மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இன்று 72 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் வாக்காளர்கள், இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில் மக்களவையை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிப்பார்கள் – அது இந்திய பாராளுமன்றத்தின் கீழ் சபையாகும் ஆனால் அரசியலமைப்பின்படி மிகவும் சக்திவாய்ந்த சபையாகும்.
இந்தியாவின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (பிஜேபி) அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கும் இராணுவவாத கொள்கைகளுக்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது, அதற்கு சாட்சியமாக, அலையலையாக அதிகரித்துவரும் வேலைநிறுத்தங்கள், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள். தொழில்துறை மாசுபடுதலுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கும் எதிரான வெகுஜனங்களின் போராட்டங்கள் உள்ளன.
ஆனால் இந்த எதிர்ப்புகள் எதுவும் இந்த தேர்தலில் ஒரு முற்போக்கான வெளிப்பாட்டை காணமுடியவில்லை, அவை வலதுசாரி பாகிஸ்தான் எதிர்ப்பு போர் வெறி, போட்டியான வகுப்புவாத மற்றும் சாதிவாத அறைகூவல்கள், போலியான ஜனரஞ்சக வாக்குறுதிகள் மற்றும் பாரியளவிலான பண வாரியிறைப்பு ஆகியவற்றால் குணாம்சப்படுத்தப்பட்டதாக உள்ளது.
இந்த தேர்தல்களில் இந்தியாவின் முதலாளித்துவ அரசியல்வாதிகள் போட்டியாக வாக்குகளை திரட்டுவதற்காக 6 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்வார்கள் அல்லது நாட்டின் 1.37 பில்லியன் மக்களுக்கு ஆண்டுதோறும் இந்திய அரசு செலவிடும் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமான தொகையாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் இரண்டு பிற்போக்குத்தனமான கூட்டணிகளினால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது, அவை இரண்டு போட்டி தமிழ்-தேசியவாத கட்சிகளினால் தலைமை தாங்கப்படுகிறது, அவை முறையே இரண்டு "தேசிய" கட்சிகளான பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டில் உள்ளது.
முதலாவதில் பிஜேபி உம் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) பிராந்தியவாத கட்சிகளும் உள்ளடங்கும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றழைக்கப்படும் இரண்டாவதில் காங்கிரஸ் கட்சி, இரட்டை ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள் (CPI, CPM) எதிர்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் சில பிராந்தியவாத கட்சிகளும் உள்ளடங்கும்.
இந்த அனைத்துக் கட்சிகளுமே வலதுசாரி “முதலீட்டாளர்-சார்பு” கொள்கைகளுக்கு தம்மை அர்ப்பணம் செய்துள்ளன. மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் தயாரிப்புகளில் அதனுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய அரசாங்கத்தின் பொறுப்பற்ற இராணுவ கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கின்றன. இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களிடையே வளர்ந்து வரும் போர்க்குணம் மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றை கண்டு அனைத்துமே அஞ்சி நடுங்குகின்றன.
2014 ம் ஆண்டு தேர்தலின் போது, அவர் வாக்குறுதி அளித்தது போல் வேலைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் பா.ஜ.க. பிரதமர் நரேந்திர மோடி தோல்வியடைந்து விட்டார் என விமர்சித்த திராவிட முன்னேற்றக் கழகம், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், "மதச்சார்பற்ற", "ஜனநாயக" இந்திய அரசாங்கத்தை அமைக்க பாடுபடுகிறது. இவர், காங்கிரஸ் கட்சியின் பரம்பரை தலைவராக, அவரது தந்தை, பாட்டி மற்றும் பெரிய தாத்தா ஆகியோரை அடுத்து வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு சிறந்த பெண் மாணவியான எஸ். அனிதாவின் தற்கொலைக்கு வழிவகுத்த மருத்துவக் கல்வி நுழைவுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை (NEET) நீக்கப்போவதாகவும், தி.மு.க. வாக்குறுதி அளிக்கிறது, மேலும் ஏழைகளுக்கு பண மானியங்கள் மற்றும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும் கூறுகின்றது.
"சமூக நீதி" என்ற பெயரில், பொது துறையிலிருந்து தனியார் துறைக்கு இடஒதுக்கீடு அல்லது உறுதியான நடவடிக்கை விரிவுபடுத்தப்பட வேண்டும் என தி.மு.க. வாதிடுகிறது. இது, முதலாளித்துவத்தினால் உருவாக்கப்படும் துயரங்களை “சமமாக” விநியோகிப்பது குறித்து, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து சண்டையிட வைக்கும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட ஒரு கொள்கை ஆகும்.
"வறுமை ஒழிப்பு" திட்டத்தின் கீழ் மாதாமாதம் ஊதியமாக 1,500 ரூபாய் (US $ 21.61) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்போவதாக அதிமுக வாக்குறுதி அளிக்கிறது. அது தமிழ் தேசிய வாதத்திற்கும் அழைப்பு விடுக்கிறது, 1991 ஆம் ஆண்டு இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றவாளிகளாக தண்டனை வழங்கப்பட்ட ஏழு இலங்கை தமிழ் தேசியவாதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கும், இலங்கையின் 30 வருட உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் இழைக்கப்பட்ட போர் குற்றங்களை ”சர்வதேச சமூகம்" உத்தியோகபூர்வமாக விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை புதுப்பிக்கிறது மற்றும் இந்தியை போன்று, தமிழ் மொழியும் அனைத்து இந்திய "உத்தியோகபூர்வ மொழி" ஆக்கப்படவேண்டும் என்றும் கோருகிறது.
விதிவிலக்கு இல்லாமல், ஸ்ராலினிச CPI மற்றும் CPM இன் உள்ளூர் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், சமூக சமத்துவமின்மை மற்றும் பொருளாதார ஒடுக்குமுறை குறித்து வளர்ச்சி அடையும் கோபத்தை பிற்போக்குத்தனமான முறையில் திசை திருப்பவும் தமிழ் தேசியவாதத்தை ஊக்குவிக்கின்றன.
சீமான் தலைமையில் சுயாதீனமாக போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தமிழ் பேரினவாதத்தின் தீவிர வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அந்த பேரினவாதம் மாநில ஸ்தாபக அரசியலின் இரத்த நாளமாக உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பிரதான அரசியல்வாதிகள், தமிழர்களாக அல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிற இந்திய மொழியை மூலமாக கொண்டவர்கள் என அவர்களை சீமான் கண்டனம் செய்கிறார். சிறுஇனக்குழுவாத-வகுப்புவாத உணர்வுகளுக்கு அப்பட்டமான அறைகூவல் விடுப்பதாக அவர் மாநிலத்தின் முதலமைச்சர் ஒரு "தமிழனுக்கு பிறந்தவன்" ஆக இருக்க வேண்டும் வெறி கிளப்புகிறார்.
தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெருவணிகக் கட்சிகளுடன் ஸ்ராலினிச CPI மற்றும் CPM கூட்டு
ஸ்ராலினிச CPI மற்றும் CPM தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் போராட்டத்தை தீவிரமாக எதிர்க்கின்றன. பிஜேபி மற்றும் இந்து வலதுசாரிகளை எதிர்க்கும் பெயரில், அவர்கள் தசாப்தங்களாக காங்கிரஸிற்கும், வலதுசாரி பிராந்திய மற்றும் சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கும் முறைப்படியாக தொழிலாளர்களை அடிபணிய வைத்துள்ளனர்.
பி.ஜே.பி அரசாங்கம், ஒரு "மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தால்" பிரதியீடு செய்யப்பட வேண்டும் என்று சிபிஎம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. உண்மையில் அது ஒரு வலதுசாரித்தனமானதும், முதலீட்டாளர்களுக்கும், சிக்கன நடவடிக்கைகளுக்கும் சார்புடைய அரசாங்கமாகவே இருக்கும். அது, அடுத்தடுத்து வந்த தேசிய அரசாங்கங்களை போன்றே அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி அமைக்கும், அவற்றில் பெரும்பான்மையானவை காங்கிரஸ் கட்சி தலைமையிலானவை ஆகும். 1989 க்கும் 2008 க்கும் இடையான காலத்தில் இவற்றை ஒன்று சேர்க்கவும் மற்றும் தக்க வைக்கவும் ஸ்ராலினிஸ்ட்டுகள் உதவி செய்தனர்.
இந்து பத்திரிகையின் தமிழ் பதிப்பிற்கான ஒரு நேர்காணலில், CPI இன் தலைமை உறுப்பினரான தா. பாண்டியன், இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரசுடன் ஒரு தேசியத் தேர்தல் கூட்டணியை உருவாக்குவதில் தி.மு.க. உடன் சேரவில்லை என்று அவரது சி.பி.எம். இடது முன்னணி கூட்டாளிகளை விமர்சித்தார். "ராகுல் காந்தியை பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்காதது கம்யூனிஸ்டுகளின் பெரிய தவறு." என்று பாண்டியன் அறிவித்தார்.
