மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செவ்வாயன்று நடந்த கல்விசார் செனட் கூட்டத்தில் தீவிர வலதுசாரி பேராசிரியரான ஜோர்க் பார்பெரோவ்ஸ்கிக்கு (Jorg Baberowski) ஹம்போல்ட் பல்கலைக்கழகத் தலைவர் சபீன குன்ஸ்ட் (Sabine Kunst) தனது முழு ஆதரவை வழங்கினார். இது, ஒரு இடதுசாரி மாணவருக்கு எதிராக பார்பெரோவ்ஸ்கி தொடர்ந்து கடும் அச்சுறுத்தல்களை விடுத்து அவரை சரீரரீதியாக தாக்கியதையடுத்து நடந்தது. கல்விசார் செனட் என்பது, பேராசிரியர்கள், கல்விப் பணியாளர்கள், பிற ஊழியர்கள் மற்றும் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழகத்தின் மிகவுயர்ந்த நிர்வாகக் குழு அமைப்பாகும்.
சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை கரும்பலகை ஒன்றிலிருந்து பார்பெரோவ்ஸ்கி கிழித்தெறிந்தார். அப்போது, மாணவர் பாராளுமன்றத்திலுள்ள IYSSE பிரதிநிதியான ஸ்வென் வோர்ம் (Sven Wurm) அவரது நடவடிக்கைகளை படம்பிடித்துக் கொண்டிருப்பதை அவர் கவனித்ததால், அந்த மாணவரை வலுவாகத் தாக்கி, “உனது முகத்தை அடித்து நொருக்கட்டுமா? என்று கடுமையாக அவரை அச்சுறுத்தினார். இவையனைத்துமே காணொளியாக பதிவு செய்யப்பட்டு, அதனுடன் ஒரு உத்தியோகபூர்வ ஒழுங்கு நடவடிக்கைக்கான புகாரையும் சேர்த்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
பொதுமக்கள் அனுமதிக்கப்படாத இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், இந்த வன்முறை மிக்க தாக்குதலை பல்கலைக்கழக நிர்வாகம் பகிரங்கமாகக் கண்டிக்காது என்று குன்ஸ்ட் அறிவித்தார். அது குறித்து வெறுமனே உத்தியோகபூர்வ விசாரணை தான் நடத்தப்படும் எனவும் அதற்கான காரணத்தை குன்ஸ்ட் விளக்கமளிக்க மறுத்தார். பார்பெரோவ்ஸ்கியின் செயல் மனிதன் ஒருவரின் புரிந்துகொள்ளக்கூடிய பிரதிபலிப்பே என்று விவரிக்கும் அளவிற்கு குன்ஸ்ட் சென்றார் என்று கல்விசார் செனட்டின் பல உறுப்பினர்கள் WSWS இற்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் அனுதாபத்தை தெரிவித்ததும், தாக்குதல் குறித்து கண்டிப்பதற்கு தெளிவாக மறுத்ததும், பல்கலைக்கழகத்தில் தங்களது அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கும் தாக்குவதற்கும் வன்முறை மிக்க தீவிர வலதுசாரிகளுக்கு பகிரங்கமான அனுமதியை குன்ஸ்ட் வழங்கியுள்ளார் என்பதையே காட்டுகிறது. வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகளை விமர்சிக்கும், அல்லது மாணவர் பாராளுமன்றத்தில் ஈடுபட்டிருக்கும் எந்தவொரு மாணவரும், அத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வர் என்பதை எதிர்பார்க்க வேண்டும்.
இடதுசாரி மாணவரை பார்பெரோவ்ஸ்கி சரீர ரீதியாக தாக்கியதும், மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தலையிட்டதும் தன்னிச்சையான பிரதிபலிப்பின் விளைவல்ல, மாறாக அவரது தீவிர வலது சித்தாந்தத்தில் இருந்து நேரடியாக அது எழுந்தது. கிழக்கு ஐரோப்பிய வரலாற்றை படிப்பிக்கும் இந்த பேராசிரியர் ஜேர்மனியின் தீவிர வலதுசாரிகளுக்குள் ஒரு முக்கிய பிரமுகராக இருக்கிறார். 2015 இல், Die Zeit பத்திரிகையில் “Baberowski Salon” என்பதை அவர் தொடங்கினார், புதிய வலதுசாரி சூழலை சார்ந்திருக்கும் முக்கியமான அனைவரும் அதற்காக ஆண்டிற்கு குறைந்தது இரண்டு முறையாவது சந்திக்கின்றனர்.
மிக சமீபமாக இந்த ஆண்டு ஜனவரியில், அனைத்து யூதப்படுகொலையை மறுப்பவர்களின் முதன்மை பொய்யான ஹிட்லர் “அவுஸ்விட்ச் பற்றி எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை” என்பதை FAZ செய்தியிதழில் பார்பெரோவ்ஸ்கி மீண்டும் கூறினார். அதாவது, ஹிட்லர் “தீயவர் அல்ல” என்ற அவரது முந்தைய கூற்றை நியாயப்படுத்தும் முயற்சியாகவே இது இருந்தது.
அதேசமயம், அச்சுவடிவ மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் மூலமாக, அகதிகளுக்கு எதிராகவும், கொடூரமான போர்களுக்கு ஆதரவாகவும் பார்பெரோவ்ஸ்கி தொடர்ந்து தூண்டி வருகிறார். சட்ட பேராசிரியரான ஆண்ட்ரியாஸ் பிஷ்ஷர்-லெஸ்கானோ (Andreas Fischer-Lescano) இதை Frankfurter Rundschau நாளிதழில் குறிப்பிட்டது போல, பார்பெரோவ்ஸ்கியுடன் அவரது “அறிவார்ந்த வார்த்தைகள் அன்றாட அரசியல் குறித்த கருத்துக்களுடன் இணைந்து ஒரு தீவிர வலதுசாரி விமர்சனத்தின் ரசக்கலவையாக கலக்கிறது.”
அத்தகைய நாஜிக்கு வக்காலத்து வாங்குபவரும் தீவிர வலதுசாரியுமான அவரால் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களின் விளம்பர சுவரொட்டிகளை கிழிக்கவும், வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட மாணவர்களை தண்டனை எதுவும் இன்றி தாக்கவும் முடிகின்றது. ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகம் பார்பெரோவ்ஸ்கியின் சமீபத்திய வன்முறை மிக்கசெயலை பாதுகாத்ததோடல்லாமல், பல ஆண்டுகளாக எந்தவொரு விமர்சனத்திற்கும் எதிராக நிபந்தனையின்றி அவரை ஆதரித்து வருவதுடன், அவரது வலதுசாரி கண்டனங்களையும் பாதுகாத்து வருகிறது.
பேராசிரியர் தனது அரசியல் எதிரிகளை பலமுறை அச்சுறுத்திய சூழ்நிலைகளில் இது நடந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு உத்தியோகபூர்வ பேருரையின் போது, “இரத்தம் தோய்ந்த பாசிசவாதி” என்றும் “பழிவாங்கும் கண்டனவாதி” என்றும் வோர்மை பார்பெரோவ்ஸ்கி அவமதித்தார். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம், “விரிவுரை அரங்கிற்குள் அவர்கள் நுழைவதை தடுக்காமல்” அல்லது “வளாகத்திற்குள் நுழைவதற்கே முழுத்தடை விதிக்காமல்” “இந்த குற்றவாளிகளை அவர்கள் விரும்பியதை செய்துவிட்டு வெளியேற அனுமதித்து” “கோழைத்தனமாக” நடக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவம் குறித்து, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு விரிவான அறிக்கை ஒன்றை IYSSE அளித்தது. என்றாலும், கடிதத்திற்கு பதிலளிப்பதற்கு பதிலாக, ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை குன்ஸ்ட் வெளியிட்டார், அது பார்பெரோவ்ஸ்கி ஒரு “சிறந்த அறிஞரே” தவிர “தீவிர வலதுசாரி அல்ல” என்று விவரித்தது. அவர் மீதான “ஊடகங்களின் தாக்குதல்கள்” “ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்றும் அவர் அறிவித்தார்.
இந்த பகிரங்க அனுமதியை கையில் எடுத்துக் கொண்டு, பார்பெரோவ்ஸ்கி தனது சகாக்களை அவமதிக்கவும் அச்சுறுத்தவும் தொடங்கினார். ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர்களை அவர் தாக்கினார், எடுத்துக்காட்டாக, வில்ஹெல்ம் ஹாப் (Wilhelm Hopf) எழுதிய அகதி எதிர்ப்பு “அறிக்கை 2018” ஐ ஆதரிக்க மறுத்ததற்காக அவர் அதைச் செய்தார். கல்வியாளர்களை “கண்டனம் செய்பவர்கள்” என்று அவர் அவமதித்தார். மேலும் அவர்களை “தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் எந்தவொரு விமர்சன வார்த்தையையும் உச்சரிக்காத அற்பத்தனமான பேராசிரியர்களாக இருந்தனர்” என்றார்.
