மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPP) நிறுவனர் ஜோஸ் மரியா சிஸன் வரலாற்றாசிரியர் ஜோசப் ஸ்காலிஸை இழிவுபடுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் ஒரு தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஸ்காலிஸ், சிஸனும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் நாட்டின் பாசிச ஜனாதிபதி ரோட்ரிக்கோ டுரேற்ற மற்றும் அவரது கொலைகார “போதைப்பொருளுக்கு எதிரான போரை ஆதரித்தார் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி ஸ்தாபித்துள்ளார். "ஸ்காலிஸை சிஐஏ இன் முகவராக சிஸன் அவதூறாக பேசியது மட்டுமல்லாது, அவர் லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான அனைத்து பழைய ஸ்ராலினிச பொய்கள் அனைத்தையும் தோண்டி எடுக்கின்றார்.
இதனை செய்கையில், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் வேலைத்திட்டம் மார்க்சிசத்திலிருந்து அல்ல, ஆனால் அதன் திரிபுபடுத்தலான ஸ்ராலின், மாவோ சேதுங் மற்றும் அவர்களின் பல்வேறு பின்தொடர்பவர்களிடமிருந்து உருவாகிறது என்பதை சிஸன் முற்றிலும் தெளிவுபடுத்துகிறார். லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக்குகள் 1917 அக்டோபர் புரட்சிக்கு அடிப்படையாகக் கொண்ட உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கை ஸ்ராலினிஸ்டுகள் நிராகரித்து, தொழிலாள வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தை அபகரித்து மற்றும் "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற பிற்போக்குத்தனமான தேசியவாத வேலைத்திட்டத்தில் மீது தங்கள் சொந்த அதிகாரத்துவ ஆட்சியை நியாயப்படுத்தினர்.
உண்மையான மார்க்சிசம் மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்தின் பாதுகாவலர்களுக்கு எதிரான பொய்கள் மற்றும் அடக்குமுறைகளின் ஸ்ராலினிச பிரச்சாரம் 1937–38 மாஸ்கோ போலி விசாரணைகளில் உச்சகட்டத்தை அடைந்ததுடன் மற்றும் அக்டோபர் புரட்சியின் பாரம்பரியத்தை ஏதாவது ஒருவகையிலாவதும் பிரதிநிதித்துவப்படுத்திய அனைவரையும் திட்டமிட்டுக் கொன்றது. இது சிஸன் மற்றும் பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி இன்றுவரை பாதுகாக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு பயங்கரமான குற்றமாகும்.
The Stalin School of Falsification (ஸ்ராலினின் பொய்மைப்படுத்தும் பள்ளி)என்ற ரஷ்ய மொழியிலான நூலுக்கான முன்னுரையில், லியோன் ட்ரொட்ஸ்கி இந்த பொய்களின் அரசியல் செயல்பாட்டை விளக்கினார்:
"ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான போராட்டம், அக்டோபர் புரட்சிக்கு எதிரான அதிகாரத்துவத்தின் பிரதிபலிப்பிலிருந்தும், தேசிய அமைதிக்கான உந்துதலில் இருந்தும் தோன்றியது. சாதாரணமான முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களால் பொதுவாக சித்தரிக்கப்படுவது போல, கடந்த காலம் பொய்மைப்படுத்தப்பட்டதும் மற்றும் திரிக்கப்பட்டதும் தனிப்பட்ட சூழ்ச்சியினாலோ அல்லது குழுக்களின் மோதல்கள் காரணமாகவோ அல்ல. மாறாக, இது ஒரு ஆழமான அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் காரணமாகும். அதற்கு சொந்த சமூக வேர்களும் உள்ளன….
சோவியத் அதிகாரத்துவம், புரட்சிகர வர்க்கத்திற்கு மேலாக தன்னை உயர்த்திக் கொண்டபின், அதன் தனிப்பட்ட நிலைமைகளை உறுதிப்படுத்திக்கொண்ட விகிதத்திற்கு ஏற்றவாறு, அதன் விதிவிலக்கான நிலையை நியாயப்படுத்தவும் மற்றும் கீழிருந்து வரும் அதிருப்திக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ள அத்தகைய ஒரு சித்தாந்தம் தேவையாக இருந்தது. இந்த காரணத்தினாலேயே, மிகவும் இளமையான இந்த புரட்சிகர கடந்த காலத்தை திரித்தல், நெறிபுரளச்செய்தல் மற்றும் வெளிப்படையான ஏமாற்று ஆகியவை இத்தகைய பாரிய உந்துதலை அடைந்தது. [The Stalin School of Falsification, New Park Publications, 1974, p. Xvi]
ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான அவதூறுகளில், சிஸன் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை. லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் பெயருக்கு கரி பூசுவதற்கான அவரது வெறித்தனமான முயற்சிகள், ஸ்ராலினும் அவரது குண்டர்களும் தங்களது அதிகாரத்துவ ஆட்சியை நியாயப்படுத்தவும், அவர்களின் எதிரிகளின் கொலையை நியாயப்படுத்தவும் பயன்படுத்திய பொய்களை மறுசுழற்சி செய்வதை நம்பியுள்ளன. ஸ்காலிஸின் சொற்பொழிவை அடுத்து, சிஸன் தனது “ட்ரொட்ஸ்கிசம் குறித்த சிறப்பு ஆய்வு” ஐ மறுபதிவு செய்துள்ளார். அதில் ஜனவரி 2019 இல் முதலில் வழங்கிய ஆனால் இப்போது மேலதிக விளக்கமெதுவுமின்றி ஸ்ராலின் மற்றும் மாவோ சேதுங் மற்றும் ஹோ சி மின் உட்பட ஸ்ராலினிஸ்டுகளின் ஒரு தொடர், பட வில்லைக் (slides) காட்சிகள் மற்றும் மேற்கோள்களை முக்கியமாக மீண்டும் வெளியிட்டுள்ளார்.
பட வில்லைக் காட்சி என்பது ட்ரொட்ஸ்கி மற்றும் வரலாற்று பதிவுகளால் தீர்க்கமாக மறுக்கப்பட்ட வெட்கக்கேடான ஸ்ராலினிச அவதூறுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சுய-முரண்பாடான தொகுப்பாகும். அதில் அவர் விவசாயிகளின் பங்கை குறைத்து மதிப்பிட்டார்; தொழிலாள வர்க்கத்தால் ஒரு "சாகசவாத" முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை அவர் ஆதரித்தார், அதே நேரத்தில் அக்டோபர் புரட்சியை எதிர்த்தார்; செம்படையின் தலைவராக அவர் புதிதாக நிறுவப்பட்ட தொழிலாளர்களை நசுக்க முயன்ற ஏகாதிபத்தியப் படைகளைத் தோற்கடிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கவில்லை மற்றும் இது போன்ற வெறுப்பூட்டுபவை அடங்கியிருந்தன.
இதில் சிறப்பாக குறிப்பிடவேண்டிய ஒரு அம்சம், ஹோ சி மின் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளை கண்டனம் செய்து, 1939 மே மாதம் வியட்நாமிய ஸ்ராலினிசக் கட்சிக்கு எழுதிய கடிதத்தில் அவர்களை “ஒரு குற்றவியல் கும்பல், ஜப்பானிய பாசிசத்தின் (மற்றும் சர்வதேச பாசிசம்) வேட்டைக்காரர்கள்” என்பதை தவிர வேறொன்றுமில்லை எழுதியுள்ளதை சிஸன் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகும். சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மற்றும் ஹோ சி மின் குற்றங்களின் பதிவு பரவலாக அறியப்படவில்லை என்ற உண்மையை நம்பி, சிஸன் தனது முகப்புத்தக பக்கத்தில் இந்த குறிப்பிட்ட பட வில்லைக் காட்சியை பல முறை முன்னிலைப்படுத்தியுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், முந்தைய மாதம் ஹோ சி மின் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த தெற்குப் பகுதியான கொச்சின்சினாவிற்கான காலனித்துவ பிராந்திய தேர்தலில் வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வென்றதை அடுத்து மே 1939 இல் விரைவாக அடுத்தடுத்து மூன்று கடிதங்களை எழுதினார். தா து தாவ் (Ta Thu Thau) தலைமையிலான “ஐக்கிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்” பட்டியல் முதலாளித்துவ “அரசியலமைப்பாளர்களையும்” ஸ்ராலினிச ஆதரவுடைய “ஜனநாயக முன்னணியையும்” தோற்கடித்து 80 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதன் முடிவு, பிரெஞ்சு இந்தோசீனா காலனித்துவ ஆளுனர் ஜெனரலால் உடனடியாக மாற்றப்பட்டது.
ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பிரெஞ்சு இராணுவத்திற்கு நிதி ஆதாரங்களை வழங்குவதற்கான "தேசிய பாதுகாப்பு வரியை" எதிர்த்தனர். அதனை அந்த நேரத்தில் ஜேர்மனிக்கு நாஜி ஆட்சி மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக "ஜனநாயக" ஏகாதிபத்தியவாதிகள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு சார்பான ஸ்ராலினின் மற்றும் சோவியத் அதிகாரத்துவத்தின் நோக்குநிலையின் ஒரு பகுதியாக ஸ்ராலினிஸ்டுகள் ஆதரித்தனர். சைகோனில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் வெளியிடப்பட்ட லா லுட்(போராட்டம்)பத்திரிகை, ஸ்ராலினிச தலைவர்கள் “காட்டிக்கொடுப்பின் பாதையில் இன்னொரு படி எடுத்துள்ளனர் என்று கருத்து தெரிவித்தது. புரட்சியாளர்களாக தங்கள் முகமூடிகளை தூக்கி எறிந்த அவர்கள், ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர், ஒடுக்கப்பட்ட காலனித்துவ மக்களின் விடுதலையை எதிர்த்து வெளிப்படையாக பேசுகிறார்கள்” என கருத்து தெரிவித்தது. பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்கு ஹோ சி மின் தலைமையிலான ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவு, வியட்நாமிய மக்களை அந்நியப்படுத்தியது. இந்த நோக்குநிலை ஆகஸ்ட் 1939 இல் மோசமான ஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தத்தில் ஸ்ராலின் கையெழுத்திட்டு, ஐரோப்பாவில் போருக்கான கதவைத் திறந்தபோது தற்காலிகமாக மாறியது.
ஜூன் 1941 இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவினையும் பிரிட்டனையும் நோக்கி ஸ்ராலின் திரும்பியதற்கு ஏற்ப வியட்நாமிய ஸ்ராலினிஸ்டுகள் திடீரென தங்கள் ஆதரவை "ஜனநாயக" ஏகாதிபத்தியவாதிகளுக்கு பின்னால் மாற்றினர். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான அவர்களின் அடிமைத்தன ஆதரவுக்கு பிரதியுபகாரமாக, அமெரிக்கா ஆயுதங்களை வழங்குவதும், சிஐஏ இன் முன்னோடி அமைப்பான மூலோபாய சேவைகள் அலுவலகத்தின் (OSS) சிறப்பு நடவடிக்கைக் குழுவை அனுப்பியதன் மூலமும் ஹோ சி மின்னின் கெரில்லாக்களுக்கு பசிபிக் போரின் இறுதி மாதங்களில் பயிற்சி அளிக்க அனுப்பப்பட்டது. ஜப்பானின் தோல்வியைத் தொடர்ந்து, ஹோ சி மின் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியை மீண்டும் நிறுவுவதை வரவேற்றார். இதை எதிர்த்து, சைகோனில் தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் திரட்டிய வியட்நாமிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அதனை எதிர்த்தனர். அவர்கள் பிரெஞ்சுக்காரர்களால் மட்டுமல்ல, ஹோ சி மின் மற்றும் ட்ரொட்ஸ்கிச தலைவரான தா து தாவை கொலை செய்த ஸ்ராலினிஸ்டுகளாலும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். (பார்க்க: “வியட்நாமிய ட்ரொட்ஸ்கிச தலைவரான தா து தாவ் ஸ்ராலினிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள்”).
ஹோ சி மின்னின் கடிதத்தினை அவர் வலியுறுத்தியதன் மூலம், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் சிஸன், வியட்நாமிலும் பிற இடங்களிலும் ஸ்ராலினிஸ்டுகளின் ஒவ்வொரு குற்றங்களுக்கும் அவதூறுகளுக்கும் தனது ஆதரவை அடையாளம் காட்டுகிறார். மக்கள் முன்னணியின் துரோகக் கொள்கைகளை எதிர்த்த பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பற்றிய அனைத்து பொய்களையும் ஹோ மீண்டும் கூறுகின்றார். இக்கொள்கை தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் பிரிவுகளுக்கு நேரடியாக அடிபணியச் செய்தது. ஸ்பெயினில், ஸ்ராலினிச கொலைக் குழுக்கள் அதனது கொள்கைகளுக்கான இடதுசாரி விமர்சகர்களை சித்திரவதை செய்வதிலும் கொலை செய்வதிலும் மக்கள் முன்னணி அரசாங்கத்தின் ஒரு கையாக செயல்பட்டன.
ஹோ வின் மூன்று கடிதங்களின் முக்கிய இலக்கு சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளாகும். லியோன் ட்ரொட்ஸ்கி நாஜி ஜேர்மனியின் முகவராக மோசடி செய்யப்பட்ட புனைகதைகளின் அடிப்படையில் முத்திரை குத்தப்பட்துபோல் அவர்கள் ஜப்பானிய பாசிசத்தின் ஆதரவாளர்களாக மாவோ சேதுங் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் (CCP) அவதூறாக பேசப்பட்டனர். இது சில மாதங்களுக்குப் பின்னர் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதையும், 1941 ஏப்ரல் மாதம் டோக்கியோவில் இராணுவவாத ஆட்சியுடன் ஒரு "நடுநிலை ஒப்பந்தம்" கையெழுத்திடுவதையும் ஸ்ராலினை தடுக்கவில்லை. ஜப்பானிய இராணுவம் சீனாவை கைப்பற்ற இரக்கமற்ற ஒரு போரை நடத்திய போதும் ஜப்பானுடனான சோவியத் ஒப்பந்தம், இரண்டாம் உலகப் போரின் இறுதி வாரங்கள் வரை நீடித்தது.
வரலாற்றாசிரியர் ஸ்காலிஸுக்கு எதிரான சிஸனின் அவதூறுகளைப் போலவே, ஹோ வும் புதிதாக ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிரான CCP ஆல் கண்டுபிடிக்கப்பட்ட பொய்களையே அவரும் திரும்பிக்கூறினர். 1937 ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக ஸ்ராலின் எல்லாவற்றிற்கும் மேலாக நடத்தப்பட்ட கொலைகார களையெடுப்புகளை மேற்கொண்டபோது, வாங் மிங் மற்றும் காங் ஷெங் (Wang Ming and Kang Sheng) ஆகியோர் மாஸ்கோவிலிருந்து திரும்பி சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் மீதான கண்டனத்தைத் தூண்டினர்.
1931 இல் மஞ்சூரியாவைக் கைப்பற்றிய ஜப்பானிய ஏகாதிபத்தியம், ஜூலை, 1937 இல் சீனா மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, CCP செப்டம்பர் மாதம் முதலாளித்துவ தேசியவாதி சியாங் கேய்-ஷேக் மற்றும் அவரது கோமிண்டாங் (KMT) ஆகியவற்றுடன் ஒரு சந்தர்ப்பவாத முன்னணியை உருவாக்கியது. அதன் விவசாயப் படைகளை கோமிண்டாங்க்கு கீழ்ப்படுத்துதல் மற்றும் அதன் முதலாளித்துவ கூட்டுக்களை அந்நியப்படுத்திக்கொள்ளாதபடி அதன் நில பறிமுதல் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஷாங்காய் தொழிலாளர்களுக்கு மோசமான கசாப்புக் கடைக்காரனாக இருந்த சியாங் கேய்-ஷேக்குடனான அதன் முன்னணி, பரவலான மக்கள் எதிர்ப்பை உருவாக்கும் என்று அஞ்சிய CCP, சீனத் தொழிலாள வர்க்கத்திடையே, குறிப்பாக ஷாங்காயில் குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்டிருந்த சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராக இழிவான பிரச்சாரத்தைத் தொடங்கியது. வாங் மிங் 1937 இல் CCP அரசியல் குழுவிடம் "ட்ரொட்ஸ்கிசத்தை எதிர்ப்பதில் நாம் பரிதாபத்தை பார்க்க முடியாது. சென் துஸியு (Chen Duxiu) ஒரு ஜப்பானிய முகவர் இல்லையென்றாலும், அவர் அப்படித்தான் என்று நாங்கள் கூறவேண்டும்” என்று கூறினார். [Prophets Unarmed: Chinese Trotskyists in Revolution, War, Jail, and the Return from Limbo, edited Gregor Benson, Haymarket Books, p.43]
ஜனவரி, 1938 இல், காங் ஷெங் CCP இன் Liberation Weekly வார இதழில் “ட்ரொட்ஸ்கிச குற்றவாளிகளை ஒழித்தல், இவர்கள் தேசத்தின் எதிரிகள் மற்றும் ஜப்பானியர்களின் உளவாளிகள்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டார். "ட்ரொட்ஸ்கிச மத்திய குழு"வுக்கு ஜப்பான் ஒரு மாதத்திற்கு 300 யுவான் மானியத்தை வழங்குவதாகவும், சென் துஸியு ஒரு ஜப்பானிய உளவாளி மற்றும் ஒரு துரோகி என்றும் அவர் எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்காது கூறினார். ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் கொலையை நியாயப்படுத்துவது உட்பட மீண்டும் மீண்டும் முடிவில்லாமல் கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் 1978 ஆம் ஆண்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் திரும்பப் பெறப்பட்டமையானது, அவை அனைத்தும் பொய்கள் என்பதற்கான ஒரு மறைமுக ஒப்புதலாகும்.
1925-27 சீனப் புரட்சியை ஸ்ராலின் காட்டிக் கொடுத்தது பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுதான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவுகளிடையே ஆதரவை வென்றது. இதில் அதன் நிறுவனத் தலைவர் சென் துஸியு மற்றும் சோவியத் ஒன்றியத்தில் படிக்கும் சீன இளைஞர்கள் உள்ளடங்குவர். ஸ்ராலின் புதிதாக உருவாக்கப்பட்ட CCP யை அரசியல்ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு அடிபணியச்செய்திருந்ததன் மூலம், ஸ்ராலின் சந்தர்ப்பவாதரீதியாக அதனை உலக அரங்கில் ஒரு நட்பு நாடாக வளர்க்க முயன்றார்.
ட்ரொட்ஸ்கியினதும் மற்றும் இடது எதிர்ப்பாளர்களின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், 1927 ஏப்ரல் மாதம் ஷாங்காய் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கோமிண்டாங் தலைவர் தனது படைகளையும் பாதாள உலக குண்டர்களையும் கட்டவிழ்த்து விடும்வரை ஸ்ராலின் தொடர்ந்து சியாங் கேய் ஷேக்கை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடும் ஒரு ஒரு புரட்சியாளனாக ஊக்குவித்து வந்தார். உள்ளூர் யுத்தப் பிரபுகளுக்கு எதிரான ஒரு தொழிலாளர் எழுச்சியை கோமிண்டாங் நசுக்க முயன்றபோது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் CCP உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோமிண்டாங் இன் வர்க்கத் தன்மையிலிருந்து தேவையான முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, எந்த தவறும் செய்யப்படவில்லை என்று ஸ்ராலின் வலியுறுத்தி, ஒரு மாதத்திற்குப் பின்னர் இதேபோன்ற இரத்தக்களரி விளைவுகளுடன் CCP ஐ "இடது" கோமிண்டாங்க்கு அடிபணியச் செய்தார்.
ஸ்ராலினின் கொள்கைகளை எதிர்க்க முயன்ற சென் துஸியு மற்றும் பெங் சுஷி போன்ற CCP தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சீனாவில் தொடர்ந்தும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய நோக்குநிலையை கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பை உருவாக்குவதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். மறுபுறம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புறங்களுக்கு பின்வாங்கி, அதிகரித்தளவில் தொழிலாள வர்க்கத்தின் மீது அல்லாமல், விவசாய கெரில்லா படைகளை தனது அடிப்படையாகக் கொண்டது. சீனாவில் ஏற்பட்ட பேரழிவுகளை நியாயப்படுத்த ஸ்ராலின் விவரித்த அரசியல் முன்னோக்கை அது அடிமைத்தனமாக பின்பற்றியது. இது 22 ஆண்டுகளுக்கு பின்னர் 1949 இல் புரட்சி நடந்தபோது அதற்கு சேதத்தை ஏற்படுத்தியதுடன் அதை உருக்குலைத்தது.
ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதில் தேசிய முதலாளித்துவத்திற்கு ஒரு முற்போக்கான பங்கைக் கொடுத்த மென்ஷிவிக் இரண்டு கட்ட தத்துவத்திற்கு ஸ்ராலின் வழங்கிய புத்துயிர்ப்பை, மாவோயிசம் அடிப்படையாகக் கொண்டதுடன் மற்றும் நீண்டதொலைதூர எதிர்காலத்தில் இரண்டாவது கட்டம் வரை சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டத்தையும் நிராகரித்தது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி இருவருமே மென்ஷிவிக்குகள் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை ரஷ்ய தாராளவாத முதலாளித்துவத்தின் கட்சியான கடேட்டுகளுக்கு (Cadets) அடிபணியச் செய்வதை எதிர்த்தனர்.
1917 அக்டோபர் புரட்சிக்கு அடித்தளமாக இருந்த தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில், சீனா போன்ற தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் உள்ள முதலாளித்துவம் வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை பூர்த்தி செய்ய இயலாது என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். அந்த பணிகள், தொழிலாள வர்க்கத்தின் மீது விழுவதுடன், அவை விவசாய மக்களின் ஆதரவோடு, அதிகாரத்தை தனது கைகளில் எடுத்து, சோசலிச நடவடிக்கைகளை செயல்படுத்த நிர்ப்பந்தப்படுத்தப்படும் என்றார்.
சீனாவின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, முதலாளித்துவ வர்க்கத்தை ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகிக்க கட்டாயப்படுத்தியது என்று கூறி, சியாங் கேய்-ஷேக்கை உயர்த்துவதை நியாயப்படுத்த, மதிப்பிழந்த மென்ஷிவிக் தத்துவங்களை ஸ்ராலின் உயிர்த்தெழுப்பினார். எவ்வாறாயினும், ட்ரொட்ஸ்கி விளக்கமளித்தபடி, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எந்தவொரு உண்மையான போராட்டமும் “நாட்டின் விடுதலைக்கான பாதையை அவர்களின் அடிப்படை மற்றும் மிக ஆழமான வாழ்க்கை நலன்களை இணைப்பதன் மூலம்… தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை கிளர்ந்தெழுவதை அவசியமாக உள்ளடக்கியிருந்தது.
"ஆனால் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பரந்த உழைக்கும் மக்களை தூண்டுவது அனைத்தும், தவிர்க்க முடியாமல் தேசிய முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியவாதிகளுடன் ஒரு திறந்த கூட்டினுள் தள்ளும். முதலாளித்துவத்திற்கும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பலவீனமடையவில்லை, மாறாக, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால், ஒவ்வொரு தீவிர மோதலிலும் இரத்தக்களரியான உள்நாட்டு யுத்தத்தின் கட்டத்திலும் கூர்மைப்படுத்தப்பட்டும்.” [“The Chinese Revolution and the Theses of Comrade Stalin,” Leon Trotsky on China, Monad Press, 1978, p. 161]
தோற்கடிக்கப்பட்ட 1925-27 புரட்சியின் அரசியல் படிப்பினைகளில் தொழிலாள வர்க்கத்தை பயிற்றுவிப்பதற்கும் அதை சியாங் கேய்-ஷேக் ஆட்சிக்கு எதிராக அணிதிரட்டுவதற்கும் சீன இடது எதிர்ப்பாளர்கள் ஒரு தைரியமான போராட்டத்தை நடத்தினர். இது, கோமிண்டாங் மற்றும் பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனித்துவ காவல்துறையினரிடமிருந்தும், 1937 படையெடுப்பைத் தொடர்ந்து ஜப்பானியப் படைகளிடமிருந்தும் மட்டுமல்லாது CCP இன் அடக்குமுறையையும் எதிர்கொண்டது. சென் துஸியு மற்றும் பெங் சுஷி ஆகியோரை 1932 அக்டோபரில் கோமிண்டாங் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களது பல தோழர்களுடன், ஐந்து ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்தனர்.
கடுமையான அடக்குமுறை இருந்தபோதிலும், சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் குழுக்கள், ஒருவருக்கொருவரிடமிருந்தும், சர்வதேச இயக்கத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதும், தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளிடையே தங்கள் அரசியல் போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் ஜப்பானிய படையெடுப்பிற்கு எதிரான போரில் தீவிரமாக பங்கேற்றன, அதே நேரத்தில் CCP மற்றும் கோமிண்டாங்கிலிருந்து தங்கள் அரசியல் சுயாதீனத்தை தக்க வைத்துக் கொண்டன. ஆகஸ்ட், 1947 இல் Fourth International இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பெங் சுஷி போரின்போது சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பணிகளை விவரித்தார். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குள்ளான ஷாங்காய் மற்றும் தெற்கு சீனாவில் வேலைநிறுத்தங்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பது குறித்து கவனத்தை ஈர்த்து, அங்கு அவர்கள் கைது, சித்திரவதை, சிறை மற்றும் மரணதண்டனையை எதிர்கொண்டது பற்றிக் குறிப்பிட்டார்.
கடலோர மாகாணமான சான்டோங்கில், ஒரு இளம் ட்ரொட்ஸ்கிஸ்டான சியோங் லி-மிங் (Cheong Li-ming), ஒரு சிறிய கெரில்லா பிரிவு ஒன்றை நிறுவினார். அதன் வெற்றிகளின் விளைவாக, 2,000 பேர் கொண்ட இராணுவமாக அது வளர்ந்தது. இது ஜப்பானியர்களுடன் போராடியது மட்டுமல்லாமல், CCP யின் மற்றும் கோமிண்டாங்கின் கொலைகார தாக்குதல்களும் எதிராக போராடியது. ஜப்பானியர்களுக்கு எதிரான போரில் மோசமான இழப்புகளைச் சந்தித்த பின்னர், ஸ்ராலினிஸ்டுகள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சியோங்கை (Cheong) அவரது மனைவி, மகன் மற்றும் பலருடன் கைது செய்தனர்.
"முதலில் ஸ்ராலினிஸ்டுகள் சியோங்கினை ட்ரொட்ஸ்கிசத்தை நிராகரிக்க செய்ய முயன்றனர். அவருடைய உறுதியை வளைக்க இயலாது என அவர்கள் கண்டபோது, அவர்கள் இரக்கமின்றி அவரைத் தலை துண்டித்தனர். அவரது மனைவி மற்றும் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆறு வயது அப்பாவிச் சிறுவனை கூட ஸ்ராலினிச மிருகங்கள் காப்பாற்றவில்லை. அவன் கடலில் வீசப்பட்டு நீரில் மூழ்கி இறந்தான். தோழர்களே! நாங்கள், சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள், ஸ்ராலினிசத்தைப் பற்றிய நமது அறிவில் எமக்கு புலனாகாதது எதுவும் இல்லை” என்று பெங் எழுதினார்.
1949 இல் மாவோ மற்றும் CCP அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அரை சட்டபூர்வமான வாழ்க்கை நடத்தி, பெங் மற்றும் அவரது மனைவி உட்பட அவர்களது தலைவர்கள் பலரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது ஹாங்காங்கிலிருந்து செயல்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். கொரியப் போரின் மத்தியில் வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க அமைதியின்மைக்கு மத்தியில், ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் செல்வாக்கு வளரும் என்று பயந்து, CCP டிசம்பர் 22, 1952 இலும் மீண்டும் ஜனவரி 8, 1953 அன்றும் நாடு தழுவிய துடைத்தளித்தலை நடத்தியது.
நூற்றுக்கணக்கான சீன ட்ரொட்ஸ்கிஸ்டுகள், அவர்களது மனைவிகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனுதாபிகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல தலைவர்கள் இறுதியாக 1979 நடுப்பகுதியில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இன்றுவரை அவர்கள் அரசியல் ரீதியாக மறுவாழ்வு பெறவில்லை. இது, அவர்களின் தைரியமான மற்றும் கொள்கைரீதியான போராட்டங்கள் சீனாவிலும், மேலும் பரவலாகவும் உண்மையான மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிசத்தின் புதுப்பிப்பை ஊக்குவிக்கும் என்ற CCP ஆட்சியின் அச்சத்தை பிரதிபலிக்கிறது.
ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்தின் மரபு, முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தை மேற்கொள்வதில் தீவிரமாக அக்கறை கொண்ட எவரையும் ஊக்குவிக்காது என்பது மட்டமல்ல உண்மையான புரட்சிகரக் கட்சிகளை நிர்மாணிப்பதற்கான அரசியல் தடையாகவுமே செயல்படும்.
பிரெஞ்சு காலனித்துவத்திற்கும் மற்றும் அமெரிக்க இராணுவ எந்திரத்திற்கும் எதிரான போரினால் உலகம் முழுவதும் அறியப்பட்ட வியட்நாமிய மக்களின் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்கள் இப்போது மதிப்பிழந்துபோயுள்ள ஸ்ராலினிச தலைவரின் நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்ப செய்வதற்கான முயற்சியில் ஹோ சி மின்னின் பொய்களை சிஸன் பயன்படுத்துகிறார். மாவோவைப் போலவே, ஹோ சி மின் தொழிலாள வர்க்கத்தை நோக்கி அல்ல, விவசாயிகளையே நோக்குநிலையாக கொண்டிருந்ததுடன், மேலும் இரண்டு கட்ட தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, மீண்டும் மீண்டும் ஏகாதிபத்தியத்துடன் இணங்கிப்போவதை நாடினார். இது வியட்நாமிய மக்களுக்கு இன்னும் பெரிய இழப்புகளை உருவாக்கிய போருக்குள் இழுக்கப்படுவதை உறுதி செய்தது.
ஹோ சி மின் 1969 இல் இறந்தபோது, அவர் வழிநடத்திய ஆட்சி "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற பிற்போக்குத்தனமான தேசியவாத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1975 ஆம் ஆண்டில் தெற்கு வியட்நாமில் அமெரிக்கா மற்றும் அதன் கைப்பாவை ஆட்சியின் தோல்வியைத் தொடர்ந்து, வியட்நாம் சோசலிச குடியரசு என்று அழைக்கப்பட்டது விரைவாக ஒரு பொருளாதார முட்டுச்சந்து நிலையில் காணப்பட்டது. அமெரிக்க இராஜதந்திர மற்றும் பொருளாதார முற்றுகைக்கு அதன் பிரதிபலிப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை திருப்திப்படுத்துவதோடு, அதன் 1986 டுவா முவா பொருளாதார சீர்திருத்த கொள்கையின் (doi moi policy) கீழ் நாடுகளை சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மலிவான உழைப்புத்தளமாக மாற்றுவதாக இருந்தது.
1995 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் வியட்நாமுக்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, வர்த்தகம் 1994 ல் 450 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 77 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. முதலாளித்துவ சந்தை உறவுகள் செழித்தோங்கியுள்ள நிலையில், ஆப்பிள், இன்டெல், நைக் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய நிறுவனங்கள் ஸ்ராலினிச பொலிஸ் அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட மலிவான உழைப்பைப் பயன்படுத்த வியட்நாமிற்கு உற்பத்தியை நகர்த்தியுள்ளன. இதன் விளைவாக, சமூக சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. வியட்நாமிய ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளில் ஒரு சாத்தியமான நட்பு நாடாக மாறுவதோடு இராணுவ உறவுகளையும் பலப்படுத்தியுள்ளது. வாஷிங்டன் 2016 ஆம் ஆண்டில் சட்டபூர்வமாக வியட்நாமுக்குக்கான ஆயுத விற்பனை மீதான தடையை நீக்கியது. மேலும் 2018 ஆம் ஆண்டில், யுஎஸ்எஸ் கார்ல் வின்சன், வியட்நாம் போரின் முடிவிற்கு பின்னர், முதல்முதல் அதன் துறைமுகத்தை அடைந்த முதல் விமானம் தாங்கி கப்பலாக ஆனது.
முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களால் முதலாளித்துவ மறுசீரமைப்பைத் தழுவுவதற்கு இணையாக, நேபாளத்தில் மாவோயிஸ்டுகள், மத்திய கிழக்கில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அல்லது தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற "ஆயுதப் போராட்டத்தின்" ஆதரவாளர்கள், ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் இராணுவ உடைகள் மற்றும் ஏ.கே-47 ஆயுதங்களை பாராளுமன்றத்தில் அங்கத்துவத்தை பெறுவதற்கும் பெருநிறுவன மேலாளர் பதவிகளுக்காகவும் பரிமாறிக்கொண்டன. பிலிப்பைன்ஸில், கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் அந்த இடங்களை எடுத்துக்கொள்ளவில்லை என்பது அதற்கான முயற்சியை அது செய்யாததால் அல்ல. டாக்டர் ஜோசப் ஸ்காலிஸின் சொற்பொழிவுக்கு சிஸன் மிகவும் மோசமாக பிரதிபலிப்பை காட்டினார். ஏனெனில் அது தேர்தலுக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பாசிச ரோட்ரிகோ டுரேற்றவுடன் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளையும், இன்று டுரேற்றவை பதவியிலிருந்து அகற்றி துணை ஜனாதிபதியான லெனி ராபிரெடோவை அதிலிருத்த முதலாளித்துவ அரசியல் வாகனத்தில் தொற்றிக்கொண்டிருப்பதையும் விரிவாக அம்பலப்படுத்தியதாலாகும். (பார்க்க: “பிலிப்பைன்ஸில் அரசியல் நெருக்கடி தீவிரமடைகின்றது”).
பழைய ஸ்ராலினிச பொய்களை சிஸன் தோண்டி எடுப்பது 20 ஆம் நூற்றாண்டில் ஸ்ராலினிசத்தின் துரோகங்களுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கம் நடத்திய போராட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை பிலிப்பைன்ஸ், ஆசியா மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்வைக்கிறது. இவை உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமைகளை கட்டியெழுப்ப தேவையான அத்தியாவசிய தத்துவார்த்த மற்றும் அரசியல் அடிப்படையை வழங்குகின்றன.