எட்வார்ட் பிலிப் மற்றும் அனியேஸ் புஸன் மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரான்சில் கோவிட்-19 க்கான அரசாங்கத்தின் தயார் நிலை இல்லாதது குறித்து முன்னாள் சுகாதார மந்திரி அனியேஸ் புஸன் இன் அம்பலப்படுத்தலுக்கு பின்னர் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது. சுகாதார ஊழியர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றுவதற்கும் அதன் சொந்த செயலற்ற தன்மையை நியாயப்படுத்துவதற்கும் கோவிட்-19 முன்வைத்த அச்சுறுத்தலை பல வாரங்களாக அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டது. இப்போது, நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் அடங்கிய குழு "அரச மூடிமறைப்புக்காக" புஸன் மற்றும் பிரதமர் எட்வார்ட் பிலிப் ஆகியோருக்கு எதிராக குடியரசு நீதிமன்றத்தின் புகார் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான அரசாங்கங்களின் பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னர், சுகாதார அமைப்பு ஒரு பேரழிவு சூழ்நிலையில் விடப்பட்டுள்ளது என்பதை தொற்றுநோய் ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டியுள்ளது. இப்போது மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, பெரிய கிழக்கு மாநிலம் போன்ற சில பகுதிகளில் மருத்துவமனைகளில் இடங்களேயில்லை. மக்ரோன் அரசாங்கம் பொருளாதார நலன்களைவிட சுகாதார நலன்களை முன்னிலைப்படுத்தி செயல்படுட்டிருந்தால் இந்த நெருக்கடிகளை தவிர்த்திருக்க முடியும்.

மிகத்தைரியமாக, மருத்துவ ஊழியர்கள் தங்களைத் தாங்களே சிறந்த முறையில் ஏற்பாடு செய்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் வருகையை எதிர்கொண்டிருக்கிறபோதும், நோயாளிகளுக்கு போதுமான முறையில் சிகிச்சையளிக்க தேவையான மருத்துவ சாதனங்கள் இல்லாமல் மிகுந்த துயரமான நிலையில் விடப்பட்டுள்ளனர். பாதுகாப்பு முகமூடி இல்லாததால் மருத்துவமனைகளில் பல மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டுளதுடன், சினமடைந்துள்ளனர். மார்ச் 22 அன்று, l’Oise மாநிலத்தில் ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவர் தன்னுடைய சகாக்களுக்கு உதவ முன்வந்து செயல்பட்டிருந்தார், ஆனால் அவர் அணிந்துகொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், நோய் தொற்றி இறந்துள்ளார்.

சுகாதாரப் பணியாளர்கள் மக்ரோன் அரசாங்கத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்கிறார்கள். புகாரைத் தாக்கல் செய்த டாக்டர்களின் கூட்டு வழக்கறிஞரான Fabrice Di Vizio பாரிசியன் பத்திரிக்கைக்கு சுட்டிக்காட்டியபடி: "பிப்ரவரி மாத இறுதியில் முகமூடிகள் வர இருக்கின்றன என அரசாங்கம் அவர்களிடம் கூறியது, அவர்களும் அதை நம்பினர். மார்ச் மாத தொடக்கத்தில், முகமூடிகள் வரப்போவதில்லை என அவர்கள் புரிந்துகொண்டபோது, அவர்களுக்கு (அரசாங்கத்திற்கு) அவை தேவையில்லை என்று நாங்கள் சொல்ல ஆரம்பித்தோம்இது உண்மையில் இயலாமையையும் பொய்யையும் ஒப்புக்கொள்வதாகும், உண்மை என்னவென்றால், எமது சேமிப்பு இடத்தில் அவை முற்றாக தீர்ந்துபோய்விட்டன!

பின்னர் மருத்துவர்களின் அணி, மார்ச் 4 அன்று நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கினை பதிவுசெய்தது. முகமூடிகளை திறம்பட வழங்குவதாக அரசாங்கம் இந்த முறை உறுதியளிக்கிறது. ஆனால் இவை மிக மிக சொற்பமானவையாக வந்தன. வழக்கறிஞர் மேலும் கூறினார் “பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுதான் இந்த மூகமூடிகளை உற்பத்தி செய்கிறது என்பது தெரிய வந்ததும் மருத்துவ ஊழியர்களிடம் மிகப்பெரும் கோபத்தினை தூண்டியது. ஏனெனில் பிரெஞ்சு அரசுக்கு முன்னரே பிரிட்டிஷ் சுகாதார அமைச்சு அந்தநிறுவனத்திடம் மூகமூடி செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றுவிட்டிருந்தது!”

ஜனவரி மாதம் கொரோனா வைரஸால் உருவாகியிருக்கும் சுகாதார அவசரநிலை குறித்து பிரதமர் பிலிப்புக்கு அறிவித்ததாகவும், அன்றிலிருந்து நோய்வாய்ப்படுவோம் என்ற அச்சத்தை மறைக்க ஒரு "முகமூடி அணிந்து" விளையாடியதாகவும் லு மொன்ட் பத்திரிக்கையிடம் ஒப்புக்கொண்ட புஸனின் ஒப்புதல் வாக்குமூலம்தான், மருத்துவர் அணிக்கு செயல்பட ஊக்கமளித்தது.

குழுவின் வழக்கறிஞரைப் பொறுத்தவரை, “பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ள தகவல்களின் அளவை அறிந்து கொள்ளவும், இந்த சுகாதாரப் படுதோல்வியில் ஒவ்வொருவரின் பொறுப்புகளையும் தீர்மானிக்கவும் இப்போது ஒரு குற்றவியல் விசாரணை அவசியம்". வக்கீல் குறிப்பாக, "அமைச்சர்களின்சேவையகங்கள் அனைத்தும் தேடுதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று கோருகிறார்.

புகார் தண்டனைச் சட்டத்தின் 223-7 வது பிரிவின் பிராகாரம், “எவரேனும் தானாக முன்வந்து, அவருக்கோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கோ அல்லாமல் அனைவருக்கும் ஆபத்தை உருவாக்கக்கூடிய ஒரு பேரழிவை எதிர்த்துப் போராடுவதை சாத்தியமாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்தோ அல்லது முன்முயற்சி எடுப்பதிலிருந்தோ தவிர்க்கமுற்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 30,000 யூரோ அபராதமும் விதிக்கப்படும்”.

உண்மையில், பிப்ரவரி 23 ஆம் தேதி வரை முகமூடிகளுக்கு விண்ணப்பம் கொடுக்கப்படவில்லை, அதன் பின்னர்தான், அனியஸ் புஸனுக்கு பதிலாக அமைச்சு பதவிக்கு வந்த ஒலிவியே வேரன் பத்து மில்லியன் FFP2 முகமூடிகளுக்கான விண்ணப்பத்தை கொடூத்துள்ளார், இது 3 முதல் 4 வாரங்களுக்கு பின்னர்தான் கிடைக்கும். பிரான்சிற்கு முன்னர் பிரிட்டிஷ் அதிகாரிகளின் முகமூடிகளுக்கான உத்தரவைக் கண்ட மிகப்பெரிய பிரெஞ்சு முகமூடி உற்பத்தியாளர்களில் ஒருவரான நிக்கோலா பிரில்லட், "முகமூடிக்கான பெரும் பிரச்சினை இருக்கப் போகிறது என்று நாங்கள் பிரெஞ்சு அதிகாரிகளிடம் ஆறு வாரங்களாக கூறி வருகிறோம்" என்று உறுதியளித்தார்.

சமீபத்திய நாட்களில், FFP2 முகமூடிகளின் பற்றாக்குறை பத்து ஆண்டுகளாக சுகாதார அமைச்சின் மூலோபாய இருப்புகளில் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்பதன் மூலம் விளக்கப்படுகிறது என்பது பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டில், ஒரு செனட் அறிக்கையின்படி, FFP2 முகமூடிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 579,691,625 அலகுகளாக எட்டியிருந்தன. இவற்றில், 463 மில்லியன் மூலோபாய இருப்பிலும், 116 மில்லியன் சுகாதார நிறுவனங்களின் இருப்பிலும் இருந்து வந்தன. 2016 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்ட சுகாதார அவசரநிலைகளுக்கான தயாரிப்பு மற்றும் பதிலளிப்புக்கான ஸ்தாபனமான EPRUS இலிருந்து இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டிருந்தது.

2005 ஆம் ஆண்டில் FFP2 முகமூடிகளை தயாரிக்க ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன, ஆனால் 2011 ஆம் ஆண்டில் சார்க்கோசியின் கீழ் சுகாதார அமைச்சர் சேவியே பெர்த்திரோன் FFP2 முகமூடிகளை இருப்பில் சேமிப்பதை நிறுத்த முடிவு செய்தார், சில சந்தர்ப்பங்களில் இயந்திரங்களை முழுமையாக நிறுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டது, இருந்தும் EPRUS என்பது சுகாதார வரவு-செலவுத் திட்டத்தில் ஒரு துளி மட்டுமே.

இந்த சுகாதார ஊழல், மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் அனைத்து ஸ்தாபக அரசியல் கட்சிகளின் அரசியல் மற்றும் குற்றவியல் பொறுப்பை எடுத்துக்காட்டுகிறது. 2008 ஆம் ஆண்டில் நிதி அமைப்பைக் காப்பாற்ற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களாலும் முன்னெடுக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை விரைவுபடுத்த உதவியது. பிரான்சிலும் ஏனைய இடங்களிலும், மருத்துவமனை கட்டமைப்புகள் மோசமாக பாதிக்கப்பட்டன, இந்தக் காரணிதான், தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே, நாம் தற்போது முகம்கொடுத்து வரும் மருத்துவமனைகள் நிறைந்து வழிவதை விளங்கப்படுத்துகிறது.

ஜேர்மன் சான்ஸ்லர் மேர்க்கெல் சுட்டிக்காட்டியபடி, ஜேர்மனிய மக்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கருதுகிறார், ஆனால் மருத்துவமனைகள் மீது "அதிக சுமை கூட்டக்கூடாது". பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட செயலற்ற கொள்கைகளால் கோவிட்-19 தொற்று நோய் பல்லாயிரக்கணக்கான மக்களை அச்சுறுத்துவதுடன், நூறாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும்.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் குடியரசின் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதில் நம்பிக்கைவைக்க கூடாது. 1980 கள் மற்றும் 1990 களில் இரத்த விநியோக ஊழலின் போது, இந்த நீதிமன்றத்தில் கடைசியாக மேன்முறையீடு செய்யப்பட்டதை ஒருவர் நினைவில் கொள்வது உபயோகமானது. தேசிய இரத்த மாற்றத்திற்கான மையம் (CNTS) 1984 முதல் 1985 இறுதி வரை இரத்தப்போக்கு (hémophiles) கட்டுப்படாத நோயுள்ளவர்களுக்கு, இரத்த மாற்றம் செய்ய பாவிக்கப்பட்ட சில பொருட்கள், எய்ட்ஸ் வைரசின் தொற்றுக்கு உள்ளாகியிருந்தது தெரிந்தே விநியோகித்திருந்தது.

சுகாதார பாதுகாப்பு பரிசீலனைகள் பொருளாதாரக் நலன்களுக்கு அடிபணிந்திருப்பதாக சுகாதார நிர்வாகத்தின் பொது ஆய்வாளர் ஒரு அறிக்கையில் முடிவு செய்தார். சோசலிச கட்சியின் முன்னாள் பிரதமர் Laurent Fabius மற்றும் முன்னாள் சோசலிஸ்ட் மந்திரிகள் Georgina Dufoix மற்றும் Edmond Hervé ஆகியோர் "படுகொலை" தொடர்பாக குடியரசின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். இறுதியாக அவர்கள் ஏற்கனவே சட்டங்களில் மறு திருத்தம் செய்ததனால், Laurent Fabius மற்றும் முன்னாள் சோசலிஸ்ட் மந்திரிகள் Georgina Dufoix மற்றும் Edmond Hervé ஆகியோர் குற்றமற்றவர்கள் என கருதப்பட்டது.

இன்று, முதலாளித்துவத்தின் அரசியல் இன்னும் குற்றவியலதனமானது. இந்த தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், தமது அரசியல் குற்றங்களை மறுக்கமுடியாத வகையில் எடுத்துக்காட்டிய ஆளும் வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தை பறிப்பதற்கு போராடுவதும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பாகும்.

Loading