முன்னோக்கு

பாசிசத்திற்கு எதிராக பியானோ கலைஞர் இகோர் லெவிட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்தல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

33 வயதான ரஷ்ய-ஜேர்மன் பியானோ கலைஞர் இகோர் லெவிட் தனது தலைமுறையின் மிக முக்கியமான பியானோ மற்றும் இசைக் கலைஞர்களில் ஒருவராவார். அவரது புத்திசாலித்தனம் வெறுமனே ஒரு குறைபாடற்ற கலைநுட்பத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை. இது, பியானோ கலைஞர்கள் மிகவும் தீவிரமாகப் பயிற்சியளிக்கப்படுகின்ற ஒரு காலகட்டத்தில் பியானோ கலைஞர்களிடமிருந்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எதிர்பார்க்கப்படுகிறது. இதனைப் பற்றி பெரும்பாலும் மற்றும் ஓரளவு நகைச்சுவையாக மட்டுமே கூறப்படுவது என்னவெனில் அவர்கள் ஒருபோதும் தவறு செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ள மாட்டார்கள். லெவிட்டின் நற்புகழ் அவரது அபரிமிதமான விளக்கமளிக்கும் கற்பனைத்திறனில் உள்ளது. இது உணர்ச்சி நுணுக்கத்தை சிறந்த அறிவுசார் ஆழத்துடன் இணைக்கிறது. மனித கலாச்சாரத்தின் உயர்ந்த நிலையில் நிற்பதும் மற்றும் பியானோ கலைஞர்களின் மிகப் பெரிய உடலியல் மற்றும் சிந்தனாராதியான தகமையை வேண்டிநிற்கும் பீத்தோவனின் 32 பியானோகருவி இசைகளின் சமீபத்திய அவரது பதிவு, உலகெங்கிலும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது.

அறிவொளி மற்றும் மனித ஒற்றுமைக்கான ஒரு சக்தியாக, கலையை லெவிட் பார்ப்பது அவருக்கு உலகளாவிய பார்வையாளர்களின் மரியாதையையும் ஈர்ப்பையும் வென்றுள்ளது. தொற்றுநோயின் முதல் மாதங்களில், லெவிட் அசாதாரணமான இரவு நேர “ட்விட்டர் இசை நிகழ்ச்சிகளை” தொடங்கினார், இது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தொடர்ச்சியாக 50 க்கும் மேற்பட்ட மாலை நேரத்தில், உலகெங்கிலும் இலவசமாகக் காணக்கூடிய இசை நிகழ்ச்சிகளை லெவிட் வழங்கினார். ஒவ்வொரு இசை நிகழ்ச்சியையும் அவர் அறிமுகப்படுத்தவிருந்த பாடல்களின் முக்கியத்துவத்தை சுருக்கமாக விளக்கினார். லெவிட்டின் ட்விட்டர் இசை நிகழ்ச்சிகள் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்தன.

இகோர் லெவிட் (Foto: flickr / Bundestagsfraktion Die Grünen)

இந்த சிறந்த கலைஞர் இடதுசாரி அரசியலிலும் தீவிரமாக உள்ளார். கடந்த மே மாதம் நியூ யோர்க்கரில் வெளியிடப்பட்ட பியானோ கலைஞரின் உருவப்படத்தில் இவ்வாறு குறிப்பிட்டது: “லெவிட்டின் தலைமுறையின் பிற பியானோவாதிகள் பரந்த ஒட்டுமொத்த சந்தைப் புகழைப் பெற்றிருக்கலாம்… ஆனால் யாரும் கலாச்சார அல்லது அரசியல் பிரமுகராக ஒப்பிடத்தக்க அந்தஸ்தைக் கொண்டிருக்கவில்லை. ஜேர்மன் பேசும் நாடுகளில், பரந்த மக்களுக்கு லெவிட் செவ்வியல்-இசை ரசிகராக மட்டுமல்ல, அவர் இடதுசாரி, சர்வதேசவாத உலகப் பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பழக்கமான முகமும் ஆவார்.”

