்பது உண்மையே. தொழிற்சங்க இயக்கம், பாராளுமன்ற செயற்பாடு போன்ற இன்னும் பல கேள்விகள் மறைந்துவிடவில்லை; ஆனால் அவை இப்பொழுது ஒரு புதிய பொருளில், அதிகாரத்திற்கான ஒரு இணைந்த போராட்டத்தின் குழப்பமான வழிமுறைகளாக அணிசெய்யப்பட்டுள்ளது. தந்திரோபாயங்கள் மூலோபாயத்திற்கு கீழ்ப்பட்டு இருக்கும்.

தந்திரோபாய திருப்பங்கள் ஒரு கட்சியின் உட்பூசல்களுக்கு வழிவகுக்கும் என்றால், மூலோபாய திருப்பங்களின்போது விளையும் முறுகல்கள் எந்த அளவிற்கு கடுமையானதாகவும் ஆழமானதாகவும் இருக்கும்! மற்றும் அனைத்து திருப்பங்களிலும் திடீரென தோன்றும் திருப்பம் என்னெவெனில், அது தயாரிப்பு, பிரச்சாரம் அல்லது அமைப்பு அல்லது கிளர்ச்சி வேலையிலிருந்து அதிகாரத்திற்கான உடனடிப் போராட்டத்திற்கு, பூர்சுவாவிற்கு எதிரான ஆயுதமேந்திய ஒரு எழுச்சிக்கு பாட்டாளி வர்க்கக் கட்சியின் திருப்பமாகும் கட்சியில் எஞ்சியிருக்கும் உறுதியற்ற தன்மை, அவநம்பிக்கை, சமரசப் போக்கு, நிபந்தனையற்ற சரணடைதல், சுருக்கமாக மென்ஷிவிக் முறை என்பவை அனைத்துமே எழுச்சிக்கு எதிராக மேற்புறத்திற்கு வந்து, தன்னுடைய எதிர்ப்பை நியாயப்படுத்துவதற்கான தத்துவார்த்த சூத்திரங்களை நாடி நிற்கும், மற்றும் அவற்றை நேற்றைய சந்தர்ப்பவாத எதிரிகளின் ஆயுதக் கிடங்குகளில் தயார்நிலையில் இருப்பதையும்காணும். இந் நிகழ்வுப்போக்கை நாம் எதிர்காலத்தில் பலமுறை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.

தீர்மானகரமான போராட்டத்திற்கு முன் கட்சி ஆயுதங்கள் பற்றிய இறுதி ஆய்வும் தேர்வும், பொதுமக்களிடையே மிகப் பரந்த முறையில் சாத்தியமான அமைப்புரீதியான மற்றும் கிளர்ச்சி வேலைகளின் அடிப்படையில், பெப்ரவரியில் இருந்து அக்டோபர் [1917] க்கு இருந்த இடைவெளியின்பொழுது இடம்பெற்றது. அக்டோபரின்போதும், அதற்குப் பின்னரும் இக்கருவிகள் மகத்தான வரலாற்று நடவடிக்கைகள் என்ற தீயில் புடம்போடப்பட்டன. அக்டோபர் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர், புரட்சியை பற்றிய பொதுவான அதிலும் குறிப்பாக ரஷ்ய புரட்சியை பற்றி வேறுபட்ட பார்வைகளை மதிப்பீடு செய்தல், அதிலும் 1917ன் அனுபவத்தை தவிர்த்து பார்க்கவேண்டும் என்பது, தேவையில்லாமல் ஒருவர் அப்பட்டமான புலமைச்செருக்குவாதத்துடன் தலையிடுவது போல் ஆகும். அது நிச்சயமாக ஒரு மார்க்சிச அரசியல் ஆய்வாக இருக்காது. இது பலவிதமான நீந்தும் முறையின் நன்மைகள் பற்றிய விவாதத்தில் கூறப்பட்டிருப்பதுபோன்று, நீந்துபவர்கள் தங்கள் முறைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றினைப் பார்க்க நமது கண்களை திருப்ப உறுதியாய் மறுப்பது போன்றதாகும். நீந்துபவர் தண்ணீரில் குதிப்பதன் மூலமே எந்த நீச்சல் முறை சிறந்தது என்பது பரிசோதிக்க முடிவது போன்றே, புரட்சியின் போது எப்படி அவை தீர்க்கப்பட்டன என்று சரிபார்த்தலை விடவும் புரட்சி சம்பந்தமான கருத்துக்களின் சிறந்த சோதனை வேறில்லை.

 

 


Copyright 1998-2005
World Socialist Web Site
All rights reserved