செனகல் கடற்கரைப் பகுதியில் அகதிகள் படகுப் பேரழிவில் குறைந்தது 140 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

கடந்த வாரம் ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக சுமார் 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு வெடித்து செனகல் கடற்கரைப் பகுதியில் மூழ்கியதில் குறைந்தது 140 பேர் நீரில் மூழ்கினர். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மிகக் கொடிய பெரியளவு அகதிகள் கடலில் மூழ்கியது இந்த துயரமான சம்பவத்திலாகும்.

வியாழனன்று வெளியிடப்பட்ட சர்வதேச குடியேற்ற அமைப்பு (IOM) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, படகு செனகலின் மேற்கு கடற்கரையிலுள்ள Mbour இலிருந்து அக்டோபர் 24 அன்று புறப்பட்டது. அது அட்லாண்டிக் பெருங்கடலின் செனகல் கடற்கரையோரத்திலிருந்து வடக்கு நோக்கி ஸ்பானிய கட்டுப்பாட்டிலுள்ள கெனாரி தீவுகளை நோக்கி பயணித்தது, கப்பலில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஐரோப்பாவில் தஞ்சம் கோரி அங்கு அடைக்கலம் தேடலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.

அக்டோபர் 23 அன்று, ஐரோப்பாவிற்கு படகு மூலம் பயணிக்க முயற்சித்த 100 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் செனகல் இராணுவத்தால் டாக்கார் அருகே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டனர் [Photo credit: செனகல் ஆயுதப்படைகள்]

கப்பலில் தப்பியவர்களில் ஒருவர் உள்ளூர் Sene.news இடம் கூறினார், “ஒரு கட்டத்தில், மோட்டார் தீப்பிடித்தது. தீப்பிழம்பைக் கட்டுப்படுத்த கப்பலோட்டிகளால் முடிந்தது, ஆனால் தீ மீண்டும் பிடித்துக்கொண்டு பெட்ரோல் நிரம்பிய ஜெர்ரிகலன்களை தீ அடைந்து பற்றிக்கொண்டது. நான் தண்ணீரில் குதித்தேன், தண்ணீரில் மிதந்த ஒரு கலனைப் பிடித்துக் கொண்டேன்.”

மற்றொரு உயிர் பிழைத்த M. Diéye என்பவர் வெடிப்பிற்கு முன்னர் நடந்த காட்சிகளை விவரித்தார். "படகின் பின்பகுதியில் தீ தொடங்கியபோது, பல பயணிகள், குறிப்பாக நீந்த முடியாதவர்கள், முன்பகுதிக்கு விரைந்தனர்... வெடிவிபத்து நடந்தபோது ஒரு பொதுவான பீதி இருந்தது, நீந்த முடியாதவர்கள், நீந்தக்கூடியவர்களை பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அங்கேயே இருந்துவிட்டார்கள், அவர்கள் படகுடன் மூழ்கிவிட்டார்கள். எத்தனை பேர் இருந்தார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை."

கப்பலில் Fallou Samb என்பவருடைய பராமரிப்பில் இருந்த ஒரு சிறுவனைப் பற்றி கூறினார், “படகு கவிழ்ந்தபின், அவன் பீதியடைந்து என் பெயரை கூறி அழுதான். நான் அவனைக் கண்டதும், அவன் மேற்பரப்புக்கு மேலே இருக்கும்படி நான் அவனுக்கு ஒரு கலனைக் கொடுத்தேன். இரண்டு மணி நேரம் கழித்து, அவன் களைத்துப்போயிருந்தான், இனிமேல் அதைப் பிடிக்க அவனால் முடியவில்லை. என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போகவே என் கண்களுக்கு முன்னால் மூழ்கிப்போனான்.” மற்றொரு நபர், Demba Sow, ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனலிடம் தனது 21 மற்றும் 27 வயதுடைய இரண்டு மகள்கள் கப்பலில் இருந்ததாகவும், மீட்கப்படவில்லை என்றும் கூறினார்.

கப்பலில் இருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் 200 பேர்கள் இருந்ததாகவும் 59 பேர்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டனர் என்று IOM கூறியது. செனகல் நகரமான செயின்ட் லூயிஸின் புறநகர்ப் பகுதியான Pikine இல் உள்ள அதே சமூகத்திலிருந்து பல டஜன் பேர் குறைந்த பட்சம் இதில் பயணித்திருந்தனர். "Pikine அண்மைய பகுதியிலிருந்து 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த பயணத்தின் மூலம் ஐரோப்பாவை அடைய விரும்பினார்கள்," என்று Sene.news எழுதியது. "இந்த துயரச் சம்பவத்தால் ஒட்டுமொத்த தெருக்களும் சோகத்தில் மூழ்கியிருந்தன" என்று கார்டியன் செய்தி வெளியிட்டது.

பேரழிவு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், அக்டோபர் 25-26 திகதி மாலை, அறியப்படாத எண்ணிக்கையிலான அகதிகளை ஏற்றிச் சென்ற மற்றொரு படகு செனகல் தலைநகரான டாக்கார் கடற்கரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் மூழ்கியது. 39 பேர் காப்பாற்றப்பட்டனர், ஆனால் கப்பலில் 60 முதல் 70 பேர் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.

செனகல் மற்றும் ஸ்பானிய கடற்படைகளின் நேரடியான நடவடிக்கைகளால் குறைந்தது ஒரு டஜன் மக்களின் இறப்புக்கள் நிகழ்ந்தன. ஒரு ஸ்பானிய மற்றும் மற்றொரு செனகல் கப்பலால் அகதிகள் படகில் செல்லும் வழியில் பிடிக்கப்பட்டனர் மற்றும் படகு கடந்து செல்வதை நேரடியாக தடுக்க அவர்கள் முயன்றனர். அகதிகள் படகு செனகல் கடற்படை படகின் மீது மோதியது, இதனால் அது கவிழ்ந்தது. டஜன் கணக்கான அகதிகளை ஏற்றிச் செல்லும் சிறிய கப்பலை கடற்படை படகு வேண்டுமென்றே மோதியதாக செனகல் பத்திரிகையாளரான Babacar Fall என்பவர் Bonjourdakar.com இடம் தெரிவித்தார்.

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கெனாரி தீவுகளுக்கு செல்லும் வழியில் 2020 ஆம் ஆண்டில் 414 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அறியப்படுகிறது. இது 2019 ல் ஏற்பட்ட 210 இறப்புகளிலிருந்து 100 சதவீதத்திற்கும் அதிகமாகும். உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். IOM இன் படி, 2020 ஆம் ஆண்டில் கெனாரி தீவுகளில் 11,000 வருகைகள் இருந்தன, இது 2019 ஆம் ஆண்டில் இதே காலத்தில் 2,557 ஆக இருந்தது.

ஐரோப்பாவில் புகலிடம் கோருவதற்கான அகதிகள் தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பொருட்டு, மத்தியதரைக் கடலில் மூழ்குவதற்கு ஆயிரக்கணக்கானோரை வழிநடத்தும் கடுமையான கொள்கைகளை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய சக்திகளின் குற்றவியல் கொள்கைகளின் நேரடி விளைவுதான் ஆபத்தான வழிகளை பெருகிய முறையில் புகலிடம் கோருவோர் பயன்படுத்துவதாகும்.

அகதிகள் மத்தியதரைக் கடலைக் கடக்க முயற்சிப்பதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியமானது வட ஆபிரிக்கா, மொராக்கோ முதல் அல்ஜீரியா, லிபியா வரை அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து நிதியளித்து வருகிறது. இது லிபியாவில் இஸ்லாமிய போராளிப் படைகளுக்கு நிதியளித்து, இத்தாலியை அடைய முயற்சிக்கும் அகதிகள் படகுகளைப் பிடிக்க கடலோர படகுகளை அவர்களுக்கு வழங்கி வருகிறது. அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள், அடிமைகளாக விற்கப்படுகிறார்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெரிய மீட்கும் தொகைக்காக பிணைக் கைதிகளாக வைக்கப்படுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியமானது மத்தியதரைக் கடலிலுள்ள அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது, மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நடத்துவதைத் தடுக்க தீவிரமாக முயல்கின்றன. UNHCR இன் படி, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 72 அகதிகள் இறந்து போகிறார்கள். இது ஐரோப்பிய கொள்கையின் நனவான மற்றும் திட்டமிடப்பட்ட நோக்கம் கொண்ட விளைவாகும், இது ஐரோப்பாவில் தஞ்சம் கோருவதிலிருந்து அகதிகள் வெளியேறுவதைத் தடுக்க மரண அச்சுறுத்தலைப் பயன்படுத்த முற்படுகிறது.

ஆபிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான நம்பிக்கையிழந்த அகதிகளின் இந்த தப்பியோட்டமானது ஆபிரிக்காவில் பல தசாப்தங்களாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் விளைவாகும், இது கண்டத்தின் காலனித்துவ ஒடுக்குமுறையின் பாரம்பரியத்தை இன்னும் தீவிரப்படுத்துகிறது. ஸ்பெயினிலுள்ள ஐக்கிய தேசிய அகதிகள் கவுன்சிலின் (UNHC) செய்தித் தொடர்பாளரான மரியா ஜெசஸ் வேகா செனகலில் இருந்து கெனாரி தீவுகளுக்கு பயணிக்கும் அகதிகளில் 30 சதவீதம் பேர் மாலியிலிருந்து வந்தவர்கள் என்று கார்டியனிடம் கூறினார்.

மாலியில் பிரான்ஸ் தலைமையில் நடக்கும் போரின் விளைவுகளால் அவர்கள் தப்பிச் செல்லுகிறார்கள். இஸ்லாமிய போராளிகளின் உதவியுடன் 2011 இல் லிபிய அரசாங்கத்தை கவிழ்க்க நேட்டோவின் போரினால் இந்தப் போர் தூண்டப்பட்டது. இதன் விளைவாக மாலியில் இஸ்லாமிய படைகள் வலுப்பெற்றது, பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனச் செல்வாக்கின் மத்தியில், முக்கியமான யுரேனியம் மற்றும் மூல கனிம வளங்களை உள்ளடக்கிய புவிசார் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சஹேல் மீது தனது ஆதிக்கத்தை பாதுகாக்க பிரான்சுக்கு ஒரு இராணுவ தலையீட்டை தொடங்க இது அனுமதித்தது.

ஐரோப்பிய ஆக்கிரமிப்பு மற்றும் பமாக்கோவிலுள்ள கைப்பாவை ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை அச்சுறுத்துவதற்காக, குறுங்குழுவாத இனப் படுகொலைகளை வேண்டுமென்றே ஊக்குவிப்பது உட்பட, பிரான்ஸ் ஒத்துழைத்து வரும் ஜி 5 இன் ஆயுதப் படைகளால் செய்யப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கைகள் உள்ளன. இது மாலியில் ஒரு சமூக முறிவை ஏற்படுத்தியுள்ளது, இது பாரிய வெளியேற்றத்தை தூண்டுகிறது. சமூக நெருக்கடி மற்றும் பரந்துபட்ட இளைஞர்களின் வேலையின்மை ஆகியவைகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

செனகல் கடற்கரைப் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவினால் கடலில் மூழ்கி இறந்து போனவர்களின் சமூக மற்றும் அரசியல் வேர்களாக இவைகள் இருக்கின்றன.

Loading