நியூ யோர்க் டைம்ஸூம் நிக்கோல் ஹான்னா-ஜோன்ஸூம் 1619 திட்டத்தின் முக்கிய வாதங்களை நிராகரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

எவ்வித அறிவிப்போ அல்லது விளக்கமோ இல்லாமல், நியூ யோர்க் டைம்ஸ் 1619 திட்டத்தின் மத்திய வாதத்தை, அதாவது —1776 இல்லை— அடிமைகள் முதன்முதலில் காலனித்துவ வேர்ஜினியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஆண்டான 1619 இல் தான் அமெரிக்கா "நிஜமாக ஸ்தாபிக்கப்பட்டது" என்ற வாதத்தை நிராகரித்துள்ளது.

ஆகஸ்ட் 2019 இல் இத்திட்டம் வெளியிடப்பட்ட போது இதன் ஆரம்ப அறிமுகம் பின்வருமாறு குறிப்பிட்டது,

அமெரிக்க அடிமைத்தனம் தொடங்கிய 400 ஆம் நினைவாண்டை அனுசரிப்பதில் இந்த 1619 திட்டம் நியூ யோர்க் டைம்ஸின் பிரதான முன்முயற்சியாகும். 1619 ஐ நமது நிஜமான ஸ்தாபக ஆண்டாக புரிந்து கொண்டு, நாம் யார் என்பதை நமக்கு நாமே கூறும் இந்த திட்டத்தின் மிக மையத்தில், அடிமைத்தனத்தின் விளைவுகள் மற்றும் கறுப்பின அமெரிக்கர்களின் பங்களிப்புகளை முன்வைத்து, நாட்டின் வரலாற்றை மறுகட்டமைப்பதே இதன் நோக்கமாகும்.

இப்போது திருத்தப்பட்ட வரிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன:

இந்த 1619 திட்டம், அமெரிக்க அடிமைத்தனம் தொடங்கிய 400 ஆம் நினைவாண்டான ஆகஸ்ட் 2019 இல் நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையால் தொடங்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் முன்முயற்சியாகும். இது நமது தேசிய விளக்கங்களின் மையத்தில் அமைந்துள்ள அடிமைத்தனத்தின் விளைவுகள் மற்றும் கறுப்பின அமெரிக்கர்களின் பங்களிப்புகளை முன்வைத்து, நாட்டின் வரலாற்றை மறுகட்டமைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதேபோன்ற மாற்றம் 1619 திட்டத்தின் அச்சு பதிப்பிலும் செய்யப்பட்டது, அது அனைத்து 50 மாநிலங்களின் மில்லியன் கணக்கான பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூல நகல் பின்வருமாறு குறிப்பிட்டது:

ஆகஸ்ட் 1619 இல், வேர்ஜினியாவின் பிரிட்டிஷ் காலனியின் ஒரு கடற்கரை துறைமுகமான பாயிண்ட் கம்போர்ட் (Point Comfort) க்கு அருகில், தொலைதூரத்தில் ஒரு கப்பல் தென்பட்டது. அதில் 20 க்கும் அதிகமான ஆபிரிக்கர்கள் அடிமைகளாக கொண்டு வரப்பட்டு, அவர்கள் காலனித்துவவாதிகளுக்கு விற்கப்பட்டனர். அமெரிக்கா அதுவரையில் அமெரிக்காவாக இருக்கவில்லை, ஆனால் இதுதான் அதன் ஆரம்ப தருணமாக இருந்தது. அதற்குத் தொடர்ந்து வந்த 250 ஆண்டு கால அடிமைத்தனத்தில், இங்கே தோற்றுவிக்கப்பட இருந்த நாட்டின் எந்தவொரு அம்சமும் தீண்டப்படாமலேயே இருந்தது.

வலைத்தளப் பதிப்பு இந்த முக்கிய குறிப்பை அழித்துள்ளது. இப்போது அது பின்வருமாறு குறிப்பிடுகிறது:

ஆகஸ்ட் 1619 இல், வேர்ஜினியாவின் பிரிட்டிஷ் காலனியின் ஒரு கடற்கரை துறைமுகமான பாயிண்ட் கம்போர்ட் (Point Comfort) க்கு அருகில், தொலைதூரத்தில் ஒரு கப்பல் தென்பட்டது. அதில் 20 க்கும் அதிகமான ஆபிரிக்கர்கள் அடிமைகளாக கொண்டு வரப்பட்டு, அவர்கள் காலனித்துவவாதிகளுக்கு விற்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து வந்த பல ஆண்டுகால அடிமைத்தனத்தில், இங்கே தோற்றுவிக்கப்பட இருந்த நாட்டின் எந்தவொரு அம்சமும் தீண்டப்படாமலேயே இருந்தது.

