இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் ஜனாதிபதி குமாரதுங்கா முயற்சித்த அரசியலமைப்பு சதித்திட்டத்தை சுற்றியுள்ள நிகழ்வுகள், முதலில் ஒரு வேடிக்கையான நாடக தன்மையானதாக கருதவைத்தது. இதற்கான காரணத்தை, அதை நடத்திய அதன் முக்கிய அரசியல்வாதிகளின் நடத்தையில் காணமுடியாது. மாறாக, அது உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றங்களிலும், அதனுடனான இலங்கையின் உறவிலுமே காணமுடியும்.

குமாரதுங்காவும் பிரதம மந்திரி விக்கிரமசிங்காவும் அவர்களது நிலைப்பாடு தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கையில், உண்மையான முடிவுகள் திரை மறைவில், எல்லாவற்றிற்கும் மேலாக வாஷிங்டனிலும், ஓரளவிற்கு புதுடெல்லியிலும் எடுக்கப்பட்டன. இந்த நெருக்கடியின் மத்தியில் விக்கிரமசிங்கா அமைதியாக காணப்பட்டதற்கு காரணம், எங்கிருந்து வரும் ஆதரவு முக்கியமானதாக கருதப்படுமோ அந்த ஆதரவு தனக்கு கிடத்துள்ளது என்பது தெரிந்திருந்ததால் ஆகும்.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய விக்கிரமசிங்கா ''எனது தலைமையின் மீதும், சமாதான பேச்சுவார்த்தை தொடர்பான அரசாங்கத்தின் பாதை தொடர்பாகவும் ஜனாதிபதி ஜோர்ஜ். புஷ் தனது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அமெரிக்க அரசாங்கத்தினதும் காங்கிரசினதும் ஆதரவு எனக்கும் இந்த அரசாங்கத்திற்கும் உண்டு. இவ்வரசாங்கமே மக்களின் ஆணையைக் கொண்டுள்ளது.'' என உணர்ச்சிகரமாக கூறினார். இங்கு அவர் குறிப்பிடும் வரிசைக்கிரமத்தின் முக்கியத்தை கவனிக்கவும்: முதலில் புஷ் பின்னர் காங்கிரஸ், இறுதியில் இலங்கை மக்களின் ஆணை.

சிங்கப்பூரில், இச்சதியின் போக்கினை உன்னிப்பாக கவனித்துவரும் Straits Times பத்திரிகையின் நவம்பர் 10ம் தேதி ஆசிரிய தலையங்கம் சக்திகளின் உண்மையான உறவு பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது. ''குமாரதுங்காவின் நடவடிக்கை தொடர்பான செய்தியைத் தொடர்ந்து வாஷிங்டனில் இருந்து விக்கிரமசிங்கா உடனடியாக திரும்பாமல் இருக்க எடுத்த முடிவானது ''மிகவும் தந்திரோபாயமானது''. புஷ் ஆல் ''சமாதான பேச்சுவார்த்தையில் அவரின் தனிப்பட்ட ஈடுபாடு'' மறுக்கப்பட போவதில்லை என்ற பாதுகாப்புடனும், அவர் தான் தொடர்ந்தும் அதில் இருப்பேன் என்ற நம்பிக்கையுடனும் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு திரும்பினார்''.

முன்னைய காலத்தில், இலங்கையின் அரசியல் தலைவர்கள் பரந்துபட்ட மக்களின் காலனித்துவ எதிர்ப்பு மனநிலை தொடர்பாக உணர்வுடன் இருந்ததுடன், மூடிய கதவுகளுக்கு பின்னால் உலக ஏகாதிபத்திய தலைவர்களுடன் இணைந்து இயங்கியபோதிலும் தேசிய சுதந்திரத்திற்கு ஒரு தோற்றத்தை வழங்க முயன்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, விக்கிரமசிங்காவின் மாமனாரான முன்னாள் ஜனாதிபதி ஜூனியஸ். றிச்சார்ட். ஜெயவர்த்தனாவே தற்போது குமாரதுங்கா வகிக்கும் சகல நிறைவேற்று அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி பதவியை உருவாக்கியவராவார். அமெரிக்காவின் நலன்களுக்கு அடிபணிந்த அவரின் தன்மை காரணமாக, அவர் பரவலாக ''யாங்கி வாத்து'' (Yankee Dick) என அழைக்கப்பட்டார்.

எவ்வாறு நிலைமை மாற்றமடைந்தது. தற்போது அமெரிக்க ஆதரவு, இலங்கையின் எதிர்கால அரசியலை தீர்மானிப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது என பகிரங்கமாக அறிவிக்கப்படுகிறது. இது யுத்தத்திற்கு பிந்தைய தேசிய சுதந்திரத்தின் சகாப்தம் முழுமையாக முடிவிற்கு வந்துவிட்டது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகின் பெரும் பகுதிகள், அவர்களது இராணுவ சக்தியின் மூலமாகவோ அல்லது பரந்த பொருளாதார செயல்முறைகள் மூலமாகவோ உண்மையான காலனித்துவ நிலைக்கு திரும்பப்படுகின்றன.

தேசிய பொருளாதார சுதந்திரத்தின் முடிவு

1930 களின் தசாப்தத்தில், காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களின் எழுச்சிக்கு மத்தியில், லியோன் ட்ரொட்ஸ்கி தேசிய சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கும் சோசலிச புரட்சிக்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்தினார். தேசிய சுதந்திரத்திற்கான காலனித்துவ மக்களின் போராட்டம் அடிப்படையில் முற்போக்கானது என வலியுறுத்திய அவர், அப்போரட்டங்கள் காலனித்துவ நாடுகளின் அரசியல், பொருளாதார பின்தங்கிய தன்மைக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிராக முக்கிய தாக்கத்தைக் கொடுக்கிறது எனக்குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தார், "ஆனால், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தாமதமான புரட்சிகள், தேசிய அரசின் மறுமலர்ச்சிக்கான ஒரு புதிய காலகட்டத்தைத் திறந்து விட இயலாது என்பதை முன்பே தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். காலனிகளின் விடுதலையானது உலக சோசலிச புரட்சியில் ஒரு பிரமாண்டமான அத்தியாயமாக மட்டுமே இருக்கும்..... தேசிய பிரச்சினை எல்லா இடங்களிலும் சமூக பிரச்சனையுடன் ஒன்றிணைகிறது. உலக பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் எமது கிரகத்தின் அனைத்து நாடுகளினதும் உண்மையான மற்றும் நீடித்த சுதந்திரத்தின் அபிவிருத்தியை உறுதிப்படுத்த முடியும். [Writings 1933-34, Leon Trotsky, p. 306].

இலங்கையில் நான்காம் அகிலத்தின் முன்னோக்கானது, பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியினதும் (BLPI) லங்கா சம சமாஜ கட்சியினதும் (LSSP) ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினால் ஒரு சக்திவாய்ந்த உயிர்ப்பான வடிவத்தை எடுத்தது. 1948 இல் சோல்பரி அரசியலமைப்பின் கீழ் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியினது தலைவரான கொல்வின் ஆர். டி. சில்வா இதில் மக்கள் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை என அறிவித்தார். இந்த புதிய அந்தஸ்தானது சுதந்திரம் அல்ல, மாறாக “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இலங்கையின் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை மறுவடிவமைத்தல்” எனவும், மக்களை கட்டுப்படுத்தும் கடமை பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஓய்வுபெறும் பின்னணியில் இலங்கையின் ''சொந்த'' முதலாளித்துவத்திடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

ஆனால், காலனித்துவத்திற்கு பிந்தைய உடன்பாடு, பலமான அரசியல் அழுத்தங்களை உருவாக்கியது. முன்னாள் காலனித்துவ நாடுகளைப் பொறுத்தவரையில் 1950 களின் தசாப்தம் ஒரு புதிய அரசியல் எதிர்காலம் பற்றிய கருத்தை வழங்கியது போலிருந்தது. இதுதான் இந்தியாவில் நேரு, எகிப்தில் நாஸார் இந்தோனேசியாவில் சுகார்னோ மற்றும் கானாவில் என்க்ருமா போன்றவர்களால் பண்புருவாக்கப்பட்ட தேசிய சுதந்திரத்திற்கும் தேசிய பொருளாதார அபிவிருத்திக்குமான காலகட்டமாகும். ''ஆபிரிக்க சோசலிசம்'' மற்றும் ''நேருவாத சோசலிசம்'' போன்றவை இலங்கையினுள்ளும் எதிரொலித்ததுடன், அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) முதலாளித்துவ தேசியவாதிகள், அரசு பொருளாதாரத்தை ஒழுங்கமைப்பதை அடிப்படையாகக் கொண்ட ''சோசலிச'' கொள்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொதுத்துறை விரிவுபடுத்தப்பட்டதுடன், ஓய்வூதிய திட்டங்களுடன் மருத்துவ பராமரிப்பு திட்டங்களும் உணவு மானியங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், ஆசியா முழுவதிலும் இலங்கை மக்கள் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவித்தனர்.

ஆனால், யுத்தத்திற்கு பிந்தைய உலக முதலாளித்துவத்தின் மறு-ஸ்திரப்பாடு, இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஒரு பகுதியாக நான்காம் அகிலத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மிஷேல் பப்லோவாலும் (Michel Pablo) ஏர்னெஸ்ட் மண்டேலாலும் (Ernest Mandel) தலைமை தாங்கப்பட்ட ஒரு சந்தர்ப்பவாத போக்கனாது, அவர்கள் இப்போது எதிர்கொண்டுள்ள ''புதிய உலக யதார்த்தத்தின்'' முன்னே ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு தோல்வியடைந்துவிட்டது அல்லது பொருத்தமற்றதாகிவிட்டது என்ற முடிவிற்கு வந்தது. சர்வதேச சோசலிச புரட்சி வேலைத்திட்டத்தை, தேசிய சூழலுக்குள் உடனடி அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் தேசிய தந்திரோபாயங்களினால் அதிகரித்தவகையில் பதிலீடு செய்ய தொடங்கினர்.

லங்கா சம சமாஜ கட்சி, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளாலும் அவர்களின் இலங்கை கூட்டாளிகளாலும் உருவாக்கப்பட்ட அரசு கட்டமைப்பை நோக்கி உறுதியாக அடிபணிய ஆரம்பித்து, இறுதியில் 1964ம் ஆண்டு திருமதி.பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்துடன் இணைந்து கொண்டது. மீண்டும் 1970ம் ஆண்டு கூட்டரசாங்கத்தினுள் நுழைந்ததன் மூலம் லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் கொல்வின். ஆர். டி. சில்வா சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை 1972ம் ஆண்டு திருத்தி எழுதியதுடன், சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாகவும், பெளத்த மதத்தை அரச மதமுமாக்கினார்.

சந்தர்ப்பவாதிகள் எப்பொழுதுமே தமது காட்டிக்கொடுப்புகளை தமது கொள்கைகள் ''யதார்த்தமானவை'' என கூறி நியாயப்படுத்திக்கொள்ள முனைவர். அவர்களுக்கு புரட்சிகர இயக்கத்தின் கொள்கைகள் மிகவும் சிறப்பானதாக தோன்றினாலும், அவை ''சிறிய கனவிற்கு'' சற்று மேலானதை தவிர வேறொன்றுமில்லை. உண்மையில், காலனித்துவ நாடுகளுக்கு முக்கியமாக தேசிய பொருளாதாரமும், அரசியல் சுதந்திரமும் என்ற முன்னோக்கானது முற்றுமுழுதாக இலாயக்கற்றது என்பதை வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது எவ்வளவு சக்திவாய்ந்ததாக தோன்றியிருந்தாலும், இம்முன்னோக்கானது எப்போதுமே இரண்டு ஒருங்கிணைந்த நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது: ஒருபக்கத்தில், உலக முதலாளித்துவத்தின் யுத்தத்திற்கு பிந்தைய பொருளாதார செழிப்பிலும், மறுபக்கத்தில் குளிர் யுத்தத்திலும் தங்கியிருந்தது. யுத்தத்திற்கு பிந்தைய பொருளாதார செழிப்பானது ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான சடத்துவ வழிகளை வழங்கியது. குளிர் யுத்தமானது, பொருளாதார மற்றும் அரசியல் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு முதலாளித்துவ தேசிய தலைவர்களுக்கு ஏகாதிபத்திய அரசுகளை ஒருபுறமும் சோவியத் யூனியனை மறுபுறமுமாக அவற்றுக்கிடையில் சமநிலைப்படுத்திக்கொண்டு நின்று கொடுக்கல்வாங்கல்களை செய்துகொள்வதற்கான குறிப்பிட்ட இடத்தைக் கொடுத்தது.