ஜேர்மனியில் லெவிட்,ஜேர்மனிக்கான மாற்று (AfD) கட்சியின் வளர்ந்து வரும் அரசியல் சக்தியில் அதன் மிக மோசமான வெளிப்பாட்டைக் காணும் நவ-நாஜிசத்தின் மீள் எழுச்சிக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த குரலாக வெளிப்பட்டுள்ளார். இதன் விளைவாக ஜேர்மன் பாராளுமன்றத்திற்குள் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி என்ற நிலைக்கு பாசிசம் மீண்டும் ஒரு முறை அரசியல் உயரடுக்கினரால் திட்டமிட்டு அரசியல் சக்தியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் பிற்போக்குத்தனமான இந்த சூழலுக்குள், யூத எதிர்ப்பு மற்றும் யூதர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுடன் சேர்ந்து நவநாஜி வன்முறையும் வருவது பொதுவான விஷயமாகி வருகிறது.

யூதரான லெவிட், கடந்த ஆண்டு யூத எதிர்ப்பு மரண அச்சுறுத்தல்களைப் பெறத் தொடங்கினார். அவர் மிரட்டுவதற்கு பணிய மறுத்துவிட்டதுடன், தொடர்ந்தும் நவநாஜி வன்முறையை கண்டித்துள்ளார். அக்டோபர் 4 ஆம் தேதி ஹம்பேர்க் நகரில் ஒரு யூத மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, லெவிட் பின்வருமாறு ட்வீட் செய்தார்: “மிகவும் சோர்வாக இருக்கிறது. எனவே, மிகவும் சோர்வாக இருக்கிறது. அதனால் கோபமாகவும் இருக்கின்றது.” அடுத்த நாள் அவர்: “நேற்று: ஹம்பேர்க். இன்று: சொற்றொடர்கள். மீண்டும் ஒருபோதும் ஹேஷ்டேக்குகள் வேண்டாம். எப்பொழுதும் போல். வெறுமனே சோர்வாக இருக்கிறது. சோர்வு” என ட்வீட் செய்தார். அக்டோபர் 9 ம் தேதி, லேவிட் மற்றொரு ட்விட்டர் செய்தியை அனுப்பினார்: “இந்த முறை உங்களை எவ்வளவு சோர்வடையச் செய்கிறது…” மேலும் அக்டோபர் 10 அன்று, லெவிட் எழுதினார்: “செய்திகளைப் படிப்பதை விட இந்த நாட்களில் சோர்வடைய செய்வது எதுவும் இல்லை.”

லெவிட்டின் ட்வீட்டுகள் AfD உம் அதன் அனுதாபிகளும் ஊடகங்களில் பதிவிடுவதைவிட ஆயிரக்கணக்கானோரால் அதிகமாக வாசிக்கப்பட்டனவாக இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, ஜேர்மனியின் முன்னணி தாராளவாத செய்தித்தாளான, Süddeutsche Zeitung (SZ), "லெவிட் சோர்வாக உள்ளார்" என்ற தலைப்பில் பியானோ கலைஞர் மீது இழிவான தாக்குதலை வெளியிட்டது. அது இழிந்த முறையில், ஹெல்முட் மௌரோ (Helmut Mauró) எழுதிய இந்த கட்டுரை, யூத-விரோத அர்த்தங்கள் உள்ள இலக்கியப் போக்குகள் மற்றும் ஒரே மாதிரியான வார்ப்புகளைப் பயன்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்பது ஜேர்மன் மக்களுக்கு உடனடியாகவும் வெளிப்படையாகவும் தெரிந்தது.

ரஷ்ய-ஜேர்மன் பியானோ கலைஞர் இகோர் லெவிட் 2018 இல் ஜேர்மனியின் லைப்சிக் நகரில் இசைக்கிறார் (AP Photo/Jens Meyer)

"முற்றிலும் மாறுபட்ட மட்டத்தில் வாசிக்கும்" ரஷ்ய பியானோ கலைஞரான டானியல் ட்ரிஃபோனோவுக்கு (Daniil Trifonov) லெவிட்டின் "நாடகபாணியில் வெளிப்படுத்தப்பட்ட பாத்தோஸை" ஒப்பிடுவதன் மூலம் மௌரோ தொடங்கினார். யூத இசைக்கலைஞர்களுக்கு எதிரான ரிச்சார்ட் வாக்னரின் வெறுக்கத்தக்க யூத-விரோத பழக்கவழக்கங்களை நன்கு அறிந்த ஒவ்வொரு இசை படித்த ஜேர்மனியரும் மௌரோ எதைப்பற்றி குறிப்பிடுகின்றார் என்பதை சரியாக அறிவர். உண்மையான தேசிய வேர்கள் இல்லாததால், இந்த நபரின் படி ஒரு உண்மையான ரஷ்யரின் உணர்ச்சி ஆழத்தை அடைய இந்த யூதருக்கு இயலாது என அவர் எழுதியிருந்தார். (அவருக்குரிய ஒரு திறமையான பியானோ கலைஞரான ட்ரிஃபோனோ, அவரது பெயர் மௌரோவால் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு எவ்வித பொறுப்புமற்றவர் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.)

லெவிட்டின் “இசைத்தொடரை” பற்றி ஒரு சுருக்கமான புகாருக்குப் பின்னர், மௌரோ தனது கோபத்தின் உண்மையான மூலத்திற்கு செல்கின்றார். லெவிட்டின் புகழானது அவரது எந்தவொரு இசை திறமையினாலும் அல்ல, மாறாக, அவரது செய்தித்துறையிலுள்ள “தொடர்புகள்” மற்றும் அவரது பொது அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றால் உருவாகியது. மேலும், ஜேர்மனியில் வலதுசாரி மற்றும் யூத-விரோதத்திற்கான லெவிட்டின் கண்டனங்கள், "பாதிக்கப்பட்டவர்கள் என்ற உரிமைகோருவதற்கான சித்தாந்தத்தின்" ஒரு பகுதியும் மற்றும் "வெளிப்படையான உணர்ச்சி மிகுந்த தன்மையின்" ஒரு பகுதியாகும், என மௌரோ குறிப்பிட்டார்.

1933 மற்றும் 1945 க்கு இடையில் ஆட்சியில் இருந்த ஜேர்மன் அரசாங்கம் ஆறு மில்லியன் யூதர்களின் தொழில்துறைரீதியான கொலையை ஏற்பாடு செய்தது என்பதை மௌரோ மறந்துவிட்டதாக தெரிகிறது அல்லது அவர் இது நினைவூட்டப்படுவதை எதிர்க்கிறார். லெவிட்டின் அரசியல் ட்வீட்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்புகிறார். லெவிட் பெற்ற மரண அச்சுறுத்தல்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் Der Spiegel இதழில் வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், "ஜேர்மனிக்கு மனிதகுலத்தினை அவமதிக்கும் ஒரு பிரச்சினை உள்ளது" என்ற லெவிட்டின் கருத்தை மௌரோ கசப்புடன் நினைவு கூர்ந்து, அவருக்கு எவ்வளவு தைரியம்! என்று கூறுகின்றார்.

இறுதியாக, ஹம்பேர்க்கில் நடந்த தாக்குதல் குறித்த ட்வீட்களைக் கண்டித்த பின்னர், மௌரோ, லெவிட்டின் அரசியல் அக்கறைகளை ட்ரிஃபோனோவின் சமீபத்திய ட்வீட்டுக்கு முரணாகக் காட்டினார். அவர் Prokofjew வின் இசையை வாசிப்பதாக தனது வாசகர்களுக்குத் தெரிவித்திருந்தார். ஹம்பேர்க்கில் ஒரு யூதர் தாக்கப்படுவதாக லெவிட் பகிரங்கமாக புகார் செய்வதை விட இது எவ்வளவு பொருத்தமானது என்று மௌரோ குறிப்பிடுகிறார்.

இந்த பத்தியில் எழுதப்பட்டுள்ள செய்தி மிகவும் தெளிவானதாகும். அதாவது ஜேர்மன் பாராளுமன்றத்தில் AfD அமர்ந்திருப்பதும், யூத-விரோத பயங்கரவாத தாக்குதல்கள் மீண்டும் ஜேர்மனியில் நாளாந்தம் உள்ளன என்பதும் யூத கலைஞரான லெவிட்டுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர் அதை தனக்குத்தானே வைத்திருக்க வேண்டும். மேலும், செவ்வியல் இசைத் துறையின் மிக உயர்ந்த மட்டத்தில் அவருக்கு எந்த இடமும் இல்லை என்றும் கட்டுரை வலியுறுத்துகின்றது.

1920 மற்றும் 1930 களின் பாசிச குண்டர்களால் யூத கலைஞர்களை துன்புறுத்தியது மற்றும் கண்டனம் செய்த நினைவுகளை மௌரோவின் கட்டுரை எழுப்புகிறது. நாஜி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், எண்ணற்ற யூத கலைஞர்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் ஹோலோகாஸ்டில் படுகொலை செய்யப்பட்டனர்.

Russian-German pianist Igor Levit plays in Leipzig, Germany in 2018 (AP Photo/Jens Meyer)

மௌரோ மற்றும் Süddeutsche Zeitung இற்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு மிகப்பெரியது. சமூக ஊடகங்களில், பொது நபர்கள் உட்பட எண்ணற்ற பயனர்கள், Süddeutsche Zeitung இன் பல வாசகர்கள் மற்றும் செவ்வியல் இசை ஆர்வலர்கள், யூத-விரோதத்தை எதிர்க்கும் லெவிட் மீதான கொடூரமான தாக்குதல் என்று இந்த பகுதியை கண்டித்தனர்.

மிக முக்கியமான செவ்வியல் இசை வானொலி நிலையங்களில் ஒன்றான Bayerischer Rundfunk ஒரு கொள்கை ரீதியான பதிலை வெளியிட்டது. அந்த கட்டுரையின் யூத-விரோத தார்ப்பரியத்தை சுட்டிக்காட்டி, அது நியாயமான இசை விமர்சனம் என்று கருதக்கூடிய அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாகக் கூறியது.

லெவிட் மீதான மௌரோவின் தாக்குதலை Süddeutsche Zeitung தலைமை ஆசிரியர் ஆதரித்த ஒரு ஆரம்ப அறிக்கையின் பின்னர், செய்தித்தாள் செவ்வாயன்று "லெவிட் மற்றும் Süddeutsche Zeitung இன் வாசகர்களிடம்" ஒரு பொது மன்னிப்பை வெளியிட்டது. செய்தித்தாள் அதன் வாசகர்களில் பெரும் எண்ணிக்கையும் அதன் சொந்த ஆசிரியர் குழுவின் கணிசமான பகுதியும் இந்த உரை உண்மையில் "யூத எதிர்ப்பு" என்று உணர்ந்ததாக ஒப்புக் கொண்டது. அப்படியானால், முதலில் ஏன் வெளியிடப்பட்டது என்று கேட்கப்பட வேண்டும்?

Süddeutsche Zeitung இன் பின்வாங்கல் மற்ற இரண்டு பெரிய நிறுவன செய்தித்தாள்களை சீற்றப்படுத்தியுள்ளது. வலதுசாரி Die Welt ன் தலைமை ஆசிரியர் உல்ஃப் போஷார்ட் (Ulf Poschardt) புதன்கிழமை லெவிட் மீதான பொது சர்ச்சை ஒரு “கலாச்சாரப் போர்” என்று அறிவித்தார். "ஜாக்கோபின் இசைக்குழுவின் முதல் வயலின்கள்" மற்றும் "ஒரு புதிய இடதுசாரி சிந்தனை காவலாளர்களின் ட்விட்டர் படைப்பிரிவு" ஆகியவற்றின் முன் Süddeutsche Zeitung அடிபணிந்ததாக குற்றம் சாட்டினார். அவர் மேலும் "முரண்படத் துணிந்த வலதுசாரி நபர்கள்" மீது "பகிரங்க தாக்குதல்" அறிவிக்கப்படுகிறது என்றார். இதேபோல், பழமைவாத Frankfurter Allgemeine Zeitung மௌரோ லெவிட்டை கண்டனம் செய்வதை எதிரொலித்து, மேலும் "வெகுஜனங்களின் அழுத்தத்திற்கு" உட்பட்டுவிட்டதாக Süddeutsche Zeitung இனை குற்றம் சாட்டியது.

லெவிட் மீதான கண்டனங்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவு) மற்றும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் (IYSSE) வெளியீடுகள் மீதான தாக்குதல்களை நினைவூட்டுகின்றன. ஜோர்க் பாபெரோவ்ஸ்கி போன்ற பிரபல்யமான கல்வியாளர்களால் அடோல்ப் ஹிட்லர் புனரமைக்கப்படுவதை அவை எதிர்த்தன. 2014 முதல் சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஜேர்மனிக்கான மாற்றீட்டின் எழுச்சி, ஜனநாயக உரிமைகள் மற்றும் கலாச்சாரத்திற்கு உண்மையான மற்றும் வளர்ந்து வரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

ஜேர்மனியில் பாசிச சக்திகளின் இந்த வளர்ச்சி ஆளும் வர்க்கத்தின் ஒரு நனவான அரசியல் நடவடிக்கையின் விளைவாகவும், அரசின் மிக உயர்ந்த மட்டத்தில் ஒரு சதித்திட்டமாகவும் இருக்கிறது. சக்திவாய்ந்த ஊடகங்கள் ஏற்பாடு செய்த லெவிட் மீதான பிற்போக்குத்தனமான தாக்குதலுக்கும், மக்களின் விருப்பத்திற்குரிய கலைஞனுக்கான பாரிய பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பாரிய முரண்பாடு உள்ளது.

லெவிட் மீதான தாக்குதல், ஜேர்மனிக்கு அப்பாலும் நீண்ட அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் கலாச்சார மட்டத்தை உயர்த்த முற்படும் சமூக உணர்வுள்ள மற்றும் அரசியல்ரீதியாக ஈடுபடும் கலைஞர்களை கண்டு ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது.

லெவிட், தனது அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக மட்டும் வலதுசாரிகளின் இலக்காகவில்லை. பீத்தோவன் மற்றும் பிற இசையமைப்பாளர்களின் படைப்புகளை மக்கள்தொகையின் பரந்த அடுக்குகளுக்கு அணுகுவதற்கும் அதன் மூலம் ஒட்டுமொத்த கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஆளும் வர்க்கத்தால் சந்தேகத்துடன் மட்டும் பார்க்கப்படுவதில்லை, அவை அச்சுறுத்தலாகவும் கருதப்படுகின்றன.

மேலும், பிரெஞ்சு புரட்சியால் ஆழ்ந்த ஆளுமைக்கு உள்ளான பீத்தோவன் மற்றும் இசையமைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் 1973 இல் சிலியில் சிஐஏ ஆதரவுடைய சதித்திட்டத்தினை பற்றிய பிரெடெரிக் ருஸ்யூஸ்கி (Frederic Rzewski) இன் மக்களின் ஐக்கியப்பட்ட விருப்பம் தோற்கடிக்கப்பட முடியாதது (The People United Will Never Be Defeated) போன்றவற்றின் மீது ஈகோர் லெவிட் கவனத்தை செலுத்துவதன் மூலம் அவர் இடது நோக்கிய ஒரு திருப்பத்தை வெளிப்படுத்துவதுடன் மற்றும் கலாச்சாரரீதியான புத்திஜீவிகளின் மிகவும் முன்னேறிய பிரிவினரிடையேயான அரசியல்ரீதியாக தீவிரப்படுத்தலையும் வெளிப்படுத்துகின்றார். இந்த நிகழ்வுகளினூடாக, தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் அது தொடர்புபடுவதையும் இட்டுத்தான், நவ-பாசிஸ்டுகளும் ஆளும் வர்க்கமும் வெறுப்பும், பயமும் அடைகின்றன.

புரட்சிகர சோசலிச இயக்கத்தைப் பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்தின் முழு அரசியல் விடுதலைக்கான போராட்டமும் அதன் கலாச்சார அறிவொளிமயமாக்கலும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆழ்ந்த அரசியல், அறிவுசார் மற்றும் கலாச்சார முன்னேற்றத்தின் ஒரு நிகழ்ச்சிப்போக்கினூடாக மார்க்சிச தொழிலாள வர்க்க இயக்கம் வெளிவந்தமை ஜேர்மனியைப் போல எங்கும் இது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை. இது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் விஞ்ஞானபூர்வ கண்டுபிடிப்புகளை மட்டுமல்ல, அவர்களின் தத்துவார்த்த, கலாச்சார முன்னோடிகள், சிறந்த படைப்புகளையும் உள்ளடக்கியிருந்தது.

கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் மற்றும் ஃபெர்டினாண்ட் ஃப்ரைலிகிராத் ஆகியோரின் நண்பராக இருந்த ஹென்ரிச் ஹெய்ன (Heinrich Heine) உடன் தொடங்கி, முக்கிய கலாச்சார பிரமுகர்கள் எப்போதும் புரட்சிகர இயக்கத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தனர். ஜேர்மன் தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் அமைப்புகள் மீதான நாஜிக்களின் தாக்குதல், அனைத்து உண்மையான கலாச்சாரம் மற்றும் கலாச்சார பிரமுகர்களையும் காட்டுமிராண்டித்தனமாக அழித்தது.

ஈகோர் லெவிட்டின் தைரியமும் ஆயிரக்கணக்கான ஜேர்மன் உழைக்கும் மக்களிடமிருந்தும் இளைஞர்களிடமிருந்தும் அவர் பெற்ற ஆதரவும் ஏனைய கலைஞர்களை அவரது முன்மாதிரியை பின்பற்ற ஊக்குவிக்கவும் ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

1938 இல் முதலாளித்துவ சமுதாயத்தின் நெருக்கடிக்கும் கலைகளுக்கும் இடையிலான உறவைப் பற்றி விவாதித்த லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டார், “கலை, நெருக்கடியிலிருந்து தப்பிக்கவோ, அதிலிருந்து விடுவித்துக்கொள்ளவோ முடியாது. கலை தானாகவே தன்னை காப்பாற்ற முடியாது. இன்றைய சமூகம் அதனை திருத்தியமைக்காவிட்டால், அடிமைத்தனத்தின் மீது நிறுவப்பட்ட ஒரு கலாச்சாரத்தின் இடிபாடுகளுக்கு அடியில் கிரேக்க கலை வீழ்ச்சியுற்றதுபோல், அது தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியுற்றுவிடும். இந்தப் பணி அடிப்படையில் புரட்சிகர தன்மை கொண்டது.”

இந்த வார்த்தைகள் இன்று சக்திவாய்ந்த முறையில் எதிரொலிக்கின்றன, ஏனெனில் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியும், தொற்றுநோயும் முக்கிய கலாச்சார நிறுவனங்கள் மற்றும் எண்ணற்ற கலைஞர்களின் உயிர்வாழ்வை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. அதே நேரத்தில் முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்திடம் மீதமுள்ள அனைத்து சமூக, ஜனநாயக, கலாச்சார உரிமைகளை இல்லாதொழிப்பதை நோக்கி நகர்கிறது.

உலக சோசலிச வலைத் தளம் லெவிட் போன்ற முற்போக்கான கலைஞர்களைப் பாதுகாப்பதற்கான புரட்சிகர மார்க்சிச பாரம்பரியத்தை பெருமையுடன் தொடர்வதுடன், அவர் மீதான தாக்குதல்களை முழுப்பலத்துடன் நிராகரிக்க அதன் அனைத்து வாசகர்களையும் அழைக்கிறது. கலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும், தொழிலாள வர்க்கத்தின் கலாச்சாரத்திற்கான உரிமையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவையாகும்.

Loading