டைம்ஸ் அதன் "நிஜமாக ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு" வாதத்தை எப்போது அழித்தது என்பது முழுவதும் தெளிவாக இல்லை என்றாலும், 1619 திட்டத்தின் பழைய சேமிக்கப்பட்ட பதிப்புகளை ஆய்வு செய்கையில் அனேகமாக அது டிசம்பர் 18, 2019 இல் செய்யப்பட்டிருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறு அழிக்கப்பட்டிருப்பது வெறுமனே வார்த்தை மாற்றங்கள் இல்லை. “நிஜமாக ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு" குறித்த வாதம் என்பது மொத்த அமெரிக்க வரலாறும் கறுப்பின மக்கள் மீதான வெள்ளையின மக்களின் வெறுப்பில் வரையறுக்கப்பட்டிருந்தது மற்றும் அதில் வேரூன்றி இருந்தது என்ற அத்திட்டத்தின் வலியுறுத்தலில் முக்கிய அம்சமாக இருந்தது. இத்திட்டத்தை உருவாக்கிய நிக்கோல் ஹான்னா-ஜோன்ஸால் தம்பட்டமடிக்கப்பட்ட இந்த விளக்கத்தின்படி, அமெரிக்க புரட்சியானது அடிமைதனத்தை அழிப்பதற்கான பிரிட்டிஷ் திட்டங்களுக்கு எதிராக அடிமைத்தனத்தைப் பாதுகாக்க வட அமெரிக்க வெள்ளையின மக்களால் தொடங்கப்பட்ட நிகரற்ற இனவாத எதிர்புரட்சியாக அமைகிறது. இந்த வாதத்திற்கு ஆதரவாக எந்த வரலாற்று சான்றும் இல்லை என்ற உண்மையும் கூட, ஒரு புதிய தேசத்தின் ஸ்தாபிதம் வரலாற்றுரீதியில் 1776 உடன் அடையாளப்படுத்துதல் ஒரு கட்டுக்கதை என்று அறிவிப்பதில் இருந்து அது டைம்ஸையும் ஹான்னாஹ்-ஜோன்ஸையும் தடுத்துவிடவில்லை, அதே வேளையில் உள்நாட்டு போரானது அடிமைத்தனத்தை ஒழிப்பதை நோக்கமாக கொண்ட ஒரு முற்போக்குத்தனமானதான போராட்டமாக இருந்தது என்று வாதிடப்படுகிறது. நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் ஹான்னாஹ்-ஜோன்ஸின் கருத்துப்படி, அடிமைத்தனத்திற்கும் ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டம் எப்போதும் கறுப்பின அமெரிக்கர்களால் தனியாக தொடுக்கப்பட்ட போராட்டங்களாக இருந்தன.

டைம்ஸ் எந்தவித விளக்கமோ அல்லது அறிவிப்போ இல்லாமல், அதன் மத்திய வாதத்தை, ஒரு சில மறைமுக வார்த்தைகளுடன் "மறைத்துக் கொள்வது" மலைப்பூட்டும் அளவுக்கு புத்திஜீவித நேர்மையின்மை மற்றும் முற்றுமுதலான மோசடி நடவடிக்கையாகும். ஆகஸ்ட் 2019 இல் அது 1619 திட்டத்தை தொடங்கிய போது, அமெரிக்க வரலாறு குறித்து மாணவர்களுக்கு என்ன மற்றும் எவ்வாறு கற்றுக் கொடுக்கப்படுகிறதோ அதை தீவிரமாக மாற்றுவதே அத்திட்டத்தின் நோக்கம் என்பதாக டைம்ஸ் அறிவித்தது. 1619 திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும் நோக்கில், நியூ யோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட அதன் விளக்கத்தின் மூல நகல்கள் நூறாயிரக் கணக்கில் அச்சிடப்பட்டு அமெரிக்கா எங்கிலுமான பள்ளிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களுக்கு வினியோகிக்கப்பட்டன. டைம்ஸ் வழங்கி விளக்கத்திற்கேற்ப தங்களின் பாடங்களை மாற்றிக் கொள்வதாக பெரும் எண்ணிக்கையிலான பள்ளிகள் அறிவித்தன.

1619 தான் "நிஜமாக ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு" என்ற வாதம் அழிக்கப்பட்டிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 18 இல் தான் வெளிச்சத்திற்கு வந்தது. திருமதி ஹான்னாஹ்-ஜோன்ஸ் CNN இல் நேர்காணல் செய்யப்பட்டு, 1619 திட்டம் மீது ஒரு பாசிசவாத நிலைப்பாட்டிலிருந்து டொனால்ட் ட்ரம்பின் கண்டத்திற்கு விடையிறுக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டார். “நிஜமாக ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு" குறித்த சர்ச்சை "நிச்சயமாக" உண்மையில்லை என்று ஹான்னா-ஜோன்ஸ் அறிவித்தார். இன்னும் வியப்பூட்டும் அளவுக்கு, மோசடியைக் கண்கூடாக எடுத்துக்காட்டும் விதமாக, டைம்ஸ் அதுபோன்றவொரு வாதத்தை முன்வைக்கவே இல்லை என்று வாதிடும் அளவுக்கு அவர் சென்றார்.

அந்த கலந்துரையாடல் பின்வருமாறு இருந்தது:

சிஎன்என்: 1619 திட்டம் என்றால் என்ன குறித்த விளங்கப்படுத்த நீங்கள் முயல்கிறீர்கள் என்பதும், அது இந்நாடு எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறித்த வரலாறை மாற்றி எழுதுவதற்கான ஒரு முயற்சி இல்லை என்பதும் எனக்குத் தெரியும் என்ற ஒரு தவறான கருத்துரு குறித்து ட்ரம்பின் நிர்வாக ஆணை குறிப்பிடுகிறது.

ஹான்னா-ஜோன்ஸ்: நிச்சயமாக, இந்நாடு 1776 இல் ஸ்தாபிக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். இந்நாடு 1776 இல் ஸ்தாபிக்கப்படவில்லை என்று அத்திட்டம் வாதிடவில்லை.

நிச்சயமாக இதுவொரு முற்றுமுதலான பொய்யாகும். ஹான்னா-ஜோன்ஸ் எண்ணற்ற ட்வீட் சேதிகளிலும், பேட்டிகள் மற்றும் சொற்பொழிவுகளிலும் "நிஜமாக ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு" குறித்த வாதத்தை மீண்டும் மீண்டும் முன்வைத்துள்ளார். இவை செய்தி அறிக்கைகளிலும் இணையத்தில் தராளமாக கிடைக்கும் காணொளி காட்சிகளிலும் உள்ளன. அவரின் சொந்த ட்வீட்டர் கணக்கிலேயே கூட, 1619 ஆம் ஆண்டுக்கு பக்கத்தில் 1776 ஆம் ஆண்டு மீது குறுக்காக கோடு கிழிக்கப்பட்ட பின்புலத்தில் அவரின் புகைப்படம் உள்ளடங்கி உள்ளது.

ஒரு பொய்யில் அகப்பட்டு கொண்ட திருமதி ஹான்னா-ஜோன்ஸ் இன்னும் பெரிய மற்றும் புதிய பொய்களுடன் அதை இரட்டிப்பாக்குகிறார். டைம்ஸின் பத்திரிகையின் அந்த முக்கியஸ்தர் அவர் திட்டத்தின் மத்திய வாதத்தை மட்டும் மறுக்கவில்லை. தனக்குத்தானே முரண்படும் பாணியில், “நிஜமாக ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு" குறித்த வாதம் வீண்பேச்சு பொழிவில் ஒரு துளி என்றும் கூறுகிறார். 1619 திட்டமானது, வெறுமனே அடிமைத்தனம் மீதான ஆய்வை அமெரிக்க வரலாற்றின் முன்முகப்புக்கு நகர்த்துவதற்கான ஒரு முயற்சி என்றவர் CNN க்குக் கூறினார்.

ஹான்னா-ஜோன்ஸ் வாதிடுவதைப் போல, பிரிட்டிஷ் வடக்கு அமெரிக்காவிலும் (1619-1776) மற்றும் அமெரிக்காவிலும் (1776-1865) அடிமைத்தன உரிமை நிலவிய அந்த ஆண்டுகளின் வரலாறு மீது அதிக கவனத்தைக் கொண்டு வர மொத்தத்தில் டைம்ஸ் முயன்றிருந்தது என்றால், அங்கே ஒருபோதும் முரண்பாடே இருந்திருக்கக்கூடாது. உலக சோசலிச வலைத்தளமோ, அல்லது அது நேர்காணல் செய்த ஜேம்ஸ் மெக்பெர்சன், ஜோர்டன் வுட், விக்டோரியா பைனம், ஜேம்ஸ் ஓக்ஸ், கிளேபோர்ன் கார்சன், ரிச்சர்ட் கார்வர்டைன், டெலொரெஸ் ஜனெஸ்கி மற்றும் அடோல்ஃப் ரீட் ஜூனியர் ஆகிய அறிஞர்களோ, அமெரிக்காவின் வரலாற்றுரீதியிலான அபிவிருத்தியில் அடிமைத்தனத்தின் முக்கியத்துவத்தின் மீது ஒருபோதும் சர்ச்சை செய்திருக்க மாட்டார்கள். அடிமைத்தனம் மீதான ஆய்வுகளுக்கும், அமெரிக்காவின் வரலாற்றுரீதியிலான அபிவிருத்தி மீது அதன் தாக்கமும் சம்பந்தமாக பத்தாயிரக் கணக்கான நூல்களும் அரிய கட்டுரைகளும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 2019 தொடக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட, 1619 திட்டம் மீதான் அதன் ஆரம்ப விடையிறுப்பில், WSWS பின்வருமாறு விளங்கப்படுத்தியது:

அமெரிக்க அடிமைத்தனமானது பரந்த மதிப்பார்ந்த வரலாற்று மற்றும் அரசியல் முக்கியத்துவத்துடன் ஒரு மிகப் பிரமாண்ட விடயமாகும். 1619 நிகழ்வுகள் அந்த வரலாற்றின் பாகமாக உள்ளன. ஆனால் கம்போர்ட் துறைமுகத்தில் என்ன நடந்ததோ அது உலகளாவிய அடிமைத்தன வரலாற்றில் ஓர் அத்தியாயமாக உள்ளது, இது பண்டைய உலகம் வரையில் நீள்வதுடன், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தோற்றுவாய்கள் மற்றும் அபிவிருத்தி வரையில் நீள்கிறது.

டைம்ஸிற்கான WSWS இன் மறுப்புரை மேற்கத்திய அரைக்கோளத்தில் அடிமைத்தன உரிமை உருவான விபரங்களை வழங்கியதுடன், முதலாளித்துவத்தின் உருவாக்கத்தில் அதன் மத்திய பாத்திரம், மற்றும் உள்நாட்டு போரில் அதன் புரட்சிகரமான சீரழிவு குறித்தும் விபரங்களை வழங்கியது. அதன் எழுத்தாளர்களை "கறுப்பின-எதிர்ப்பு இனவாதிகள்" என்று ட்வீட்டரில் கண்டித்ததன் மூலமாக ஹான்னா-ஜோன்ஸ் WSWS இன் தலையீட்டுக்கு விடையிறுத்தார்.

பிரின்ஸ்டனின் சீன் விலின்ட்ஜ் உடன் இணைந்து, வூட், மெக்பெர்சன், பைனம் மற்றும் ஓக்ஸ் ஆகியோர் உண்மையில் உள்ள பிழைகளைத் திருத்துமாறு குறிப்பிட்ட திருத்தங்களைக் கோரி டிசம்பர் மாத இறுதியில் டைம்ஸிற்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதிய போது, அடிமைத்தனம் முக்கியமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் ஆட்சேபணைகள் முடிந்துவிடவில்லை என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அந்த ஐந்து வரலாற்றாளர்களும் "அத்திட்டத்திலும் மற்றும் அதற்குப் பின்னால் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இருந்த நிகழ்வுபோக்கிலும் இருந்த உண்மைக்குப் புறம்பான பிழைகளில் சிலவற்றின் மீது" அவர்களின் மனக்கவலைகளை வெளியிட்டிருந்தனர்.

நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜேக் சில்வர்ஸ்டீன் ஆணவத்துடன் நிராகரிக்கும் விதமான ஒரு பதிலை வெளியிட்டார், அதில் அவர் அவர்களின் விமர்சனங்களைத் திட்டவட்டமாக நிராகரித்தார்:

அதில் கையெழுதிட்டிருப்பவர்களின் படைப்புகளை நாங்கள் மதித்தாலும், மேதை பொருந்திய மனக்குறைகளால் அவர்கள் உந்தப்பட்டிருப்பதை ஏற்றுக் கொண்டாலும், தேசத்தின் கடந்த காலத்தின் மீது வெளிச்சமிட அவர்களின் சொந்த எழுத்துக்களில் அவர்கள் முயற்சிகளைச் செய்திருப்பதைப் பாராட்டினாலும், எங்களின் திட்டம் உண்மைக்குப் புறம்பான பிழைகளைக் கொண்டுள்ளது என்றும், அது வரலாற்று புரிதலைக் காட்டிலும் சித்தாந்தத்தால் உந்தப்பட்டுள்ளது என்றும் கூறும் அவர்களின் வாதத்துடன் நாங்கள் உடன்படவில்லை. நாங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம் என்றாலும், 1619 திட்டத்தில் திருத்தங்களைக் கோருவதை ஆணைப் பத்திரமாக நாங்கள் ஏற்க முடியாது.

சில்வர்ஸ்டீனின் அவமதிப்பான கடிதம் டிசம்பர் 20 இல் வெளியானது. டைம்ஸின் 1619 திட்டம் உறுதியாக பிழையானது என்பதும், அந்த பத்திரிகை புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் ஆட்சேபித்திருந்த கட்டுரையின் இணையவழி எழுத்துக்களில் உள்ளூர ஓர் அடிப்படை மாற்றம் செய்திருந்தது என்பதும் அப்போது அவருக்கு தெரியும். சில்வர்ஸ்டீனின் நடத்தை தொழில்துறைரீதியிலான ஒழுக்கமுறையும் புத்திஜீவித நேர்மையும் கூட முற்றிலுமாக இல்லை என்பதை எடுத்துக்காட்டியது.

வரலாற்றை அது திரித்துக் கூறியதையும் அதன் பிழையை நேர்மையின்றி மூடிமறைக்க முயன்றதையும் ஒப்புக் கொண்டு டைம்ஸ் இப்போது பகிரங்கமான ஓர் அறிக்கை வெளியிட கடமைப்பட்டுள்ளது. அது பேராசிரியர்கள் ஜோர்டன் வுட்ஸ், ஜேம்ஸ் மெக்பெர்சன், சீன் விலின்ட்ஜ், விக்டோரியா பைனம், ஜேம்ஸ் ஓக்ஸ் ஆகியோரிடமும் மற்றும் 1619 திட்டத்தை விமர்சித்ததற்காக அது அவமதிக்க முயன்ற ஏனைய எல்லா அறிஞர்களிடமும் அது பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். துல்லியமாக அறிவு மழுங்கிய திரு. சில்வர்ஸ்டீனும் டைம்ஸ் ஆசிரியர் குழுவில் உள்ள அவரின் உள்ளாட்களும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

இதற்கும் கூடுதலாக, அவரின் முக்கிய கட்டுரைக்காக கருத்துரை பிரிவில் இந்த வசந்த காலத்தில் ஹான்னா-ஜோன்ஸிற்குக் கொடுக்கப்பட்ட புலிட்ஜர் விருது திரும்பப் பெறப்பட வேண்டும், அக்கட்டுரையிலும் கூட அவர் "நிஜமாக ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டு" மற்றும் அமெரிக்க புரட்சி குறித்து பொய்யான வாதங்களை வைத்திருந்தார்.

1619 திட்டம் ஒருபோதும் வரலாற்று தெளிவுபடுத்தல் சம்பந்தமாக இருக்கவில்லை. செப்டம்பர் 2019 இல் WSWS எச்சரித்தவாறு, “1619 திட்டமானது, 2020 தேர்தல்களின் இதயதானத்தில் இனவாத அரசியலைத் திணித்து, தொழிலாள வர்க்கத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியின் ஒரு அம்சமாகும்.” டைம்ஸ் பணியாளர்களுடனான ஒரு சந்திப்பு குறித்து கசியவிடப்பட்ட விபரங்களில் வெளிப்பட்டவாறு, ரஷ்ய-விரோத பிரச்சாரம் தோல்வியடைந்த பின்னர் ஜனநாயகக் கட்சியை நோக்கி ஒருங்குவிப்பைத் திசைதிருப்ப அது உதவும் என்று நிர்வாக பதிப்பாசிரியர் டீன் பாகெட் நம்பினார். அவர் பின்வருமாறு கூறினார்:

[இ]னமும், இனம் சம்பந்தமான புரிதலும் அமெரிக்க செய்திகளை நாம் எவ்வாறு கொண்டு செல்கிறோம் என்பதன் பாகமாக இருக்க வேண்டும் … அவ்விதமாக இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சிந்திக்குமாறு நமது வாசகர்களைக் கற்பிப்பதற்காகவே 1619 திட்டத்தை இந்தளவுக்கு இலட்சியத்துடனும் விரிவான விதத்திலும் நாம் தொடங்குவதற்கு ஒரு காரணமாக இருந்தது. அடுத்தாண்டில் இனம் என்பது—வெளிப்படையாக கூறுவதானால், இதை நீங்கள் இந்த விவாதத்திலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்—அடுத்தாண்டில் இனம் என்பது அமெரிக்க செய்திகளின் பெரும் பங்காக இருக்கப் போகிறது.

டைம்ஸால் நடத்தப்பட்ட இந்த மோசடி ஏற்கனவே ஆழமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. WSWS எச்சரித்தவாறே, 1619 திட்டமானது டொனால்ட் ட்ரம்புக்கு ஒரு மிகப்பெரும் வெகுமதியாக ஆகியுள்ளது. செப்டம்பர் 17, அரசியலமைப்பு தினத்தில், தேசிய தகவல் களஞ்சிய அருங்காட்சியகத்தில் ட்ரம்ப் வழங்கிய ஓர் உரையில் அவர், 1619 திட்டத்தைப் பெயர் குறிப்பிட்டு, "தீவிர இடதிற்கு" எதிராக சுதந்திர பிரகடனம் மற்றும் அரசியலமைப்பின் ஒரு பாதுகாவலராக வெறுப்பூட்டும் விதத்தில் தன்னைக் காட்டிக் கொண்டார். ஏறக்குறைய அவரின் மிரட்டும் தொனியில், "நமது இளைஞர்கள் அமெரிக்காவை நேசிக்க கற்றுக் கொடுக்கும்" விதத்தில், "தேசப்பற்று கல்வியை மீளமைக்க" இருப்பதாக ட்ரம்ப் எச்சரித்தார்.

ட்ரம்பின் தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக தான் ஹான்னாஹ்-ஜோன்ஸ் CNN இல் தோன்றினார். ட்ரம்ப் "1619 திட்டத்தைக் கலாச்சார போர்களுக்குள் கொண்டு வர" முயன்று வருகிறார் என்றவர் குறிப்பிட்டார். “தெளிவாக அவர், இனவாத பிளவுகளைத் தூண்டிவிட முயலும் ஒரு தேசியவாத பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். அதை அவர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு கருவியாக காண்கிறார்,” என்று கூறுமளவுக்கு அவர் சென்றார்.

உண்மைக்கு இதுவே போதுமானது. ஆனால் இனவாத பிளவுகளைத் தூண்டும் முக்கிய "ஆசாமிகளில்" ஹான்னா-ஜோன்ஸூம் ஒருவராவார்; இனவாத வெறுப்பை அமெரிக்க வரலாற்றின் உந்து சக்தியாக செய்யும் ஒரு வரலாற்று சொல்லாடலை விமர்சித்த எல்லா விமர்சகர்களையும் கடுமையான தாக்கி, நியூ யோர்க் டைம்ஸ் தான் "1619 திட்டத்தைக் கலாச்சார போர்களுக்குள்" கொண்டு வந்தது.

வரலாற்றைப் பொய்மைப்படுத்துவது என்பது எப்போதுமே பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகளின் நலன்களுக்குச் சேவையாற்றுகிறது. நியூ யோர்க் டைம்ஸ், அமெரிக்க புரட்சி மற்றும் உள்நாட்டு போரை மறுத்துரைத்து சிறுமைப்படுத்தியதன் மூலமாக, ட்ரம்ப் அவரின் நவ-பாசிசவாத அரசியலின் நலன்களுக்காக அமெரிக்க புரட்சிகளின் மாபெரும் ஜனநாயக மரபியத்தின் ஒரு பாதுகாவலராக தன்னை மோசடியாக காட்டிக் கொள்வதற்கு நியூ யோர்க் டைம்ஸ் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது.

Loading