யுத்தத்திற்கு பின்னான பொருளாதார செழிப்பானது 1970 களின் மத்தியில் முடிவிற்கு வந்ததுடன், 1930 களின் பின்னர் ஆழமான பொருளாதாரப் பின்னடைவிற்கு வழியமைத்தது. இது இலங்கையிலும் பாரிய அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்த இருந்தது. இது கூட்டரசாங்கத்தின் ''சோசலிச'' பாசாங்குகளில் தங்கியிருந்த தேசியவாத வேலைத்திட்டத்தை தகர்த்தது.

அதிகரித்துவரும் சென்மதி நிலுவையின் பிரச்சனைகளும் மற்றும் அதிகரிக்கும் பணவீக்கத்திற்கும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு உள்ளும், வெளியும் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக இருந்தது. ஆனால், இந்த நடவடிக்கைகள் பொருளாதார பிரச்சனைகளை தீவிரப்படுத்தியதுடன், பரந்த மக்கள் மத்தியில் ஆழமான எதிர்ப்பை உருவாக்கின. அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள், மக்கள் எதை உண்ணலாம், எதை உண்ணக்கூடாது என்பதை திணிக்கும் அளவிற்கு சென்றதுடன், வாழ்க்கைச் செலவு முன்னோடியில்லாத அளவு அதிகரித்துடன், இறக்குமதி மீதான கட்டுப்பாடு வேலையில்லாதோரின் அளவை அதிகரிக்க செய்தது. அதிகரித்துவரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள அரசாங்கம், வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்குவதற்கு அவசரகால அதிகாரங்களை பிரயோகிப்பதன் மூலம் முகம்கொடுக்க முடிந்தது.

1977 பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்காவின் அரசாங்கம் பதவியிலிருந்து துடைத்துக்கட்டப்பட்டது. பாராளுமன்றத்தின் 168 ஆசனங்களை கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதித்துவம் 8 ஆசனங்களுக்கு வீழ்ச்சி கண்டது.

''சுதந்திர சந்தையை'' நோக்கிய திருப்பம்

இலங்கை பொருளாதாரத்தின் நெருக்கடி ஒரு பூகோளரீதியான பிரச்சனையின் ஒரு பகுதியாகும். 1979--80 களில் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவரான Paul Volcker இனால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது, இது சர்வதேச கடன்களில் தங்கியிருக்கும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என அழைக்கப்படுபவற்றில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சி இயங்கா நிலைமையை அடைந்த ''இழந்த பத்தாண்டு'' என்பதை அனுபவித்தது. உப சகாரா ஆபிரிக்க நாடுகள் அதிலிருந்து மீளவேயில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ''கட்டுமான மறுசீரமைப்பு திட்டத்தின்'' கீழ் இறக்குமதி பதிலீட்டை (பிரதியீட்டை) அடித்தளமாக கொண்ட தேசிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள், ''சுதந்திர சந்தை'' மற்றும் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட திட்டங்களால் அதிகரித்தளவில் பிரதியீடு செய்யப்பட்டது.

1977ல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி இப்புதிய திட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்தியது. பொருளாதார கட்டுப்பாடுகள் பின்வாங்கப்பட்டு, வங்கி மற்றும் நிதித்துறை உள்ளடங்கலான பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகள் திறந்துவிடப்பட்டன. இதன் விளைவாக வெளிநாட்டுகடன் விரைவாக அதிகரித்தது. 1960 இல் $62 மில்லியனில் இருந்து 1969 இல் $231 மில்லியனாக அதிகரித்த வெளிநாட்டுகடன் 1974 இல் $380 மில்லியனை அடைந்ததுடன், பின்னர் 1977-78 இல் படிப்படியாக அதிகரித்து 1986 இல் கிட்டத்தட்ட $4 பில்லியனாகியது.

சுதந்திர சந்தையை நோக்கிய அரசாங்கத்தின் திருப்பமும் அதனை தொடர்ந்த வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்கமும் அதிகரித்தளவில் இனவாத கொள்கைகளை நோக்கி சரணடைவதுடன் ஒன்றிணைந்தது. பண்டாரநாயக்காவின் அரசாங்கம் தனது தேசியவாத வேலைத்திட்டத்தின் வங்குரோத்தை மூடிமறைக்க இனவாதத்தை பயன்படுத்தியதைப்போலவே, ஜெயவர்த்தனாவின் அரசாங்கமும் ''சுதந்திர சந்தை'' ஆட்சியை அறிமுகப்படுத்த இனவாதத்தை ஒரு பயனுள்ள ஆயுதமாக கண்டுகொண்டது. 1980 களின் தமிழர் எதிர்ப்பு படுகொலைகள் 1983 இன் உள்நாட்டு யுத்தம் தொடங்குவதற்கு நேரடியாக வழிவகுத்தன.

மில்லியன் கணக்கான மக்களுக்கு விபரிக்கமுடியாத துயரங்களை உருவாக்கும் அதே வேளையில், யுத்தத்தை நடத்துவதற்கு ஆட்சியால் அதிகரித்தளவில் பயன்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள், முக்கிய தனியார்மயமாக்கலை நடைமுறைப் படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை விற்பது முதன்முதலில் 1987 ஆம் ஆண்டில் அரசுக் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 80 க்கு மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. 2000ம் ஆண்டளவில் தனியார்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் அளவு 21.5 சதவீதத்தில் இருந்து 13.6 சதவீதமாக குறைந்துள்ளது.

அரசு சொத்துக்களை தனியார்மயமாக்கல் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்தபோதிலும், யுத்தத்தால் உருவாக்கப்பட்ட நிதிப்பிரச்சனையை சமாளிப்பதற்கு அது போதாததாக இருந்தது. 1990களின் மோதலின் போது ஒவ்வொருநாளும் அரசாங்கத்திற்கான யுத்தச்செலவு தலைசுற்றவைக்கும் 77.5 மில்லியன் டாலர்கள் என கணிப்பிடப்பட்டது.

மோதலில் இறுதியாக வெல்லலாம் என்ற அரசாங்கத்தின் கூற்று ஏப்பிரல்-மே 2000ல், கொழும்பு இராணுவத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை தொடுத்து வடக்கிற்கான பாதையான ஆனையிறவு முகாமை கைப்பற்றியதன் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது.

