முன்னோக்கு

ட்ரம்பின் சர்வாதிகாரத் திட்டம்: விவாதம் எதை அம்பலப்படுத்தியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

டொனால்ட் ட்ரம்புக்கும் ஜோசப் பைடெனுக்கும் இடையே செவ்வாய்கிழமை இரவு நடந்த விவாதத்தின் சீர்கெட்ட காட்சி, வரலாற்றில் அமெரிக்காவினது உண்மையின் தருணமாக நினைவுகூரப்படும். என்றென்றைக்கும் பாதிப்பற்ற அமெரிக்க ஜனநாயகம் குறித்த மாயை சிதைந்துள்ளது. அரசியல் யதார்த்தம் பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களின் அடுக்கடுக்கான எண்ணற்ற வஞ்சக பிரச்சாரத்தினால் வெடித்து சிதறி, ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கவும் அரசியலைப்புரீதியில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் வெள்ளை மாளிகை மிகவும் முன்னேறிய சூழ்ச்சியின் அரசியல் நரம்பு மண்டலத்தின் மையமாக உள்ளது என்ற மறுக்க முடியாத உண்மை அம்பலப்பட்டுள்ளது.

செவ்வாயன்று இரவு ட்ரம்ப் வெளியிட்ட உறுமலும் குரைப்பும் சந்தேகத்திற்கிடமின்றி அவரின் உத்தேசங்களை வெளிப்படுத்துகின்றன. ஹிட்லர் அவரின் Mein Kampf இல் எழுதிய அளவுக்கு ட்ரம்பும் அந்த விவாதத்தின் போது அவர் வைத்த அச்சுறுத்தல்களில் கடுமையாக உள்ளார். ட்ரம்ப் இந்த நவம்பர் தேர்தலை, கடந்த ஜூனில் வாஷிங்டன் டி.சி. இல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளை அவர் கட்டவிழ்த்து விட்ட போது தொடங்கிய அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஒரு தொடர்ச்சியாக பார்க்கிறார்.

ட்ரம்பின் அரசியல் மூலோபாயம் மிகவும் அப்பட்டமாக இருப்பதுடன், “படுகொலை! பின்னர் போர் நாய்கள் கட்டவிழ்த்து விடப்படும்" (“Cry ‘Havoc,’ and let slip the dogs of war”) என்ற தரங்குறைந்த வார்த்தையில் அதை தொகுத்தளிக்க முடியும். சதி பின்வருமாறு கட்டவிழ்த்து விடப்படும்:

முதலில், வாக்கு எண்ணிக்கையில் மில்லியன் கணக்கிலான வாக்கு வித்தியாசத்தில் அவர் தேர்தல் தோல்வியைக் காட்டும் என்று அவர் முழுவதுமாக எதிர்பார்ப்பதால், ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையைச் சட்டவிரோதமாக்கும் உத்தேசத்துடன் வாக்குப்பதிவு நிகழ்முறையைச் சீர்கெடுக்க, தேர்தல் பிரச்சாரத்தின் எஞ்சியுள்ள மாதங்களில், அவரால் ஆன அனைத்தையும் செய்வார். வாக்காளர்களைப் பீதியூட்டி வாக்குச்சாவடிகளில் வன்முறை நடவடிக்கைகளை நடத்த, பொலிஸ் மற்றும் அடையாளந்தெரியாத மத்திய அரசு முகவர்களைக் கொண்டு அவர்களின் உதவியுடன், பாசிசவாத குண்டர்களைத் தூண்டிவிட, வாக்குப்பதிவு மோசடி குறித்து இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர் பயன்படுத்துவார்.

இரண்டாவதாக, தேர்தல் நாள் இரவு ட்ரம்ப், மின்னஞ்சல் மூலமாக இடப்பட்ட வாக்குகள் அனைத்தும் செல்லாதவை என்று கூறி, அவரே ஜெயித்து விட்டதாக அறிவிக்கக்கூடும். வாக்குகளை அழித்தும் இதர வடிவங்களில் மோசடி செய்தும் தேர்தல் "சீர்குலைக்க" பட்டால் மட்டுமே அவர் தோற்கக்கூடும் என்றவர் அந்த விவாதத்தின் போது மீண்டும் மீண்டும் கூறினார். கருத்துக்கணிப்புகளில் அவர் பலமாக முன்னணியில் இருக்கிறார் என்றாலும், முக்கிய தேர்தல்கள மாநிலங்களில் வெற்றியை அறிவிக்க அவருக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தில் மின்னஞ்சல் மூலமாக இடப்பட்ட வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஆவதை எதிர்நோக்குகிறார்.

மூன்றாவதாக, ட்ரம்ப் தேர்தல் நாளான நவம்பர் 3 க்கும் பதவியேற்பு தினமான ஜனவரி 20 க்கும் இடையே உள்ள 10 வாரங்களில் அவரது ஆதரவாளர்களை வீதிகளில் அணிதிரட்டவும், அதேவேளையில் தேர்தலை அவருக்குச் சாதகமாக காட்ட ஏற்கனவே அவரது ஆட்கள் குவிக்கப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்திடம் செல்லவும் பயன்படுத்தக்கூடும். “வாக்கெடுப்பைக் கவனிக்க" அவர் நீதிமன்றத்தை "எதிர்நோக்குவதாக" செவ்வாய்கிழமை அவர் மீண்டும் தெரிவித்தார். அவருக்கு குடியரசுக் கட்சியின் முழு ஆதரவு உள்ளது, தேர்தல் சம்பந்தமான எந்தவொரு நீதிமன்ற முடிவிலும் தீர்மானிக்கும் வாக்கை வழங்கும் ஒரு இடத்தில் விரைவாக ட்ரம்பின் உச்சநீதிமன்ற நியமனமான Amy Coney Barrett ஐ உறுதிப்படுத்துவதை நோக்கி குடியரசுக் கட்சி அழுத்தமளித்து வருகிறது.

பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பிரிவுகளுக்குள் இருக்கும் ஆதரவையும், அத்துடன் உள்நாட்டு பாதுகாப்புத்துறை மீதான அவர் கட்டுப்பாட்டையும் ட்ரம்ப் கணக்கில் கொண்டுள்ளார். DHS இன் தற்காலிக செயலர், ட்ரம்பின் நெருங்கிய நண்பரான சாட் வொல்ஃப் இம்மாதம் டென்வர் மற்றும் பிலடெல்பியா போன்ற "சரணாலய நகரங்களில்" புலம்பெயர்வு மற்றும் சுங்க அமலாக்கத்துறை மூலமாக புலம்பெயர்வு சோதனைகளை நடத்த தயாரிப்பு செய்து வருகிறார். தேர்தலுக்கு முன்னதாக பல பிரதான பெருநகரங்களில் மத்திய அரசின் துணை இராணுவப்படைகள் அணித்திரட்டப்படும்.

இறுதியாக, அவர் சூழ்ச்சியின் வெற்றிக்கு எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியின் முதுகெலும்பற்ற தன்மையைக் காரணியாக கொண்டுள்ளார். ஒரு சில வெற்று அச்சுறுத்தல்களை உதிர்ப்பதற்கு அப்பாற்பட்டு ஜனநாயகக் கட்சியினர் அவரை தடுக்க ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று அவர் முழுமையாக எதிர்பார்க்கிறார்.

ஜனநாயகக் கட்சியின் மானக்கேடான திவால்நிலைமை செவ்வாய்கிழமை இரவே காட்சிக்கு வந்தது. பாசிசவாதத்தை நோக்கி நகர்ந்து வரும் ஆளும் வர்க்கத்தின் வக்கிரத்தனத்திற்கு ட்ரம்ப் ஆளுருவாக உள்ள நிலையிலும், பலவீனமான மற்றும் உதறலெடுத்த பைடென் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மரண படுக்கையில் அதற்குச் சரியான உதாரணமாக திகழ்கிறார். அவர் எதிர்ப்பாளர் உள்நாட்டு போர் மற்றும் சர்வாதிகாரத்திற்குத் தயாரிப்பு செய்து வருகிறார் என்ற உண்மையைத் தட்டிக்கழித்து, “இது தான் உடன்படிக்கை" என்று முடிவின்றி ஒத்தூதியவாறு, பைடென், அந்த விவாதத்தில் 90 நிமிடங்கள் செலவிட்டார். வாக்குகள் எண்ணப்பட்டதும், அரசியல் நெருக்கடி தீர்ந்துவிடும், அனைத்தும் வழமைக்குத் திரும்பிவிடும் என்றவர் அர்த்தமின்றி அறிவித்தார்.

