ஜேர்மன் அரசு புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்களை விரிவாக்க புதிய சட்டம் நிறைவேற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தஞ்சம் கோருவோர்களில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளவர்கள், ஈவிரக்கமின்றி மிரட்டுப்பட இருக்கிறார்கள், தொல்லைக்கு உள்ளாக்கப்பட இருக்கிறார்கள், கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட இருக்கிறார்கள். சுருக்கமாக கூறுவதானால், இது புதன்கிழமை ஜேர்மனியின் கூட்டாட்சி மந்திரிசபை நிறைவேற்றிய முறையாக திருப்பியனுப்பும் சட்டம் (Orderly Return Act) என்பதன் உள்ளடக்கத்தை விவரிக்கிறது. இப்போது ஜேர்மன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவை (Bundestag) மற்றும் மேலவை (Bundesrat) மட்டும் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட வேண்டும், இங்கே, ஒரு சில அலங்கார மாற்றங்களுடன், இச்சட்டம் பெரும்பான்மையைப் பெறும் என்பதற்கு உத்தரவாதம் உள்ளது.

ஹோர்ஸ்ட் சீகோவர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம் - CSU) தலைமையின் கீழ் உள்துறை அமைச்சகமும் மற்றும் Hubertus Heil (சமூக ஜனநாயக கட்சி, SPD) தலைமையிலான தொழிலாளர் அமைச்சகமும் கூட்டாக இணைந்து தயாரித்த இந்த வரைவு சட்டமசோதா சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டு, ஏற்கனவே பரந்த போராட்டம் மற்றும் எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழக்கொழிக்கின்ற அது, பகுதியாக ஐரோப்பிய சட்டத்தையும் மீறுகிறது. இருந்தபோதினும், ஐரோப்பிய தேர்தல்களில் SPD இன் முன்னணி வேட்பாளரான நீதி அமைச்சர் காத்ரீனா பார்லி உட்பட SPD அமைச்சர்கள் அனைவரும் இந்த புதிய சட்டத்தை ஆதரித்தனர்.

அதன் புதிய சட்டத்துடன், இந்த மகா கூட்டணி நடைமுறையளவில் ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) அதிவலது கொள்கைகளை அமலாக்கி வருகிறது. அந்த வலதுசாரி தீவிரவாத கட்சி கடந்த கூட்டாட்சி தேர்தலில் வெறும் 12.6 சதவீத வாக்குகளே ஜெயித்திருந்த போதினும், அது அரசாங்கத்தின் அகதிகள் கொள்கைக்குக் கட்டளையிட்டு வருகிறது.

முறையாக திருப்பியனுப்பும் சட்டம் இப்போதிருக்கும் சட்ட நடைமுறைகளில் பின்வரும் மாற்றங்களை அமலாக்குகிறது:

* நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அகதிகளை இப்போதிருப்பதை விட இன்னும் அதிக எளிமையாக தடுப்புக்காவலுக்கு எடுத்த செல்ல முடியும். இதற்காக, விமானத்தில் பறப்பது ஆபத்து என்று கருதப்படுபவருக்கான முன்நிபந்தனைகள் குறைக்கப்பட்டுள்ளன.

* போதுமான எண்ணிக்கையில் தடுப்புக்காவல் மையங்கள் இருக்குமாறு செய்வதற்காக, நாடு கடத்துவதற்காக தடுப்புக்காவலில் வைப்பதையும் மற்றும் நடைமுறை குற்றவியல் சிறைவாசத்தையும் கடுமையாக தனித்தனியாக கையாள வேண்டுமென நிர்ணயிக்கின்ற ஐரோப்பிய பகுப்பு உத்தரவு (European Separation Order), மூன்றாண்டுகளுக்குத் தற்காலிகமாக நீக்கப்பட உள்ளது. இதன் விளைவாக, எந்த குற்றமும் செய்யாத அகதிகள் வழமையான சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவார்கள்.

* அதிகாரிகளின் கருத்தின்படி, இல்லாத ஆவணங்களைச் சமர்ப்பிக்க தவறும் புலம்பெயர்ந்தவர்கள், அடையாளம் உறுதிப்படுத்தப்படாமல் சகித்துக் கொள்ளப்பட்டவர்கள் என்ற ஒரு புதிய பிரிவின் கீழ் வருவார்கள். இவர்களுக்கான உரிமைகள் சகித்துக்கொள்ளப்பட்ட அகதிகள் (tolerated refugees) என்போருக்கு வழங்கப்படும் உரிமைகளை விட குறைவாகவே இருக்கும், சகித்துக்கொள்ளப்பட்ட அகதிகள் என்போரின் தஞ்சம் கோரிய விண்ணப்பங்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜேர்மனியில் தங்கியிருக்க இவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கடவுச்சீட்டு தொலைந்துபோதல் மற்றும் கூட்டங்களின் போது வராமல் இருப்பது ஆகியவை நாடுகடத்துவதற்கான அடித்தளங்களாக பயன்படுத்தப்படும். தூதரகம் அழைக்கும் போது வரத் தவறுபவர்களுக்கு 14 நாட்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்படும், இதற்கு முன்னர் இது குற்றமாக இருக்கவில்லை. சுருக்கமாக கூறுவதானால், அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு அவர்களே முன்வந்து ஒத்துழைக்க மறுக்கும் அகதிகள் யாராயினும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனையாக நாடுகடத்தப்படுவார்கள்.

* நாடு கடத்துவதற்கான தேதியும் திட்டமிட்ட பாதையையும் அரசு இரகசியமாக அறிவிக்கும். நாடு கடத்தப்படுவதைக் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் எந்தவொரு பொதுத்துறை பணியாளரும் அவ்விதத்தில் ஒரு குற்றகரமான அத்துமீறலை செய்தவராகிறார். நாடு கடத்தப்படும் தேதிகளை அறிவிக்கும் அகதிகள் உதவிக்குழு தொழிலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான குற்றவியல் அத்துமீறல் குறித்த நிஜமான திட்டம் அந்த சட்டமசோதாவில் இருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டது என்றாலும், அது பின்புல கதவு வழியாக மீண்டும் மறுஅறிமுகம் செய்யப்பட்டது. இது ஏனென்றால் அரசு இரகசியங்களைப் பரப்புவதில் உதவுவது அல்லது ஊக்குவிப்பது ஒரு குற்றவியல் அத்துமீறலாக தண்டனைக்குரியதாகிறது.

* மற்றொரு ஐரோப்பிய நாட்டு அதிகாரிகளது பொறுப்பின் கீழ் வரும் விண்ணங்களுக்குரிய தஞ்சம் கோருவோருக்கு நடைமுறையளவில் எந்த ஆதரவும் வழங்கப்படாது. அவர்கள் இந்நாட்டை விட்டு வெளியேற பட்டினியில் விடப்படுவார்கள். அவர்கள் உதவி கோரினால், அவர்கள் நாடுகடத்தப்படும் வரையில் செலவுகளுக்காக அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்கு அவர்களுக்கு மட்டுப்பட்ட நிதி உதவி வழங்கப்படும், இந்த உதவியையும் இரண்டாண்டு காலத்திற்கு ஒருமுறை மட்டுமே பெற முடியும்.

* தஞ்சம் கோருவோருக்குப் பாதுகாப்பு வழங்கும் அடித்தளங்களை மீளாய்வு செய்வதற்கு, புலம்பெயர்வு மற்றும் அகதிகளுக்கான கூட்டாட்சி முகமைக்கு (BAMF) இன்றைய தேதியில் மூன்றாண்டு காலம் அவகாசம் உள்ளது, இது எதிர்காலத்தில் ஐந்தாண்டுகளைக் கொண்டிருக்கும். இதன் அர்த்தம், ஏற்றுக் கொள்ளப்பட்ட அகதிகள் ஐந்தாண்டுகளுக்கு அச்சத்துடனே வாழ வேண்டியிருக்கும், அந்த காலத்திற்குள் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவர்களின் தஞ்சம் கோரிய கோரிக்கைகள் மறுக்கப்படலாம்.

* ஒரு குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள் ஆறு மாதங்கள் சிறைதண்டனை பெற்றிருந்தால் அவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார், முன்னதாக குறைந்தபட்சம் 12 மாதங்களாக இருந்த இது குறைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, Orderly Repatriation Act எனும் முறையாக திருப்பி அனுப்பும் இந்த சட்டம் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தற்போது ஜேர்மனியில் வசிக்கும் 240, 000 பேரையும், குறிப்பாக சகித்துக் கொள்ளப்பட்ட அந்தஸ்தைப் பெறாத 56, 000 பேரையும் வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. சீகோவர், போரால் நாசமாக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மட்டும் 18, 000 பேரை அனுப்ப உத்தேசிக்கிறார்.

ஆனால் இச்சட்டம் இன்னும் கூடுதலாக செல்கிறது. இது வெறுமனே அகதிகள் விரோத மற்றும் ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, மாறாக மனிதாபிமானமற்றதும் காட்டுமிராண்டித்தனமானதும் கூட. இது ஜேர்மன் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களை நினைவூட்டுகிறது.

