மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 தொற்றுநோய்க்கு விடையிறுப்பதில் அதன் குற்றகரமான அலட்சியத்தின் மீது பரந்தளவில் பொதுமக்கள் கோபத்தை எதிர்கொண்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம், அதை சீனா மீது பழிசுமத்துவதை நோக்கி திருப்பி விடுவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் பொய்களின் அதன் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது.
CNN அறிவித்தவாறு, ட்ரம்பும், வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் லாரி குட்லொவ்வும் (Larry Kudlow) ஏனைய உயர்மட்ட அதிகாரிகளும், இந்த வைரஸின் அபாயங்களைக் சீனா குற்றகரமாக மூடிமறைத்தது என்று அதற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட கண்டனங்களில் பல வெளிநாட்டு கூட்டாளிகளையும் உள்ளிணைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியில் சமீபத்திய வாரங்களில் அவர்களை அழைத்து பேசி உள்ளனர்.
சீனா மீதான அமெரிக்காவின் பழிசுமத்தலுக்கும் மற்றும் பெய்ஜிங்கிற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதற்கான அதன் தயாரிப்புகளுக்கும் டஜன் கணக்கான வெளிநாட்டு தலைவர்களின் ஆதரவைப் பெறும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் அவர்களுடன் ட்ரம்ப் நேரடியாக பேசியிருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
சீனப் பொருட்கள் மீது கூடுதல் இறக்குமதி வரிவிதிப்புகள், அதன் தொலைதொடர்பு பெருநிறுவனங்களை இன்னும் கூடுதலாக ஒடுக்குவது, அமெரிக்க நீதிமன்றங்களில் தண்டிக்கத்தக்க சட்டபூர்வ நடவடிக்கைக்கு வழி வகுக்கும் விதத்தில் அதன் இறையாண்மை தடைக்காப்பை நீக்குவது ஆகியவையும் வெள்ளை மாளிகையின் விவாதத்தின் கீழ் உள்ள முறைமைகளில் உள்ளடங்கி உள்ளன.
அதே நேரத்தில் அமெரிக்கா அதன் இரண்டு பிரதான முனைகளில் பிரச்சாரப் போரை அதிகரித்துள்ளது. முதலாவது, இந்த கொரோனா வைரஸின் கடுமையைக் குறித்து சீனா ஆரம்பத்தில் போதுமானளவுக்கு வெளிப்படையாக இல்லை என்றும், இரண்டாவதாக, கோவிட்-19 வூஹானின் இறைச்சி விற்கும் சந்தையிலிருந்து அல்ல சீனாவின் வூஹான் கிருமியியல் ஆய்வகத்தில் தோற்றுவிக்கப்பட்டது என்ற ஆணவமான பொய்யையும் வாதிட்டு வருகிறது.
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தயாரித்த ஓர் அறிக்கை, இதன் விபரங்கள் இவ்வாரம் அமெரிக்க ஊடகங்களில் கசியவிடப்பட்ட நிலையில், சீன அரசாங்கம் வேண்டுமென்றே அந்த வைரஸ் முன்நிறுத்திய அபாயங்களை மறைத்தது என்றும் அதேவேளையில் இறக்குமதிகளைக் கையிருப்பில் வைத்து கொண்டு மருந்து பொருள் ஏற்றுமதிகளைக் குறைத்தது என்றும் வாதிடுகிறது.
அந்த அறிக்கை அறிவித்தது: “கோவிட்-19 ஒரு தொற்றுநோய் என்று அது ஜனவரியில் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) அறிவிப்பதற்கு முன்னரே சீனா அதன் மருந்து பொருள் ஏற்றுமதிகளைக் குறைத்திருக்கக் கூடும்.” “முகக்கவசங்கள் மற்றும் ஏனைய மருந்து பொருட்கள் மீது அது ஒருபோதும் ஏற்றுமதி தடை விதிக்கவில்லை என்று சீனா பகிரங்கமாக மறுப்பதன் மூலம் அதன் வர்த்தக நடவடிக்கையை வேண்டுமென்றே மூடிமறைத்தது,” என்றும் அது வாதிட்டது.
ட்ரம்ப் நிர்வாகமும் அதன் அரசு எந்திரமும் தெளிவாக துரும்பை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளன. அந்த அறிக்கையே ஒப்புக் கொண்டதைப் போல, அதன் கண்டுபிடிப்புகள் "நடுத்தரமான கருத்துக்களை" மட்டுமே மதிப்பிட்டுள்ளது. பகிரங்கமாக வெளியிடப்படாத அந்த ஆவணம், அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்திருந்தாலும், சீன அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தீங்கு விளைவிக்கும் ஏதேனும் இல்லை என்ற முடிவுக்கு வரவில்லை.
ஒரு புதிய தொற்று ஏற்படுத்தக்கூடிய மற்றும் உயிராபத்தானதாக இருக்கக்கூடிய வைரஸ் குறித்தும் அதன் தன்மைகளைச் சீன ஆணையங்கள் துரிதமாக அடையாளம் காண முயன்று வருவதாகவும், உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச சுகாதார அமைப்புகளுக்கு உரிய நேரத்தில் சீன ஆணையங்கள் தகவல் தெரிவித்திருந்தன என்பது ஆவணங்களில் பகிரங்கமாக உள்ளன.
வூஹான் நகராட்சி சுகாதாரத்துறை ஆணையர் டிசம்பர் 31, 2019 இல் பல நிமோனியா நோயாளிகளைக் குறித்து அறிவித்தார், கோவிட்-19 ஐ ஏற்படுத்திய வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையத்திடம் சீனா ஜனவரி 3 மற்றும் ஜனவரி 7 இல் தகவல் தெரிவித்தது. சீன சுகாதார அதிகாரிகள் WHO இக்கு தகவல் வழங்கியதுடன், இந்நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரித்தனர்.
சீனா வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் வாதங்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஓர் அப்பட்டமான முயற்சியாகும். அது வைரஸ் அபாயத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தியதுடன், பரிசோதனைகளை அதிகரிக்கவோ அல்லது பல வாரங்களாக தொற்று பரவுவதைத் தடுக்க அவசியமான அதிக நடவடிக்கையை எடுக்கவோ தவறியது. அவசியமான பாதுகாப்பு துணைக்கருவிகளைக் கையிருப்பில் வைத்திருக்கவோ அல்லது அத்தியாவசிய தீவிரக் கவனிப்பு பிரிவு மற்றும் சுவாசக் கருவிகளின் கையிருப்பை அதிகரிக்கவோ எந்த முயற்சியும் செய்யப்படவில்லை, இது தான் அமெரிக்காவில் அதிகரித்தளவிலான மரண எண்ணிக்கைக்கு இட்டுச் சென்றுள்ளது.
சமீபத்திய நாட்களில், ட்ரம்பும் பொம்பியோவும் வூஹான் ஆய்வகத்தில் தான் இந்த வைரஸ் தோற்றுவிக்கப்பட்டது என்ற பெரிய பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வந்தனர். கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டது இல்லை அல்லது ஓர் ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டதில்லை, அல்லது அது காடுகளில் இருந்து பிடித்து வரப்பட்டதில்லை அல்லது ஓர் விஞ்ஞான ஆய்வகத்திலிருந்து தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ பரப்பி விடப்பட்டதில்லை என்பதற்கு மிகப் பெரியளவில் விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் இருக்கின்றன என்பதற்கு இடையிலும் அந்த பொய் கூறப்பட்டது.
ஞாயிறன்று பொம்பியோ அறிவிக்கையில், கோவிட்-19 வூஹான் கிருமியியல் பயிலகத்திலிருந்து வந்தது என்பதற்கு "அதிகளவில் ஆதாரம்" இருப்பதாக ஆணவத்துடன் அறிவித்தார். அதேநேரத்தில் அவர் எச்சரித்தார்: “அதற்கு பொறுப்பானவர்களை நாம் கணக்கில் கொண்டு வர வேண்டும் மற்றும் நமது சொந்த காலநேரத்திற்கு ஏற்ப உரிய நேரத்தில் அதை நாம் செய்வோம் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் மிகவும் தெளிவாக உள்ளார்,” என்றார்.
சீன ஆய்வகம் ஒன்றிலிருந்தே அந்த வைரஸ் தோன்றியது என்பதற்கு ஆதாரம் கிடைத்திருப்பதாக அதேநாளில் வாதிட்ட ட்ரம்ப், அந்த வெடிப்பைக் குறித்து “மிகவும் தீர்க்கமானதாக" இருக்கும் ஓர் அறிக்கையை ஒருமித்து வெளியிட இருப்பதாகவும் அறிவித்தார். “அவர்கள் தவறு இழைத்துவிட்டார்கள் என்பதே என் கருத்து. அதை அவர்கள் மூடிமறைக்க முயன்றார்கள், அவர்கள் அதை அணைத்துவிட முயன்றார்கள். அதுவொரு தீயைப் போன்றது,” என்றவர் அறிவித்தார்.
அமெரிக்காவில் அதிதீவிர-வலது வட்டாரத்தில் தோன்றிய இந்த சூழ்ச்சி தத்துவத்தை ஆதரிக்க ட்ரம்பும் சரி அல்லது பொம்பியோவும் சரி ஒரு துளி ஆதாரத்தையும் வழங்கவில்லை. வெள்ளை மாளிகையில் இட்டுக்கட்டப்பட்டு வரும் இந்த அறிக்கை சீனாவுடன் வேகமாக தீவிரமடையும் ஒரு மோதலுக்கு களம் அமைக்கும். பாரிய பேரழிவு ஆயுதங்கள் குறித்த பொய்களின் அடிப்படையில் ஈராக் மீது சட்டவிரோதமாக படையெடுப்பு நடத்துவதை நியாயப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கப்பட்ட இழிவார்ந்த அமெரிக்க ஆவணங்களை நினைவுகூர்வது அவசியமாகும்.
அதேபோல, கோவிட்-19 இன் தோற்றுவாய்களைக் குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் சார்பாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் அழைப்புகள், 2002 இல் ஈராக்கிற்குள் ஆயுத பரிசோதனையாளர்களை அனுமதிக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் இடைவிடாத கோரிக்கைகளை எதிரொலிக்கின்றன. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளைச் சீனாவுக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற வாஷிங்டனின் அழைப்புகள் அவர்களின் பொய்களைப் பலப்படுத்துவதை நோக்கமாக கொண்ட வேட்டைப் பயணம் என்பதற்கு அதிகமாக வேறொன்றுமில்லை.
அமெரிக்க உளவுத்துறை சமூகமே கூட, கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டத்திலை என்றும் அது மரபணுரீதியில் மாற்றியமைக்கப்பட்டதில்லை என்றும் மதிப்பிட்டது. அந்த வைரஸ் தற்செயலாக ஓர் ஆய்வகத்திலிருந்து வெளிப்பட்டிருக்கலாம் என்பதற்கு அமெரிக்க உளவுத்துறை இன்னமும் "ஆதாரத்தை" தூர்வாரிக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
ஆனால் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அமெரிக்காவுக்கு நெருக்கமான கூட்டாளிகள் உள்ளடங்கிய, உளவுத்தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் உயர்மட்ட Five-Eyes வலையமைப்பு இன்னும் ஒருபடி மேலே சென்று, அந்த வைரஸ் ஓர் ஆய்வகத்திலிருந்து தற்செயலாக வெளிப்பட்டிருக்கலாம் என்பதற்கு "பெரிதும் சாத்தியமில்லை" என்று அறிவித்ததுடன், அனேகமாக அது சீனச் சந்தையில் தோன்றியிருக்கலாம் என்று வலியுறுத்தியது.
இந்த Five-Eyes உளவு அமைப்புடன் பரிச்சயப்பட்ட பெயர் வெளியிட விரும்பாத ஒரு மேற்கத்திய தூதர் CNN இக்குத் தெரிவித்தார்: “அது தற்செயலாக நடந்திருக்கும் என்பதற்கு பெரிதும் வாய்ப்பில்லை என்றே நாங்கள் நினைக்கிறோம். அது பெரிதும் மனிதருக்கும் விலங்கிற்கும் இடையிலான இயல்பான தொடர்பிலிருந்து இயல்பாக இந்த மனித தொற்றாக ஏற்பட்டிருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது,” என்றார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வாதங்களை நிராகரித்துள்ள உயர்மட்ட அமெரிக்க கிருமியியல் விஞ்ஞானிகளிடம் இருந்து சில மிகவும் அதிர்ச்சியூட்டும் அறிக்கைகள் வந்துள்ளன.
திங்களன்று பிரசுரிக்கப்பட்ட National Geographic பேட்டி ஒன்றில் டாக்டர் ஆண்டனி ஃபாஸி விவரிக்கையில், “இந்த தொற்றுநோய்க்குப் பின்னால் உள்ள வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டத்தில்லை என்பதை சிறப்பார்ந்த ஆதாரம் எடுத்துக்காட்டுகிறது. இந்த [வைரஸ்] குறிப்பிட்டகாலத்தில் படிப்படியான பரிணாமம் அடைந்து, பின்னர் இயற்கையில் கலந்து ஒரு உயிரினத்தில் பரவியிருக்கலாம் என்பதை ஒவ்வொன்றும் பலமாக சுட்டிக்காட்டுகின்றன,” என்றார்.
ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான அமெரிக்க தேசிய பயிலகத்தின் இயக்குனரும், ட்ரம்பின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் ஒரு முக்கிய உறுப்பினருமான ஃபாஸி தொடர்ந்து குறிப்பிடுகையில், யாரோ ஒருவர் இந்த கொரோனா வைரஸைக் காட்டில் கண்டுபிடித்து, ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று, தற்செயலாக அதை வெளியிட்டு விட்டார் என்ற தத்துவத்தை அவர் நம்பவில்லை என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
இந்த கொரோனா வைரஸ் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் Deborah Birx உம் ட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் வாதங்களை நிராகரித்தார். ஞாயிறன்று அப்பெண்மணி CBS News க்குத் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் தற்செயலாக வெளிப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றார்.
தொற்றுநோய்க்கான அதன் விடையிறுப்பின் மீது அதிகரித்து வரும் அமெரிக்க தாக்குதல்களுக்குச் சீனா பதிலடி கொடுத்துள்ளது. செவ்வாயன்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் Geng Shuang, “அமெரிக்க அரசியல்வாதிகள்" முகத்துக்கு நேராக அப்பட்டமாக பொய்களைக் கூறி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். “இந்த தொற்றுநோயிலும், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் அவர்களின் பொறுப்பைக் குறைக்க முயற்சி செய்வது மற்றும் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்புவது, இது தான் அவர்களின் ஒரே நோக்கம்,” என்றார்.
சீனாவுக்கு எதிரான அமெரிக்க பிரச்சார போரானது அமெரிக்காவில் பத்தாயிரக் கணக்கானவர்களின் உயிரிழப்புகளுக்கு அவர்களின் சொந்த பொறுப்பை மூடிமறைக்கவும் மற்றும் அதிலிருந்து திசைதிருப்பவும் நோக்கம் கொண்டுள்ளது என்பது நிச்சயமான உண்மையாகும். ஆனால் அதேநேரத்தில் பெய்ஜிங்கை பலிக்கடா ஆக்குவது என்பது அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு தலையாய அச்சுறுத்தலாக வாஷிங்டன் கருதும் சீனாவைப் பலவீனப்படுத்த ஜனாதிபதி ஒபாமாவின் கீழ் தொடங்கப்பட்டு ட்ரம்பின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டுள்ள மோதலின் பாகமாக நடக்கிறது. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்த தொற்றுநோயிலிருந்து சீனா மிகவும் பலமாக மேலெழும் என்று அமெரிக்க மூலோபாய வட்டாரங்கள் அஞ்சுகின்றன.
ராய்டர்ஸ் செய்தியின்படி, இந்த தொற்றுநோய்க்குப் பின்னர் பெய்ஜிங் அமெரிக்கா தலைமையிலான சீன-எதிர்ப்புணர்வு அலையை முகங்கொடுக்கிறது என்று கடந்த மாதம் வெளியிடப்பட்ட சமகாலத்திய சர்வதேச உறவுகளுக்கான சீன பயிலகத்தின் (CICIR) ஓர் அறிக்கை, அதற்காக மேற்கொள்ள வேண்டிய தயாரிப்புகளுக்கு அழைப்பு விடுத்தது. மிகவும் மோசமான சூழலில், அது அவ்விரு உலகளாவிய சக்திகளுக்கு இடையிலும் ஓர் ஆயுதமேந்திய மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை அனுமானித்தது. இந்த சிந்தனைக் குழாம் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்தது என்பதுடன் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உட்பட உயர்மட்ட சீனத் தலைவர்களுக்கும் அந்த அறிக்கை வினியோகிக்கப்பட்டது.
இந்நோய் பரவலைத் தடுப்பதற்கும் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் இந்த தொற்றுநோய் சம்பந்தமாக சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதிலிருந்து வெகுதூரம் விலகி, இந்நோய் அம்பலப்படுத்தி உள்ள முதலாளித்துவத்தின் இந்த ஆழ்ந்த நெருக்கடியானது, புவிசார் அரசியல் பதட்டங்களையும், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மூலோபாய நலன்களை முன்னெடுக்க முனைகின்ற வேளையில் அதன் போர் முனைவையும் தீவிரப்படுத்தி வருகிறது.