ட்ரம்புக்கு எதிராக எந்தவொரு மக்கள் அணித்திரள்வையும் தடுப்பதற்காக, யதார்த்தத்தை மூடிமறைக்கவும் மற்றும் குறைத்துக் காட்டவும் அதனால் ஆனமட்டும் அனைத்தையும் செய்வதே ஜனநாயகக் கட்சி வகிக்கும் பாத்திரமாக உள்ளது. உச்சநீதிமன்ற வேட்பாளர் Amy Barrett ஐ அவர் எதிர்க்கவில்லை என்று அறிவிக்கும் அளவுக்கு பைடென் அவர் வழியில் சென்றார். நீதிமன்றத்திற்கு வந்ததும் அவர் பைடெனின் அரசியல் சவப்பெட்டிக்கு ஆணி அடிப்பவராக மாறுபவர்களில் ஒருவராக இருப்பார் என்ற போதும் கூட, அப்பெண்மணியை "ஓர் அருமையான நபர்" என்றவர் புகழ்ந்தார்.

அந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சாண்டர்ஸின் "அதி இடது அறிக்கையை" ஆதரிப்பதாக ட்ரம்ப் பைடெனைச் சீண்டிய போது, “பெரிதும் ஒட்டுமொத்த வெறுப்புடன்... நான் பேர்ணி சாண்டர்ஸைத் தோற்கடித்தேன்,” என்று கூறி பைடென் இடதுசாரி அரசியலுடன் அவருக்கு தொடர்பில்லை என்று விடையிறுத்தார்.

பாசிசவாத Proud Boys அமைப்புக்கு ட்ரம்ப் வார்த்தையளவில் வீரவணக்கம் கூறியதற்கும் கூட பைடென் எந்தவித விடையிறுப்பும் காட்டவில்லை. தேர்தலில் போட்டி நிலவுவதால், அவரின் சொந்த ஆதரவாளர்களை "அமைதியாக இருக்க" கோருவதற்கு அவர் உறுதியளித்தார், அதேவேளையில் ட்ரம்போ அவர்கள் அணித்திரட்டப்பட்டு முடிவுகளைச் சவால்விடுப்பார்கள் என்று வலியுறுத்தினார்.

ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதன் மூலமாக சர்வாதிகாரத்தைத் தவிர்த்துவிடலாம் என்று நம்புவது, ஒருவர் யதார்த்தத்தின் முன்னால் கண்களை மூடிக் கொள்வதாக இருக்கும். ஜனநாயகக் கட்சியினரின் செயல்பாடுகள் வார்த்தையளவில் ஜனநாயகத்திற்கு அர்பணிப்பதன் மீதல்ல, மாறாக அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் வர்க்க நலன்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

சர்வாதிகார அச்சுறுத்தலை எதிர்ப்பதற்கான எந்தவொரு மூலோபாயமும், அரசியல் நெருக்கடிக்கு அடியிலிருக்கும் காரணங்களைச் சரியாக புரிந்து கொள்வதன் அடிப்படையில் இருக்க வேண்டும். ட்ரம்ப் வெகுவாக ஆழ்ந்த ஒரு நோயின் வெளிப்பாடாவார், அதன் தோற்றுவாய்களையும் தன்மையையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

அங்கே ஒன்றோடொன்று பிணைந்த பல காரணிகள் செயல்பட்டு வருகின்றன.

முதலாவதாக அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால தாக்கம் கொண்ட சீரழிவு. ஒரு தசாப்தத்திற்கும் சற்று கூடுதலான காலத்தில், அமெரிக்கா இரண்டு பிரதான நெருக்கடிகளால், முதலில் 2008 இலும் இப்போது 2020 இலும், சீரழிக்கப்பட்டுள்ளது. இவ்விரு சம்பவங்களிலுமே, ஆளும் வர்க்கம் நிதியியல் சந்தைகளைத் தாங்கிப் பிடிக்க, முக்கியமாக பணத்தை அச்சிட்டதன் மூலமாக, பாரியளவில் உறுதி செய்யவியலாத அளவிற்கு நிதி பாய்ச்சுவதன் மீது தங்கியிருந்தது. வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதளவில் செல்வவளம் பணக்காரர்களுக்குக் கைமாற்றப்பட்டவதைத் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.

அமெரிக்காவின் பலவீனமடைந்து வரும் பொருளாதாரத்திலிருந்து எழுகின்ற இரண்டாவது காரணம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அந்தஸ்தில் செங்குத்தாக ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியாகும். முடிவின்றி 30 ஆண்டுகால போருக்கு மத்தியிலும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் உலகளாவிய மேலாதிக்க சக்தியாக அதன் இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை. இப்போதோ, அது சீனாவின் வளர்ச்சியை உயிர்வாழ்வதற்கான ஓர் அச்சுறுத்தலாக பார்க்கிறது. எல்லா ஆதாரவளங்களும் சீனாவுடனான உலகளாவிய போருக்குத் தயாரிப்பு செய்ய, இதில் ரஷ்யாவுடனான மோதலும் ஒரு கூறுபாடாக உள்ள நிலையில், இவற்றுக்காக திருப்பி விடப்பட வேண்டியுள்ளது.

மூன்றாவது மலைப்பூட்டும் அளவிற்கு சமூகத்தின் ஒரு சிறிய அடுக்கின் கைகளில் மிகப் பெருமளவில் செல்வம் குவிந்துள்ளது. அமெரிக்காவின் 400 மிகப்பெரிய செல்வந்தர்கள் இப்போது 3.2 ட்ரில்லியன் டாலரைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர், மிகப்பெரும் பணக்காரர்களில் ஒரு சதவீதத்தினர் அடிமட்டத்திலுள்ள 40 சதவீதத்தினர் கொண்டிருப்பதை விட அதிக செல்வவளத்தைக் கொண்டுள்ளனர். கடந்த நான்கு தசாப்தங்களில் அடிமட்ட மக்களில் 90 சதவீதத்தினரின் வருமான மந்தநிலை 447 ட்ரில்லியன் நிகர வருவாய் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக சமீபத்தில் RAND கார்பரேஷனின் ஒரு ஆய்வு கணக்கிட்டது. இந்தளவுக்கு மிகப்பெரியளவிலான சமத்துவமின்மை மட்டங்களின் நிலைமைகளுக்குக் கீழ் ஜனநாயகம் உயிர்வாழ முடியாது.

அடியிலுள்ள இந்த எல்லா நிலைமைகளும் இந்த தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ளன, இந்நோய் அமெரிக்க சமூகத்தின் செயற்பிறழ்ச்சியைக் கூர்மையான விதத்தில் எடுத்துக்காட்டி உள்ளது. இதன் செல்வவளத்தைப் பாதுகாப்பத்தைத் தடுப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒரு குற்றகரமான நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்காக ட்ரம்ப் பேசுகிறார், செயல்பட்டு வருகிறார். கோவிட்-19 தொற்றுநோய்க்கான அதன் விடையிறுப்பு மக்களின் உயிர்கள் மற்றும் ஆரோக்கியம் மீதான அதன் அவமதிப்பை எடுத்து காட்டியுள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதன் கோரிக்கை "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" அதன் வேலைத்திட்டத்தின் இன்றியமையா அம்சமாக உள்ளது. “சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கும்" இந்த திட்டம் ஏற்கனவே அமெரிக்காவில் 210,000 இக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்க இட்டுச் சென்றுள்ளது. மத்திய அரசின் பிணையெடுப்பு வோல் ஸ்ட்ரீட் பங்கு மதிப்புகள் உயர்வதற்கு இட்டுச் சென்றுள்ள அதேவேளையில், பத்து மில்லியன் கணக்கானவர்களோ வேலையிழந்துள்ளனர், பிரதான பெருநிறுவனங்கள் பாரியளவில் வேலைகளை நிறுத்தி வைக்க திட்டமிட்டு வருகின்றன.

ஒரு வெடிப்பார்ந்த மற்றும் ஒருவேளை புரட்சிகர வடிவம் எடுக்கக்கூடிய பாரிய சமூக கோபத்தை எதிர்கொண்டிருப்பதை ஆளும் வர்க்கம் அறிந்துள்ளது. இது தான் வெறிப்பிடித்த பொறுப்பற்ற தன்மையில் ட்ரம்பின் நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது. சமூக எதிர்ப்பின் அபிவிருத்தி குறித்து பீதியுற்றுள்ள அவர் ஒவ்வொரு போராட்டத்தையும் எதிர்ப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் "தீவிர இடது" மற்றும் "சோசலிசத்தின்" அபாயகமாக பார்க்கிறார். வேலைநிறுத்தங்களின் அலையில் ஏற்கனவே வெளிப்படையாக உள்ள தொழிலாள வர்க்க போர்குணம் அதிகரித்திருப்பதை, வன்முறை மூலமாக அல்லாமல் வேறெந்த வழியிலும் வெளியேற முடியாமல் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் ஒப்புக் கொள்கின்றன.

1920 கள் மற்றும் 1930 களில் பாசிசவாத அதிகரிப்பின் படிப்பினைகள் எரிந்து கொண்டிருக்கும் சமகாலத்திற்குப் பொருத்தமாக உள்ளன. முதலாளித்துவ சமூகத்தின் இயல்பிலேயே பொதிந்துள்ள காரணங்களால், அதன் நெருக்கடியை ஜனநாயக வழிவகைகளில் தீர்க்க ஆளும் வர்க்கம் இலாயக்கற்று போகும் போது, பாசிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்குமான திருப்பம் வருகிறது என்பதை ஜேர்மனியில் ஹிட்லர், இத்தாலியில் முசௌலினி மற்றும் ஸ்பெயினில் பிராங்கோவின் முன்னுதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர், நாஜி ஆட்சி ஒரு தனித்துவமான ஜேர்மன் இயல்நிகழ்வு அல்ல என்று லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்:

எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான வரலாற்று விதிகள், முதலாளித்துவ வீழ்ச்சியின் விதிகளே, செயல்படுகின்றன. உற்பத்தி கருவிகள் சிறிய எண்ணிக்கையிலான முதலாளித்துவவாதிகளின் கரங்களில் இருக்கும் வரையில், சமூகத்திற்குத் தப்பிப்பதற்கு வழியே இல்லை. அது ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொரு நெருக்கடிக்குச் செல்ல, தேவையிலிருந்து அவலத்திற்குச் செல்ல, தீமையிலிருந்து படுமோசத்திற்குச் செல்ல விடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் முதலாளித்துவத்தின் பலவீனமான நிலையும் சிதைவும் வெவ்வேறு வடிவங்களில் சமநிலையற்ற தாளங்களில் வெளிப்படுகின்றன. ஆனால் இந்த நிகழ்வுபோக்கின் அடிப்படை அம்சங்கள் எல்லாயிடங்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. முதலாளித்துவ வர்க்கம் அதன் சமூகத்தை முற்றிலும் திவால்நிலைமைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. மக்களுக்கு உணவோ அல்லது அமைதியோ வழங்கும் உத்தரவாதம் அளிக்கக்கூட அது தகைமையற்றுள்ளது. துல்லியமாக இதனால் தான் அது இனியும் ஜனநாயக ஒழுங்குமுறையைச் சகித்துக் கொள்ள முடியாததாக உள்ளது. அது சரீரரீதியில் வன்முறையைப் பயன்படுத்தி தொழிலாளர்களை நசுக்க நிர்பந்திக்கப்படுகிறது. [பிரான்ஸ் எங்கே செல்கிறது, நவம்பர் 9, 1934]

தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டம் மற்றும் அதன் சொந்த முறைகளைப் பயன்படுத்தி ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எதிர்க்க வேண்டும்.

முதலாவதாக இதற்கு தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு அடிபணிய வைக்க வேலை செய்யும் ஜனநாயகக் கட்சி மற்றும் அனைத்து அரசியல் சக்திகளுடனும் கேள்விக்கிடமின்றி முறித்துக் கொள்வது அவசியமாகும்.

இரண்டாவது, தொழிலாளர்களைத் தேசியரீதியில், இனரீதியில் அல்லது பாலினம்ரீதியில் பிளவுப்படுத்த முயலும் அரசியலின் ஒவ்வொரு வடிவத்தையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். சண்டை “வெள்ளையின அமெரிக்கா" மற்றும் "கருப்பின அமெரிக்காவிற்கு" இடையே அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கும் பெருநிறுவன-நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கும் இடையே ஆகும்.

மூன்றாவது, வர்க்க போராட்டம் விரிவாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்த நெருக்கடியின் தர்க்கம், முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் கட்சிகளிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழுக்களையும் மக்கள் அமைப்புகளையும் உருவாக்குவதன் மூலமாக ஒரு அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாரிப்பு செய்ய வேண்டிய அவசியத்தைத் தொழிலாளர்களுக்கு எழுப்புகிறது.

நான்காவதாக, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் என்பது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். நாடெங்கிலும் சமூக போராட்டத்தின் பல்வேறு வடிவங்கள்—முக்கியமாக பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக பல இனத்தவர்களும் கலந்து கொள்ள ஆர்ப்பாட்டங்களும் மற்றும் வேலைக்குத் திரும்ப செய்வதற்காக உயிரை அச்சுறுத்தும் கோரிக்கைக்கு எதிராக அதிகரித்து வரும் சாமானிய தொழிலாளர் இயக்கமும்—முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு வர்க்க நனவுப்பூர்வ இயக்கமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஐந்தாவதாக, எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, அமெரிக்க தொழிலாளர்கள் அமெரிக்காவிற்குள் அவர்களின் போராட்டத்தை சர்வதேச முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஓர் உலகளாவிய இயக்கத்தின் பாகமாக அங்கீகரிக்க வேண்டும். சீனா மற்றும் ரஷ்யாவிலுள்ள தொழிலாளர்கள் உட்பட ஒவ்வொரு நாட்டின் தொழிலாளர்களும் அவர்களின் சகோதர சகோதரிகள் ஆவர். அவர்களும், அவர்களின் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி பிரச்சாரக் குழு வரவிருக்கும் வாரங்களைச் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் அணித்திரட்டுவதற்காக பயன்படுத்தும்.

மிகவும் நிஜமான அரசியல் அபாயங்களை உணர்ந்து, வரலாற்றின் படிப்பினைகளை எடுத்து, திரும்பி போராடுவதற்கு முடிவெடுக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எதிர்க்கும் அனைவருக்கும் முறையீடு செய்கிறது.

தற்போதைய நெருக்கடி மற்றும் புரட்சிகர சோசலிச கொள்கைகளின் அவசியம் மீதான புரிதலை அபிவிருத்தி செய்ய சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி பிரச்சாரத்தை ஆதரித்து பயன்படுத்துங்கள்.

ட்ரம்பின் சூழ்ச்சி முறிக்கும் பலம் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு உள்ளது. ஆனால் அதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டமும் நிஜமான புரட்சிகர தலைமையும் அவசியமாகும்.

சம்பவங்கள் கட்டவிழும் வரையில் முனைப்பின்றி காத்திருக்க வேண்டாம். அபாயத்தை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால், அதை தடுக்க நடவடிக்கை எடுங்கள். சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் ஆவதும், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் முதலாளித்துவத்தை முடிவு கட்ட போராடுவதும், உலக சோசலிச வலைத் தளத்தை படிக்கும் வாசகர்கள் மிகவும் நடைமுறைரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கையாக இருக்கும்.

Loading