இலங்கை: அரசாங்கம், கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்கள் மீது கடுமையான ஊதிய ஒப்பந்தத்தை திணிக்க சதிசெய்கின்றன

தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 1,000 ரூபாயாக (சுமார் 5 அமெரிக்க டாலர்) உயர்த்துவது என்ற போர்வையின் கீழ், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்க்ஷவின் அரசாங்கம், தோட்டக் கம்பனிகள் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் (இ.தொ.கா) சேர்ந்து இரக்கமற்ற சுரண்டல் வேலை விதிமுறைகளை திணிக்க சதி செய்து வருகின்றன. இது தொடர்பாக மார்ச் 1 அன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர்களுக்கு தெரியாமல் ஒப்பந்தம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது.

Abbotsleigh Estate workers on strike in December 2018

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது கோட்டாபய இராஜபக்க்ஷ, இ.தொ.கா. உதவியுடன் வாக்குகளைப் பெறுவதற்கான தீவிர முயற்சியில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதாக உறுதியளித்தார். முந்தைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியல் அதிகரித்து வந்த எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதன் பேரில் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அவரது போலி வாக்குறுதிகளின் ஒரு பகுதியே இதுவாகும்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்க்ஷவின் 2005-2014 அரசாங்கத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த அவரது இரக்கமற்ற பண்பை அறிந்த தொழிலாளர்கள் அதிகரித்தளவில் அவருக்கு எதிராக வாக்களித்தனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இராணுவத் தாக்குதலுக்கு அவர் தலைமை தாங்கினார். இந்தப் போரில் அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு இந்த யுத்தம் பயன்படுத்தப்பட்டது.

மார்ச் மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தை கலைத்து அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் இராஜபக்க்ஷ, தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுத் திட்டத்தை மீண்டும் தூக்கிப் பிடிக்கின்றார்.

கடந்த மாதம், மார்ச் 1 ஆம் திகதிக்குள் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிக்குமாறு அவர் தோட்டக் கம்பனிகளைக் கேட்டுக்கொண்டார். இராஜபக்க்ஷ முன்மொழிந்த இந்த அதிகரிப்புக்கும், 2018 இல் தொடர் போராட்டங்களில் தொழிலாளர்கள் எழுப்பிய கோரிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தொழிலாளர்கள் அன்றைய அடிப்படை ஊதியத்தை 500 ரூபாயால் இரட்டிப்பாக்க கோரினர், ஆனால் மற்ற தொழிற்சங்கங்களின் உதவியுடன் இ.தொ.கா. போராட்டத்தை காட்டிக் கொடுத்தது. கம்பனிகளால் முன்மொழியப்பட்ட 200 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கும் 50 ரூபாய் கொடுப்பனவுக்கும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்தத் தொகையை, ஓய்வூதிய ஒதுக்கீடு செய்யும் 105 ரூபாயுடன் சேர்த்து 855 ரூபா நாள் சம்பளம் கொடுப்பதாக கம்பனிகள் பொய்யாகக் கூறுகின்றன. இப்போது இராஜபக்க்ஷ அந்தத் தொகைக்கு 145 ரூபாய் கூடுதலாக சேர்க்க கோருகிறார்.

“நாங்கள் செய்யக் கூடியதைத்தான் சொல்வோம், சொல்வதைதான் நாங்கள் செய்வோம்” என இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமன் பெருமையாக பேசினார். இது முழு பொய்யாகும். தொண்டமானும் அவரது இ.தொ.கா.வும் மற்ற முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதியத்தை மீண்டும் மீண்டும் வறுமை மட்டத்திலேயே வைத்திருக்கன்றனர்.

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் எந்தவொரு ஊதிய உயர்வையும் எதிர்க்கின்றன. ஹேலீஸ் தோட்ட நிர்வாக இயக்குனர் ரொஷான் ராஜதுரை, பெப்ரவரி 16 அன்று சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு கூறியதாவது, பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் "புதிய ஊதிய மாதிரியுடன்" ஒரு மாற்று யோசனையை முன்வைத்திருக்கின்றது. இது உற்பத்தித் திறனை அதிகரிப்பது மற்றும் தொழிலாளர்கள் இப்போது அனுபவிக்கும் சிறிய சமூக நலன்களைக் கூட குறைப்பதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

புதிய திட்டத்தை விளக்கி அவர் கூறியதாவது: “புதிய ஊதிய மாதிரி, தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 10 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும். மீதமுள்ள நாட்களில், உற்பத்தித்திறன் அடிப்படையிலான திட்டத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். சிறு தேயிலை தொழில் துறையில் வழங்குவது போல் பறிக்கும் ஒவ்வொரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கும் குறிப்பிட்ட ஊதியம் வழங்கப்படும்.”

இந்த திட்டத்தின் படி, கம்பனிகள் 10 நாள் வேலையைத் தவிர எஞ்சிய 15 நாட்களுக்கு வேலை வழங்குமா என்பது தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் இல்லை. தற்போது முந்தைய ஒப்பந்தங்களின்படி கம்பனிகள் மாதத்திற்கு 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பது குறைந்தபட்சம் எழுத்திலாவது இருக்கின்றது. இந்த கட்டாய 25 வேலை நாள் முறை புதிய திட்டத்தின்படி இரத்து செய்யப்படும்.

அத்துடன் இந்த 15 நாட்களுக்கு தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிகளான ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றை பெறமாட்டார்கள்.

இதுதான் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் நடைமுறை. தோட்ட கம்பனிகள் ஓய்வுபெற்ற தொழிலாளர்களை இந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தி, ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 40 ரூபாய் வழங்குகின்றன. நாளொன்றுக்கு 1,000 ரூபா சம்பாதிக்க ஒரு தொழிலாளி 25 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும், அது சாத்தியமற்றது.

இராஜதுரை வலியுறுத்தியதாவது: “இலங்கையின் தேயிலை உற்பத்திக்கான செலவு அதன் போட்டியாளர்களான இந்தியா மற்றும் கென்யாவை விட அதிகமாக உள்ளது. நாம் போட்டியிட விரும்பினால், உற்பத்தி செலவில் போட்டியிட வேண்டும். அதாவது வேலை குறைப்பு மற்றும் வேலைச் சுமையை அதிகரிப்பதன் மூலம் உழைப்புச் செலவைக் குறைக்க வேண்டும்,”

ஊதியத்தை அதிகரிக்க நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, இடைக்காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா குறைந்தபட்ச ஊதியம் வழங்க பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்கு குறுகிய கால அரச நிதியின் ஆதரவை அரசாங்கம் வழங்கும் என்று தெரிவித்தார்.

"நாங்கள் அந்த அம்சத்தையும் கவனித்து வருகிறோம், ஆனால் அவர்கள் மூன்று மாதிரிகளை பிரேரித்தனர்" என பத்திரான கூறினார். “வெளியார் உற்பத்தி முறை, உற்பத்தித்திறன் அடிப்படையிலான சலுகைகள் மற்றும் வருவாய் பகிர்வு மாதிரிகள்" ஆகியவற்றை கம்பனிகள் முன்மொழிந்தன.

இதன் பொருள், அரச பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் போலிச் சம்பள உயர்வை "தற்காலிகமாக" வழங்குவதே ஆகும். அதே நேரம் வேலைச் சுமையை அதிகரிக்கவும் ஓய்வூதிய நிதி மற்றும் நலன்புரி சேவைகளை வெட்டவும், அவர்கள் முன்வைத்துள்ள மாதிரிகளை நடைமுறைப்படுத்த கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துகின்றது .

சுரண்டலை அதிகரிப்பதற்காக இத்தகைய மாதிரிகளை திணிப்பதற்கு ஒரு ஒப்பந்தம் ரகசியமாக தயாராகும் அபாயத்தை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

2016 மற்றும் 2019 ஜனவரியில் கையெழுத்திடப்பட்ட கடைசி இரண்டு கூட்டு ஒப்பந்தங்களில், இ.தொ.கா. தலைமையிலான தொழிற்சங்கங்கள் “வருவாய் பகிர்வு மாதிரியை” செயல்படுத்த தோட்ட கம்பனிகளுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டன.

இந்த முறையின் கீழ், தொழிலாளர்களுக்கு சுமார் 1,000 தேயிலை செடிகள் ஒதுக்கப்படுகின்றன. அவர்கள் அவற்றை வளர்க்க வேண்டும் மற்றும் தோட்டங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளுக்கு அறுவடையை வழங்க வேண்டும். உபகரணங்கள், உரம், மற்றும் கிருமிநாசிகளை கம்பனிகள் வழங்குகின்றன. உரம், கிருமி நாசிகளுக்கான செலவு, அலுவலக செலவு மற்றும் இலாபத்தின் ஒரு பெரும் பகுதியையும் கழித்த பின்னர், மீதமுள்ள “வருமானமே” தொழிலாளிக்கு கிடைக்கின்றது. கம்பனிகளின் நலனுக்காக இந்த அபத்தமான "வருவாய் பகிர்வு" முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்ட சில தோட்டங்களில், தொழிலாளர்களின் குடும்பம் முழுவதும் வருமானத்தை ஈட்டுவதற்காக உழைத்தும் பயணில்லை. அவர்கள் இந்த முறையை எதிர்த்ததுடன் மற்றும் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் ஒதுக்கப்பட்ட நிலத்தை திருப்பிக் கொடுத்து பழைய முறையைத் தேர்ந்தெடுத்தனர்.

உற்பத்தித்திறனை அதிகரிக்க தோட்டங்களில் ஏனைய சில முறைகளும் பரிசோதிக்கப்படுகின்றன. நவம்பர் 29 அன்று, கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்களுக்குள், 5,000 க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் டிஜிட்டல் தராசு இயந்திரம் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதை எதிர்த்தனர். புதிய முறையின்படி நிர்வாகமானது வேலை நேரத்தில் தொழிலாளர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க முடியும். (பார்க்க: இலங்கையில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலைச்சுமையை அதிகரிப்பதற்கு எதிராகவும் சம்பள உயர்வு கோரியும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்)

பல தசாப்தங்களாக, பெருந்தோட்ட நிறுவனங்கள், தரகு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சில்லறை நிறுவனங்களும் விலைகளையும் செலவுகளையும் கையாளுகின்றன, இதனால் அவர்கள் லாபத்தை கறந்தெடுக்கின்றார்கள். முன்பு தொழிலாளர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியால் கொடூரமாக சுரண்டப்பட்டனர். சர்வதேச பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள இலாபங்களுக்கான உந்துதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கென்யா, தென்னாப்பிரிக்கா, சீனா, இந்தியா, வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் சர்வதேச அளவில் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் கீழ் இதேபோன்ற சுரண்டல் நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்.

மறுபுறம், வறுமை ஊதியத்தின் மத்தியில், தொழிலாளர்களின் நிலைமைகள் கீழ்நோக்கி சரிகின்றன. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, தற்போதைய வாழ்க்கைச் செலவின் கீழ் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு மாதத்திற்கு 50,000 ரூபாய் அவசியம். இருப்பினும், தோட்டத் தொழிலாளர் குடும்பம் இந்த தொகையில் கால் பங்கையே சம்பாதிக்கின்றது.

தீவிரமான சுரண்டலை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஊதிய ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அவசியமான ஊதியம், ஊதியத்துடனான மருத்துவ விடுமுறை, சிறந்த ஓய்வூதியத் திட்டம், வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவெனவும் அவசியமானவை.

தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்கள் மற்றும் ஏனைய வசதிகள் குறித்து முடிவெடுக்கும் உரிமையை தொழிற்சங்கங்களின் கைகளில் விட்டு வைக்கக்கூடாது. தொழிற்சங்கங்கள் கம்பனிகளின் மற்றும் அரசின் நேரடி முகவர்களாக மாறிவிட்டன.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு இடம் கொடுக்காமல், சுயாதீனமாக செயல்படும் நடவடிக்கை குழுக்களை வேலைத் தளங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் அமைக்க வேண்டும். இது தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினருடன் ஒன்றிணைந்து அவர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்புகளை வழங்கும்.

அபோட்சிலி தோட்டத் தொழிலாளர்கள் 2018 சம்பளப் போராட்டத்தின் உச்ச கட்டத்தில் ஒரு நடவடிக்கைக் குழுவை அமைத்து ஒரு முன்முயற்சியை மேற்கொண்டனர்.

சோசலிசக் கொள்கைகளுக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து பெருந் தோட்டங்களையும் தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்குவதற்கும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் போராடுவதுடன் இந்த போராட்டம் இணைக்கப்பட வேண்டும். இது சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச சோசலிச முன்னோக்குக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரை:

இலங்கை ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய போலி சம்பள உயர்வு

Loading