மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பெருவாரியான மக்களது எதிர்ப்பை நிராகரித்து, ட்ரம்ப் நிர்வாகமும், பெரும்பாலான மாநில அரசாங்கங்களும், பல பில்லியன் டாலர் பெருநிறுவனங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் நிதியியல் நலன்களும் அமெரிக்க பொருளாதாரத்தை வேகமாக மீண்டும் திறந்துவிடுவதற்கான திட்டங்களை நகர்த்தி வருகின்றன.
காலத்திற்கு முந்தியே உயிராபத்தாக வேலைக்குத் திரும்புவதற்கு அழைப்புவிடுவதில் வாகனத் தொழில்துறை முன்னிலையில் உள்ளது. பாரிய அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தால் அழுத்தப்பட்டு மிச்சிகன் ஆளுநர் Gretchen Whitmer வாகன உதிரிப்பாக வினியோகஸ்தர்களின் உற்பத்தியை மீண்டும் தொடங்கவும், கருவி மற்றும் அச்சுவார்ப்பு ஆலைகளை (tool die shops) மீண்டும் திறக்கவும் இன்று அனுமதி அளித்துள்ளார். இம்மாநிலத்தில் பிரதான வாகனத்துறை நிறுவனங்கள் அடுத்த வாரம் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன.
அமெரிக்கா மற்றும் கனடா எங்கிலும் ஹோண்டா இன்று மீண்டும் உற்பத்தியைத் தொடங்கி வருகிறது. ஓஹியோ, தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, இண்டியானா, ஜோர்ஜியா மற்றும் அலபாமாவில் உள்ள ஆலைகளும் இதில் உள்ளடங்கும்.
கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom), வரவிருக்கும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறப்பதற்காக, பண்டகச்சாலைகள் (warehouse) மற்றும் விநியோக மையங்களுடன் (logistic facilities) சேர்ந்து, உற்பத்தி நிறுவனங்களையும் அனுமதித்துள்ளார்.
சிகை அலங்கார மையங்கள் (salons) மற்றும் முடித்திருத்துமிடங்கள் உட்பட நுகர்வோர் சில்லறை சேவைகளைப் புளோரிடா, டெக்ஸாஸ் மற்றும் இன்னும் எண்ணற்ற ஏனைய மாநிலங்களும் திறந்து விட்டுள்ளன, அல்லது இன்னும் ஒருசில நாட்களில் திறந்து விட உள்ளன. மிசோரி எல்லா வணிகங்களையும் திறந்துவிட அனுமதி அளித்துள்ளதுடன், பொதுமக்களுக்கான இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதிக்க உள்ளது.
நடைமுறையளவில், இந்த தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் அமெரிக்காவுக்குள் ஏறத்தாழ முற்றிலுமாக பொறிந்து போயுள்ளன. ட்ரம்ப் நிர்வாகம் நடைமுறையளவில் "சமூக நோய் எதிர்ப்புசக்தியை" (herd immunity) உண்டாக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது, இதன் விளைவாக, இந்த தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே தவிர்க்கப்படக்கூடிய பத்தாயிரக் கணக்கானவர்களின் மரணங்கள் —நூறாயிரக் கணக்கானவர்களின் மரணங்களாகவும் இருக்கலாம்— வரவிருக்கும் மாதங்களில் ஏற்படலாம்.
ஆனால் உலக சுகாதார அமைப்பின் (WHO) செயல்பாடுகளுக்கான அனைத்து அமெரிக்க ஆதரவையும் ஏற்கனவே திரும்ப பெற்றுள்ள ட்ரம்ப் நிர்வாகம், நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (Center for Disease Control - CDC) முயற்சிகளை உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு கோரி வரும் பெருநிறுவனங்கள் மீதுள்ள மிதமான கட்டுப்பாடுகளுக்கு அடிபணிய செய்து வருகிறது.
இந்த தொற்றுநோய் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து அதிகரித்து வருகின்ற நிலையில், ஆலைகளும் ஏனைய வேலையிடங்களும் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த வாரயிறுதியளவில், அமெரிக்காவில் கோவிட்-19 உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 80,000 ஐ கடந்தது. மே மாதத்தின் முதல் 10 நாட்களின் போது, இந்த மரண எண்ணிக்கை 15,000 க்கும் அதிகமாக அதிகரித்தது. அனைத்திற்கும் மேலாக, இந்த வைரஸ் மக்கள்தொகை முழுவதிலும் பரவி வருகின்ற நிலையில், புதிய அறிகுறிகளுடன் இந்நோய் பாதிக்கப்படுபவர்களின் அளவை விரிவாக்கி வருகிறது.
மார்ச் மற்றும் ஏப்ரல் நெடுகிலும் மனிதர்களின் சுவாச மண்டலத்தைத் தாக்கும் கோவிட்-19 ஐ எதிர்த்து போராடி வந்த மருத்துவர்கள், சமீபத்திய வாரங்களில், இந்த வைரஸ் சிறுநீரகம், மூளை, இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் தசைகளையும் தாக்கி வருவதாக கண்டறிந்துள்ளனர்.
இளம் குழந்தைகளிடையே உயிராபத்தான நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவது தான் மிகவும் அச்சுறுத்தும் நிகழ்வாக உள்ளது. இவர்களின் அறிகுறிகள் நிச்சயமாக கோவிட்-19 வைரஸ் உடன் தொடர்புடைய கவாசகி (Kawasaki) நோய்க்கு ஒத்திருக்கின்றன. குழந்தைகளிடையே இரண்டு மற்றும் நான்கு வாரங்களுக்கு இடையே நோய் முதிர்வடைவதாக தொற்றுநோய் நிபுணர்கள் அறிவிக்கின்றனர். அதாவது இதன் அர்த்தம் ஏப்ரல் மாதம் தொற்றுக்கு உள்ளான குழந்தைகள் வரவிருக்கும் வாரங்களில் தீவிரமாக பாதிக்கப்படலாம்.
இளம் குழுந்தைகளுக்கு இந்த தொற்றுநோயால் அச்சுறுத்தல் இல்லை என்று உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் பெற்றோர்கள் இந்த புதிய அபாயத்தால் ஆழமாக தொந்தரவுக்கு உள்ளாவார்கள். தங்களின் வேலைகளுக்குத் திரும்ப நிர்பந்திக்கப்பட்டு வரும் தொழிலாளர்கள், வேலையிடத்தில் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் பயங்கரமான விளைவுகளோடு அவர்களே அவர்களின் குழந்தைகளுக்கு நோயை எடுத்துச் செல்லக்கூடிய நிஜமான சாத்தியக்கூறை இப்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மக்களின் கதியைக் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்தின் பொறுப்பற்ற குற்றகரமான அலட்சியத்தின் அளவு, வெள்ளை மாளிகையின் மேற்கு பிரிவு எங்கிலும் இந்த வைரஸ் தாண்டவமாடுகிறது என்ற உண்மையால் எடுத்துக்காட்டப்படுகிறது.
ட்ரம்பின் தனிப்பட்ட உதவியாளருக்கே நோய் ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் பத்திரிகையாளர் தொடர்பு செயலரும் மற்றும் ட்ரம்பின் பிரதான ஆலோசகர்களில் ஒருவரான பாசிசவாத ஸ்டீபன் மில்லரின் மனைவியுமான கேத்தி மில்லருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் மூன்று உயர்மட்ட அதிகாரிகள், டாக்டர் ஆண்டனி ஃபாஸி, டாக்டர் ரோபர்ட் ஆர். ரெட்போர்ட் மற்றும் டாக்டர் ஸ்டீபன் ஹன் ஆகியோர் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததற்காக இப்போது தம்மைத்தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அவர் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம் என்று அறிந்த போது ட்ரம்பே கோபத்துடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக செய்திகள் உள்ளன. வாஷிங்டன் போஸ்ட் தகவல்படி, "திருமதி. மில்லருக்கு நோய்தொற்று ஏற்பட்டிருப்படிருப்பதை அறிந்து வெறுப்படைந்த [ட்ரம்ப்], தனக்கு அருகில் வருபவர்கள் மீது அதிகமாக எரிந்து விழுந்தார்...”
போஸ்ட் மேலும் எழுதுகிறது, “நோய்தொற்று ஏற்பட்ட இரண்டு பணியாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வெள்ளை மாளிகை இந்த வைரஸை எதிர்த்து போராடும் நடைமுறைகளை அதிகரிக்க செய்துள்ளது. அதிக பணியாளர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய கேட்டுள்ளதுடன், முகக்கவசங்களை அதிகளவில் பயன்படுத்தவும், வளாகத்திற்குள் உள்ளேவருபவர்களை மிகவும் உன்னிப்பாக பரிசோதிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.”
வெள்ளை மாளிகையின் நிலைமை, இந்த தொற்றுதோய்க்கு ட்ரம்ப் நிர்வாக விடையிறுப்பின் அனைத்து அம்சங்களை குணாம்சப்படுத்தும் விதமாக, வர்க்க நலன்கள் மற்றும் தனிச்சலுகைகளில் வேரூன்றிய, அதன் வஞ்சகம் மற்றும் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. உலகிலேயே மிகவும் பலமாக பாதுகாக்கப்பட்ட கட்டிடமான வெள்ளை மாளிகையிலேயே இந்த வைரஸ் பரவுவதை அதனால் தடுக்க முடியவில்லை என்கின்ற நிலையில் தான், நோய்தொற்று பரவுவதைத் தடுக்க மிகக் குறைந்தளவே நடைமுறைகளைக் கொண்ட அல்லது ஒன்றுமே நடைமுறைகள் இல்லாத வேலைகளுக்கு சாதாரண உழைக்கும் அமெரிக்கர்களைத் திரும்புமாறு அரசாங்கம் கோரி வருகிறது. ஜனாதிபதியின் அருகாமையில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த தனிச்சலுகை பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை.
ட்ரம்பின் அறிக்கைகளும் நடவடிக்கைகளும் வெறித்தனமான சமூகவெறுப்புத்தன்மை கொண்டவர்களுடையதைப் போன்றுள்ளன என்றாலும், அவர் கொள்கைகள் பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கின் நலன்களால் வழிநடத்தப்படுகின்றன. ஒரு குற்றகரமான கொள்கையைச் சட்டபூர்வமாக்க பயன்படுத்தப்படும் வார்த்தையான "பொருளாதாரத்தைத் திறந்து விடுவதற்கான" கோரிக்கை, மனித உயிர்களை விலையாக கொடுத்தாவது, தொழிலாள வர்க்கம் மீதான தங்குதடையற்ற சுரண்டலை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதை அல்லாது வேறோன்றையும் அர்த்தப்படுத்தவில்லை.
"நாளாந்தம் ஒரே சீரான தனித்தனி உயிரிழப்புகளின் குவியல் என்பது தேசத்தை மீண்டும் திறந்து விடுவதற்காக கொடுக்கப்படும் ஒரு கொடூரமான விலை என்ற நாசகரமான கருத்தை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென [ட்ரம்ப் நிர்வாகம்] கேட்கிறது" என்பதை அமசன் முதலாளி ஜெஃப் பெஸோஸிற்குச் சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் அப்பட்டமாகவே ஒப்புக் கொள்கிறது.
உண்மையில் பாரியளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வரும் இந்த நிலைமைகளின் கீழ் அமெரிக்கர்களிடம் வேலைக்குத் திரும்புவது குறித்து கேட்கப்படவில்லை, வேலைக்குத் திரும்புமாறு கூறப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரயிறுதியில் வெளியிடப்பட்ட சமீபத்திய Pew கருத்துக்கணிப்பில், கேள்வி கேட்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் உரிய காலத்திற்கு முந்தியே பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடுவதற்கு அவர்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
“பொருளாதார அடைப்பு பேரழிவு,” என்று தலைப்பிட்ட ஒரு குறிப்பிடத்தக்க எரிச்சலூட்டும் தலையங்கத்தில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பின்வருமாறு வினவியது: “நன்று, வேலையற்றவர்கள் தொகை பற்றிய வெள்ளிக்கிழமையின் பயங்கரமான அறிக்கைக்கு பின்னரும், இப்போது நீங்கள் அடைப்பை எப்படி விரும்புகிறீர்கள்?” இந்த கனமான கேள்வியின் அடித்தளத்தில் இருக்கும் அனுமானம் என்னவெனில் பத்து மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் வேலைக்குத் திரும்பவில்லை என்றால் வறுமைக்குட்படுத்தப்படுவார்கள், பட்டினியில் விடப்படுவார்கள் என்பதுதான் வேறு தேர்வு எதுவுமில்லை.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு விடையிறுப்பாக, சோசலிச சமத்துவக் கட்சி மற்றொரு கேள்வியை முன்னிறுத்துகிறது: பேரழிவுகரமான உயிரிழப்பு மற்றும் மில்லியன் கணக்கானவர்களைப் பாதிக்கும் சமூக சீரழிவின் வெளிச்சத்தில், இப்போது நீங்கள் வோல் ஸ்ட்ரீட்டுக்கான பிணையெடுப்பை எப்படி விரும்புகிறீர்கள்?
இந்த தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் இருந்தே, ட்ரம்ப் நிர்வாகத்தின் விடையிறுப்பு பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களுக்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனித உயிர்களை அல்ல, வோல் ஸ்ட்ரீட் முதலீடுகள் மற்றும் முதலாளித்துவ செல்வ வளத்தைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருந்து வந்துள்ளது. உண்மையில் வோல் ஸ்ட்ரீட் குத்தகைதாரர்கள் மற்றும் ஊகவணிகர்களைப் பாதுகாப்பதா அல்லது தொற்றுநோயை எதிர்த்து போராடி உழைக்கும் மக்களைப் பாதுகாப்பதா என்ற இரண்டு நோக்கங்களும் மொத்தத்தில் ஒன்றுக்கொன்று பொருந்தாதது.
இந்த அடிப்படை சமூக-பொருளாதார முரண்பாடு, அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான இந்த சமரசப்படுத்தவியலாத முரண்பாடு உயிரிழப்புகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமைப்படுத்தலுக்கும், மற்றும், கணக்கு ஏட்டின் மறுபுறம் வோல் ஸ்ட்ரீட்டின் பங்கு மதிப்புகளில் வெடிப்பார்ந்த அதிகரிப்புக்கும் இடையிலான இடைதொடர்பில் மிகவும் வெறுப்பூட்டும் அளவில் அதன் வெளிப்பாட்டைக் காண்கிறது.
கடந்த மார்ச்சில் பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பை நிறைவேற்றியதில் இருந்து, டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி சுமார் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. நாஸ்டாக் குறியீடு 2020 இல் அதன் அதிகபட்ச அளவில் உள்ளது. மே மாதத்தின் முதல் 10 நாட்களில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் 15,000 அதிகரித்துள்ள அதேவேளையில் டோவ் குறியீடு 600 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.
உயிரிழப்புகள் மற்றும் மனித அவலங்கள் குறித்த செய்திகள் எவ்வளவிற்கு பயங்கரமாக உள்ளதோ, முதலாளித்துவ சந்தைகளின் உற்சாகமான விடையிறுப்பும் அதேமாதிரி அதிகமாக உள்ளது. “வோல் ஸ்ட்ரீட்" இற்கும் "சாதாரண வீதிக்கும்" இடையிலான முரண்பாடு மிகவும் தீவிரமாக உள்ளது, இப்போது இது தான் பரவலாக நிதியியல் பத்திரிகைகளில் பேசப்பட்டு வருகிறது.
பங்கு மதிப்புகளில் வெடிப்பார்ந்த அதிகரிப்புக்கான காரணம் நன்கறியப்பட்டுள்ளது. குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் —அதுவும், இரண்டாவதில், செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் ஆதரவு உள்ளடங்கலாக— ட்ரம்ப் நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட்டை காப்பாற்ற ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் வழங்க பொறுப்பேற்றது.
வோல் ஸ்ட்ரீட்டின் பரவசநிலையை விவரித்து, அதிகாரப்பூர்வ Economist பத்திரிகை அதன் மிகவும் சமீபத்திய பதிப்பில் பின்வருமாறு எழுதுகிறது:
மேம்பட்ட இந்த உணர்வின் பெரும்பகுதிக்கு பெடரலே காரணமாகும். கற்பனையும் செய்து பார்த்திராத அளவில் சொத்திருப்புக்களை விலைக்கு வாங்கி, அது வேறெந்த மத்திய வங்கிகளை விடவும் மிகவும் வேகமாக செயல்பட்டுள்ளது. அது அதிக மதிப்பிழந்த "வெற்று" பத்திரங்கள் உட்பட முன்பினும் அதிக பெருநிறுவன கடன்களைக் வாங்குவதற்குப் பொறுப்பேற்கிறது. புதிய பெருநிறுவன பத்திரங்களை வெளியிடுவதற்கான சந்தை பெப்ரவரியில் உறைந்து போன நிலையில், அது மிதமிஞ்சிய பாணியில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வழமையான மட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக, கடந்த ஆறு வராங்களில் நிறுவனங்கள் 560 பில்லியன் டாலர் பத்திரங்களை வெளியிட்டுள்ளன. அதிக விலைக்கு மத்தியில், கடற்கரை சொகுசுப்படகு சேவை நடத்தும் நிறுவனங்கள் கூட பணத்தைத் திரட்ட முடிகிறது. பெரிய நிறுவனங்களில் அடுக்கடுக்கான திவால்நிலைமைகள் தடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கு நடைமுறையளவில் மத்திய வங்கி பின்னால் நிற்கிறது. பங்குச்சந்தை இதை கவனத்திற்கெடுத்து உயர்ந்துள்ளது.
ஆளும் உயரடுக்கைக் காப்பாற்றுவதற்காக வரைமுறையின்றி பணத்தைச் செலவிட்டுள்ள, மற்றும் தொடர்ந்து செலவிட்டு வருகின்ற ட்ரம்ப் நிர்வாகமும் — அவ்விதத்தில் பாரியளவில் தேசிய கடனை அதிகரித்து வருகின்ற நிலையில், அத்துடன் அரசியல் ஸ்தாபகமும் மற்றும் முதலாளித்துவ ஊடகங்களும், பெருந்திரளாக உழைக்கும் மக்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும், வேலைவாய்ப்பற்றோருக்கு உதவ மற்றும் இந்த தொற்றுநோய்க்கு எதிராக போராட பணமில்லை என்றும் கூறுகின்றனர். “அரசாங்கம் அதனால் என்ன முடியுமோ அது ஒவ்வொன்றையும் செய்துள்ளது. சமூகம் அதனால் என்ன செய்ய முடியுமோ அது ஒவ்வொன்றையும் செய்துள்ளது,” என்ற நியூ யோர்க்கின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் Andrew Cuomo இன் வார்த்தைகளை ஆதரித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மேற்கோளிடுகிறது.
உண்மையில் அது ஒன்றுமே செய்யவில்லை. தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை வெறுமனே மருத்துவ முகப்பில் இருந்து நடத்தி விட முடியாது என்பதையே வேலைக்குத் திரும்புவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் கோரிக்கை தெளிவுபடுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஓர் அரசியல் மற்றும் சமூக போராட்டத்தை இந்த தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ளது.
இந்த தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு, முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன்களுக்கு எதிராகவும் மற்றும் ஒட்டுமொத்தமாக இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் சற்றும் விட்டுக்கொடுக்காத எதிர்ப்புடன், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும்.
எண்ணிக்கையின்றி மில்லியன் கணக்கானவர்களின் உயிர்கள் பணயத்தில் இருக்கையில், முன்னொருபோதும் இல்லாதளவிற்கு இந்த தேசிய மற்றும் உலகளாவிய நெருக்கடியின் முன்னால், சமூக கொள்கை மீதான பெருநிறுவன-நிதியியல் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமாகவும் மற்றும் பொருளாதார வாழ்வை சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பு செய்வதற்காக பொருளாதார ஆதாரவளங்களை மறுநிர்மாணம் செய்வதன் மூலமாகவும் மட்டுமே மக்கள்தொகையில் பெரும் பெரும்பான்மையினரான தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னெடுக்க முடியும்.
இந்த முக்கிய சூழ்நிலையில், சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்னெடுக்கிறது:
• இந்த தொற்றுநோய் பரவல் முடிந்து எல்லா வேலையிடங்களிலும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான நிலைமைகள் ஏற்படுத்தப்படும் வரையில் வேலைக்குத் திரும்புவதற்கான அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட வேண்டும்.
• வேலைக்குத் திரும்புவது சாத்தியமாகும் வரையில் ஒரு கண்ணியமான வாழ்க்கை தரத்திற்கு உத்தரவாதமளிக்க போதுமான தொகையை, எல்லா குடும்பங்களுக்கும் மாத வருமானமாக வழங்கப்பட வேண்டும். இந்த வருமானத்துடன் சேர்ந்து, அடமானக் கடன்கள், வாடகைகள், வட்டித்தொகைகள், சேவைக் கட்டணங்களை நீக்குதல் மற்றும் அத்துடன் சேர்ந்து மாணவர் கடனை இரத்து செய்தலும் பின்னிணைப்பாக இருக்க வேண்டும்.
• சிறு வணிகங்களின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் வரையில் அந்நிறுவனங்கள் பொருளாதார உயிர்வாழ்வை தாக்குப்பிடிக்கவும் மற்றும் அதன் பணியாளர்களுக்கு கூலிகள் மற்றும் சம்பளங்கள் வழங்கவும் போதுமான ஒரு தொகையை அவற்றுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும்.
• CARES சட்டம் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டு, தனியாருக்குச் சொந்தமான நிதியியல் மற்றும் பெருநிறுவன அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து நிதிகளும் திரும்பப் பெறப்பட வேண்டும்.
• அனைத்து மிகப் பெரிய நிதியியல் மற்றும் பெருநிறுவன அமைப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொது அமைப்புகளாக மாற்றப்பட வேண்டும்.
• சமூகத்தின் செல்வந்தரான மேல்மட்டத்திலுள்ள ஐந்து சதவீத தனிநபர்களுக்கு, ஊகவணிக முதலீடுகளில் இருந்து திரட்டப்பட்ட அனைத்து விதமான சம்பாதிக்கப்படாத வருவாய் மற்றும் சம்பளங்கள் மீதும் குறைந்தபட்சம் 90 சதவீதத்திற்கு வரி விகிதத்தைப் பாரியளவில் உயர்த்த வேண்டும்.
• சமூகரீதியில் நாசகரமான இராணுவ-பெருநிறுவன கூட்டு ஒத்துழைப்பை கலைத்து விட்டு, அதன் பாரிய வரவு-செலவு திட்டக்கணக்குச் சமூகரீதியில் முற்போக்கான நோக்கங்களுக்குத் திருப்பி விடப்பட வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தை இப்போதிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புரீதியிலான கட்டமைப்பு மூலமாக கைவரப் பெற முடியாது. அதற்கு தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணித்திரட்டுவதன் மூலமாக போராட வேண்டியுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் முதலாளித்துவ அமைப்புமுறையைச் சீர்திருத்துவது அல்ல, மாறாக போராட்டத்தின் போக்கில் தொழிலாள வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி வடிவங்கள் அடிப்படையில் ஒரு சோசலிச பொருளாதார அமைப்புமுறையைக் கொண்டு அதை பிரதியீடு செய்வதாகும்.
அனைத்திற்கும் மேலாக, இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில், அமெரிக்க தொழிலாள வர்க்கம் உலகளாவிய முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் அதன் இயல்பான கூட்டாளிகளாக உள்ள உலகம் முழுவதிலுமான தொழிலாளர்களின் ஆதரவுக்கு செயலூக்கத்துடன் முறையிட வேண்டும். எல்லா நாடுகளது தொழிலாளர்களையும் பாதிக்கும் இந்த தொற்றுநோய், சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி 2020 தேசிய தேர்தலில் போட்டியிடுகிறது. அதன் ஜனாதிபதி வேட்பாளரும் துணை ஜனாதிபதி வேட்பாளருமான ஜோசப் கிஷோர் மற்றும் நோரிஸ்சா சான்டா குரூஸ் இந்த புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்காக இந்த பிரச்சாரம் வழங்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
மனிதகுலத்தின் எதிர்காலத்தைச் சார்ந்துள்ள இந்த முக்கிய போராட்டத்தில் செயலூக்கத்துடன் ஈடுபடுமாறு நாங்கள் தொழிலாளர்களையும், இளைஞர்களையும், உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.