அதிகரித்துவரும் நிதிநெருக்கடியுடன், அடுத்த வருடம் இலங்கையின் வரலாற்றில் முதல்தடவையாக பொருளாதார வீழ்ச்சியானது 1.4 சதவீதம் சுருங்கியதுடன், கடன் பாரிய அளவு அதிகரித்தது. மொத்த மக்கள் கடனானது கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 100 சதவீதத்திற்கு உயர்ந்ததுடன், வெளிநாட்டுக்கடன் 10 பில்லியன் டாலர்களானது. ஜனவரி 2001ல் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 253 மில்லியன் டாலர்கள் கடனைப்பெற்றவுடன் மத்திய வங்கி ரூபாயை புழக்கத்தில் விட முடிவுசெய்தது.

2001 டிசம்பர் தேர்தலில் விக்கிரமசிங்காவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும், சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய கடன்களுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. மிகவும் பலமான சர்வதேச நிதி நிறுவனங்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம், கடன்வாங்கும் நாட்டின் பொருளாதாரத்தை ''மறுசீரமைப்பதற்கான'' நிபந்தனையின் அடித்தளத்திலேயே கடன் வழங்கப்படும் என்றது. இந்த நடவடிக்கைகள் ''கட்டுமான சீர்திருத்த திட்டங்கள்'' என அழைக்கப்பட்டது. ஆனால், அண்மைய வருடங்களில் அவற்றின் தாக்கம், விஷேடமாக ஆபிரிக்காவின் ஏழ்மையான நாடுகள் சுகாதாரத்திற்கும் கல்வித்துறைக்கும் செலவழித்ததைவிட அதிகமான அளவு கடனுக்கான வட்டியாக திருப்பி செலுத்தியுள்ளன. இது சர்வதேச நாணய நிதியத்தை புதிய பெயர்களை புனைய நிர்ப்பந்தித்தது.

இதன்படி, கொழும்பு நிதியுதவிக்கான தனது விண்ணப்பத்தை ஏழ்மை குறைக்கும் மற்றும் உற்பத்தியை வசதிகளைப் பெருக்கும் (Poverty Reduction and Growth Facility) திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தது. இதுதான் வருமானம் குறைந்த நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் சலுகைவழங்கும் வசதியாகும். விக்கிரமசிங்காவின் அரசாங்கம் முதலாவதாக சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகின்றது என்பதற்கு ஒரு ஏழ்மையை குறைக்கும் மூலோபாய பத்திரம் (Poverty Reduction Strategy Paper - PRSP) ஒன்றை முன்வைக்கவேண்டி இருந்தது.

2002 டிசம்பர் அரசாங்கம் ''இலங்கையை மீளப்பெறுதல்'' என்ற தலையங்கத்தின் கீழ் 252 பக்கங்களை அடங்கிய ஏழ்மையை குறைக்கும் மூலோபாயப் பத்திரத்தை முன்வைத்தது. அதன் ஆரம்ப பகுதியான ''வளர்ச்சிக்கான காட்சியை'' (Vision for Growth) கடந்த இரண்டு தசாப்தங்களாக இழந்த சந்தர்ப்பங்களுக்கான இலங்கை முதலாளித்துவத்தின் புலம்பல் என சுருக்கி கூறலாம்.

அப்பத்திரம் ''உண்மை என்னவெனில் இலங்கை பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளது. இது கடனால் உருவான நெருக்கடியாகும். இதனை கட்டுப்படுத்தாவிட்டால், வேலையின்மையை அப்படியே இருக்க செய்வதுடன், எதிர்வரும் தலைமுறையினரின் வருமானம் தாழ்வின் எல்லைக்கு சென்றுவிடும்'' என ஆரம்பிக்கின்றது.

நிலைமையை அவதானிக்கும் எவரும் இப்படியான ஒரு அறிவித்தலை, 50 வருட ஆட்சிக்கு பின்னர் இலங்கை முதலாளித்துவம் ஆளுவதற்கு முற்றுமுழுதாக அருகதையற்றது என்பதை ஒத்துக்கொள்கின்றது என்ற முடிவிற்கு வரவே கடமைப்படுவர். ஆனால் அரசாங்கத்தின் திரிக்கப்பட்ட சூழ்ச்சியின்படி, நெருக்கடிக்கான காரணம் அதன் முன்னைய ஆட்சியாளர்களுடன் இணைந்து பொறுப்பேற்கும் சர்வதேச நாணய நிதியத்தால் வழிநடாத்தப்பட்ட துரிதப்படுத்திய ''சுதந்திர சந்தை'' திட்டமே ஆகும்.

ஏழ்மையை மட்டுப்படுத்துவது தொடர்பாக அவ்வறிக்கை குறிப்பிடுவது வெறும் அலங்கார வேலையாகும். இந்த புதிய திட்டத்தின் உண்மையான நோக்கம், ஏற்கனவே பெறுமதியான நேரத்தை இழந்துவிட்ட நிலையில், புதிய பூகோள பொருளாதார ஒழுங்கமைப்பின் கீழ், இலாபத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு தன்னுடையை ஏனைய ஆசிய-பசுபிக் போட்டியாளர்களுக்கு மிகவும் பின்னால் இலங்கை தள்ளப்பட்டுவிடுமோ என்ற பயம்தான்.

அப்பத்திரம் தொடர்ந்தது, ''இலங்கை 1977ல் தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்க ஆரம்பித்தது. அதிலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எவ்வாறிருந்தபோதிலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது உண்மையாக நிறுத்தத்திற்கு வராவிட்டாலும், அண்மைய வருடங்களில் இப்போக்கு மெதுவாகியுள்ளது. பலர் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் உள்ளீர்த்துக்கொள்வதன் மூலம் இப்போக்குடன் விரைவாகவும் வெற்றிகரமாகவும் சென்றுள்ளனர். அவர்கள் கூடியளவு திறந்த பொருளாதார கொள்கையையும், நெருக்கமான பொருளாதார உறவுகளையும் இக்காலகட்டத்தில் உருவாக்கிக்கொண்டனர். துரதிஸ்டவசமாக இந்த நாடு பின்தங்கிவிட்டது. ஒரு பலமான பொருளாதாரத்தை கட்டுவதற்கு மிகவும் முக்கியமானதான வேகத்தில் செல்லவில்லை அல்லது சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவில்லை'' என குறிப்பிடுகின்றது.

''முன்னுள்ள பாதை'' தொடர்பாக குறிப்பிடுகையில், ''அரசாங்க செலவுகளை வெட்டுதல், அரசுடமையான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், பொருளாதாரம் முழுவதிலும் வேலைத்தலங்களை வெட்டுதல் போன்றவற்றை அடித்தளமாக கொண்ட சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பொதுவான திட்டத்தை முன்வைக்கின்றது. கடன் நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு ''பல துறைகளில் வெட்டுக்கள் அல்லது கத்தரிப்புகள்'' தேவை. ''முடிவற்ற வேலை'' என அழைக்கப்படும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு, முதலீட்டிற்கும் மற்றும் உலகம் முழுவதும் எமது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் சந்தை சாத்தியப்பாடுகளை தீவிரமாக தேடுதலும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, "உற்பத்தியை தனியார்துறையினர் கூடுதலாக எடுத்துக்கொள்வதற்காக வர்த்தக நடவடிக்கைகளை தனியார்மயமாக்கலை விரைவாக்குதல் அவசியம்" அத்துடன் "மக்கள் தொழில்களுக்கு இடையில் மாறுவதற்கு பாரியளவு நெகிழ்ச்சியுடன் இருத்தலை (Greater flexibility) உறுதிப்படுத்தவேண்டும்''. என குறிப்பிடுகின்றது. இது பாரிய வேலையின்மையையும், தொழில் பாதுகாப்பின்மையையும் மறைக்கும் வார்த்தையாகும்.

ஏழ்மையை குறைக்கும் மூலோபாயப் பத்திரத்துடன் அரசாங்கத்திடமிருந்து சர்வதேச நாணய நிதியத்திற்கான ''கடிதத்தின் நோக்கம்'' என்பதும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் அது நடைமுறைப்படுத்தவுள்ள கொள்கைகளை விபரிப்பதுடன், ஏற்கனவே ''மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயாராக'' உள்ளதாக கூறுவதுடன், ''நிதிக் கொள்கை தொடர்பான அவ்வாறான ஆலோசனைகளுடன் கலந்தாலோசிக்க தயாராக உள்ளதாக'' குறிப்பிடுகின்றது.

பொருளாதார, நிதிக்கொள்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் அறிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு தாம் பொறுப்பெடுத்துள்ளதை வலியுறுத்துகின்றது. ''தனியார்துறையின் வளர்ச்சியை துரிதப்படுத்தல்'', '' 'மறுபங்கீடு மற்றும் மாற்றீடு' செய்தல் தொடர்பான முன்னைய ஏற்றுக்கொள்ள முடியாத கொள்கையை விட்டொழித்தல்" போன்றவற்றிற்கு வசதியளிப்பது, பற்றாக்குறையான வளர்ச்சிக்கும், அதியுயர் ஏழ்மைக்கும் ''பொருளாதாரத்தின் மீது தொடர்ச்சியான பொதுத்துறையின் ஆதிக்கத்தை'' குற்றம்சாட்டுதல், ''உற்பத்தியை அதிகரிப்பதற்கு தடையாக உள்ளவற்றை கட்டுமான சீர்திருத்தத்தின் மீது கவனம் செலுத்தல் மற்றும் தனியார்துறையால் வழிநடத்தப்படும் அபிவிருத்திக்கு ஊக்கமளித்தல்'' போன்றவற்றை அது வலியுறுத்துகின்றது. இந்த முடிவினை சந்திப்பதற்கு பொதுநிதியை (அரசாங்க) மறுசீரமைக்கவுள்ளது.

இந்த அறிக்கையானது சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களின் ஒப்புதலை தெளிவாகப் பெற்றுக்கொண்டது. ஏனெனில், அடுத்த 3 வருடத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு நிதி உதவி செய்ய நிறைவேற்று அதிகாரிகள் குழு 18 ஏப்பிரல் 2003 அன்று 567 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

இவ்வருட ஆரம்பத்தில் விக்கிரமசிங்கவின் ஏழ்மை குறைக்கும் மூலோபாய பத்திரம் (Poverty Reduction Strategy Program) என அழைக்கப்படுவதை கடந்த யூனில் டோக்கியோவில் நிகழ்ந்த இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகள் மாநாட்டில் சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டமை, உலக நாணய சுற்றினுள் உள்ளிணைத்துக்கொள்வதின் அடுத்த கட்டமாகும். அமெரிக்காவின் தீவிர அரசியல் ஆதரவுடனும், குறிப்பிட்டளவு ஜப்பானின் நிதி உதவியுடனும், 50 நாடுகளினதும் மற்றும் 20 க்கு மேற்பட்ட சர்வதேச நாணய அமைப்புகளினது பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இம்மாநாட்டில், இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு அடுத்த 4 வருடங்களுக்கு 4.5 பில்லியன் டாலர்கள் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

எவ்வாறிருந்தபோதிலும், இவ் உதவிக்கான நிபந்தனையாக நாட்டின் தொடர்ச்சியான யுத்தத்தை ஒரு தீர்க்கரமான முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது இருந்தது. சர்வதேச மூலதனத்தின் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கொழும்பின் மோதலானது அப்பிராந்தியத்தில் அவர்களது திட்டங்களுக்கு தடையாக இருந்தது. உதவி வழங்குவதற்கான அவர்களது நோக்கமானது, இலங்கையின் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒரு ஸ்திரமான நிலைக்கு கொண்டுவருவதோ அல்லது அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோ அல்ல. மாறாக இலங்கை, தென் ஆசியாவில் தனது நிதி மற்றும் சாதகமான இராணுவ நடவடிக்கையின் மத்திய நிலையமாக்குவதே அமெரிக்காவின் விருப்பமாகும்.

20 வருடங்களுக்கு மேலாக, இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தொடர்பாகவோ அல்லது இலங்கை மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்தோ எவ்விதமான அக்கறையும் காட்டவில்லை. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக தென் ஆசியாவில் அதனது தலையீடு தீவிரமானதுடன், வாஷிங்டன் ''சமாதான பேச்சுவார்த்தைகளின்'' முக்கிய பங்குகொள்பவராக மாறியது. உதவி வெளிநாட்டு அமைச்சரான றிச்சார்ட் ஆர்மிடேஜ் இவ்வார ஆரம்பத்தில் வழங்கிய பேட்டியில் இதனை தெளிவாக குறிப்பிட்டார்.

''எங்களது முக்கிய நலன்கள் மனிதாபிமானம்தான்'' என்ற கடமைப்பாடான அறிவித்தலின் பின்னர், ''20 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை கொண்ட இந்த நாட்டை தென் ஆசியாவில் மட்டுமல்லாது உலக பொருளாதார வாழ்வின் ஒரு முக்கிய முழுமையான பங்காளியாக்குவதே எமது விருப்பமாகும். தென் ஆசியாவின் வளர்ச்சியின் உந்துசக்தியாக இலங்கை ஏன் இருக்கக்கூடாது என்பதற்கான ஒருவித காரணத்தையும் நாங்கள் காணவில்லை. அது அப்படியான நிலையிலிருக்கும் நாளைத்தான் நான் பார்க்க விரும்புகின்றேன்'' என குறிப்பிட்டார்.

இப்பிராந்தியத்தில் அதனது மேலதிக நலன்களுக்காக, புது டில்லியின் வாஜ்பாய் அரசாங்கத்தையும் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்தையும் நெருங்கிய உறவுகளை வைத்திருக்குமாறு அமெரிக்கா நெருக்குகின்றது. 2004 மார்ச்சில் கையெழுத்திடப்படவுள்ள ஒரு பரந்த பொருளாதார கூட்டு உடன்பாடு ஒன்று இணைக்குழுவால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.

ஆசியா டைம்ஸின் நவம்பர் 10 பதிப்பில் வெளியிடப்பட்ட “இந்தியா இலங்கை சரங்களை இழுக்கிறது” என்ற தலைப்பில் ராம்தானு மைத்ராவினால் எழுதப்பட்ட கட்டுரையானது, ''பரந்த பொருளாதார கூட்டு உடன்பாடு ஆனது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கான பொருட்கள், சேவை, வான்போக்குவரத்து, போக்குவரத்து, உல்லாச பிரயாணத்துறை, முதலீடு போன்ற பரந்தளவிலான துறைகளை கட்டுப்படுத்தும் தற்போதுள்ள வர்த்தக உடன்படிக்கையை பிரதியீடு செய்கின்றது. உண்மையில், இவ் உடன்பாடானது, இரண்டு நாடுகளையும் பலவிதமான சேவைகள் மற்றும் வரிக்கும் வர்த்தகத்திற்குமான பொது உடன்பாட்டினுள் (GATT-General Agreement on Tariffs and Trade) உள்ளடங்கும் விநியேக வழிகள் தொடர்பான ஒரு பரந்த பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும்.

இது இருபக்கத்திலும், அனுமதி பெறவேண்டிய மற்றும் நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் எனக்குறிப்பிட்ட பாரிய முதலீடுகளை இலகுவாக்குவதுடன், பொருளாதார கூட்டுழைப்பை திறம்பட செய்வதை இலகுவாக்குவதுடன் மற்றும் வர்த்தகத்திற்கும் முதலீட்டு தாராளமாக்கலுக்குமான வழியைவகுக்கும்.

இலங்கையை ''வளர்ச்சியின் இயந்திரமாக்கும்'' அமெரிக்காவின் திட்டமானது, முழு தென் ஆசிய பிராந்தியத்திலும் தனது நெருக்கமான பொருளாதார ஒருங்கிணைப்பிற்காக சர்வதேச மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க மூலதனம் ஆதிக்கம் செலுத்துவதை வசதியாக்கும் நோக்கத்தை கொண்ட ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இவ் ஒருங்கிணைப்பானது இராணுவத் துறைக்கும் நீடிக்கின்றது. கடந்த மாதம், புது டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், வாஜ்பாயும் விக்கிரமசிங்காவும் இருநாடுகளுக்கு இடையிலான பொதுவான பாதுகாப்புக்கொள்கை குறித்து அறிவித்தனர். அவர்களின் கூட்டு அறிக்கையில் ''இந்தியா இலங்கையின் பாதுகாப்பில் ஒரு நிலையான ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளும், மற்றும் அதனது இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் தனது ஆதரவை வழங்கும்'' எனக் குறிப்பிடப்பட்டது.

நெருக்கமான பொருளாதார உடன்பாடுகளைப் போலவே, வளர்ந்து வரும் பாதுகாப்பு உறவுகளும் அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகின்றன. மைத்ராவின் ஆசியா டைம்ஸ் கட்டுரைப்படி ''தமிழ்-சிங்கள மோதலை தீர்த்துவைப்பதற்கு இந்தியா முக்கியத்துவம் கொடுப்பது பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான சர்வதேச கவனம் ஒருங்கிணைக்கப்படுவதை பிரதிபலிக்கின்றது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அண்மைய அறிக்கைகள், இலங்கையின் ஆகாய பிரதேசத்தை 30 அமெரிக்க விமானப்படை வல்லுனர்கள் உள்நாட்டு விமானப் படையினருடன் இணைந்து அவர்களின் பாதுகாப்பு, மருத்துவ, பொறியியல் தேவைகளுக்காக கண்காணிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றது. தென் இலங்கையில் உள்ள வீரவில பிரதேசத்தில் அமெரிக்க விஷேட படையினர் அமைத்துள்ள நவீனவசதிகள் உள்ள இராணுவ முகாமில் இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்குவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் கிட்டத்தட்ட 8 வருடங்களாக குறிப்பிட்டு வருகின்றனர். வெளிநாட்டு தலையீடு தொடர்பாக கொழும்பு அரசாங்கம் ஒரு இராஜதந்திர மெளனம் சாதித்து வருவதுடன், புலிகளின் குற்றச்சாட்டுக்களை மறுக்கவுமில்லை''. என எழுதியுள்ளார்.

ஒரு புதிய ஏகாதிபத்தியம்

முக்கியமானது என்னெவெனில் விக்கிரமசிங்கா, ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புடன் பகிரங்கமாக இணைந்துள்ளதுடன், எதிர்காலத்திலும் எவ்விதமான இராணுவ தலையீடுகளையும் ஆதரிப்பேன் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ''அமெரிக்காவிற்கும் அதன் கூட்டணியினருக்கும் தலையீடு செய்வதைவிட வேறு மாற்று வழியிருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் ''தோல்வி'' ஒரு புதிய ''உலக பொலிஸ்காரனை'' உருவாக்கும் தேவையை உருவாக்கியுள்ளது'' எனக்குறிப்பிட்டார்.

இக்குறிப்புக்கள், "சமாதான முன்னெடுப்புகள்" எனக் கூறப்படுவது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உடன்பாடு என்பதற்கும் இன்னும் மேலானதை உள்ளடக்கியிருக்கின்றது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது, முழு துணைக் கண்டத்திலும் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மறுவடிவமைப்பதற்காக அமெரிக்கா மற்றும் அதன் பிராந்திய நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற உலகளாவிய நிதி நிறுவனங்களால் திட்டமிடப்பட்ட இது மிகவும் பரந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.

உண்மையில் இத்திட்டங்களுக்கு சமாதானத்தையும் வளர்ச்சியினையும் பாதுகாப்பது என வர்ணம் பூசப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இலாபத்திற்கான புதிய வளங்களை பாதுகாத்துக்கொள்ளும் பாரிய நிறுவனங்களதும், நிதி அமைப்புகளினதும் தேவையால் உந்தப்பட்டதாகும். இது எவ்வளவிற்கு முக்கியமாக இருந்தாலும் மலிவான உழைப்பையும் மூலவளங்களையும் பெற்றுக்கொள்வதைவிட இன்னும் அதிகமான நோக்கங்களை கொண்டது. வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டு நிதிகள் போன்ற நிதி மூலதனத்திற்கு, தனது இலாபத்திற்கான புதிய வளங்களை உலகம் முழுவதும் பெரும்பசியுடன் தொடர்ச்சியாக தேடி அலைகின்றது.

துணைக் கண்டம் முழுவதும் நிறுவப்பட்ட ஏகாதிபத்தியத்தின் புதிய அமைப்பு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து வேறுபடுகின்ற அதே வேளையில், அதன் அத்தியாவசிய உள்ளடக்கம் அப்படியே உள்ளது.

துணைக்கண்டம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள ஏகாதிபத்தியத்தின் இப்புதிய முறையானது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் உருவாக்கப்பட்டதை விட வித்தியாசப்பட்டாலும், அதன் அத்தியாவசிய உள்ளடக்கம் அப்படியே உள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தொடர்பாக வரலாற்று ஆசிரியர்களான கைன் (Cain) உம், கொப்கின்ஸ் (Hopkins) உம் தமது பெறுமதிமிக்க ஆய்வில் பிரித்தானிய சாம்ராஜ்யத்திற்கு முக்கிய கேள்வியாக இருந்தது காலனிகளை ஆக்கிரமிப்பது மட்டுமல்ல, மாறாக ''பொருளாதார வரையறைகளை'' திணிப்பது முக்கியமாக இருந்தது என குறிப்படுகின்றனர்.

மேலும் அவர்கள் ''இந்த பொருளாதார முன்னோக்கின் கீழ் சாம்ராஜ்யத்தை ஒரு நாடுகடந்த அமைப்பாக பார்க்க கூடியதாக இருந்தது. இதன் மூலம் அது பரிமாற்ற செலவுகளை குறைத்ததுடன், தனது சொந்த நாட்டுடன் இணைந்த சொத்துடைமை உரிமைகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது''. [British Imperialism 1688-2000, P. J. Cain and A. G. Hopkins, p. 4].

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் நடைமுறை வடிவங்கள் தொடர்பாக கைன்சும், கொப்கின்ஸும் வரையறுப்பது, தற்காலத்தின் ''பொருளாதார வரையறைகளை'' திணிக்கும் சர்வதேச நாணய நிதியத்தினதும் ஏனைய நிதி அமைப்புகளினதும் நடவடிக்கைகளை விபரமாக ஞாபகப்படுத்திகின்றது.

அவர்கள் மேலும் பின்வரும் தன்மைகளை அவதானித்தனர். ''பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கட்டமைப்பினுள், அரசியல் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் கொள்கைகள் தொலைவிலுள்ள நாடுகளுக்கு மிகவும் ஆர்வத்துடன் பிரயோகிக்கப்பட்டது. அவையாவன, உறுதிப்படுத்தப்பட்ட சொத்துடமை உரிமைகள், தனிமனிதவாதம், சுதந்திர சந்தை, உறுதியான நாணயம், வரவு-செலவுத் திட்டத்தில் சிக்கனமாக இருத்தல், ஒழுக்கநெறி (Moral) மற்றும் சடத்துவ வாழ்க்கையில் ஒழுங்கும், நோக்கத்தை அடைவதற்கான முயற்சியும், ஒரு சிறந்த அரசமைப்பும் மற்றும் ஒத்துணர்வான கூட்டின் முக்கியமுமாகும். [மேற்குறிப்பட்ட புத்தகம் பக்கம் 48].

இன்று இத்தகைய நிபந்தனைகளை சுமத்துவதற்கு காலனித்துவ ஆட்சி முறைகளை நிறுவ வேண்டிய அவசியமில்லை. லெனின் ஒருமுறை சுட்டிக்காட்டியபடி, ''நிதி மூலதனமானது மிகவும் பாரியதும், மிகவும் தீர்க்கரமான சக்தியுமாகும்.... அனைத்து சர்வதேச உறவுகளிலும் அதனால் முழு அரசியல் சுதந்திரமான நாட்டைக் கூட தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர கூடியதுடன், கட்டுப்பாட்டினுள் கொண்டும் வருகின்றது'' [லெனின்-தொகுப்பு நூல்கள், பாகம் 22, பக்கம் 259].

இக்கருத்து சுருக்கமாக இருந்தாலும், ''சமாதான பேச்சுவார்த்தைகளின்'' அரசியல் பொருளாதாரத்தின் ஆரம்ப நிலைகளில் கூட அதில் முக்கியமாக கலந்துகொண்டுள்ள சமூக சக்தி தொடர்பாக எடுத்துக்காட்டுகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியானது, பெருவணிகத்தின் மேலாதிக்க பிரிவுகளின் ஆதரவோடு, அமெரிக்காவால் ஒழுங்கமைக்கப்படும் தென் ஆசியாவின் பொருளாதார ஒழுங்கினுள் இலங்கையை முதலீட்டிற்கும், நிதிக்குமான ''மையமாக'' மாற்றுவதற்கு முனைகின்றது.

