மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க வரலாற்றிலேயே முன்னொருபோதும் இல்லாத ஒரு நடவடிக்கையாக, டொனால்ட் ட்ரம்ப் அரசியலமைப்புக்குக் கீழ்படிய மறுத்து, அவர் கட்டளையின் கீழ் செயல்படும் இராணுவம், பொலிஸ் மற்றும் அதிவலது பாசிசவாத போராளிகள் குழுக்களது ஆதரவுடன் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க முயன்று வருகிறார். சோசலிச சமத்துவக் கட்சி இந்த குற்றகரமான நடவடிக்கையை எதிர்க்குமாறு தொழிலாள வர்க்கத்திற்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உறுதிகொண்டுள்ள அனைவருக்கும் அழைப்புவிடுகின்றது.
தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ட்ரம்ப் பின்வருமாறு அறிவித்தார்: “நான் சட்டம் ஒழுங்கிற்கான உங்களின் ஜனாதிபதி... நமது தேசம் தொழில்ரீதியிலான அராஜகவாதிகள், தீயிட்டு கொளுத்துபவர்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள், பாசிச எதிர்ப்பு குண்டர்கள் (Antifa) இன்னும் ஏனையவர்களின் பிடியில் சிக்கி உள்ளது,” என்றார்.
ஜோர்ஜ் ஃபுளோய்ட் (George Floyd) மீதான பொலிஸ் படுகொலையை எதிர்த்து போராடுவதற்காக வெள்ளை மாளிகைக்கு வெளியே சட்டபூர்வமாகவும் அமைதியாகவும் ஒன்றுகூடியிருந்த மக்கள் மீது வன்முறையான தாக்குதல் நடத்த அவர் பாரியளவில் ஆயுதமேந்திய இராணுவ பொலிஸிற்கு உத்தரவிட்ட வெறும் ஒருசில நிமிடங்களுக்குப் பின்னர் ட்ரம்பின் இந்த பாசிசவாத பேச்சுக்கள் வந்தன.
வாஷிங்டன் டிசி இல் தங்களின் முதல் அரசியலமைப்பு சட்ட உரிமைகளைப் பயன்படுத்திய அந்த நிராயுதபாணியான மக்கள் மீது இராணுவப் படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான மற்றும் விசமத்தனமான தாக்குதல், ஒரு குற்றகரமான நிர்வாகத்தினது ஆட்சி சதியின் (coup d’état) தொடக்கமாக அவமானகரமாக நிலைத்திருக்கும்.
“இவை அமைதியான போராட்ட நடவடிக்கைகள் இல்லை,” என்று கூறிய அவர், “இவை உள்நாட்டு பயங்கரவாத நடவடிக்கைகள்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
அமெரிக்க வரலாற்றிலேயே இனவாத பொலிஸ் வன்முறையை எதிர்த்து பல இனங்களையும், பல வம்சாவழியை சேர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகவும் முக்கியமான ஒற்றுமையைக் காட்டியிருப்பதால் ட்ரம்ப் சீற்றமடைந்துள்ளார்.
போராட்டங்களை ஒடுக்க, அரசியலமைப்பை மீறி, இராணுவத்தை அவர் நிலைநிறுத்த இருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். அதே நாள் காலையில் ஆளுநர்களுடன் அவர் நடத்திய ஒரு கலந்துரையாடல் அழைப்பைக் குறிப்பிட்டுக் காட்டி, ட்ரம்ப் கூறுகையில், “பல மாநிலங்களும் உள்ளாட்சி அரசாங்கங்களும் தேவையான நடவடிக்கை எடுக்க தவறியுள்ளன,” என்றார், அவை "வீதிகளில் நாம் ஆதிக்கம் செலுத்தும் விதத்தில் போதுமான எண்ணிக்கையில் தேசிய பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்த" அவர் "பலமாக பரிந்துரைத்திருப்பதாக" தெரிவித்தார்.
பின்னர் அவர் பின்வரும் குற்றகரமான அச்சுறுத்தலை விடுத்தார்: “ஒரு நகரமோ அல்லது மாநிலமோ தமது மக்களின் உயிரையும் சொத்துக்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுத்தால், பின்னர் நான் அமெரிக்க இராணுவத்தை பயன்படுத்தி, அவற்றின் பிரச்சினையை விரைவில் தீர்த்து வைப்பேன்,” என்றார்.
அவர் தேசத்தின் தலைநகரை ஒரு தேசிய இராணுவ நிலைநிறுத்தலுக்கான அரங்கமாக பயன்படுத்தி வருவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்: “நமது தலைச்சிறந்த தலைநகரை, வாஷிங்டன் டிசி, பாதுகாக்க நான் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையும் எடுத்து வருகிறேன். நாம் பேசிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும், கலகங்களைத் தடுப்பதற்காக நான் ஆயிர ஆயிரக் கணக்கான கனரக ஆயுதமேந்திய சிப்பாய்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.
ட்ரம்ப் மேலும் அறிவித்தார், ஆர்ப்பாட்டக்காரர்கள் "கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, சட்டத்தின் அதிகபட்ச அளவிற்கு தண்டிக்கப்படுவார்கள். இந்த பயங்கரத்தை ஏற்படுத்தும் நீங்கள் கடுமையான குற்ற அபராதங்களையும் நீண்டகால சிறை தண்டனைகளையும் முகங்கொடுப்பீர்கள் என்பதை உங்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த வன்முறைக்குத் தலைமை கொடுத்து தூண்டி விட்டு வரும் Antifa மற்றும் ஏனையவர்களும் இதில் உள்ளடங்குவார்கள். ஒரு சட்டமும் ஒழுங்குமே எமது சட்டமாகும். ஒரு சட்டம் தான், நம்மிடம் ஓர் அழகான சட்டமாகும்,” என்றார்.
இவை வருங்காலத்தின் படுமோசமான ஒரு இராணுவ சர்வாதிகாரியாக இருக்க விரும்புபவரின் அச்சுறுத்தல்களாகும். அவரின் முன்னுதாரணமற்ற நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் எந்த சட்டரீதியான அல்லது அரசியலமைப்புரீதியான அடித்தளத்தையும் வழங்கவில்லை. 1807 கிளர்ச்சி சட்டத்தை அவர் துணைக்கு இழுப்பது வரலாற்றுரீதியில் மோசடியானதும் மற்றும் சட்டரீதியில் செல்லுபடியாகாததுமாகும். மத்திய அரசு தலையீடு செய்வதற்கான கோரிக்கையை மாநிலத்தின் ஆளுநர்கள் மறுக்கும் பட்சத்தில் இராணுவத்தை நிலைநிறுத்த அந்த சட்டம் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை.
மாநில ஆளுநர்கள் உடனான அவரின் முந்தைய அழைப்புகளில், பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களை வன்முறையோடு ஒடுக்குமாறு ட்ரம்ப் அவர்களைக் கோரியிருந்தார். “இதுவொரு இயக்கம், இதை நீங்கள் அடக்கவில்லை என்றால் அது இன்னும் மோசமாக படுமோசமாக ஆகிவிடும். நீங்கள் அங்கு ஆளுமை செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் ஆளுமை செலுத்தவில்லை என்றால் நீங்கள் உங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் உங்கள் மீதேறி செல்வார்கள், நீங்கள் ஒரு கும்பல் முட்டாள்களைப்போல் நிற்பீர்கள்,” என்றார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பத்தாயிரக் கணக்கான தேசிய பாதுகாப்புப் படை சிப்பாய்களை அணித்திரட்ட தவறியதற்காக ட்ரம்ப் ஆளுநர்களை "பலவீனமானவர்கள்" என்று குறிப்பிட்டதுடன், சிப்பாய்கள் "[போராட்டக்காரர்களை] துடைத்தழிக்க" வேண்டும் என்றார்.
உள்நாட்டில் இராணுவத்தை நிலைநிறுத்துவதை மேற்பார்வையிட, ட்ரம்ப் அரசின் விடையிறுப்புக்குப் பொறுப்பாளராக முப்படைகளது தலைமை தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லெயை நியமித்துள்ளதாக அவர் அறிவித்தார். இந்த முடிவு எந்த சட்டப்பூர்வ அடித்தளத்தில் எடுக்கப்பட்டது என்பதை ட்ரம்ப் விவரிக்கவில்லை, அந்த முடிவு இராணுவத்தை உள்நாட்டில் பயன்படுத்துவதன் மீது மத்திய அரசாங்கத்தின் உரிமையை கட்டுப்படுத்தும் Posse Comitatus சட்டத்தை மீறுகிறது.
ஆளுநர்கள் உடனான உரையாடலில், அரச வழக்குத்தொடுனர் வில்லியன் பார் கூறுகையில், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய போர்களில் பிடிபட்ட போர்கள சிப்பாய்களைத் துன்புறுத்துவதற்குப் பொறுப்பான பல்துறை இராணுவ-உளவுத்துறை முகமையான கூட்டு பயங்கரவாத தடுப்பு செயற்படையின் கீழ் தான் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை மத்திய அரசு துன்புறுத்துவதும் கொண்டு வரப்பட்டிருப்பதாக விளக்கமறித்தார். நீதித்துறை "அவர்களை 10 ஆண்டுகளாவது சிறையில் அடைக்க" வேண்டும் என்று ட்ரம்ப் கோரினார்.
ஜனாதிபதியின் காங்கிரஸ் சபை கூட்டாளி, புளோரிடா குடியரசு கட்சியாளர் Matt Gaetz அரசியல் எதிர்ப்பாளர்களைப் பரந்தளவில் படுகொலை செய்ய அழைப்பு விடுத்தார்: “இப்போது நாம் மிகத் தெளிவாக Antifaஇனை பயங்கரவாதிகளாக காண்கிறோம், மத்திய கிழக்கில் நாம் செய்ததைப் போலவே இவர்களையும் வேட்டையாடலாமா?” என்றார்.
அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை வந்துள்ளது. இராணுவ ஆட்சியின் அடிப்படையில் தனிப்பட்ட சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் முயற்சிகள், அதீத சமூக சமத்துவமின்மை மற்றும் முடிவில்லா போர்களின் தாக்கத்தின் கீழ், அமெரிக்க ஜனநாயகத்தின் நீடித்த நெருக்கடியின் விளைவாகும்.
ட்ரம்பின் முயற்சிக்கப்படும் ஆட்சி சதி தோற்கடிக்கப்படுவது என்பது தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டைச் சார்ந்துள்ளது, அது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் தலைமை எடுத்தாக வேண்டும்.
ட்ரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு எந்த ஆழ்ந்த எதிர்ப்பையும் ஜனநாயகக் கட்சியிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. ட்ரம்பின் பிரகடனத்திற்கு அது குறிப்பிடத்தக்க அலட்சியத்துடன் விடையிறுத்துள்ளது. அவர் சமூக பதட்டங்களைத் தூண்டிவிடுவதால் "ஜனாதிபதிக்கு உதவிகரமாக இருக்க முடியவில்லை" என்பதே ட்ரம்பின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஜனநாயக கட்சியினரின் விருப்பமான விடையிறுப்பாக உள்ளது. “உதவிகரமாக இருப்பது" என்றால் ட்ரம்பின் அரசியல் திட்டநிரலின் பாகமாக இருப்பதாகிறது!
ஆளுநர்கள் உடனான ட்ரம்பின் கலந்துரையாடல் அழைப்புக்குப் பின்னர், இலினோய் ஆளுநர் J.B. Pritzker நவம்பரில் வாக்குப் பெட்டியில் ட்ரம்பை நீக்குவதற்குப் பணிவடக்கத்துடன் அழைப்பு விடுத்தார், அதேவேளையில் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மக்களை "வாக்களிக்க" வலியுறுத்தினார். ஆனால் ட்ரம்ப் மொத்தத்தில் ஒரு தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடாமலேயே கூட போகலாம். தேர்தல் நடத்தப்பட்டால், அது இராணுவச் சட்ட நிலைமைகளின் கீழ், இராணுவம், பொலிஸ் மற்றும் வலதுசாரி ஆயுதக்குழுக்களின் பாரிய அச்சுறுத்தலுடன் நடத்தப்படலாம். இதுபோன்ற நிலைமைகளின் கீழ் தான் மார்ச் 1933 இல் ஜேர்மனியின் கடைசி சட்டபூர்வ தேர்தலில் நாஜிக்கள் மேலாதிக்கத்தை பெற்று, அதற்கு ஆறு வாரங்களுக்குப் பின்னர் ஹிட்லர் சான்சிலர் ஆனார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக, ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான பாரிய எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவும் மற்றும் இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளின் செல்வாக்கான பிரிவுகளது கோரிக்கைகளைத் திருப்பி விட்டு அந்த எதிர்ப்பை அவர்களின் சொந்த பிற்போக்குத்தனமான ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்குப் பின்னால் திசை திருப்புவதற்காகவும் வேலை செய்துள்ளனர். தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய இயக்கம் எழுச்சியுறுவது குறித்து ட்ரம்ப் எந்தளவுக்கு அச்சமுற்றுள்ளாரோ அதேயளவிற்கு ஜனநாயக கட்சியினரும் அச்சமுற்றுள்ளனர்.
ட்ரம்பின் எதேச்சதிகார நகர்வுகளை ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் முகங்கொடுக்கும் பரந்த நெருக்கடியிலிருந்து பிரித்து விட முடியாது. இரண்டு கட்சிகளின் ஆதரவுடன், பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டு தனக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களைக் கையளிக்க இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோயைப் பயன்படுத்தி உள்ளது. அது இப்போது பாரியளவில் நோயாளிகளையும் உயிரிழப்புகளையும் விரிவாக்குவதை உறுதிப்படுத்தும் மனிதப்படுகொலைக்கு நிகரான வேலைக்குத் திரும்ப செய்யும் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அமெரிக்காவில் ஏற்கனவே 100,000 க்கும் அதிகமானவர்கள் இந்த தொற்றுநோயால் உயிரிழந்துள்ளனர், அதேவேளையில் 30 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொற்றுநோய் சமூக சமத்துவமின்மைக்குத் தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது, ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு எதிரான பாரிய போராட்டங்கள் அதன் ஓர் ஆரம்ப வெளிப்பாடாகும்.
ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை மீதான ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவை என்றால், முதலாளித்துவ உயிர்வாழ்வையே அச்சுறுத்தும் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்கம் எவ்வாறு விடையிறுக்கும்? இந்த போராட்ட இயக்கங்கள் "இன்னும் படுமோசமாக" மாறுவதற்கு முன்னதாக அவற்றை நசுக்க வேண்டும் என்று ஆளுநர்களுக்கு அவர் கூறும்போது, ட்ரம்ப் கருத்தில் கொள்வது வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியையே.
ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் நிஜமான இல்லை, இந்த நெருக்கடி விரைவிலேயே தீர்ந்து விடும், அனைத்தும் திரும்ப வழமைக்கு வந்துவிடும் என்று நம்புவதை விட மிகப்பெரிய தவறு வேறெதும் இருக்காது. உண்மையில், இந்த நெருக்கடி இப்போது தான் ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க ஜனநாயகம் செயலிழந்து போயுள்ளது. அதை இப்போதிருக்கும் முதலாளித்து சமூக கட்டமைப்பின் அடிப்படையில் மறுகட்டமைப்பு செய்ய முடியாது.
ட்ரம்பின் அச்சுறுத்தல்களைப் பாரியளவிலான ஒரு தொழிலாள வர்க்க இயக்கத்தின் மூலமாக எதிர்கொள்ள வேண்டும். பொலிஸ் காட்டுமிராண்டித்தனம், சமத்துவமின்மை மற்றும் எதேச்சதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டமானது அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாததாகும். “ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் வன்முறை வெறியைத் தூண்டுகிறார்" என்ற ஜூன் 1 அறிக்கையில் WSWS எழுதியதைப் போல,
சமூகத்தின் செயல்பாடுகள் சார்ந்துள்ள தொழிலாள வர்க்கத்திற்கே, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை நிறுத்தவும், ட்ரம்பை அதிகாரத்திலிருந்து அகற்றவும், பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுவின் முதுகெலும்பை உடைக்கவும், பொருளாதார வாழ்க்கையை ஒரு சோசலிச அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதை தொடங்குவதற்குமான ஒரு பாரிய அரசியல் இயக்கத்தை உருவாக்கும் சக்தி உள்ளது.
அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்தின் வழக்கில் இல்லா வெளிப்பாடாக பார்க்கப்படும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பால் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் பலம் பெருமளவில் பெருகி உள்ளது. கடந்த வாரத்தில், ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை மீது அங்கே பாரியளவில் போராட்டங்கள் இருந்துள்ளன. அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்பின் முயற்சி சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டங்களின் அளவை விரிவுபடுத்தும்.
சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் பலத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளது. நாங்கள் ட்ரம்பின் சர்வாதிகார முயற்சியைத் தோற்கடிப்பதற்கான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான தகவல்கள், பகுப்பாய்வு மற்றும் முன்னோக்கை தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு வழங்கி வருவோம்.