மே தினம் 2016: இந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் முகம்கொடுக்கின்ற அரசியல் கடமைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் உரை 2016 மே 1 அன்று நடந்த சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்தில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலரான விஜே டயஸ் வழங்கியதாகும்.

இந்திய துணைக்கண்டத்தின் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும், உலகம் பூராவும் உள்ள தமது வர்க்க சகோதரர்களுடன் சேர்ந்து, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகிக்க வேண்டும்.

2001 செப்டெம்பர் 11 அன்று நடந்த தெளிவுபடுத்தப்படாத சம்பவங்களை பற்றிக்கொண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது முதலாக தெற்காசியாவும் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியமும் ஏகாதிபத்திய புவி-அரசியல் மற்றும் பூகோள வல்லரசுக்கான போட்டியின் நீர்ச்சுழிக்குள் முன்னெப்போதும் இல்லாதளவு ஆழமாய் இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

2016 சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்தில் விஜே டயஸ் பேசுகிறார்

அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளின் பார்வையில், தெற்காசியாவானது யூரேசியாவின் மென்மையான அடிவயிறுப் பகுதியாய், எரிசக்தி வளம் நிறைந்த மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவை நோக்கியும் மற்றும் இமயமலை கடந்து சீனாவிலும் அமெரிக்க அதிகாரத்தை முன்னிலைப்படுத்துவதற்கு மிகமிக முக்கியமானதாய் இருக்கிறது.

இந்து சமுத்திரத்தை அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கத்துக்கான மைய அச்சாக கருதி அங்கு மேலாதிக்கம் செய்வதைப் பற்றி பெண்டகன் போர் தயாரிப்பாளர்கள் சிந்திக்கின்றனர். அமெரிக்க-கடற்படை போர் கல்லூரியின் சமீபத்திய ஆய்வு ஒன்று, “உலக வர்த்தகத்தின் மைய நாடியாக வட அட்லான்டிகை இந்து சமுத்திரம் பிரதியீடு செய்திருப்பதாக” வலியுறுத்தியது.

இதற்கு முதலாவதும் முதன்மையானதுமான காரணம், ஒரு போரின் போது அல்லது ஒரு போர் நெருக்கடியின் போது, மூலோபாய “சந்திப்புப் புள்ளிகள்” ஊடாக சீனா மீது ஒரு பொருளாதார தடையை திணிக்கும் அமெரிக்க திட்டத்தின் இருதயத்தானமான இடத்தில் அது இருக்கின்றது என்பதாகும். அது மட்டுமன்றி, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்து சமுத்திரம் இன்றியமையாததாக கருதப்படுவதும் ஒரு காரணம் ஆகும்.

இந்தப் பிராந்தியம் பூராவும் தனது இராணுவ-மூலோபாய இருப்பை விரிவாக்குவதற்கான அமெரிக்காவின் முனைப்பானது, சிறிய மாலைதீவில் இருந்து அணுவாயுதம் கொண்ட பகைமை நாடுகளான இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் வரையும் தெற்காசியாவில் ஒவ்வொரு நாட்டினதும் உள்முக அரசியல் வாழ்க்கை மற்றும் வர்க்க இயக்கவியலில் ஒரு வல்லமை மிக்க காரணியாக உள்ளது.

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பானது இப்போது பதினைந்தாவது ஆண்டாகத் தொடர்கின்றது.

வாஷிங்டனின் ஊக்குவிப்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் பாகிஸ்தான் இராணுவம், நாட்டின் சிவில் அரசாங்கத்தை ஒரு ஓரத்திற்குத் தள்ளி விட்டு, நாட்டின் பழங்குடியினர் பிராந்தியத்தில் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கின்றது, அதன் பிரதான நகரான கராச்சியை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளதோடு இப்போது அதன் மக்கள்தொகை மிகுந்த மாகாணமான பஞ்சாப்பில் இராணுவ நடவடிக்கைகளில் இறங்கிக்கொண்டிருக்கின்றது.

கடந்த ஆண்டு, வாஷிங்டனில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பலியானார். இராஜபக்ஷ அரசாங்கத்தின் முன்னணி அமைச்சரான மைத்திரிபால சிறிசேனவை வெளியே எடுத்து, அவரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக்குவதையும் அமெரிக்கா அரங்கேற்றியது. நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக இராஜபக்ஷ முன்னெடுத்த உள்நாட்டு யுத்தத்தை அமெரிக்கா முற்றுமுழுதாக ஆதரித்தது. ஆனால் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையில் சமநிலை காண அவர் முயற்சித்தமையை அதனால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போனது. இராஜபக்ஷ வெளியேற்றப்பட்டு சில மாதங்களுக்குள், இலங்கைக்கு முதன்முதலாய் பயணிக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக ஜோன் கெர்ரி விஜயம் செய்ததுடன் இலங்கை-அமெரிக்க பங்காண்மை பேச்சுவார்த்தைக்கு கொழும்பு விரைவில் உடன்பட்டது.

ஆனால், உலக மேலாதிக்கத்துக்கான அதன் முனைப்பில் தெற்காசியாவை கூர்தீட்டும் அமெரிக்க நடவடிக்கையில் இந்தியாவே அச்சாணியாக இருக்கின்றது. இந்தியா எந்தளவில் பார்த்தாலும் ஒரு வறிய நாடாகும். அதன் ஜனத்தொகையில் முக்கால் பகுதியினர் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானம் பெரும் வறியவர்களாக உள்ளனர். ஆனால், வாஷிங்டனைப் பொறுத்தளவில் அது ஒரு “மூலோபாய பரிசு”.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு “இந்தியாவுடனான ஒரு மூலோபாயக் கூட்டு வழங்கும் வாய்ப்புகளால்” தான் “இன்ப அதிர்ச்சி” கொண்டதாக அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தலைவர் ஹேரி ஹாரிஸ் அண்மையில் அறிவித்தார். பின்னர் அவர் தென் சீனக் கடலில் அமெரிக்க-இந்திய கடற்படை கூட்டு ரோந்து நடவடிக்கைக்கும் கூட அழைப்பு விடுத்தார்.

இந்திய முதலாளித்துவத்துக்குள் வாஷிங்டனின் விருப்பத்தை நிறைவேற்றும் கையாள் கிடைத்துள்ளது. கைக்கூலி இந்திய முதலாளித்துவமானது அமெரிக்காவுக்கு தலைவணங்கி சேவையாற்றுவதன் மூலம் தனது சொந்த வல்லரசு குறிக்கோளை யதார்த்தமாக்கிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் உள்ளது.

ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளான நரேந்திர மோடியின் அரசாங்கமும் அவரது இந்து மேலாதிக்கவாத பி.ஜே.பி யும் (பாரதிய ஜனதா கட்சி), சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைப்பில் இந்தியாவை முன்னரங்குக்கு தள்ளிக்கொண்டிருக்கின்றன. தென் சீனக் கடலில் சீனா ஒரு மூர்க்கநாடு என்ற வாஷிங்டனின் போலியான சித்தரிப்பை இந்திய அரசாங்கம் ஒப்பிக்கிறது; அது பென்டகனுடன் இணைந்து புதிய ஆயுத-முறைகளை அபிவிருத்தி செய்யத் தொடங்கியுள்ளது; மற்றும் அது இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரதான கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு உறவுகளை விரிவுபடுத்தி வருகின்றது.

அமெரிக்க கப்பல்கள் மற்றும் விமானங்கள் எரிபொருள் நிரப்பவும், மறு வழங்கல் செய்யவும் மற்றும் மீளப் பெறல் நடவடிக்கைகளுக்காகவும் இந்திய இராணுவத் தளங்கள் மற்றும் துறைமுகங்களை திறந்து விடுகின்ற ஒரு ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவுடன் “கோட்பாட்டளவிலான உடன்பாட்டை” பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் சென்ற மாதத்தில் அறிவித்தது.

உலகம் பூராவும் போலவே தெற்காசியாவிலும், கொஞ்சமும் பொறுப்பற்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமானது இனவாத, வகுப்புவாத மற்றும் சாதிவாத மோதல்கள் நிரம்பிக் கிடக்கும் ஒரு பிராந்தியத்தின் மீது நெருப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மோதல்கள், காலனித்துவ ஆட்சியினதும் வளர்ந்து வந்து கொண்டிருந்த தேசிய முதலாளித்துவ வர்க்கங்களின் போட்டி பிரிவுகள் துணைக்கண்டத்தை முஸ்லிம் பாக்கிஸ்தானாகவும் இந்து இந்தியாவாகவும் 1947ல் பிளவுபடுத்தி அமுல்படுத்திய இரத்தம் தோய்ந்த வகுப்புவாத பிரிவினையினதும் கசப்பான மரபாய் இருக்கின்றன.

வாஷிங்டனின் ஆதரவினால் ஊக்குவிக்கப்படும் மோடி அரசாங்கம், பிராந்திய வல்லரசு என்ற இந்தியாவின் நீண்டகால உரிமைகோரலை ஆக்ரோசமாக திட்டவட்டம் செய்து கொண்டிருக்கிறது. அது நேபாளத்தின் மீது ஐந்து மாத கால தடையை திணித்தது; இந்தியாவை மாலத்தீவின் “மிக முக்கியமான நண்பன்” என்று அடாவடித்தனம் மூலமாக அதனை அறிவிக்கச் செய்தது; எல்லை மீறல்களாகச் சொல்லப்படுவனவற்றுக்கு அளவுக்கு மீறிய இழப்புத் தொகையை பாகிஸ்தான் கொடுக்கும்படி செய்ய இந்திய இராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

பாக்கிஸ்தான், தன் பங்கிற்கு, இந்தியாவில் அமெரிக்கா ஆயுதங்களுக்கும் ஆயுத முறைகளுக்கும் பணத்தை வாரி இறைப்பது பிராந்தியத்தின் அதிகார சமநிலையை தலைகீழாக மாற்றும் என மீண்டும் மீண்டும் எச்சரித்து வருகின்றது. இந்த எச்சரிக்கைகளை வாஷிங்டன் வெறுமனே அலட்சியம் செய்கின்ற நிலையில், இஸ்லாமாபாத் இப்போது தந்திரோபாய அல்லது போர்க்கள அணு ஆயுதங்களை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றது.

உலகம் பூராவும் போலவே தெற்காசிய மக்கள் மத்தியிலும், போரை வெகுஜனங்கள் எதிர்த்த போதும், ஒரு போர் எதிர்ப்பு இயக்கம் கிடையாது.

இலங்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் வரை இராஜபக்ஷவின் விசுவாசியாக இருந்த சிறிசேனவை ஜனநாயகத்துக்கான வேட்பாளராகச் சித்தரித்த பொய்யை பாராட்டிய போலி இடதுகள், அமெரிக்காவின் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்தன.

இந்திய ஸ்ராலினிஸ்டுகள், துரிதமாக விரிவடைந்து வரும் இந்திய தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒடுக்குவதில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர். கடந்த கால் நூற்றாண்டு காலம் பூராவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவற்றின் இடது முன்னணிகளும், இந்தியாவை உலக மூலதனத்துக்கான ஒரு மலிவு உழைப்புப் புகலிடமாகவும் வாஷிங்டனின் “மூலோபாய பங்காளியாகவும்” ஆக்குவதற்கு முயற்சித்த ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த அரசாங்கங்களுக்கு ஆதரவளித்தன.

இப்போது ஸ்ராலினிஸ்டுகள், வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை முன்னிலைப்படுத்துவது மற்றும் அமெரிக்காவுடனான படைத்தள உடன்படிக்கை போன்ற பாரதிய ஜனதா கட்சியின் குற்றங்களை, தொழிலாள வர்க்கத்தை இந்திய முதலாளித்துவத்துக்கும் அரசுக்கும் முற்று முழுதாக அடிபணியச் செய்வதற்கான சாக்குப் போக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்திய முதலாளித்துவ அரசாங்கத்தின் பாரம்பரிய கட்சியும், கடந்த கால் நூற்றாண்டில் முதலீட்டாளர்-சார்பு மறுசீரமைப்பை அமல்படுத்துவதிலும் மற்றும் இந்திய-அமெரிக்க கூட்டணியை உருவாக்குவதிலும் பெரும் பங்கை வகித்திருக்கும் கட்சியுமான, காங்கிரஸ் கட்சியுடன் ஒரு கூட்டணிக்கு மிகவும் வெளிப்படையாக ஸ்ராலினிஸ்ட்டுகள் வாதாடுகின்றனர்.

கடந்த நூற்றாண்டு கால தெற்காசியாவின் முழு வரலாறும், முதலாளித்துவத்தின் முற்போக்கு அல்லது ஜனநாயக பிரிவு எனச் சொல்லப்படுவதுடனான அத்தகைய கூட்டணிகளின் முழு பிற்போக்குத்தனத்தையும் எடுத்துக்காட்டியுள்ளதோடு, தொழிலாள வர்க்கம் நிரந்தரப் புரட்சி வேலைத் திட்டத்தை கையிலெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் காட்டியுள்ளது. ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, நீண்டகால வறுமை, சாதி மற்றும் வகுப்புவாத பிளவுகள் உட்பட வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளில் எதுவும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான சோசலிசப் புரட்சியின் ஊடாக அன்றி தீர்க்கப்பட முடியாது.

சமூக எதிர்ப்பு பெருகிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம், பெங்களூரில் சொற்ப-ஊதிய ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் திடீரென பாரிய போராட்டத்தில் குதித்ததையிட்டு ஒரு முன்னணி இந்திய பத்திரிகை எச்சரிக்கை செய்திருந்தது. இந்தப் போர்க்குணமிக்க போராட்டம், அங்கிருக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்டமைப்புக்கு வெளியில் வெடித்தமை, அந்த கட்டுரையாளரை மிகவும் திகைப்புக்கும் உளைச்சலுக்கும் உள்ளாக்கியிருந்தது.

உலகெங்கும் கிளர்ந்து முன்வருகின்ற தொழிலாளர்களை, ஒரு உலகளாவிய வர்க்கமாகவும் தேவை மற்றும் போர் இல்லாத ஒரு புதிய சமூக ஒழுங்கின் நாயகராகவும் அவர்களது புறநிலை நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதே இன்றியமையாத பிரச்சினையாக இருக்கிறது.

இந்த மகத்தான பணியில் எங்களுடன் தோள்சேர தெற்காசியாவிலும் மற்றும் உலகம் எங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்த மே தினத்தில் நான் வலியுறுத்துகிறேன்.

Loading