அருகிலுள்ள கேரளாவில் மாநில அரசாங்கத்தை நடத்தும் சிபிஎம், அங்கு காங்கிரசை எதிர்க்கிறது, அதேசமயம், தமிழகத்தில், இந்திய முதலாளித்துவத்தின் 1991 க்கு பிந்தைய நவ-தாராளவாத "சீர்திருத்த" நிகழ்ச்சி நிரலின் பிரதான அமைப்பாளர்களில் ஒருவரான முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் உட்பட காங்கிரஸ் தலைவர்களுடன், சிபிஎம், கூட்டாக பகிரங்கமாக பிரச்சாரம் செய்கின்றனர்.
ஏனைய அனைத்து கட்சிகளையும் போலவே ஸ்ராலினிஸ்டுகளும், இந்தியாவிலும் உலகம் முழுவதிலுமே தொங்கிக் கொண்டிருக்கும் போரின் பெரும் அபாயம் குறித்து மவுனமாக உள்ளனர். வாஷிங்டனுடனான இந்திய முதலாளித்துவத்தின் ஒத்துழைப்பு, சீனாவை தனிமைப்படுத்தி அதன் மேல் போர் தொடுக்க தயாராகிவரும் அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதலில், இந்தியாவை ஒரு "முன்னிலை அரசு" ஆக மாற்றியுள்ளது. இது இந்தியாவிற்கும், சீனாவுடன் கூட்டிலுள்ள பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களை தூண்டிவிட்டுள்ளது, அது, கடந்த பிப்ரவரியில் இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான ஒரு இராணுவ மோதலுக்கு வழிவகுத்து, இறுதியில் கிட்டத்தட்ட போராக வெடித்தது.
முதலாளித்துவத்தின் போர் திட்டம், அதிகரிக்கும் வறுமை மற்றும் பிற்போக்குத்தனம் ஆகியவற்றிற்கான மாற்றுத்திட்டம், இந்திய தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக சுயாதீனமாக அணிதிரட்டுவதாகும், அது இந்தியா குறித்த ILO இன் சமீபத்திய அறிக்கையில் "ஊதியம் பெறுபவர்கள்" என வகைப்படுத்தப்பட்டுள்ள மொத்தம் 405 மில்லியன் மக்கள் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிராக அணிதிரட்டுவதாகும்.
சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியால் உலக அரசியலில் மாற்றம் எற்பட்டுக்கொண்டுள்ள நிலைமையின் மத்தியிலேயே இந்தியத் தேர்தல் நடைபெறுகிறது. இலங்கை, அமெரிக்கா, பிரான்ஸ், போலந்து, அல்ஜீரியா, மற்றும் பிற ஆபிரிக்க நாடுகளிலுள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் மத்தியிலேயே இந்திய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மோடியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மற்றும் நாடு கடந்த நிறுவனங்களின் இந்திய துணை நிறுவனங்களின் மற்றும் விநியோக கம்பனிகளின் மலிவு உழைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் தமிழ் நாட்டில் உள்ள தொழிலாளர்கள், பல வேலைநிறுத்தங்களை நடத்தினர். அதில், கடந்த ஜனவரி மாதத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மோடியின் தாக்குதல்களுக்கு எதிராக தேசிய அளவில் 180 மில்லியன் தொழிலாளர்களை ஈடுபடுத்திய இரண்டு நாள் பொது வேலைநிறுத்தமும் உட்படும்.
கடந்த இலையுதிர் காலத்தில், ஆறு வாரங்களுக்கு மேலாக, யமஹா இந்தியா மற்றும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆலைகளில் மற்றும் கார் பாகங்கள் உற்பத்தியாளரான Myoung Shin India Automotive (MSI), இல் 3,000 தொழிலாளர்கள் சென்னை புறநகர் பகுதியிலுள்ள தொழில்துறை மையமான ஓரகடத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களும் பிற மாநில அரசாங்க ஊழியர்களும் ஜனவரி 22 அன்று, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ஒழித்தல், மீண்டும் அரசாங்க நிதியளிப்பின் மூலம் வழங்கப்பட்ட ஓய்வூதிய முறை, உயர் ஊதியங்கள் மற்றும் மேம்பட்ட வேலை நிலைமைகள் ஆகியவற்றை மீளமைத்தல் உட்பட்ட கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். AIADMK அரசாங்கத்தின் பதிலிறுப்பு அதன் தாக்குதல்களை முடுக்கிவிடுவதாக இருந்தது, அது 700 வேலைநிறுத்த ஆசிரியர்கள் மற்றும் 1,200 அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது.
