இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்
இலங்கை இராணுவ புலனாய்வு அதிகாரிகள், சமீபத்திய வாரங்களில் வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) மூன்று முன்னணி உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு 43 சோ.ச.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இராணுவத்தின் நடவடிக்கைகள், சோ.ச.க.வின் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறுவதும், போரினால் நாசமாக்கப்பட்ட தீவின் வடக்கில் எமது தோழர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலும் ஆகும். இராணுவத்தின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலை எதிர்க்குமாறும், எமது உறுப்பினர்களதும் கட்சியினதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக சோ.ச.க. முன்னெடுக்கும் பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
· மே 28 அன்று, நண்பகல் அளவில், இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட இரண்டு நபர்கள், யாழ்ப்பாண குடாநாட்டில் ஊர்காவற்துறை தீவில் உள்ள பருத்தியடைப்பு கிராமத்தில், சோ.ச.க. உறுப்பினர் ராசேந்திராம் சுதர்சனின் வீட்டிற்குச் சென்றனர்.
· ஜூன் 16 அன்று, காலை 11 மணியளவில், இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் யாழ்ப்பாண குடாநாட்டுடன் இணைந்த தீவான காரைநகரில், பரமுதிருஞானசம்பந்தரின் வீட்டிற்கு வந்தனர். சம்பந்தர், பொதுத் தேர்தலில் சோ.ச.க.வின் யாழ்ப்பாண மாவட்ட தலைமை வேட்பாளர் ஆவார்.
ஒரு அதிகாரி தன்னை சஞ்சீவ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சம்பந்தரை விசாரிக்க முயன்றார். அவர் மறுத்தபோது, தங்கள் சிரேஷ்ட அதிகாரி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றிய தகவல்களை பெற விரும்புவதாக அவர்கள் கூறினர். வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பது சட்டவிரோதமானது என்று கூறிய சம்பந்தர், அவர்களுக்கு எந்தவொரு தகவலையும் கொடுக்க மறுத்துவிட்டார்.
· ஜூன் 23 அன்று, காலை 10.30 மணியளவில், இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் அமைந்துள்ள மணியந்தோட்டத்தில் உள்ள ராஜரத்தினம் ராஜவேலின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் சாவகச்சேரி இராணுவ முகாமில் இருந்து வந்தவர்கள் என்று கூறினர்.
தன்னை உபுல் என்று அறிமுகப்படுத்திய ஒரு அதிகாரி, ராஜவேலுக்கு பாதுகாப்பு வழங்க அவரது விபரங்கள் தேவை என்று கூறினார். பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதால் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி.) இடையிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு (ஐ.தே.க.) இடையிலும் பிரச்சினைகள் உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
எந்த தகவலையும் வழங்க ராஜவேலை வற்புறுத்த முடியாமல் போனதால், அந்த புலனாய்வு அதிகாரிகள் அவரை புகைப்படம் எடுக்க முயன்றனர், அதை அவர் எதிர்த்தார். சம்பந்தர் அவர்களுடன் தொலைபேசியில் பேசி, அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்கிருந்து வெளியேறும்படி சொன்ன பின்னரே அவர்கள் வெளியேறினர்.
சம்பந்தர், சுதர்சன் மற்றும் ராஜவேலும் பல தசாப்தங்களாக சோ.ச.க. உறுப்பினர்களாக நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளனர். சம்பந்தர் மற்றும் சுதர்சனும் சோ.ச.க. நடத்திய டஜன் கணக்கான பொதுக் கூட்டங்களில் உரையாற்றியுள்ளனர்.
ஜூன் 20 அன்று, சோ.ச.க. பொதுச்செயலாளர் விஜே டயஸ், சோ.ச.க. வேட்பாளர்களை விசாரிப்பதை எதிர்த்து, பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதன் பிரதி ஒன்று தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு அனுப்பப்பட்டது.
முதல் இரண்டு சம்பவங்களை விவரித்த பின்னர், டயஸ் கூறியதாவது: “ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப்படைகள் மேற்கொண்டுள்ள பாரபட்சம் மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளை, எங்கள் கட்சியினதும் அதன் உறுப்பினர்களதும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் என சோ.ச.க. கடுமையாக கண்டிக்கிறது…
"அந்த இராணுவ அலுவலர்களின் நடவடிக்கைகளுக்கு விளக்கமும் பின்வரும் கேள்விகளுக்கான பதில்களையும் நாங்கள் கோருகிறோம்:
“முதலாவதாக, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான சோ.ச.க. உறுப்பினர்களை விசாரிப்பதற்குத் தூண்டியதும் அதிகாரமளித்ததும் யார்?
"இரண்டாவதாக, சோ.ச.க. வேட்பாளர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை இராணுவம் சேகரிப்பதன் நோக்கம் என்ன?
“மூன்றாவதாக, சோ.ச.க. உறுப்பினர்கள் இருவரும் முன்னர் பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளதுடன் அப்போது அவர்கள் இராணுவத்தால் விசாரிக்கப்படவில்லை. சட்டத்தையும், எமது கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி இராணுவம் இப்போது ஏன் இத்தகைய விசாரணைகளை மேற்கொள்கிறது?
"நான்காவதாக, யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வேறு எந்தெந்த தேர்தல் வேட்பாளர்கள் இராணுவத்தால் விசாரிக்கப்பட்டுள்ளனர்?"
முடிவில், டயஸ் அறிவித்ததாவது: “நாட்டில் நிலவும் மிகவும் தீவிரமான அரசியல் சூழ்நிலையில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில், தேர்தலில் இராணுவம் நேரடியாக தலையீடு செய்வதானது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்தான முறையில் குழிபறிப்பதாக அமையும் என நாங்கள் கருதுகிறோம். எங்கள் கேள்விகளுக்கான பதில்களை நாம் கோருவதோடு இந்த நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்."
கடிதத்தையும் உடனடி பதில்களுக்கான கோரிக்கையையும் பாதுகாப்பு செயலாளர் அலட்சியம் செய்துள்ளார்.
கடிதம் அனுப்பப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் ராஜாவேல் விசாரிக்கப்பட்டமை, பாதுகாப்பு அமைச்சு ஜனநாயக உரிமைகளை அவமதிப்பை நிரூபிக்கின்றது. எங்கள் தோழர்களின் விபரங்களைக் கோருவதற்கோ, அல்லது அதே விடயத்திற்காக வேறு எந்தவொரு வேட்பாளரினதும் விபரங்களைக் கோருவதற்கோ இராணுவத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.
புலனாய்வுத்துறை அலுவலர்கள் வழக்கமான வேலையில் ஈடுபட்டதாக கூறுவதை சோ.ச.க. நிராகரிக்கிறது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டகால இனவாதப் போரின் முடிவின் பின்னரும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் ஒரு ஆக்கிரமிப்பைப் பேணி வருவதுடன், குறிப்பாக தமிழ் இளைஞர்களை துன்புறுத்துவதை வழக்கமாக முன்னெடுக்கின்றது. எனினும், எமது வேட்பாளர்கள் விசாரிக்கப்பட்ட முதல் தேர்தல் இதுவாகும்.
ராஜவேலை விசாரிக்கும் போது, கட்சிகளுக்கு இடையிலான மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து புலனாய்வு அலுவலர் சுட்டிக் காட்டியமை, ஒரு கொடூரமான விடயமாகும். தேர்தலை குழப்புவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்க இராணுவம் திட்டமிடுகின்றதா?
இராணுவ உளவுத்துறையும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகளும் அவற்றின் ஆத்திரமூட்டல்கள், குழுக்களுக்குள் ஊடுருவுதல் மற்றும் கையாளுதல் அத்துடன் கடத்தல், சித்திரவதை மற்றும் நீதித்துறைக்கு புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட குற்றங்களின் நீண்ட பட்டியலுக்குப் பேர் போனவை ஆகும்.
சோ.ச.க.வை இலக்கு வைக்க இராணுவத்திற்கு ஒரு குறிப்பான காரணம் உள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோ.ச.க,, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனப் பிளவுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்காக போராடுகிறது. எங்களது முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டம், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்கானது ஆகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதாரம், ரயில், தபால் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த போராட்டங்கள் தீவு முழுவதும் வெடித்தன. இது தொழிலாளர்களின் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாக இருப்பதோடு தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஐக்கியத்திற்கு எடுத்துக்காட்டும் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த போராட்டங்களை ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்க போராடியது.
உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய் இலங்கையிலும் மற்ற எல்லா நாடுகளிலும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை துரிதப்படுத்தியுள்ளது.
ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் அபிவிருத்தியடைந்து வருகின்ற மற்றும் வெடிக்கும் சமூக எதிர்ப்பைப் பற்றி பதட்டமாக உள்ளன. ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்குத் தயாராகி வருவதுடன், இராணுவத்தின் ஆதரவுடன் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்கிறார். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு அரசியலமைப்பில் உள்ள தடைகளை அகற்றுவதற்காக, அவரும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கு இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்கின்றனர்.
அண்மைய மாதங்களில், அரசாங்கம் தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக இனவாத பதட்டங்களைத் தூண்டிவிடுகின்றது. அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மீண்டும் “பயங்கரவாதம்” தலை தூக்குவதாக கூறுகின்றன.
தெற்கில், குறிப்பாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில், தொற்றுநோயை கட்டுப்படுத்த "போர்க்கால" பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சாக்குப்போக்கில், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஏராளமான இராணுவ மற்றும் புலனாய்வுத்துறை சிப்பாய்கள் அணிதிரட்டப்பட்டுள்ளனர்.
சோ.ச.க மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (பு.க.க.), ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 2009 இல் முடிவடைந்த புலிகளுக்கு எதிரான இனவாத போரை நியாயப்படுத்துவதற்கு அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் பயன்படுத்திய சிங்கள பேரினவாதத்தையும், அதே போல் தமிழ் தேசியவாதம் மற்றும் புலிகளதும் ஏனைய முதலாளித்துவ தமிழ் கட்சிகளதும் பிரிவினைவாதத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
அதன் கொள்கை ரீதியான போராட்டத்தின் காரணமாக, சோ.ச.க. / பு.க.க., அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள், இராணுவம், பொலிஸ் மற்றும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டது. இந்த தாக்குதல்களுக்கு எதிராக எங்கள் கட்சி அரசியல் ரீதியாகவும் மிகுந்த தைரியத்துடனும் போராடியது.
1998 ஆகஸ்டில், புலிகளின் பிரிவினைவாத வேலைத்திட்டத்திற்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்தின் சோசலிச ஐக்கியத்துக்காகவும் நாம் நடத்திய போராட்டத்தின் காரணமாக, சுதர்சன், சம்பந்தர், ராஜவேல் மற்றும் காசிநாதன் நகுலேஸ்வரன் ஆகியோரை புலிகள் தடுத்து வைத்திருந்தனர். உலக சோசலிச வலைத்தளத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச பிரச்சாரத்திற்குப் பிறகு மட்டுமே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
2007 மார்ச் மாதம், யுத்தம் தீவிரமடைந்து வந்த நிலைமையின் மத்தியில், சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் வேலனையில் உள்ள புங்குடுதீவு மற்றும் வேலனை இடையேயான தரைப்பாலத்தில் காணாமல் போயினர். அனைத்து ஆதாரங்களும் அவர்கள் காணாமல் போனதற்கு இலங்கை கடற்படையே காரணம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய நாங்கள் தொடர்ந்து கோருகிறோம்.
இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் உறுதியான பிரச்சாரத்தின் மூலம் அரசாங்கமும் இராணுவமும் மேற்கொண்டு வரும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியும் என்று சோ.ச.க. நம்பிக்கை கொண்டுள்ளது.
சோ.ச.க.வின் ஜனநாயக உரிமைகளை இராணுவம் அப்பட்டமாக மீறுவதைக் கண்டனம் செய்வதுடன், சோ.ச.க. வேட்பாளர்களை மிரட்டுவதை நிறுத்துமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனையோருக்கும் நாங்கள் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கண்டனக் கடிதங்களை அனுப்பி வைப்பதுடன், பிரதிகளை தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் அனுப்பி வையுங்கள்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
மின்னஞ்சல்: secdefence@defence.lk
தொலைநகல்: +94 11 2541529
தேர்தல் ஆணையத்தின் தலைவர்
மின்னஞ்சல்: chairman@elections.gov.lk
தொலைநகல்: +94 11 2868426
சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை)
மின்னஞ்சல்: wswscmb@sltnet.lk
தொலைநகல்: +94 11 2869239