இலங்கை ஒரு ''புலி பொருளாதாரமாக'' (Tiger economy) ஆக விரும்புவதை வெளிப்படையாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துவிட்டனர். அடிப்படை நோக்கத்தில் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எவ்விதமான முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. பேச்சுவார்த்தைகளின் போது எழுந்த பலவிதமான முரண்பாடுகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது தொடர்பானதல்ல. மாறாக, இலங்கை அரசின் கட்டமைப்பிற்குள் தனக்கும் மற்றும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முதலாளித்துவ தட்டினருக்கும் மிகவும் சாதகமான கொடுக்கல் வாங்கலை செய்துகொள்ள அம்முரண்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றது.

சந்திரிகா குமாரதுங்கவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன முன்னணியும் இப்புதிய பொருளாதார உறவின் கீழ், தமது எதிர்காலம் தொடர்பான பயத்தை கொண்ட இலங்கை முதலாளித்துவ பிரிவினரின் சார்பில் பேசுகின்றனர். அத்துடன் அவர்கள் 20 வருட உள்நாட்டு யுத்தத்தால் இலாபமடைந்த இராணுவ, வர்த்தக பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். பொதுஜன முன்னணி தொடர்ந்தும் பழைய தொழிலாள வர்க்க அமைப்புகளான லங்கா சம சமாஜ கட்சி, நவ சம சமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியில் தங்கியிருக்கின்றபோதிலும் அவர்களின் பங்கு ஒருவித்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. பல பத்தாண்டுளான காட்டிக்கொடுப்பினதும், எண்ணற்ற சந்தர்ப்பவாத திருகுதாளங்கள் மற்றும் திருப்பங்களின் பின்னர் அரசியல் ரீதியில் குறிப்பிட்டால் இக்கட்சிகள் பிழிந்த தேசிக்காயை போலாகியுள்ளன.

இதனால்தான், பொதுஜன முன்னணிக்கு பரந்த ஆதரவை சேர்க்கும் மத்திய பணியை வகிப்பது மக்கள் விடுதலை முன்னணி (JVP) இன் தோள்களில் விழுந்துள்ளது. காலாவதியான ''மறுபங்கீடு செய்யும்'' கொள்கையை இல்லாதொழிக்கும், சர்வதேச நாணய நிதியத்தினது கட்டளைகள் பரந்த வேலையழிப்பையும், அரசுக்கு சொந்தமான துறைகளையும் மற்றும் சமூகநல நடவடிக்கைகளையும் தனியார்மயமாக்கல் என அர்த்தப்படுத்துகையில், மக்கள் விடுதலை முன்னணி ஏகாதிபத்தியத்தையும், அது இலங்கையை மறுகாலனித்துவப்படுத்தும் திட்டத்தையும் நிராகரித்து கிராமப்புற ஏழைகள், மத்தியதர வர்க்கத்தினர், மாணவ இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரிவினர் மத்தியில் தனக்கு ஆதரவை திரட்ட முனைகின்றது.

ஆனால் அதனது அனைத்து ஜனரஞ்சக வார்த்தை ஜாலங்களுக்கு மத்தியிலும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) வார்த்தையின் முழு அர்த்தத்திலும் ஒரு முற்றிலும் பிற்போக்குவாத முன்னோக்கை முன்வைக்கின்றது. முதலாவதாக, தமிழர் எதிர்ப்பு சிங்கள பேரினவாதம் அதனது முன்னோக்கின் மத்திய புள்ளியாக இருப்பதுடன், இது பிரித்தானிய காலனித்துவ வாதிகளால் அதிகாரம் கையளிக்கப்பட்டதிலிருந்து ஆளும் வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட, அவர்களுக்கு மிகவும் பயனுள்ள இனவாத கொள்கையான ''பிரித்து ஆளும்'' கொள்கையை மீண்டும் வெளிப்படுத்தலாகும்.

மேலும், தேசிய பொருளாதாரத்தையும் தேசிய கலாச்சாரத்தையும் மறுமலர்ச்சியின் அடித்தளத்தில் ''தேசிய ஒருமைப்பாட்டிற்கு'' மக்கள் விடுதலை முன்னணி விடும் அழைப்பானது, கடந்த 2 சகாப்தங்களுக்கு மேலாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் முற்றிலும் திவாலாகிப்போன முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்தின் மறுசீரமைக்கப்பட்ட வடிவமாகும்.

அரசியல் அமைப்பு நெருக்கடியால் எழுந்துள்ள அரசியல் சவால்களை எதிர்நோக்கும் இலங்கை தொழிலாள வர்க்கம், தனது வளம்மிக்க வரலாற்று அனுபவத்தின் படிப்பினைகளை உணர்வுபூர்வமாக உள்ளீர்த்துக் கொள்ளவேண்டும். சோசலிச சர்வதேசிய வாதத்திற்கும் ''இடது'' வகையறாக்கள் உள்ளடங்கலான சகலவிதமான முதலாளித்துவ தேசிய வாதத்திற்கும் இடையிலான பலபத்தாண்டு கால முரண்பாட்டிலிருந்து ஒரு கணக்கெடுப்பை கட்டாயம் செய்யவேண்டும்.

இப்படியான மதிப்பீடானது, நான்காம் அகிலத்தின் சர்வதேச முன்னோக்கை ''சாத்தியமற்றது'' என நிராகரித்த, அரசியல் அறிவாளிகள் போல் நடித்த முட்டாள்களின் முன்னோக்கான முதலாளித்துவ தேசியவாதமே முற்றாக இலாயக்கற்றது என்பதை எடுத்துக்காட்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் முக்கிய உள்ளடக்கமான ஏகாதிபத்திய மறுகாலனித்துவ மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் அனைத்து தொழிலாளர்களும் இனவாதத்திற்கும் வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தில் அணிதிரளுவதால் மட்டுமே வெற்றிகரமானதாக்க முடியும். இப்படியான ஒரு போராட்டம் இலங்கையின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியிலும் மற்றும் இந்திய துணைக்கண்டத்திலும் சர்வதேச ரீதியாகவும் சக்திவாய்ந்த ஆதரவை பெற்றுக்கொள்ளும். இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும் முன்னோக்கின் அடித்தளமாகும்.

See Also:

இலங்கையில் அவசரகால நிலைமை பற்றிய குழப்பநிலை நிலவுகிறது

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை ஜனாதிபதியின் அரசியலமைப்பு சதியை கண்டனம் செய்கின்றது

இலங்கை அரசியல் யாப்பு நெருக்கடிக்குள் மூழ்கிப்போயுள்ளது

Loading