அரசியல் ரீதியாக முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய அரசியல் தலைமையை கட்டமைப்பதாகும். தி.மு.க.-காங்கிரஸ்-ஸ்ராலினிச கூட்டணிக்கு வாக்களிப்பதற்காக தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக வைக்கப்பட்ட வாதங்கள், குதர்க்கம் மற்றும் வரலாற்று பொய்களின் கலவையாகும்.
முதலில், மதச்சார்பின்மை மற்றும் பா.ஜ.க. முன்வைத்த பாசிச அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு எதிராக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தாமாகவே, சீமான் போன்ற சக்திகளால் முன் வைக்கப்படும் சிறுஇனக்குழுவாத – வகுப்புவாத அறைகூவல்களுடன் தொடர்ந்து கொஞ்சிக் குலாவுகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற பாசாங்கை கொண்டிருந்த போதிலும், இந்து வலதுசாரிகளுடன் கூட்டு சதியில் ஈடுபட்ட ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அதில் பிரிட்டிஷ் இந்தியாவை பிற்போக்குத்தனமான 1947 வகுப்புவாத பிரிவினையின் மூலமாக, இந்துக்கள் பெரும்பான்மையான இந்தியாவாகவும் முஸ்லீம்கள் பெரும்பான்மையான பாகிஸ்தானாகவும் பிரித்ததுடன் அது உடன்பட்டு அமுல்படுத்தியது.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும் என்றும் அதற்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் 2003 க்கு பின்னர் அமுல்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் பங்களிப்பு செய்யும் புதிய பென்சன் திட்டத்தை (New Pension Scheme or Contributory Pension Scheme - CPS) நீக்கிக்கொள்ள முடியும் என்றும் தி.மு.க. கூறுகிறது. இது ஒரு மோசடியாகும்.
நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சி அரசாங்கமானது, முதலாளித்துவத்தின், அரசு- தலைமையிலான முதலாளித்துவ அபிவிருத்தி திட்டங்கள் கவிழ்ந்தபோது தடையற்ற சந்தைக் கொள்கைகளை முன்னெடுத்தது, அது சர்வதேச நிதிய மூலதனத்திற்கு இந்தியாவை ஒரு மலிவு உழைப்பு புகலிடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 2004-14 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான UPA அரசாங்கம் தான் "மனித முகத்துடன் சீர்திருத்தங்கள்" என்ற போர்வையில் ஒரு புதிய அலை தனியார்மயமாக்கல், பிற முதலீட்டாளர் சார்புடைய கொள்கைகளை முன்னெடுத்தது, அதேசமயம் வாஷிங்டனுடன் ஒரு "பூகோள மூலோபாய பங்காளித்தனத்தையும்" உருவாக்கியது.
2008 நிதியியல் சரிவுக்குப் பின்னர் இந்தியாவிலும் சரி சர்வதேச ரீதியாகவும் சரி, உழைக்கும் மக்களின் நலன்களில் எந்த முற்போக்கான மாற்றமும், தற்போதுள்ள அரசியல் கட்சிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் கட்டமைப்பிற்குள் எழ முடியாது என்பதையே தெளிவுபடுத்தியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களுக்காக போராடும் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சி இல்லாத நிலையில், இந்த கட்டமைப்பானது பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கும், காங்கிரஸ் கட்சியின் பிற்போக்குத்தனமான, பெருவணிகக் கொள்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை, பி.ஜே.பி, மற்றும் ஜாதி, வகுப்புவாத கட்சிகளுக்கு பின்னால் திருப்பி விடவே சேவை செய்துள்ளது.
தொழிலாளர்களின் ஆட்சிக்கான போராட்டத்தை முன்னெடுக்க, இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டமும் மூலோபாயத்தினால் ஆயதபாணியாக்கப்பட்ட புரட்சிகரத் தலைமையும் அவசியமாய் உள்ளது. அதற்கு தேவையானது, 1917 ரஷ்யப் புரட்சியை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் காட்டிக் கொடுத்ததற்கு எதிரான போராட்டத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி நிறுவிய சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இந்தியப் பிரிவை கட்டி அமைப்பதாகும்.