கடந்த ஆண்டு மாணவர் பாராளுமன்றத்தின் ஏனைய பட்டியலைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தங்களை “தீவிர இடதுசாரி வெறியர்கள்” என்றும் “நம்பமுடியாத முட்டாள்கள்” என்றும் பார்பெரோவ்ஸ்கி வார்த்தைகளால் தாக்கினார் என்பதால் அவருக்கு எதிராக ஒரு வழக்கை பதிவு செய்ததுடன், ஒழுங்கு நடவடிக்கை புகாரும் அளித்தனர். இந்த இருவரும் பார்பெரோவ்ஸ்கியின் சர்வாதிகாரங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக முன்மொழியப்பட்ட ஆய்வு மையம் பற்றிய விரிவான விமர்சனங்களை வெளிப்படுத்தியமையே இந்த குறிப்பிட்ட வெடிப்புக்கான காரணமாகும். பல்கலைக்கழக நிர்வாகம், பார்பெரோவ்ஸ்கிக்கும், பார்பெரோவ்ஸ்கியை மீண்டும் மீண்டும் ஊக்குவித்த சமூக ஜனநாயக அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் குன்ஸ்டுக்கும் அதன் வெளிப்படையான ஆதரவை வழங்கியதுடன், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அது விடுத்த அறிக்கையையும் மீள்உறுதி செய்தது.
கூட்டாட்சி நாடாளுமன்றம் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், கடந்த காலங்களில் பார்பெரோவ்ஸ்கியை அவர்கள் ஆதரிப்பதாக அறிவித்ததுடன், “அவரது குணாம்சத்தை படுகொலை செய்யும் பிரச்சாரம்” என்ற வகையிலான அவர் மீதான எந்தவொரு விமர்சனத்தையும் கண்டித்தனர். Der Spiegel, FAZ, மற்றும் Die Welt ஆகிய செய்தி ஊடகங்கள் உட்பட, பெரும்பாலான ஊடகங்களும் IYSSE க்கு எதிரான இந்த பிரச்சாரத்தில் இணைந்து கொண்டன.
கடந்த புதன்கிழமை மாலை, கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியுடன் இணைந்த கொன்ராட் அடினவர் அறக்கட்டளை (Konrad Adenauer Foundation), பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் Bernhard Kempen மற்றும் மத்திய கல்வி அமைச்சரான Anja Karliczek ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டு, “பாண்டித்திய சுதந்திரம்” என்ற தலைப்பில் பேர்லினில் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தது. அங்கு அறிவிக்கப்பட்ட பங்கேற்பாளர்களில், ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி “சமூக சொற்பொழிவிற்கான இடங்கள் பல்கலைக்கழகங்களே” என்ற தலைப்பில் உரையாற்றுபவராக இருந்தார்.
இரண்டாம் உலகப் போரின் முடிவின் சாக்சோனியின் உத்தியோகபூர்வ 75 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக நடந்த நினைவகங்களின் சங்க நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சின் அரசு செயலரான Peter Tauber, மே 4 அன்று உரையாற்றுவதற்கு பார்பெரோவ்ஸ்கியும் அழைக்கப்பட்டிருந்தார்.
பார்பெரோவ்ஸ்கியின் விவகாரம் ஜேர்மனியின் தற்போதைய அரசியல் சூழலை எடுத்துக்காட்டும் அறிகுறியாகும். மக்களிடையே தீவிர வலதுசாரிகள் பரவலாக வெறுக்கப்படுகிறார்கள் என்ற நிலையிலும், வலதுசாரிகளால் இன்னும் தீவிரமான ஆக்கிரோஷத்துடன் செயல்பட முடிகின்றது. ஏனென்றால் அவர்கள் உயர் மட்டத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு ஆதரிக்கப்படுகிறார்கள். இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின்னர் ஒரு பாசிச கட்சி தொடர்புபட்ட முதல் ஆளும் பெரும்பான்மையை உருவாக்கும் நோக்கத்தில், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியமும் (CDU), தாராளவாத ஜனநாயக கட்சியும் (FDP) இணைந்து சமீபத்தில் தூரிங்கியா மாநிலத்தில் வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு (Alternative for Germany - AfD) கட்சியுடன் ஒரு கூட்டணியை உருவாக்கின.
ஆனால் இந்த விவகாரத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. பார்பெரோவ்ஸ்கியின் வன்முறை மிக்க வெடிப்பு குறித்த காணொளி ஒருசில மணித்தியாலங்களில் வைரலாகப் பரவியதுடன், அண்மித்து 20,000 முறைகள் பார்க்கப்பட்டிருந்தன. பல மாணவர் குழுக்களும் மற்றும் சபைகளும், அத்துடன் நூற்றுக்கணக்கான தனிநபர்களும், இந்த தாக்குதலை கண்டித்தும், இதற்கான நடவடிக்கை எடுக்க கோரியும் சமூக ஊடகங்களில் தமது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.