இலங்கை: பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலைமையில் வேலைக்கு திரும்புவதை எதிர்த்திடுவோம்! தொழில் அழிப்பு செய்யாதே!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கமும் பெரும் வியாபாரிகளும், தற்போதைய கோவிட்-19 பூட்டுதலை முடிவுக்குக் கொண்டுவந்து, ஏற்றுமதி தொழில்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் உட்பட பிரதான வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு கோருகின்றன.

உலகெங்கிலும் கொடிய கொரோனா வைரஸ் பரவும்போது நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள் மற்றும் வேலைத்தளங்களுக்கு திருப்பி அனுப்புவதே இதன் அர்த்தமாகும். உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு மிகப்பெரிய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

தொற்றுநோயின் உலகளாவிய மரண எண்ணிக்கை இப்போது 155,000க்கும் அதிகமாக உள்ளதுடன் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரழிவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதற்கான அறிகுறியே கிடையாது. இலங்கையின் உத்தியோகபூர்வ மரண எண்ணிக்கை ஏழு மற்றும் நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 240 ஆகும். ஆனால், போதுமான அளவு சோதனைகளை செய்யாததன் விளைவே எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணமாகும். இதுவரை, மருத்துவமனைகள் 5,000 சோதனைகளை மட்டுமே நடத்தியுள்ளன.

"பொருளாதாரத்தை மீண்டும் திறக்க" ஒரு "வெளியேறும் மூலோபாயத்தை" நடைமுறைப்படுத்துவதற்கு நிலைமை போதுமானவு இகுவாகியுள்ளது என்று கூறிக்கொள்ள இந்த குறைந்த எண்ணிக்கையை கொழும்பு பயன்படுத்திக்கொள்கின்றது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மே மாத ஆரம்பத்தில் திறக்கத் தொடங்குவதாக அது முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஆசிரியர்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

புதன்கிழமை, இராஜபகஷ, இராணுவத் தளபதி உட்பட உயர்மட்ட அதிகாரிகள் பங்குபற்றிய ஒரு உயர்மட்ட கூட்டத்தில், அரசாங்க மற்றும் தனியார் துறைகள் "தங்கள் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க" வேண்டும் என்று கூறினார். அமைச்சின் செயலாளர்கள் "பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்யும் பொறுப்பை" வலியுறுத்த வேண்டும் என்று அவர் அறிவித்தார். இது கொரோனா வைரஸின் பரவலுக்கு "பொதுமக்களை", அதாவது உழைக்கும் மக்களையும் ஏழைகளையும் குற்றம் சாட்டுவதாகும்.

இராஜபகஷ நடத்திய கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் பிரபாஷ் சுபசிங்க, தேசிய ஊரடங்கு அமுலில் இருந்த போதிலும், ஏற்றுமதியாளர்களை உடனடியாக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். "ஏற்றுமதி செய்து வெளிநாட்டு வருவாயைக் கொண்டுவருவதும், இந்த கொவிட்-19 நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதும் எங்களுக்கு ஒரு தேசிய முன்னுரிமை என்பதை ஏற்றுமதித் துறை புரிந்துகொள்வது முக்கியம்" என்று சுபசிங்க அறிவித்தார்.

ஒரு ஆடைத் தொழிற்துறை ஆதரவு தேடும் குழுவான கூட்டு ஆடைத் தொழிற்துறை சங்க ஒன்றியம், அதன் சர்வதேச போட்டியாளர்கள் சுருங்கிவரும் உலக சந்தையில் இலங்கை உற்பத்தியாளர்களை ஓரங்கட்டிவிடுவார்கள் என்று எச்சரித்தனர். "தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாவிட்டால், எங்களுக்கு போட்டியாக உள்ள நாடுகளுக்கு ஆதரவாக மிக தீவிரமான வர்த்தக மாற்றங்கள் ஏற்படலாம்... வியட்நாம் மற்றும் கம்போடியா போன்ற போட்டியாளர்கள் திறந்துவிட்டுள்ளார்கள். வியட்நாம் தொடர்புகளை தீவிரமாக தேடிப்பிடிக்கின்றது,” என்று அது அறிவித்தது.