தொழில்ரீதியில் 6 மில்லியன் யூதர்களை நிர்மூலமாக்குவதற்கு ஹிம்லெர்களும், ஹெட்ரிச்களும் மற்றும் SS சீருடையில் இருந்த ஏனையவர்களும் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. இதற்கு, யூதர்களை அடையாளம் கண்டுபிடித்து, சுற்றி வளைத்து, இரத்தம் உறைய வைக்கும் விதத்தில் மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் சிறைவதை முகாம்களுக்கு அனுப்புவதற்காக, ஒவ்வொரு அமைச்சகத்திலும் அதிகாரிகளின் ஓர் இராணுவம் தேவைப்பட்டது. இதை வர்ணிப்பதற்காக Hannah Arendt “தீமையின் அதீத பிரயோகம்" (banality of evil) என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

அவர்களைச் சார்ந்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களை, ஏற்று நடப்பதற்கு சாத்தியமே அல்லாத மனிதாபிமானமற்ற சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளைக் கொண்டு பீதியூட்டும் மற்றும் எந்தவொரு பச்சாதாப சுவடையும் அழிக்கும், இதுபோன்ற பழிக்கஞ்சா ஒரு சமூக அடுக்கு, மொத்தத்தில் “சட்டம் ஒழுங்கு" என்ற பெயரில், மீண்டுமொருமுறை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

முறையாக திருப்பியனுப்பும் சட்டம் என்ற அச்சட்டத்தின் எரிச்சலூட்டும் பெயரே கூட, இந்த உண்மையை அடிக்கோடிடுகிறது. Reinhard Müller இதை Frankfurter Allgemeine Zeitung க்கு அளித்த ஒரு கருத்துரையில் தொகுத்தளித்தார். “இது ஏன் நீண்டகாலமாக இருந்திருக்கவில்லை?” என்று உணர்ச்சிவயப்பட்ட அவர், அச்சட்டத்திற்கு “சட்டபூர்வமாக ஆக்குவதற்கான சட்டம்" என்று பெயரிட பரிந்துரைத்தார்.

எல்லா அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளையும் ஏளனப்படுத்தும், சீகோவர் மற்றும் FAZ இன் இந்த "சட்டபூர்வம்" என்ற வார்த்தை, அகதிகளுக்கு எதிராக அல்ல, மாறாக ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக திருப்பிவிடப்பட்டுள்ளது. ஆளும் வர்க்கம் யாரை ஒரு எதிர் அமைப்பாக அல்லது ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறதோ, அவர்கள் அதிகரித்து வரும் சுரண்டல், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக போராடி வருகிறார்கள் என்பதாலோ, அல்லது அவர்கள் அகதிகள் வேட்டையாடப்படுவதை, ஒடுக்குமுறை அரசு எந்திரம் மற்றும் இராணுவவாதத்தைப் பலப்படுத்துவதை எதிர்க்கிறார்கள் என்பதாலேயோ, அது அவர்களை இலக்கில் வைக்கிறது.

நாடுகடத்துவதற்கான இந்த புதிய சட்டம், பொலிஸ் மற்றும் இராணுவவாதத்தின் வளர்ச்சி உட்பட அரசு ஒடுக்குமுறை கருவிகளைப் பலப்படுத்துவதுடன் கரங்கோர்த்து செல்கிறது. சீகோவரின் துறை மட்டுமே, இந்த மாதத்தில், உளவுத்துறை முகமைகளின் சிறப்பு அதிகார சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை மேசைக்குக் கொண்டு வந்துள்ளது, இவை அனைவரையும் தழுவிய ஓர் உளவுபார்ப்பு அரசுக்கு அடித்தளம் அமைக்கிறது.

பிற கட்சிகள் எதுவுமே இதை எதிர்க்கவில்லை. CDU மற்றும் CSU இன் கூட்டணி பங்காளியாக இருந்து, சமூக ஜனநாயக கட்சி (SPD) இந்த புதிய சட்டத்திற்கு நேரடி பொறுப்பாகிறது. சிறைக்கைதிகளையும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அகதிகளையும் பிரித்து வைப்பதை நீக்குவதற்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர் தனது ஆட்சேபனைகளை உரக்க அறிவித்த நீதித்துறை அமைச்சர் பார்லி, இச்சட்டத்தை ஆதரித்தார். SPD தலைவர் ஆண்ட்ரியா நஹ்லெஸ் இச்சட்டத்தை விமர்சித்து ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை.

பசுமை கட்சியும் இடது கட்சியும் இந்த நடவடிக்கையை கோட்பாட்டுரீதியில் ஆதரிக்கின்றன என்பதோடு, அதிகபட்சமாக வார்த்தையளவில் ஆட்சேபனைகளை வெளியிட்டுள்ளன. பசுமை கட்சி அல்லது இடது கட்சி அமைச்சு தலைவர்களாக உள்ள பாடன்-வூட்டெம்பேர்க் மற்றும் துரிங்கியா ஆகிய இரண்டு ஜேர்மன் மாநிலங்களில், அதிகாரிகள் மற்ற இடங்களைப் போலவே அதேயளவுக்கு பேரார்வத்துடன் அகதிகளை நாடுகடத்தி வருகின்றனர். சிறைகள் ஏற்கனவே அதிகமாக நிறைந்து வழிகின்றன என்பதும், அதனால் அகதிகளை அடைக்க முடியவில்லை என்பதே, ஹம்பேர்க்கின் நீதித்துறை செனட்டர் பசுமை கட்சியின் டில் ஸ்டெபென் எழுப்பிய ஒரே கவலையாக இருந்தது.

Loading