மொழிபெர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கொரோனா வைரஸால் ஏற்படும் ஆபத்தை குறைத்து மதிப்பிடுவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகள், அமெரிக்காவில் இந்த நோய் வேகமாக பரவுவதாலும், மக்கள் கணிசமான சதவீதத்தினர் ஆபத்தான முறையில் நோய்வாய்ப்படுவார்கள் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளாலும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் அமெரிக்காவில் பல வாரங்களாக கண்டறியப்படாமல் பரவி வருவதாக இப்போது ஒப்புக் கொள்ளப்படுகிறது. 16 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் ஒன்பது பேர் இறந்துள்ளனர். கலிஃபோர்னியா, வாஷிங்டன் மற்றும் நியூயோர்க் ஆகியவை “எங்கிருந்து தொற்றியது என்பது அறியப்படாத” “சமூகரீதியாக பரப்பல்” வெடித்துள்ளதைக் கண்டறிந்துள்ளன. அதாவது நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்கள் கூட தொற்றினால் பாதிக்கப்படலாம்.
மக்கள்தொகை முழுவதும் இந்த நோய் ஒரு பாரிய தொற்றுநோயாக பரவுவதற்கு திறம்பட பதிலளிக்க அமெரிக்கா எந்தளவிற்கு மோசமான முறையில் தயார்நிலையில் இருந்திருக்கின்றது என்பதை இது அம்பலப்படுத்தியுள்ளது. விஞ்ஞானிகள் குறைந்தது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே இவ்வாறான ஒரு நிகழ்வு மிகவும் சாத்தியமானது என்று எச்சரித்து வந்திருந்தாலும், அதனை தவிர்க்க முடியாதிருந்திருந்தாலும், மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் ஒழுங்கற்ற மற்றும் திறனற்ற முறையில் முன்தயாரிப்பில்லாது தமது பிரதிபலிப்பை காட்டுகின்றனர்.
இப்போதைக்கு, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த யார் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை தீர்மானிப்பதற்கான பரிசோதனையைச் செயல்படுத்த நன்கு ஒருங்கிணைந்த தேசியளவிலான முயற்சி தொடங்கவில்லை. சீனா மில்லியன் கணக்கானவர்களை சோதித்திருந்தாலும், அமெரிக்கா பல நூறு பேரை மட்டுமே சோதனை செய்துள்ளது.
தனிநபர்களும் மற்றும் மருத்துவ ஊழியர்களும் தங்களுக்கும் தங்கள் நோயாளிகளுக்குமான கொரோனா வைரஸ் பரிசோதனையை தேடுவதைப்பற்றி சமூக ஊடகங்களில் ஏராளமான தகவல்கள் காணப்படுகின்றன. ஆனால் அவர்களின் கோரிக்கைகள் பலமுறை விளக்கமளிக்கப்படாமலே மறுக்கப்பட்டுள்ளன. இது ஏற்கனவே தடுத்திருக்கக்கூடிய பரவுதல் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுத்தது. மேற்கு கரையில் டஜன் கணக்கான முதல் உதவியளிப்பவர்களும் மருத்துவ ஊழியர்களும் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
பல தசாப்தங்களாக, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி அரசாங்கங்கள் பொது சுகாதார உள்கட்டமைப்புகளுக்கான நிதியை திட்டமிட்டு குறைத்துள்ளனர். இதில் நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளடங்கலாக உதவி வளங்கள் கிடைக்காதுள்ளன.
இந்த செயல்முறையானது தொடர்ச்சியான செல்வத்தை நிதிய தன்னலக்குழுவுக்கு மறுபங்கீடு செய்வதிலிருந்து பிரிக்கமுடியாதது. இதுதான் பல தசாப்தங்களாக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் தொடர்ச்சியான நிர்வாகங்களின் அடிப்படை நோக்கமாக இருந்து வருகிறது.
கடந்த வாரத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை பற்றிய செய்தி ஊடகங்களின் கவனம் முக்கியமாக பங்குச் சந்தையில் அதன் தாக்கம் குறித்த ஊகங்களில் கவனம் செலுத்தியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊடகங்கள் ட்ரம்ப் நிர்வாகத்தினை பின்தொடர்ந்து, மனித வாழ்க்கையை விட பங்கு மதிப்புகளில் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளன.
இந்த மனிதாபிமானமற்ற பார்வை திங்களன்று வோல் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்கள் அமெரிக்கா முழுவதும் தொற்றுநோய் பரவுவது குறித்து கடுமையான எச்சரிக்கைகளை பற்றி எவ்வித அக்கறையுமற்று எடுத்துக்கொண்டதில் வெளிப்பட்டது. உடனடி மத்திய வட்டி வீதக் குறைப்பு பற்றிய அறிவிப்பு டோவ் ஜோன்ஸ் சராசரியாக 1,000 புள்ளிகள் அதிகரிக்க செய்தது.
2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர், ஆளும் உயரடுக்கினர் வட்டி வீதக் குறைப்புகளின் மூலம் பங்கு பெறுமதி அதிகரிப்புக்கூடாக வெற்றிகரமாக சமாளி முடியாத எந்தவொரு பிரச்சினையும் உலகில் இல்லை என நம்பிக்கை கொள்கின்றனர். முதலாளி வர்க்கம் அமெரிக்க வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் நிதிய தன்னலக்குழுவின் செல்வத்தினாலும் மற்றும் சந்தைகளில் நிகழ்வுகளால் ஏற்படுத்தப்படும் தாக்கம் ஆகியவற்றை கொண்டே அவற்றை மதிப்பீடு செய்கின்றது.
கடந்த மாதத்தில் கொரோனா வைரஸுக்கு அளித்த பதில் வேறுபட்டதல்ல. உயரடுக்கின் அணுகுமுறையை பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: “மில்லியன் கணக்கான மக்கள் இறக்கக்கூடும், ஆனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைப்பதால் Dow மற்றும் Nasdaq உயர்கின்றன. ஆகா!”.
செவ்வாயன்று தான், பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் 50 அடிப்படை புள்ளி அவசரகால வெட்டுக்கு சந்தை பதிலளிக்கத் தவறியபோது, ஊடக பண்டிதர்களின் மனநிலை இருட்டடைந்தது. மேலும் இது ஏராளமான மக்கள் இறக்கக்கூடும் என்பதை அவர்கள் உணர்ந்ததால் அல்ல, ஆனால் சுகாதார நெருக்கடி முதலீட்டு பங்குஇலாபங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வர்ணனையாளர்கள் சந்தேகிக்கத் தொடங்கினர்.
இந்த நெருக்கடி அமெரிக்க முதலாளித்துவ அமைப்பு எவ்வளவு அழுகியிருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டுகிறது. தொற்றுநோய்க்கு பதிலளிக்கவும், நோயைக் கட்டுப்படுத்தவும், பயனுள்ள மருத்துவ சிகிச்சையை ஒழுங்கமைக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் தேவையான அனைத்து வளங்களையும் திரட்ட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த நெருக்கடிக்கு விடை காண மருத்துவ பதில் மட்டுமல்ல, அரசியல் பதிலும் தேவை.
கொரோனா வைரஸ் தொற்று என்பது, புவி வெப்பமடைதலுக்கான குற்றம்மிக்க அலட்சியம், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, புவோர்ட்டோ ரிக்கோவில் ஏற்பட்ட பூகம்பம் ஆகிய ஒரு சில எடுத்துக்காட்டுகளை போன்று சமூக நெருக்கடிகளுக்கு முதலாளித்துவத்தால் தயாராகவும் மற்றும் திறம்பட பதிலளிக்க இயலாமலிருப்பதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாகும்.
மனிதகுலத்தின் எதிர்காலம் முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டி மற்றும் அதனை சோசலிசத்தால் பிரதியீடு செய்யவதிலேயே தங்கியுள்ளது.