இது தொற்றுநோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இலாபங்களை மீளப்பெறுவதற்கான அவநம்பிக்கையான அழைப்பாகும். வெளிநாட்டு கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியா நிலையை நெருங்கியுள்ள அரசாங்கம், அதற்கு சமமாக வெளிநாட்டு நாணய இருப்புக்களை அதிகரித்துக்கொள்ள ஏங்குகின்றது.

இராஜபகஷ, சர்வதேச அளவில் ஆளும் வர்க்கங்களின் குரல்களை எதிரொலிக்கிறார். டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருளாதார உயரடுக்கு மற்றும் பெருநிறுவனங்களின் சார்பாக, "பொருளாதாரத்தை பெரும் வெடிப்பின் பாணியில் திறக்குமாறு" ஒரு குற்றவியல் அழைப்பை விடுத்தார். ஐரோப்பிய அரசாங்கங்களும் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

எங்கள் சகோதர கட்சியான அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) விளக்கியதாவது: “ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் வர்க்கத்தினதும் நோக்கம் தொற்றுநோயை 'இயல்பாக்குவதாகும்', அதாவது வரவிருக்கும் சில காலத்திற்கு ஏராளமான மக்கள் மரணிப்பார்கள் என்ற உண்மையை மக்களுக்கு பழக்கப்படுத்துவதாகும். செய்திகளில் மரண எண்ணிக்கை குறைவான கவனத்தை ஈர்ப்பதுடன், தொழிலாளர்கள் இதை தவிர்க்க முடியாத ஒன்று என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"இந்த கோரிக்கையில் படு மோசமான வர்க்க தர்க்கம் உள்ளது. தொழிலாளர்கள் செலவிடப்படக் கூடியவர்களாக கருதப்பட உள்ளார்கள். அவர்கள் இறந்தால், அது வியாபாரத்திற்கான செலவு மட்டுமே. நோயால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்கள் இன்னொருவரால் பதிலீடு செய்யப்படுவார்.”

உலக சுகாதார அமைப்பும் மருத்துவ நிபுணர்களும் வேலைக்குத் திரும்புவதற்கான மிகவும் பொறுப்பற்ற அழைப்புகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் ஆணையாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ், இந்த வைரஸ் “2009 காய்ச்சல் தொற்றுநோயை விட 10 மடங்கு ஆபத்தானது” என்று திங்களன்று கூறினார். “நோய்த்தொற்று மிக வேகமாக பரவுவதுடன், மிக மெதுவாகவே குறைகிறது… அதாவது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்துவதை மெதுவாகவும், கட்டுப்பாட்டுடனும் மேற்கொள்ள வேண்டும். இவற்றை ஒரே நேரத்தில் செய்ய முடியாது," என அவர் மேலும் விளக்கினார்.

இராஜபகஷ அரசாங்கம் மற்றும் பெரும் வணிகத்தின் குற்றவியல் நடவடிக்கைகள், கொடிய வைரஸ் பரவுவதை துரிதப்படுத்துவதுடன் மேலும் தொழிலாளர்களின் உயிரிழக்க வழிவகுக்கும். அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எந்த மருத்துவ நிபுணர்களும் ஆதரவளிக்கவில்லை.

இந்த அரசாங்கத்திற்கு சாதாரண மக்களின் நல்வாழ்வு குறித்து எந்த அக்கறையும் கிடையாது. பூகோள தொற்றுநோயின் எச்சரிக்கைகளை அது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜனவரி மாதத்தில் இலங்கையில் முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவராக சீன சுற்றுலா பயணி கண்டறியப்பட்டார். அவர் குணமடைந்ததைப் பற்றி அரசாங்கம் பெருமை பேசிக்கொண்டது.

பல வாரங்களுக்குப் பிறகும், இராஜபகஷ மொத்த பூட்டுதலுக்கான அழைப்புகளை நிராகரித்தார். "மற்ற நாடுகளில் சிறந்த மருத்துவ வசதிகள் இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களை எங்கள் முயற்சிகளால் குணப்படுத்த முடிந்தது," என அவர் கூறிக்கொண்டார்.

சில நாட்களின் பின்னர், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முறையான திட்டம் எதுவும் இல்லாமல் மொத்த பூட்டுதல் அறிவிக்கப்பட்டது. இது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை கிராமப்புறங்களுக்குள் தள்ளியது. பலருக்கு அவர்களது மாத ஊதியம் கூட கிடைக்கவில்லை. மேலும் ஆயிரக்கணக்கானோர், பல வாரங்களாக சுதந்திர வர்த்தக வலயங்களில் சிக்கித் தவித்தனர். வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் விளிம்பில் இருந்தபோது, எஞ்சியிருந்தவர்களை அரசாங்கம் அவர்களது ஊர்களுக்கு திருப்பி அனுப்பியது.

தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பும்போது அவர்களுக்கு என்ன நடக்கும்?

ஆடைத் துறையில் மட்டும், 400,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறார்கள். கம்பனிகள் தொழில்களை துடைத்துக் கட்டவும் ஊதியங்களைக் குறைக்கவும் தயாராகி வருகின்றன.

2008-09 உலக நிதி நெருக்கடியின் போது, ஜனாதிபதி மஹிந்த இராஜபகஷவின் முந்தைய ஆட்சியின் கீழ், 500க்கும் மேற்பட்ட ஆடை மற்றும் ஏனைய தொழிற்சாலைகள் மூடப்பட்டு, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தற்போதைய நெருக்கடி மிகவும் மோசமானது.

ஆடை நிறுவனங்கள், தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி போன்ற ஓய்வூதிய நிதிகளுக்கான தங்கள் பங்களிப்புகளை ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவும், ஊழியர்களை மூன்று மாதங்களுக்கு "தற்காலிக" பணிநீக்கம் செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அவர்கள், வியட்நாம் அனைத்து தொழிலாளர்களுக்குமான சமூக பாதுகாப்பு பங்களிப்புகளை நிறுத்தியதை மேற்கோள் காட்டியுள்ளனர்.

47,000 தொழிலாளர்கள் வேலை செய்யும் ஆடை நிறுவனமான பிரண்டிக்ஸ், ஊதியங்கள் மற்றும் நல நிதிகளை 5 முதல் 30 சதவீதம் வரை குறைத்து, தற்காலிக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

பல்வேறு தொழில்துறையில் ஈடுபட்டுள்ளன இன்னும் இரண்டு வலுமிக்க நிறுவனங்களான சொஃப்ட் லொஜிக், ஜோன் கீல்ஸ் ஆகியவை, இதே போன்ற ஊதியம் மற்றும் நலன்புரி வெட்டுக்களை அறிவித்துள்ளன.

தொழிலாளர்கள் வேலைத்தளங்களில் பாதுகாப்பற்ற நிலைமைகளை எதிர்கொள்வார்கள். தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கருவிகளை முதலாளிகள் வழங்க வேண்டிய கட்டாயத் தேவை இல்லை. நெரிசலான போக்குவரத்து சேவைகள் மற்றும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பான சமூக இடைவெளியை பேணுவது சாத்தியமற்றது.

நாட்டின் பாழடைந்த சுகாதார சேவை ஏற்கனவே தொற்றுநோயைக் கையாள்வதில் சிக்கல்களைக் கொண்டுள்ளது. நோய்த்தொற்றுகளின் புதிய அலை ஒரு பேரழிவு சூழ்நிலையை உருவாக்கக்கூடும். ஆபத்து இருந்தபோதிலும், ராஜபக்சே ஆட்சி, தற்போது ஆண்டுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.2 சதவீதமாக மட்டுமே உள்ள பொது சுகாதார நிதியை அதிகரிப்பதைப் பற்றி எந்த அறிவித்தலும் விடுக்கவில்லை.

இதற்கு நேர்மாறாக, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மத்திய வங்கியால் பில்லியன் கணக்கான ரூபாய்கள் பெரும் வணிகத்திற்கு உட்செலுத்தப்படுகின்றன, மேலும் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள இலங்கை ஆடை நிறுவனங்களிடம் கொள்வனவு செய்யும் இராட்சத சில்லறை விற்பனையாளர்கள் பல கொள்வனவு ஆணைகளை ரத்து செய்துள்ளனர். அதேபோல், இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலைக்கான உலக சந்தையில் யுனிலிவர் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆடை ஏற்றுமதி வருவாயில் தங்கியிருக்கும் பங்களாதேஷில், பெரும் வணிகர்களும் அரசாங்கமும் கடந்த வாரம் தொழில்துறையின் 4.5 மில்லியன் தொழிலாளர்களை திரும்ப அழைத்தன. ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் உடனடியாக வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் மேலும் இலட்சக் கணக்கானோர் வேலை இழக்க நேரிடும். இந்த பணிநீக்கங்களுக்கு எதிராக கடந்த வாரம் முதல் தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன.

கொழும்பு அரசாங்கமும், ஏனைய ஆட்சிகளைப் போலவே, 1930களின் பெரும் மந்தநிலையின் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள ஆழமான உலகளாவிய நெருக்கடியின் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் முதுகில் சுமத்த உள்ளது. ஒட்டுமொத்தமாக தெற்காசியா இந்த ஆண்டு 1.8 முதல் 2.8 சதவிகிதம் வரை குறைந்த பொருளாதார வளர்ச்சியை அனுபவிக்க உள்ள அதே வேளை, உலக வங்கியின் கூற்றுப்படி, இலங்கை 3 சதவீத பொருளாதார சுருக்கத்தை எதிர்கொள்கிறது.

தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்குவதற்கான தயாரிப்பில், இராஜபகஷ தனது நிர்வாகத்தை இராணுவமயமாக்குவதை தீவிரப்படுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அமல்படுத்த தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் ஆகியவை கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துடன் முத்தரப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளன.

ஜே.வி.பி. தொழிற்சங்கத்தின் தலைவர் லால் காந்த, "ஒரு சமநிலையை ஏற்படுத்துவதற்கு" கம்பனிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தினதும் ஒரு கூட்டாக, ஒரு தேசிய தொழிலாளர் பேரவையை கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் அர்த்தம் தொழில்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களை திணிப்பதே ஆகும்.

"பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான" அரசாங்கத்தின் நடவடிக்கையை அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் ஆதரிக்கின்றன.

இந்த தாக்குதல்களை தோற்கடிக்க தொழிலாளர்கள் தெற்காசியாவிலும் உலகம் முழுதும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சுயாதீனமான விஞ்ஞானப்பூர்வமான மதிப்பீட்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாதுகாப்பு முன்நடவடிக்கைகள் இல்லாமல் தொழிற்சாலைகள் அல்லது வேலைத்தளங்களுக்கு தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அழைப்பதை எதிர்ப்பதற்கு அறைகூவல் விடுக்கின்றது.

வேலை, ஊதியம் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்கள் வேண்டாம்! தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மற்றும் தொழில் இழப்புகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

கொள்ளையடிக்கும் பெரும் வணிகத்தை காப்பாற்றுவதற்காக அன்றி, சகல உபகரணங்களும் அடங்கிய மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்து, பாரிய சோதனைத் திட்டங்களை முன்னெடுத்து மற்றும் கொவிட்-19 வைரஸை ஒழிக்க சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதன் மூலமும் பொது சுகாதார சேவையை விரைவாக அபிவிருத்தி செய்யத் தேவையான பில்லியன்கணக்கான ரூபாய்களைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்காக போராட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீன,மாக தொழிற்சாலைகளிலும் வேலைத் தளங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து உற்பத்தி சாதனங்களைக் கைப்பற்றி, சமூகத்தின் பெரும்பான்மையினரின் நலன்களுக்காக அவற்றை பகுத்தறிவுடன் மீண்டும் ஒழுங்கமைப்பதன் மூலம் மட்டுமே இந்த அவசர பணிகளை இட்டு நிரப்ப முடியும்.

இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்கான போராட்டம் அவசியமாகும்.

இந்த சோசலிச வேலைத்திட்டத்திற்காக தாமதமின்றி எவ்வாறு போராடுவது என்பது குறித்து, சோசலிச சமத்துவக் கட்சியுடன் கலந்துரையாடல்களைத் தொடங்குமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading