மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பின்வரும் உரை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தால் மே 2 அன்று நடத்தப்பட்ட 2020 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியில் டோம் பீட்டர்ஸ் வழங்கியதாகும். பீட்டர்ஸ் நியூசிலாந்து சோசலிச சமத்துவக் குழுவின் ஒரு முன்னணி உறுப்பினராவர்.
ட்ரம்ப் நிர்வாகம், பிரிட்டன் மற்றும் பிரேசில் மற்றும் பிற அரசாங்கங்களுக்கு பேதப்பட்ட விதத்தில் பெருந்தொற்றுக்கான ஒரு மனிதாபிமானமிக்க பதிலிறுப்பை வழங்கியதற்கான ஒரு உதாரணமாக பெருநிறுவன ஊடகங்கள் நியூசிலாந்தைக் கொண்டாடுகின்றன.
பிரதமர் ஜசிந்தா ஆர்டென் சமீபத்தில் The Atlantic இல் “பூமியின் மிகத் திறம்பட்ட தலைவர்” என்று போற்றப்பட்டார். “உதயமாகிறார், Saint Jacinda, நமது சிரமக் காலத்திற்கான ஒரு தலைவர்” என்ற தலைப்பில் பைனான்சியல் டைம்ஸ் ஒரு பத்தியை பிரசுரித்தது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் வைரசை எதிர்த்துப் போராடுகின்ற தமது மூலோபாயத்தைக் கொண்டு “ஜனநாயகத்தில் நம்பிக்கையை மீட்சி செய்து கொண்டிருக்கின்றன” என்றது நியூயோர்க் டைம்ஸ்.
ஒரு பெண் தலைவர் என்பதால் ஆர்டென் இயல்பாகவே அதிக “அனுதாபம்” உடையவர் என்றும், ஆகவே இன்னும் நிறைய பெண் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்ற போது தான் உலகம் காப்பாற்றப்பட முடியும் என்றும் ஏராளமான கட்டுரைகள் திட்டவட்டம் செய்கின்றன.
இந்த பரப்புரையைக் கொண்டு யாரும் ஏமாந்து விடக் கூடாது. நியூசிலாந்தில் 1,479 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 19 மரணங்கள் நடந்துள்ளன. இது பல நாடுகளில் இருப்பதை விடவும் குறைவானது என்றபோதும், இந்த வைரஸ் இன்னும் ஒழிக்கப்பட்டு விடவில்லை, புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்வது நாள்தோறும் செய்தியாகிக் கொண்டு தான் இருக்கிறது.
கடந்த செவ்வாயன்று, அதாவது விஞ்ஞான ஆராச்சியாளர்கள் அறிவுறுத்தியதற்கு ஒரு வாரத்திற்கும் அதிக முன்னதாகவே அரசாங்கம் அதன் ஊரடங்கு நடவடிக்கைகளைத் தளர்த்தியது, பள்ளிகள் மற்றும் பல வணிகங்களும் மீண்டும் திறக்க அனுமதித்தது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் குழந்தைப்பராமரிப்புப் பணியாளர்கள் சுமார் 45,000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்றின் மூலமாக இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளிப்பட்டது.
ஊரடங்கை நீட்டிப்பது வைரஸை ஒழிக்க உதவலாம், ஆயினும் அத்தகைய நடவடிக்கைகள் “பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று ஆர்டென் தெரிவித்தார், பொருளாதாரப் பாதிப்பு என்பதில் அவர் அர்த்தப்படுத்தியது பெருநிறுவன இலாபங்களிலான பாதிப்பை ஆகும். மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் கொண்டு என்ன விலைகொடுத்தாலும் சரி, தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியாக வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்ற மற்ற பல நாடுகளது தலைவர்களுக்கு, இந்த முடிவு ஒரு உதாரணமாகப் பயன்படுத்தப்பட இருப்பதாகும்.
நியூசிலாந்தின் பொது சுகாதார அமைப்பு பல தசாப்தங்களாக நிதியாதாரம் வற்றியதாக இருந்து வந்திருக்கிறது, ஒரு பெருந்தொற்றுக்கு முற்றிலும் தயாரிப்பற்ற நிலையில் அது இருந்தது. 2018 இல், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் ஒரு தேசியளவிலான வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, ஆர்டென், மருத்துவமனைகளது நெருக்கடியைச் சரிசெய்ய அங்கே பணமில்லை என்று வலியுறுத்தினார். பாதுகாப்பற்ற மட்டத்திற்கு பணியாளர் எண்ணிக்கையைப் பராமரித்த ஒரு விலைபோன ஒப்பந்தத்தை தொழிற்சங்க அதிகாரத்துவம் முன்தள்ளியது.
தடுக்கப்படத்தக்க நோய்கள், குறிப்பாக தொழிலாள வர்க்க, மவோரி (Maori) மற்றும் பசிபிக் தீவு சமுதாயங்கள் மத்தியில் மிகப்பரவலாய் இருக்கின்றன. சென்ற ஆண்டில், அரசாங்கம் நாசகரமான தட்டம்மை வெடிப்பைத் தடுத்து நிறுத்தத் தவறியதில், அது வறுமைப்பட்ட ஒரு பசிபிக் நாடும் நியூசிலாந்தின் முன்னாள் காலனியுமான சமோவுக்குப் பரவி, அங்கு 83 பேரைக் கொன்றது.
சுகாதார அமைப்புமுறைக்கு முறையான நிதியாதாரமளிக்க மறுத்த அதேவேளையில், அரசாங்கம் பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பில் 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வணிக மானியங்கள், பிணையெடுப்புகள் மற்றும் வரிவெட்டுகளாகக் கையளித்துள்ளது. நிதியமைப்பு முறையை முட்டுக் கொடுப்பதற்கு இன்னும் அதிகமான பில்லியன்கள் பணத்தை இறைப்பதற்கு ரிசர்வ் வங்கி வாக்குறுதியளித்துள்ளது.
அரசினால் குவிக்கப்படும் கடன்களுக்கு நியூசிலாந்து மக்களின் பல “தலைமுறைகள்” விலைசெலுத்த வேண்டியிருக்கும் என்று நிதி அமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் கூறுகிறார். இந்தக் கணக்கில் பெரும் செல்வந்தர்கள் வரமாட்டார்கள், அவர்களது செல்வம் தொடர்ந்து பெருகிச் செல்லும் என்பதே உண்மை.
தொழிலாள வர்க்க சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கு வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான ஒரு பெரும் தாக்குதலை அரசாங்கமும் பெருவணிகங்களும் தொடங்கியிருக்கின்றன. வேலைவாய்ப்பின்மை 10 சதவீதத்தைத் தாண்டும், சொல்லப் போனால் பெருமந்தநிலைக்குப் பின்னர் காணாத ஒரு மட்டமான 30 சதவீதத்தை எட்டும் என்று பொருளாதார அறிஞர்கள் கணிக்கின்றனர்.
இந்த ஆண்டு தொடங்கியது முதலாக பத்தாயிரக்கணக்கான மக்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். எட்டு தொழிலாளர்களுக்கு ஒருவர் வேலைசெய்து வந்திருக்கக் கூடிய சுற்றுலாத் துறை உருக்குலைந்திருக்கிறது. பெரும் நிறுவனங்கள் 20 சதவீதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஊதியங்களை வெட்டியிருக்கின்றன, பல்கலைக்கழகங்களும் இதனைச் செய்வதற்கு மிரட்டிக் கொண்டிருக்கின்றன.
ஐந்து மில்லியன் பேர் வாழுகின்ற ஒரு நாட்டில், 600,000க்கும் அதிகமானோர் வறுமையில் வாழ்கின்றனர், அந்த எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடங்கியது முதலாக, உணவுக்கு வழியில்லாதவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து இரட்டிப்பாகி 20 சதவீதமாக ஆகியிருப்பதாக ஒரு தொண்டு நிறுவனம் மதிப்பிடுகிறது. உணவு விநியோகத் தேவையில் பாரிய 400 சதவீத அதிகரிப்பு உண்டாகியிருப்பதாக உணவு வங்கிகள் தெரிவிக்கின்றன.
ஆர்டென் அரசாங்கத்திடம் --தொழிற்கட்சி, பசுமைக் கட்சி மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத நியூசிலாந்து முதலில் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டணி-- பாரிய வேலைவாய்ப்பின்மை, வறுமை, தேசியவாதம் மற்றும் இராணுவவாதம் --அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஒரு வலிமையான கூட்டணியும் இதில் அடங்கும்-- தவிர்த்த வேறெந்த தீர்வும் இல்லை.
Christchurch இன் இரண்டு மசூதிகளில் ஒரு பாசிச பயங்கரவாதி 51 பேரை படுகொலை செய்த ஒரு ஆண்டிற்குப் பின்னர், அரசாங்க அமைச்சர்கள் தொடர்ந்தும் சமூகப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டினரைப் பலிகடாக்களாக்கி, அதிவலதுகளின் வளர்ச்சிக்கு உரம்போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆயினும், 1930களில் போலவே, சமூகப் பேரிடரானது முதலாளித்துவத்தின் மீதான பிரமைகளை அழித்து மில்லியன் கணக்கான மக்களை இடது நோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறது. எதிர்வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டங்களுக்கு அவசியமான சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவதே இன்றியமையாத கடமையாகும்.
நியூசிலாந்தில் இதற்கு, தொழிற் கட்சி, பசுமைக் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தை ஆதரித்து ஜசிந்தா ஆர்டென் பெருமைபாடுவதில் கைகோர்க்கின்ற நடுத்தர வர்க்க போலி-இடது குழுக்கள் ஆகியவற்றிடம் இருந்தான ஒரு முழுமையான அரசியல் முறிவு அவசியமாயிருக்கிறது.
உதாரணத்திற்கு, சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, ஆர்டென் ஒரு “ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை” என்றும் அவருக்குக் கிடைக்கின்ற பெருமைக்குத் தகுதியானவர் என்றும் பேசுகிறது. Unite மற்றும் பிற தொழிற்சங்கங்களின் ஆதரவைக் கொண்ட Daily Blog, பிரதமரின் சம்பளத்தை இரட்டிப்பாக்க ஆலோசனையளித்திருக்கிறது. அந்த வலைப்பதிவு குடியேற்றங்களிலான குறைப்புகளுக்கும் இராணுவ விரிவாக்கத்திற்கும் கோரிக்கை வைக்கிறது; பெருந்தொற்றுக்கு சீனா மீது பழிபோடும் அமெரிக்க பிரச்சாரத்தை ஒப்பிக்கிறது.
ICFI இன் நியூசிலாந்து ஆதரவாளர்கள் குழுவான சோசலிச சமத்துவக் குழு மட்டுமே சோசலிசத்தின் நிலைப்பாட்டில் இருந்து ஆர்டென் அரசாங்கத்தை எதிர்க்கின்ற ஒரேயொரு போக்காகும். தேசியவாதத்தின் அத்தனை வடிவங்களையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை இனம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த முனைகின்ற அடையாள அரசியலையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.
இலாப நோக்கு அமைப்புமுறையை ஒழிப்பதற்காக நியூசிலாந்தின் உழைக்கும் மக்களை --மவோரி, ஐரோப்பியர்கள், பசிபிக் மற்றும் ஆசிய குடியேற்ற மக்கள் உள்ளிட-- சர்வதேசத் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துவதற்காகப் போராடுவதே இப்போதைய நெருக்கடிக்கான ஒரேயொரு தீர்வாகும். இந்த வரலாற்றுப் போராட்டத்தில் எங்களுடன் இணைவதற்கு உங்களை அழைக்கிறோம்.