மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 இன் மறுஎழுச்சி ஐரோப்பாவை மொத்தமாக அழிவுக்குள்ளாக்கும் நிலையில், வெள்ளியன்று மாட்ரிட்டில் ஸ்பெயினின் சோசலிசக் கட்சி (PSOE) – பொடேமோஸ் அரசாங்கம் அவசரகாலநிலையை அறிவிக்கும் அளவிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. கடந்த ஏழு நாட்களில் ஒவ்வொரு 100,000 குடியிருப்பாளர்களுக்கு 600 பேருக்கு மேலாக நோய்தொற்றுக்கள் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது, அதாவது தேசியளவிலான சராசரியான 100,000 குடியிருப்பாளர்களுக்கு 250 பேர் என்பதை விட இரு மடங்கிற்கும் கூடுதலாக இது இருந்தது.
அதற்கு முந்தைய நாளில் தான், மாட்ரிட்டின் 6.6 மில்லியன் மக்களில் நான்கு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்காக பயண மற்றும் சமூக தொடர்புகள் குறித்து PSOE-பொடேமோஸ் அரசாங்கம் முன்மொழிந்த கட்டுப்பாடுகளை மாட்ரிட் நீதிமன்றம் தாக்கியிருந்தது. எவ்வாறாயினும், அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டதன் பின்னர், தற்போது அரசாங்கம் நடைமுறைப்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளானது அத்தியாவசியமல்லாத வேலைகள் மற்றும் பள்ளிகளின் தனிப்பட்ட வகுப்புகள் ஆகியவற்றில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. என்ன விலை கொடுத்தேனும் பொருளாதாரத்தையும் பள்ளிகளையும் மீண்டும் திறப்பதற்கான PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் பொறுப்பற்ற உந்துதல், மேற்கு ஐரோப்பாவிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயினை தற்போது உருவாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, ஸ்பெயினில் 890,000 க்கு மேற்பட்ட நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, மேலும் ஸ்பெயினில் நோய்தொற்றுக்கு மொத்தம் பலியானோர் எண்ணிக்கை அநேகமாக 50,000 வரை இருக்கும் என்பதை பிரதான பத்திரிகைகள் ஒப்புக்கொண்டுள்ளன. மாட்ரிட்டில் நோய்தொற்றுக்களின் எழுச்சி பல வாரங்களாக சரிவின் விளிம்பில் இருந்த ஒரு சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை கடுமையாக தாக்கியுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் முன்னர் அறிவித்தபடி, செப்டம்பர் இறுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ஏற்கனவே 90 சதவிகித திறனுடன் இயங்கிக் கொண்டிருந்தன. மருத்துவமனைகளின் நிலைமைகள் மேலும் மோசமடையக்கூடும் என்று எதிர்பார்த்து, மாட்ரிட் பிராந்திய அரசாங்கம், ஊடகங்களில் பேசக்கூடாது என்று அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் தடை விதிக்கும் ஒரு சட்டத்தை இந்த வாரம் திணித்தது.
ஐரோப்பா முழுவதிலுமான நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையை அடுத்து இரண்டாம் நாளில் 100,000 ஐ கடந்தது. Worldometers தரவுத் தளத்தின்படி, ஐரோப்பாவில் புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை அன்று 102,357 என்றும், வெள்ளிக்கிழமை 110,051 என்றும் பதிவாகியிருந்தது. செவ்வாய்க்கிழமை முதல், ஐரோப்பா முழுவதுமாக நாளாந்த இறப்புக்கள் 1,000 ஐ எட்டின.
நோய்தொற்றின் முக்கிய மையமாக ஐரோப்பா மறுஎழுச்சி கண்டு வருகிறது. பிரிட்டனின் Daily Telegraph இன் படி, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளின் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையான 380,000 உடன் ஒப்பிடுகையில், கடந்த வாரம் ஐரோப்பாவில் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் 460,000 ஐ எட்டியிருந்தது.
ஸ்பெயினுடன் சேர்ந்து, புதிய நோய்தொற்றுக்களின் அதி விரைவான அதிகரிப்பை பிரான்சும் காண்கிறது. அங்கு ஒவ்வொரு நாளும் 18,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் பதிவாகின்றன என்பதுடன், மருத்துவமனை படுக்கைகளும் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதிகபட்ச எச்சரிக்கை நிலை பாரிஸ், மார்சைய் மற்றும் அக்ஸ் நகரங்களில் நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர், லீல், லியோன், கிரெனோபில் மற்றும் செயிண்ட் எத்தியான் ஆகிய நகரங்களிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, மதுபானகங்கள் மற்றும் உட்புற விளையாட்டு மையங்களை மூடுவதற்கு வழிசெய்கிறது, அதேவேளை உணவகங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், முதலீட்டு வங்கியாளரான இமானுவல் மக்ரோனின் அரசாங்கம், இறப்புக்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் இரண்டாம் கட்ட அடைப்பு நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளது. சுகாதார அமைச்சர் ஒலிவியே வாரன் நோய்தொற்றுக்களை கட்டுப்படுத்துவதற்கான அடைப்புக்கான அழைப்புக்களை கண்டிக்கும் சமீபத்திய அதிகாரியாக மாறியுள்ளார் என்பதுடன், பிரெஞ்சு குடியிருப்பாளர்களை நாட்டிற்குள்ளாக சுற்றுலா சென்று விடுமுறை நாட்களை கழிக்கும்படி ஊக்குவித்தார். மேலும், பிரான்ஸ் முழுவதுமாக தற்போது நோய்தொற்று பரவியுள்ளது பற்றி குறிப்பிட்டு, “ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்யக் கூடாது, ஏனென்றால் அதனால் தற்போது ஏற்கனவே வைரஸ் தொற்று இல்லாத இடத்திலும் கூட அது பரவக்கூடும்” என்று இழிவான வகையில் தெரிவித்தார்.
பெருவணிகத்தின் இலாபங்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டதுமான மற்றும் இறப்பு எண்ணிக்கையை 30,000 க்கும் கூடுதலாக அதிகரிக்கச் செய்ததுமான தொற்றுநோய்க்கு மக்ரோன் அளித்த கொலைகார பதிலிறுப்பு, அதிகரித்து வரும் மக்கள் கோபத்தை மேலும் தூண்டுகிறது. சமீபத்திய மக்கள் கருத்துக்கணிப்பானது, தொற்றுநோய் விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து 61 சதவிகிதம் பேர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கண்டறிந்ததுடன், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இரண்டாவது அடைப்பு நடவடிக்கையை ஆதரிப்போம் என்று 72 சதவிகிதம் பேர் கூறியதாகவும் தெரிவிக்கிறது.
ஒப்பீட்டளவில் ஜேர்மனி குறைந்த எண்ணிக்கை நோய்தொற்றுக்களை கொண்டிருந்த காரணத்தால் தொற்றுநோயை சிறப்பாக சமாளித்த நாடுகளில் ஒன்றாக அது இருந்தது, என்றாலும் கடந்த வாரத்தில் மிகப்பெரிய அளவிலான நோய்தொற்று அதிகரிப்பை அது எதிர்கொண்டது. ஜேர்மனியின் முக்கிய பொது சுகாதார நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் (Robert Koch Institute) வியாழக்கிழமை காலை, முந்தைய 24 மணி நேரத்தில் 4,058 புதிய நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதாக பதிவு செய்தது. இது புதன்கிழமை பதிவான நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 2,828 ஐ விட 1,200 அதிகமாக இருந்தது, இது அந்த நேரத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து காணப்பட்ட அதிகபட்ச நாளாந்த அதிகரிப்பாகும். வெள்ளிக்கிழமை அன்று, மேலும் 4,516 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகி மற்றொரு அதிகரிப்பை அந்நாடு கண்டது.
குறிப்பாக பெரிய நகரங்களில் வைரஸின் பரவல் கொதித்தெழுந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் ஆளும் உயரடுக்கு பொறுப்பற்ற வகையில் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதன் காரணமாக நெருக்கமான குடியிருப்புக்களில் தொழிலாளர்கள் வாழ்கின்ற மற்றும் விரிவான சமூக தொடர்புகளைத் தவிர்க்க முடியாத பகுதிகள் எங்கும் இது நிகழ்கிறது. நோய்தொற்றுக்களின் அதிவேக வளர்ச்சியைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பொது சுகாதார அதிகாரிகள் பரிந்துரைக்கும் அளவிற்கு நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஒரு மட்டத்தைத் தாண்டிய வகையில், பேர்லின், ஃபிராங்பேர்ட் மற்றும் பிரேமன் ஆகிய நகரங்கள் அனைத்திலும் கடந்த ஏழு நாட்களில் 100,000 க்கு 50 நோய்தொற்றுக்களுக்கு மேலாக பதிவாகின.
என்றாலும் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி முதல் இடது கட்சி வரையிலான ஜேர்மனியின் அரசியல் ஸ்தாபகமோ, பொருளாதாரத்தையும் பள்ளிகளையும் தொடர்ந்து திறந்து வைத்திருக்கும் அதன் குற்றகரமான உந்துதலை மேலும் இரட்டிப்பாக்கி வருகிறது.
ஜேர்மனியின் 11 பெரிய நகரங்களைச் சேர்ந்த மேயர்களுடன் வெள்ளிக்கிழமை நடத்திய ஒரு காணொளி கூட்டத்திற்கு பின்னர், வைரஸ் நோய்தொற்று பரவுவதற்கு மக்களை குறை கூற மேர்க்கெல் முயன்றார். ஏழு நாட்களுக்குள் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 50 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் பதிவாகும் பட்சத்தில், நகரங்கள் தனியார் கூட்டங்களை கட்டுப்படுத்தவும், பொது இடங்களில் மதுபான விற்பனையை தடை செய்யவும் கோரினார். இந்நிலையில், புதிய நோய்தொற்றுக்கள் விரைந்து வெடித்து பரவுவதற்கு தீவிர காரணமாக பெருவணிக நடவடிக்கைகளோ அல்லது பள்ளிகள் திறந்திருப்பதோ காரணமாக இருந்தாலும், அவற்றிற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் வெளியிடப்படவில்லை.
மேர்க்கெல், தனது முதல் முன்னுரிமை “ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது போல பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை கட்டுப்படுத்துவது அல்ல” என்று தெரிவித்தார். அனைத்து மட்டங்களிலான அரசாங்கங்களும் பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் மூலமாக வைரஸ் வெடித்துப் பரவுவதை ஒப்புக்கொண்டுள்ளன, அதன்மூலம் தான் முக்கிய நிறுவனங்களும் வங்கிகளும் தொடர்ந்து இலாபமீட்ட முடியும் என்பதுடன், பங்குச்சந்தையும் தொடர்ந்து வளர்ச்சி காணும் எனக் கருதுகின்றன.
பிரிட்டனில், இலண்டனின் இம்பீரியல் கல்லூரி வெள்ளியன்று வெளியிட்ட ஒரு ஆய்வு, ஒவ்வொரு நாளும் 45,000 பேர் வரை வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்று மதிப்பிட்டுள்ளது. உண்மையான நோய்தொற்றுக்களின் எண்ணிக்கைக்கு நெருக்கமாக கூட உத்தியோகப்பூர்வ புள்ளிவிபரங்கள் வெளியிடப்படவில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக பரிசோதனையில் காணப்படும் வீழ்ச்சியின் காரணமாக, வெள்ளியன்று 14,000 புதிய நோய்தொற்றுக்களும் 80 க்கும் மேற்பட்ட இறப்புக்களும் பதிவாகின. கட்டுப்பாடற்ற வகையில் வைரஸ் பரவுவது பற்றி விளக்கமளித்து, தேசிய புள்ளிவிபர கணக்கெடுப்பு அலுவலகம், முந்தைய வாரத்தில் வைரஸ் நோய்தொற்று எண்ணிக்கை 116,000 என இருந்ததை விட அதிகமாக, செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரையிலான வாரத்தில் 224,000 வரை நோய்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
ஆரம்பத்தில் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் ஐரோப்பாவிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நாடான இத்தாலி, இந்த வாரம் நோய்தொற்றுகளின் பெரும் வெடிப்பைக் கண்டது. அந்நாட்டில், வியாழக்கிழமை பதிவான 3,600 இல் இருந்து அதிகரித்து, வெள்ளிக்கிழமை 5,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகின.
இரண்டாவது முழு அடைப்பைத் தவிர்ப்பதற்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், பிரதமர் யூசுப்ப கொன்தே (Giuseppe Conte), சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத அனைத்து வெளிப்புற பொது இடங்களிலும் முகக்கவசம் அணியப்பட வேண்டும் என்று கூறினார். நாட்டில் 30,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவான நோய்தொற்றின் முதல் எழுச்சியின் போது இத்தாலியில் விதிக்கப்பட்டிருந்த முதல்கட்ட அடைப்பானது, தேசியளவில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தீடீர் வேலைநிறுத்தங்களை நடத்தத் தொடங்கி, பின்னர் அது ஐரோப்பா முழுவதுமாக பரவியதன் பின்னரே மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு ஐரோப்பா முழுவதுமாக, கோவிட்-19 நோய்தொற்று ஆபத்தான விகிதத்தில் பரவி வருகிறது. இந்த வாரம் செக் குடியரசு அவசரகால நிலையை அறிவித்ததன் பின்னர், வெள்ளியன்று 5,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகின. அண்டை நாடான ஸ்லோவாக்கியாவில், ஸ்லோவாக்கிய நகரங்களில் கட்டுக்கடங்காமல் நோயாளிகளால் நிரம்பிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புக்களுக்கு உதவ வெள்ளிக்கிழமை அரசாங்கம் இராணுவத்தை அழைத்தது. போலந்தில் 4,700, உக்ரைனில் 5,804 மற்றும் பல்கேரியாவில் 516 என்ற நாளாந்த நோய்தொற்று எண்ணிக்கைகளுடன் அனைத்து நாடுகளும் பாதிப்புக்குள்ளாகின.
வரும் மாதங்களில் நூறாயிரக்கணக்கான உயிர்களை பலிகொள்ள அச்சுறுத்துவதான, ஐரோப்பா முழுவதிலும் காணப்படும் நோய்தொற்றின் பேரழிவுகர மறுஎழுச்சியானது, பொருளாதாரத்தை முன்கூட்டியே மீண்டும் திறப்பதற்கான ஆளும் உயரடுக்கின் குற்றகரமான உந்துதுல் குறித்து உலக சோசலிச வலைத் தளம் மீண்டும் மீண்டும் விடுத்த எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. அதாவது, பாரிய மரணத்தை வேண்டுமென்றே தூண்டும் இந்த கொள்கை, பெரும் செல்வந்தர்களின் செல்வத்தைப் பாதுகாப்பதுடன் பிணைந்துள்ளது. இதை தொழிலாள வர்க்கத் தலைமையிலான ஒரு சர்வதேச போராட்டத்தின் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஐரோப்பிய பிரிவுகளும் மற்றும் அதன் அனுதாபத்திற்குரிய துருக்கிய குழுவும் அவற்றின் சமீபத்திய அறிக்கையில், “ஐரோப்பாவில் கோவிட்-19 இன் மறுஎழுச்சியை தடுத்து நிறுத்தும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக” என்று குறிப்பிட்டது. “தற்போது ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்துவரும் அணிதிரட்டல் மற்றும் அரசியல் தீவிரமயமாக்கலை எதிர்கொள்ளும் பணி என்னவென்றால், பல ஆண்டுகளாக ஆபாச பிணையெடுப்புக்களில் ஆளும் வர்க்கத்தால் திருடப்பட்ட வளங்களை அபகரிக்கவும், ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களை வீழ்த்தவும், முதலாளித்துவ அமைப்புமுறையை தூக்கியெறியவும், மற்றும் பிற்போக்குத்தன ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளாக மாற்றவும் தேவைப்படும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே.